ராதையின் நெஞ்சமே..17

17 கங்காதரனுக்கு உலக மகா அதிசயத்தைப் பார்ப்பதைப் போல இருந்தது.. அவர் மகன் முரளிதரனா இந்தவார்த்தைகளைச் சொல்கிறான்..? அவரால் நம்பவே முடியவ...

17

கங்காதரனுக்கு உலக மகா அதிசயத்தைப் பார்ப்பதைப் போல இருந்தது.. அவர் மகன் முரளிதரனா இந்தவார்த்தைகளைச் சொல்கிறான்..?
அவரால் நம்பவே முடியவில்லை..
"என்னடா சொல்ற..?" ஆச்சரியத்துடன் கேட்டார்..
"யெஸ் டாட்.. ஐ ஆம் இன் லவ்.." என்றான் அவன்..
"நீ.. காதலிக்கிறயா..?"
அவரின் வியப்பில் முரளிதரனுக்கு கோபம் வந்து விட்டது.. அது என்ன.. யார் வாயைத் திறந்தாலும் இந்த வார்த்தைகளையே கேட்டு வைக்கிறார்கள்.. அவனுக்கும் காதலுக்கும் காத தூரம் என்று இந்த உலகம் முடிவே கட்டி விட்டதா..?
"ஏன்..? நான் காதலிக்கக் கூடாதா..? எனக்குக் காதல் வராதா..?"
அவனின் அந்தக் கோபத்தில் வியப்பைக் குறைத்துக் கொண்ட கங்காதரன்..
"யாரைக் காதலிக்கிற..?" என்று யோசனையாகக் கேட்டார்..
"குலம்.. கோத்திரத்தைச் சொன்னால்தான் பெண் கேட்க வருவீங்களா..?" அதற்குள் சுள்ளென்று பேசினான் முரளிதரன்..
தேவகிதான் கண் சமிக்ஞையில் கணவரை அடக்கித் தனியாகக் கூப்பிட்டுக் கொண்டு போய் புத்திமதிகளைச் சொன்னாள்..
"ஏங்க.. இவன் கூடப் படிச்சவனெல்லாம் குழந்தை.. குட்டின்னு இருக்கிறாங்க.. இவன் மட்டும் நேற்றுத்தான் பிறந்தவனைப் போல கல்யாணத்தைப் பத்தின நினைப்பில்லாம நிற்கிறானேன்னு நான் கவலைப்பட்டுக் கிட்டு இருக்கேன்.. நீங்க என்னடான்னா அவனைக் கேள்வி மேலே கேள்வியைக் கேட்டு.. பிரம்மச்சாரியாவே இருக்க வைச்சிருவீங்க போல.."
"பிரம்மச்சாரியா..? நம்ம முரளியா..?"
கங்காதரனின் பலத்த சிரிப்பிற்கான காரணம் எதுவாக இருக்கக்கூடும் என்று தேவகிக்கு விளங்கவில்லை..
"என்னங்க..?" என்று அப்பாவியாகக் கேட்டாள்..
"ஒன்னுமில்லை.." கங்காதரன் சமாளித்து விட்டார்..
"அவன் சொல்கிற பெண்ணைப் போய் பார்த்துட்டுத் தான் வருவோமே.." தேவகி கெஞ்சினாள்...
"முதல்ல யார்.. என்னன்னு விசாரிப்போம்.."
கங்காதரன் கறாராகவே பதில் சொன்னார்... முரளிதரனைச் சுற்றி வளைத்திருந்த பிடாரிகளில் எந்தப் பிடாரி அவனைப் பிடித்திருக்கிறதோ என்ற கவலை அவருக்கு...
"ம்ப்ச்சு.. இவ வேற டாடி.." என்று முகம் சுளித்தான் முரளிதரன்..
"வேறன்னா..?" கங்காதரன் விடவில்லை.. தூண்டித் துருவினார்..
"வேறன்னா.. வேறதான்.. நம்ம ஆடிட்டர் ரங்கநாதன் இருக்காரில்ல.."
"ஆமாம்.. அவருக்கென்ன..?"
"அவரோட பெண்ணுக்கு மேரேஜ் ஆச்சில்ல.."
"லாஸ்ட் வீக்தான் நடந்தது.. அதுக்கும் என்னடா..?"
"அவர் பெண் கொடுத்திருக்கிற மாப்பிள்ளையோட தங்கையைத்தான் நான் காதலிக்கிறேன்.."
"அப்படியா..? ரங்கநாதனின் சம்பந்தி மகளா அந்தப் பொண்ணு..?"
கங்காதரனுக்கு திருப்தியாக இருந்தது.. அப்படி யொன்றும் அறியாத இடத்தில் மகன் காதலித்து விடவில்லையென்ற நிம்மதிப் பெருமூச்சை விட்டார்..
அவர் அப்படி நிம்மதிப் பெருமூச்சை விட வேண்டும் என்பதற்காகத்தானே முரளிதரன் வேலைமெனக்கெட்டு.. ரங்கநாதனுக்கு அஜித்தை அடையாம் காட்டினான்..?
அனுராதா யாரென்று அவனைப் பெற்றவர்கள் கேள்வி கேட்கும்போது மிகச் சுலபமாக.. அவள் ரங்கநாதனின் மருமகனுடைய தங்கை என்று அடையாளம் காட்டி விடலாமே..
ஒருபக்கம் ரங்கநாதனிடம் அவனுக்கிருக்கும் செல்வாக்கைக் காட்டி திருமணத்தை நிறுத்தி விடுவதாக பயமுறுத்தி அனுராதாவின் சம்மதத்தையும் வாங்கி விடலாம்...
இன்னொரு பக்கம்.. அதே திருமணத்தைக் காட்டி.. ரங்கநாதனின் மருமகனின் தங்கையென்று அனுராதாவையும் அடையாளம் காட்டி விடலாம்..
முரளிதரன் ஒரே கல்லில் இரண்டு பழங்களை அடித்து வீழ்த்தி விட்டான்..
"பெண் வீட்டில் அவ்வளவா வசதி இருக்காதும்மா.."
"போகுது விடு.. உன் வொய்ப் கெண்டு வந்துதான் நாம முன்னேறனுமா என்ன..? நல்ல குடும்பமா இருக்கனும்.. எனக்கு அதுதான் வேணும்.."
"ரங்கநாதன் அங்கே பெண் கொடுத்திருக்கார் தேவகி.."
"மாப்பிள்ளை எடுத்திருக்கார்ன்னு சொல்லுங்க.. அந்தப் பையன் வீட்டோட மாப்பிள்ளையாய் போய் விட்டாராமே.. நளினி சொன்னா.."
"அதைப் பத்தி நமக்கென்ன வந்தது..? அவனுக்கு இருக்கிறது ஒற்றைப் பொண்ணு.. இந்தப் பையனும் சி.ஏ படிச்சுக்கிட்டு இருக்கான்.. தொழிலுக்கும் அவன் சம்பாதிச்சு வைச்சிருக்கிற சொத்துக்கும் வாரிசா இந்தப் பையனை அவன் கூடவே வைச்சுக்கனும்னு ரங்கநாதன் நினைக்கிறான்.. அவன் நினைக்கறதில தப்பில்லையே..."
"அதுவும் சரிதான்.."
கங்காதரனும் தேவகியும் அனுராதாவைப் பெண் பார்க்கப் போகக் கிளம்பத் தயாராகி விட்டார்கள்.. செய்தியைக் கேள்விப் பட்ட மைத்ரேயி..
"நீ காதலிக்கிறயாண்ணா..?" என்று அவள் பங்குக்கு ஆச்சரியப்பட்டு அவனை உசுப்பேற்றி வைத்தாள்..
'என்னங்கடா இது.. யார் வாயைத் திறந்தாலும் நீயெல்லாம் காதலிக்கிறயான்னு கேட்டு ஒருவழி பண்றாங்க..' முரளிதரனுக்கு வெறுத்துப் போய் விட்டது..
எதைவைத்து அவன் காதலிக்க மாட்டான் என்று மற்றவர்கள் முடிவு பண்ணினார்கள் என்று அவனுக்குப் பிடிபடவில்லை..
சிவராமனுக்கு செய்தி போன போது அவருக்கு தலைகால் புரியவில்லை..
"கேட்டியாடி பிரேமா.. நம்ம அனுராதாவை கோடிஸ்வரக் குடும்பத்திலிருந்து பெண் கேட்கிறாங்கடி.." என்று ஆனந்தக் கூச்சலிட்டார்..
"என்ன..?"
பிரேமாவுக்கு மாரடைப்பே வந்து விட்டது..
அது எப்படி அவளின் சக கிழத்தியின் பிள்ளைகளுக்கு கோடிஸ்வரக் குடும்பங்களில் இருந்து சம்பந்தம் தேடி வந்து அமைகின்றது..?
'அவ வசியம்.. கிசியம் வைச்சிருப்பாளோ..'
இறந்து போன மூத்த தாரத்தைப் பற்றிய சந்தேகம் அவள் நெஞ்சில் விதை விட்டது..
உயிருடன் இல்லாத ஜீவன் எங்கேயிருந்து வசியம் வைக்கும் என்ற நினைவெல்லாம் அவளுக்கு வரவில்லை..
"நானும்தான் உங்களுக்கு வடிச்சுக் கொட்டிக் குடும்பம் நடத்தறேன்.. எனக்கொரு வழி பிறந்திருக்கா..?"
அவள் சிவராமனிடம் சண்டைக்குப் போனாள்.. அவரோ..
"இப்ப என்னாங்கிற..? கோடிஸ்வரக் குடும்பத்தில இருந்து உன்னைப் பெண் கேட்டு வரனும்கிறயா..?" என்று கேட்டு வைத்தார்..
"அந்த விதிதான் இல்லாமப் போச்சே.. ஆசையிருக்கு தாசில் பண்ண.. அதிர்ஷ்டம் இருக்கு.. கழுதை மேய்க்கங்கிற பிழைப்பா இல்ல.. என் பிழைப்பு ஆகிப் போச்சு.."
பிரேமா விட்ட பெருமூச்சின் அனலில் பக்கத்தில் மட்டும் பச்சை வாழைமரம் இருந்திருந்தால் அது பற்றி எரிந்திருக்கும்..
"அதுக்கு இப்ப என்னதான் செய்யலாம்ங்கிற..?" சிவராமனும் பொறுமையாக வழி கேட்டார்..
"நக்கல்..? ம்ஹீம்.. உங்களுக்கென்ன.. உங்க மகனுக்கும் மகளுக்கும் கோடிஸ்வரக் குடும்பத்தில பிழைப்புக் கிடைச்சிருச்சுங்கிற பகுமானத்தில இருக்கீங்க.. எனக்குத்தானே என் பெண்களுக்கும் இப்படி அமையுமான்னு வருத்தம் பொங்குது.."
"ஏண்டி.. இப்பத்தான் சிவரஞ்சனிக்கு பனிரெண்டு வயசாகுது.. கலா ரஞ்சனிக்கோ பத்து வயசு.. அதுக்குள்ளே இதுகளுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சுட்டியா..?"
"இப்ப இருந்து ஆரம்பிச்சாலும் இதுக கல்யாண வயசுக்கு வர்றதுக்குள்ள உங்க மகனுக்கும்.. மகளுக்கும் அமைஞ்சதைப் போல கோடிஸ்வரக் குடும்பத்தில் மாப்பிள்ளை கிடைக்கனுமே.."
"பிரேமா.. பணத்தில என்னடி இருக்கு..?"
"இப்ப எதுக்கு இந்தக் கேள்வி வருது..?"
"மனசிலதாண்டி எல்லாம் இருக்கு.."
"பொன்மொழி..! இத அப்படியே போயி உங்க மகன்கிட்டயும்.. மககிட்டயும் சொல்லி..."
"சொல்லி...?"
"அத்தன சொத்தயும் உங்க பேருக்கு எழுதி வாங்கிட்டு வந்திருங்களேன்.."
"முடியாதுன்னா நினைக்கிற..? என் பிள்ளைக தங்கங்கடி.. நான் கேட்டதும் எழுதிக் கொடுத்திருவாங்க.. ஆனா.. அவங்க கையில என்னடி இருக்கு..? அவங்களக் கட்டிக்கிட்டவங்க கையிலதான அத்தனையும் இருக்கு..? ஊரான் வீட்டுச் சொத்தை அப்பாவுக்கு எழுதி வைக்க அவங்களால முடியுமாடி..?"
"அதான பார்த்தேன்.. நான் கேட்டதும் அதுக்கென்னனு சொன்னது இதுக்குத்தானா..? கெட்டிக்கார ஆளுகதான்.. ம்ஹீம்.. எடுத்து வைச்சாலும் கொடுத்து வைச்சிருக்கனும்.."
அவள் எதை எடுத்து வைத்தாள்.. எதைக் கொடுத்து வைத்தாள் என்பது போன்ற விவரங்களை சிவராமன் கேட்கவில்லை.. அவளே இதுபோன்ற பொன்மொழிகளை அபூர்வமாகத்தான் உதிர்ப்பாள்.. அதையும் கெடுத்துக் கொள்வானேன் என்ற எண்ணம் அவருக்கு..
மகளைப் பெண் கேட்டு பெரிய இடத்து மனிதர்கள் வரும் போது பிரேமா இணக்கமாக நடந்து கொள்ள வேண்டுமே என்ற அவரது கவலையைத் தரைமட்டமாக்கி.. முரளிதரனின் குடும்பத்தை வாயெல்லாம் பல்லாக வாசலுக்கே போய் வரவேற்றாள் பிரேமா..
"வாங்க.. வாங்க.." என்று அவள் கைகுவித்து வரவேற்ற வரவேற்பில் அவள் அனுராதாவுக்கு சிற்றன்னiயா.. இல்லை பெற்ற அன்னையா என்ற சந்தேகம் தேவகிக்கு வந்து விட்டது..
"ஏண்டா முரளி.. பெண்ணுக்கு அம்மா இல்லைன்னு தான சொன்ன..?" அவள் மகனின் காதைக் கடித்தாள்..
"ஆமாம்மா.. இவங்க அவ அப்போவோட செகண்ட் வொய்ப்.."
"பாத்தா அப்படித் தெரியலையே.."
முரளிதரனுக்கும் அதுதான் வியப்பாக இருந்தது.. அனுராதாவின் குடும்பத்தைப் பற்றி அவன் விசாரித்த போது.. அவளின் சித்திசெய்யும் கொடுமைகளைப் பற்றிக் கதைகதையாக கேள்விப் பட்டிருந்தான்..
'அந்தச் சித்தியா.. இந்தச் சித்தி..?..!'
அனுராதாவுக்கு அதுபோன்ற ஆச்சரியங்கள் எல்லாம் ஏற்படவே இல்லை.. பணக்கார வீட்டுக்கு வாழப் போகிறவள் மூத்ததாரத்தின் மகளாகவே இருந்தாலும்.. அதை மறைத்து உறவு கொண்டாடி ஒட்டிக் கொள்வதில் பிரேமாவிற்கு இருக்கும் நிபுணத்துவத்தை அறிந்தவள் அவள்.. அதனால் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்..
அமைதியாக.. குத்துவிளக்கின் சுடர் போன்ற அழகுடன் இருந்த அனுராதாவை கங்காதரன் உட்பட.. முரளிதரனின் குடும்பத்திலிருந்த அனைவருக்கும் பிடித்து விட்டது.. கங்காதரன் மட்டும்..
"ஏண்டா முரளி.. நீ இந்தப் பெண்ணைக் காதலிக்கிற.. ஓகே.. ஆனா.. இந்தப் பெண் உன்னைக் காதலிக்குதா..?" என்று சந்தேகம் கேட்டார்..
அது எப்படித்தான்.. உண்மைகளை கங்காதரன் ஒரு பார்வையில் கண்டு பிடித்து விடுகிறாரோ என்று இருந்தது முரளிதரனுக்கு..
எது எப்படியோ.. முரளிதரனுக்கும்.. அனுராதாவுக்குமான திருமணம் அடுத்த சில தினங்களில் இனிதாக நடந்து முடிந்தது..
"உனக்காக பிரதிபா.. சுவிட்சர்லாந்துக்கு ஹனிமூன் போகிறடிரிப்பையே தள்ளிப் போட்டுட்டா.." பெருமையாகச் சொன்னான் அஜித்..
அவள் எனக்காகத் தள்ளிப் போடவில்லை.. முரளிதரனின் மனைவியாகப் போகிறவளுக்காக தள்ளிப் போட்டிருக்கிறாள் என்று சொல்ல நினைத்ததை சொல்லாமல் லேசாக சிரித்து வைத்தாள் அனுராதா..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே..17
ராதையின் நெஞ்சமே..17
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-17.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-17.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy