வந்தாள் மகாலட்சுமியே..20

20 அது எப்படித்தான் சம்பாதித்துப் போடும் தகப்பனை விட்டு விட்டு.. சமைத்துப் போடுகிற தாயுடன் மகன்கள் கூட்டணி போடுகிறார்களோ என்றிருந்தது வாக...

20

அது எப்படித்தான் சம்பாதித்துப் போடும் தகப்பனை விட்டு விட்டு.. சமைத்துப் போடுகிற தாயுடன் மகன்கள் கூட்டணி போடுகிறார்களோ என்றிருந்தது வாகீசனுக்கு..
"டேய்.. விட்டுருங்கடா.. உங்கம்மாவே கோபத்திலே உச்சாணிக் கொம்பிலே ஏறியிருக்கா.. அவளை மலையிறக்க உதவி பண்ணாம இப்படி உடுக்கடிச்சு இம்சை பண்றிங்களேடா.." ஏறக்குறைய மகன்களிடம் கெஞ்சினார்..
போனால் போகிறது.. பிழைத்துப் போகட்டும்.. என்ற முடிவிற்கு வந்து அவர் பெற்ற பிள்ளைகள் போர் நிறுத்தம் செய்தார்கள்..
பாகீரதி மட்டும் யுத்த முழக்கத்தை நிறுத்தவில்லை.. கோபத்துடன் அவள் வீட்டுக்குள் போக முனைந்தாள்..
"நில்லுடி பாகீ.." நெருப்பை தொட்டு விட்டவரைப் போல அலறினார் வாகீசன்..
"ஏன்..? திருடன்தான் இந்த வீட்டில நுழையனுமா..? நான் நுழையக் கூடாதா..? எனக்கு ரெண்டில ஒன்று இப்பவே தெரிஞ்சாகணும்.."
"என்னடி பாகீ..?"
"நீங்க எனக்குத் தாலி கட்டியிருக்கீங்களா..? இல்லை திருடனுக்குத் தாலி கட்டியிருக்கீங்களா..?"
என்னடா இது என்று நொந்து போய் விட்டார் வாகீசன்..
"சொன்னாப் புரிஞ்சுக்கடி பாகி.. நீயும் வீட்டுக்குள்ள போகாதே.. முக்கியமா நாம பெத்து வைச்சிருக்கிற இந்த புத்திரசிகாமணிகளை போக விட்டு விடாதே.."
"என்ன கழுதைக்கு..?"
"கழுதையோ.. குதிரையோ.. தலைவிதின்னு ஒன்னு இருக்குடி பாகி.. நீ இந்த வீட்டுக்கு வாட்ச் வுமனில்ல.. நான்தாண்டி அப்போப் பிடிச்சு வாட்ச் மேன் போல வீட்டுக்கு வெளியே காவல் காத்துக்கிட்டு உட்கார்ந்திருக்கேன்.. எதுக்காக காவல் காத்தேன்ங்கிறத வெளியில் சொன்னா வெட்கக் கேடுடி பாகீ.."
பாகீரதி அப்படியே நின்று விட்டாள்.. கணவனின் முகம் பார்த்தாள்.. அதில் தெரிந்த பதட்டத்தில் யோசனையானாள்.. என்றைக்கும் இல்லாத திருநாளாய் அவளைப் பார்த்து ஊரைச் சுற்றி விட்டு வருகிறாயா என்று ஏன் அவர் கேட்டார்..?
"டேய்.. மகேஷ்.. சுரேஷ்.. எதிர் வீட்டில போயி ஆண்ட்டிகிட்ட இந்த அர்ச்சனைத் தட்டைக் கொடுத்துட்டு வாங்கடா.. அவங்க அர்ச்சனைத் தட்டை மறந்து போய் நான் கொண்டு வந்திட்டேன்.."
வீட்டுக்குள் போகப் போன மகேஷீம்.. சுரேஷீம்.. பாகீரதி நீட்டிய அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு எதிர்வீட்டிற்குப் பறந்தார்கள்..
அவர்களின் தலை மறைந்ததும் பாகீரதி கணவரைப் பார்த்தாள்..
"என்ன விசயம்..?"
"என்னத்தைச் சொல்ல..? மாடி ஹாலில உன் அண்ணன் மகனும்.. எதிர் வீட்டு மீராவும் கட்டிப் புடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்காங்க.."
வாகீசனின் குரல் நடுங்கியது.. விபரீதமாகும் சூழலை நினைத்து அவர் கவலை கொண்டார்.. அதை பாகீரதி புரிந்து கொள்ள வேண்டுமே என்ற பதட்டம் அவரது கவலையை அதிகரிக்கச் செய்தது..
பாகீரதி.. அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.. அவள் முகத்தை வைத்து அவள் என்ன நினைக்கிறாள் என்பதை வாகீசனால் யூகிக்க முடியவில்லை...
"இப்ப என்னடி செய்கிறது..?"
"ஒன்னும் செய்ய வேண்டாம்.."
பாகீரதியின் பதிலில் வாகீசனுக்கு தூக்கிவாரிப் போட்டது.. வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடந்தால் பிள்ளைகளின் மனங்கள் கெட்டுப் போகாதா..?
"எல்லோரும் இருக்கையிலே அவங்க தள்ளித் தள்ளித்தானே நிக்கிறாங்க.."
பாகீரதியின் நியாயத்தில் வாகீசன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.. அண்ணன் மகனின் மீதான அவளின் பாசம் அவர் குடும்பத்தை எந்தச் சிக்கலில் இழுத்து விடப் போகிறதோ என்று பயந்தார்..
"நீ பேசறது அநியாயம்ன்னு உனக்குத் தோணலையா..?"
"தோணலை.."
"இது சரியில்லை பாகீ.."
"காதல் சரி.. தப்புன்னு பார்க்காது.. நாங்க கோவிலுக்குப் போன தனிமையிலே அவங்க சந்திச்சிருப் பாங்க.. பக்கத்தில் யாருமில்லைங்கிற சுதந்திர உணர்விலே தொட்டுப் பேசியிருப்பாங்க.. இதில் என்ன தப்பைக் கண்டுட்டிங்க..?"
"கொலைவெறியைக் கிளப்பாதே பாகீ.. நட்டு நடு ஹாலிலே நின்னு கண்ணை மூடிக்கிட்டு, கட்டிப் பிடிச்சுக்கிட்டு நிற்கிறாங்க.. இதை சரின்னு சொல்கிறயா..?"
"நிச்சயமா சரின்னுதான் சொல்லுவேன்.. நீங்களே யோசிச்சுப் பாருங்க.. வீட்டிலே யாருமில்லை.. அவங்க ரெண்டு பேர் மட்டும்தான் இருக்காங்க.. தப்பு செய்யனும்னு நினைக்கிறவங்க ஹாலில் நின்னுக்கிட்டு.. கட்டிப் பிடிக்கிறதோடு ஏன் நிறுத்திக்கிட்டாங்க..? யதுவோட ரூமுக்குள்ளே போயிருந்தா யாராலே கண்டு பிடிச்சிருக்க முடியும்..?"
"பாகீ.."
மனைவி சொன்ன கோணத்தை நினைத்துப் பார்த்தபோது அதுவும் சரிதான் என்று வாகீசனுக்குத் தோன்றித் தொலைத்தது..
அசையாமல் கண்மூடி நின்றிருந்தவர்களின் தோற்றத்தை மனக் கண்ணில் கண்டு வந்தார்.. அந்த முகங்களில் தெரிந்த ஆத்மார்த்த காதலை நினைத்துப் பார்த்தவருக்கு அந்தத் தோற்றம் காவியம் போலத் தோன்றி வைத்தது.. விரசம் எதுவும் அதில் இருந்ததாக அவருக்குத் தெரியவில்லை..
"இதைக்கூட திட்டம் போட்டு அவங்க செஞ்சிருக்க மாட்டாங்க.. அப்படித் திட்டம் போட்டிருந்தா நடு ஹாலில நின்னிருக்க மாட்டாங்க.."
"நீ சொல்வதைப் போல இருந்தாலும் இது சரின்னு என்னாலே ஏத்துக்க முடியலைடி.. நம்ம வீட்டில பசங்க இருக்காங்கடி.."
"அவங்க உள்ளே போயிருந்தா என்ன ஆகியிருக்கும்ன்னு நீங்க நினைக்கறிங்க..?"
"அந்த எக்குத்தப்பான கோலத்தை அவங்க பார்த்திருக்க மாட்டாங்களாடி..?"
"அப்படியா சொல்கிறீங்க..?"
பாகீரதி எழுந்தாள்.. விடுவிடென்று வீட்டுக்குள் போனாள்..
"வேண்டாம்டி பாகீ.." தடுத்தபடி வாகீசன் அவள் பின்னாலேயே போனார்..
பாகீரதி அவரது வார்த்தைகளைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. மாடிப்படிகளில் ஏறினாள்.. வாகீசனும் அவளது முந்தானைச் சேலையைப் பிடிக்காத குறையாய் ஒளிந்து மறைந்தபடி கூடப் போனார்..
மாடி ஹாலில் அவர்கள் கண்ட காட்சியில் வாகீசன் முந்தானைச் சேலையை விட்டு விட்டு வெளியில் வந்தார்.. அவர் விழிகள் விரிந்தன..
யதுநந்தனும் மீராவும் எதிரெதிர் சோபாக்களில் உட்கார்ந்திருந்தார்கள்.. அவர்களுக்கு ஊடே இருந்த டீப்பாயில் சில ஓவியங்கள் இருந்தன.. அவற்றை மீராவிடம் காட்டிக் கொண்டிருந்தான் யதுநந்தன்.. ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் மீரா..
காலடியோசையில் திரும்பிப் பார்த்தவர்கள் வெகு இயல்பாக சிரித்ததில் பாகீரதி வாகீசனை சுட்டெரிப்பதைப் போல பார்த்தாள்..
"ஹாய் ஆண்ட்டி.. கோவிலில இருந்து வந்தாச்சா..?" மீரா எழுந்து வந்தாள்..
"அப்பவே வந்தாச்சு.."
பாகீரதி வாகீசனின் முகத்தைப் பார்த்தபடி சொன்னாள்..
"ஈஸிட்..?" என்ற மீராவின் முகத்தில் எந்தவிதமான கள்ளத்தனமுமில்லை..
"இது தெரியாம நான் இங்கே உட்கார்ந்திருக்கேன்.. அம்மாவையும் கடத்திக்கிட்டு போயிட்டிங்க.. காலேஜ் விட்டு வந்தவளுக்கு காபி டிபன் கொடுக்க ஆளில்லை.."
"அச்சச்சோ.. உன் வீட்டு சமையல்காரம்மா எங்கே போனாங்க..?"
"அவங்க அங்கேதான் இருக்காங்க... பட்.. கிச்சனுக்குப் போகனும்னா அப்பாவைக் கடந்து போகனுமே.."
"ஏன்..? அவர்கண்ணிலே பட்டா என்னவாம்..?"
"என்னவா..? நல்லாக் கேட்டிங்க போங்க.. கோச்சிங் கிளாஸீக்குப் போகச் சொல்லி துரத்தி விட்டுருவாரே.. அம்மா இருந்தா அப்பாவுக்குத் தெரியாம என் ரூமுக்கே காபி டிபன் வந்து சேர்ந்திரும்.. ஸோ... வேற வழியில்லாம இங்கே வந்துட்டேன்.."
"கிச்சனில பாலிருக்கு.. காபி கலந்து குடிச்சிருக்கலாமே.."
"குடிச்சிருக்கலாம்.. அதுக்குள்ளே உங்க அண்ணன் மகன் அவர் கையாலே காபி போட்டுத் தரேன்னு பயமுறுத்திட்டார்.. அந்தக் காபிக்கு கோச்சிங்க கிளாஸே பெட்டராச்சே.."
மீரா சொல்லிய விதத்தில் பாகீரதி சிரித்து விட்டாள்.. யதுநந்தன் ஓவியங்களை அடுக்கியபடி.. பாகீரதியிடம் புகார் சொன்னான்..
"பாவம்ன்னு ஒரு கப் காபி கொடுக்கலாம்ன்னு பார்த்தா.. என்னையே இந்த மேடம் கலாய்க்கிறாங்க.. அதான்.. என் பெயிண்டிங்ஸைக் காட்டி பழி வாங்கிக்கிட்டு இருந்தேன்.. எப்புடி..?"
"சரிதான் போடா.."
பாகீரதி சிரித்தபடி படியில் இறங்கினாள்.. அவளுடன் பேசியபடி மீராவும் போய் விட்டாள்.. சேகரித்த ஓவியங்களுடன் யதுநந்தன் அறைக்குள் போய் விட்டான்..
தனித்து நின்ற வாகீசனுக்கு கண்டதெல்லாம் கனவா என்ற சந்தேகம் எழுந்தது..
இரவில் அதை பாகீரதியிடம் சொன்னபோது அவள் சிரித்தாள்..
"அப்பத்தான் நாங்க கோவிலுக்குக் கிளம்பிப் போனோம்.. அந்த தைரியத்தில தொட்டுப் பேசியிருப் பாங்க.. நாங்க அந்தப்பக்கம் போனதும் இந்தப் பக்கம்
நீங்க வந்து நிற்பீங்கன்னு அவங்க என்ன கனவா கண்டிருப்பாங்க..?"
"அதைச் சொல்லு.."
"அப்பப் போலவே எப்பவும் இருப்பாங்களா..? நாம வந்தப்ப பெயிண்டிங்ஸை பார்த்துக்கிட்டு இருந்தாங்கள்ல.. அதனால.."
"அதனால..?"
"என் அண்ணன் மகனாலே உங்க மகன்களின் மனசு எந்தக் காலத்திலேயம் கெட்டுப் போகாது.. அதுக்கு நான் கேரண்டி.."
அவருடைய மகன்களா..? அந்த மகன்களுக்கும் அவளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையா..?
அண்ணன் மகன் என்று வந்து விட்டால்.. அவள் பெற்ற மகன்களைக்கூட வாகீசனின் மகன்களாக்கி விட்டு விலகி நிற்கும் அவளது செயலில் அவருக்கு ஆற்றாமையாக இருந்தது..
'நீ கொடுத்து வைச்சவண்டா வரதராஜா.. அருமையான தங்கச்சி உனக்குக் கிடைச்சிருக்கா.. நான் தான் கொடுத்து வைக்கலை.. உன் தங்கச்சி என் பெண்டாட்டியா யோசிக்கவே மாட்டேன் என்கிறாளே..'
மனதுக்குள் மைத்துனனைத் தாளித்து முடித்து விட்டு அவர் பாகீரதியை நெருங்கிய போது அவள் தூங்கிப் போயிருந்தாள்..
'ம்ஹீம்.. அண்ணன் மகனின் காதலைப் பத்தி மணிக்கணக்கா வியாக்கினம் பேசுவா.. கட்டின புருசன் காதலோடு பக்கத்தில வந்தா குறட்டை விட்டு தூக்கம் போடுவா..'
தன் விதியை நொந்தபடி தலையணையைக் கட்டிக் கொண்ட வாகீசனுக்கு.. பாகீரதியைக் கட்டிக் கொண்டதற்குப் பதிலாக பேசாமல் இந்தத் தலையணைக் கட்டியிருக்கலாம் என்ற விரக்தி வந்தது..
மறுநாள் காலையில் அவர் பேப்பர் படிக்க வாசலுக்கு வந்தபோது யதுநந்தன் குளித்து முடித்து.. முழுக்கை சட்டையும் இன் பண்ணிய பேண்டுமாக மாடியிலிருந்து இறங்கி வந்தான்..
வாகீசன் மணியைப் பார்த்தார்.. ஆறு என்றது.. அது அவன் ஜாகிங் போகும் நேரம்..
'இப்படியேவா ஜாகிங் போகப் போறான்..?'
அவன் விசயத்தில் எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது செய்தாலும் செய்வான் என்ற நினைவுடன் அவர் அவனையே பார்த்தார்.. அவனும் போர்டிகோவில் இறங்கும் போது அவரைப் பார்த்தான்.. அவன் முகத்திலிருந்து அவரால் எதையும் கண்டு கொள்ள முடியவில்லை.. தோட்டத்திலிருந்து ஈரகூந்தலை துவாலையில் இறுக்கி கொண்டையாக்கி.. புதுமலர் போல பூக்குடலையுடன் வந்தாள் பாகீரதி.. அண்ணன் மகனின் தோற்றத்தைப் பார்த்து அவளுக்கு வியப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்..
"என்ன யது.. இவ்வளவு சீக்கிரமா ரெடியாகிட்ட..?" என்று கேட்டாள்..
"ஒரு முக்கியமான வேலை அத்தை.."
யதுநந்தன் குனிந்து பாகீரதியின் பாதம் தொட்டு வணங்கினான்.. அவள் நெகிழ்ந்து விட்டாள்..
"என்னடா..?" குனிந்து அவன் தலையைத் தொட்டாள்..
"ஆசிர்வாதம் பண்ணுங்கத்தை.."
"தீர்க்காயுளா இருடா.. மங்களகரமா இரு.. நீ தொட்ட தெல்லாம் துலங்கும்.. நினைச்சது நடக்கும்.."
கண்கள் கலங்க அண்ணன் மகனுக்கு ஆசீர்வாதங்களை அள்ளி வழங்கினாள் பாகீரதி..
வாகீசன் பேப்பரைத் தூக்கிக் கடாசிவிட்டு நடந்து கொண்டிருந்த செண்டிமென்ட் காட்சியையே இமை கொட்டாமல் பார்க்க ஆரம்பித்தார்.. அவருக்கு என்னவோ.. யதுநந்தனின் அதிகாலைப் புறப்பாட்டிற்கும்.. பாகீரதியிடம் அவன் வாங்கும் ஆசிர்வாதத்திற்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருப்பதைப் போல இருந்தது..
'என்னவாக இருக்கும்..?' அவர் மனம் குறுகுறுத்தது..
யதுநந்தன் அவனுடைய காரையும், அப்பாச்சியையும் தவிர்த்து கேட்டைத் திறந்து வெளியே நடந்தபோது பாகீரதியும் புருவங்களை உயர்த்தினாள்..
"இவன் எங்கே போறான்..?" என்று வாகீசனிடம் கேட்கவும் செய்தாள்..
"எனக்கென்னடி தெரியும்..? உன் அண்ணன் மகனைப் பத்தி உனக்கே தெரியாதப்ப எனக்கு மட்டும் தெரிஞ்சிருமா..?"
குத்துக்கல்லைப் போல பேப்பரும் கையுமாக உட்கார்ந்திருந்த அவரைக் கடந்து தோட்டத்திலிருந்து வந்த பாகீரதியின் கால்கல்களில் மட்டும் விழுந்து யதுநந்தன் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்ட புகைச்சலை பேச்சில் காட்டினார் வாகீசன்..
"என்னங்க.. இவன் எதிர்வீட்டுக்குப் போகிறாங்க.."
பாகீரதியின் குரலில் இருந்தது பயமா.. இல்லை பதட்டமா என்று வாகீசனால் அனுமானிக்க முடியவில்லை..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே..20
வந்தாள் மகாலட்சுமியே..20
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-20.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-20.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy