எங்கிருந்தோ ஆசைகள். -83

83 என் விழியோர நினைவுகளில்.. நீ குடியிருக்க ஆசைகொண்டேன்... நேகாவிற்காக.. பார்த்தசாரதி நண்பரின் கெஸ்ட் ஹவுஸை ரெடியாக வைத்திருந்தார்.. ...

83
என் விழியோர நினைவுகளில்..
நீ குடியிருக்க ஆசைகொண்டேன்...



நேகாவிற்காக.. பார்த்தசாரதி நண்பரின் கெஸ்ட் ஹவுஸை ரெடியாக வைத்திருந்தார்.. அதில் சமைத்துப் போட.. காரோட்ட என்று இரண்டு வேலையாள்கள் இருந்தார்கள்.. நேகா மதுரை விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போதே அவளை அழைத்துச் செல்ல கார் தயார் நிலையில் காத்திருந்தது..
பார்த்தசாரதியின் ஏற்பாடுகளில் மனம் குளிர்ந்து விட்டாள் நேகா.. அவருக்கும் அதுதானே வேண்டும்.. சென்னையை விட்டு நகர விரும்பாத நேகாவை  அவர் மதுரையில் பிடித்து வைத்தாக வேண்டுமே... அர்ஜீன் வருவதற்குள் காவ்யாவை ஒரு வழி பண்ண வேண்டுமென்றால் அதை அவர் தனித்துச் செய்ய முடியாதே...
காவ்யா மனதளவில் தைரியமானவளாக இருந்தாள்.. நீ என் காதலனின் அப்பாவா..? இருக்கட்டுமே.. நீ எனக்கு மரியாதை கொடுத்தால்.. நானும் உனக்கு மரியாதை கொடுப்பேன்.. நீ திமிர் காட்டினால்.. நான் உன்னை விட அதிகமாக திமிர் காட்டுவேன் என்று பார்த்தசாரதிக்கு தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டாள்...
அந்த மனதைரியத்தை பார்த்தசாரதி உடைக்க வேண்டியிருந்தது.. அதை அவரால் செய்ய முடியாது.. யோசித்துப் பார்த்தார்.. நேகாவை வரவழைத்து விட்டார்...
அவளிடமும் அவர் அர்ஜீனின் காதல் விவகாரத்தை கொட்டிக் கவிழ்த்து விடுவதாக இல்லை...
அவருக்குத் தெரியும்... பெண்கள் சூட்சும புத்தி கொண்டவர்கள்.. நிச்சயமாக நேகா காவ்யாவை அடையாளம் கண்டு கொள்வாள்.. அதன் பிறகு 'காதல் வாழ்க' என்று அர்ஜீனின் பாதையிலிருந்து விலகிச் சென்று விடுவாளா.. என்ன..?
அவள் ஒருநாளும் அதைச் செய்ய மாட்டாள் என்பதை பார்த்தசாரதி உணர்ந்து வைத்திருந்தார்..
நேகா அர்ஜீனை விட்டுக் கொடுக்க மாட்டாள்.. இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவன் கவனத்தைக் கவர முயற்சி செய்பவள்.. அவ்வளவு எளிதாக விட்டு விலகி விட மாட்டாள்.. அர்ஜீனைத் தக்க வைத்துக் கொள்ள அவள் எதை வேண்டுமென்றாலும் செய்வாள்..
பார்த்தசாரதிக்கு அதுதான் வேண்டியிருந்தது.. சில வியாபார ஒப்பந்தங்களைப் பெற நேகா கையாளும் குறுக்கு வழிகளைப் பற்றி அவர் அறிந்து வைத்திருந்தார்.. போட்டியாளர்களை பொய்யானவர்களாக அவள் உருவகப் படுத்தி ஒப்பந்தங்களைப் பெற்ற அநியாய வெற்றிக் கதைகள் அவர் செவிகளை எட்டியிருந்தன.. என்ன ஒன்று.. அவை அவர் செவிகளை எட்டுவதற்கு முன்னாலேயே அர்ஜீனின் செவிகளையும் எட்டித் தொலைத்திருந்தன..
"இப்படிச் செய்யலாமா..?" அவன் முகம் சுளித்தான்..
"பிஸினெஸ்ஸில் ஜெயிக்க எதையும் செய்யலாம்.." பார்த்தசாரதி நேகாவை ஆதரித்தார்..
"அதுக்காக தேர்ட் ரேட் வேலைகளில் இறங்கனுமா..?"
"எந்த வழியா இருந்தாலும் அதன் முடிவு வெற்றியா இருக்கனும் அர்ஜீன்.. நேகா அதைத்தான் செய்துகிட்டு இருக்கா.."
"இப்படிப்பட்ட வெற்றிகள் எனக்குப் பழக்கமில்iலாதவை டாடி..."
அர்ஜீன் நேகாவின் நிழலைக் கண்டால்கூட விலகிப் போவதற்கு இதுவும் ஒரு காரணம்..
அந்த நேகா மதுரைக்கு வந்து சேர்ந்தால்தான் அர்ஜீனின் காதலைச் சமாளிக்க முடியும் என்று பார்த்தசாரதிக்கு தோன்றி விட்டது.. அவரும் வரவழைத்து விட்டார்..
நேகா பயண அயர்வு போக சிறிது நேரம் ஓய்வெடுத்தாள்.. குளித்து உடைமாற்றி அறையை விட்டு வெளியே வந்தபோது பார்த்தசாரதி அவளுக்காக காத்திருந்தார்..
"சாப்பிடப் போகலாமா நேகா..?"
"எங்கே அங்கிள்..? இங்கே ஒரு லேடி இருந்தாளே.."
"இருக்கிறாம்மா.. சிந்தாமணி..."
"அவ குக் தானே.."
"யெஸ்..."
"அவ பிரேக் பாஸ்டை ரெடி பண்ணலியா..?"
"பண்ணியிருக்கா.. பட்.. உனக்கு அது பிடிக்குமோ.. பிடிக்காதோன்னு யோசிச்சேன்.. இங்கே ஸ்டார் ஹோட்டல்ஸ் இருக்கு நேகா.. நாம அங்கே சாப்பிடப் போகலாம்..."
"குக் பிரிபேர் பண்ணினதை டேஸ்ட் பண்ணிப் பார்க்கிறேன் பிடிக்கலைன்னா அங்கே போகலாம்..."
பார்த்தசாரதி சந்தோசமாகி விட்டார்.. சிந்தாமணியின் கைச்சமையலின் ருசியை அவர் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறார்...
'ஸோ.. வெட்டியாய் டயத்தை வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை...'
நேகாவிற்கு சிந்தாமணியின் சமையல் பிடித்திருந்தது..
"எக்ஸலெண்ட்..." என்று பாராட்டியவள் சிந்தாமணியை அழைத்து ஆயிரம் ரூபாய் நோட்டொன்றை உறுவி நீட்டினாள்...
"எதுக்கும்மா..?" அவள் திகைத்தாள்..
"உன் சமையலின் ருசி என்னை இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு.. வைத்துக்க.."
"எனக்கு சம்பளம் கொடுக்கிறாங்கம்மா..."
"நான் பிரஸென்டா கொடுக்கிறேன்..."
சிந்தாமணி தயங்கியபடியே வாங்கிக் கொண்டாள்.. பணத்தைப் பார்த்ததும் விழுந்தடித்துக் கொண்டு அதை வாங்காமல் மிரண்டுபோன அவளின் மிரட்சியில் நேகாவின் புருவங்கள் உயர்ந்தன...
பணத்திற்கு ஆசைப்படாத எளிய மக்களும் இருக்கிறார்களா..?
"இங்கே அப்படித்தான்" என்றார் பார்த்தசாரதி...
"பட்.. அவளுக்கு நல்ல சேலரி கொடுக்கிறாங்க... நீ எதுக்காக பணம் கொடுக்கனும்..? வாய்க்கு ருசியா இருந்தா வாயாலே பாராட்டினாப் போதுமே.. வாய்க்கு ருசியா சமைத்துப் போடறதுதானே அவ டியுட்டி..?"
"நான் கொடுத்த பணம் அவ சமையலுக்காக இல்லை அங்கிள்..." என்றாள் நேகா...
"பின்னே.." பார்த்தசாரதி திகைத்தார்...
"நான் எந்த இடத்தில் இருந்தாலும்.. அந்த இடத்தில் என் விசுவாசிகள் தான் இருக்கனும்.. விசுவாசிகள் பணத்தினால்தான் உருவாவார்கள்.. இந்தச் சிந்தாமணியை என் விசுவாசியாக்க நான் எடுத்த முதல் ஸ்டெப் இது..." அலட்சியமாக சொன்னாள்
நேகா...
"ஓ..." அவளின் ஆழ்ந்த திட்டத்தில் பார்த்தசரதி ஆச்சரியப்பட்டுப் போனார்...
அவர்முன் மகாபாரத இதிகாசம் விரிந்து நின்றது...
பாண்டவர்களிடம் பலம் இருந்தது.. பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு பக்க துணையாக நின்றார்...
துரியோதனனின் பக்கமோ மாவீரர்களின் கூட்டம் நிறைந்திருந்தது... உடன்பிறந்த தம்பிகள் என்று தெரிந்திருந்தும் துரியோதனனுக்காக உயிரை விடத் துணிந்து கர்ணன் இருந்தான்... சொல்லிக் கொள்ள எத்தனையோ உயர் அடையாளங்கள் இருந்தாலும் நான் துரோணரின் சீடன் என்றுதான் அர்ஜீனன் சொல்லியிருக்கிறான்.. அந்த துரோணர் பெற்ற மகனான அசுவத்தாமன் துரியோதனனின் மீது உயிரையே வைத்திருந்தான்.. தந்தையின் சீடன் என்ற பெருமையை மட்டும் சொல்லிக் கொள்ளும் அர்ஜீனனுக்கு எதிராக அவன் யுத்த களத்தில் நின்றான்.. இவ்வளவு ஏன்... பாண்டவர்களில் இளையவர்களும்.. பாண்டுவின் இளைய மனைவி மாத்ரியின் புத்திரர்களுமான நகுல, சகாதேரர்களின் தாய் மாமனான சல்லியன்.. அவனுடைய உடன்பிறந்த தங்கையான மாத்ரியின் புத்திரர்களுக்கு எதிராக துரியோதனனுக்கு ஆதரவாக களம் இறங்கினான்.. ஏன்..?
அவர்கள் அனைவரையும் தன்னிடம் நன்றிக்கடன் பட வைத்திருந்தான் துரியோதனன்.. அவனுக்கு விசுவாசிகளை உருவாக்கும் வித்தை தெரிந்திருந்தது...
அந்த வித்தையைக் கற்றிருந்தாள் நேகா.. என்ன ஒன்று.. துரியோதனன் உண்மையான அன்பையும்.. நட்பையும்.. பாசத்தையும் காட்டி விசுவாசிகளை உருவாக்கினான்.. நேகா அதையெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடியவள்.. அவள் விசுவாசிகளை உருவாக்க பணத்தை மட்டுமே பயன்படுத்தினாள்...
"வெல்டன் நேகா.." மனதார பாராட்டினார் பார்த்தசாரதி...
நேகா.. அசுவராஸ்யமாக முகத்தை வைத்துக் கொண்டு லேப்டாப்பை கையில் எடுத்தாள்..
"இதை அப்புறம் பார்த்துக்கலாமே.." என்றார் பார்த்தசாரதி..
"மெயில் செக் பண்ணி.. பதில் மெயில் அனுப்பியாகனும் அங்கிள்.. இந்த ஊரில் சுத்திப் பார்க்க என்ன இருக்கு...?" தோள்களைக் குலுக்கினாள் நேகா...

இருந்தன.. நிறைய இருந்தன.. தொன்மையான 'மீனாட்சியம்மனின் கோவில்' மதுரையில்தான் இருந்தது.. ஒவ்வொரு தூணிலும் ஓராயிரம் சிற்பங்களைச் செதுக்கியிருக்கும் 'ஆயிரம்கால் மண்டபம்..' மதுரையில் தான் இருந்தது.. வெண்ணிற கடைசல்களுடன் கூடிய 'திருமலை நாயக்கரின் மஹாலும்' மதுரையில்தான் இருந்தது.. ஆறுபடை வீடுகளில் ஓர் படைவீடான 'திருப்பரங்குன்றமும்' மதுரையில்தான் இருந்தது.. தங்கைக்கு சீர் செய்யும் அண்ணனின் சந்தோசத்தையும்.. முக்கியத்துவத்தையும் உணர்த்த ஒவ்வொரு சித்திரை திருவிழாவிலும் வைகையாற்றில் இறங்கும் 'அழகர்'
குடி கொண்டிருந்த 'அழகர் கோவிலும்' மதுரையில் தான் இருந்தது.. அருகிலிருந்த மலையின் சோலையில் 'பழமுதிர் சோலையாக..' மற்றொரு படைவீட்டில் முருகன் குடி கொண்டிருந்த தலமும் மதுரையில்தான் இருந்தது..
"என்ன நேகா இப்படிச் சொல்லிட்ட..? இங்கே மீனாட்சியம்மன் கோவில் இருக்கு.. அழகர் கோவில் இருக்கு.. திருப்பரங்குன்றம் முருகன் தெய்வானையை மேரேஜ் பண்ணிக்கிட்ட கோவில்.. பழமுதிர் சோலையில வள்ளியோட முருகன் நின்றிருக்கிற காட்சியைக் காணக் கண்கோடி வேணுமே..."
"இங்கே கோவில்களாத்தான் இருக்குமா..."
"இதுக்குப் பெயரே கோவில் நகரம்தானேம்மா.."
"தூங்கா நகரம்ன்னுதான மதுரையைச் சொல்லுவாங்க...?"
"கோவில் நகரம்ன்னும் சொல்வாங்க.. நீ சித்திரைத் திருவிழாவைப் பார்க்கனுமே.."
"அதை சித்திரை மாதம் பார்க்கிறேன் அங்கிள்.. இப்ப வேலையைப் பார்க்கிறேன்..."
"அதுக்கு முன்னாலே அர்ஜீன் வாங்கியிருக்கிற கடையை நீ பார்க்கனுமே..."
"ஓ.. அங்கிள்.. ஐ ஹேவ் நோ இன்ட்ரெஸ்ட்.. அந்தக்கடையைப் பார்க்கவா நான் வந்தேன்..?"
'நீ சொன்னாலும்.. சொல்லாவிட்டாலும் அதைப் பார்க்கத்தான் நீ வந்திருக்கிறாய்...' என்று நினைத்துக் கொண்ட பார்த்தசாரதி
"அது அர்ஜீனோட கடை நேகா.. நீ அவனுடைய வுட்பி.. அந்தக் கடையின் எம்.டியின் வுட் பிங்கிற ஹோதாவில நீ அங்கே போய் நின்றால் எவ்வளவு நன்றாயிருக்கும்..?" என்று கேட்டார்..
அந்த வார்த்தைகளில் லேப்டாப்பை மூடிவிட்டு நேகா எழுந்து கொண்டாள்...
"ஓகே.. போகலாம்..."
எதனை.. எதன்கண்ணால் முடிக்க வேண்டும் என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லிக் கொடுத்திருக்கிறார்...
பார்த்தசாரதியோ.. எவரை.. எந்த வார்த்தைகளால் முடுக்க வேண்டும் என்று கற்று வைத்திருந்தார்..
அர்ஜீனின் வருங்கால மனைவி.. அவனுடைய கடைக்கு வருகை தரப் போகிறாள்...
இந்த வார்த்தைகள் தரும் போதை நேகாவைக் கிளப்பிவிட்டு விடும் என்பதை அவர் தெளிவாக அறிந்து வைத்திருந்தார்.. அவற்றை பிரயோகித்தார்.. நேகா கிளம்பி விட்டாள்...
அதே வார்த்தைகள் காவ்யாவை நோக்கிப் பாயும் போது அவள் என்ன நிலைமைக்கு ஆளாவாள் என்பதை நினைத்துப் பார்த்த பார்த்தசாரதயின் இதழ்களில் குரூரப் புன்னகை தவழ்ந்தது...
நேகா கடைக்குள் கால் வைத்தபோது.. எதிர்பட்ட பாவனாவை அழைத்த பார்த்தசாரதி..
"உனக்கு ஆரத்தி எடுக்கத் தெரியுமா..?" என்றார்..
"தெரியாதே சார்.." அவள் விழித்தாள்..
"காவ்யாவுக்கு தெரியுமா..?"
"தெரிந்திருக்கலாம்.. அதுவும் எனக்குத் தெரியாது.."
"உனக்கு வேறு என்னதான் தெரியும்..?"
"கம்யூட்டர் தெரியும்.. கடையின் கணக்கு வழக்கைப் பார்க்கத் தெரியும்.. யு நோ.. அதற்காகத்தான் நான் சேலரி வாங்கறேன்..."
முகத்தில் அடித்ததைப் போல பாவனா பதில் சொல்ல நேகா முகம் மாறினாள்.. பார்த்தசாரதி அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.. அவருக்கு தேவையானது ஒன்றே.. ஒன்றுதான்...
"காவ்யா.." கடைக்குள் நுழைந்த காவ்யாவை நிறுத்தினார்..
"இவள் என் மருமகள் நேகா.. அர்ஜீனின் வருங்கால மனைவி.. இவளுக்கு ஆரத்தி எடுத்து கடைக்குள்ள கூப்பிட்டுக்கிட்டுப் போ.."




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -83
எங்கிருந்தோ ஆசைகள். -83
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-83.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-83.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy