வந்தாள் மகாலட்சுமியே..-16

16 'எப்படியாவது இன்னைக்கு பஸ்ஸில் ஏறி விடவேண்டும்..' காலையில் கல்லூரிக்கு கிளம்பும்போதே தீர்மானித்து விட்டாள் மீரா.. தீர்மானம் ச...

16

'எப்படியாவது இன்னைக்கு பஸ்ஸில் ஏறி விடவேண்டும்..'
காலையில் கல்லூரிக்கு கிளம்பும்போதே தீர்மானித்து விட்டாள் மீரா.. தீர்மானம் செய்வதென்னவோ எளிதாகத் தான் இருந்தது.. அதை நடைமுறைப் படுத்துவதில் தான் சிக்கல் அதிகமாக இருந்தது..
எப்படி அவளை அழைத்துக் கொண்டு போக வரும் காருக்கு 'டிமிக்கி' கொடுப்பது..?
மீராவின் ஆழ்ந்த யோசனையை வகுப்பெடுத்துக் கொண்டிருந்த விரிவுரையாளர் கவனித்து விட்டாள்.. மீராவின் பார்வை விரிவுரையாளரின் மீதே இருந்தது..
நேர் கொண்ட பார்வையின் முடிவில் யார் இருக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் அவள் யோசனையில் மூழ்கியிருந்தாள்.. போதாக் குறைக்கு பேனாவைக் கொண்டு நெற்றியில் அடிக்கடி அடித்துக் கொண்டாள்..
"குட்.." என்றாள் விரிவுரையாளர்..
அவளின் அழுத்தமான 'குட்..' என்ற குரலோசையில் சிந்தனை கலைந்த மீரா.. விரிவுரையாளர் எதற்காக.. 'குட்..' டைப் போட்டாள் என்று புரியாமல் விழித்தாள்..
"ஸ்டூடண்ட்ன்னா இப்படி இருக்கனும்.."
'எப்படி இருக்கனும்..?' மீராவுக்கும்.. மற்ற மாணவிகளுக்கும் புரியவில்லை..
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்..
"இப்படி பாடத்தில் இம்ப்ரெஸ் ஆகி கவனிச்சா.. லெச்சரருக்கு 'பிரஷ்ஃபீல்' வரும்.."
விரிவுரையாளரையே இம்ப்ரெஸ் பண்ணி புத்துணர்வை வரவழைத்து விட்ட அந்த மாணவி யாராக இருக்கக் கூடும் என்று மீரா சுற்று முற்றும் பார்த்தாள்..
அவளைப் போலவே மற்ற மாணவிகளும் பார்த்து வைத்ததில் அது யார் என்று கண்டு பிடிக்க முடியாமல் விரிவுரையாளரே அதையும் விரித்து உரைக்கட்டும் என்று விட்டு விட்டாள்..
"வாட் எ ஸ்டூடண்ட்..! வாவ்.. வாவ்.."
விரிவுரையாளரின் புகழ்ச்சிக்கு ஆளான அந்த மாணவியை இகழ்ச்சியாக பார்த்தே தீர வேண்டும் என்று ஒட்டு மொத்த வகுப்பறையும் வெறியாகிப் போனது..
உச்சிமண்டையில் ஆணியடிக்கும் அந்த விரிவுரையையும் ஒருத்தி உற்று உற்றுக் கவனித்தாளா..?
"அவளை சாவடி அடிக்கனும்டி.."
கொலைவெறியுடன் அந்த வகுப்பறையே ஸ்கெட்ச் போட்டது..
"யார் அந்த மாணவியர் குல திலகம் மேம்..?"
புயலை உள்ளடக்கிய பவ்யத்துடன் கேட்டாள் மீராவின் தோழி.. பவித்ரா.. மீராவின் பக்கத்தில் பசை போட்டதைப் போல ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த வளை வெட்டி விடுவதைப் போல பார்த்தாள் விரிவுரையாளர்..
"ம்ஹீம்.. பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.."
இந்தப் பொன் மொழியை எதற்காக வன்மொழி போல கடுங் கோபத்துடன் விரிவுரையாளர் சொல்கிறாள் என்று புரியாமல் திகைத்தாள் பவித்ரா..
"இவங்க என்னடி.. எதையோ கேட்டா.. எதையோ சொல்கிறாங்க..? உனக்கு ஏதாவது புரியுது..?" மீராவிடம் முணுமுணுத்தாள்...
"உனக்கே புரியலைங்கிறப்ப எனக்கு என்னடி புரியப் போகுது.. இவங்க கிளாஸை கொஞ்சமாவது கவனிக்கிற ஒரே ஆள் நீதான்.. நானெல்லாம் இவங்க கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சாலே விழிச்சுக்கிட்டேத் தூக்கம் போடற ஆளு.."
அந்த மீராவைத்தான் அருமையான மாணவி என்று அடையாளம் காட்டினாள் விரிவுரையாளர்..
"இருந்தா இப்படி இருக்கனும்.. மீராவைப் பார்த்து இந்தக் கிளாஸில இருக்கிற ஓட்டு மொத்த ஸ்டூடண்ட்ஸீம் கத்துக்கனும்.."
"எதை விழித்துக்கிட்டே தூங்குகிற வித்தையையா..?"
பவித்ரா கோபத்துடன் முணுமுணுத்தாள்.. அந்த முணுமுணுப்பு அப்படியே ஒவ்வொரு பெஞ்சாகத் தாவி ஒட்டு மொத்த வகுப்பறைக்கும் ஒலி பரப்பாகியது..
விரிவுரையாளரின் செவிகளை மட்டும் அது எட்டவில்லை..
அதனால் அவள் மீராவை உச்சத்தில் தூக்கி வைத்துப் பேசிக்கொண்டிருக்க.. ஒட்டு மொத்த வகுப்பறையும் சத்தமில்லாமல் மீராவை கலாய்க்க ஆரம்பித்து விட்டது..
"அப்போதிருந்து பார்க்கிறேன்.."
"எதை..? இவ தூங்கி வழிகிற அழகையா..?"
"அப்படியொரு ஈடுபாட்டோட லெக்சரைக் கவனிச்சுக்கிட்டிருக்கா மீரா.."
"அப்படி நீங்களா நினைச்சுக்கிட்டா நாங்க அதுக்குப் பொறுப்பில்ல.."
"புரியாத இடங்களில யோசனைய பண்றா.."
"அவ என்ன பண்றான்னு உங்களுக்குத் தெரியாது மேம்.. தெரிஞ்சாத் தாங்க மாட்டிங்க.."
"இது வரைக்கும் பரவாயில்லை.."
"ஏய்ய்.. மேமே பரவாயில்லைன்னு சொல் லிட்டாங்கடி.. மீரா நீ தூங்கி வழிகிறதை கண்டினியு பண்ணலாமாம்.."
"இனிமேலாவது அவளைப் போல இருக்கப் பாருங்க.."
"அதுக்கென்ன மேம்.. இப்போதிருந்தே அவளைப் போல இருக்க ஆரம்பிச்சுடறோம்.."
ஒட்டு மொத்த வகுப்பறையும் நமட்டுச் சிரிப்புடன் உத்திரவாதம் அளித்ததில் மீரா விரிவுரையாளருக்குத் தெரியாமல் தலையில் அடித்துக் கொண்டாள்..
'இவங்களா வாய் விட்டு மாட்டிக்கிறாங்க..'
விரிவுரையாளர் பாடத்தைத் தொடர்ந்தாள்.. வகுப்பறையே விழித்தபடி தூங்க ஆரம்பித்தது.. அதை மீராவுக்கும் சொல்லியது..
"ஏய்ய்.. சவியும்.. கிருந்திகாவும் விழித்துக்கிட்டு தூங்கறதுக்கு உன்னிடம் டியூசன் கத்துக்க வரப் போறாங்களாம்டி.."
பவித்ரா சொல்லிவிட்டு மீராவிடம் நான்கு மொத்துக் களை வாங்கினாள்..
"பேசாம போயிரு.. கொலைவெறியில் இருக்கேன்.." எச்சரித்தாள் மீரா..
"அதை நாங்க சொல்லனும்.." என்றாள் சவிதா..
"அந்த மேமை இம்ப்ரெஸ் பண்றதைப் போல அப்படியென்னடி யோசிச்சுத் தொலைச்ச.." கிருத்திகா கேட்டாள்..
"பஸ்ஸில் போவது எப்படின்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.." என்றாள் மீரா..
"இவளைப் பாருடி.. என்னவோ.. புத்தகத்தோட தலைப்பைப் போல சொல்லி வைக்கிறா.." அதற்கும் தோழிகள் சிரித்தார்கள்..
"நிஜமாவே நான் அதைப் பத்தித்தான் யோசிச்சுக் கிட்டு இருந்தேண்டி.. எனக்குப் பஸ்ஸில் போகனும் போல இருக்கு.." ஏக்கமாகச் சொன்னாள் மீரா..
"நினைச்சதைச் செய்து முடிக்கிற லேடி எம்.ஜி.ஆர் மீராவா இப்படிப் பேசறது..?" என்றாள் பவித்ரா..
"போடி நீ வேற.. நான் நினைச்சிட்டாலும்.." மீரா அலுத்துக் கொண்டாள்..
"இவ என்னடி இந்த அளவுக்கு அப்செட் ஆகிறா..?"
"அதானே.."
"வாங்கடி இவளுக்கு முதலில ஒரு வழி சொல்லலாம்.."
தோழிகள் ஒன்றுகூடி விவாதித்து ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள்.. அதன்படி மாலையில் மீராவை அழைத்துக் கொண்டு போக வரும் காரை சவிதா எதிர் கொள்வதென்று முடிவானது..
"அவளோட பிரண்டுக்கு உடம்பு சரியில்லைன்னு அவ வீட்டில விட்டுட்டு வரப் போயிட்டா.. அங்கேயிருந்தே ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வந்துருவாளாம்ன்னு நான் சொல்லிடறேண்டி.. அதுக்கு மேலே உன் வீட்டில நீதான் சமாளிச்சுக்கனும்.." என்றாள் சவிதா..
"அதை நான் பார்த்துக்கறேன்.." மீரா உற்சாகமானாள்..
"ஆனாலும் மீரா.. ஒரு சின்ன விசயத்துக்கு நீ இவ்வளவு தூரம் கவலைப்படறதை இப்பத்தான் பார்க்கிறேன்.."
"உனக்குத் தெரியாது சவி.. என் வீட்டுக்கு வெளியிலே நான் நினைத்ததை நடத்தி முடிக்கிறவதான்.. வீட்டில அப்படியில்லை.. அங்கே என் அப்பாதான் நினைத்ததை நடத்தி முடிப்பார்.."
மீராவின் கண்களில் சோகம் வழிந்தது.. அதுவரை அவள் கண்களில் சோகத்தைப் பார்த்திராத தோழிகள் திகைத்துப் போனார்கள்.. மாலையில் வகுப்பு முடிந்தவுடன் மீரா கம்பி நீட்டிவிட.. அவளுக்காக வந்த காரை சவிதா எதிர் கொண்டாள்..
"என்னண்ணா.. மீராவைக் கூப்பிட வந்தீங்களா..?"
தேனொழுக அவள் அண்ணா போட்டதில் சடகோபன் வீட்டு கார் டிரைவர் வாயெல்லாம் பல்லாகி விட்டான்..
"ஆமாங்கம்மா.." என்று சொல்லிவிட்டு 'ஆமாம் தங்கச்சி' என்று சொல்லியிருக்க வேண்டுமோ என்ற காலங்கடந்த ஞானோதயத்துக்கும் ஆளானான்..
"அதில பாருங்கண்ணா.."
சவிதா கையாட்டியபடி பேச்சைத் தொடா.. எதிலே பார்ப்பது என்ற குழப்பத்துக்கும் ஆளானான் டிரைவர்..
'ஏதும் கூலிங்கிளாஸ் வைச்சிருக்குமோ.. அதைக் குடுத்து.. அதில பார்க்கச் சொல்லுதோ..'
டிரைவர் தலைமுடியை பிய்த்துக் கொண்டிருக்க.. அடுத்த அன்புத் தாக்குதலை அனுப்பி வைத்தாள் சவிதா..
"நம்ம பவி இருக்காள்ல அண்ணா.."
'நம்ம பவியா..?'
திருதிருத்த டிரைவர் எதற்கும் இருக்கட்டுமென்று தலையாட்டித் தப்பித்தான்.. சவிதா பாசவலையை விரித்தாள்..
"அவளுக்குப் பாவம்.. தலைவலியும் ஜீரமும் ஒன்னாச் சேர்ந்து வந்திருச்சுண்ணா.."
'ஏம்மா.. அது ரெண்டும் தோழிப்பெண்ணுகளா..? ஒன்னாச் சேர்ந்து வந்திருக்கே..' என்று கேட்கப் போன டிரைவர்.. சவிதா மூக்கை உறிஞ்சி.. இமை சிமிட்டி.. வராத கண்ணீரை நாசுக்காக கைக்குட்டையில் துடைத்துக் கொண்டதில் விழுந்து தொலைத்து..
"அடடா.. அப்புறம் என்னம்மா ஆச்சு..?" என்று கேட்டு வைத்தான்..
"அவளானா மயக்கம் போட்டு மீராமேலே சரிஞ்சுட்டா.. மீரா பாவம் என்ன பண்ணுவா..?"
"என்ன பண்ணுவாங்க..?" அப்பாவியாய் கேட்டான் டிரைவர்..
சவிதா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு மிகக் கவனமாக தனது சரடு திரிக்கும் வேலையைத் தொடர்ந்து செவ்வனே செய்தாள்..
"பவியும் மீராவும் குளோஸ் பிரண்ட்ஸ்.."
"இருந்துட்டுப் போகட்டும்.. நமக்கென்ன வந்தது..?"
டிரைவர் சவிதாவையும் கூட்டணியில் சேர்த்தான்.. அதில் சவிதாவுக்குள் பலத்த ஆட்சேபணை எழுந்தது..
'நமக்கென்னவா..? மீரா.. உன்னால பாருடி.. டிரைவர் கூடசொந்தம் கொண்டாட வேண்டியிருக்கு..'
வீரியம் பார்த்தால் காரியம் ஆக வேண்டாமா..?
"அதென்னண்ணா அப்படிச் சொல்லிட்டிங்க.. பவி ஜீரத்தில மயக்கம் போட்டா மீராவாலே பார்த்துக்கிட்டு இருக்க முடியுமாண்ணா..? உங்க கண் முன்னாலே உங்க உயிர் நண்பன் மயக்கம் போட்டால் நீங்க பார்த்துக்கிட்டு இருப்பீங்களாண்ணா..?"
இந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று டிரைவருக்குத் தெரியவில்லை.. அவனுக்கு நண்பர்கள் அதிகமில்லை.. அவர்களும் நேருக்கு நேராக பார்த்துத் தொலைத்து விட்டால் லேசாக தலையை ஆட்டியபடி நகர்ந்து போய் விடும் ரகத்தைச் சேர்ந்தவர்கள்.. இதில் உயிர் நண்பனுக்கு அவன் எங்கே போவான்..?
இதைச் சவிதாவிடம் அவனால் சொல்ல முடியுமா..? அதனால்
"அது எப்படி முடியும்..?" என்று கேட்டு வைத்தான்..
"அதேதாண்ணா.. மீராவோட கார் டிரைவரான நீங்களே உயிர் நண்பனுக்கு ஒன்னுன்னா பதறித் துடிக்கறப்ப.. மீரா எப்படி துடிச்சிருப்பா..?"
'நான் எங்கேம்மா துடிச்சேன்..?' நினைத்ததை சொல்ல முடியாமல் தோராயமாக தலையை ஆட்டித் தப்பித்தான் டிரைவர்..
"ஸோ.. அவ பவித்ராவைக் கூப்பிட்டுக்கிட்டுப் போயிருக்கா.."
"எங்கே..?"
"பவித்ராவோட வீட்டுக்கு.."
"அப்ப மீராம்மா இங்கே இல்லையா..?"
அப்போதுதான் விவரமே கார்டிரைவருக்கும் புரிந்தது..
'இதைச் சொல்லத்தான் இந்தப் பொண்ணு.. உயிர் நண்பனையெல்லாம் இழுத்துச்சா..'
"அவ பவி வீட்டிலே இருக்காண்ணா.."
"அந்தப் பவி வீடு எங்கே இருக்கு..?"
"ஏண்ணா..? நீங்க ஹார்லிக்ஸீம்.. பழங்களும் வாங்கிக்கிட்டுப் போய் அவளை நலம் விசாரிக்கப் போறிங்களா..? ஆனாலும் உங்களுக்கு ரொம்பவும் இளகின மனசுண்ணா.."
'அதுசரி..' டிரைவர் சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான்.. ஒற்றை நூறுரூபாய்தாள் அவனுக்குத் தைரியம் கொடுத்தது..
'இதை வைச்சுத்தான் மாசக் கடைசி வரைக்கும் ஒப்பேத்தனும்.. இதில ஹார்லிக்ஸீம்.. பால் பழமும் வாங்கிக் கொடுக்கத்தான் நான் காத்திருக்கேனா..?' டிரைவருக்கு கோபம் வந்துவிட்டது..
"அதை நீங்க வாங்கிக்கிட்டுப் போய் கொடுங்கம்மா.."
"ஏண்ணா..? உங்ககிட்டப் பணமில்லையா..?"
"இல்லைன்னு சொன்னவுடனே கட்டுக்கட்டாய் பணத்தை அள்ளிக் கொடுத்துருவீங்களா..?"
"ஹை.. அதெல்லாம் அருணாச்சலம் படத்திலதான் நடக்கும்.. நான் பத்து ரூபாய் கொடுத்தாலே அதிகம்.."
"அதைவைச்சு ஒரு காபிகூட வாங்கிக் குடிக்க முடியாது.. அதனால நீங்களே அதை வைச்சுக்கங்க.."
"ஆகட்டும்ண்ணா.. நீங்க போயிட்டு வாங்க.."
"நல்ல கதையாய் இருக்கே.. மீராம்மா இல்லாம வீட்டுக்குப் போனா கலெக்டர் ஐயா என் சீட்டைக் கிழிச்சுருவாரு.."
"எந்த சீட்டைண்ணா..? நீங்க உட்கார்ந்திருக்கிற இந்தக் காரோட சீட்டையா..? போனாப் போகட்டும் விடுங்கண்ணா.. அவங்க காரோட சீட்டைக் கிழிச்சா நஷ்டம் யாருக்கு..?"
டிரைவர் தாங்க முடியாத அவதியோடு சவிதாவை இமைக்காமல் பார்த்த பின்புதான் அவள் பேச்சையே நிறுத்தினாள்..
"உங்களுக்கு கோடி புண்ணியமாப் போகும்மா.. தயவு செய்து அந்த பவித்ராவோட வீட்டு அட்ரஸைக் கொடுங்க.."
"எதுக்குண்ணா..?"
பச்சைக் குழந்தையைப் போல சவிதா கேட்டு வைத்ததில் டிரைவருக்கு தலை வேதனையாக இருந்தது..
"வேற எதுக்கும்மா.. மீராவை கூப்பிட்டுக்கத்தான்.."
"நீங்க போகிற வரைக்கும் அவ அங்கே இருப்பாளாண்ணா.. இந்நேரம் அவ வீட்டுக்குக் கிளம்பிப் போயிட்டாளோ என்னவோ.."
"என்னது..?"
டிரைவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டதில் சவிதாவே ஆடிப் போனாள்..
"அமைதிண்ணா..! அமைதி..! நீங்க வந்தா.. அவ வீடிருக்கிற தெருவுக்கு ரெண்டு தெரு தள்ளி இருக்கிற பிள்ளையார் கோவில் பக்கத்தில உங்களை வெயிட் பண்ணச் சொன்னா.. அவ ஆட்டோவில போயி அந்தக் கோவிலில பவி உடம்புக்கு சரியாகனும்னு வேண்டிக்கப் போறாளாம்.. நீங்க அங்கே போங்கண்ணா.."
அடுத்து சவிதா அண்ணா போடுவதற்குள் டிரைவர் காரை கிளப்பிக் கொண்டு காற்றாய் பறந்துவிட்டான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே..-16
வந்தாள் மகாலட்சுமியே..-16
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-16.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-16.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy