எங்கிருந்தோ ஆசைகள்.-70

எங்கிருந்தோ ஆசைகள்... பாகம் – 3 70 நீ வருகின்ற அந்நாளில்... உன் நிழலாகிவிட ஆசைகொண்டேன்.. காவ்யா உற்சாகமாக இருந்தாள்.. இரவில் நெட...

எங்கிருந்தோ ஆசைகள்...
பாகம் – 3



70

நீ வருகின்ற அந்நாளில்...
உன் நிழலாகிவிட ஆசைகொண்டேன்..


காவ்யா உற்சாகமாக இருந்தாள்.. இரவில் நெடுநேரம் வரை அர்ஜீனுடன் பேசிக் கொண்டிருந்ததில் எழுந்த சந்தோச நினைவலைகளில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தாள்...
"பாடு காவ்யா..."
காதோரம் அவன் குரல் கேட்டது.. நள்ளிரவின் அமைதியில் பூட்டிய அறைக்குள் யாரும் வர மாட்டார்கள் என்றாலும் போர்வைக்குள் பதுங்கியபடி பேசிக் கொண்டிருந்தவளின் காதோரம் குறுகுறுத்தது..
"பாட்டா..?" அவள் ஒரு தினுசான குரலில் கேட்டாள்...
"ஊம்.. பாட்டுத்தான்.. ஏன் நீ பாட மாட்டியா..?"
"நான் பாடறது இருக்கட்டும்.. ஐயாவுக்கு என்ன திடிர்ன்னு இப்படியொரு ஆசை..?"
"ஏண்டி..? நான் ஆசைப்படக் கூடாதா..?"
அவனது மூச்சுக் காற்றின் தாபத்தை காதுகளில் உணர்ந்த காவ்யாவின் உடலில் சூடேறியது.. பக்கத்தில் இல்லாமலே அவன் பக்கத்திலிருக்கும் உணர்வை
அவன் உணர்த்தியதில் அவள் கிறங்கித் தவித்துக் கொண்டிருந்தாள்...
"ஆசைப்படலாம்.. வேணாங்கல.." அவள் முணுமுணுத்தாள்...
"வேணாம்ன்னு கூட நீ சொல்லுவியா..?" அவன் அதட்டியதில் அவளுக்குள் ஆனந்தம் ஊற்றெடுத்தது...
"இந்த நட்ட நடுராத்திரியில உங்ககூடப் பேசவே பயமாயிருக்கு.. இதில பாட்டுப் பாடினா அவ்வளவுதான்.."
"என்ன ஆகும்..?"
"என்ன.. ஆகுமா..? எங்க அம்மா விறகுக் கட்டயத் தூக்கிக்கிட்டு வந்துரும்.. அதனால இப்படியாப்பட்ட அபாய அறிவிப்பு ஆசைகள விட்டுவிட்டு வேற எதையாச்சும் பேசுங்க..."
"ஊஹீம்.. எனக்கு உன் பாட்டைக் கேட்டாகனும்.."
"அடடா.. இதென்ன புதுசா அடம் பிடிக்கறிங்க..."
"அப்படித்தான்னு வைச்சுக்கயேன்..."
"வைச்சுக்கல்லாம் முடியாது.. கட்டிக்கத்தான் முடியும்.."
"ஏய்ய்.. நான் வெளியூரில இருக்கேன்ங்கிற தைரியமா..? இப்படிக் கிளப்பி விட்டேன்னு வைய்யி.. அடுத்த பிளைட்டை பிடிச்சு இந்தியாவுக்கு ஓடி வந்திருவேன்..."
"வேணாம் சாமி.. உங்க வேலயக் கெடுத்தேங்கிற பழி எனக்கு வேணாம்.. போன வேலய முடிச்சுட்டு சமத்துப் பிள்ளையா திரும்பி வாங்க..."
"நீ சொன்னபடி கேட்டா.. என்ன தருவ..?"
திரும்பவும் அவன் குரல் தாபத்துடன் குழைந்து ஒலித்தது.. காவ்யா தவித்தாள்.. மதுரைக்கு அவன் வந்திருந்த போதெல்லாம்.. தொடாமலே பார்வையால் தொட்டு அவளைப் பாடாய் படுத்துவான்.. இப்போதோ... பார்க்க முடியாத தொலைதூரத்தில் இருந்து.. அவன் குரலாலே தொட்டு அவளை மயக்கி இழுக்கிறான்...
காவ்யா கிறங்கித் தவித்து கிளர்ந்து போராடினாள்..
"பாடுடி.." அவன் குழைந்து கிசுகிசுத்தான்..
"வேணாம்.."
என்னவோ.. அவன் கிட்டத்திலிருந்து அவளைத் தொட்டுக் கொண்டிருப்பதைப் போல அவள் வெட்கத்துடன் முணுமுணுத்தாள்...
"எனக்கு வேணும்.." அவளை ஆண்டு கொண்டிருப்பவனைப் போல அவன் பிடிவாதத்துடன் பேசினான்...
"சத்தம் கேக்கும்ங்க..." கட்டினவனிடம் கெஞ்சுவதைப் போல அவள் கெஞ்சினாள்...
"சத்தமில்லாம பாடு.."
"உங்கள நல்லா நாலு மொத்து மொத்தனும்.. இந்தப் பிடிவாதம் எதுக்கு..?"
"நீ பாடறதைக் கேட்டா.. நீ என் பக்கத்தில இருக்கிறதப் போல இருக்கும்டி.. பாடு.."
அதற்கு மேல் அவனின் தாபத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. மெலிதான குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும் படியாக அவள் பாடினாள்..
"காதோடுதான் நான் பாடுவேன்...
மனதோடுதான் நான் பேசுவேன்..
விதியோடுதான் விளையாடுவேன்..
உன் மடிமீதுதான் கண்மூடுவேன்.."
கண்மூடி.. அவன் மடிமீது படுத்திருக்கும் உணர்வோடு தலையணையை இறுக்கிக் கொண்டு பாடினாள் காவ்யா.. அவன் குறுக்கிடவில்லை.. அவள் பாடலில் நனைந்து போனவனாக மௌனத்துடன் கை கோர்த்து அவள் பாடலின் வரிகளைச் சுவைத்து ரசித்துக் கொண்டிருந்தான்..
"வளர்ந்தாலும் நான் இன்னும்
சிறு பிள்ளைதான்...
நான் அறிந்தாலும் அதுகூட
நீ சொல்லித்தான்..."
அவளின் குழைந்த குரல் உணர்த்திய அர்த்தங்களில் அவன் பொதிந்திருக்க வேண்டும்.. எங்கிருந்தோ ஆசைகளைத் தேடிப் பிடித்து அவள் மனதில்
திணித்து வைத்தவன்.. அவள் சொல்லுவதை ஏற்றுக் கொண்டவனாக லேசாக சிரித்தான்.. அந்த சிரிப்பொலியில் அவன் சொல்லிக் கொடுத்த தருணங்கள் அவள் மனதில் வந்து நின்றன...
"உனக்கேற்ற துணையாக..
எனை மாற்ற.. வா...
குலவிளக்காக நான்வாழ
வழிகாட்ட.. வா..."
ரகசியத் தருணங்களின் நினைவோடு அவனை அவள் அழைத்தாள்.. தாங்க முடியாத தாபத்துடன் அவன் பொங்கினான்...
"வந்துருவேண்டி..."
"அப்படி எதையும் செய்துராதீங்க..."
"ஏய்ய்.. நீதானே.. 'வா.. வா..'ன்னு கூப்பிட்ட..?"
"கூப்பிட்டா..? ஓடி வந்திருவீங்களா..?"
"பின்னே..? வரமாட்டேனா..?"
அவன் பதிலில் அவள் இதயம் நனைந்தது.. அவனுடனான ரகசியப் பேச்சுக்கள் உணர்த்திய காதலில் அவள் வாழ்ந்து கொண்டிருந்தாள்.. இருபத்தி நான்கு மணி நேரத்தின் ஒவ்வொரு மணித் துளியிலும் அவன் நினைவு உறைந்து கிடந்தது.. அவனை நினைக்காத நாளில்லை.. நினைக்காமல் அவளில்லை.. அவன் நினைவை மனதில் சுமந்து கொண்டு வெளியில் விட்டுச் சிறகடிக்கும் சிட்டுக்குருவியைப் போல அவள் பாவனை காட்டினாள்..
உறங்காத இரவின் மணித்துளிகள் சொல்லும் அவளின் காதலின் கதையை.. காற்றில் கலந்த அவளின் குரலோசை சொல்லும் அவளின் ஆசையின் அளவை...
காவ்யா காதலித்தாள்.. அர்ஜீன் அருகில் இருந்த பொழுதுகளைவிட அவன் இல்லாத அந்தப் பொழுதுகளில் அவளின் காதலின் வேகம் அதிகரித்தது..
அவனைக் காணப் போகும் அந்த நாளுக்காக அவள் காத்திருக்க ஆரம்பித்தாள்...
உறக்கமில்லாத இரவை வீங்கிய இமைகள் சொல்ல.. உற்சாகம் கொப்புளிக்க.. சாப்பிட வந்து அமர்ந்த தங்கையை உற்றுப் பார்த்தான் கண்ணதாசன்...
"என்னடா தம்பி.. உந்தங்கச்சிய இன்னைக்குத்தான் புதுசா பாக்கிறாப்புல உத்து உத்துப் பாக்கறியே என்ன விசயம்...?"
அவர்களுக்கு தட்டுக்களை வைத்தபடி கேட்டாள் அன்னபூரணி.. தாயின் பார்வையிலிருந்து எதுவுமே தப்பாது என்று நினைத்துக் கொண்டான் கண்ணதாசன்...
அப்படிப்பட்ட அம்மா எப்படி காவ்யாவின் கண்ணிமைகள் வீங்கியிருப்பதை பார்க்க மறந்தாள்..?
அவன் நினைத்து முடிப்பதற்குள் காவ்யாவின் பின்னந்தலையில் ஒர் அடி கொடுத்தாள் அன்னபூரணி...
"கண்ணெல்லாம் வீங்கிச் சிவந்திருக்கு.. விடிய விடிய தூங்காம பரிட்சைக்கு படிச்சியா..?"
"இல்லேம்மா.." அகப்பட்டுக் கொண்டவளாக திருதிருத்தாள் காவ்யா..
"வேற என்னத்த வெட்டி முறிச்ச..? கதைப் புத்தகத்த கண்ணுக்கு கொடுத்திருந்தியாக்கும்..?"
"ஆமாம்மா..."
தாயே வழி சொல்லிக் கொடுத்துவிட்டாள் என்ற சந்தோசத்துடன் சொன்னாள் காவ்யா..
"அதப் பகல்ல படிக்கிறதுக்கென்ன..?"
"பகல்லதான் நான் வேலைக்கு போயிர்ரேனேம்மா.."
அன்னபூரணியின் முகம் மாறியது.. கவலையுடன் தோசைகளை எடுத்து வைத்தபடி அவள் மகனின் முகம் பார்த்தாள்..
"கண்ணா.."
"என்னம்மா...?"
"அந்தத் துரியோதனன் வந்துட்டுப் போனதில இருந்து பக்கு.. பக்குன்னு இருக்குடா.. அந்த எடுபட்ட தேவராஜன் பய வேற எம்மககிட்ட வாலாட்டறான்னு சொல்ற..."
"இப்ப அப்படியில்லம்மா.. அவனக் கடைக்குள்ள விடக்கூடாதுன்னு உத்தரவே போட்டிருக்காங்களாம்.."
"கடைக்குள்ள வரமாட்டான்ங்கிற.. சரி.. அவன் ரோட்டில வம்புக்கு வந்தான்னா..?"
"கண்ணதாசன் கையென்ன பூப்பறிக்கவா போயிருக்கு..?" கண்கள் சிவந்தான் கண்ணதாசன்..
"அதுக்கில்லடா தம்பி.. வயசுப் பொண்ணப் பொத்திப் பொத்தி வைச்சுக்கிட்டு எதுக்காக காவல் காக்கனும்..? மாப்பிள்ளயத்தேடி கட்டிக் கொடுத்துட்டா.. அதுக்கப்புறம் அவன் பாடுன்னு நான் நிம்மதியா இருக்கலாமில்ல.."
காவ்யா என்ன அவ்வளவு பாரமாகவா ஆகிவிட்டாள்..? அவளுக்கு கண்கள் கலங்கி விட்டன.. அன்னபூரணி சொன்னதை யோசித்துக் கொண்டிருந்தவன் தங்கையின் கண்ணீரைப் பார்த்து விட்டான்...
"இப்ப எதுக்காக கண்கலங்கற..?" என்று தங்கையை அதட்டினான்..
"ஒன்னுமில்ல.." இமைகளைச் சிமிட்டி கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் காவ்யா..
"ஒன்னுமில்லாததுக்கா அழுகிற..? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும்.. அம்மா இடத்தில இருந்து பாரு.. அப்ப அவங்க கவலை உனக்குப் புரியும்.." கண்டிப்புடன் பேசினான் கண்ணதாசன்...
"இல்லண்ணே..." கண்ணீரை விழுங்கிக் கொண்டாள் காவ்யா...
"என்னைக்கிருந்தாலும் நீ கல்யாணம்ன்னு ஒன்னைப் பண்ணிக்கிட்டுத்தான் ஆகனும்.. காலம் பூராவும் இந்த வீட்டிலயே நீ இருந்துர முடியுமா..?"
"அதுக்கில்லண்ணே..."
"எதுக்கா இருந்தாலும் இப்ப எதையும் பேச வேணாம்.. சாப்பிடு.."
கண்ணதாசன் தங்கையைக் கண்டிப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தாள் அன்னபூரணி.. அவள் அறிந்தவரையில் அவன் தங்கையைக் கண்டித்துப் பேச மாட்டான்..
"இப்பத்தாண்டா தம்பி நீ எம்பக்கமா யோசிக்கிற.."
"யோசிக்காம என்னம்மா.. நானும் மாப்பிள்ளை தேடிக்கிட்டுத்தான் இருக்கேன்.. நல்ல இடமா அமைய வேனாமா..? எவனோ ஒரு நாதாரிப் பயலுக்கு பயந்துக்கிட்டு நம்ம வீட்டுப் பொண்ண கண்ட கழிசடைக்கு கட்டிக் கொடுக்க முடியுமா..?"
"அந்த நாய்க்கு யாரு பயந்தது..? விளக்கு மாறு பிஞ்சிராது..? அதுக்காக இல்லைடா கண்ணதாசா.. வௌங்காத வெட்டிப்பய.. ஏதாவது சோலியிருந்தா அதில மனசு போகும்.. இவனுக்கு என்ன சோலியிருக்கு..? வெட்டியாப் பொழுதப் போக்குறவன் மனசில வௌங்காத எண்ணம்தான வரும்..? அவன் பாட்டுக்கு உந்தங்கச்சி கையப் பிடிச்சு இழுத்திட்டான்னா..?"
"கையை வெட்டிர மாட்டேன்..?"
"வெட்டி என்ன பிரயோசனம்..? பேரு பட்டது.. பட்டதுதான..?"
தாயின் கவலையிலும் ஓர் அர்த்தமிருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.. ஆனால் காவ்யாவின் விசயத்தில் அந்தபயம் தேவையற்றது என்று அவன் நினைத்தான்...
'காவ்யாவாவது அவன் கையப் புடிச்சு இழுக்கிறதுக்கு கையக் கொடுத்துக்கிட்டு நிக்கிறதாவது...'
காவ்யா பெண்சிங்கம்..! அவளின் நிழலைக் கூட எவரும் நெருங்க முடியாது.. அர்ஜீன் நெருங்கியிருக்கிறான் என்றால் அதற்கு அவளின் அனுமதி இருக்கிறது.. தேவராஜன் அப்படியில்லையே...
அதைச் சொல்லாமல் தாயைச் சமாதானப் படுத்த அவன் முனைந்தான்..
"அம்மா.. இது யாரு..? உங்க மக.. எந்தங்கச்சி.."
"அதுக்கென்னடா..?"
"இதுகிட்ட நின்னு பேசினாலே பல்லைத் தட்டிக் கையில் கொடுத்துரும்.. இதில அவன் கையப்பிடிச்சா சும்மாவா விட்டிரும்..?"
கண்ணதாசனின் பேச்சில் சிரித்து விட்டாள் அன்னபூரணி.. மகளைப் பெருமையுடன் பார்த்தபடி...
"ஆமாமா.. இந்த ராணி மங்கம்மாவப் பத்தி உனக்கு ரொம்பப் பெருமைதான்.. ஆனாலும் தம்பி.. இவ கல்யாணத்த வெரசா முடிச்சிடறது நல்லதுடா.."
"பார்க்கலாம்மா..."
"நம்ம சொந்தபந்தத்திலயே நிறையப்பேரு காவ்யாவ பொண்ணுக் கேக்கிறாங்கடா தம்பி.. உனக்கும் தெரியும் தான.. அவங்களுக்கு என்ன வசதி வாய்ப்பு குறைச்சலாவா இருக்கு..? இல்ல.. மாப்பிள்ளக தான் ஏப்ப.. சாப்பயா இருக்காங்களா.. எல்லாம் சிங்கங்கடா தம்பி.. அவங்கள்ல ஒருத்தருக்கு நம்ம காவ்யாவ கட்டிக் கொடுத்திரலாம்டா.."
"காவ்யா படிச்ச புள்ளம்மா..."
"அவங்களும் படிச்ச மாப்பிள்ளகதாம்பா..."
"கவர்ண்மென்ட் வேலயில இருந்தா நல்லதும்மா.."
"இருக்காங்கப்பா.. நம்ம சாமித்துரை அண்ணனோட ரெண்டாவது மகன் கவர்ண்மென்டிலதான் வேலை பாக்குது.. நம்ம சின்னச்சாமி அண்ணனோட மூத்த மகன் கவர்ண்மெண்ட் வேலதான்.. இன்னும்.."
அன்னபூரணி அடுக்கிக் கொண்டே போக.. கண்ணதாசன் தங்கையின் முகத்தையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவளின் முகவெளுப்பையும்.. தோசையைச் சாப்பிடாமல் நின்று விட்ட அவளின் கையையும் கவனித்தவனுக்கு மனம் கனத்தது...
அன்னபூரணியின் பயத்தில் நியாயம் இருந்தது.. நல்லவர்கள் எதிரியாக மாறினால் கவலைப்படத் தேவையில்லை.. கெட்டவர்கள் எதியாக மாறினால் கவலைப் பட்டுத்தான் ஆகவேண்டும்.. அவர்கள் மனித உருவில் இருக்கும் மிருகங்கள்.. எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஒருவரை அழிக்க எந்த வழியையும் அவர்கள் உபயோகிப்பார்கள்.. எந்த அளவிற்கும் கீழிறங்குவார்கள்..
அப்படிப்பட்ட மிருகத்திடமிருந்து மகளைக் காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் சேர்த்துவிட அன்னபூரணி துடிக்கிறாள்...
ஆனால்.. காவ்யா அதை உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லையே...







Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,17,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,92,ஒற்றையடிப்.. பாதையிலே..,11,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,16,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.-70
எங்கிருந்தோ ஆசைகள்.-70
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-70.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-70.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy