வந்தாள் மகாலட்சுமியே..-13

13 அடர்ந்த சவுக்குத் தோப்பு.. அதையொட்டிய கடற்கரை மணல்.. அலைகள் குறைந்த கடல்நீரில் குதியாட்டம் போட்டு உடைகளை நனைத்துக் கொண்டிருந்தவர்களை அ...

13

அடர்ந்த சவுக்குத் தோப்பு.. அதையொட்டிய கடற்கரை மணல்.. அலைகள் குறைந்த கடல்நீரில் குதியாட்டம் போட்டு உடைகளை நனைத்துக் கொண்டிருந்தவர்களை அதட்டல் போட்டு அழைத்தாள் பாகீரதி..
"டேய் மகnஷ்.. சுரேஷ்.. யது.."
"மீராவை விட்டுட்டியே.."
சவுக்குத் தோப்பில் விரிக்கப் பட்டிருந்த ஜமுக்காளத்தில் அவளருகே வெகு சமர்த்தாக உட்கார்ந்திந்த வாகீசன் எடுத்துக் கொடுத்தார்.. பதிலுக்கு கணவரை முறைத்தாள் பாகீரதி..
"ஏண்டி..?" வாகீசன் அவளது முறைப்பிற்குக் காரணம் புரியாமல் விழித்தாள்..
"நான் கேட்டேனா..? இல்லை.. நான் கேட்டேனான்னு கேட்கிறேன்.." நெற்றிக்கண்ணைத் திறந்தாள் பாகீரதி..
"இல்லைடி.. எல்லோரும்தானே தண்ணியில ஆட்டம் போடறாங்க..? இந்தப் பெண்ணை மட்டும் விட்டுட்டு மத்தவங்களைக் கூப்பிட்டா நல்லாயிருக்குமா...?"
"நீங்க இருக்கீங்களே.. உங்களை என்ன செய்கிறதுன்னே தெரியலை.."
பாகீரதி தலையில் லேசாக அடித்துக் கொண்டதில்.. வேண்டுமென்றால் இந்தக் கடலில் தள்ளி விட்டு விடுகிறாயா என்று கேட்டு விடலாமா என்ற ஆசை கொண்டார் வாகீசன்..
ஒரு மனிதனாகப்பட்டவர் வாயைத் திறந்து எது பேசினாலும் தவறு என்று தலையில் அடித்துக் கொண்டால் எப்படி..?
"மத்தவங்களைப் போல இவ என்ன நடுக்கடல் வரைக்குமா போய் ஆட்டம் போடறா..? கரையோரமா நிற்கிறவ தானா வந்திரப் போறா.. இந்த மத்த வானரங்களைத்தான் அதட்டி உருட்டி கூப்பிட்டாகனும்.. புரிஞ்சதா..?"
பாகீரதி மூச்சு விடாமல் கொடுத்த விளக்கத்தில்.. ஒரு சின்ன அழைப்பில் இத்தனை விவரங்கள் அடங்கி இருக்கின்றனவா என்று வியந்து போனார் வாகீசன்..
இது தெரியாமல் அவர் கடலில் தள்ளி விடச் சொல்லப் போனாரே..
"எப்புடிடீ..?" அவர் விழிகளை விரிக்க..
"சகிக்கலை.." என்றாள் அவருடைய தர்ம பத்தினி..
பாகீரதிக்கு கோபம் வந்து விட்டது.. கடலில் ஆடிய வானரங்களை விட்டு விட்டு கணவரின் பக்கம் கவனத்தை திருப்பினாள்..
பாகீரதியும் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல சொல்லிப் பார்த்து விட்டாள்.. வாகீசன் திருந்துகிற பாடாக இல்லை.. அதை அவரிடம் சொன்னால்.. அவர் என்ன குடிக்கிறாரா.. ஊதாரித்தனமாக காதலிகளின் பின்னால் ஊர் சுற்றுகிறாரா என்றெல்லாம் கேட்டு வைக்கிறார்.. இதனால் பாகீரதி படும் துன்பங்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.. அவரைப் போன்ற ஒரு அருமையான கணவன் வாய்த்து விட்டால் எந்தப் பெண்ணாக இருந்தாலும் ஆய கலைகள் அறுபத்தி நான்கையும் படித்துத் தேர்ந்து குடும்பத்தை வழி நடத்தியாகத்தானே வேண்டும்..? அவருக்குப் பதிலாக பாகீரதி யோசித்துப் பேசினால்.. அதையும் 'எப்புடி..?' என்று சிலாகித்து அவளுக்கு எரிச்சலை மூட்டுகிறார்.. வாகீசன் செய்யும் அழும்புகளை பொறுத்துக் கொள்வதை விட பாகீரதி கடலில் போய் விழுந்து விடுவதே உத்தமம்..
மூச்சு விடாமல் பாகீரதி பேசித் தீர்த்துக் கொண்டிருக்க.. அதைக் கவனிக்காமல்..
"அப்படியாடி பாகீரதி..?" என்று சந்தோசம் கொண்டாடினார் வாகீசன்..
'இந்த மனுசனுக்கு என்ன ஆகித் தொலைத்தது..?' அவரை சந்தேகமாக பார்த்து வைத்த பாகீரதி..
"என்னத்த நொப்புடியாடி பாகீரதின்னு உல்லாசம் கொண்டாடி வைக்கறிங்க..?" என்று சிடுசிடுத்தாள்..
"அவங்களைப் போல நாமளும் கடலில் குளிக்கப் போகலாமா..?" துள்ளிக் கொண்டு எழுந்தார் வாகீசன்..
"நான் எப்ப அப்படிச் சொன்னேன்..?"
"இப்பச் சொன்னியேடி.."
"என்னத்த சொன்னேன்..?"
"கடலில் போய் விழுகிறது உத்தமம்ன்னு நீ சொல்லலை..?"
"அதுக்கு இப்படியா அர்த்தம் பண்ணிக்குவீங்க..?"
"ஆமாம்.."
"அட ராமா..!"
பாகீரதி தலையில் கைவைத்த போது.. கடலில் களைத்தவர்கள் பசியோடு வந்து ஜமுக்காளத்தில் கவிழ்ந்தார்கள்.. மீரா பாகீரதியை ஒட்டியபடி உட்கார்ந்தாள்..
"இதுகளைப் பாரு.."
செல்லமாக அவர்களின் முதுகில் தட்டி எழுப்பினாள் பாகீரதி.. எழுந்தவர்களின் கைகளில் பீங்கான் தட்டைத் திணித்தாள்.. பெரிய கேரியரில் கொண்டு வந்திருந்த பிரியாணியும்.. சில்லி சிக்கனும் நொடிப் பொழுதில் காலியாகின..
"சூப்பர் டேஸ்ட் ஆண்ட்டி.." மீரா பாராட்டினாள்..
"இன்னும் கொஞ்சம் போட்டுக்கறியா..?" பாகீரதி கரண்டியைத் தூக்கினாள்..
"போதும்.. போதும்.." மீரா தட்டைக் கைகளால் மறைத்தாள்..
அவளைப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த யதுநந்தனுக்கு புரையேறியது.. மீரா அடிக்கண்ணால் அவனைப் பார்த்தபடி தண்ணீர் பாட்டிலை அவன் பக்கத்தில் வைத்தாள்..
"இங்கே வைக்கிறதுக்குப் பதிலா என் கையில் கொடுத்திருக்கலாமே.." யதுநந்தன் ஆட்சேபித்தான்..
"இப்ப என்ன.. ஏழு கிலோமீட்டர் தொலைவிலேயா வைத்திருக்கேன்..?" பதிலுக்கு கேள்வி கேட்டாள் மீரா..
இந்தப் பெண்கள் எல்லாம் எப்படித்தான் யோசிக்காமல் பதில் சொல்கிறார்களோ என்றிருந்தது வாகீசனுக்கு..
'இதுக்குன்னு வரம் வாங்கி பிறந்திருப்பாங்களோ..'
யதுநந்தன் மீராவை ஒரு மார்க்கமாய் பார்த்தபடி தண்ணீர் பாட்டிலை எடுத்து.. பீர் பாட்டிலைக் குடிப்பதைப் போல கிறக்கத்துடன் குடித்து விட்டு அவளை போதையுடன் பார்த்து வைத்தான்..
மீரா வாய்க்குள் முணுமுணுத்தபடி அவனைப் பார்த்து முறைத்து வேறு திக்கில் பார்க்கும்படி சைகை செய்தாள்.. அவனோ அவளது எச்சரிக்கையில் குதூகலமாகிப் போனவனாக முன்னை விட அதிகமாக அவளை உற்று உற்றுப் பார்க்க ஆரம்பித்தான்..
'இதென்னடா வம்பாப் போச்சு..'
மீரா பாகீரதியுடன் பாத்திரங்களைக் கழுவப் போவதைப் போல கடலோரமாக நகர்ந்து தப்பித்தாள்..
'விட்டா பார்வையிலேயே தின்று விடுவான் போல இருக்கே..'
வலுத்துக் கொண்டிருக்கும் யது நந்தனின் ஆர்வத்தில் கலங்கிப் போயிருந்த மீராவின் நிலையை அறியாத பாகீரதி.. அவளை நம்பி மீராவை அனுப்பி வைத்திருக்கும் அவளின் பெற்றோருக்கு நன்றி நவிழ ஆரம்பித்தாள்..
"நான் கேட்டவுடனே அதுக்கென்ன பாகீ.. அழைச்சுக்கிட்டுப் போங்கோன்னு உங்கம்மா சொல்லிட் டாங்களே.. ஆஹா.. ஆஹா.. தோழின்னா உங்கம்மாதான் தோழி.."
பாகீரதியின் தோழியைப் பற்றிய சிலாகிப்பைக் கேட்டுக் கொண்டிருந்த மீராவின் மீது ஒரு சோலி வந்து விழுந்தது திரும்பிப் பார்த்தாள்.. அடுத்த சோழியை
எறிய குறிபார்த்துக் கொண்டிருந்த யதுநந்தன்.. அவள் திரும்பியதைக் கண்டதும்..
"பிழைச்சுக்கிட்ட.." என்றான்..
கடல்நீரில் பாத்திரங்களைக் கழுவி முடித்திருந்த பாகீரதி நிமிர்ந்து புருவங்களைச் சுருக்கினாள்..
"என்ன யது..?"
"ஒன்னுமில்லை அத்தை.. நானும் ஹெல்ப் பண்ண வரவான்னு கேட்டேன்.. தட்ஸ் ஆல்.."
அவன் பார்வையோ.. அவ்வளவுதான் என்று முடித்துக் கொள்ள அவன் தயாராக இல்லை என்பதை அறிவித்தது..
இது என்ன தொல்லை என்று அலுத்துக் கொள்ளத்தான் நினைத்தாள் மீரா.. அவளால் அது முடியவில்லை..
மீராவைக் கண்டதும் யதுநந்தனின் கண்களில் ஏற்படும் மின்னலில் அவளது கன்னி மனம் தடுமாறியது..
சுற்றிலும் இருந்த உறவினர்களின் மத்தியில் அவளை மட்டும் தனித்துப் பார்க்கும் வித்தையைக் கற்றறிந்தவனாக அவன் இருந்தான்.. மற்றவர்களுடன் பேசியபடி அவளையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.. பேச்சு பேச்சாக இருக்க அவன் பார்வை மீராவைச் சுற்றி மட்டுமே வட்டமடித்துக் கொண்டிருந்தது..
அவனது கள்ளப் பார்வையின் முற்றுகையில் மீராவின் மனம் குழம்பித் தவித்தது.. கன்னிப் பருவத்திலே அறிய நேர்ந்த வித்தியாசமான ஆண்பார்வையில் அவள் உடலில் ஏதோ மாயம் புகுந்து ஆட்டுவித்தது..
பாகீரதியின் முதுகுப்புறமாக அவள் ஒளிந்து கொண்டாள்.. மறைவில் இருந்தபடி அவன் என்ன செய்கிறான் என்பதை கண்காணித்தாள்..
அவன் பார்வை அவளைத் தேடுகிறதா இல்லையா என்று கண்காணிப்பதில் அவளுக்குள் ஒரு 'த்ரில்' இருந்தது.. அவளது எதிர்பார்ப்பைப் போலவே அவன் பார்வை அவளைத்தேடி அலைந்ததில் அவளுக்குள் கர்வம் உண்டானது.. இதம் நிறைந்த அந்தக் கர்வம் அவள் இதயத்தில் பரவிப் படர்ந்து அவளுக்குச் சுகம் தந்தது.. அந்த சுகத்தில் அவனைத்தேடியலைந்த அவளது பார்வையை அவன் கண்டு கொள்வான் என்பதை மறந்தவளாக அவள் பாகீரதியின் முதுகுக்குப் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தாள்.. அவன் கண்களில் வந்த மின்னலில்தான் அவள் அகப்பட்டுக் கொண்டதை உணர்ந்தவளாக உதட்டைக் கடித்தபடி ஒடுங்கிக் கொண்டாள்.
'கடவுளே..! என்னைப் பார்த்துட்டானே..'
அவளைக் கண்டு கொண்டதில் அவன் முகத்தில் தெரிந்த வெளிச்சத்தில் இதயம் படபடக்க அவள் பாகீரதியின் பின்னால் ஒளிந்து நெஞ்சில் கை வைத்து தன்னை நிதானீத்துக் கொண்டாள்..
அவள் மனதில் சுகமும்.. இதழ்களில் லேசான சிரிப்பும் வரத்தான் செய்தது..
அவர்கள் சவுக்குத் தோப்பில் விரிக்கப் பட்டிருந்த ஜமுக்காளத்தில் ஓய்வாக உட்கார்ந்தார்கள்.. யதுநந்தன் கையோடு கொண்டு வந்திருந்த ஹிட்டாரை எடுத்து மெலிதாக இசைத்தான்.. மீரா மயங்கிப் போனாள்..
"உன் வாத்தியத்தை நீ கொண்டு வந்திட்ட.. மீராவோட வீணையை அவளால தூக்கிட்டு வர முடியுமோ..?" பாகீரதி மீராவுக்காக இரக்கப்பட்டாள்..
மகnஷ் நேயர் விருப்பம் சொன்னான்.. சுரேஷ் டென்ஸ்போர்ட்ஸ் பார்க்க முடியாத கொடுமையில் அசுவராஸ்யமாக காலை ஆட்டியபடி அமர்ந்திருந்தான்.. வாகீசனுக்கு தூக்கம் கண்களை சுழற்றியது.. கொஞ்சம் கண்ணயரலாம் என்று அவர் நினைத்த வேளையில் யதுநந்தன் பாட ஆரம்பித்து விட்டான்..
     "ஆஹா.. ஓஹ்.. பட்டர்பிளை..!
பட்டர் பிளை..!
ஏன் விரித்தாய் சிறகை..?"
பிசிறில்லாத குரலில் பாடியபடி அவன் இமை உயர்த்தி மீராவைப் பார்த்தபோது தன்னைப் பட்டுப் பூச்சியாக உணர்ந்தாள் மீரா.. வாகீசனுக்கு வந்த தூக்கம் ஓடோடிப் போய் விட்டது.. அவர் ஆர்வம் ததும்பும் யதுநந்தனின் விழிகளையும் வெட்கம் வழியும் மீராவின் விழிகளையும் கலவரத்துடன் பார்த்தார்..
 'அடக்கடவுளே..! இதுக ரெண்டுக்கும் மத்தியிலே ஏதோ ஃபிலிம் ஓடறதைப் போல இருக்கே.. இது எங்கே போய் விடப் போகுதுன்னே தெரியலையே..'
மனைவியைப் பார்த்தார்.. அவரின் கலவரத்தில் துளியளவுகூட இல்லாமல் பாகீரதி பாடலை ரசித்துக் கொண்டிருந்தாள்.. அது எப்படி என்றுதான் வாகீசனுக்கு விளங்கவில்லை..
எப்போதுமே பாகீரதி அவரைவிட நுணுக்கமாக எல்லாவற்றையும் எடை போட்டு விடுவாள்.. வாகீசனின் ஆறாம் அறிவுக்குக்கூட எட்டாத பல விவரங்கள் அவளின் நுண்ணறிவுக்கு எட்டி விடும்..
அப்படிப்பட்ட பாகீரதி எப்படி யதுநந்தனுக்கும்.. மீராவுக்கும் இடையே ஓடும் நூலிலை போன்ற இந்தப் பிணைப்பைக் கவனிக்காமல் விட்டாள்..?
வாகீசனின் மனது கேட்ட கேள்விகளைப் பற்றி அறியாதவனாக யதுநந்தன் மீராவின் முகத்தை மட்டுமே பருகு.. பருகென்று பார்த்தபடி பாடிக் கொண்டிருந்தான்.. அவன் பார்வை மீராவை 'அருகில் வா' என்று அழைத்தது.. அதில் அவள் திகைத்துத் தடுமாறினாள்..
         "அருகில் நீ வருவாயோ..
உனக்காக.. திறந்தேன்..
மனதின் கதவை..
ஆஹா.. ஓ.. பட்டர்பிளை..
பட்டர்பிளை..
ஏன் விரித்தாய் சிறகை..?"
யதுநந்தனின் மனக்கதவு அவளுக்காக திறந்திருப்பதை உணர்ந்தவளாக மீரா தவித்தாள்.. அவனது விழிகளின் வழி வந்த செய்தி அதை அறிவித்ததில் அவளையுமறியாமல் யதுநந்தன் பாடிய பாடலில் அவளும் இணைந்து விட்டாள்..
     "எனையும்தான் உனைப் போல..
       படைத்தானே.. இறைவன்..
எனும் ஓர் தலைவன்..
     ஆஹா.. ஓ.. பட்டர்பிளை.. பட்டர்பிளை..
ஏன்.. விரித்தாய் சிறகை..?"
தானே ஒரு பட்டாம் பூச்சியைப் போல சிறகை விரித்துப் பறப்பதைப் போல மயக்கத்தில் மிதந்தாள் மீரா..
காதல் என்பது போதைதரும் மதுவை விட அதிக போதை தருவது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே..-13
வந்தாள் மகாலட்சுமியே..-13
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy