ராதையின் நெஞ்சமே. -13

13 திருமண மேடையில் மணக் கோலத்தில் அஜித் அமர்ந்திருந்தான்.. பட்டு வேட்டி.. பட்டுச் சட்டைபால் தெரிந்த அவனது கம்பீரமான அழகை மனமார ரசித்தாள் ...

13

திருமண மேடையில் மணக் கோலத்தில் அஜித் அமர்ந்திருந்தான்.. பட்டு வேட்டி.. பட்டுச் சட்டைபால் தெரிந்த அவனது கம்பீரமான அழகை மனமார ரசித்தாள் அனுராதா.. இத்தனை அழகை அவளது அண்ணன் இத்தனை நாள்களாய் எங்கே ஒளித்து வைத்திருந்தான்..?
அவன் பேசும் போதும்.. சிரிக்கும் போதும் தெறித்து விழுந்த உற்சாகத்தில் அவள் மனம் நிறைந்தது.. நிச்சய தார்த்தத்தின் போதே மாப்பிள்ளையின் கையில் தங்கச் செயினும்.. வைர முள்களும் கொண்ட விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கட்டி விட்டார் ரங்கநாதன்..
அதில் விழுந்தவள்தான் பிரேமா.. எழுந்து கொள்ளவே இல்லை.. திடிரென்று அவள் அஜித்துக்கு யசோதையானாள்..
"பெத்தது என் அக்காவா இருந்தாலும்.. வளர்த்தது நான்தாங்க.. எங்க அஜித் இந்த யசோதை வளர்த்த கிருஷ்ணன்...!"
வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவள் திடிர் பிலிம் காட்டியதில் நளினி உருகிப் போனாள்.. அஜித்தோ கொலை வெறியாகிப் போனான்.. அனுராதா மட்டும் அவன் தோளைப் பிடித்து பொறுமையாக இருக்கும்படி சமிக்ஞை செய்திராவிட்டால் பொங்கி எழுந்திருப்பான்.. பிரேமாவின் கதை கந்தலாகியிருக்கும்..
"கண்டுக்காதே.. கல்யாணத்துக்குப் பின்னாலே இவங்க யாரோ.. நீ யாரோ.."
"இந்தம்மா அப்படியா பேசுது..? அதுக்குப் பின்னாலே அங்கே வந்து ஒட்டிக்கல்ல பிளான் போடுது.."
"நீ விட்டிருவியா..? உண்மையை ஒளித்து வைக்கனும்கிற அவசியமில்லை.. இப்ப எதையும் பேச வேணாம்ன்னுதான் நான் சொன்னேன்.. கல்யாணத்துக்குப் பின்னாலே அண்ணிகிட்ட எதையும் சொல்ல வேணாம்ன்னு நான் சொல்லலையே.. உன் மாமனார்.. மாமியாரிடம் இவங்க குணத்தை மறைன்னு சொல்லலையே... அப்பச் சொல்லிரு.. அதுக்கப்புறம் இவங்களை எங்கே வைக்கனும்ங்கிறதை அவங்க முடிவு பண்ணிக்குவாங்க.. இவங்களைப் போல எத்தனை பேரை அவங்க பார்த்திருப்பாங்க..?"
அண்ணனை தங்கை அமைதிப் படுத்திக் கொண்டிருக்க.. அங்கே நளினியோ பிரேமாவிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தாள்..
"அப்படியா..? நீங்க எங்க மாப்பிள்ளையோட அம்மாவுக்கு கூடப் பிறந்த தங்கைங்களா..?"
"கூடப் பிறந்தாத்தாத்தான் தங்கையாங்க சம்பந்தி.." என்று அவள் வசனம் பேசிக் கொண்டிருந்தபோதே..
"பாரேன்.. அடுத்ததா பெற்றால்தான் பிள்ளையான்னு இந்தம்மா கேட்டு வைக்கப் போகுது.." அஜித் கொதித்தான்..
அவன் சொல்லி வாய் மூடவில்லை.. பிரேமா...
"பெற்றால்தான் பிள்ளையா சம்பந்தி.." என்று விம்மி வைத்தாள்..
"நான் சொல்லலை.." அஜித் பற்களை நறநறத்தான்..
"பொறுமை.. பொறுமை.."
அனுராதா படாதபாடுபட்டு... போகா... தியான மெல்லாம் சொல்லிக் கொடுத்து அஜித்தை ஒரு நிலைக்கு கொண்டு வந்தாள்..
அதற்குப் பின்னால் அஜித்தின் திருமணம் பிரேமாவின் வீட்டுத் திருமணமாக மாறிப் போனது.. மாப்பிள்ளை வீட்டாருக்கு என்ன கலரில் துணிவகைகள் வேண்டுமென்று ஒரு மரியாதைக்கு நளினி கேட்டபோது வெட்கமில்லாமல் பிடித்த வண்ணங்களைச் சொல்லி.. அவளுக்கும்.. அவள் பெற்ற பெண்களுக்கும் பட்டு வகையறாக்களை வாங்கிக் கொண்டாள்..
மௌனப் புன்முறுவலுடன் இருந்த அனுராதாவிடம் வந்த பிரதிபா..
"இது உன் வருங்கால அண்ணி கொடுக்கிற நிகழ்காலப் பரிசு..." என்று உயர்ந்த ரகப் பட்டுச் சேலையையும் நகைப் பெட்டியையும் கொடுத்து விட்டுப் போனாள்..
அனுராதா மறுக்க முயன்றபோது அஜித் அதட்டி விட்டான்..
"அவளும் நானும்தான் ஷாப்பிங் போனோம்.. உனக்கு நகை வாங்கிக் கொடுக்கனும்னு அவ ஆசைப்பட்டா.. உன் சாய்ஸ்தான் சரி அனு.. நான் நினைத்ததை விட பிரதிபா பொறுப்பான அண்ணியா இருக்கா.. எனக்கு பரிசு கொடுக்கனும்னு அவ நினைக்கலை.. உனக்குப் பரிசு கொடுக்கனும்னு நினைச்சு.. அதையும் செலக்ட் பண்ண என்னைத் துணைக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போனா பாரு.. அங்கேதான் அவ நிக்கிறா..."
பிரதிபா எங்கே நிற்கிறாள் என்பது அனுராதாவிற்கும் தெள்ளத் தெளிவாக புரிந்தது.. கணவனின் மனதை அடைய அவன் புசிக்கும் உணவின் ருசியை அறிந்து சமைத்துப் போடவேண்டும் என்பது சாமானியர்கள் வகுத்த கோட்பாடு..
பிரதிபா கெட்டிக்காரி.. அஜித்தை உணவாலோ.. உடையாலோ.. பணத்தாலோ வசப்படுத்தி விட முடியாது என்பதை நன்கு அறிந்தவள்... அஜித்தின் மனதில் அனுராதாவை விட்டுப் பிரியும் குற்ற உணர்வு இருக்கிறது அனுராதாவைப் பிரிந்து பிரதிபாவை அவன் மணந்து கொண்டால் அனுராதாவுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை அஜித்திற்கு உணரவைக்க வேண்டும் அதற்கான முதல் முயற்சிதான் அந்தப் பரிசு..
மற்றபடி பிரதிபா அனுராதாவுடன் அதிகமாக நின்று பேசியதில்லை.. அவள் கண்கள் அஜித்தை மட்டும்தான் தேடும்..
இதையெல்லாம் அனுராதாவால் தமையனிடம் சொல்ல முடியுமா..?
"தேங்க்ஸ் அண்ணா..."
"இதை உன் அண்ணியிடம் சொல்லு.."
'அதற்குள் அவள் என் அண்ணியாகி விட்டாளா..?' என்று நினைத்த போதும் அதற்கென்ன என்ற புன்முறுவலைத்தான் பூத்தாள் அனுராதா..
திருமண நாள் நெருங்க.. நெருங்க.. அஜித் வீட்டிலிருக்கும் நேரம் குறைந்து கொண்டே வந்தது.. இரவு ஒருமணி.. இரண்டுமணி என வருபவன் சிலதினங்களில் வராமலே இருந்து விடுவான்..
"ஸாரி அனு.. பிரதிபாவோட அவுட்டிங் வந்தேனா.. நேரமாகிருச்சு.. இங்கேயே ஸ்டே பண்ணும்படியா ஆகிருச்சு.. அவ ரங்கநாதன் அங்கிளுக்கு போன் பண்ணித் தவகல் சொல்லிட்டா.. நீ வேண்டும்னா கீழே போய் படுத்துக்கயேன்.."
அஜித்தின் ஆலோசனை போனில் வரும் போது இதே அண்ணன்தான் கீழ்வீட்டில் காலடி கூட வைக்கக் கூடாது என்ற கண்டிசனைப் போட்டிருந்தான் என்ற ஞாபகம் அனுராதாவுக்குள் எழும்..
கசப்பான புன்னகையுடன்.. "அதற்கென்ன அண்ணா.." என்று வழக்கமான 'அதற்கென்ன' பல்லவியைப் பாடிவிட்டு.. மாடி ஹாலின் கதவை இறுக மூடி இரட்டைத் தாழ்ப்பாள் போட்டு விட்டு விளக்கை அணைக்காமல் விடியவிடிய எரிய விட்டு தூக்கம் வராமல் விழித்திருப்பாள் அனுராதா..
அதுநாள்வரை அவளைச் சூழாமல் விலகி இருந்த வெறுமையும்.. தனிமையும்.. அவளைச் சூழ்ந்து கொண்டன.. ரங்கநாதன் குடும்பத்தின் திட்டம் என்ன என்பது அவளுக்குப் புரியத்தான் செய்தது.. திடிரென்று திருமண நாளுக்குப் பின்னால் அஜித்தை வீட்டோடு நிறுத்தி வைப்பதற்குப் பதிலாக.. அதற்கு முன்னரே அவனுக்கு அதற்கான பயிற்சியைக் கொடுத்துத் தயார் படுத்தி வைத்துக் கொண்டிருந்தார்கள்..
பிரதிபா அவனை விட்டுப் பிரியாமல் அட்டை போல ஒட்டிக் கொண்டிருந்ததில் அஜித்திற்கு அவள் அவனின் மனைவி என்ற நினைவே மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.. மூன்று நேரமும் அவன் ரங்கநாதனின் வீட்டில் தான் சாப்பிட்டான்.. விடியும் தருவாயில் அவன் வீடு திரும்பியிருந்தாலும் மிகச் சரியாக ஆறுமணிக்கெல்லாம் பிரதிபாவிடமிருந்து அவனுக்கு போன் வந்து விடும்..
"அம்மா பிரேக்பாஸ்டுக்கு வந்திரச் சொன்னாங்க.."
"ஆனா தீபா.. நான் இப்பத்தானே வந்தேன்.."
"பேசவே கூடாது.. மூச்.. உங்க மாமியார் உங்களுக்குப் பிடிச்ச அயிட்டங்களாப் பண்ணப் போறாங்களாம்.. அவங்க மருமகன் சாப்பிட்ட பின்னாடி தான் மத்தவங்களுக்கு அதையெல்லாம் கண்ணிலேயே காட்டுவாங்களாம்.. கடைசியில் என் அம்மாவை உங்கம்மாவா மாற்றிக்கிட்டிங்கள்ல.."
இப்படிப் பேசியே அஜித்தை நெகிழ வைத்து விடுவாள் பிரதிபா.. அனுராதாவை விட்டு வெகு தூரத்திற்கு விலகிப் போய் விட்டான் அவள் அண்ணன்.. அவனின் வளமான எதிர்காலத்திற்காக அவனுடைய பாசத்தை விட்டுக் கொடுத்து விட்டாள் அந்த அன்புத் தங்கை...
திருமண நாளுக்கு முதல் நாளே.. அனுராதாவை அழைத்து ஏகப்பட்ட ஆலோசனைகளை அவன் சொல்லி விட்டான்..
"அனு.. இன்னைக்கு மண்டபத்தில் இருப்போம்.. நாளைக்கு கல்யாணம் முடிந்த கையோடு நான் சாலிகிராம வீட்டுக்குப் போய் விடுவேன்.."
ரங்கநாதனின் வீடு சாலிகிராமத்தில் இருந்தது.. அதை அவரின் வீடு என்று சொல்லாமல் சாலிகிராம வீடு என்று சொன்ன அஜித்தின் பேச்சில்.. அண்ணன் தேறிவிட்டான்.. என்ற மெச்சுதலான புன்னகை அனுராதாவிடம் வெளிப்பட்டது.. வருங்காலத்தில் அதை அவன் தனது வீடாகச் சொல்லலாம் என்ற நினைவில் அவள் சிரிப்பு விரிந்தது..
"ஓகேண்ணா.."
"அதுக்கப்புறமா சுவிட்சர்லாந்துக்கு ஹணிமூன் போக வேண்டியிருக்கு.. திரும்பி வர ஒரு மாதத்துக்கு மேலே ஆகலாம்.."
"ம்ம்ம்.."
"ஸோ.. இனிமேல் நான் இல்லாமல் வாழப் பழகிக்க.."
உன் திருமணம் முடிவான நாளில் இருந்து அப்படித்தானே இருக்கிறேன் என்ற வார்த்தை வாய் வரை வந்து அப்படியே நின்று விட்டது..
"என்னைப் பத்திக் கவலைப்படாதே.. எனக்கென்ன..? அப்பா இருக்கார்.."
அவனுக்குத் தேவையிருக்காது என்று தெரிந்திருந்த போதும் அவனுக்குத் தைரியம் கொடுக்கும் வகையில் அவன் உள்ளங்கையைப் பிடித்துத் தட்டிக் கொடுத்தாள் அனுராதா..
அஜித் பாசத்துடன் எதையோ சொல்ல வாயெடுத்தான்.. அதற்குள் செல்போன் ஒலித்து விட்டது.. எடுத்துப் பார்த்தவன்..
"யெஸ் தீபா.. கிளம்பிக்கிட்டே இருக்கோம்.. ஈவினிங் ரிசப்சன் கோட்டா..? அதை நீதானே வைத்திருந்த..?" என்று பேசியபடி அகன்று விட்டான்..
ஒரு பெருமூச்சுடன் அவளுடைய மாற்றுடைகள் அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள் அனுராதா.. அஜித்திற்குத்தான் புது உடைகள் அவனுடைய வருங்கால மனைவியின் வசம் தயாராக இருந்தனவே..
செல்போனில் பேசி விட்டு அவளைத் திரும்பிப் பார்த்த அஜித் முகம் சுளித்தான்..
"என்ன அனு இது.. இப்படிப் பங்கரையாவா டிரெஸ் பண்ணிக்கிறது..? இது ரங்கநாதன் சார் வீட்டுக் கல்யாணம்.. பெரிய மனுஷ
ங்க வந்து போவாங்க.. அவங்க முன்னாலே பளிச்சுன்னு இருக்க வேண்டாமா..? மாப்பிள்ளையோட தங்கை யார்ன்னு கேட்டா உன்னை எப்படிக் காண்பிக்கிறது..?"
அனுராதாவின் விழிகளில் லேசான அதிர்வு வந்தது.. இதுபோன்ற வார்த்தைகளை அவன் பேசக் கூடியவன் அல்ல..
"அதுக்காகத்தானே உனக்கு நகை செட்டும்.. பட்டுச் சேலைகளும் வாங்கி வந்து தீபா கொடுத்தா..? அதில் ஒன்னை இப்பக் கட்டு.. இன்னொன்னை நாளைக்கு கட்டு.. நகைகளை இப்போதிருந்தே போட்டுக்க.."
இதை மனதில் அடிக்கும் விதமாகச் சொல்லாமல் இதமாக சொல்லியிருக்கலாமே என்று வலித்த அனுராதாவின் மனம் கேட்டது..






Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே. -13
ராதையின் நெஞ்சமே. -13
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-13.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-13.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy