எங்கிருந்தோ ஆசைகள். -66

66 தென்றலாக நீயும் வந்து... என் சேலைதொட ஆசைகொண்டேன்..  "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு...&q...

66
தென்றலாக நீயும் வந்து...
என் சேலைதொட ஆசைகொண்டேன்..


 "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு..."

சப்தமாக திருக்குறளைச் சொல்லிக் கொண்டிருந்தார் சிவதாணு.. இட்லியைப் பிய்த்து சட்னியில் தோய்த்து வாய்க்குள் தள்ளிக் கொண்டிருந்த கண்ணதாசன் நிமிர்ந்து சிவதாணுவை மௌனப் பார்வை பார்த்து விட்டு வேலையைத் தொடர்ந்தான்...
"இதுக்குப் பொருள் என்னன்ன தெரியுமோ..."
தொடர்ந்த சிவதாணுவை சுடச்சுட ஆவி பறக்கும் இட்லிகளுடன் வந்த அன்னபூரணி அதட்டினாள்..
"ஆரம்பிச்சாச்சா..? பாடம் எடுக்கணும்னா அதுக்கொரு காலம் இருக்கு.. இடம் பொருள் ஏவல்ன்னு இருக்கு.. இப்புடியா புள்ளைக சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறப்ப அதுகளத் துரத்தராப்புல பாடம் எடுக்கறது..? நீங்க செய்யற வேலைக்கு திருவள்ளுவருக்கே கோபம் வந்து ஓலைச் சுவடியால உங்கள மொத்து மொத்துன்னு மொத்தப் போறாரு..."
"அதுக்கில்லடி அன்னபூரணி.. மத்த நேரத்தில இதுக ரெண்டையும் புடிக்க முடியுதா..? ஆளுக்கொரு திசையில ஆளாப் பறந்துக்கிட்டு ஓடிப் போயிருதுக.. சாப்பிடற நேரத்திலதான எம்புடுதுக.."
"எம்புட்டா.. நீங்க குறளச் சொல்லி விரட்டியடிப் பீங்களா..? பேசாம சாப்பிடற சோலியப் பாருங்க.. திருக்குறள் எங்கேயும் ஓடிப் போயிராது.. அது காலா காலத்துக்கும் நிலைச்சு நிற்கும்.. அதனால அத நிப்பாட்டறேன் பேர்வழின்னு புள்ளகள துரத்தியடிக்காம சாப்பிட விடுங்க.."
"என்னடி நீ..."
முணுமுணுத்தபடி இட்லிகளை சாம்பாரில் குளிப்பாட்டினார் சிவதாணு.. அவர் பக்கமிருந்த சாம்பார் கிண்ணத்தை நகர்த்தி வைத்தாள் அன்னபூரணி...
"ஒரு சட்டி சாம்பாரையும் உங்க ஒருத்தருக்காக மட்டும் வைக்கல.. மத்தவங்களுக்கும் கொஞ்சம் மிச்சம்.. மீதிய வையுங்க..."
"யாருடி இவ.. சாப்பிட்டாலும் குத்தம்ங்கிறா.. சாப்பிடலேன்னாலும் குத்தம்ங்கிறா.." முணுமுணுத்தார் சிவதாணு...
"அதுக்காக இப்புடியா..? சாம்பாரத் தொட்டுச் சாப்பிடக் கண்டோம்.. இப்புடிக் குளம் கட்டிக் குடிக்கவா கண்டோம்..?"
அன்னபூரணி நொடித்துக் கொண்டிருக்கும் போது.. வாசலில் அழைப்புமணி அலறியது...
'யாரா இருக்கும்..?'
அன்னபூரணி யோசனையுடன் மகனைப் பார்த்தாள்.. அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கையுடன் எழுந்து கொள்ளப் போனான்..
"பொறுப்பா.. நான் பாக்கறேன்..."
அன்னபூரணி வாசலுக்கு விரைந்தாள்.. கதவைத் திறந்தாள்..
"என்ன தங்கச்சி.. எப்புடியிருக்கிற..?" வாய் நிறைய சிரிப்புடன் துரியோதனன் நின்று கொண்டிருந்தார்...
அன்னபூரணிக்கு அவரைத் தெரியும்தான்.. ஆனாலும் அவருடன் சகஜமாக பேசிப் பழகும் அளவிற்கு அவரை அவளுக்குத் தெரியாது.. பெரியப்பாவின் சித்தப்பா பேத்தியோட கொழுந்தனாருக்கு.. நாத்தனா மகனோட ஒன்னு விட்ட தம்பிக்கு ரெண்டு விட்ட சகலை என்ற ரீதியில் சுற்றி வளைத்து துரியோதனின் குடும்பம் சிவதாணுவின் குடும்பத்திற்கு வெகு தூரத்துச் சொந்தமாக கணக்கில் வந்தது.. அந்த ஒரு காரணத்துக்காகவே காவ்யாவிற்கு துரியோதனனின் கடையில் வேலை செய்ய அனுமதி தந்திருந்தாள் அன்னபூரணி...
வராத விருந்தாளி வந்திருப்பதில் அவள் முகத்தில் யோசனை வந்தாலும்.. வந்தவரை வரவேற்க வேண்டிய பண்பாட்டின்படி..
"வாங்கண்ணே.." என்று சொல்லி வைத்தாள் அன்னபூரணி...
"எங்கேம்மா... மச்சானயும்.. மாப்பிள்ளயையும் காணோம்.. வெளியே போயிட்டாங்களா..?" சுவாதீனமாக கேட்டபடி உள்ளே வந்தார் துரியோதனன்...
'என்னடி இது.. இந்தாளு புதுசா மாமன் மச்சினன் உறவு கொண்டாடறாரு.. காரணமில்லாம இந்த ஆளு.. சொந்தம் சொல்ல மாட்டாரே...'
மனதுக்குள் தோன்றியதை மறைத்துக் கொண்டு..
"எங்கயும் போகலண்ணே.. உள்ளதான் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க.. நீங்களும் வாங்க.. சாப்பிடலாம்.." என்று ஒப்புக்கு அழைத்தாள் அன்னபூரணி..
"சாப்பாட்டுக்கென்னம்மா.. இன்னொரு நாளைக்கு விருந்தே ஆக்கிப் போடு.. சொந்த பந்தத்தோட உக்காந்து சாப்பிட்டுட்டுப் போறேன்.. உன் கைச்சாப்பாடு எங்கே ஓடிறப் போகுது..? என்னதான் இருந்தாலும்.. நாமள்ளாம் ஒன்னுக்குள்ள ஒன்னாச்சே..."
அன்னபூரணி உட்காரச் சொல்லாமலே ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கால்மேல் கால் போட்டுத் தோரணையாக சாய்ந்து கொண்டார் துரியோதனன்..
'இந்த ஆளு எதுக்கு வந்திருப்பாரு..?' என்ற யோசனையுடன்
"இருங்கண்ணே.. தம்பிய வரச்சொல்றேன்..." என்றாள் அன்னபூரணி...
"அப்புடியே மச்சானையும் வரச் சொல்லும்மா..." என்று சொன்னார் துரியோதனன்..
'சொல்லிட்டாப் போச்சு..' என்ற நினைவுடன் சிரிப்பதைப் போல பாவனை செய்துவிட்டு டைனிங் ஹாலுக்கு விரைந்தாள் அன்னபூரணி...
"யாரும்மா..?" என்று கேட்டான் கண்ணதாசன்..
"காவ்யா வேல பாக்கிற கடையோட பழைய முதலாளி வந்திருக்காருடா தம்பி.." என்று சொன்னாள் அன்னபூரணி..
"யாரு..? துரியோதனனா வந்திருக்கிறாரு..?"
கண்ணதாசன் கேட்ட அந்த நொடியில் நிமிர்ந்து பார்த்த காவ்யாவின் முகத்தில் தெரிந்த கலவரத்தை இனம் கண்டு கொண்டவனின் புருவங்கள் சிந்தனையுடன் சுருங்கின...
"என்ன விவரம்ன்னு கேட்டியாம்மா..?"
"கேக்கலைப்பா.. வந்தாரு.. தங்கச்சின்னு பாசமழையைப் பொழிஞ்சாரு.. மச்சானும்.. மாப்பிள்ளயும் எங்கேன்னு உறவு கொண்டாடிக்கிட்டு உக்காந்திருக்காரு.."
"இதென்னம்மா புதுசா இருக்கு..?"
"எனக்கும் அதுதாண்டா தம்பி.. ஒரு வேள.. இப்படியிருக்குமோ..?"
"எப்படி..?"
"இவரு மக நம்ம காவ்யாவப் போல டிகிரி படிச்சுருக்கு.. பாக்கறதுக்கும்.. மூக்கும்.. முழியுமா லட்சணமா இருக்கும்.. அந்தப் பொண்ண உனக்குக் கொடுக்கனும்னு கேக்க வந்திருப்பாரோ... அந்தப் பொண்ணு பேரு கூட தேன்மொழியோ.. என்னவோன்னு சொல்லுவாங்க.. நான் கேட்டுக்கிட்டதில்ல..."
"இப்ப இது தேவையாம்மா..?" எரிச்சலுடன் தாயை அதட்டினான் கண்ணதாசன்...
காவ்யாவின் முகம் மாறியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.. வந்திருப்பவரின் வரவுக்கும்.. காவ்யாவின் பதட்டத்திற்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது என்று அவன் மனதில் ஒர் பறவை கூவியது..
"என்னையெதுக்குடா தம்பி கோவிச்சுக்கற..? அப்படி இருந்தாலும் பொண்ணு வீட்டாளுக.. நேரடியா வர மாட்டாங்களே.. ஊடே யாரையாச்சும் தூதுதான விடுவாங்க..?" அன்னபூரணி நெற்றிப் பொட்டை ஒற்றைவிரலால் தட்டினாள்...
அங்கே அப்படியொரு வட்டமேஜை மாநாடு நடந்து கொண்டிருக்க.. அதைப்பற்றிய கவலையே இல்லாமல்... ஒரு கையில் திருக்குறள் புத்தகத்தைப் பிடித்துப் படித்தபடி மறுகையில் இட்லியை சட்னி.. சாம்பாரில் குளிப்பாட்டி உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார் சிவதாணு...
"இந்த மனுசனப் பாத்தியா..?" எரிச்சலுடன் அவர் கையிலிருந்த திருக்குறள் புத்தகத்தைப் பிடுங்கினாள் அன்னபூரணி...
"என்னடி..?" என்றவரிடம்..
"என்னத்த நொன்னடி..? திருக்குறளு எங்கேயும் ஓடிப்போயிராதுன்னு இப்பத்தான சொன்னேன்..? சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்காம அதென்ன.. குறளுக்குள்ளயே புதைஞ்சு கிடக்கறிங்க.. நீங்கதான் குறள நட்டமா நிப்பாட்டப் போறிங்களா..? அது ஏற்கனெவே உங்களுக்கு எட்டாத உசரத்தில நிமிந்து நிக்குது.. நீங்க பொறுப்பான ஆம்பளயா.. குடும்பத்தில என்ன நடக்குதுன்னு காது கொடுத்துக் கேட்டுப் பழகுங்க.." என்று சீறினாள்..
"என்னடா கண்ணா.. எதுக்காக உங்க அம்மா காளிவேசம் கட்டறா..?" மகனிடம் வினவினார் சிவதாணு..
"ம்ப்ச்.. என்னப்பா நீங்க.. துரியோதனன் வந்திருக்காராம்..."
"அது யாரு..?"
"இது வேறயா..? காவ்யா வேலை பாக்கிற கடையோட பழைய முதலாளி..."
"அந்தாளா..? அவரு எதுக்காக நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு..?"
"நாம போயி கேட்டாத்தான தெரியும்..?"
"அதுக்குத்தான் உங்கம்மா கோவிச்சுக்கிறாளா..?"
"ஆமாம்பா.. ஆமாம்.. தட்டில தளும்பற சாம்பாரக் குடிச்சு முடிச்சிட்டிங்கன்னா.. போயி.. என்ன ஏதுன்னு விசாரிக்கலாம்.. அம்மா.."
"நீ உங்க அப்பாவ இழுத்துட்டுப் போடா தம்பி... நீங்க முன்னால போனா.. நானு பின்னால காபித்தம்ளரோட வந்து நிக்கறேன்.."
அன்னபூரணியின் புரிந்து கொள்ளலில் நிம்மதியானான் கண்ணதாசன்.. எப்படித்தான் இப்படியாகப் பட்ட அம்மாவிற்கு.. அவனுடைய அப்பாவைப் போலக் கணவன் வந்து வாய்த்தானோ என்றிருந்தது அவனுக்கு.. இறைவன் போடும் முடிச்சைப்பற்றி யோசித்துக் கொண்டே கை கழுவ எழுந்தான் கண்ணதாசன்...
அங்கே கை கழுவுவதைப் போல நின்று குழாயைத் திறந்து விட்டு.. அதில் கொட்டும் நீரில் கை நனைக்க மறந்து போனவளாக முன்னறையை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த காவ்யாவைக் கண்டதும் அவன் விழிகளில் சந்தேகம் வந்தது..
குழாயை மூடி.. கொட்டும் நீரை நிறுத்தியவன் தங்கையைப் பார்த்தான்..
"என்ன விசயம்..?" என்றான்..
"ஒன்னுமில்லண்ணே..." அவள் தடுமாறினாள்..
"ஒன்னுமில்லைன்னு சொன்னாத்தான் அதில ஓராயிரம் விசயமிருக்கும்.. என்னன்னு சொல்லு..."
"எதுவுமில்லண்ணே..."
கண்ணதாசன் தங்கையை உற்றுப் பார்த்தான்.. அவள் விழிகளில் தெரிந்த சஞ்சலத்தில் அவன் மனம் துணுக்குற்றது.. குழாயைத்திறந்து விட்டான்.. நிறுத்திய தண்ணீர் கொட்டியது.. கைநீட்டி கை கழுவியவன்..  காவ்யாவின் உணவுத் துகள் ஒட்டிய காய்ந்த கையைப் பார்த்தான்.. அவன் பார்வையில் அவசரமாக தண்ணீரில் கை நீட்டினாள் காவ்யா...
"அந்தாளப் பாத்து நீ எதுக்காக பயப்படற..? இப்ப அவரு உன் முதலாளியில்ல.. யாரோ.. எவரோ.. அவரப் பாத்து நீ பயப்படறதுக்கு என்ன காரணம்..?"
காவ்யாவினால் மறைக்க முடியவில்லை.. மனதில் உள்ள பயத்தையும்.. பாரத்தையும்.. அவளுடைய அண்ணணிடம் இறக்கி வைக்காமல் யாரிடம் அவள் இறக்கி வைப்பாள்..?
"அண்ணே..." அவள் சொல்லத் தயங்கி மென்று விழுங்கினாள்..
"சொல்லு.." தாழ்ந்த குரலில் தங்கையை ஊக்கப் படுத்தினான் கண்ணதாசன்...
"அது வந்துண்ணே.." ஆரம்பித்தவளுக்கு அவளின் பயத்தை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை...
"சொல்லும்மா.. நீ சொன்னாத்தான்.. என்னன்னு எனக்கும் தெரியும்..? நானும் அதுக்குத்தக்கன தயாராகிக்கனுமில்ல..?"
"பழைய முதலாளி வந்திருக்காரில்ல..."
"ஆமா.. அவருக்கென்ன...? இந்தாளு தங்கமான மனுசனாச்சே.."
"இவரப்பத்தி ஒன்னுமில்லண்ணே.. இவரு மகன்தான்..."
காவ்யா இழுக்க.. கண்ணதாசன் முகம் மாறினான்..
"யாரு..? அந்த தேவராஜனையா சொல்ற..?" கடுமையாகக் கேட்டான்...
"ஊம்..."
"அவன் என்ன பண்ணினான்..?"
"ரொம்ப நாளாவே.. என்னச் சுத்திச்சுத்தி வாராண்ணே.."
"ரொம்ப நாளாவேண்ணா..?" துருவினான் கண்ணதாசன்...
"நான் கடையில வேலைக்குச் சேர்ந்தப்பலயிருந்தே.."
"ஏன் எங்கிட்டச் சொல்லல...?"
"சொன்னா நீ வேலைக்கு அனுப்ப மாட்ட.. அந்த பயம்தான்.."
கண்ணதாசன் இமைக்காமல் காவ்யாவையே முறைத்தான்.. அவள் தலை கவிழ்ந்தாள்..
"போனத விடு.. இப்பத்தான் கடை கை மாறிருச்சுல்ல.."
"ஆனாலும் அவன் அடிக்கடி வர்றான்.."
"உன் புதுமுதலாளி ஏன்னு கேக்கறதில்லயா..?"
அர்ஜீன் கேட்காமல் இருக்க மாட்டானே என்பது கண்ணதாசனின் எண்ணமாக இருந்தது.. அவனுக்கு அர்ஜீனைத் தெரியும்.. அவனாவது.. காவ்யாவிடம் கடலை போட நினைக்கிறவனை விட்டு வைக்கிறதாவது...
"அவர் இல்லாதப்பதான் இவன் வருவான்..."
'அதானே பார்த்தேன்...' கண்ணதாசனுக்கு ஏனோ அந்தப் பதிலில் திருப்தி வந்தது.. அர்ஜீன் காவ்யாவைக் காவல் காக்கிறான் என்பதில் அவனுக்குள் நிம்மதி வந்தது..
"எங்கிட்டச் சொல்லிட்டல்ல.. இனிமே நான் பார்த்துக்கிறேன்.."
"அண்ணே.."
"சொல்லு..." கண்ணதாசன் தூண்டினான்..
"அவன் புதுசா ஒரு பிரச்னையைக் கிளப்பறாண்ணே..."
காவ்யாவின் குரல் நடுங்கியது.. அதில் அந்த தேவராஜனின் மீது கண்ணதாசனுக்குள் கோபம் பீறிட்டு எழுந்தது...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -66
எங்கிருந்தோ ஆசைகள். -66
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-66.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/engirunthoaasaikal-66.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy