புலர்கின்ற பொழுதில் -42

42 புலர்கின்ற பொழுதில்.. புதுவானம் கண்டேன்.. வருகின்ற நாளில்.. புது எதிர்காலம் கண்டேன்.. தோப்பில் காய்களை எண்ணிக் கொண்டிருப்பதை கண்கா...

42
புலர்கின்ற பொழுதில்..
புதுவானம் கண்டேன்..
வருகின்ற நாளில்..
புது எதிர்காலம் கண்டேன்..

தோப்பில் காய்களை எண்ணிக் கொண்டிருப்பதை கண்காணித்துக் கொண்டிருந்த பார்த்திபன் காலடியோசை கேட்டு திரும்பிப் பார்த்தான்.. அவள் உறங்கும்போது அவன் அவளை பார்ப்பான்.. ஆனால்.. அவன் முகம் பார்க்க முடியாமல் தவித்துவிட்ட அர்ச்சனா கண் நிறையக் காதலுடன்.. ஆவலாக அவனைப் பார்த்தாள்..
அவளது பார்வையைக் கண்டு.. அவன் விழிகளில் வியப்புக்குறி தோன்றியது.. புருவங்கள் முடிச்சிட.. அவளையே பார்த்தவன்..
"எங்கே வந்தாய்..?" என்று கேட்டான்..
"உங்.. உங்களுக்கு சாப்பாடு.." அவள் தடுமாறி னாள்..
"இத்தனை நாளும் எனக்கு எப்படிச் சாப்பாடு வந்ததோ.. அப்படியே அனுப்பியிருக்க வேண்டியதுதானே.. இது என்ன புது கரிசனம்..?" அவன் முகத்தில் கடினத்துடன் கேட்டான்..
"அது.. வந்து.. அத்தை.." அவள் வார்த்தை வராமல் திணறினாள்..
"அம்மா உன்கிட்ட கொடுத்து விட்டுச்சா.." அவன் நிதானமாக கேட்டான்..
அவளுக்கு கண் கலங்கிவிட்டது.. ஏன் இப்படி விசாரிக்கிறான் என்று எண்ணமிட்டபடி.. அவள் பேசாமல் நின்றாள்..
'எப்படி நிற்கிறாள் பாரு.. ஏன்.. ஒரு வார்த்தை வாயைத் திறந்து சொல்ல வேண்டியதுதானே.. நான்தானே உன் பெண்டாட்டி.. நீதானே என் புருசன்.. உனக்கு நான் சாப்பாடு கொண்டு வராமல்.. வேறு யாரு கொண்டு வருவான்னு கேட்டால்தான் என்ன..? அதைச் செய்யாமல் மரம் மாதிரி நிற்கிறாளே..' அவன் பல்லைக் கடித்தான்..
"சரி.. நீ போ.." என்று அவன் கூறவும் அவள் திகைத்தாள்..
"எங்கே போக.." அவள் விழி விரிக்க..
"வீட்டுக்கு.." என்று இலகுவாக பதில் சொன்னான் அவன்..
'தனியா நான் போவதா..?' அவள் அதிர்ந்தாள்..
அத்தனை நாளும்.. அவன் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தபோது புரியாத அவனது அருமை.. இப்போது அவளுக்குப் புரிந்தது.. அவனது வாய் வார்த்தையைக் கொண்டே அவனது அருகாமையை விலக்கியவளுக்கு அவனது அருகாமை தேவைப்பட்டது.. இத்தனைக்கும் மேலாக.. அவனிடம் சொல்ல அவளுக்கு ஒரு முக்கியமான செய்தி இருந்தது.. இத்தனையிருக்கும்போது அவன் அவளை விரட்டுகிறானே..
அர்ச்சனா கண நேரத்திற்குள் ஒரு முடிவுக்கு வந்தாள்.. அவளுக்கு பார்த்திபனின் கோபம் தெரியும்.. அவனுடன் வம்பிழுப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை.. தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆள்களின் காதில் அவர்கள் பேசிக் கொள்வது விழாது என்பதை உறுதி செய்து கொண்டு.. பார்த்திபனை ஏறிட்டுப் பார்த்தாள்..
"இப்ப.. என்னாங்கறீங்க..?" அவளின் அதட்டலில் சவால் தெரிந்தது..
பார்த்திபன் அவளைக் கண்டு கொண்டான்.. கண்கள் மின்ன..
"என்னடி.. மிரட்டுகிறாயா..?" என்று கேட்டான்..
"மிரட்டாமல் உங்களைக் கொஞ்சுவாங்களாக்கும்.. தோப்புக்கு சாப்பாடு கொண்டு வந்திருக்கிற பெண்டாட்டி கிட்ட.. பிரியமா நாலு வார்த்தை பேச வேணாம்.. வீட்டுக்குப் போன்னு துரத்தாமலாவது இருக்கலாமில்ல.."
அவள் கேட்ட விதத்தில் பார்த்திபன் இளகி விட்டான்..
"சரி.. சரி.. சோற்றைப் போடு.." என்று கூறியவாறு தோப்பு வீட்டை நோக்கி நடந்தான்..
பின்னால் சாப்பாட்டுக் கூடையுடன் நடந்தவள் பின் தங்கிவிட.. திரும்பிப் பார்த்தவன்.. கைநீட்டி அவளிடமிருந்து கூடையை வாங்கிக் கொண்டான்..
"இவ்வளவு கனமாயிருக்குல்ல.. என்கிட்ட கொடுக்க வேண்டியதுதானே.."
அவள் பதில் கூறாமல் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்.. ஒரு ஹால்.. ஒரு ரூம்.. சிறிய சமையலறை.. ஹாலின் ஓரமாக குளியலறை என்று அழகாக இருந்தது அந்த வீடு..
"இந்த வீட்டை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.. இத்தனை நாளாய் இந்த தோப்பையும்.. வீட்டையும் பத்தி என்னிடம் நீங்க சொல்லவே இல்லையே.." என்றபடி அவனைப் பார்த்தாள்..
அவன் பார்வையில் குற்றச்சாட்டு இருந்தது.. அது எதனால் என்று அவளுக்குத் தெரியாதா என்ன..? அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள்..
"ஆமாடி.. நீ ஆசையாய் என் கழுத்தைக் கட்டிக் கிட்டு.. அத்தான்.. அத்தான்.. நம்ம தோப்பையும்.. தோப்பு வீட்டையும் பார்க்கணும் போல இருக்குன்னு என்கிட்ட கேட்ட பாரு.. அதை நான் நிறைவேத்தாமப் போனாப் போல சொல்லிக் காட்டுறா.. வயித்தெரிச்சலைக் கொட்டிக்காம.. சோற்றைப் போடு.."
அவன் கையலம்பி விட்டு அங்கிருந்த மேஜையின் முன்னாலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள.. மேஜையில் இலையை விரித்து.. பரிமாற ஆரம்பித்தாள் அர்ச்சனா..
"நீ சாப்பிட்டுட்டியா.."
"இல்லை.."
"உன்னை பட்டினியாய் சாப்பாடு கொண்டு வரச் சொன்னேனா..?"
"எனக்கு சாப்பிட மனமில்லை.."
"ஏன்..? உன் மனம் போல நான் தள்ளித்தானே இருக்கேன்.. நீ உன் இஷ்டப்படி சாப்பிட்டுவிட்டு ஹாயாய் இருக்க வேண்டியதுதானே.."
அர்ச்சனாவிடம் பதில் வராமல் போக.. அவளை நிமிர்ந்து பார்த்தவன்..
"சரி.. இன்னொரு இலையைப் போடு.. சேர்ந்து சாப்பிடலாம்.." என்றான்..
"வேண்டாம்.. நான் அப்புறமாய் சாப்பிட்டுக்கறேன்.."
"சொன்னால் கேளுடி.. இலையைப் போடு.."
"எனக்கு இப்போ சாப்பாடு வேண்டாங்க.."
"உன்னைத் தொட மாட்டேங்கிற தைரியத்தில் பேசுறயா..?"
"எனக்குப் பசியில்லை.."
"நீ சாப்பிடாட்டி எனக்கும் சாப்பாடு வேண்டாம்.."
அர்ச்சனா வேறு வழியில்லாமல் வேறு ஒரு இலையை மேஜையில் விரித்துவிட்டு.. அங்கிருந்த ஸ்டூலை எடுத்துப் போட்டு அமர்ந்தாள்..
"இத்தனை நாளாய் இல்லாத கரிசனம் இப்போது எங்கிருந்துடி வந்தது..?"
"பேசாமல் சாப்பிடுங்க.."
"நீ சொன்னால் நான் கேட்கணுமா..?"
"உங்க அம்மா சொல்வதை உங்க அப்பா கேட்கிறார்.. உங்க பாட்டி சொல்வதை உங்க தாத்தா கேட்கிறார்.. நீங்களும் பெண்டாட்டி சொல்வதைக் கேட்க வேண்டியது தானே.."
'பெண்டாட்டின்னு சொல்லிட்டாள்..' அவன் மனதில் சாரல் அடித்தது..
பேசிக்கொண்டே அவன் இலையை காலி பண்ண.. அவள் ஒரு வாய் கூடச் சாப்பிடாமல் சாப்பாட்டை அளைந்து கொண்டிருந்தாள்..
"சாப்பிடுடி.."
"ம்ம்ம்.."
அவன் அதட்டவும்.. ஒரு கவளத்தை எடுத்து மருந்தைச் சாப்பிடுவதைப் போல வாயில் வைத்தவளை விசித்திரமாகப் பார்த்தான் பார்த்திபன்..
"இவளுக்கு என்ன ஆச்சு.."
அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே..
"உவ்வே.." என்ற குமட்டல் ஒலியுடன்.. குளியலறைக்குள் ஓடினாள் அர்ச்சனா..
இலையில் இருந்த சாப்பாட்டை மறந்துவிட்டு மனைவியின் பின்னாலேயே ஓடினான் பார்த்திபன்..
"என்னடி செய்யுது..? அர்ச்சனா.. என்னைப் பாரேன்.."
அவன் பதைத்துக் கொண்டிருக்கும்போதே.. குடம்.. குடமாய் வாந்தியெடுத்தவள்.. சோர்ந்து போய் தள்ளாடிய வாறு குளியலறையை விட்டு வெளியே வந்தாள்..
அவளைத் தாங்கிப் பிடிக்க அவன் மனம் தவித்தது.. ஆனால்.. அவள்தான் அவனது வாய் வார்த்தையைக் கொண்டே அவன் கைகளை கட்டிப் போட்டிருந்தாளே..
"பாவி.. பாவி.. இப்படி என்னைத் தள்ளி நிற்க வைத்து விட்டாயேடி.. நான்
உனக்கு அப்படி என்னடி கொடுமை பண்ணிவிட்டேன்..? நீ இஷ்டப்படலைன்னு தெரிஞ்சிருந்தால் என் சுண்டு விரல் கூட உன்மேல் பட்டிருக்காதுடி.. உன்னைப் பெண் கேட்டு வந்தப்போ.. உன் அப்பாம்மா... உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லைன்னு சொன்னாங்க.. அதுக்கு உன்கிட்ட நியாயம் கேட்கத்தான் நான் வந்தேன்.. உன்னைக் கடத்திக் கொண்டு போய் தாலிகட்டத்தான் நினைச்சிருந்தேண்டி.. ஆனால் உன்னைத் தொட்டு ஆள வேண்டியதாப் போச்சு... அதுக்கு என் மனதில் எத்தனை முறை வேதனைப்பட்டிருக்கேன்னு உனக்குத் தெரியுமா..? நீ அதையே குத்திக் காட்டிப் பேசியதும் கோபப்பட்டு விட்டேன்.. அதுக்காக என்னை நீ தள்ளி வச்சிருவியா.."
அர்ச்சனாவின் காதில் அவன் பேச்சு தேனாக இறங்கியது.. அவளது காதலன் அவளைத் தொட்டுவிட்டு கட்டிக் கொள்ள நினைக்கவில்லை.. கடத்திக் கொண்டு போய் கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தான் நினைத்திருக் கிறான் என்ற நினைவே அவளுக்கு இனித்தது..
"அத்தான்.." அவள் நிற்க முடியாமல் சுவரைப் பிடித்துக் கொண்டாள்..
"என்னைத் தாங்கிக்க மாட்டிங்களா.. தலையைச் சுத்துது அத்தான்.."
"அர்ச்சனா.."
அவளது அனுமதி கிடைத்து விட்ட சந்தோசத்துடனும்.. அவள் அவனை 'அத்தான்' என்று அழைத்துவிட்ட ஆனந்தத்துடனும்.. பார்த்திபன் அவளைத் தாங்கி.. தன் கைகளில் தூக்கிக் கொண்டான்..
பூமாலையாய் அவன் கரத்தில் கிடந்தவளை அறைக்குள் இருந்த கயிற்றுக் கட்டிலில் கிடத்திவிட்டு அவசரமாக செல்போனை எடுத்தான்..
"என்னத்தான் செய்கிறீங்க..", அர்ச்சனா அவனைத் தடுத்தாள்..
"டாக்டருக்குப் போன் பண்ணப் போகிறேன்.."
"வேண்டாம்.."
"அர்ச்சனா.. என் மேல் கோபமிருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்டி.. அதுக்காக.. உனக்கு உடம்பு சரியில்லாத போது மருத்துவம் பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்காதேடி.."
"ஐயோ அத்தான்.. எனக்கு என்ன நோய்ன்னு எனக்குத் தெரியும்.."
அவன் கையை அவள் பிடித்துக்கொண்டு சோகையாய் சிரிக்க.. அவன் அவளைக் கவலையுடன் பார்த்தான்..
"என் பக்கத்தில் உட்காருங்க அத்தான்.."
இதுவே வேறு ஒரு நேரமாக இருந்தால்.. அவள் சொன்ன சொல்லுக்கு.. அவளருகில் சயனித்தே இருப்பான் பார்த்திபன்.. ஆனால்.. இப்போது அவன் வேறு ஒரு கவலையில் இருந்ததால் அவளருகில் அமர்ந்து... முடி கோதிவிட்டான்..
"உனக்கு என்னதாண்டி ஆச்சு..?"
அவள் கண்சிமிட்டிச் சிரித்தாள்.. அவன் கண்கள் மின்ன..
"என்னடி.." என்றான்..
அவனது கைவிரல்களோடு விரல் பிணைந் திருந்தவள்.. மெல்ல.. அவன் கரத்தை தன் வயிற்றின் மேல் வைத்தாள்..
"அர்ச்சனா..?" என்றான் அவன் ஆனந்தத்துடன்..
அவள் 'ஆம்..' என்ற பாவனையில் விழி மூடித் திறந்தாள்..
"ஏய்ய்.." அவன் குனிந்து அவளது முகமெல்லாம் முத்தமிட்டான்..
"இவ்வளவு ஆசையிருக்கிறவர்.. இத்தனை நாளாய் என் முகத்தில் விழிக்காமல் ஏன் ஓடினாராம்.." அர்ச்சனா சிணுங்கினாள்..
"ஆமாண்டி.. பார்த்திபன் வாக்குத் தவறாதவன்னு சும்மாயிருக்க மாட்டாமல் சவால் விட்டுட்டேன்.. நீயானா.. என்னைத் தொடாதேன்னு சொல்லிட்ட.. உன் முகத்தைப் பார்த்தால் சொன்ன வார்த்தையை என்னால் காப்பாற்ற முடியுமா..?" அவன் ஆசையுடன் அவளது முடி கோதினான்.
"அதுக்காக இப்படியா செய்வாங்க..? நம் பிள்ளை வரப் போகும் சேதியை முதன் முதலாய் உங்களிடம் தான் சொல்லணும்னு நான் பத்து நாளா தவிக்கிறேன்.. நீங்க அகப்பட மாட்டேன்னுட்டீங்களே.."
"இப்போதுதான் வந்துவிட்டேனே.."
"நான் தனியாய் வாந்தி எடுத்து.. தலை சுற்றலோடு படுத்து.. எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா..?"
அவள் குழந்தை போல வினவவும்... அவன் மனதிலிருந்த கோபதாபங்கள் அனைத்தும் பனி போல் மறைந்து விட்டன.. அவளது கரத்தை எடுத்து அதில் இதழ் பதித்தவன்..
"மன்னிச்சுக்கடி.. நான் உன்னை ரொம்பவும் கஷ்டப் படுத்திவிட்டேன்தான்.. உன் மனம் தெரியாமல் தொட்டதி லிருந்து.. இன்று வரைக்கும் நான் நீ சொன்னதைப் போல.. மனிதனாக இல்லாமல் மிருகமாகத்தான் நடந்து கொண்டு விட்டேன் அர்ச்சனா.."
அவனது வாய் பொத்தி.. அவன் பேச்சை தடை செய்தாள் அர்ச்சனா..
"உங்கள் மேல் ஒரு தவறும் இல்லை.."
"உன் விருப்பமில்லாமல் உன்னைத் தொட்டது தவறில்லையா..?"
"என் விருப்பமில்லாமல் நீங்கள் என்னை ஜெயித்திருக்க முடியாதுங்க.."
"அர்ச்சனா.."
"நன்றாக நினைத்துப் பாருங்க.. அன்றைக்கு நீங்க பெண் கேட்டு வந்தபோது.. உங்களைத்தான் நான் ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.."
"அதுதான் எனக்குத் தெரியுமே.. ஆனா உன் அம்மா வேற சொன்னாங்க.."
"நீ மறுக்கவும் இல்லையே.."
"நான் மறுக்க நினைத்து வெளியில் வந்தபோது நீங்கள் அங்கே இல்லை.."
"என்னடி சொல்கிற..?"
"நான் உங்களைப் பார்த்து விளக்கம் சொல்லத்தான் கோவிலுக்குப் போவதாக சொல்லிவிட்டு வெளியில் வந்தேன்.. நீங்க காரைக் கொண்டு வந்தீங்க.. ஏறுன்னு சொன்னீங்க.. ஏறிட்டேன்.."
"அது நான் மிரட்டியதால்தானே.."
"ஆமாம் அத்தான்.. நீங்க கத்தியைக் காட்டி மிரட்டினீங்க.. நான் பயந்து போய் உங்களோடு வந்துவிட்டேன்.. அவ்வளவு தைரியமில்லாத கோழையாக என்னை நினைத்து விட்டிங்களா..? ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்க அத்தான்.. ஒரு பெண்.. விருப்பத்துக்கு விரோதமாக ஒருவன் தொடவந்தால்.. ஒன்று உயிரை எடுப்பாள்.. இல்லை உயிரை விடுவாள்.."
அப்படியென்றால் பார்த்திபன் தொட்டதில் அர்ச்சனாவின் விருப்பம் இருந்திருக்கிறது... அவன் கிளர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்..
"என்னத்தான் அப்படிப் பார்க்கறீங்க..? கல்யாணத் திற்கு முன்னால் நீங்கள் என்னைத் தொட்டதில் எனக்கு உடன்பாடு இல்லைதான்.. ஆனால் தொட்டது நீங்களாக இருக்கும்போது என்னால் போராட முடியாமல் போய்விட்டது.."
அவர்கள் பேசினார்கள்.. வெகுநேரம் பேசினார்கள்.. பேசிப்பேசி.. அவர்களின் மனதில் இருந்ததை.. வெளிப் படுத்தினார்கள்..
"ஏண்டி.. என்மேல் இத்தனை ஆசையை வைச்சுக் கிட்டு.. இத்தனை நாளாய் என்னை தவிக்க விட்டாயே.. இது நியாயமா.."
"இப்போதுதான் உங்களைத் தேடி வந்துவிட்டேனே.."
அந்த வார்த்தைக்காகத்தானே அவன் காத்திருந்தான்.. காதலுடன் கலந்த காமம் அவனைத் தீயாகப் பற்றிக் கொள்ள.. மோகத்துடன் அவளை ஆக்ரமித்தான்.. அவனது தாபத்திற்கு அதுவரை வளைந்து கொடுக்காதவள்.. அன்று எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து ஈடுகட்டினாள்..
புல்லட்டில் மனைவியை பத்திரமாக அமரச் சொல்லி எச்சரித்தவாறு வீடு திரும்பினான் பார்த்திபன்.. வழியில் தென்பட்ட.. வயதுப் பெண்களின் கண்களில் தெரிந்த ஏமாற்றத்தைக் கண்ட அர்ச்சனா..
"அடேங்கப்பா.. உங்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம் போல இருக்கே.." என்று கேலியாகக் கூறினாள்..
"ஆனால்.. நான் உன் ரசிகன்டி.." அவன் சிரித்தான்..
தோப்பிற்குத் தனியாகப் போன மருமகள்.. மகனின் துணையுடன் வீடு திரும்பியதைக் கண்ட வேதநாயகி.. நிம்மதியுடன் குணவதியைப் பார்த்தாள்.
"நான் சொல்லலையா.. சின்னப் புள்ளைக சண்டையும்.. புருசன் பெண்டாட்டி சண்டையும் ஒன்ணு.. நாம தலையிடக்கூடாது.. அதுக எப்போ அடிச்சிக்கும்.. எப்போ கட்டிப் பிடிச்சுக்குமுன்னு யாராலேயும் சொல்ல முடியாது.. ஊடே பஞ்சாயத்துக்கு போனோமுன்னு வைய்யி.. நாம தான் பகையாளியாக ஆகிப் போகணும்.." குணவதி கூற.. வேதநாயகி கேட்டுக் கொண்டாள்..
அன்றைய இரவு.. முந்தைய இரவுகளை விடத் தித்திக்க தேனுண்டவனாக.. விடியும் வரை மனைவியிடம் அடைக்கலமாகியிருந்த பார்த்திபன் எழுந்து.. சாளரம் திறந்து புலர்கின்ற புதுக் காலையை பார்த்தான்..
புலர்கின்ற பொழுதில்.. காற்றோடு கலந்து இனிமையான ஸ்வரம் அவனது காதினில் ஒலித்ததைப் போலிருக்க.. மனைவியின் நெற்றியில் இதழ் பதித்து.. தன்னோடு சேர்த்துக் கொண்டு.. விழிமூடிக் கொண்டான்.. இனி அவர்களுக்குள் பிணக்கே வராது..

- முற்றும் -




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -42
புலர்கின்ற பொழுதில் -42
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/pularkinrapoluthil-42.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/pularkinrapoluthil-42.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy