வந்தாள் மகாலட்சுமியே. -14

14 அருமையான பாடல் அது..! சுரேஷ் கூட டென்ஸ்போர்ட்ஸை மறந்தவனாக பாடலை ரசிக்க ஆரம்பித்து விட்டான்.. வாகீசனால்தான் அது முடியவில்லை.. தொண்டைக்...

14

அருமையான பாடல் அது..!
சுரேஷ் கூட டென்ஸ்போர்ட்ஸை மறந்தவனாக பாடலை ரசிக்க ஆரம்பித்து விட்டான்.. வாகீசனால்தான் அது முடியவில்லை.. தொண்டைக்குள்ளே மீன்முள் மாட்டி விட்டதைப் போல.. சொல்லவும் முடியாமல்.. மெல்லவும் முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்..

'பண பலம் இருக்கிறவனையும்.. அதிகார பலம் இருக்கிறவனையும் எதிர்க்கக் கூடாது.. இந்தக் கூமுட்டை என்னடான்னா இரண்டும் ஒன்னா இருக்கிற வீட்டுப் பெண்ணாப் பார்த்து சைட் அடிச்சுக்கிட்டு இருக்கான்.. இது எங்கே போய் முடியப் போகுதோ.. என் அப்பனே..! ஈஸ்வரா..! காப்பாற்று..'

வாகீசன் படும் கவலையில் துளியளவு கவலைகூட இல்லாதவளாக யதுநந்தனும்.. மீராவும் பாடிக் கொண்டிருந்த டூயட் பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள் பாகீரதி..

'இவ ஏன் இப்படியாகிட்டா..?' வாகீசன் மனதுக்குள் குமைந்தார்..

அவரறிந்த பாகீரதியா இவள்..? அவளுடைய மனைவியான பாகீரதி.. ஓடுகிற தண்ணீரில் ஒன்பது லட்சம் சுளுக்கெடுப்பாளே.. அந்த புத்திசாலி பாகீரதி எங்கே தொலைந்து போனாள்..?
     "நெருங்கும் போது அகப்படாமல்..
பறந்து போகிறாய்..
நிழலைப் போல தொடரும் என்னை
மறந்து போகிறாய்.."
யதுநந்தனின் பாடலில் பட்டாம்பூச்சியான மீராவைப் பிடித்து விட வேண்டுமென்ற துடிப்புத் தெரிந்தது..
அவன் கைகளுக்குள் சிக்கிக் கொள்ள மீராவுக்கு ஆசைதான் அவளால் அது முடியாதென்பதில் அவளின் ஆசை நிராசையாக ஆனது.. அவள் கால்களைப் பிணைத்திருந்த தளைகளையும்.. அவள் கண் முன் நிற்கும் தடைகளையும் அவன் அறிவானா என்று ஏக்கப் பெருமூச்சு விட்டாள் மீரா..
பணக்கார வீட்டில் பிறந்தால் மட்டும் பெண்கள் அடிமைத் தளையிலிருந்து விடுப்பட்டு விட முடியுமா என்ன..?
       "ஆஹா.. உனக்கு யாரும்..
தடையும் இங்கு விதிப்பதில்லையே..
எனக்கும்கூட அடிமை கோலம்
பிடிப்பதில்லையே.."
மீராவின் பாடலில் தோய்ந்திருந்த சோகத்தில் பாகீரதியின் புருவங்கள் சுருங்கின..
'இதை மட்டும் உணக்கையா புரிஞ்சுக்க.. உன் அண்ணன் மகன்.. கலெக்டர் மகளுக்கு நூல் விடறதை மட்டும் கண்டுக்காம விட்டிரு..'
வாகீசன் மனதுக்குள் மனைவியை தாளித்தார்.. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் மாய உலகத்தில் இருந்த யதுநந்தன்.. மீராவை மட்டும் போதை ததும்ப பார்த்தபடி..
      "உனை நான் சந்தித்தேன்..
உனையே சிந்தித்தேன்..
எனைநீ இணை சேரும்..
திருநாள் வருமோ பட்டர்பிளை.."
என்று பாடிக் கொண்டிருந்தான்..

'இணை சேரனுமா..? சேருவடா.. சேருவ.. இந்த வாகீசன் கேணையனா இருந்தா.. நீ என் வீட்டுக்கு எதிர் வீட்டுப் பெண்ணை கணக்குப் பண்ணி இணை சேர்வ.. நான் ஒன்னும் நீ நினைக்கிற அளவுக்கு கேணையன் இல்லைடா..' வாகீசனின் மனது திமிறிக் கொண்டிருந்தது..

என்ன தைரியமிருந்தால் வரதராஜனின் மகன்.. வாகீசன் வீட்டிற்கு எதிர் வீட்டுப் பெண்ணைக் காதல் செய்ய முனைவான்..? இருந்திருந்து வாகீசனுக்கு கிடைத்திருக்கும் ஒரே பணக்கார நண்பர் (?) சடகோபன் மட்டும்தான்.. என்னதான் அவர் வாகீசனை நண்பராக ஏற்காவிட்டாலும் அவர் மனைவி ஜானகி.. வாகீசனின் மனைவியான பாகீரதியை தோழியாக ஏற்றுக் கொண்டு விட்டாள் அல்லவா..?
மனைவியின் தோழியின் கணவர் வாகீசனுக்கு தோழன்தானே..!
அப்படி சுற்றி வளைத்து மூக்கைத் தொடும் அரீதான நட்புறவை பதம் பார்க்கவென்றே அவருடைய மைத்துனனின் மகன் கிளம்பி வரலாமா..?
'இவனோட அப்பனுக்குத்தான் பணக்கார பிரண்ட் இருக்கனுமா..? எனக்கு இருக்கக் கூடாதா..?' மனதுக்குள் கருவினார் வாகீசன்..
மாமன்காரரின் மனக் குமுறல்களைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல்.. காதலே கண்ணாக மீராவைப் பார்த்தபடி.. என்னவோ யாழை மீட்டுகிறவனைப் போல ஹிட்டாரை மீட்டிக் கொண்டிருந்தான் யதுநந்தன்..
     "மலர்கள் தோறும் நடந்து போகும்..
சிறிய ஜீவனே..!
உந்தன் மனதைக் கொஞ்சம் இரவல்
கேட்கும் எனது ஜீவனே..!"
மீராவின் ஏக்கம் தோய்ந்த குரல் கூடுவிட்டு கூடு பாய விரும்பிப் பாடியது.. தளைகள் நிறைந்த மனித வாழ்வை விட்டு.. தளைகளற்ற பட்டாம்பூச்சியின் உலகில் நுழைய அவள் விரும்புவதை பாடல் தெரிவித்தது.. யதுநந்தனின் புருவங்கள் உயர்ந்து சுளித்து அவளின் ஏக்கத்தை ஆட்சேபனை செய்தன..
     "ஆஹா.. விழிகள் நூறு கடிதம்..
போட்டும் பதில்கள் இல்லையே..
விரகதாபம் அனலை மூட்டும்..
பருவத் தொல்லையே.."
அவன் விழிகள் அப்போதும் கடிதங்களை வரைந்து அவளுக்கு அனுப்பியபடிதான் இருந்தன.. அவனது கடிதங்களுக்கான பதிலைத் தரச்சொல்லி மீராவின் கன்னி மனம் அவளை பாடாய் படுத்தியது.. அவனது ஆசையைக் கூறும் விழிகளை படபடப்புடன் பார்த்தவளுக்கு அவன் மடியில் துயிலும் ஆசை வந்தது..
அப்படியொரு நாள் அவள் வாழ்வில் வருமா..?
மீராவின் மனம் விண்டது.. சடகோபனின் மகளுக்கு கலெக்டர் படிப்பின் மீதுதானே காதல் வரவேண்டும்..? அவரின் உயரத்தை எட்ட முடியாத கம்பீரமான வாலிபனின் மீது காதல் வரக் கூடாதே..
      "உனை நான் கொஞ்சத்தான்..
மடிமேல் துஞ்சத்தான்..
தினம் நான் எதிர்பார்க்கும்..
திருநாள் வருமோ பட்டர்பிளை..?"
மீராவின் பாடல் உணர்த்திய செய்தியில் யது நந்தனின் விழிகள் ஜொலித்ததைக் கண்ட பின்புதான் தன் தவறை உணர்ந்தாள் மீரா.. பாடலின் போக்கில் அவள் தனது மயங்கும் மனதைவெளிப்படுத்தி விட்டதைப் புரிந்து கொண்டவளாக நாக்கைக் கடித்தாள்..
அதற்குப் பின்னால் அவர்கள் சீட்டைக் கலைத்துப் போட்டு விளையாடினார்கள்.. மகேஷ், சுரேஷீடன் மீரா ஓடிப்பிடித்து விளையாடினாள்.. வாகீசனும், யதுநந்தனும் வலது உள்ளங்கைகளை இணைத்து.. கை முட்டியை காரின்மீது வைத்து பலப்பரிட்சை விளையாட்டை விளையாடிப் பார்த்தார்கள்.. வெற்றி பெறுவதைப் போல கைகளைச் சாய்த்த யதுநந்தன் கடைசி நொடியில் கையைத் தளர்த்தி வாகீசனை ஜெயிக்க வைத்தான்.. அந்த வெற்றி யதுநந்தன் விட்டுக் கொடுத்ததினால் வந்த வெற்றி என்பதினால் கடுப்படைந்தார் வாகீசன்..

'இவனை உண்மையாவே ஒருநாள் நான் ஜெயித்துக் காட்டனும்..' அவர் மனதில் வைராக்கியம் வந்தது..

வீட்டுக்குத் திரும்பியபோது காரில் மௌனம் சூழ்ந்திருந்தது.. காரின் முன்பக்க கண்ணாடியின் வழியாக மீராவை பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்த யதுநந்தனுக்கும்.. அவனுடைய கள்ளப் பார்வையில் முகம் சிவக்க.. தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த மீராவுக்கும் வார்த்தைகளற்ற அந்த மௌனம் பிடித்த மானதாக இருந்தது..
கண்கள் பேசும் பரிபாஷைகளைவிடவா வாய்பேச்சு இனிமையானதாக இருந்துவிடப் போகிறது..?
வாகீசன் சாலையைப் பார்ப்பதும்.. யதுநந்தனின் கள்ளப்பார்வையைப் பார்ப்பதுமாக டென்சனில் இருந்தார்.. பாகீரதி கண்களை மூடித் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.. அந்தப் பார்ச்சுனர்காரின் பின்பக்க சீட்டில் இருந்த மகேஷீம், சுரேஷீம் கார் குலுங்குவதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டிருந்தார்கள்..
கைக்குப் பிடிக்க வாகாக 'கிராப்' செய்யப்பட்ட தலைமுடி இல்லாததினால் அவர்கள் அடித்துப் பிரண்டு அவ்வபோது முன் சீட்டிலிருந்த பாகீரதியின் மேலும்.. மீராவின் மேலும் மோதிவைத்தார்கள்..
"பேசாமா வாங்கடா.."
தூக்கக் கலக்கத்தில் இருந்த பாகீரதி முணுமுணுத்தாள்.. மீரா அதையும் செய்யவில்லை.. சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதைப் போல மீராவின் சித்தம் போகும் போக்கு.. யதுநந்தனின் மீதாகவே இருந்து தொலைத்ததில்.. அவள்மீது மலையே வந்து மோதினாலும் தட்டிவிட வேண்டுமென்ற பிரக்ஞை இன்றி யது நந்தனின் கள்ளப் பார்வைக்கு வெட்கப்படுவது ஒன்றே அவள் வாழ்வின் அப்போதைய குறிக்கோள் என்பதைப் போல அசையாமல் அவன் பார்வைக்கு பதில் பார்வைகளை தந்து கொண்டிருந்தாள்..
இது எதையும் அறியாத மக்கு மண்டூகமாக பாகீரதி இருந்ததில் அவருக்குள் மலையளவு மனத்தாங்கல் வந்தது..
அன்றைய இரவில் அவர் பாகீரதியிடம் தன் மனதில் இருந்த குமுறலைக் கொட்டினார்..
"பாகீ.."
"ம்ம்ம்.."
"கவனிச்சியாடி.."
"உங்களைக் கவனிக்க என்ன இருக்கு..?"
பாகீரதி கொட்டாவி விட்டபடி கேட்டு வைத்த கேள்வியில் அவருக்கு கொலைவெறி வந்தது.. அவரைக் கவனிக்க எதுவுமே இல்லையா..?
"என்னைக் கவனிக்க எதுவுமே இல்லாமலா.. ஒன்றுக்கு இரண்டாய் எனக்குப் பிள்ளைகளைப் பெற்றுத் தந்திருக்க..?"
கூர்மையான அவர் கேள்வியில் பாகீரதியின் முகம் குங்குமமாக சிவந்து விட்டது.. அரிதாகத்தான் அவர் இது போல பேசி வைப்பார்.. அந்தத் தருணங்களில் அவரைப் பார்த்தால் இவரா அப்பாவி வாகீசன் என்று கேட்கத் தோன்றும்..
"ச்சீய்.."
பாகீரதி கணவரின் கையைக் கிள்ளினாள்.. வாகீசனின் முகம் கனிந்து விட்டது.. அவர் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டார்.. பாகீரதி புரண்டு படுத்து அவர் மார்பில் தலை வைத்தாள்.. வாகீசனின் கை அவளைச் சுற்றிக் கொண்டது..
'இந்த மனுசன் ஊமையாம்..' பாகீரதிக்குள் வெட்கச் சிரிப்பு வந்தது..
"என்ன சொல்ல வந்தீங்க..?" கொஞ்சலாக கேட்டாள்..
"ஊம்..?" வாகீசனின் மூடு மாறியிருந்ததில் அவர் மனைவியிடம் உல்லாசமாக கண்சிமிட்டினார்..
"போதும்.." பாகீரதியையும் அந்த உல்லாசம் தொற்றிக் கொண்டது..
"இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. அதுக்குள்ள போதும்ன்னு சொன்னா எப்படி..?"
இதைப் பேசுவது வாகீசன்தானா என்ற ஆச்சரிய மெல்லாம் பாகீரதிக்கு வரவில்லை.. உலகம் அறிந்த வாகீசன் வேறு.. அவள் அறிந்த வாகீசன் வேறு..
"நீங்க இருக்கீங்களே.." அவர் மார்பில் செல்லமாக குத்தினாள்..
"நான் எப்படி இருக்கேண்டி..?" வாகீசனின் கைகள் முன்னேறின..
"கட்டினா இவரைத்தான் கட்டுவேன்.. என் அண்ணன் பார்த்து வைத்திருந்த பணக்கார மாப்பிள்ளையைக் கட்ட மாட்டேன்னு.. நான் பிடிவாதம் பிடிக்கிறதைப் போல இருக்கீங்க.."
பாகீரதி என்னவோ இயல்பாகத்தான் இதைச் சொன்னாள்.. வாகீசனால்தான் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அவர் மனதில் அவரை மறுத்து பணக்கார நண்பனை பாகீரதிக்கு மாப்பிள்ளையாக கொண்டு வர நினைத்த வரதராஜன் வந்து நின்றார்.. வாகீசனின் மனதில் மலர்ந்த உல்லாச உணர்வுகள் ஆழத்தில் அமிழ்ந்தன..
"என்ன..?" பாகீரதி அவரை உணர்ந்து விட்டாள்..
பெண்மனம் அதி நுட்பமானது.. நுண்ணுர்வுகளால் நெய்யப்பட்டது..
"நான் கவனிச்சியான்னு சொன்னது வேற ஒன்னைடி.."
"எதை..?"
"உன் அண்ணன் மகனுக்கும்.."
"யதுவைச் சொல்கிறீங்களா..?"
"உன் அண்ணனுக்கு ஒரே மகன்தானே..?"
"எனக்கும் ஒரே அண்ணன்தான்.."
பாகீரதியின் கண்கள் கலங்கி விட்டன.. சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் சங்கடப் பட்டுப் போனார் வாகீசன்.. முள் மரங்களுக்கு இடையே நடப்பதைப் போல அவருக்கு இருந்தது.. இருந்தாலும் பேச வேண்டியதைப் பேசித்தானே ஆக வேண்டும்..?
"உன் அண்ணன் மகனான யதுநந்தனுக்கு.. இப்போச் சரியாச் சொல்கிறேனா பாகீ..?" எரிச்சலுடன் கேட்டார் வாகீசன்..
"நீங்க எப்பத்தான் சரியாச் சொல்லியிருக்கீங்க..?" அவரைவிட எரிச்சலுடன் பதில் சொன்னாள் பாகீரதி..
"இதோ பார் பாகீ.. நீ எனக்கு உயிர்தான்.. உன்மேல எனக்கு அளவு கடந்த காதல்தான்.. அதுக்காக உன் அண்ணன் மகன் எந்த வினையை இழுத்து வைத்தாலும் நான் கைகட்டி வேடிக்கை பார்க்கனும்னு கனவு காணாதே.."
"என்னது..?" பாகீரதி பொங்கிவிட்டாள்..
"யாரைப் பத்திப் பேசறிங்கன்னு நினைப்பில வைத்துக்கிட்டுப் பேசுங்க.. யது கோபக்காரன்.."
"இருந்துட்டுப் போகட்டும்.. அந்தக் கோபக்காரன் எதுக்காக என் வீட்டுக்கு எதிர்வீட்டுப் பெண்ணைக் காதலிக்க நினைக்கிறான்..?"
வாகீசனின் இந்த கோபத்திற்கு 'என்னது..?' என்ற எதிர்வினாவை பாகீரதி எழுப்பவில்லை.. சிந்தனையுடன் விலகிப் படுத்தாள்.. அவளது விலகலில் வாகீசன் தவித்துப் போனார்...
நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு பல விபரீதங்களுக்கு வித்திட்டு விடக் கூடும் என்று அஞ்சி எச்சரித்தால் அவர் மனைவி அவரை விட்டு விலகி நிற்பாளா..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே. -14
வந்தாள் மகாலட்சுமியே. -14
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-14.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-14.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy