ராதையின் நெஞ்சமே.. -24

24 அந்தி வெயிலின் கதிர்கள் பட்டு மகாபலிபுரத்தின் மணற்துகள்கள் மின்னின.. அனுராதா.. சிற்பத்தின் மீது சாய்ந்து மெல்லிய குரலில் பாடினாள்.. &...

24

அந்தி வெயிலின் கதிர்கள் பட்டு மகாபலிபுரத்தின் மணற்துகள்கள் மின்னின.. அனுராதா.. சிற்பத்தின் மீது சாய்ந்து மெல்லிய குரலில் பாடினாள்..
"ராதையின் நெஞ்சமே.. கண்ணனுக்கு சொந்தமே..
ராதையின் நெஞ்சமே.."
அவளுடைய கண்ணனான முரளிதரன் அவளை நெருங்கி இடுப்பில் கைகொடுத்து தூக்கிக் கொண்டான்.. அவன் கழுத்தைச் சுற்றிக் கைகளை போட்டு பூமாலை போல அவள் வளைத்துக் கொண்டாள்.. அவன் கடற்கரை மணலில் நடந்தான்.. தூரத்தில் டாக்ஸி வரவும் அவளை இறக்கிவிட்டான்.. அவர்கள் டாக்ஸியில் ஏறி வீட்டை நோக்கி பயணப் பட்டார்கள்..
     "ஆயிரம் கனவுகள்.. கல்யாண நாளிலே..
  ஆனந்த நினைவுகள்.. அன்புகொண்ட உறவிலே..
      வசந்த காலத் தேரில் வந்து..
வாழ்த்துக் கூறும் தென்றலே.."
அனுராதா பாடியபடி ஈரத்துணிகளை கொடியில் உலர்த்திக் கொண்டிருந்தாள்.. சத்தமில்லாமல் பின்னால் வந்து நின்ற முரளிதரன் அவள் பின்னங்கழுத்தில் முத்தமிட்டு அவளை அணைத்துக் கொண்டான்..
"வாழ்வின் ஒளி தரும்..
தீபத்தை ஏற்றுவேன்..."
பூஜையறையில் விளக்கை ஏற்றியபடி விழியுயர்த்தி முரளிதரனைப் பார்த்தாள் அவள்.. அவன் கண்களில் விளக்கின் சுடர் தெரிந்தது..
"கோவிலைப் போலவே..
குடும்பத்தைப் போற்றுவேன்.."
கண்மூடி வேண்டிக் கொண்ட அனுராதாவின் கண்கள் பனித்திருந்தன.. பூஜையறையை விட்டு வெளியே வந்தவள்.. சமையலறையை ஒழுங்கு செய்து விட்டு.. படுக்கையறைக்குள் போனாள்.. கதவோரம் ஒளிந்து நின்ற முரளிதரன் அவள் கண்களைப் பொத்தினான்.. அவன் கைவிலக்கி முகம் பார்த்தவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.. அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டவளுடன் கட்டிலில் சரிந்தான்..
"மாலையிட்ட மன்னனோடு..
மனம் நிறைந்து வாழுவேன்.."
அனுராதா கூந்தல் கலைந்து.. நெற்றியில் தீற்றியிருந்த குங்குமத்தை அவன் மார்பில் படியவிட்டு.. புரண்டு படுத்து அவன் முகம் பார்த்தாள்.. அந்த நொடியில் அவள் அதி அற்புதமான பேரழகியாக முரளிதரனின் கண்களுக்குத் தோன்றினாள்..
"என் ராதா.."
நீட்டிய அவன் கைகளுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டவளின் நெஞ்சம் அவனுக்குச் சொந்தமானதாக மாறியிருந்தது..
அன்று ஸ்ரீதர் தப்பியோடிய தினத்தில் முரளிதரனின் தோள் சாய்ந்து அவள் சொன்னாள்..
"அவனை மன்னிச்சிருங்க.. மன்னிப்பை விட பெரிய தண்டனை இருக்க முடியாது.."
"எனக்கு முடியனுமேடி.."
"முடியனும்.. எனக்காக.. உங்களின் ராதாவுக்காக.. இதை நீங்க செய்தே தீரனும்.."
"ராதா.."
முரளிதரனின் வேகம் அடங்கியது.. அவன் மனைவியின் முகத்தை இறுகப் பற்றி அவள் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்..
"அம்மாகிட்ட நீ மறுத்தேடி.. நான் எங்கேயிருப்-பேனோ.. அங்கே தான் நீயிருப்பன்னு சொன்ன.. அன்னைக்கே எனக்கு உன் மனசு தெரிஞ்சிருச்சுடி.. ராமன் எங்கேயோ.. சீதையும் அங்கே தான் இருப்பாங்களாம்.. ஆனா நான் ராமனில்லையேன்னு நினைச்சேன்..."
"ஆனா நான் ராதையாச்சே.. அதுவும் உங்க ராதை.."
"ராதா.. அவனிடம் இப்பச் சொன்னதெல்லாம் உண்மைதானா..?"
"ம்ம்ம்..."
"உன் மனசில இருந்துதான் இதைச் சொன்னயா..?"
"ம்ம்ம்..."
"இந்த ராதையின் நெஞ்சம்.. இந்த முரளிதரனுக்கு சொந்தமா..?"
"ஆமாம்..."
அனுராதா வெட்கத்துடன் அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.. முரளிதரனின் அலையடித்த மனது சமனப்பட்டது.. அன்றைய இரவு அவர்களுக்கு முதல் இரவானது..
சொர்க்கத்தை அந்த வீட்டுக்குள் வரவழைத்துக் காண்பித்தாள் அனுராதா.. அவளுடன் வாழும் அந்த வாழ்க்கை.. அதுவரை அவன் வாழ்ந்த கோடிஸ்வர வாழ்க்கையை விட இனிப்பு நிறைந்ததாக இருந்தது..
சிலநேரம் அவன் மனதில் சந்தேகம் எழும்பும்.. அவளிடம் கேட்பான்..
"ஏன் ராதா.. நான் மனசு கஷ்டப்பட்டு இருக்கேன்னு தானே நீ என்மேல இரக்கப்பட்டு குடும்பம் நடத்தற..?"
"ஐய்யே..."
கலகலத்துச் சிரிப்பாள் அனுராதா.. அந்தச் சிரிப்பில் அவனுடைய சந்தேகம் பறந்து விடும்..
அவர்கள் மிக.. மிக.. சந்தோசமாக வாழ்ந்தார்கள்.. காரும்.. பங்களாவும் இல்லாமல் எப்படி அவர்களால் சந்தோசமாக இருக்க முடிகிறது என்று அஜித் கோபப் பட்டான்...
"உன் அத்தை எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க அனு.."
"அப்படியா..?"
"என்ன.. அப்படியான்னு ஒரே வார்த்தையில கேட்கிற..?"
"வேற எப்படிக் கேட்கச் சொல்ற..?"
"உன் ஹஸ்பெண்டுக்குத்தான் புத்தியில்லைன்னா.. உனக்குமா புத்தியில்லாம போச்சு அனு..? யாராவது வசதியான வாழ்க்கையை விட்டு விட்டு இப்படி வாடகை வீட்டில் அவதிப் படுவாங்களா..?"
"அண்ணா..."
அனுராதா தீர்க்கமாக தமையனைப் பார்த்தாள்.. அவள் முகத்தில் கோபத்தின் ஜ்வாலை வந்திருந்தது..
"எதைப் பேசினாலும் யோசித்துப் பேசு.. அவரைப் பேச நீ யார்..?"
"அனு.."
"உன் புத்திசாலித்தனத்தை உன்னோடு வைத்துக்க.. அவர் உன்னிடம் புத்தியைக் கடன் கொடுன்னு கேட்டாரா..? அது அவரோட சொத்து.. வேணும்ன்னு வைத்துக்கிறதுக்கும்.. வேண்டாம்ன்னு விலக்கி வைக்கிறதுக்கும் முழு உரிமை அவருக்கு இருக்கு.. காரும்.. பங்களாவும் வேண்டாம்ன்னு வெளியே வந்தவங்க வாடகை வீட்டிலேதான இருக்கோம்.. உன் வீட்டுக்கு வந்து நிற்கலையே.. அப்படி வந்தா.. அப்ப அவரை குறைசொல்லு.. கேள்வி கேளு.. இப்ப நீ பேசறதுக்கு எந்த உரிமையும் உனக்கு இல்லை..."
"அப்படியில்லை அனு.. நீ கோடிஸ்வர குடும்பத்தில் சந்தோசமா இருக்கிறன்ங்கிற நிம்மதியோட நானிருந்தேன்.. இப்ப அது போயிருச்சு.. அந்தக் கோபத்திலே பேசிட்டேன்.."
"சந்தோசம் பணத்தில இல்லை அண்ணா.. மனசில இருக்கு.. நான் எங்கே இருந்தாலும் அவர் நிழலிலதானே இருக்கேன்..? அது பங்களாவின் நிழலா இருந்தா என்ன..? வாடகை வீட்டின் நிழலா இருந்த என்ன..? எனக்கு இரண்டும் ஒன்றுதான்.."
அஜித் உதட்டைக் கடித்தபடி பேசாமல் நின்றான்.. தங்கையின் தலையைத் தடவிக் கொடுத்தவனின் குரல் கம்மியிருந்தது..
"நீ மாறிட்ட அனு.. அண்ணனையே எடுத்தெறிந்து பேசற.."
"நீ பேச வைக்கிற.. தங்கை ஹஸ்பெண்ட்ங்கிற பயம் உனக்கு இல்லாமப் போயிருச்சு.. பணமிருந்தாத்தான் நீ பயப்படுவியா..? அவர் சிங்கம் அண்ணா.. எங்கேயிருந்தாலும்.. சிங்கம்.. சிங்கம் தான்.."
"அடேங்கப்பா.."
அஜித் சிரித்து விட்டுப் போய்விட்டான்.. அனுராதா பதிலுக்குச் சிரிக்காமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உர்ரென்று இருந்தாள்.. அன்று மாலையில் வீடு திரும்பிய முரளிதரனின் முகத்தில் ஏதோ இருந்தது.. காதலுடன் அவளைப் பார்த்து கண்சிமிட்டியவன் அவள் எதிர்பாராத தருணத்தில்..
"கர்.. கர்.. கர்.." என்று சிங்கம் போலக் கர்ஜித்து அவளை அலற வைத்தான்..
"ஹைய்யோ.." அவனைக் கட்டிக் கொண்டவளைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவன்..
"சிங்கம்டி.." என்று சிரித்தான்..
"அண்ணனைப் பார்த்தீங்களாக்கும்.."
"அவர்தான் என்னைப் பார்த்தார்.. ஏன் ராதா.. எனக்காக உன் அண்ணன்கிட்டயே சண்டை போட்டயா..?"
"பின்னே..? அது மட்டும் அப்படிப் பேசலாமா..?"
மனத்தாங்கலுடன் சொன்னவளின் கன்னத்தைத் தட்டியவனின் முகத்தில் சிந்தனை படர்ந்தது..
"என்ன யோசனை..?" என்று கேட்ட அனுராதாவிடம்
"ஒன்றுமில்லை.." என்று சொல்லி விட்டான்..
அந்தவார இறுதியில் அனுராதா மயக்கம் வருவதாகச் சொன்னாள்.. பதறிப் போன முரளிதரன் அவர்களுடைய குடும்ப டாக்டரிடம் அழைத்துக் கொண்டு போனான்..
"என்ன முரளி.. அப்பாவை அலற விடறயாமே.." என்று கேட்டபடி அனுராதாவை பரிசோதித்தாள் டாக்டர் கமலா..
"அப்படியெல்லாம் இல்லை ஆண்ட்டி.." என்றான் முரளிதரன்..
"அப்படித்தான்னு உன் அம்மா சொல்கிறாங்களே.." புன்னகையுடன் அனுராதாவை உட்காரவைத்தவள்..
"உன் அம்மாவிடம் சொல்லு.." என்றாள்..
"எதை ஆண்ட்டி..?" முரளிதரன் திருதிருத்தான்..
"நீ அப்பாவாகப் போகிறேங்கிறதை.." கமலா சிரித்தாள்..
முரளிதரனின் கண்கள் மின்னின.. மனைவியை பூவைப் போல பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வந்தான்.. அவள் மறுக்க.. மறுக்கக் கேட்காமல் அவளுக்கு தோசை வார்த்துக் கொடுத்து சாப்பிட வைத்தான்..
"பத்திரம்.. ராதா.."
அலுவலகம் செல்லும் போது பலமுறை எச்சரித்து விட்டுப் போனான்.. தனியாக இருக்கிறாளே என்ற தவிப்புடன் மாலையில் வேலை முடிந்ததும் ஓடி வந்த போது வீட்டில் அவன் குடும்பமே இருந்தது..
மைத்ரேயி அனுராதாவுக்காக ஜீஸ் பிழிந்து கொண்டிருந்தாள்.. தேவகி.. புளிப்புக் குழம்பு செய்து கொண்டிருந்தாள்.. கங்காதரன் ஹாலின் குறுக்களவை நடந்து அளந்து கொண்டிருந்தார்..
அவன் உள்ளே நுழைந்ததும்.. அவன் மேல் பாய்ந்தார்..
"நம்ம குடும்ப வாரிசு வளருது.. நீ என்னடான்னா பிடிவாதத்தை கையில பிடிச்சுக்கிட்டு அதைச் சுமக்கிற என் மருமகளை தனியா இருக்க வைச்சிக்கிட்டு இருக்கிற.. அப்படியென்னடா செய்துட்டேன்..? என் மகனைக் கண்டிக்கிறோம்ங்கிற நினைப்பில அக்கம் பக்கம் யாரு நிக்கிறான்னு பார்க்காம விட்டுட்டேன்.. அதுக்காக இன்னமும் நீ என்னைத் தண்டிப்பியாடா முரளி..? மன்னிக்க மாட்டியா..?"
"டாடி..."
முரளிதரன் கங்காதரனின் தோள் சாய்ந்தான்.. தந்தையும் மகனும் கட்டித் தழுவிக் கொண்டதில் குடும்பமே அவர்களுடன் கண்ணீர் விட்டது.. முரளிதரனும் அனுராதாவும் குடும்பத்திற்குள் திரும்பி விட்டார்கள்..
"எனக்காகத்தானே மாமாவுடன் சமாதானமாப் போனிங்க..?"
அனுராதா கேட்டபோது முரளிதரனால் அதை மறுக்க முடியவில்லை...
'கண்டு பிடித்து விட்டாளே..' என்று தோன்றிய போதும் எதுவும் சொல்லாமல் சிரித்து மழுப்பி விட்டான்..
"நான் கொடுத்து வைத்தவ அத்தான்.. இந்த ராதைக்காக எதையும் விட்டுக் கொடுக்கிற முரளிதரன் கிடைச்சிருக்காரே..."
கண்கள் பனிக்க அவள் கணவனின் மார்பில் சாய்ந்தாள்.. சவால் விட்டபடி அந்த ராதையின் நெஞ்சத்தை தன் சொந்தமாக்கிக் கொண்ட நிறைவுடன் அவளை அணைத்துக் கொண்டான் முரளிதரன்.. அவளது காதலில் அவன் மனம் கனிந்தது..
மீண்டும் கம்பெனியின் எம்.டி பொறுப்பை ஏற்றுக் கொண்டான் முரளிதரன்.. அவன் கண்ணில் படாமல் லீவில் ஓடி விட்ட ஸ்ரீதர் ஓர் அளவுக்கு மேல் லீவ் எடுக்க முடியாமல் கம்பெனிக்கு திரும்பிவந்தான்.. அவன் வந்தவுடனே அவனுக்கான முரளிதரனின் அழைப்பு காத்திருந்தது..
"சார்.. உங்களை எம்.டி வரச்சொன்னார்.."
'செத்தேன்...'
ஸ்ரீதருக்கு அன்று வாங்கிய அடி நினைவுக்கு வந்து குலைநடுங்கியது.. நடுக்கத்துடன் முரளிதரனின் கேபினுக்குள் போனான்.. சுழல் நாற்காலியில் சுழன்றபடி திரும்பிய முரளிதரன் எதுவும் பேசாமல் ஸ்ரீதரையே துளைக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.. ஸ்ரீதரால் அந்த பார்வைக் கணையைத் தாங்க முடியவில்லை.. கைவிரல்கள் நடுநடுங்க..
"சார்.. என்னை மன்னிச்சிருங்க.." என்றான்..
"அட.. உனக்கு மன்னிப்புக் கூடக் கேட்கத் தெரியுமா ஸ்ரீதர்.. என்ன வேணும்னாலும் செய்துட்டு.. அதற்கொரு நியாயத்தைச் சொல்லுவியே.. இன்னைக்கு என்ன ஆச்சு..? எந்த நியாயமும் உனக்கு மாட்டலையா..?" கேலிக் குரலில் கேட்டான் முரளிதரன்..
"இல்லை சார்.." ஸ்ரீதர் எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக முணுமுணுத்தது வைத்தான்..
"இந்தா.."
முரளிதரன் ஒரு காகிதக் கவரை நீட்ட.. ஸ்ரீதருக்கு மயக்கம் வருவதைப் போல இருந்தது.. நிச்சயமாக அந்தக் கவரில் அவனுடைய வேலை நீக்க உத்தரவுதான் இருக்குமென்று அவன் நினைத்தான்..
'இவ்வளவுக்குப் பின்னாலும் என்னை இங்கே வேலைக்கு வைச்சிருக்க மாட்டாங்கதான்..'
உதட்டைக் கடித்தபடி பிரித்த ஸ்ரீதர்.. வியப்புடன் முரளிதரனை நிமிர்ந்து பார்த்தான்.. முரளிதரனோ சிநேகிதமில்லாத பார்வை பார்த்தான்..
"கிரி குருப் ஆஃப் கம்பெனிஸில் உனக்கு பெர்சனல் மேனேஜர் போஸ்ட் கொடுத்திருக்காங்க.. போ.. போய் புதுக்கம்பெனியில ஜாயின் பண்ணு.."
"சார்.."
"எப்படின்னு தான் உனக்குத் தெரியுமே.. கிரிதான் என் பெஸ்ட் பிரண்ட்.. நான் கேட்டதுக்காக உனக்கு வேலை கொடுத்திருக்கான்.."
"தேங்க் யு சார்.." ஸ்ரீதரின் குரலில் விடுதலையுணர்வு இருந்தது..
'இனி தினமும் இந்தக் கம்பெனிக்கு வந்து போக வேணாம்..'
முள்ளின் மேல் நிற்க வேண்டிய தேவை அகன்ற நிம்மதி அவனுக்கு..
"ரொம்பத்தான் உருகாதே.." கடினமான குரலில் சொன்னான் முரளிதரன்..
"சார்..?"
"நீ பேசின பேச்சுக்கும்.. செஞ்சு வைச்ச வேலைக்கும் உன்னை வெட்டி பொலி போட்டிருக்கனும்.. ஆனா.. ஒரு காலத்தில நீ என்கிட்ட இருந்த விசுவாசத்துக்கும்.. உன் வேலைத் திறமைக்கும்.. உன்னை எதுவும் செய்யத் தோணல.. இந்தக் கம்பெனிக்காக உழைச்சிருக்கே.. அந்த ஒண்ணுக்காக உன்னை சும்மா விடறேன்.. ஓடிப் போயிரு.."
"சார்.."
"உன் மூஞ்சியிலே முழிக்க இனி என்னாலயும் முடியாது.. என்கிட்ட உன் மூஞ்சியைக் காட்ட உன்னாலேயும் முடியாது.. இந்த அவதி எதுக்கு..? நீ என் கிட்ட வேலையும் பாக்கக் கூடாது.. அதே சமயம் உன் வேலையும் போகக் கூடாதுன்னு நினைச்சேன்.. இந்த வழிதான் தோணுச்சு.. கிரியிடம் ஆள் குறைப்புன்னேன்.. அவனுக்கும் பெர்சனல் மேனேஜர்ன்னு ஒருத்தன் தேவையா இருந்தது ஓகே சொல்லிட்டான்.."
ஸ்ரீதர் போய் விட்டான்.. முரளிதரன் புதிதாக நியமனம் ஆகியிருந்த வையாபுரியை அழைத்து வேலையைப் பற்றி விசாரித்தான்.. அவனுடைய பதில்கள் ஸ்ரீதரைத் தூக்கிச் சாப்பிட்டதில் திருப்தியானவனாக வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்..
அனுராதாவின் வளைகாப்பை வெகு விமரிசையாக நடத்தி வைத்தான் அஜித்.. அண்ணியென்ற உரிமையுடன் பிரதிபா அவள் கையில் வைர வளையல்களைப் போட்டு விட்டாள்..
"அண்ணனும் தங்கச்சியும் நம்ம வீட்டில இருந்தப்ப ஒரு பவுன் தங்கத்துக்கு ஏங்கிக்கிடந்தாங்க.. இப்பப் பாருங்க.. தங்கைக்கு வளைகாப்பு சீரா அண்ணன் வைர வளையலைப் போட்டு விடறான்.." வயிறெரிந்தாள் பிரேமா..
"என் புள்ளைக மனசு ரெண்டும் தங்கம்டி.. குணத்தில அதுக வைரம்டி.. வைத்துகிட்ட தானே வைரம் சேரும்..?" சிவராமன் கேள்வி கேட்டார்..
அனுராதாவை தலைப்பிரவசத்திற்காக தன் வீட்டுக்கு வருமாறு அஜித் அழைக்க.. சிவராமன் மறுத்து விட்டார்..
"பெத்தவன் நானிருக்கேன்.. நீ உன் தங்கைக்கு சீர் செய்யு.. வேணாம்ங்கலை.. முறை செய்யறது நானாத்தான் இருப்பேன்.."
இந்த உரிமைக்குரலை அவர் பிரேமாவின் முன்னால் கொடுத்து வைத்ததில் அஜித் ஆச்சரியமாகிப் போனான்..
"ஏங்க.. அனு வசதியா இருந்து பழக்கப் பட்டிருப்பா.. நம்ம வீட்டில எப்படியிருப்பா..? அதான் அஜித் அழைச்சுக் கிட்டுப் போறேன்னு சொல்றானில்ல.. விட வேண்டியது தானே.. இதில அப்பா வேற.. அண்ணன் வேறயா..? ரெண்டு பேருக்கும் ஒரே கடமைதான்..?"
நியாயம் பிளக்க வந்த பிரேமாவை..
"வாயை மூடு.." என்ற ஒரேயொரு கர்ஜனையில் அடக்கினார் சிவராமன்..
'அப்பாவா இது..?'
அஜித்தும்.. அனுராதாவும் இமைகொட்டி விழித்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்..
"அது என் மூத்த பெண்டாட்டி அவந்திகாவோட வீடுடி.. அதுதான் என் பெண்ணுக்கு பிறந்த வீடு.. ஏதாவது பேசின.. உன் பிறந்தவீட்டுக்கு பெட்டியைக் கட்டி அனுப்பிருவேன்.."
வீராதி வீரரான சிவராமன்.. அனுராதாவை தன் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டார்.. அழகான இளர்வேனிகால விடியலின் போது.. முரளிதரனின் மகன் பிறந்தான்.. கங்காதரனின் வீடு விழாக் கோலம் பூண்டது..
'சசிதரன்' என்று குழந்தைக்கும் பெயர் வைத்தார்கள்.. உலகம் சுற்றும் வாலிபனாக இருந்த முரளிதரன் குடும்பமே கோவிலாக மாறிப் போனான்..
அவனை அப்படி மாற்றிய ராதையின் நெஞ்சம் அவனுக்குச் சொந்தமான மஞ்சமாக அவனைத் தாலாட்டியது..


- முற்றும் -










Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,17,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,92,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே.. -24
ராதையின் நெஞ்சமே.. -24
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-24.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-24.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy