ராதையின் நெஞ்சமே. -11

11 'அங்கே சுற்றி.. இங்கே சுற்றி.. எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு சொன்ன கதையா..' சிவராமனின் அம்மா உயிரோடு இருந்த போது இது போன்ற ப...

11

'அங்கே சுற்றி.. இங்கே சுற்றி.. எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு சொன்ன கதையா..'
சிவராமனின் அம்மா உயிரோடு இருந்த போது இது போன்ற பொன் மொழிகளை நீட்டி முழக்கி உதிர்ப்பாள்.. அந்தக் கதை அப்படியே அஜித்தின் சொந்தக் கதையாக மாறும் என்று அனுராதா நினைத்தும் பார்க்கவில்லை.. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்தாள்..
"முரளிதரனின் அப்பா கங்காதரனும் நானும் பெஸ்ட் பிரண்ட்ஸ்.. தரன் குருப் ஆஃப் கம்பெனிஸின் அக்கவுண்ட்ஸை நான்தான் பார்த்துக்கறேன்.. முரளிதரன் என் கண்ணுக்கு முன்னாலே பல வெற்றிகளை சாதிச்சவர்.. அவர் ஒன்றைச் சொன்னால் நிச்சயமாய் அதில் உண்மையிருக்கும்ன்னு நம்புகிறவன் நான்.. அவர் உன் அண்ணனை கை காட்டியிருக்கார்.. அவர் சொன்னாச் சரியாத்தான் இருக்கும்ங்கிறது என்னோட அசைக்க முடியாத நம்பிக்கை.. அவர் சொன்னா நம்பி கடலிலும் இறங்கிருவேன் அதே சமயத்தில அவர் வேணாம்ன்னு சொன்னா.. தரையா இருந்தாலும் அடுத்த அடி எடுத்து வைக்காம நின்னுருவேன்.. ஏன்னா.. காரணமில்லாம முரளிதரன் எதையும் சொல்ல மாட்டார்.."
இப்போது அவன் புராணம் தேவையா என்றிருந்தது அனுராதாவிற்கு..
"உன் அண்ணனை சக்சஸ்புல் ஆடிட்டரா மாற்றிக் காட்டறது என்னோட பொறுப்பு.. பிரதீபாவுக்கு அவரை ரொம்பப் பிடிச்சிருக்கு.. அவரிடம் பொதுவாப் பேசினப்ப.. எனக்கு எல்லாமே என் தங்கைதான்னு சொன்னார்.. அதுதான் உன்னைக் கூப்பிட்டுப் பேசறேன்.."
அஜித் அப்படியா சொன்னான்..? அனுரதாவின் விழிகளில் நீர் கோர்த்தது.. அவளை அந்த அளவுக்கு உயர்ந்தவளாக்கி விட்ட அஜித்தின் வார்த்தைகளில் அவள் மனம் நெகிழ்ந்தாள்.. அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இமைகளைச் சிமிட்டியபடி..
"அண்ணன் அப்படித்தான் சொல்வான் சார்.. அம்மா இறந்ததும் அப்பா செகண்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டதால அவன் மனசில அவர் மேல வெறுப்பு வந்திருச்சு.. ஆனா.. முறைன்னு ஒன்னு இருக்கே சார்.. நீங்க அப்பாவிடம்தான் இதைப் பத்திப் பேசனும்.."  என்றாள்..
"நிச்சயமா.. பட்.. அஜித் அதை விரும்பனுமே.."
"அண்ணன்கிட்ட நான் எடுத்துச் சொல்றேன்.."
"இன்னொன்னும் இருக்கும்மா.. நீ சொல்கிற அதே முறையைத்தான் நான் சொல்றேன்.. பெண் கேட்டு உன் அப்பாதான் என்னிடம் பேசனும்.. எனக்குப் பெண் கொடுக்க விருப்பம்ன்னு உன்னிடம் சொல்லிட்டேன்.. நீ உன் அண்ணனிடமும்.. அப்பாவிடமும் கலந்து பேசிட்டு எப்ப பெண் பார்க்க வரப் போறிங்கங்கிறதை போனில் சொல்லு.. அப்ப உன் அப்பாவிடம் கல்யாணம் பேசறேன்.."
"ஆகட்டும் சார்.."
அவர்கள் ஹாலுக்கு வந்தார்கள்.. அப்போதும் அஜித்தும் பிரதீபாவும் பேச்சு வார்த்தையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்ததைக் கவனித்தாள் அனுராதா.. அஜித்துக்கு பிரதீபாவை பிடித்திருக்கிறது என்பதை அவன் முக மலர்ச்சி காட்டிக் கொடுத்தது..
"போகலாமா அண்ணா.."
அவர்களின் உரையாடலை நிறுத்த வேண்டியிருக்-கிறதே என்ற சங்கடத்துடன் குறுக்கிட்டாள் அனுராதா..
"போகலாமே.."
அவள் நினைத்ததைப் போலவே முகத்தில் ஏமாற்றம் கவிய தலையை ஆட்டினான் அஜித்.. வீடு வந்து சேரும் வரை ரங்கநாதனின் குடும்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான்..
"வீடுன்னா அது வீடு.. பணத்துக்காக சொல்லலை அனு.. ரங்கநாதன் சாரும்.. அவரோட வொய்பும் ஒருத்தர் மேல ஒருத்தர் எத்தனை அன்பாவும்.. பிரியமாவும் இருக்காங்கன்னு பார்த்தியா.. அப்படிப்பட்ட வீட்டுக்குள்ளே ஒன்றுக்கு இரண்டு தடவை காலடி பதிச்சுத் திரும்பியிருக்கேன்.. இதில விருந்து வேற.. நினைச்சாலே புல்லரிக்குது.. நம்ம நிலைமைக்கு இதையெல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்க முடியுமா..? இதில அந்த பிரதீபா.. என்கூட சரிக்குச்சமமா உட்கார்ந்து அவ்வளவு பேசறா.. சான்ஸே இல்லை அனு.."
காலடி பதிப்பதையே பாக்கியமாக அஜித் நினைக்கும் அந்த வீட்டில் காலம் முழுவதும் வாழ்வதற்கான வாய்ப்பு வந்து கதவைத் தட்டியிருக்கிறது என்பதை அறிந்தால் மயக்கம் போட்டே விழுந்து விடுவான் என்று நினைத்துக் கொண்டாள் அனுராதா..
சரிக்குசமமாக உரையாட முடிந்த பிரதீபாவுடன் கணவன் என்ற உரிமையுடன் அவன் உறவாடும் வாழ்க்கை அமையப் போகிறது என்பதை அறிந்தால் அஜித்தின் மனதில் எப்படியெல்லாம் சந்தோசம் பெருகும் என்பதை நினைத்துப் பார்த்தவளுக்கு நெஞ்சம் நெகிழ்ந்தது..
'இவன் சந்தோசமா இருக்கனும்..'
வீடு வந்ததும்.. பூஜை மாடத்தில் விளக்கேற்றி வணங்கினாள்.. மனதில் பரபரப்பும்.. அமைதியும்.. சோகமும்.. சந்தோசமும் கலந்த பல்வேறு உணர்வுகளின் கவலை சுழன்றடித்துக் கொண்டிருந்தது.. வீணையை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாள்..
"நெஞ்சுக்கு நிம்மதி..
   ஆண்டவன் சன்னதி..
நினைத்தால் எல்லாம் நமக்குள்ளே..
   கொஞ்சும் அமைதியும்..
குளிர்ந்த.. வாழ்வும்..
   கொண்டு வந்தாலென்ன உனக்குள்ளே.."
கண்மூடிப் பாடிக் கொண்டிருந்தவளின் செவிகளில்..
"அனு.." என்ற அழைப்பு கேட்டது..
சிவராமன்தான் அழைத்துக் கொண்டிருந்தார்.. அனுராதா வீணையை வைத்து விட்டு எழுந்து சென்று எட்டிப் பார்த்தாள்.. மாடிப்படிகளின் முடிவில் சிவராமன் நின்றிருந்தார்..
"என்னப்பா..?"
"கொஞ்சும் வந்துட்டுப் போம்மா.."
அஜித் இருக்கும்போது அவர் மாடியேறி வர மாட்டார்.. மகனின் வெறுப்புக்கும்.. உணர்வுகளுக்கும் அவர் மதிப்பளிப்பவர்.. அஜித்திடம் இதைப்பற்றி அனுராதா சொன்னால்.. இது ஒரு பெருமையா என்று கேட்டு வைப்பான்.. வெறுப்புக்கு ஆளாகாமல் இருக்கத் துப்பில்லை.. செய்கிறதையெல்லாம் செய்து விட்டு ஒதுங்கி நின்று வேசம் கட்டவில்லையென்று யார் அழுதது என்ற கேள்வியை முன்னால் வைப்பான்..
"வரேன்ப்பா.."
அனுராதா போனாள்.. சிவராமன் ஊஞ்சலில் அமர்ந்திருக்க அவள் வெராண்டாவின் கைப்பிடி சுவரில் உட்கார்ந்தாள்..
"மனசில என்னம்மா சஞ்சலம்..?" சிவராமன் இதமாக வினவினார்..
"அப்பா.." அனுராதா திகைத்து விட்டாள்..
"இவனுக்கு எப்படித் தெரியும்ன்னு பாக்கிறயா..? ஏம்மா.. நீ பாட்டுப் பாடினா.. அதைக் கேக்கிற முதல் ரசிகன் நான்தானேம்மா.. எப்பவுமே சாமிக்கு முன்னாலே நின்னு சாமி பாட்டைத் தானேம்மா பாடுவ..? இன்னைக்கு நிம்மதியைப் பத்திப் பாடறயேம்மா.. அதான்.. என்னன்னு கேக்கலாம்ன்னு கூப்பிட்டேன்.."
அனுராதாவின் கண்கள் குளமாகிவிட்டன.. அவளுடைய அப்பா மறுமணம் செய்து கொண்டவர்தான்.. இளைய மனைவிக்கு அடிமைதான்.. ஆனால் பெற்ற மகளின் பாடலைக் கொண்டே அவளின் மனதைக் கணித்து ஆறுதல் அளிக்க தேடி வருபவர்..
எதனால் மனதில் பாரம் ஏறியிருக்கிறது என்று புரியாமல் அல்லாடிக் கொண்டிருந்த அனுராதா.. சிவராமனிடம் விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள்..
"பொதுவாத்தான் பாடினேன்ப்பா.. அண்ணன் சந்தோசமா இருக்கான்.."
"பரவாயில்லையே.. வேலை எதுவும் கிடைச்சிருச்சா..?"
"இல்லேப்பா.. இது வேற.. லைஃப் கிடைச்சிருக்கு.."
"என்னம்மா சொல்ற.. விளங்கச் சொல்லு.."
அனுராதா சொன்னாள்.. ஆதியோடு அந்தமாக அவள் சொல்லி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார் சிவராமன்..
"உங்களிடம் பேசிட்டுத்தான் அண்ணனிடம் பேசனும்னு இருந்தேன்ப்பா.. அண்ணன் ஆடிட்டராகனும்ங்கிற கனவில இருக்கான்.. அது நிறைவேறப் போகுது.. அந்தப் பெண்ணையும் இவனுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.. அந்தக் குடும்பத்தில் பேசிட்டு வந்ததை பாக்கியமா நினைக்கிறான்.. இவன் மனசு போல வாழ்க்கை அமைஞ்சிருக்குன்னு சந்தோசமா இருக்குப்பா.."
அனுராதாவின் தழதழத்த குரலில் சந்தோசத்துடன் கூடிய இன்னொரு உணர்வும் வெளிப்பட்டது.. அதை அவள் உணரவில்லை.. சிவராமன் உணர்ந்தார்..
அதுதான் பிரிவுத் துயர்..!
அதுநாள் வரை.. உனக்கு நான்.. எனக்கு நீ.. என்று வாழ்ந்து வந்த அண்ணனும் தங்கையும் பிரியப் போகிறார்கள்.. அனுராதாவின் ஓட்டத்திற்கும்.. உயிர்ப்புக்கும் ஆதாரமாக இருந்த அஜித் பணக்கார வீட்டுப் பெண்ணை மணந்து கொண்டு அவளின் வீட்டோடு மாப்பிள்ளையாகி போய் விடப் போகிறான்.. இனி அனுராதா தனி.. அவளுக்கென்று யாருமில்லை..
இதை அவளின் அடிமனது உணர்ந்திருக்க வேண்டும்.. அதனால்தான் அவள் மனம் நிம்மதியைத் தேடி ஆண்டவனின் சன்னதியில் அடைக்கலமாகியிருக்கிறது..
'அனு..! என் மகளே..!'
சிவராமனின் மனம் கனத்தது.. அவசரப்பட்டு மறுமணம் செய்து கொண்ட தவறிற்காக அனுதினமும் வருந்துவதைப் போல அன்றும் அவர் வருந்தினார்..
அண்ணன் சந்தோசமாக இருக்கப் போகிறான் என்பதில் அமைதி கொள்ள முனையும் மகளிடம் உனக்கு சந்தோசமா மகளே என்று கேட்க அவரால் முடியவில்லை..
எட்டு வயது சிறுமியாக.. பத்து வயது அண்ணனின் கரம் பிடித்து அவனுக்கு அன்னையாகி அரவணைத்தவள் அவள்.. அவனுக்கு சாய்ந்து கொள்ள தோள் கொடுத்த போதே.. அவள் சாய்ந்து கொள்ள அவன் தோளைத் தேடிக் கொண்டவள்..
அஜித்தை படிக்க வைத்தது அனுராதாவாக இருக்கலாம்.. ஆனால் அவளுக்கு அதற்கான உத்வேகத்தையும்.. உயிர்ப்பையும் கொடுத்தது அஜித்தான்.. அண்ணனுக்காக.. அண்ணனுக்காக.. என்று அனுராதா.. வாழ்வின் பாதையில் ஓட ஆரம்பித்தாள்.. அவனுக்கான வழித்தடத்தை அமைத்துக் கொடுக்கும் போதே அவளையு மறியாமல் அவளுக்கான வழித்தடத்தையும் அவள் அமைத்துக் கொண்டாள்..
அந்த அண்ணன் அவளை விட்டுப் பிரியப் போகிறான்.. அவள் சாய்ந்து கொள்ள அவன் தோளிருக்காது.. அவள் ஓடுவதற்காக அவன் தேவை இருக்காது.. அவள் வாழ்வில் உயிர்ப்பிருக்காது..
"நீங்க என்ன சொல்றீங்கப்பா..?"
அவரால் என்ன சொல்ல முடியும்..? எதைச் சொல்ல முடியும்..? இதுதான் வாழ்வின் நியதி எனும் போது அதைத் தடுக்க அவரால் முடியுமா..? அஜித்தின் வாழ்வில் திருமணம் என்ற ஒன்று வந்துதானே தீர வேண்டும்..? பத்து வயது மகனும்.. எட்டு வயது மகளும்.. அன்பான மனைவியின் நினைவுகளும் இருந்த போதே சிவராமன் மறுமணம் செய்து கொண்டாரே..
அவரின் மகன் ஒரு மணத்தைத்தான் செய்யப் போகிறான்.. அதை தவறென்று சொல்ல அவரால் முடியுமா..?


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ராதையின் நெஞ்சமே. -11
ராதையின் நெஞ்சமே. -11
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s320/rathaiyen%2Bnenjam.jpg
https://1.bp.blogspot.com/-rROzAZa9oKk/Xp8ChqNqKJI/AAAAAAAAA04/uFFSvK-IjBYGnRuUVWz0Uz8WofTRghELgCPcBGAYYCw/s72-c/rathaiyen%2Bnenjam.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-11.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/raathaiyinnenjame-11.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy