வந்தாள் மகாலட்சுமியே...-23

23 யதுநந்தனால் நம்பவே முடியவில்லை.. அவனை அழைத்து அவனுடைய காதலால் தனக்கும்.. தன் குடும்பத்துக்கும் எந்தவொரு பிரச்னையும் வரக்கூடாது என்று ...

23

யதுநந்தனால் நம்பவே முடியவில்லை..
அவனை அழைத்து அவனுடைய காதலால் தனக்கும்.. தன் குடும்பத்துக்கும் எந்தவொரு பிரச்னையும் வரக்கூடாது என்று சொன்ன மாமாவா அவனுக்கு ஆதரவாக விட்டு விளாசித் தள்ளிக் கொண்டிருக்கிறார்..?
"போதும் வாகீசன்.. பொறுப்பானவர்.. உங்களிடம் சொன்னா உங்க வீட்டுப் பையனை கண்டிச்சு வைப்பீங்கன்னு நினைச்சு வரச்சொன்னா நீங்க அவனுக்கு மேலே இருக்கறீங்களே.."
"ஏன் சார்.. கண்டிச்சு வைக்க இவன் என்ன சின்னப் பையனா..? இல்லை.. இதுதான் என் பென்சிலை அவன் திருடிட்டான்ங்கிற விசயமா..? இவன் சிவில் என்ஜினியர் சார்.. பெரிய பெரிய கட்டிடங்களைக் கட்டித் தள்ளறவன்.. விசயமும் சின்ன விசயமில்லை.. உங்க மகளின் மனசைத் திருடியிருக்கிறான்.. இதில் குற்றம் செய்தது யார்ன்னு எப்படிசார் தெளிவாச் சொல்ல முடியும்..?"
சடகோபன் மீராவை பார்த்த பார்வையில் ஜானகியின் சப்த நாடியும் நடுங்கியது.. மீராவோ அச்சமின்றி நின்றாள்.. யதுநந்தனுக்கு அவன் வெளிப்படையாக காதல் சொன்ன தினத்தில் அவள் பயந்த பயம் நினைவுக்கு வந்தது..
அந்த மீராவா இவ்வளவு தைரியமாக நிற்கிறாள்..?
"இல்லை.." என்றான் யதுநந்தன்..
"தப்பெல்லாம் என்மீது மட்டும்தான்.. நான்தான் உங்க பெண்மீது ஆசைப்பட்டேன்.. அதனால கோபப் படறதுன்னா என்மேல மட்டும் கோபப் படுங்க.. மீரா மேலே கோபப்படாதீங்க.. இந்த விசயத்தில் அவள் குற்றமற்றவள்.."
"கேட்டுக்கிட்டிங்கள்ல.." என்றார் வாகீசன்..
"உங்க மகளை நீங்க திட்டி விடக் கூடாதுன்னு என் மருமகன் துடிக்கிறான்.. இதுதாங்க அன்பு.. பெத்த தகப்பனின் கோபம்கூட தான் காதலிக்கிற பெண்மீது வந்து விடக் கூடாதுன்னு நினைச்சு மொத்தப் பழியையும் தன்மேல போட்டுக்கறவன்தாங்க ஆம்பளை.. என் மருமகனுக்கு பெண்ணைக் கொடுத்தீங்கன்னா உங்களை விட அதிகமாகவே பாசத்தைக் கொட்டி அவளைப் பார்த்துக்குவான்.."
சடகோபன் பல்லைக் கடித்தார்.. கட்டுக்கடங்காமல் விவகாரம் முற்றுவதில் அவருடைய கோபம் முற்றியது..
"ஜாக்கிரதை வாகீசன்.. நீங்கதான் கவர்ண்ட்மெண்ட் சர்வண்ட் அப்படி.. இப்படின்னு குதிப்பீங்க.. உங்க மைத்துனன் என்ன செய்வார்ன்னு பார்க்கறேன்.."
"உங்களாலே என் மைத்துனனை ஒன்றும் பண்ண முடியாது.." வாகீசன் இறுகின முகத்தோடு சொன்னார்..
யதுநந்தனின் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.. கோபத்தில் சிவந்த அவன் முகத்தைக் கண்ட பாகீரதி.. அண்ணன் மகனின் கையைப் பிடித்து அழுத்தி அமைதிப் படுத்தினாள்..
"ஏன் செய்ய முடியாது..? இன்னும் நான் யாருன்னு நீங்க யாரும் பார்க்கலை.."
"பார்த்துக்கிட்டுத்தானே சார் இருக்கிறோம்..? இனியும் பார்க்கத்தயாராய்த்தான் இருக்கோம்.."
"உங்களுடன் எனக்கென்ன பேச்சு..? உங்க மருமகனைப் பெத்தவங்களுக்குப் போன் போடுங்க.. கிழித்துத் தோரணம் கட்டறேன்.."
யதுநந்தனின் முகம் அந்த அளவுக்கு இறுகி அப்போதுதான் மீரா பார்க்கிறாள்.. அதுவரை யதுநந்தன் அவனுடைய பெற்றோரைப் பற்றிப் பேசியதில்லை.. அவர்கள் எங்கேயிருக்கிறார்கள் என்ற மீராவின் கேள்விக்கு சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தான்.. பாகீரதியிடம் மீரா தூண்டித் துருவிய போது..
"என் அண்ணன் பூனாவில் வேலை பார்த்தார்.." என்று மட்டும் அவள் சொன்னாள்..
அவர்களைப் பற்றிய பேச்சிற்கு யதுநந்தன் இந்த அளவுக்கு ஏன் உணர்ச்சிவசப் படுகிறான் என்று மீராவுக்குத் தெரியவில்லை..
எப்படியும் அவளைப் பெற்றவர்களிடம் அவன் பெண் கேட்க வந்ததைப் போல.. அவனைப் பெற்றவர்களிடமும் அவனுடைய காதலைப் பற்றிச் சொல்லியாக வேண்டுமல்லவா..?
"அவனைப் பெற்றவங்களா எங்களை நினைத்துக்கங்க கலெக்டர் சார்.. கிழித்துக் தோரணம் கட்டுவதாக இருந்தால் எங்களைத் தோரணம் கட்டுங்க.."
நிதானமாக வாகீசன் சொன்ன வார்த்தையில் துயரத் தோடு கண்களை மூடி நின்றான் யதுநந்தன்..
'ஏன் இந்தத் துயரம்..?' மீரா தவித்தாள்..
"என்ன மேன்.. உங்க மைத்துனனைக் காப்பாற்றப் பார்க்கறீங்களா..?" சடகோபன் உறுமினான்..
"இல்லைங்க.. யாராலேயும் காப்பாற்ற முடியாதுன்னு டாக்டர்கள் கை விரிச்சுட்டதாலே.. என் மைத்துனரும் அவரோட மனைவியும் என் மருமகனுக்கு பதினான்கு வயதாயிருக்கும் போதே மேலோகம் போயிட்டாங்க.. அவங்களுக்குப் போன் போட்டு வரவழைக்க முடிஞ்சா வரவழைங்க.. எனக்கொன்னும் ஆட்சேபனையில்லை.."
யதுநந்தனின் முகத்தில் அப்பியிருந்த துயரத்தை இரக்கத்துடன் பார்த்தபடி சொன்னார் வாகீசன்..
'என் யதுவுக்கு அப்பா அம்மா இல்லையா..?' மீராவுக்கு கண்ணீர் வந்தது..
"பூனாவிலே பரவின விசக் காய்ச்சலிலே அவங்க ரெண்டு பேரும் போயிட்டாங்க.. ஸ்கூல் ஆன்னுவல் லீவுன்னு யதுநந்தன் கிராமத்தில் இருக்கிற தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்திருந்ததாலே தப்பிப் பிழைச்சான்.. இவனை என் மாமனாரும்.. மாமியாரும்தான் வளர்த்தாங்க.. ஸோ.. யதுநநந்தனுக்குப் பெத்தவங்களா நானும் என் வொய்பும் தான் நிற்கிறோம்.. நிற்போம்.. எது பேசறதா இருந்தாலும் எங்களிடம் தான் நீங்க பேசியாகனும்.."
சடகோபனுக்கே என்னவோ போல ஆகிவிட்டது.. அவர் மனைவியைப் பார்த்தார்.. அவள் கண்கள் குளமாகியிருந்ததில் அடக்கி வாசிக்க முடிவு செய்தார்..
'இப்போதைக்கு ஆறப் போடலாம்.. தாயில்லாப் பிள்ளைன்னா தாய்க்குலத்தோட ஒட்டு மொத்த ஆதரவும் இவன் பக்கம்தான் சாயும்.. இவனோ தாய்.. தகப்பன் இல்லேங்கிறான்.. தந்தை குலமும் சேர்ந்து வரிந்து கட்டிக்கிட்டு வந்து நிற்கும்.. தேவைதானா..?' சடகோபன் யதுநந்தனைப் பார்த்தார்..
"ஸோ.. உனக்குப் பேரண்ட்ஸ் இல்லை.."
"நாங்க இருக்கோம்.." வாகீசன் குரல் கொடுத்தார்..
"இருக்கட்டும்.. இருக்கட்டும்.. மிஸ்டர் யதுநந்தன்.. உங்க மாமா சொல்கிறதைப் போல நீங்க எம்.ஈ சிவில் என்ஜினியர்.. பெரிய கண்ஸ்ட்ரக்சன் கம்பெனியில வேலை பார்க்கறிங்க.. ஒன்றரை லட்சம் சம்பளமா வாங்கறிங்க.. எல்லாமும் ஓகே.. ஆனா.. என் மகளைக் கல்யாணம் பண்ணிக்க இந்தத் தகுதி பத்தாது.." மிதப்பாக பேசினார் சடகோபன்..
வாகீசன் கோபத்தோடு எதையோ சொல்லப் போனார்..
"ஒன் செகண்ட் மாமா.." யதுநந்தன் அவரைத் தடுத்துவிட்டு சடகோபனை நேருக்கு நேராகப் பார்த்தான்..
"வேற என்ன தகுதி வேணும் சார்.." என்று கேட்டான்..
"கோடிஸ்வரன்ங்கிற தகுதி வேணும்.. அதுவும் என்னை விடப் பெரிய கோடிஸ்வரனா இருக்கனும்.. முடியுமா உங்களாலே..?"
"ஏன் முடியாது..? முயற்சி செய்தால் முடியாததுன்னு இந்த உலகத்தில் எதுவும் இல்லை சார்.."
"அப்படியா..? முயற்சித்துப் பாருங்க.. என்னை மீறின கோடிஸ்வரனா ஆகிட்டு என் மகளைப் பெண் கேட்டு வாங்க.. வாயே திறக்காம என் மகளை உங்களுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்.. டீல் ஓகேயா..?"
மீரா குறுக்கிட்டுப் பேச முயன்றாள்.. யதுநந்தனின் பார்வை அவளை தடுத்து நிறுத்தியது.. பாகீரதி பேச முயன்றாள்.. யதுநந்தன் கையமர்த்தி அவளையும் மௌனிக்க வைத்தான்..
"ஓகே சார்.. இந்த டீலுக்கு நான் ஒப்புக்கறேன்.. பட்.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.."
"எத்தனை நாள்..?" கிண்டலாக கேட்டார் சடகோபன்..
'திமிரைப் பார்த்தியா..?' வாகீசன் மனைவியிடம் கண்களால் பேசினார்..
'பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்..' பாகீரதி தலையை அசைத்தாள்..
"நாளில்லை சார்.. வருசங்கள்.." அமைதியாகச் சொன்னான் யதுநந்தன்..
"எத்தனை வருசங்கள் மிஸ்டர் யதுநந்தன்..? நூறு வருசங்கள் போதுமா..?" சடகோபன் எகத்தாளமாக வினவினார்..
வாகீசன் கோபப்பட்டார்.. யதுநந்தன் அவர் கையைப் பிடித்து பேச விடாமல் தடுத்தான்..
"ஆயுள் முழுவதும் முயற்ச்சித்தாலும் என்னில் கோடியில் ஒரு பங்குகூட உங்களால் வர முடியாது.. இதில் என்னை மீறிய கோடிஸ்வரனாக எப்படி ஆவிங்க..?"
"அது என் கவலை சார்.."
"பெத்தவனுக்கும் மகளைப் பத்தின கவலை இருக்குமில்ல.. மிஸ்டர் என்ஜினியர்..? நீங்க திரை கடலோடி திரவியம் சேர்த்து என்னைவிட பெரிய கோடிஸ்வரனா கப்பலில் வந்து இறங்கற வரைக்கும் என் மகள் காத்திருந்தா தொண்டுக் கிழவியாகி விடுவா.. நான் பெற்று வைத்திருக்கிறதோ ஒற்றைப் பெண்.. அவ கல்யாணத்தை காலாகாலத்திலே நடத்தி கண்குளிரப் பார்க்கனும்னு பெத்தவனுக்கு ஆசையிருக்காதா..?"
"இருக்கும் சார்.."
"புரியுதில்ல..? அதனால.. நடக்காததைப் பத்தி யோசனை பண்ணிக்கிட்டு இருக்காம உங்க தொழிலில் முன்னேறுகிற வழியைப் பாருங்க.. நான் வேணும்னா இதைவிட பெரிய கண்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்கு ரெகமெண்ட் பண்றேன்.."
"நோ தேங்க்ஸ் சார்.. யாரோட உதவியும் எனக்குத் தேவையில்லை.. என் காலில் நின்று முன்னேற எனக்குத் தெரியும்.."
"அது உங்கள் சமத்து.. பேச்சு வார்த்தை முடிஞ்சாச்சு.. இடத்தைக் காலி பண்றீங்களா..?"
"இல்லை சார்.. இன்னும் நம்ம டீலில் நான் எடுத்துக்க வேண்டிய வருசங்களைப் பத்தி நாம பேசி முடிக்கலை.."
அயராமல் நின்றவனைப் பார்த்த சடகோபனின் கோபம் திரும்பி வந்தது..
"நீங்க அடங்கவே மாட்டிங்களா மிஸ்டர்..?" எரிச்சலுடன் கேட்டார்..
"மாட்டேன் சார்.." படு அமைதியாக பதில் சொன்னான் யதுநந்தன்..
அந்த நிலையிலும் அவனது அந்த அடாவடியான பதிலில் மீராவின் இதழ்களில் புன்னகை வந்தது.. அதை ஜாடையாகப் பார்த்த சடகோபனுக்கு உடலெல்லாம் மிளகாயை அரைத்துப் பூசி விட்டதைப் போல இருந்தது..
"அடங்காம என்ன செய்யப் போகிறதா உத்தேசம்..?"
"உங்களுக்கு மாப்பிள்ளையாகப் போகிறதா உத்தேசம்.."
"இந்த ஜென்மத்தில் அது நடக்காது.."
"மறு ஜென்மத்தில் நான் எங்கே பிறப்பேனோ.. உங்கள் மகள் எங்கே பிறப்பாளோ.. யாருக்குத் தெரியும்..? அதனாலே.. இந்த ஜென்மத்திலேயே உங்கள் மகளுடன் வாழ்ந்து விட முடிவு செய்திருக்கிறேன் சார்.."
"யது நந்தன்.."
"மிஸ்டர் யதுநந்தன்.."
"நான் இமயம்.. என்னிடம் மோதாதே.. பொடிப் பொடியாய் சிதறிப் போவாய்.."
"அதையும் பார்த்து விடலாம் சார்.. நீங்கதானே டீல் பேச ஆரம்பிச்சீங்க..? ஆரம்பித்த டீலை முடிவு பண்ணாம பேச்சை திசை திருப்பினா என்ன சார் அர்த்தம்..?"
"உன்னால முடியாததை கனவு காணாதே.."
"இன்னைக்கு கனவு நாளைக்கு நனவாகலாம் சார்.. காலம் உங்க கையில் இல்லை.. யார் பக்கம் எப்ப காற்று பலமா அடிக்கும்ன்னு யாராலேயும் சொல்லி விட முடியாது.."
"முடிவா என்னதான் சொல்ற..?"
"நீங்க சொன்ன டீலுக்கு நான் ஒப்புக்கிறேன்.. உங்களை விட பெரிய பணக்காரனா ஆன பின்னாலே உங்க மகளை பெண் கேட்டு வரேன்.. அது வரைக்கும் உங்க மக எனக்காக காத்திருக்கனும்.. அதை விட்டுட்டு.. கருப்பு வெள்ளை சினிமாவிலே வந்ததைப் போல.. என்னை அந்தப் பக்கம் அனுப்பி விட்டு இந்தப் பக்கம் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து வேற இடத்திலே கல்யாணம் பண்ணி வைத்தீங்கன்னு வையுங்க.. நான் மனுசனா இருக்க மாட்டேன்.."
யதுநந்தனின் ரௌத்ரத்தில் 'என்ன செய்வ..?' என்று மனதில் எழுந்த கேள்வியைக் கேட்க சடகோபனால் முடியவில்லை.. அந்தக் கோபத்தை வேறு விதத்தில் அவர் வெளிப்படுத்தினார்..
"நான்தான் சொன்னேனே.. உன்னால் இந்த ஜென்மத்தில் பணக்காரனாய் ஆக முடியாதுன்னு.."
"அது என் பிரச்னைன்னு நானும் சொல்லிட்டேன்.. எனக்குத் தேவை சில வருடங்கள்.."
"சில வருடங்களா..? நல்ல கதையாய் இருக்கே.. அதெல்லாம் எனக்குத் தெரியாது.. சொன்ன டயத்துக் குள்ளே நீ வரலைன்னா மீராவை வேறு இடத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்துருவேன்.."
"நீங்க டயத்தைச் சொல்லுங்க.."
"இரண்டு வருசம்.."
"டன்.."
"இரண்டு வருசங்களைத் தாண்டி ஒருநாள் கூட ஆனாலும் நீ மீராவைப் பத்தி நினைக்கக் கூடாது.."
"ஆகாது.."
"ஆனா..?"
"நினைக்க மாட்டேன்.."
"வாக்குக் கொடுப்பியா..?"
"நிச்சயமாய்.."
"நீ மட்டும் வாக்குக் கொடுத்தால் போதாது.. என் மகளும் எனக்கு வாக்குக் கொடுக்கனும்.. சொன்ன டயத்துக்கு நீ வரலைன்னா நான் பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க அவ ஒப்புக்கனும்.."
யதுநந்தன் மீராவை பார்த்தான்.. அவள் முடியாதென்று தலையை அசைத்து மறுத்தாள்..
"என்மீது உனக்கு நம்பிக்கையில்லையா..?" யதுநந்தன் கேட்டான்.. மனதேயில்லாமல் யது நந்தனோடு சேர்ந்து வாக்குக் கொடுத்தாள் மீரா..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே...-23
வந்தாள் மகாலட்சுமியே...-23
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-23.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-23.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy