வந்தாள் மகாலட்சுமியே.. -24

24 வீட்டுக்குத் திரும்பியதும் யதுநந்தன் முதல் வேலையாக வாகீசனின் கைகளைப் பிடித்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.. வாகீசனுக்கு என்னவோ போல...

24

வீட்டுக்குத் திரும்பியதும் யதுநந்தன் முதல் வேலையாக வாகீசனின் கைகளைப் பிடித்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.. வாகீசனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது..
பெற்றோரில்லாத யது நந்தனின் மீது ஒருநாள்.. ஒரு பொழுதாவது உண்மையான பாசத்தை அவர் பொழிந்ததில்லை.. மைத்துனனின் மகனென்ற சொந்தத்தைக் காட்டியதில்லை.. வரதராஜனின் மீதிருந்த பகையுணர்வை யதுநந்தனின் மீது காட்டத்தான் அவர் முயன்றிருக்கிறார்..
அப்படிப்பட்ட வாகீசனின் கைகளைப் பிடித்து யதுநந்தன் தன் கண்களில் ஒற்றிக் கொள்கிறானா..?
"என்னப்பா இது..?" என்றார் தர்மசங்கடத்துடன்..
"பாகீ.. சொல்லேண்டி.." மனைவியை துணைக்கு அழைத்தார்..
"நான் என்னத்தைச் சொல்ல..?"
பாகீரதி சேலை முந்தானையில் கரகரவென்று கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.. துடைக்கத் துடைக்க அவள் கண்களில் கண்ணீர் பெருகியது..
"அவன் மனசில என்ன இருக்கோ..?"
வாகீசன் கைகளை உறுவிக் கொள்ள முயன்றார்.. முடியவில்லை.. யதுநந்தனின் பிடி இரும்புப் பிடியாக இருந்தது..
"பட்டுக்காம இருந்தீங்கன்னு நினைச்சேன் மாமா.. அப்படியில்லைன்னு காட்டிட்டீங்க.. எனக்கு அப்பா இல்லைன்னு நினைச்சேன்.. நானிருக்கேண்டான்னு சொல்லிட்டிங்க.."
"யது.." வாகீசனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை..
"என் வரைக்கும் இந்தப் பிரச்னையை முடிச்சுக்கனும்னுதான் நானே பெண் கேட்டுப் போனேன்.. மீராவின் அப்பா உங்களைக் கூப்பிட்டு விடுவார்ன்னு நான் நினைக்கலை.. பிரச்னை வரக்கூடாதுன்னு சொன்னவர் நீங்க.. என்ன பேசப் போறிங்களோன்னு நினைச்சேன்.. நீங்க என் கௌரவத்தையும்... மரியாதையையும் காப்பாத்திக் கொடுத்திட்டிங்க மாமா.." யதுநந்தனின் நாத்தழுதழுத்தது..
"ஏன்ப்பா.. இதைப் போய் பெரிசா பேச வந்திட்டியே.. அது எப்படிப்பா உன்னை நான் விட்டுக் கொடுப்பேன்..? நீ எங்க வீட்டுப் பையனில்லையா..?"
"இது.. இது.. இது.. இதைத்தான் நான் எதிர் பார்த்தேன் மாமா.. என் அம்மாவுக்கும் மேலா அத்தை பாசத்தைக் கொட்டினாலும் என்னாலே உங்க குடும்பத் தோடு ஒட்ட முடிஞ்சதே இல்லை மாமா.. நான் உங்க குடும்பத்திலே ஒருத்தனில்லை அப்படிங்கிற தனிமை உணர்வுதான் என் மனசில இருந்தது.. இன்னைக்கு அதை விரட்டிட்டீங்க மாமா.. உங்க குடும்பத்திலே ஒருத்தனா என்னைச் சொல்லிட்டிங்க.. நன்றி மாமா.."
"என்னது..?"
வாசீசனுக்கு அவர் செவிகளில் விழுந்த வார்த்தையை நம்ப முடியவில்லை.. அவரை நன்றி சொல்ல வைத்துக் கொண்டிருந்த யதுநந்தன் அவருக்கு நன்றி சொல்கிறானா..?
"இன்னைக்கு என் காதலியின் பெத்தவங்க முன்னாலே என்னை விட்டுக் கொடுக்காம என்பக்கமா நின்றிங்க மாமா.. இதுக்கு நான் என்ன கைம்மாறைச் செய்யப் போகிறேனோ.."
"அபத்தமாய் பேசாதேப்பா.. பிறத்தியாருக்குத்தான் கைம்மாறு செய்யனும்.. உன் அப்பாவுக்கு நீ கைம்மாறு செய்வியா..?"
"மாமா.."
யதுநந்தன் வாகீசனின் கைகளை இறுக்கிக் கொண்டான்..
"உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கேன் மாமா.." என்று திருப்பித் திருப்பிச் சொன்னான்..
அது வாகீசனுக்கான மிகப்பெரிய வெற்றி..!
எந்த வரதராஜனின் மகனிடம் அவர் நன்றிக்கடன் பட்டுக் கொண்டிருந்தாரோ.. அந்த வரதராஜனின் மகன் அவரிடம் நன்றிக் கடன் பட்டு விட்டதாகச் சொல்கிறான்.. இது கொண்டாட வேண்டிய ஒன்றல்லவா..?
வாகீசனால் அந்த வெற்றியைக் கொண்டாட முடியவில்லை.. யதுநந்தனை வென்று விட்ட மகிழ்ச்சி அவருக்கு வரவில்லை.. அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தவரால் பேச முடியவில்லை.. பொங்கி அழுத பாகீரதியின் அழுகையை கட்டுப் படுத்தவும் முடியவில்லை..
"உனக்கென்னப்பா.. நீ ராஜா.. ஜெயிக்கப் பிறந்தவன்.. இதிலயெல்லாம் மனசை விடாம போட்ட சவாலில ஜெயிக்க என்ன வழின்னு யோசி.." யதுநந்தனுக்கு தேறுதல் சொன்னார்..
அவரைப் பார்த்தபடி சமையலறையில் வேலையைக் கவனித்துக் கொண்டிருந்த பாகீரதிக்கு மனது பாரமாக இருந்தது.. சடகோபன் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவள் மனதை அறுத்துக் கொண்டிருந்தன.. அந்த காயத்துக்கு மருந்திட்டது வாகீசனின் இதமான பேச்சு..
காய்களை நறுக்கியபடியே ஹாலைப் பார்த்தாள்.. யதுநந்தனிடம் ஆழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்த வாகீசனின் தோற்றத்தை ரசித்தாள்.. அவளுக்கு அவர் மனதை தெரியும்..
வரதராஜனின் பிம்பமாகத்தான் யது நந்தனை வாகீசன் பார்த்தார்.. அவனுடைய உயரத்திலிருந்து ஓர் முறையாது அவனை இறக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதிலிருந்தை பாகீரதி அறிவாள்.. பாகீரதியின் கோபத்துக்கு அஞ்சி வெளிப்படையாக
அவர் மனதிலிருந்ததை சொல்லாவிடினும்.. அவர் மனதில் அந்த எண்ணம்தான் இருந்தது என்பதை பாகீரதி மிக நன்றாகவே அறிந்து வைத்திருந்தாள்..
அப்படியொரு சந்தர்ப்பத்தை காலம் அன்று வாகீசனின் கைகளில் கொடுத்தது.. அவர் நினைத் திருந்தால் அதைப் பயன்படுத்தி யதுநந்தனுக்கு தலை குனிவை உண்டாக்கியிருக்கலாம்..
ஆனால் வாகீசன் அதைச் செய்யவில்லை.. கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டார்.. யதுநந்தனின் உயரத்தை இறுக்கிப் பிடித்தார்.. அவனுக்கு தலை நிமிர்வைக் கொடுத்தார்..
பாகீரதிக்கு கணவன் மீது காதல் வந்தது.. அவளைப் பெண் பார்க்க வந்த போது அவளுக்காகவே அவளைப் பிடித்திருக்கிறது என்று அவர் சொன்ன சொல்லிற்காக பிடிவாதம் பிடித்து அவரை மணந்து கொண்டவளுக்கு.. வரதராஜனின் மீதும்.. அவர் மகனான யதுநந்தனின் மீதும் வாகீசன் காட்டிய வெறுப்பில்.. அவர்மீது முழுமையான காதல் வரவில்லை.. அவள் மனதை முழுதாக ஜெயித்து தன் வசப்படுத்த வாகீசனால் முடியவில்லை..
அன்று அது நடந்தது.. பாகீரதியின் மனம் தன் கணவனை விரும்பியது.. அவள் மனதை முழுதாக அன்று அவர் வென்று விட்டார்..
பாகீரதி கணவன் மீது முழுமையான காதல் கொண்டாள்.. அவளுக்கு வாகீசனுடனான தனிமை வேண்டியிருந்தது.. அவரையே பார்த்தபடி வேலை செய்து கொண்டிருந்தவளை யதேச்சையாக அவர் பார்த்து வைத்த போது.. முதன் முறையாக பார்த்துக் கொள்ளும் காதலியைப் போல் அவள் முகம் சிவந்தாள்..
'பாகீயா இது..?' வாகீசன் யதுநந்தனை மறந்தார்..
அவரது கண்களில் மின்னலில் பாகீரதியின் வெட்கம் அதிகமானது.. அவளும் அவரைப் பார்த்தபடி வேலையைத் தொடர்ந்தாள்.. நொடிக்கொரு முறை அவரைப் பார்ப்பதும்.. வேலையைப் பார்ப்பதுமாக இருந்தவளைப் பார்க்கப் பார்க்க வாகீசனுக்குத் தெவிட்டவில்லை..
அடுப்பை அணைத்த பாகீரதி.. கணவரைப் பார்த்து மாடிக்கு வரும்படி சமிக்ஞை செய்து விட்டு மாடிப் படிகளில் ஏறினாள்.. வாகீசன் இறக்கையில்லாமல் வானத்தில் பறந்தார்..
அவர் மனைவி அவரைக் கண்ணடித்து கூப்பிடுகிறாளா..?
'ஹீர்ரே..' என்று கத்த வேண்டும் போல குதூகலித்த மனதை அவர் அடக்கிக் கொண்டார்..
'யது இருக்கிறான்.. பாவம்.. காதல் கை கூடுமா.. கூடாதாங்கிற நிலைமையில இருக்கிறவன் முன்னாடி அடக்கி வாசிக்கனும்..'
பொறுப்புணர்வுடன் மெதுவாக எழுந்தவர்..
"குளிச்சுட்டு வரேன்ப்பா.." என்றார்..
யதுநந்தன் தலை அசைத்தான்.. வாகீசன் விடுதலை உணர்வுடன் மாடிக்குத் தாவினார்.. அவருடைய அறைக்குள் நுழைந்தவரின் கழுத்தை வளைத்து இழுத்து அவர் முகம் முழுவதும் முத்த மழையைப் பொழிந்தாள் அவருடைய மனைவி..
"பாகீ.." ஆனந்தத்துடன் அவர் மனைவியை இறுக்கிக் கொண்டார்..
"ஐ லவ் யு.." சின்னப் பெண்ணைப் போல அவள் நாணிக் கோணிக் கொண்டு சொன்னதில் அவருக்குள் கள்ளூரும் போதை ஏற்பட்டது..
"ஏய்ய்.. என்னடி இன்னைக்கு ஒரு மார்க்கமா இருக்க..?" மனைவியை கைகளில் அள்ளிக் கொண்டார்..
பூமாலையாய் அவர் கைகளில் கிடந்த பாகீரதி.. சினிமாக் கதாநாயகியைப் போல ஓயிலாக அவர் கழுத்தை வளைத்தாள்.. வாகீசனுக்கு டூயட் பாடவேண்டும் போல இருந்தது..
எல்லாக் கணவன்மார்களைப் போலவே வாகீசனின் மனதிலும் அவருடைய மனைவியின் முன்னால் 'ஹீரோ' வாக நிற்க வேண்டுமென்ற கனவு இருந்தது.. பதினான்கு வயதில் மகேஷீம்.. பத்து வயதில் சுரேஷீமாக இரண்டு வளர்ந்த குழந்தைகளுக்கு தகப்பனாகி விட்ட பின்பும் அந்தக் கனவு நிறைவேறவே இல்லை.. என்னதான் அவர் பாகீரதியின் முன்னால் ஹீரோவாகி விட வேண்டும் என்ற முனைப்புடன் காரியங்களை ஆற்றினாலும் அவள் அவரை குணசித்திர நடிகர் ரேன்ஜீக்கு பார்த்து விட்டு நகர்ந்து விடுவாள்..
அந்த பாகீரதியா அவர் கைகளில் ஹீரோயின் போல கிடக்கிறாள்..?
"எப்புடிங்க..?" பாகீரதி வியப்புடன் கேட்டாள்..
"எதைக் கேட்கிறடி..?"
"அந்த கலெக்டர் பெயரைச் சொல்கிறதுக்கே நடுங்குவிங்க.. இன்னைக்கு என்னடான்னா.. அந்த மனுசரை எதிர்த்து நின்னு ஒரு ஆட்டு ஆட்டி வைச்சுட்டு வந்திருக்கீங்க.. உங்களிடம் இம்புட்டு வீரமா..? நிஜமாவே நீங்க ஹீரோதாங்க.."
'இதைத்தான் தேன் வந்து பாயுதுன்னு முண்டாசுக் கவிஞர் சொன்னாரோ..'
வாகீசன் ஆனந்தக் கூத்தாடி விட்டார்.. அடுத்து வந்த மணித்துளிகளில் பாகீரதி கொடுத்த ஒத்துழைப்பு அவரை அயர வைத்து விட்டது..
'இப்படியெல்லாம் கூட இவள் இழைவாளா..?'
பாகீரதி இழைந்தாள்.. வாகீசன் எதிர்பார்த்த முழுமையான காதலை அவருக்குக் கொடுத்தாள்.. அவரை அணு அணுவாக பிடித்திருக்கிறது என்பதை அவருக்கு அன்று உணர்த்தினாள்.. அவரைப் பார்க்கும் அவளது பார்வை ஹீரோவைப் பார்க்கும் ஹீரோயினின் பார்வையாக இருந்தது.. வாகீசன் எதற்காக ஏங்கினாரோ... அந்த ஏக்கமெல்லாம் அன்று முழுமையாக அவருக்குத் தீர்ந்து விட்டது.. திருமணமாகி பதினேழு வருடங்கள் கழிந்த பின்னால்.. அவருக்கு அவர் கனவு பலித்து விட்டது..  அவரது மனைவியின் முழுமையான காதல் கிடைத்து விட்டது.. அவள் பார்வையில் அவர் 'ஹீரோ..' வாக உயர்ந்து நின்று விட்டார்..
வாகீசன் அலுவலகத்திற்குப் போன போது... அவருக்கான மாறுதல் உத்தரவு ஃபேக்ஸில் வந்து அவருக்காக அவர் மேஜையில் காத்திருந்தது..
'கலெக்டர் ஜரூராய் வேலை பார்க்கிறார் போல..'
வாகீசன் மெடிகல் லீவை கொடுத்தார்.. அவருடைய சுப்பிரியர் அறிவுரை வழங்கினார்..
"எத்தனை நாளைக்குத்தான் ரிலீவ் ஆகாம மெடிகல் லீவிலியே நீங்க இருக்க முடியும் வாகீசன்..? என்னைக் கிருந்தாலும் நீங்க ஆபிஸ்க்கு வந்துதானே ஆகனும்..?"
"வருவேன் சார்.. வரும்போது இந்த டிரான்ஸ்பர் ஆர்டர் கேன்சலாகியிருக்கும்.."
"இது வீண் பிடிவாதம் வாகீசன்.. உங்களை யொன்னும் தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திடலையே.. மேட்டுப் பாளையத்துக்கு மாத்தியிருக்காங்க.. அருமையான கிளைமேட்.. பிள்ளைகள் படிக்கத் தரமான ஸ்கூல்.. இத்தனைக்கும் மேலா.. இந்த டிரான்பர் ஆர்டரை ஏத்துக்கிட்டா உங்களுக்கு பிரமோசன் கிடைக்குதே.. அங்கே நீங்கதான் ஹை சுப்பிரியர்.. இங்கேன்னா எனக்குக் கீழே வேலை பார்த்தாகனும்.."
"அதுக்கென்ன சார்.. உங்களுக்கு கீழே வேலை பார்த்தா என்ன..? எனக்கு அந்த மாதிரியெல்லாம் எண்ணமில்ல.. ஹை சுப்பிரியரா இருக்கிறதை விட உங்களுக்கு கீழே வொர்க் பண்ணத்தான் நான் ஆசைப்படறேன் சார்.."
"சென்னையில என்ன இருக்கு வாகீசன்..? சம்மர்ல இங்கே இருக்க முடியுமா..? ஊட்டியைப் பார்த்துத்தானே ஓடறோம்..? மேட்டுப் பாளையத்தில இந்த அவதியெல்லாம் இல்லாம ஹாயா இருக்கலாமில்லையா..?"
"எனக்கு ஹாயாய் இருக்கிறதைவிட.. இங்கே அவதிபடத்தான் பிடிச்சிருக்கு சார்.."
வாகீசன் சுப்பிரியரின் அறையை விட்டு வெளியே வந்தார்.. யூனியன் செயலாளரைத் தேடிப் போனார்..
"இதிலே இன்புளூயன்ஸ் விளையாடுது வாகீசன்.." என்றார் அவர்..
"அது எனக்கும் தெரியும் ரகு.."
"எப்போதுமே உங்களுக்கு நம்ம டிபார்ட்மெண்டில இருக்கிற சுப்பிரியர்களாலதான் தொந்தரவு வரும்.. இப்போ வெளியிடத்தில இருந்து வந்திருக்குது.."
"என்ன செய்யலாம்..?"
"நீங்க லீவிலே போங்க.. நாங்க பார்த்துக்கறோம்.. நினைச்சவங்கள்ளாம் நம்ம டிபார்ட்மெண்டில புகுந்து விளையாடனும்னா யூனியன்னு ஒன்னு எதுக்கு இருக்கு..?"
வாகீசன் லீவில் போனார்.. பாகீரதியிடம் விவரம் சொன்னபோது அவள் அவருடைய முடிவை வரவேற்றாள்.
"எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி.. நீங்க இந்த டிரான்ஸ்பரை ஏத்துக்கக் கூடாது.. நாம மீராவோட வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரங்களாத்தான் இருக்கனும்.. அதை மாத்தனும்னு இந்த கலெக்டர் நினைக்கிறாரு.. அது நடக்கக் கூடாது.."
பாகீரதி சொல்லி முடிப்பதற்குள் அது நடப்பதற்கான சாத்தியக்கூறு வேறு வகையில் அவர்களுக்கு எதிரில் வந்து நின்றது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே.. -24
வந்தாள் மகாலட்சுமியே.. -24
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-24.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-24.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy