வந்தாள் மகாலட்சுமியே.. -12

12      "எங்கிருந்தாலும் உன்னை.. நானறிவேன்.. உன்னை என்னையல்லால் வேறு யாரறிவார்..?" சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிர...

12

     "எங்கிருந்தாலும் உன்னை..
நானறிவேன்..
உன்னை என்னையல்லால்
வேறு யாரறிவார்..?"

சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மீராவை யதுநந்தன் பாடிய அந்தப் பாடல் பாதித்து.. சோதித்து வைத்தது..
"இருட்டுக்குள்ளே மறைஞ்சு நின்னா உன்னை என்னால கண்டு பிடிக்க முடியாதா..? நீ எங்கேயிருந் தாலும்.. எப்படி ஒளிஞ்சு மறைஞ்சு நின்னாலும் இந்த யதுநந்தன் பார்வைக்குத் தப்ப முடியாது.."
யதுநந்தனின் வார்த்தைகள் கிசுகிசுப்பாக அவள் மனதில் ஒலித்தன.. அவனும் கிசுகிசுப்பான குரலில்தான் அந்த வார்த்தைகளை உச்சரித்தான்.. அந்த கிசுகிசுப்பு அவளை எங்கோ அழைத்துச் சென்றது..
"ஜன்னலோரமா.. பென்சிலால் வரைஞ்ச கோட்டோவியம் போல நீ நின்ன அழகை நான் வரைஞ்சு வைச்சிருக்கேன்.. பார்க்கறியா..?"
யதுநந்தனின் கிசுகிசுப்பில் அந்த ஓவியத்தைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல் அவளுக்குள் வந்தது.. அதை மறைத்துக் கொண்டவளாக..
"ஒன்னும் வேணாம்.. நீங்க யாரையோ பார்த்துட்டு கிறுக்கி வைச்சிருக்கிற கிறுக்கலை நான் எதுக்காக பார்க்கனும்..?" என்று மிடுக்காக கேட்டு வைத்தாள்..
"யாரைப் பார்த்திருப்பேன்னு நினைக்கிற..?" அவன் கேள்வி கொக்கி போட்டது..
"ஹீ நோஸ்..? காத்து, கருப்பா இருக்கலாம்.." அவள் வரவழைத்துக் கொண்ட அலட்சியத்துடன் சொன்னாள்..
"யு மீன் மோகினி..?" என்றான் அவன்..
"இருக்கலாம்.." அவள் தோள்களைக் குலுக்கினாள்..
"உண்மைதான்.. அவள் மோகினிதான்.. மயக்கும் மோகினி..! அவளை முதன் முதலில் பார்த்தப்போ எனக்கு 'யாரடி நீ மோகினி..?'ன்னுதான் கேட்கத் தோணுச்சு.."
அவன் அவள் விழிகளுக்குள் ஆழமாகப் பார்த்தபடி சொன்னான்.. அவன் விழிகளில் தெரிந்த மயக்கத்தில் மீரா பிரமித்துப் போனாள்.. இந்த பிரபஞ்சம் முழுவதுக்குமான மொத்த மயக்கத்தையும் தனது விழிகளில் தேக்கி வைத்திருந்தான் யதுநந்தன்..
'நான் அந்த அளவுக்கு அழகியா என்ன..?'
அந்த இடத்தில்தான் அவனிடம் மயங்கிப் போனாள் மீரா..
கோடிஸ்வரப் பரம்பரையின் வழித் தோன்றலாக.. கலெக்டர் சடகோபனின் ஒற்றை மகளாக அவளைப் பார்க்காமல் மீரா என்ற மயக்கும் மோகினியாக அவளை அவன் பார்த்ததில் அவள் அடைந்த மன நிறைவுக்கு வானமே எல்லையானது..
     "மார்கழிப் பனியில்..
மயங்கிய இரவில்..
மோகினி வந்தாள்..
எனைத் தேடி.."
யதுநந்தனின் பாடல் முதல் நாள் இரவில் கொட்டிய மார்கழிப் பனியை கண்ணுக்கு முன்னால் கொண்டு வந்தது..
அவளா அவனைத் தேடிப் போனாள்..? அவன் தானே அவள் கனவில் தேடி வந்தான்..
'இதையும் சொல்லிட்டா அவ்வளவுதான்.. இவனைக் கையிலேயே பிடிக்க முடியாது..' மீரா ரகசியமாக அவனைப் பார்த்து வைத்தாள்..
அவள் பார்வைகளை எதிர் பார்த்ததைப் போல காத்திருந்து கவனமாக அவன் பார்வைகள் கவ்விக் கொண்டதில் அவளுக்குள் தீப்பற்றிக் கொண்டது..
அந்தத் தீயின் வேட்கையை அதுவரை அவள் உணர்ந்ததில்லை.. இப்படியுமா ஒரு தீயானது ரத்த நாளங்களை சூடேற்றி இறக்கையில்லாமல் 'ஜிவ்' வென்று வானில் பறக்க வைக்கும்..?
அவளை அவன் சித்திரவதை செய்வதைப் போல அவள் உணர்ந்தாள்.. அவனைத் தண்டிக்க வேண்டும் என்று விரும்பினாள்..
"சுரேஷ் இங்கே வாடா.."
அவன் காதோரமாக அவள் சொன்ன ரகசியத்தில் அவன் முகம் மலர்ந்து விட்டது.. உற்சாகமாக தலையை ஆட்டினான்..
"அக்கா.. நானும்.." மகேஷ் குரல் கொடுத்தான்..
அவன் செவிகளுக்கும் ரகசியம் போனது.. அவர்கள் தாக்குதலுக்கு தயாரானார்கள்.. மீரா சுறுசுறுப்பாக தளவாடங்களைத் தயார் செய்து கொடுத்தாள்.. அவள் உருவாக்கிய ராக்கெட்டுகளை யதுநந்தனின் மீது சுரேஷீம், மகேஷீம் ஏவி விட்டார்கள்..
அது என்ன மாயமோ.. மந்திரமோ.. தெரியவில்லை. ஒவ்வொரு ராக்கெட்டும் மிகச் சரியாக குறி பார்த்துத்தான் எறியப் பட்டது.. மிகச்சரியாக ராக்கெட் அவனை அணுகும் கடைசி நொடியில் திரும்பி அந்த ராக்கெட்டுகளை கைப்பற்றிக் கொண்டிருந்தான் யதுநந்தன்..
"என்னடா இது..?"
தளவாடங்களை தயார் செய்து கொடுத்துக் கொண்டிருந்த மீரா களைத்து விட்டாள்..
'இப்படியா ஒருவன்.. ஒத்தை ராக்கெட்டைக் கூட மோதவிடாம கவனமாகத் திரும்பிக் கைப்பற்றுவான்..?'
"உங்களுக்குத் தெரியாது அக்கா.. அத்தான் இருக்காரே.."
"உங்க அத்தான்தான் இருக்காரே.. அவருக்கென்ன.."
"அதைச் சொல்லலைக்கா.. அவர் ஜெக ஜாலக் கில்லாடின்னு சொல்ல வந்தேன்.. அவரையாவது.. நாம ராக்கெட் விட்டு அட்டாக் பண்ணுகிறதாவது.. நீங்கதான் அவரைக் கம்மியா எடை போட்டுட்டீங்க.."
'நானாடா கம்மியா எடை போட்டேன்..?'
அவன் எப்பேற்பட்ட கைகாரன் என்பதை மீரா அறிந்து வைத்திருக்கிறாள் என்பதை மகnஷ் அறிவானா..?
மொத்த ராக்கெட்டுகளையும் கையில் அள்ளிக் கொண்டு அழுத்தமான காலடிகளுடன் அவர்களை நெருங்கிய யதுநந்தனின் பார்வை மீராவின் மீதே இருந்தது.. துளைக்கும் அந்தப் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் பார்வையைத் தழைத்துக் கொண்ட மீராவின் மனம் படபடத்தது..
"நீதான் இவங்களுக்கு இந்த ராணுவத் தளவாடங்களை சப்ளை செய்கிற படா ஆளா..?"
கிண்டலாக அவன் வினவிய போது அவளுக்கு கோபம் வந்ததென்னவோ உண்மைதான்.. அந்த கோபத்தில் அவனைக் கிழிகிழியென்று கிழித்துத் தோரணம் கட்டிவிட வேண்டுமென்ற ஆத்திரத்துடன் விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தாள்.. பார்த்தவள் பேச்சு வராமல் திகைத்துப் போய் நின்று விட்டாள்..
அந்த மர்மயோகியின் மின்னல் பார்வை அவளை கதிகலங்கச் செய்தது.. ஊடுறுவும் அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் நடுங்கி விட்டாள் மீரா..
புயலில் சிக்கிய பூங்கொடியாக தவித்துப் போனது அவள் மனது..
'இது என்ன..?' அவளுக்குப் பயமாக இருந்தது..
தூரத்தில் வரும் அழகனைப் பார்த்து.. இவன் அழகாய் இருக்கிறானடி என்று தோழிகளிடம் சொல்லலாம்.. அதை அப்படியே மறந்தும் விடலாம்..
இது அப்படியில்லை போல இருக்கிறதே..
யதுநந்தன் அவள் கண்பார்வையிலிருந்து அகன்றாலும் அவனைப் பற்றிய நினைவுகள் அவள் மனதை விட்டு அகலாது என்பதைப் புரிந்து கொண்டவள் திக் பிரமை பிடித்ததைப் போல ஆகி விட்டாள்..
அவனை நிமிர்ந்து பார்க்கச் சொன்ன மனதை அதட்டி அடக்கி வைக்க அவள் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது.. நிலா முற்றத்தில் மீட்டப்படும் யாழின் இசை மனதை ஏதோ செய்து மயக்குவதைப் போன்ற நூதனமான உணர்வு நுட்பத்துடன் அவள் இதயத்தில் புகுந்து இந்திர ஜாலங்களை செய்தது..
அவனது விழிகள் உணர்த்திய மயக்கத்தில் ஏதோ உன்னதம் இருப்பதைப் போல அவள் உணர்ந்தாள்.. அவன் பார்வை அவளை ஆராதித்தது.. அந்த ஆராதனையை அதுவரை உணராத பேதை மனம் அவனை சரணடையத் துடித்தது..
"என்ன..? பேச்சைக் காணோம்.."
அவன் வார்த்தைகள்தான் அவளை வம்புக்கு இழுத்தன.. கண்களோ அவளை ஆழ்ந்து பார்த்து ஒரு ஆக்டோபஸ் போல அவளை அவனுக்குள் இழுத்துக் கொள்ள முயற்சி செய்தன..
'வேண்டாம்..' மீரா மனதுக்குள் இறைஞ்சினாள்..
'என்னை இப்படிப் பார்க்காதே.. இது போன்ற பார்வையை இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை.. என்னைப் பார்த்த இளைஞர்களின் பார்வை கோடிஸ்வரக் கலெக்டர் சடகோபனின் மகளாகத்தான் என்னை பிரமிப்புடன் பார்த்தது.. முதன் முதலாக.. என்னை எனக்காகப் பார்க்கும் பார்வையினை உன்னிடத்தில் நான் காண்கிறேன்.. இந்தப் பார்வையைத் துறந்து கடந்து போக எனக்குச் சக்திவராது போல தோன்றுகிறது.. உன் பார்வையில் என்னை சிறை பிடிக்காதே..'
மீராவின் கலங்கிய விழிகளில் எதை உணர்ந்தானோ.. யதுநந்தனின் முகத்தில் யோசனை படர்ந்தது.. அவன் மகேஷையும், சுரேஷையும் பார்த்தான்.. அவர்கள், இவர்கள் இருவரையும் கவனிக்காமல் வேறு பேச்சில் இருந்தார்கள்..
"நான் வில்லனில்லைன்னு ஏற்கனெவே உனக்குச் சொல்லியிருக்கேன்.." கண்டிப்புடன் அவன் சொன்னான்..
"ஸோ வாட்..?" கவனமாக அவன் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தபடி தோளைக் குலுக்கினாள் மீரா..
அவன் முகத்தைப் பார்த்தால்தான் அவளுக்குப் பேச முடியாமல் போய் விடுகிறதே..
"என்னைப் பார்த்து இப்படி நடுங்கனும்ங்கிற அவசியமில்லை.."
அவன் குரலில் கோபம் வந்திருந்தது.. அதில் மீராவின் மனம் நைந்தது... அவளா அவனை வில்லனாக நினைக்கிறாள்..?
'இல்லையே..' அவள் மனம் பரிதவித்தது..
"யார் நடுங்கினதாம்..?"
கிணற்றுக்குள் இருந்து பேசுவதைப் போல பேசி வைத்தாள் மீரா.. அவளது நடுக்கத்தை மெல்லிய அவளின் குரலே சொல்லி விட்டதில் அவன் அவளை முறைத்தான்..
"இந்தக் குரலே உன்னைக் காட்டிக் குடுக்குது.. அது உனக்குத் தெரியுதா.. தெரியலையா..?" அதட்டினான்..
"ஹலோ..! யாரும் இங்கே நடுங்கலை.. மனசிலாயி.." அவளுக்கும் ரோசம் வந்து விட்டது..
ஆனானப்பட்ட மீராவைப் பார்த்து 'பயந்தாங்குளி' என்று அந்த புரவிவீரன் பட்டம் கட்டுவதா..? அதை அவள் கேட்டுக் கொண்டிருப்பதா..? என்னதான் அந்த சாகசக் காரனின் பார்வையைப் பார்க்க அவளுக்குப் பயம்தானென்றாலும் அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டால் அவள் எப்படி மீரா ஆவாள்..?
"நடுங்கலையா..? என்னை நம்பச் சொல்கிறயா..?" அவன் லேசாக சிரித்தான்..
"நம்பினா நம்புங்க.. நம்பலைன்னா போங்க.. ஐ டோன்ட் கேர்..! எனக்கென்ன போச்சு..?" மீரா இலகுவாக பேச முயன்றாள்..
யதுநந்தனின் கண்களில் தெரிந்த சிரிப்பில் அவளுக்கு அங்கிருந்து ஓடிவிடலாம் போல இருந்தது.. அவளுடைய நடுக்கத்தை உணர்ந்தவனாக அதட்டியவன்.. அவளின் ரோசத்தில் கோபம் குறைந்து சிரிக்கும் மனநிலைக்கு வந்து விட்டிருந்தான்..
"ஆ.. உனக்கு கோபம் வந்தா.. ராக்கெட் விடுவ..?" சிரிப்புடன் வினவினான்..
மீரா வெட்டும் விழி பார்வையிலே அவனை முறைத்தாள்..
"உன் வீரத்தை மெச்சி பாராட்டு விழா எடுக்கனுமே.." அவன் சுற்று முற்றும் பார்த்தான்..
'யாரைப் பார்க்கிறான்..?' மீராவும் அவன் பார்வை போன திசையில் தனது பார்வையை ஓட விட்டாள்..
சட்டென்று திரும்பிய யதுநந்தன் அங்கிருந்த பூக்குடலையின் மீது பார்வையை ஓட்டினான்.. பூக்களைக் கட்டுவதற்குத் தேவையான நாறுடன் அது பாகீரதியின் வருகைக்காக காத்திருந்தது..
யதுநந்தன் பூக்குடலையை எடுத்தான்.. என்ன நடக்கப் போகிறது என்று மீரா யூகிப்பதற்குள் அவள் தலையில் பூக்களைக் கொட்டி விட்டான்.. மீரா பிரமித்துப் போய் நின்று விட்டாள்..
தேவதை போல் அவள் நின்றிருக்க அவள்மீது பூமாரி பொழிந்தது.. அவள் பார்வையும்.. யதுநந்தனின் பார்வையும் கலந்தது.. அவன் விழிகளில் தெரிந்த ஆர்வத்தில் அவளுக்குள் பயம் வந்தது.. விளையாட்டாக ஆரம்பித்தது வேறு ஒரு திசையில் பயணிக்க ஆரம்பிப்பதை அவளது அறிவு அச்சுறுத்தியது..
"என்ன செய்கறிங்க..?" அவள் பதறினாள்..
"ம்ம்ம்.. உனக்கு பாராட்டு விழா நடத்தறேன்.." அவன் உல்லாசமாக சிரித்தான்..
'இப்படிச் சிரித்துத் தொலைக்காதே..' மீரா மனம் தாளாமல் கண்களை மூடினாள்..
"பார்.. உன்னைப் போல நானொன்னும் ராக்கெட்டால மோதிப் பார்க்கல.. பூவைத்தான் தூவறேன்.."
"இது எதுக்கு..?"
"எனக்குத் தோணுச்சு.. பிடிச்சிருந்துச்சு.."
"உங்களுக்கு தோணறதை செய்துருவீங்களா..?"
"யெஸ்.."
இலகுவாக கூறியவனை துயரத்துடன் பார்த்தாள் மீரா.. அவள் ஏழுகடல்.. ஏழுமலைகளுக்கு அப்பா லிருக்கும் உயர்ந்த மலையில் வாசம் செய்யும் பட்டத்து இளவரசியென்பதை இவன் அறிவானா என்று துயரம் கொண்டது அவள் மனது..
"உங்களுக்கு தோணுகிறதையெல்லாம் செய்து விடக் கூடாதுங்க.. உங்களுக்குப் பிடிச்சதெல்லாம் கிடைக்கிறதுக்கு இந்த வாழ்க்கை உங்க வசத்தில் இருந்தாகனும்.. அது நடக்காத ஒன்னு.."
"நான் நடத்திக்காட்டுவேன்.."
பிடிவாதமாக பேசியவனுடன் மல்லுக்கட்ட முடியாமல் பேச்சை நிறுத்தி விட்டாள் மீரா.. தரையில் சிதறிக்கிடந்த பூக்களை சேகரித்து பூக்குடலையில் போடத் துவங்கினாள்..
"என்ன மீரா..? எப்படி பூக்கொட்டுச்சு..?" ஈரக்கையை சேலை முந்தானையில் துடைத்தபடி அங்கு வந்த பாகீரதி கேட்டாள்.. மீரா பூக்களை சேகரித்தபடி விழிகளை உயர்த்தி யது நந்தனைப் பார்த்தாள்..
'என்ன சொல்லட்டும்..?' அவள் விழிகள் கேட்டன..
"நான்தான் கொட்டினேன் அத்தை.." வெகு சகஜமாக சொல்லி மீராவை பதறடித்தான் யதுநந்தன்..
'சொல்லட்டுமா..?'
அவன் விழிகள் கேட்டதில் பெரிய மாவீரன் தான் என்ற அடுத்த புனை பெயரை அவனுக்கு சூட்டி வைத்தாள் மீரா..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே.. -12
வந்தாள் மகாலட்சுமியே.. -12
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-12.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/vanthaalmahaalakshmiye-12.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy