எங்கிருந்தோ ஆசைகள்.. -72

72 காற்றைப் போல நீ வந்து - என்னைக்.. கவர்ந்து செல்ல ஆசைகொண்டேன்.. 'தீயா வேலை செய்யனும் தேவா...' என்று யாரோ அவனுடைய காதில் ஓதி...


72
காற்றைப் போல நீ வந்து - என்னைக்..
கவர்ந்து செல்ல ஆசைகொண்டேன்..


'தீயா வேலை செய்யனும் தேவா...' என்று யாரோ அவனுடைய காதில் ஓதியதைப் போல தேவராஜன் தீயாக வேலை செய்து கொண்டிருந்தான்...
ஒருபக்கம் தங்கராஜின் மூலமாக காவ்யாவை உளவு பார்த்தான்.. இன்னொரு பக்கத்தில் அர்ஜீன் இல்லாத அந்தச் சமயம் பார்த்து அவனுடைய காதலைப் பற்றி பார்த்தசாரதியிடம் பற்ற வைத்தான்...
காவ்யாவின் வீட்டில் கொளுத்திப் போட்டால் தானே கண்ணதாசன் அணைத்து விடுவான்..? அதை பார்த்த சாரதியின் வீட்டில் கொழுத்திப் போட்டால்...?
அணைக்க அர்ஜீன் வருவதற்குள் பார்த்தசாரதி அவனுடைய காதலை அழித்திருக்க மாட்டாரா..?
துரியோதனனின் மூலமாக பார்த்தசாரதியைப் பற்றி அவன் அறிந்த வரை.. அவர் மகனின் காதலுக்கு சம்மதிக்கக் கூடியவராக அவனுக்கு தோன்றவில்லை...
"அவன் கணக்குப் போடறதில மன்னன்டா.. அவங்க தாத்தன் காலத்தில மதுரைக்கு வந்தாங்க.. தொழில செஞ்சு முன்னேறிட்டாங்க.. ஊடே கடையை வித்தாலும்.. வித்த கடையைத் திரும்பவும் வாங்கிக் காண்பிச்சவங்க..."
"நீங்களும் அதப் போல செய்தா என்னப்பா..?"
"எதைச் சொல்ற..?"
"நாம வித்த கடையைத் திரும்ப வாங்கச் சொல்றேன்.."
"அவங்க தாத்தன் உருப்படியான மகனப் பெத்திருந்தான்.. நான் அப்படியா..? உன்னையில்ல பெத்திருக்கேன்..?"
"விடுங்கப்பா.. விசயத்துக்கு வாங்க..."
"இந்த பார்த்தசாரதி அப்பவே ஒரு மார்க்கமாத்தான் யோசிப்பான்.."
"ஒரு மார்க்கமான்னா..?"
தேவராஜன் ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி கேட்டான்.. துரியோதனன் தலையில் அடித்துக் கொண்டார்..
"ஒரு மார்க்கம்ன்னா.. இந்த மார்க்கமில்ல.. இதெல்லாம் உனக்குத் தான் வரும்.. அவன் உன்ன மாதிரி மார்க்கமா யோசிக்கறவனில்ல.. அவன் மார்க்கமே.. வேற மார்க்கம்..."
'ஒரு மார்க்கத்துக்கு இத்தனை மார்க்கமா..?' அரண்டு போன தேவராஜன் கையெடுத்துக் கும்பிட்டான்...
"தெரியாம பேசிட்டேன்ப்பா.. விட்டுருங்க..."
"எத்தனயத்தான் விடறது...?"
"எத்தனையோ விட்டுட்டிங்க.. இதையும் சேர்த்து விடுங்க..."
"உன்னப் பிள்ளயாப் பெத்து தொலைச்சதுக்கு விட்டுக்கிட்டு இருக்கிறதுதான் என் பொழப்பாப் போச்சு.."
துரியோதனன் பேசிய வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்தன.. அவற்றையெல்லாம் கண்டு கொண்டால் வேலைக்கு ஆகாது என்று தேவராஜனுக்கு திட்டவட்டமாக தெரியும்.. அவனும் கண்டு கொள்ளவில்லை...
"அந்தாளு என்னத்தத்தான் யோசிச்சாரு...?"
"ஒரு தடவ அவன் வெளிநாட்டுக்குப் போனான்.. போன இடத்தில நம்ம ஊரு வெங்காயத்துக்கும்.. வர மிளகாய்க்கும் தேவை இருக்கிறத கேள்விப் பட்டிருக்கான்.. திரும்பி வந்ததும் எக்ஸ்போர்ட் லைசன்ச எடுத்து அது ரெண்டயும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சான்.. நல்ல லாபம் கிடைச்சிருக்கு.. உடனே கடைய விட்டுப்புட்டு அந்தத் தொழிலில் இறங்கிட்டான்.. அதுக்கு இந்த ஊரு சரிப்படாதுன்னு சென்னைக்கு ரயிலேறிட்டான்..."
"திருட்டு ரயிலாப்பா...?"
இப்படிக் கேட்ட மகனை என்ன செய்தால் தகுமென்று முறைத்துப் பார்த்தார் துரியோதனன்...
"உன் புத்தி உன்ன விட்டு எங்க போகும்..? நீயாயிருந்தா அப்படிப் போயிருப்ப..."
"நான் எதுக்குப்பா ஊர் விட்டு ஊர் போகனும்..?"
"அதானே.. அப்ப நீ அதைக் கூடசெய்ய மாட்ட..?"
"அது எதுக்குப்பா.. தேவையில்லாம..? எனக்கென்ன வீடில்லயா..? வாசலில்லயா..? சொத்து பத்தில்லயா..? கடையில்லயா...?"
"அத்தனையும் நீயா சம்பாரிச்ச..?"
"யாரு சம்பாரிச்சா என்னப்பா.. அப்பன் சொத்து புள்ளக்கிதான..."
"இப்படியே பேசிக்கிட்டு இரு.. இதுதான உனக்கு வசதி... அவன் அப்படியில்ல... சென்னைக்கு பர்ஸ்ட் கிளாஸில.. டிக்கெட் எடுத்து ரயிலேறிப் போனான்..."
"அப்படியா..?"
"அப்படித்தேன்.. திருட்டு ரயிலேறிப் போகல.. புரிஞ்சதா.."
"புரிஞ்சிருச்சு.."
"என்னத்தப் புரிஞ்சிருச்சோ... எல்லாம் என் தலைவிதி... அவங்கப்பன் அப்படி வரம் வாங்கிப் பொறந்திருக்கான்... உங்கப்பன் இப்படி வரம் வாங்கி உக்காந்திருக்கேன்..."
"விடுப்பா.. இதெல்லாம் ஒரு பேச்சா..?"
"அதான.. பொழைக்கிறவனப் பத்திப் பேசினா.. உனக்கு அது பேச்சில்லதான்... உன்னப் புள்ளயாப் பெத்ததுக்கு விட்டுத் தொலைக்கிறதுதான் என் பிழைப்பா போச்சு..."
"ரயிலேறிப் போனவரப் பத்திப் பேசுவிங்களா.. அத விட்டுப்புட்டு என்னக் கரிச்சுக் கொட்டிக்கிட்டு இருக்கீங்க..."
"சென்னைக்குப் போனவன் ஏற்றுமதிய ஆரம்பிச்சான்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுச்சு.. அந்தப் பணத்தில் உக்காந்து சாப்பிடாம அவன் மகன் கம்யூட்டர் தொழிலில இறங்கிட்டான்.. ம்ஹீம்.. அவன் கொடுத்து வைச்சவன்..."
துரியோதனன் விட்ட பெருமூச்சில் தேவராஜன் சாம்பலாக இருந்து நொடிப்பொழுது வித்தியாசத்தில் விலகி நின்று தப்பித்தான்.. அந்த ஒன்றிற்காகவே அர்ஜீனை வீடுகட்டி அடிக்க வேண்டும் என்ற வெறி அவனுக்குள் கிளர்ந்தது...
"அவங்கப்பன் பணம் கொடுத்திருப்பாரு.. அவன் தொழில ஆரம்பிச்சிருப்பான்.. எங்கப்பன் அப்படியா..?"
"ஏண்டா.. நான் கொடுக்கலையா..?"
"எங்கே..? நானும் ஜவுளிக்கடய நடத்திக் காட்டறேன்னு கெஞ்சிப் பாக்கறேன்.. தர மாட்டேங்-கறிங்களே..."
"அது ஒன்னுதான் என் முகக்கரிய துடைச்சுக்கிட்டு இருக்கு.. அதுவும் உனக்குப் பொறுக்கலியா...?"
"ஏம்ப்பா.. நான் அந்த முகக்கரிய துடைச்சுவிட்டு பவுடர் போட மாட்டேனா...?"
"நீதான.. இன்னும் கொஞ்சம் கரியக் குழைச்சு பூசியில்ல விடுவ.. எதுக்காக ஜவுளிக்கடக்குள்ள நுழையனும்னு தவ்விக்கிட்டு இருக்கிறன்னு எனக்குத் தெரியாதா..? அங்க வேல பாக்குற பொம்பள புள்ளகள ஒருவழி பண்றதுக்கும்.. கடையில சேல வாங்க வர்ற பொம்பளகள ஓட்டி விடறதுக்கும் தான வரனும்கிற.."
கண்டு கொண்டாரே என்றிருந்தது தேவராஜனுக்கு.. எப்படி அவனது எண்ணத்தை மிகச் சரியாக துரியோதனன் வரையறுக்கிறார் என்ற விவரம் அவனுக்கு பிடிபடவில்லை.
"ஏண்டா மகனே..." துரியோதனன் ஆரம்பித்தார்...
"என்னப்பா..?" அலுப்புடன் கேட்டான் தேவராஜன்..
"நீ அந்தப் புள்ளக் காவ்யா கிட்டயும் கடல போடற.. அதுக்கு மேல கண்ணில படற பொம்பளப் புள்ளக  எல்லாருகிட்டயும் கடல போடனும்கிற... ஏண்டா..? ஒரு நிலையா நிக்க மாட்டியா..?"
அது என்ன தேவைக்கு என்றிருந்தது தேவராஜனுக்கு.. எப்படியும் காவ்யா அவனுக்கு கிடைக்கப் போவதில்லை என்றாகி விட்டது.. என்னதான் தலையால் தண்ணீர் குடித்தாலும் கண்ணதாசன் ஒருநாளும் அவனுடைய தங்கையை தேவராஜனுக்கு திருமணம் செய்து தரமாட்டான்.. காவ்யாவும் அவனைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள்...
என்ன ஒன்று.. தேவராஜன் அவளுடைய காதல் நிறைவேறாமல் செய்துவிட ஆன முயற்சியை செய்து பார்க்கலாம்.. அவனுக்குக் கிடைக்காத காவ்யாவின் காதல் கைகூடாமல் செய்து விடலாம்...
மற்றபடி அவனுக்கு அவள் கிடைத்து விடுவாளா என்ன..? அதனால் அடுத்ததை தேட வேண்டிய அவல நிலைக்கு அவன் ஆளாகி விட்ட கொடுமையை துரியோதனனிடம் அவன் சொல்ல முடியாதே...
"சரி.. காவ்யாப் புள்ளகிட்ட உன்னால நெருங்க முடியாதுன்னு ஆகிப் போச்சு.. அந்தக் கடையிலயே.. பாவனா வேலை செய்கிறாளே.. அவகிட்ட உன் பாச்சா எடுபடலையா.."
"எங்கேப்பா..."
துரியோதனன் போட்டு வாங்குகிறார் என்பதை புரிந்து கொள்ளாமல் அலுப்புடன் சொன்னான் தேவராஜன்...
"அந்தப் புள்ளய புரிஞ்சுக்கவே முடியலப்பா..."
"ஓஹோ..."
"ஒரு நேரம் சிரிச்சுப் பேசுது.. ஒரு நேரம் முறைச்சுப் பேசுது..."
"அது சிரிச்சுப் பேசற நேரத்தில நீயும் சிரிச்சுற வேண்டியதுதான...? இதையெல்லாம் நீ செய்யாம இருக்கற ஆளில்லயே.. நான் சொல்லிக் கொடுக்கனும்கிற அவசியமில்லயே..."
தூண்டிலைப் போட்டு விலாங்கு மீனை இழுத்தார் துரியோதனன்.. மீன் வகையாக சிக்கிக் கொண்டது...
"அது சிரிக்கறப்ப காவ்யாப்புள்ள பக்கத்தில இருந்து வைக்குதுப்பா..."
"அதாவது காவ்யா பக்கத்தில இருக்கறப்பதான் அந்தப்புள்ள சிரிக்குது...?"
"ஆமாம்பா..."
"காவ்யா பக்கத்தில இல்லைன்னா முறைக்குது..?"
"ம்ம்ம்..."
"விவரமான புள்ளைப்பா..."
துரியோதனன் சிலாகித்ததில் தேவராஜனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. அவனை அவர் கிண்டலடிப்பதைப் போல அவன் உணர்ந்தான்.. அந்த உணர்தலில் எரிந்து விழுந்தான்...
"என்னத்த விவரத்த கண்டு புட்டிங்க..?"
"எப்பச் சிரிக்கனும்.. எப்ப முறைக்கனும்னு அது தெரிஞ்சு வைச்சிருக்கே..."
"அப்பா..."
"அது வாயைத்திறந்தாலே இங்கிலீஷ்தான் கொட்டும்.. அவங்கப்பன் சென்ட்ரல் கவர்ண்மென்டில ஆபிசரு.. அதனால அடக்கி வாசி.. சிரிக்குதுன்னு நினச்சுப் பக்கத்தில போனே.. பின்னிப் பெடலெடுத்திரும்.. உன்னயெல்லாம் அது திரும்பிப் பார்க்கும்ன்னு என்ன நினைப்பில நீ கனவு காண்ற...?"
"ஏம்ப்பா.. எனக்கென்ன குறைச்சல்..?"
"நீயே குறைச்சல்தாண்டா..."
"நீங்கதான்ப்பா எனக்கு மொத எதிரி.. மத்தவனுக கூட மறந்து விட்டிருவானுக.. நீங்க இருக்கீங்களே.. நினைச்சுப் பாத்து ஒவ்வொண்ணா எடுத்துக் கொடுப்பீங்க..."
"ஆமாண்டா.. எனக்கு அப்படியொரு நேர்த்திக் கடனிருக்கு..."
"அந்தப் பார்த்தசாரதி கணக்கு போடறதில மன்னன்னா.. நீங்க என்னக் குத்திக் காட்டறதில மன்னன்.."
"முடியலடா மகனே.. நானும் எத்தன நாளைக்குத் தான் எனக்கும் வலிக்கலன்னு நடிப்பேன்..."
"விட்டுத் தள்ளுங்க.. அப்ப.. அந்த பார்த்தசாரதி காவ்யாவ மருமகளா ஏத்துக்குவான்னா சொல்றீங்க...?"
"மாட்டான்..." உறுதியாகச் சொன்னார் துரியோதனன்..
"எப்புடிப்பா..?"
"அதான் சொன்னேனில்ல.. அவன் கணக்குப் போடறதில மன்னன்டா.. அவன் சென்னைக்குப் போயி தொழில் தொடங்கினபுதுசில அவனுக்கு பொண்ணுதர திருநெல்வேலியிலயும் ஆள் இருந்துச்சு.. இந்த மதுரையிலயும் ஆள் இருந்துச்சு.. அவன் அந்த ரெண்டையும் விட்டுட்டு காஞ்சிபுரத்தில போயி பொண்ணக்கட்டினான்.. அவங்க அன்னியம்தான்..."
"ஏன்ப்பா.. காதலா..?"
"ஒரு புண்ணாக்குமில்ல.. அவன் பொண்டாட்டி வீட்டில பணவசதி அதிகம்.. அது வீட்டுக்கு ஒத்தப் பொண்ணு..."
"இதப் பாருடா.. நீங்க சொல்றது சரிதான்ப்பா... அவரு கணக்குப் போடறதில மன்னன்தான்..."
"இப்பப் பாருடான்னு நீ யாரைச்சொன்ன..? என்னத்தான..?"
"ஐயோ அப்பா.. உங்கள நான் அப்படிச் சொல்வேனா..? பொதுவாச் சொன்னேம்ப்பா..."
துரியோதன் நம்பாத பார்வையொன்றை பார்த்து வைத்தார்... தேவராஜனைப் பற்றி அவருக்குத் தெரியும்.. சரக்கை அடித்துவிட்டு அவன் கன்னா பின்னாவென்று துரியோதனனைப் பற்றிப் பேசும் வார்த்தைகளை.. அவனிடம் ஓசிச்சரக்கை உபயமாகப் பெற்றுக் குடிக்கும் எட்டப்பன்களில் சிலர் அவரிடம் போட்டுக் கொடுத்திருந்தனர்..
அதற்கேற்றார் போல.. அவர் திட்டும் போதெல்லாம் அவன் இதைப் போல.. 'அடா.. புடா..' என்று பேசிவிட்டு.. பொதுவாக பேசினதாக சொல்லி விடுவதை வழக்கமாக வைத்திருந்தான்...
"உன்னயெல்லாம் என்ன கணக்கிலடா எடுத்துக்கறது..?"
"நீங்க எதுக்குப்பா கணக்க கட்டி இழுக்கறிங்க.. நீங்க என்ன பார்த்தசாரதியப் போல கணக்கு போட்டு.. ஒத்தப் பொண்ணாப் பொறந்ததையா கட்டியிருக்கீங்க..? ஐஞ்சாவதா பொறந்த பஞ்சவர்ணம்ன்னு அம்மாவயில்ல கட்டியிருக்கீங்க.."
அவன் அங்கே சுற்றி.. இங்கே சுற்றி பெற்ற அன்னையிடமே வந்து நின்று விட்டான்.. துரியோதனன் மனதிலும் அப்படியொரு ஏக்கமும்.. பொறுமலும்.. பொறாமையும் உண்டுதானென்றாலும்.. மனைவியின் மீதிருந்த பாசத்தில் அவர் மகனை அதட்டினார்...
"இத அப்படியே உங்கம்மா காதில போட்டேன்னு வைய்யி... உனக்கு சோறு தண்ணி கிடைக்காதுடி.. எப்புடி வசதி.."
"வேணாம்ப்பா வேணாம்.. என் அன்னம் தண்ணியில கை வைக்க வேணாம்.. உங்களுக்கு புண்ணியமாப் போயிரும்..."
"அஃது.. அந்த பயம் இருக்கட்டும்..."
மனதுக்குள் பெருமூச்சை விட்டபடி மகனை எச்சரித்தார் துரியோதனன்..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -72
எங்கிருந்தோ ஆசைகள்.. -72
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-72.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-72.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy