வந்தாள் மகாலட்சுமியே.. -25

.. 25 "வணக்கம் வாகீசன் சார்.. எப்படியிருக்கீங்க..?" வாயில் வெற்றிலை பாக்கைக் குதப்பியபடி உள்ளே வந்த ரத்தினசாமியைக் கண்டதும் ...

..

25

"வணக்கம் வாகீசன் சார்.. எப்படியிருக்கீங்க..?"
வாயில் வெற்றிலை பாக்கைக் குதப்பியபடி உள்ளே வந்த ரத்தினசாமியைக் கண்டதும் பாகிரதியின் முகம் மாறியது..
அவர் அந்த வீட்டின் சொந்தக்காரர்.. அவர்கள் குடிவந்த நாள் முதலாய்.. அன்றுவரை அந்த வீட்டுப் பக்கம் அவர் தலை காட்டியதில்லை.. சம்பளம் வாங்கியதும்.. முதல் தேதியிலேயே வாடகைப் பணத்தை அவருடைய பேங்க் அக்கௌண்டில் வாகீசன் கட்டி விடுவார்.. ரத்தினசாமி அந்த வீட்டுப் பக்கம் வர வேண்டிய அவசியத்தையே அவருக்கு வாகீசன் உண்டாக்கியதில்லை..
அந்த ரத்தினசாமி அன்று ஏன் வந்திருக்கிறார்..?
"வாங்க சார்.. உட்காருங்க.. பாகீ.. சாருக்கு காபி கொண்டுவா.."
வாகீசன் வரவேற்றார்.. ரத்தினசாமி உட்கார்ந்தார்.. அவருடைய நெற்றியில் சந்தனத்தீற்றலும்.. அதன் மத்தியில் வட்டமாக குங்குமமும் இருந்தது..
"ஏய்ய்.. சந்தனப்பொட்டு.. குங்குமப்பொட்டு ரத்தினசாமி வந்திருக்காருடா.." மகேஷ் சுரேஷிடம் உரத்த குரலில் சொன்னான்..
வாகீசன் மகனை பார்வையில் அதட்டிவிட்டு சங்கடத்துடன் ரத்தினசாமியைப் பார்த்தார்.. அவர் காது கேட்காதவரைப் போல புன்னகை மன்னனாக வாகீசனைப் பார்த்தார்..
"கள்ளிச்சொட்டுப் போல இருக்கும்மா உங்க கை காப்பி.."
பாகீரதியை புகழ்ந்தபடி காபியை மகேஷின் பாஷையில் மொக்கியவர்.. அடுத்ததாக ஒரு அணுகுன்டைத் தூக்கிப் போட்டார்..
"பையன் அமெரிக்காவில இருக்கான்.. ரொம்ப நாளா அவன்கூட வந்துரச் சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான்.. நான்தான் மாட்டேன்னு சொல்லிக் கிட்டிருந்தேன்.. இப்ப மகன் கூடப் போயிரலாம்ன்னு தோணிருச்சு சார்.."
"அப்படிங்களா சார்.."
"அப்படித்தான் வாகீசன்.. இனி சென்னையிலே எனக்கு எதுக்கு வீடு.. ?அதான்.. வித்துடலாம்ன்னு முடிவு பண்ணி அட்வான்ஸ் வாங்கிட்டேன்.. இந்த வாரம் ரெஜிஸ்ட்ரேசன் இருக்கு.. நீங்க சீக்கிரமா வேற வீட்டைப் பார்த்துக்குங்க.. வீட்டை வாங்கிறவர் வீட்டைக் காலி பண்ணிக் கொடுக்க ஒரு மாதம்தான் டைம் கொடுத்திருக்கார்.."
அவர் புன்னகை மன்னனாய் கிளம்ப.. எங்கிருந்தோ வந்த பேப்பர் ராக்கெட் அவரை குறி வைத்துத் தாக்கியது..
'சுரேஷ்..'
பத்துவயது ரௌடியைப் பெற்று வைத்திருந்த வாகீசன் கைகளைப் பிசைந்தார்.. அதற்கும் அசைந்து கொடுக்காமல் காகித ராக்கெட்டை பூப்போல எடுத்துப் போட்ட ரத்தினசாமி.. புன்னகை மாறாமல்..
"பேப்பர் ராக்கெட்..!" என்று பெருமையாய் சொன்னார்..
'இந்த ஆள் மேலே இன்னும் ரெண்டு காகித ஏவுகணைகளை ஏவி விட்டால் தேவலாம்..' வாகீசனுக்கு கடுப்பாக இருந்தது..
அது எப்படி கழுத்தை அறுத்தபடி புன்னகை மாறாமல் ஒரு மனிதரால் பேச முடிகின்றது..?
ஊர் மாற மறுத்து விடுப்புக் கொடுத்தவர்.. வீடு மாறாமலிருக்க என்ன செய்வது என்ற வேதனைக்கு ஆளானார்..
"யதுவிடம் சொல்ல வேணாம்.." பாகீரதியிடம் சொன்னார்..
அவள் மௌனமாக தலையை அசைத்தாள்.. துயரம் அப்பிய முகத்தோடு வளைய வந்த மனைவியின் துயர் காண அவருக்குப் பொறுக்கவில்லை.. யதுநந்தன் அந்த வாரம் முழுவதும் நள்ளிரவில் வீடு திரும்பி.. பொழுது விடியும் முன்னால் பறந்து கொண்டிருந்தான்.. அவன் சரியாகச் சாப்பிடுவதில்லை என்று பாகீரதி புலம்பினாள்.. அந்த வார இறுதியில் யதுநந்தன் வாகீசனிடம் வந்தான்..
"மாமா.. நாளைக்குக் காலையிலே ஒரு இடத்துக்குப் போகனும் ரெடியா இருங்க.."
"எங்கேப்பா..?"
"நாளைக்குச் சொல்கிறேனே.."
மறுநாள் காலையில் பொழுது விடிந்ததும் மறக்காமல் அவன் வீட்டிலேயே காலை உணவை முடித்து விட்டு நிதானமாக வாகீசனுடன் கிளம்பினான்.. அவர்கள் சென்று சேர்ந்த இடத்தைப் பார்த்ததும் வகீசன் புருவங்களை உயர்த்தினார்..
"என்னப்பா.. இங்கே வந்திருக்கோம்..?"
"காரணமாத்தான் மாமா.. நீங்க வாங்க.."
பத்திரப் பதிவு அலுவலகத்தில் அவர்கள் நுழைந்தார்கள்.. காத்திருந்த டாக்குமெண்ட் ரைட்டரிடம்..
"எல்லாம் ரெடியா இருக்கா..?" என்று கேட்டான் யதுநந்தன்..
"ரெடி சார்.." என்றான் அவன்..
"அவர் வந்துட்டாரா..?"
"வந்துட்டார் சார்.."
அந்த 'அவர்' சலைவை மடிப்புக் கலையாத வேட்டி சட்டையுடன் இருந்தார்.. வாகீசனைப் பார்த்ததும் ஆயுள்கால நண்பரைப்போல அகலமாக சிரித்து வைத்தார்..
'யாரு இவரு..?' சந்தேகம் வந்தபோதும்..
'காசா.. பணமா..? சிரிப்புத்தானே.. பதிலுக்கு சிரிச்சு வைச்சா நானென்ன குறைஞ்சா போகப் போறேன்..?' என்ற நினைவுடன் வாகீசனும் சகிக்க மாட்டாத ஓர் சிரிப்பை உதிர்த்து வைத்தார்..
"இது மாமாவோட போட்டோ.. ஐ.டி.."
யதுநந்தன் நீட்டியவைகளைப் பார்த்ததும் அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது..
இதையெல்லாம் எப்போது அவன் சேகரித்தான்..? எதற்காக சேகரித்தான்..?
வாகீசனுக்கு ஒரு மண்ணும் விளங்கவில்லை.. அவர் கண்ணெதிரிலேயே அவருடைய போட்டோவை ஒட்டி அதில் அவருடைய கட்டை விரல் ரேகையைப் பதிந்தார்கள்.. சற்றுப் பொழுதில் வேலை முடிந்து அவர்கள் கிளம்பி விட்டார்கள்..
"என்னதான் நடக்குது..?"
வீட்டுக்கு வந்தவுடன் வாகீசன் கேட்டார்.. யதுநந்தன் பதியப்பட்ட பத்திரத்தை அவரிடம் நீட்டினான்..
"இந்த வீடு உங்க பெயரில் ரெஜிஸ்ட்ரர் ஆகிருச்சு மாமா.."
"யது..?!"
வாகீசனும்.. பாகீரதியும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்..
"எப்புடிடா..? நாம வாங்கனும்னு நினைச்சாலும் அந்த ரத்தினசாமி நமக்கு வீட்டை விற்க மாட்டாரே.. அவரைத்தான் சடகோபன் விலைக்கு வாங்கிட்டாரே.."
"ரத்தினசாமிதான் நமக்கு இந்த வீட்டை விற்க மாட்டார்.. ரத்தினசாமியிடம் வாங்கினவர் நமக்கு விற்பாரில்ல..?"
யதுநந்தன் புதிர் போட்டு சிரித்தான்.. அதற்கு கிடைத்த விடையில்.. "அத்தான்னா.. அத்தான்தான்.." என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டான் மகேஷ்..
"எனக்குத் தெரியும் மாமா.. சடகோபனால் என்னை டச் பண்ண முடியாது.. என்னோட கம்பெனி மும்பையில் இருக்கிற இண்டர்நேசனல் கம்பெனி.. அவர் உங்களைத் தான் டச் பண்ணுவார்.. முதல் கட்டமாக வேலை மாறுதலையும்.. இரண்டாம் கட்டமா வீட்டு மாறுதலையும் கொடுப்பார்ன்னு நினைச்சேன்.. ஸோ.. ரத்தினசாமிகிட்ட நான் அனுப்பின ஆள் வீட்டை விலை பேசி முடிச்சிட்டான்.. ரெஜிஸ்ட்ரர் ஆனதும் நம்ம வீட்டை நம்ம பேருக்கு ரெஜிட்ரர் பண்ணிக் கொடுத்துட்டான் என்னோட ஆள்."
"நம்ம பேருக்கா..? என் பேருக்குன்னு சொல்லு யது.."
"நீங்க யாரு மாமா..? என்னோட அப்பா இல்லையா..? நான் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லையா..? என்னைத் தனியாப் பிரிச்சுப் பார்ப்பீங்களா மாமா..?"
வாகீசனின் வாயை அடைத்து விட்டான் யதுநந்தன்.. அவனுக்கு தெரிந்த அரசியல் தொடர்புகளை வைத்து வாகீசனின் வேலை மாறுதலை ரத்து செய்தான்.. அதற்கு வாகீசனின் யூனியன் ஒத்துழைத்தது.. கூட்டு முயற்சியில் ரத்தான மாறுதல் உத்திரவுக்குப் பின்னால்.. வாகீசனுக்கு சென்னை அலுவலகத்திலேயே பதவி உயர்வும் கிடைத்தது.. வாகீசனின் சுப்பிரியர் வாகீசனிடம் சார்ஜை ஒப்படைத்து விட்டு தர்மபுரிக்கு கிளம்பினார்..
"ஏன்சார்.. மேட்டுப்பாளையம் வேகண்டாத்தானே இருக்கு.. நீங்க அங்கே டிரை பண்ணியிருக்கலாமே.." வாகீசன் துக்கம் விசாரித்தார்..
"அசைக்க முடியாமல் உட்கார்ந்துட்ட தெனா வெட்டு..?" முறைப்புடன் கேட்டு விட்டு அந்த சுப்பிரியர் பயணப்பட்டு விட்டார்..
"நன்றிக்கடனை நேர் செய்கிறயா யது..?"
வாகீசனால் இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.. இல்லையென்று தலை அசைத்தான் யதுநந்தன்..
"அப்பாவிடம் மகனுக்கு நன்றிக் கடன் இருக்குமா மாமா..?"
வாகீசன் யதுநந்தனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.. மூத்த மகனாய் அத்தையின் குடும்பத்தை பாதுகாத்து நிலை நிறுத்திவிட்ட அந்தச் சாகசக்காரனின் மீது அவருக்குள் பாசம் பெருகியது..
"நீ எங்களுக்குத் தலைமகன் யது.."
அவர் சொன்னதை நெகிழ்வுடன் ஆமோதித்தான் யதுநந்தன்.. அடுத்து வந்த நாள்களில் பழைய உழைப்பில் அவன் மூழ்கிவிட்டான்.. நள்ளிரவில் வந்து.. அதிகாலையில் ஓடியவனைப் பார்க்க முடியாமல் தவித்தாள் மீரா.. அவளது வரவை சடகோபனால் தடை செய்ய முடியவில்லை.. மறைந்து போனால் அவர் கண்டித்துக் கேட்கலாம்.. வெளிப்படையாய்.. ஆமாம்.. அங்கேதான் போகிறேன் என்று போகிறவளை எப்படித் தடுத்து நிறுத்துவது..?
"இன்னும் ரெண்டு வருசம் ஊடே இருக்குப்பா.. என் யது இன்னும் தோற்கலை.. அப்படி அவர் தோற்றாத்தான் நான் உங்க பேச்சுக்கு கட்டுப்படுவேன்னு வாக்குக் கொடுத்திருக்கேன்.."
நிமிர்வாகக் கேட்டவளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை..
'அந்த வாகீசன் குடும்பம் இந்த ஊரிலும்.. வீட்டிலும் இருந்தாத்தானே இவ இந்த அழும்பு பண்ணுவா..?'
சடகோபன் தனது இன்புளுயன்ஸைப் பயன் படுத்தி வாகீசனுக்கு வேலை மாறுதலை கொடுக்க வைத்தார்.. அவர் குடியிருந்த வீட்டைக் காலிபண்ண வைக்க ஆவன செய்தார்..
யதுநந்தன் அவை இரண்டையும் முறியடித்து வாகீசனை எதிர் வீட்டுக்குச் சொந்தக்காரராக ஆக்கி.. வேலையில் மாறுதலை ரத்து செய்து.. பதவி உயர்வுடன் அழுத்தமாக வாகீசனை அந்த ஊரிலேயே நிலை நிறுத்தியதில் முதன் முறையாக அவர் புருவங்கள் உயர்ந்தன..
'பய தீயாய் வேலை செய்கிறானே.. ஒரே வாரத்தில இந்த இரண்டையும் சாதிச்சிருக்கான்னா இவனை லேசா எடைபோடக் கூடாது..'
யதுநந்தனின் 'ஹீரோ' இமேஜை உணர்ந்தவருக்கு.. அவர் மகள் தகுதியில்லாத ஒருவனைக் காதலித்து விடவில்லை என்ற எண்ணம் லேசாக துளிர்த்தது..
யது நந்தன் ஓடிக் கொண்டிருந்தான்.. அந்த ஓட்டத்துக்கு இடையில் மீராவுக்கான நேரத்தை அவன் உருவாக்கிக் கொடுக்கவில்லை.. மீரா மனம் நைந்தாள்.. அவனைப் பார்க்க முடியாத ஒவ்வொரு நாளும் அவள் மீது மலையாக ஏறி அமர்ந்து கனத்தது..
ஒன்றரை மாதம் ஓடிவிட்டது..
"இன்னும் 22 மாதங்கள்தான் இருக்கு.." ஏளனமாக சொன்னார் சடகோபன்..
"இல்லைப்பா.. இன்னும் இருபத்தி இரண்டரை மாதங்கள் இருக்கு.." அமைதியாக பிழை திருத்தம் செய்தாள் மீரா..
"ஓ.. இரண்டு வாரத்தைக் குறைச்சுச் சொல்லிட்டேனா..? இருபத்தி இரண்டு மாதங்களில் கிழிக்க முடியாததையா அந்த இரண்டு வாரத்தில் அவன் கிழிச்சுறப் போறான்..?" குரூரமாக கேட்டார் சடகோபன்..
"அவர் கிழி.. கிழின்னு கிழிக்கிறதுக்கு இரண்டு வாரமே தேவையில்லைப்பா.. ஒரு வாரமே போதும்.. பார்த்தீங்கள்ல.. எதிர் வீடு இப்ப வாகீசன் அங்கிளோட சொந்த வீடாய் ஆகிருச்சு.. ஆபிசில் அவரோட டிரான்ஸ்பர் ஆர்டர் கேன்சலாகி சுப்பிரியரா புரேமாசன் வந்தாச்சு.. இந்தப் புரமோசனின் ரூல்படி இன்னும் ஆறு வருசத்துக்கு அவரை இந்த சீட்டில இருந்து அசைக்க முடியாது.. ஏற்கனெவே இருந்த சுப்பிரியருக்கு ஆறு வருசம் ஆல்ரெடி முடிஞ்சிருச்சாமே.. அவர் எட்டாவது வருசமா எக்ஸ்டென்சனில் இருந்தாராமே.. அப்படியா அப்பா..?"
ஒன்றும் தெரியாதவளைப் போல மீரா வினவி வைத்ததில் சடகோபனின் முகம் கருத்தது.. பேசாமல் போய் விட்டார்.. மறுநாள் மாலையில் ஒரு விழாவுக்கு போக வேண்டும் என்று ஜானகியிடம் சொன்னார்..
"என் பிரண்டோட பங்சன்.. புதிதா அபார்ட்மெண்ட் கட்டியிருக்கான்.. அது முடிஞ்சிருச்சாம்.. அதைக் கொண்டாட பார்ட்டி கொடுக்கிறான்.. மீராவையும் கிளம்பச் சொல்லு.."
சடகோபனின் நண்பர் வீட்டு விசேசம் என்பதால் ஜானகி மறுத்துப் பேசாமல் மீராவையும் கிளப்பினாள்..
"அப்பாவோட பிரண்ட் கொடுக்கிற பார்ட்டி.. பேமிலியோடு போனாத்தான் பெட்டரா இருக்கும்ன்னு அப்பா சொல்றார்.. அடம் பிடிக்காம கூட வா மீரா.."
பிடித்தமில்லாமல் கிளம்பினாள் மீரா.. பாசிப் பருப்பு வண்ணத்தில் ஜரிகை வேலைப்பாடுகள் செய்த சல்வாரில் அவள் வந்தபோது தேவதையைப் பார்ப்பதைப் போல ஜானகிக்கு இருந்தது..
"இதைப் போட்டுக்க.."
ஜானகி கொடுத்த வைர செட்டை வாங்கி.. அதிலிருந்த வைரத் தொங்கட்டான்களை காதில் மாட்டிக் கொண்டாள் மீரா.. ஜானகியே வட்ட வடிவமாக அமைந்த அந்த வைர அட்டிகையை மீராவின் கழுத்தில் போட்டு விட்டாள்.. கைகளில் வைர வளையல்கள்.. வைர மோதிரம்..
காதோரமாக முடியை எடுத்துப் கிளிப்பால் லேசாக இறுக்கி விடப்பட்ட கூந்தல் அலையலையாய் முதுகில் படர்ந்திருக்க.. தாய்.. தந்தையோடு.. அந்த ஃபைவ்
ஸ்டார் ஹோட்டலின் பார்ட்டி அரங்குக்குள் மீரா நுழைந்த போது ஒட்டு மொத்தக் கூட்டமும் அவளைத் திரும்பிப் பார்த்தது..
"வெல்கம் சடகோபன்.."
அவர்களை வரவேற்றார் சடகோபனின் நண்பர்..
"ஹி இஸ் மை ஒன்லி ஒன் சன் பிரகாஷ்.. லண்டனில் பிஸினெஸ் பண்றான்.."
அவர் அறிமுகப் படுத்தி வைத்த பிரகாஷின் பார்வை உரிமையுடன் மீராவின் மேனியை மேய்ந்தது.. அவளது உடல் கூசியது..
"ஆக்சுவலா மிஸஸ் சடகோபன்.. நானும் சடகோபனும்.. பிரகாஷ், மீராவுக்கு மேரேஜ் பண்ணி வைக்கனும்ன்னு டிசைட் பண்ணியிருந்தோம்.. சடகோபன் தான் மீரா.. ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணிரட்டும்ன்னு தள்ளிப் போட்டான்.. இப்ப என்னடான்னா இன்னும் 22 மாதங்கள் டைம் கொடுடான்னு கேட்கிறான்.."
சடகோபனின் நண்பர் சொல்லச் சொல்ல.. இவ்வளவு பெரிய முடிவை அவளைக் கலந்து ஆலோசிக்காமல் அவருடைய கணவர் எடுத்திருக்கிறாரே என்ற வருத்தம் ஜானகிக்கு வந்தது..
அவள் என்ன வாடகைத்தாயா..? பெண்ணைப் பெற்றவளுக்கு அந்தப் பெண்ணின் வாழ்வைப் பற்றித் தெரிந்து கொள்ளும் உரிமை வேண்டாமா..?
ஜானகியின் பார்வையைப் பார்ப்பதைத் தவிர்த்தார் சடகோபன்.. அந்தப் பிரகாஷோ.. அப்போதே இருபத்தி இரண்டு மாதங்களைக் கடந்து விட்டவனைப் போல மீராவுடன் உரிமையாக நெருங்கி நெருங்கி நின்று பேசினான்..
மீரா நகர்ந்து.. நகர்ந்து நின்றாள்.. முள்ளின் மேல் நிற்பதைப் போல அவளுக்கு இருந்தது.. ஒரு கட்டத்தில் அந்தப் பிரகாஷ் மீராவின் விரலைத் தொட முயன்றான்.. மீரா பதறி விலகிய போது.. அவள் கைபிடித்து நிறுத்தியது ஒருகரம்..
"ஹாய் மீரா.."
யதுநந்தனின் குரல் அவளுக்குள் ஜீவ சக்தியை கொட்டியது... கண்கலங்க... விரல் நடுங்க... ஆணந்தத்துடன் அவனைப் பார்த்தாள்..
"ஹீ ஆர் யு மேன்..?" பிரகாஷ் சீறினான்..
"இந்த பில்டிங்கின் கன்ஸ்ட்ரக்சன் என்ஜினியர்.. இந்தப் பார்ட்டியோட சீப் கெஸ்ட்.. உங்க அப்பாவிடம் பில்டிங்கோட சாவிகளை ஒப்படைக்க வந்திருக்கிறேன்..
யு நோ.. அதுதான் இந்தப் பார்ட்டியோட மெயின் கண்டெண்ட்.."
யதுநந்தன் நிதானமாக பேசியதில் பிரகாஷின் முகம் விழுந்து விட்டது.. அந்தப் பார்ட்டியின் முக்கிய அங்கமாக நிற்பவனை அகற்றி விட அவனால் முடியவில்லை. அவனோ மீராவை பிரகாஷ் நெருங்க முடியாதபடி மீராவுக்கு அரணாக நின்றான்..
சாவிகளை ஒப்படைக்கும் படலம் ஆரம்பமானது..
மேடையில் மைக்கின் முன்னால் நின்ற சடகோபனின் நண்பர் யதுநந்தனின் வேலைத் திறமையைப் பற்றி வெகுவாக புகழ்ந்து பேசினார்.. அடுத்துப் பேசிய யதுநந்தன் நன்றி சொன்னான்.. கூடவே..
"இந்தப் பார்ட்டியை ஸ்பெசலாக்க நான் ஒரு பாட்டுப் பாடலாமா..?" என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டான்..
"யு ஆர் வெல்கம்.." கூட்டம் ஆர்ப்பரித்தது..
"கூடப்பாட மிஸ் மீராவை அழைத்துக் கொள்ளலாமா..?"
"ஷ்யூர்.. ஷ்யூர்.." கூட்டம் கூவியதில்..
"இவன் எப்படிடீ.. என் மகளைக் கூப்பிடலாம்.." என்று சடகோபன் கொதித்தார்..
"என்னைக் கேட்டா..? அங்கே போய் விட்ட உங்க பெண்ணைக் கேளுங்க.." ஜானகி எரிச்சலுடன் சொன்னாள்..
"எங்கே போயிட்டா..?"
சடகோபனின் அருகில் பார்த்தார்.. மீரா அங்கு இல்லை.. யதுநந்தனின் அருகே மேடையில் நின்றாள்.. கூட்டத்தின் மத்தியில் மகளைக் கூப்பிட்டால் அவள் யதுநந்தனின் மீதான அவளது காதலை சொல்லி விடக்கூடும்.. அது பிரகாஷீக்கும்.. அவனுடைய அப்பாவுக்கும் தெரிந்து விடக் கூடும் என்பதால் அவர் பல்லைக் கடித்தபடி அசையாமல் நின்றார்..
           "ஓ.. பிரியா..! பிரியா..!
என் பிரியா..! பிரியா..!"
யது நந்தன் தீர்க்கமான பார்வையோடு பாடலை ஆரம்பித்தான்.. அவன் குரலில் ஈர்க்கப்பட்ட கூட்டத்தை அடுத்துப் பாடிய மீரா யது நந்தனை விட அதிகமாக வசீகரித்தாள்..
          "ஓ.. பிரியா..! பிரியா..
உன் பிரியா..! பிரியா..!"
அவளின் குரல் இனிமையில் கட்டுண்டு நின்றது கூட்டம்..
     "ஏழைகாதல் வாழுமோ..
இருளும் ஒளியும் சேருமோ..
நீயொருபுறம் நானொருபுறம்..
கானல் நீரால் தாகம் தணியாது..
ஓ பிரியா.. பிரியா..! என் பிரியா..! பிரியா..!"
யதுநந்தனின் கடினமான முகத்துக்கும்.. உருக்கமான அவன் குரலுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமல் இருந்தது.. உருகிய கூட்டத்தின் கண்கள் கலங்க ஆரம்பித்தன.. மீராவோ.. அவற்றில் கண்ணீர் துளிகளை வரவழைத்தாள்..
     "இணைந்திடாமல் போவதோ..?
வானம்.. பூமி ஆவதோ..?
காலம் சிறிது.. காதல் மனது..
தேவன் நீதான்.. போனால் வராது.."
மிராவின் இதயம் தேம்பியது.. அதை யதுநந்தனின் பாடல் சொல்லியது..
        "தேடும் கண்களே..! தேம்பும் நெஞ்சமே..!
    வீடும் பொய்யடி.. வாழ்வும் பொய்யடி.."
யதுநந்தனின் வார்த்தை வீச்சு.. வாளின் வீச்சைவிடப் பலமானதாக இருந்தது.. அவர்களின் பாடலில் எதையோ உணர்ந்த பிரகாஷின் முகம் கருத்தது.. யதுநந்தனை சொந்தத்துடன் பார்த்தபடி இருந்த மீராவின் கண்களில் பிரகாஷீக்கான காதலை அவன் மனம் தேடியது.. அதை உணர்த்த இகழ்ச்சிச் சுழிப்பை மீராவின் இதழ்கள் அவனுக்குத் தந்தன..
      "அன்பு கொண்ட கண்களும்..
ஆசை கொண்ட நெஞ்சமும்..
ஆணையிட்டு மாறுமோ..?
பெண்மை தாங்குமோ..?"
அவளின் கேள்வி பிரகாஷீக்கானது என்பதில் பிரகாஷின் முகக் கருமை அதிகரித்தது.. சடகோபன் கோபத்தில் கொதித்தார்..
"ராஜ மங்கை கண்களே..
என்றும் என்னை மொய்ப்பதோ..
வாடும் ஏழை இங்கு ஓர்
பாவி அல்லவோ.."
யதுநந்தனின் குரல் கரகரத்தது.. மீராவின் கண்களில் கண்ணீர் சுரந்தது..
   "எதனாலும் ஒருநாளும் மறையாது பிரியமோ..
    எரித்தாலும்.. மறைத்தாலும்.. விலகாத பாரமோ.."
அவளது கண்ணீர் துளிகளில் தானும் கரைந்து பாடினான் யதுநந்தன்..
     "கன்னி மானும் உன்னுடன்..
கலந்ததென்ன பாவமோ..
காதலென்ன காற்றிலே..
கலைந்து போகும் மேகமோ..?"
மீராவின் உறுதியில் பிரகாஷின் புருவங்கள் முடிச்சிட்டன..
"காளிதாசன் ஏடுகள்..
கண்ணன் ராசலீலைகள்..
பருவ மோகம் தந்தது
பாவமல்லவோ..?"
யதுநந்தனின் குமுறலுக்கு.. மீரா பதில் தந்தாள்..
"ஷாஜகானின் காதலி..
தாஜ்மகாலின் பைங்கிளி..!
பாசம் வைத்த பாவம்தான்..
சாவும் வந்தது.."
மீராவின் பதிலில் யது நந்தனின் மனம் குலுங்கியது..  இதற்காகத்தான் அவன் அவளைத் தேடி வந்து பார்த்துக் காதல் சொன்னானா..?
  "இறந்தாலும் இறவாது விளைகின்ற பிரேமையே..!
        அடிநீயே.. பழியாக வருகின்ற பெண்மையே..!"
அசையாமல் நின்ற கூட்டத்தின் கண்ணீரைப் பார்த்த ஜானகியின் கண்களில் கண்ணீர் பெருகியது.. மகளின் துடிப்பில் அவளும் துடித்தாள்..
"விழியில் பூக்கும் ரோசமே..
புனிதமான பாசமே..
பாடும் இந்த பந்தமே..
என்றும் வெற்றி கொள்ளுமே.."
மீராவின் அழுத்தமான நம்பிக்கையில் யதுநந்தனின் மனம் சிலிர்த்தது..
"ஏக்கம் என்னடி..? என்னை வந்து சேரடி..
    நெஞ்சிரண்டும் ராகம்பாட..
காவல் தாண்டி.. பூவை இங்காட..
   ஓ.. பிரியா.. பிரியா..! என் பிரியா.. பிரியா..!"




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே.. -25
வந்தாள் மகாலட்சுமியே.. -25
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-25.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-25.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy