முகங்கள் -part -II -மஹாதேவன்

மஹாதேவன் நான் ஒன்பதாவது படிக்கும் போது திருச்சியில் சொந்த வீட்டிற்கு குடும்பத்துடன் குடி போனேன். போன போது வாடகை வீடு ஆனால் பிற...

மஹாதேவன்

நான் ஒன்பதாவது படிக்கும் போது திருச்சியில் சொந்த வீட்டிற்கு குடும்பத்துடன்

குடி போனேன். போன போது வாடகை வீடு ஆனால் பிற்பாடு

சொந்த வீடானது தனிக் கதை. 

ஒன்பதாவது படிக்கும் காலம் துவங்கி மெட்ராஸ்க்கு ஜாகை மாறிய

காலம் வரை பல விதமான உணவகங்களுடன் எனக்குப் பரிச்சயம் உண்டு.

முதலில் அதைப் பற்றி பார்ப்போம். இந்த அத்தியாயமே முழுக்க முழுக்க

உணவு பற்றியதே! சைவ உணவுப் பழக்கமுடையவன் என்பதால்

உணவகங்களும் சைவம் சார்ந்தே இருக்கும். 

முதலில் நாயர் கடை – இது எங்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில்

ஆர்.பி.எஃப் குடியிருப்புக்கு செல்லும் ரோட்டில் அமைந்திருந்தது.

காலை மற்றும் மதிய நேரங்களில் இந்த உணவகத்திற்கு சென்ற

அனுபவம் இல்லை. மாலை ஏழு மணியளவில் சென்றிருக்கிறேன்.

தோசைக்கல் வெளியே உள்ள கடை வகையை சேர்ந்தது. 

இட்லி, தோசை, ரோஸ்ட், ஊத்தப்பம் பரோட்டா, மைசூர் பாகு – மாலை நேரம்

இந்த தின்பண்டங்கள் இவ்வுணவகத்தில் கிடைக்கும். பெரியவர் நாயர் மற்றும்

அவர் மகன் இருவரும் அந்த ஹோட்டலில் எப்போதும் இருந்து

வியாபாரத்தை கவனித்துக் கொள்வார்கள். பார்ஸல் என்றாலே கெட்டிச்சட்னி!

இலையில் இட்லியோ தோசையோ வைத்து மேலே மற்றொரு வெட்டிய

சின்ன இலைக்குள் சட்னி வைத்து மூடி பேப்பரில் சுற்றி இரு ஓரங்களை மூடி

மடித்து பேக் செய்வார்கள். சாம்பாருக்கு பாத்திரம் கொண்டு போக வேண்டும். 

நாயர் மகனுக்கு சினிமாவில் ஏதோ வாய்ப்பு கிடைத்து விட்டதாகவும்

அவர்கள் குடும்பம் திருச்சியில் இருந்து காலி செய்து கொண்டு மெட்ராஸ்

சென்று விட்டதாக அந்த ஹோட்டல் மூடப்பட்டவுடன் சுற்று வட்டாரத்தில் பேச்சு பரவியது. 

எங்கள் வீடு பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே இருந்தது.

பேருந்து நிறுத்தத்திலிருந்து மிக அருகாமையில் அதாவது நடை தொலைவில்

டெர்மினல்ஸ் (கடைசி பஸ் ஸ்டாப்) பெரிதாக எதுவும் கிடையாது

ஒரு மைதானத்துக்குள் இறங்கி பேருந்தை ஒடித்து வட்டமடித்து

மெயின் ரோட்டில் வந்த வழியே செல்ல திருப்பி நிறுத்தும் இடமே டெர்மினல்ஸ். 

அருகே ஆர்.பி.எஃப் குடியிருப்பு சாலைக்கு செல்லும் ரோட்டில் டாக்டர் வீடுடன்

இணைந்த ஒரு கிளினிக் அருகே மெடிக்கல்ஸ், தையலகம், ஆட்டோமொபைல்ஸ்

ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் கடை அதற்கு அருகே இன்னொரு உணவகம்.

அதன் உரிமையாளராக இரண்டாமவர். அதென்ன இரண்டாமவர்? 

என் வீட்டருகே ஒரு மளிகைக் கடை உண்டு. எங்கள் வீட்டில் மாதாந்திர

மளிகைப் பொருட்களை அங்கே தான் வாடிக்கையாக வாங்குவார்கள்!

மூன்று சகோதரர்கள் அந்தக் கடையின் உரிமையாளர்கள். மூத்தவரும், இளையவரும்

அந்தக் கடையிலேயே எப்போதும் இருப்பார்கள். இரண்டாமவர் சில சமயம்

கடையில் இருப்பார் மற்ற எல்லா நேரங்களிலும் ஸ்பேர் பார்ட்ஸ் கடை அருகே

உள்ள ஹோட்டலில் இருப்பார். 

காலையில் இட்லி தோசை, ரோஸ்ட், ஊத்தப்பம், பூரி, இடியாப்பம், பொங்கல்,

டீ, காபி இரவில் இட்லி தோசை, ரோஸ்ட், ஊத்தப்பம், இடியாப்பம் & பரோட்டா

கிடைக்கும். மதிய நேரத்தில் அந்த உணவகத்திற்கு சென்றதில்லை என்பதால்

மதியம் சாப்பாடா சித்ரான்ன வகைகளா என்று தெரியாது. பூரி செட்

வாங்கப்போனால் தனியாகப் பாத்திரம் கொண்டு போகத் தேவையே இல்லை.

உள்ளே இலையில் ஒரு பூரி வைத்து அதன் மேல் கிழங்கு மசாலா நிரப்பி மேலே

மற்றொரு பூரியால் மூடி பேக் செய்து தருவார்கள். 

இந்த சமயத்தில் அதே ரோட்டின் மறுபுறம் தென்றல் நகர் செல்லும் திசையில்

சற்று தள்ளி நாயுடு கடை புதிதாக வந்தது. 

காலை - இட்லி தோசை, ரோஸ்ட், ஊத்தப்பம், பூரி, இடியாப்பம், குழிப்பணியாரம்,

  பொங்கல், டீ, காபி. மதியம் – சாப்பாடு, குஸ்கா தொட்டுக்கொள்ள குருமா,

தயிர் வெங்காயம், பரோட்டா மற்றும் இரவில் இட்லி தோசை,

ரோஸ்ட், ஊத்தப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா என கலக்க ஆரம்பித்தார் நாயுடு. 

காலையில் பூரியை மொத்தமாக பொரித்து வைக்க மாட்டார். யார் யார்

பூரி கேட்கிறார்களோ அவர்களுக்கு அந்த தருணத்தில் சூடாகப் பொரித்து தருவார்

. பூரி கிழங்கு என்று சொல்லி நிறைய வெங்காயம், கரைத்த கடலை மாவு

கொஞ்சம் உருளை என்ற தமிழனின் கலாச்சாரத்தை அடியோடு மாற்றி நிறைய

கிழங்கு வைத்து மசாலா தயார் செய்து பூரி மசால் என்றால் நாயுடு கடை

என்று எங்கள் ஏரியாவில் பிரபலம் ஆனார். 

வெறும் கையை வீசிக் கொண்டு அவர் கடைக்கு செல்லலாம். என்ன வாங்கினாலும்

அதை பக்காவாக பேக் செய்து சாம்பார், சட்னி, குருமா போன்றவற்றை

பிளாஸ்டிக் கவரில் நிரப்பி. நூல் கயிறால் கட்டி மூடி அனைத்தையும்

கனமான கேரி பேக்கில் அடுக்கித் தருவார். சாப்பாடு வாங்கக் கூட எந்த

பாத்திரத்தையும் கொண்டு போக வேண்டாம். 

இந்த நேரத்தில் டெர்மினல்ஸ் பக்கத்தில் குறுக்கு ரோட்டின் அருகே ஒரு

புதிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்டப்பட்டது. அதில் ஒரு பெரிய கடையில்

இரண்டாமவரரின் ஹோட்டல் இயங்க ஆரம்பித்தது. சொந்தக் கட்டிடம்.

தோசைக் கல் வெளியே இல்லாமல் தனி கிச்சனுக்குள் மறைந்து போனது.

உயர்தர சைவ உணவகம் – வெஜ் நூடுல்ஸ், வெஜ் ஃப்ரைட் ரைஸ், சிகப்பு, பச்சை

என்ற இரு நிறத்தில் பிளாஸ்டிக் ஏனம். ஏனத்தை தலைகீழாக திருப்பி அமுக்கினால்

பச்சை நிறத்திலோ, சிகப்பு நிறத்திலோ கெட்டியான திரவம் நம் தட்டை நிரப்பும்.

அதன் பெயர் சாஸ். ஏனோ உயர்தர சைவ உணவகத்தில் கூட்டம் இல்லை. 

ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றை நாயுடு கடையிலும் செய்ய ஆரம்பித்தார்கள்.

கெட்டியான பச்சை திரவம் மட்டும் தொட்டுக் கொள்ளத் தரப்பட்டது.

அதற்கும் தனி கூட்டம் கூடியது மக்கள் சலிப்படையாமல் வாங்கி உண்டார்கள். 

எங்கள் வீட்டருகே உள்ள கோயில் எதிர்ப்புறம் ஒரு காம்ப்ளக்ஸ் அதன்

அருகே இரண்டே கடைகள் கொண்ட மற்றொரு காம்ப்ளக்ஸ் அதில் ஒரு

கடையில் மஹா தேவன் டிபன் சென்டர் இனிதே ஆரம்பமானது. மற்ற

உணவகங்கள் எல்லாம் விறகடுப்பில் சமைக்க மஹாதேவன் கடையோ

எரிவாயு அடுப்பில் சமைக்கத் துவங்கியது. 

அதிகாலை நான்கு மணிக்கே மஹாதேவன் கடையில் டியூப் லைட் ஒளிர

விழித்துக் கொள்ளும். கடை எதிரே ரோட்டின் மறுபுறம் ஒரு அடி பம்ப் உண்டு.

அங்கே பல பாத்திரங்களைக் கொண்டு போய் கடை முதலாளி நீர் நிரப்பி

பயன்படுத்துவார். குடிக்க, சமைக்க அந்த தண்ணீர் தான்! புழங்க கடை

பைப்பில் வரும் நிலத்தடி நீர். காலை ஐந்து மணிக்கு டீ, காபி, ஆறு மணிக்கு

இட்லி, மெது வடை... ஏழு மணிக்கு பொங்கல், எட்டு மணிக்கு சாம்பார் வடை.

இது தான் கடையின் நடைமுறை. காலை பத்து மணிக்கெல்லாம் டிபன்

தீர்ந்து விடும். மதியம் ஒரு மணி வரை டீ காபி ஓடும் அதன் பின் கடைக்காரர்

ஷட்டரை பத்தி அளவு மூடி உள்ளே தூங்குவார். மீண்டும் மாலை மூன்று மணிக்கு

கடையில் டீ காபி... நாலரை மணி முதல் மெது வடை, வாழைக்காய் பஜ்ஜி ஏழரை

மணிக்கெல்லாம் கடை மூடப்பட்டுவிடும். 

மெட்ராஸ்க்கு குடி வரும்வரை என்னை ரிசர்வ்ட் டைப், சங்கோஜி, கூச்ச சுபாவி

என்றே அழைப்பார்கள். தெரியாதவர்களுடன் பேச அதிகமாக யோசிப்பேன்.

வெட்கப்படுவேன். ஆறேழு பேர் கூட்டமாக நின்று கொண்டிருந்தால்

அந்தப் பக்கம் போவதை அறவே தவிர்ப்பேன். அப்படி இருந்த நான்

மஹாதேவன் கடைக்காரருடன் ஓரளவு சகஜமாக பேசினேன். பரஸ்பரம் பேச்சு

நன்கு வலுவானவுடன் அவர் என்னை “அண்ணன்” என்று அழைக்க ஆரம்பித்தார்.

நான் உங்களை விட சின்னவன் என்னை அண்ணன்னு சொல்றீங்களே என்று

கேட்டாலும் “அண்ணன் தான் சரி” என்பார்.           

அப்போது அவர் கடையில் ஒரு இட்லி அல்லது ஒரு மெது வடை 3 ரூபாய்.

இரண்டும் ஒரே விலை. பொங்கல் ஒரு ப்ளேட் 7 ரூபாய். பத்து ரூபாய் கொண்டு

போனால் பொங்கல் & வடை சாப்பிடலாம். கூடுதல் விலைக்கு சாம்பார் வடை

விற்க மாட்டார். அதுவும் 3 ரூபாய் தான். பொதுவாக ஹோட்டலில் சாம்பார் வடை

சாப்பிட்டால் சாம்பாரில் வடை ஊறியது போல் இருக்கும் ஆனால் அது மேலே

முறுகல் பகுதிக்கு மட்டுமே! வடைக்கு உள்ளே வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்

போதிய அளவு வடை சாம்பாரில் ஊறாதது புலப்படும். மஹாதேவன் கடையில்

வெளிப்புறம், உட்புறம் என வடையின் சகல பக்கங்களும் சாம்பாரில் நன்கு ஊறியே

காணப்படும். இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்டேன். அவர் செய்முறை

ரகசியத்தை சொன்னார். 

“அடுப்புல ஒரு பக்கம் வடையை பொரிக்கும் போது மறு பக்கம் சாம்பார்

கொதிக்கனும். டிபனுக்குத் தேவையான சாம்பாரை தனியா எடுத்துக்கிட்டு

சாம்பார் கொதிக்கிற பாத்திரத்துல சூடா வடைகளை எடுத்து போடணும்.

ஒரு நீளமான ஊசி (ஸ்வெட்டர் ஊசி போல) எடுத்து ஒவ்வொரு வடையிலும்

நாலஞ்சு குத்து... எல்லா வடையும் குத்தி முடிச்சு கால் ஹவர் கொதிக்க விட்டு

இறக்கிடணும். ரெண்டரை மணி நேரம் ஊற விடனும். அவ்ளோ தான்” 

மூன்று மெதுவடையுடன் கெட்டிச்சட்னி... காலை வேளைகளில் பல முறை

மஹாதேவன் டிபன் கடையில் சாப்பிட்டு இருக்கிறேன். என்னால் என்

நண்பர்களும் அந்தக் கடை வாடிக்கையாளர் ஆனார்கள்.  

வடை, சாம்பார் வடை... அவரைப் போல் பக்குவமான செய் முறையில், ருசியில்

நான் எங்குமே இது வரை உண்டதில்லை. 

2004 ஆம் ஆண்டு மெட்ராஸ்வாசியான பின்பு பல முறை திருச்சி சென்றிருக்கிறேன்

ஆனால் என் பழைய ஏரியாவுக்கு ஏனோ சென்றதில்லை ஏரியா நண்பர்களையும்

சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் நான் தங்கி உள்ள உணவு விடுதி அறைக்கு வர

சொல்லி கதைப்பேன். ஒரு முறை மஹாதேவன் கடை பற்றி நண்பனிடம்

விசாரித்தபோது “அவர் கால் நடக்க முடியாம போய் கஷ்டப்படுறார்.

ஹாஸ்பிட்டல்ல சேர்த்துருக்காங்க. கடை இப்போ மூடி இருக்கு.

மெயின் ரோட்ல பார்க் ஸ்டாப்பிங் பக்கம் இளையவர் ஒரு ‘உயர் தர சைவ உணவகம்’

ஆரம்பிச்சு கலக்குறார்” என்றான். 

சில ஆண்டுகள் கழித்து திருச்சி போன போது நண்பனிடம் ஏரியா பற்றி

கதைக்கையில் மறக்காமல் மஹாதேவன் பற்றி கேட்டேன். 

“குணமாகி வந்துட்டார், திரும்ப கடையை ஆரம்பிச்சு நல்ல சேல்ஸ்,

இளையவர் ஹோட்டல் படுத்துட்டு, நம்ம ஆள் பக்கத்து கடையையும் எடுத்து

டிபன் கடையை விரிவுபடுத்திட்டார். ஈவ்னிங் இட்லி, சப்பாத்தின்னும் அசத்துறார்,

நைட் பத்தரை வரைக்கும் கடை ஓடுது” என்றான். 

இந்தக் கட்டுரையை எழுதும் போது தான் வழக்கம் போல் அந்த விஷயம்

புத்திக்கு உரைத்தது. அவர் பெயர் தெரியாமல் இத்தனை வருடங்களாக

இருந்திருக்கிறோமே என்று! உடனே நண்பனுக்கு அலைபேசினேன். 

“டேய் என்னை எப்போ பாத்தாலும் அண்ணே அண்ணன்னு கூப்பிட்டு

கலாய்ச்ச மஹாதேவன் கடை, ஓனர் பேர் என்னடா?”   

“ஹஹா இது தெரியாதா? அவர் பேரு சுப்பிரமணி, மறக்க மாட்டியே?”

“மாட்டேன்”

“நல்லது கணேசா”  
            
     
         



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: முகங்கள் -part -II -மஹாதேவன்
முகங்கள் -part -II -மஹாதேவன்
https://1.bp.blogspot.com/-S_ClNQmlK10/Xq7HwASJsfI/AAAAAAAAA1U/co6GD_Tn9s4fsvz7K9XJIGURwv6iSLUjACLcBGAsYHQ/s320/SV.jpg
https://1.bp.blogspot.com/-S_ClNQmlK10/Xq7HwASJsfI/AAAAAAAAA1U/co6GD_Tn9s4fsvz7K9XJIGURwv6iSLUjACLcBGAsYHQ/s72-c/SV.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mahaadevanmugangalpart-ii.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/mahaadevanmugangalpart-ii.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy