அம்மம்மா.. கேளடி தோழி...! -168

168 வசிய மருந்தை கண்ணில் வைத்தே வசியம் செய்தாய் எந்தன் உயிரே..! நடுவில் அரளிப் பூச்செடிகள் கண்ணுக்கு அழகாக வரிசை கட்டி நின்றது.. பார்வ...

168
வசிய மருந்தை கண்ணில் வைத்தே
வசியம் செய்தாய் எந்தன் உயிரே..!


நடுவில் அரளிப் பூச்செடிகள் கண்ணுக்கு அழகாக வரிசை கட்டி நின்றது.. பார்வைக்கு பூங்காவில் இருப்பதைப் போலக் குளிர்ச்சியாக இருந்தது.. ஏஸியின் இதமான குளிரை உணர்ந்தவளாக ஷோபா சாய்வாக அமர்ந்து கொண்டு.. நான்கு வழிச் சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிந்தாள்.. குளிர் கண்ணாடி முகத்தை மறைக்க.. செல் போனில் ஏதோ ஒரு குறுஞ்செய்தியைப் படித்துக் கொண்டிருந்தான் கோகுல்..
"குற்றலாத்துக்கு வரனும்னு ஏன் சொன்னீங்க..?"
திடிரென்று ஷோபாவிடமிருந்து கேள்வி கிளம்பியது.. கோகுல் அவளைத் திரும்பிப் பார்த்தான்.. அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவனது கண்களிலிருந்து கண்டு பிடித்து விட முடியாதபடி அவன் கண்களை கருப்புக் கண்ணாடி மறைத்திருந்தது..
"வேற எதுக்கு வருவாங்க..? அருவியில் குளிக்கத்தான் வருவாங்க.."
"ஈஸிட்..? பட்.. நீங்க ஒரு நாள்கூட அருவியில குளிச்சதில்லையே.."
"நீ பார்த்ததில்லைன்னு சொல்லு.."
"இருக்கலாம்.. வொய்போட வருகிறவங்கள்லாம் வொய்பை கூட வைத்துக்கிட்டுத்தான் அருவியில குளியல் போடுவாங்க.."
ஷோபாவின் வார்த்தைகளில் தொனிந்த மறைமுகக் குற்றச்சாட்டை கண்டு கொள்ளாதவனாக கோகுல் மீண்டும் செல்போனை பார்வையிட ஆரம்பித்தான்..
ஷோபாவுக்குள் கோபம் மூண்டது.. வாய் விட்டு கேட்டு விட காரை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் தடையாக இருந்தான்..
"மார்னிங் எங்கே போயிருந்திங்க..?"
"ஜஸ்ட் எ வாக்கிங்.."
"என்னையும் கூப்பிட்டுக்கிட்டுப் போயிருக்-கலாமில்ல..?"
"நீ வாக்கிங் போனபோது என்னைக் கூப்பிட்டுக்கிட்டுத்தான் போனியா..?"
கோகுல் தலையைத் திருப்பாமல் பேசினான்.. அவனது அந்த அலட்சியத்தில் மனம் நொந்தாள் ஷோபா..
அவளென்ன அவனுக்கு எதிரியா..? என்னதான் சமமில்லாத அந்தஸ்தில் அவளிருந்தாலும் அவனுக்கு மனைவியாகி விட்டபின்பு அவனுக்கு இணையானவளாக.. அவனில் சரிபாதியாக அவள் ஆகி விடுவதை அவன் அறிய மாட்டானா..?
"பதிலுக்குப் பதிலா..?" மனம் தாங்காமல் அவள் கேட்டாள்..
"அப்படியும் வைத்துக்கலாம்.." அலட்டிக் கொள்ளாமல் கோகுல் சொன்னான்..
ஒட்டிக் கொள்ளும் மனமில்லாமல் வெட்டிக் கொள்ளும் மனப்பான்மையோடு அவன் பேசி வைத்ததில்.. ஷோபாவின் மனம் பாதிப்புக்கு ஆளானது..
அவள் ஒரு திசையில் பார்க்க.. கோகுல் வேறு திசையில் பார்க்க ஆரம்பித்தான்..

கோவிலுக்குள் பிரவேசித்த போதே பங்கஜத்தை பார்த்துவிட்டாள் மேகலா..
"இவளத்தான் இத்தனை நாளா தேடினேன் ராதிகா.. இன்னைக்குத்தான் அகப்பட்டிருக்கா.." என்றாள்..
"ஏன் அத்தை..?" ராதிகா புரியாமல் கேட்டாள்..
"எப்பப் பார்த்தாலும் ஒரே கேள்வியைத்தான் கேட்டு வைப்பா.. கோவில் பக்கம் வந்துட்டாப் போதும்.. இவ கண்ணில அகப்படாம தப்பிச்சிரனும்னு நானும் படாத படு பாடுவேன்.. முடியவே முடியாது.. ஏhதவது ஒரு தூணுக்குப் பின்னால இருந்து 'டொய்ங்'குன்னு வந்து நிற்பா.." மேகலா ஆயாசப் பட்டு போனாள்..
"வந்தாத்தான் என்னத்தை..?"
"உனக்குத் தெரியாது ராதிகா.. இவ ஒரே கேள்வியைத்தான் மாத்தி மாத்திக் கேட்டு வைப்பா.."
"அப்படி என்ன கேள்வியைத்தான் கேட்பாங்க..?"
பழைய தினங்களை மறந்தவளாகக் கேட்ட ராதிகாவை இரக்கத்துடன் பார்த்தாள் மேகலா.. மருமகளின் மேடிட்ட வயிறின் மீது அவளது பார்வை பெருமிதத்துடன் பதிந்தது..
'பங்கஜம் என்னத்தைக் கேட்பான்னு இவகிட்ட சொல்ல முடியுமா..?'
அந்த பங்கஜம் மற்றவர்களின் மனம் நோக அறியாப்பிறவியைப் போலக் கேள்வி கேட்பதில் வல்லவள்..
மேகலாவை எங்கே கண்டாலும் அவள் ஒரே கேள்வியைத்தான் கேட்பாள்..
"என்னங்கண்ணி.. உங்க மருமக இன்னமும் தலைக்கு குளிச்சுக்கிட்டுத்தான் இருக்காளா..?"
இதைக் கேட்கும் போது.. மேகலாவின் கண்களில் தெரியும் துடிப்பைப் பார்ப்பதில் பங்கஜத்திற்கு தனிவிதமான இன்பம் உண்டு..
இதை ராதிகாவிடம் சொல்ல மேகலாவினால் முடியுமா..?
"ஒன்னுமில்லேம்மா.. நீ.. வா.. பெருமாளையும்.. தாயாரையும் சேவிச்சுட்டு வரலாம்.."
பேச்சை மாற்றியவளாக மேகலா சந்நிதானத்தை நோக்கி நடந்தாள்.. கற்பூர ஜோதியில் தெரிந்த பெருமாளையும்.. தாயாரையும் சேவித்து விட்டு.. கோவில் பிரகாரத்தை வலம் வந்தபோது.. எதிரே பங்கஜம் வந்து விட.. மேகலா நின்று விட்டாள்..
"நீ முன்னால போ ராதிகா.. நான் இவகிட்டப் பேசிட்டு வாரேன்.."
மாமியாரின் கட்டளையை மதித்து ராதிகா முன்னால் சென்றுவிட எதிரே நின்ற பங்கஜத்தை இகழ்ச்சியுடன் பார்த்தாள் மேகலா..
"என்ன பங்கஜம்.. ஆளையே காணோம்.. ஊரைக் காலி பண்ணிட்டு ஓடிட்டயோன்னு நினைச்சேன்.."
இந்தக் கேள்வியை மேகலாவைத் தவிர வேறு யாராவது கேட்டிருந்தாள்.. பங்கஜம் அந்த நபரை ஆய்ந்து.. அக்கு வேறு.. ஆணி வேராக.. கழட்டிப் போட்டிருப்பாள்..
அப்படிச் செய்ய வழியில்லாமல் பேசியது மேகலாவாக இருந்து விட்டாள்.. தென்காசிப் பட்டினத்தில் பாலமுரளியைப் பகைத்துக் கொண்டு வாழ்வது சிரமமென்பதால் அவள் வாய் மூடி.. அதை சிரித்த முகமாக ஜீரணித்துக் கொண்டாள்..
"அண்ணிக்கு என்னைக் கண்டாலே கேலிப் பேச்சுதான் வாயில வரும் போல.. ஆதரிக்க அண்ணியிருக்கிறப்போ நான் எதுக்காக அண்ணி.. ஊரை விட்டு ஓடிரப் போறேன்..?"
"அப்ப.. உள்ளுரிலதான் நீ இருந்தயா..?"
"ஆமாண்ணி..."
"நீயென்ன கருப்பு ஜாக்கெட்காரியா..?"
மேகலாவின் கேள்வியைப் புரிந்து கொள்ள பங்கஜத்தால் முடியவில்லை.. அவள் குழம்பிப் போய்.. தன்னைத்தானே பார்த்துக் கொண்டாள்..
'நான் சிகப்புச் சேலைகட்டி.. சிகப்புக் கலர் ஜாக்கெட்டில்ல போட்டிருக்கேன்.. இந்த அண்ணி என்னமோ கருப்பு ஜாக்கெட்டுன்னு கதையையே மாத்துதே.. என்னடி இது.. பேரப்புள்ள பிறக்கப் போற சந்தோசத்தில அண்ணிக்கு புத்தி வேலை செய்யலையா..?'
மேகலாவின் புத்தி வேலை செய்யும் வேகத்தை அறியாதவளாகப் பங்கஜம் யோசித்து வைத்தாள்..
"இல்லையேண்ணி.. நானு சிகப்புக்கலரு ஜாக்கெட்டில்ல போட்டிருக்கேன்.. அண்ணி பார்க்கலையா..?"
"எல்லாம் பார்த்தாச்சு.. சாமி கும்பிடாத ஆளுகளயெல்லாம் கருப்புச் சட்டைக்காரங்கன்னு சொல்லுவாங்க.. கேள்விப்பட்டிருக்கயா பங்கஜம்..?"
"தெரியாதேண்ணி.."
"உனக்கு எதுதான் தெரியும்..? மத்தவங்க வீட்டு விவகாரம் தெரியும்.. உலகநிலவரம் தெரியுமா..?"
"என்னமோ.. கூறுகெட்ட கூதரையாய் இருந்துட்டேன்.. நீங்கதான் அதப்பத்திச் சொல்லுங்களேன்.. 'ஊம்' கொட்டிக் கேட்டுட்டுப் போறேன்"
"நீ 'ஊம்' கொட்டிக் கதை கேட்கறிதிலேயே குறியாய் இரு.."
மேகலா பங்கஜத்தை மட்டம் தட்டுவதிலேயே குறியாய் இருக்க.. பல்லைக் கடித்தபடி அதைச் சகித்துக் கொண்டாள் பங்கஜம்..
"நீங்க சொல்ல.. நான் 'ஊம்' கொட்டினாத்தான் நல்லாயிருக்கும் அண்ணி.."
"இருக்கும்.. இருக்கும்.. சாமி கும்பிடாத ஆம்பளைகளை கருப்புச் சட்டைக்காரங்கன்னு சொன்னா.. சாமி கும்பிடாத பொம்பளைகளை என்னன்னு சொல்றது..?"
"அட.. அதான்.. எங்க அண்ணி.. கருப்பு ஜாக்கெட்காரியான்னு கேட்டு வைச்சாங்களா..?"
"ம்ஹீம்.. இப்பவாவது உன் மரமண்டைக்கு விசயம் புரிஞ்சுச்சே.."
"அப்படியெல்லாம் இல்லைண்ணி.. எதையும் நீங்க சொல்லி நான் கேட்டாக்க.. அதில இருக்கிற சந்தோசமே தனி அண்ணி.."
பங்கஜம் பதவிசாகப் பதில் கூறித் தப்பிக்கப் பார்த்தாள்..
மேகலா அதற்கெல்லாம் மசிகிற ஆளில்லையே..
"உன் சந்தோசத்தைப் பத்தி எனக்குத் தெரியதா பங்கஜம்.. அதிலயும் என் வாயிலே எதையும் கேட்டாத்தான் உனக்கு சந்தோசம் பொத்துக்கிட்டு ஊத்தும்ன்னு எனக்குத் தெரியுமே.."
வசமாக மாட்டிக் கொண்டிருந்த பங்கஜம் எதற்கும் இருக்கட்டுமென்று சிரித்து  வைத்தாள்..
"இப்ப எதுக்காக சிரிக்கிற..?"
"அண்ணியை ரொம்ப நாள்கழிச்சுப் பார்க்கிறேனில்ல.. அதான் சந்தோசத்தில சிரிச்சு வைச்சேன் அண்ணி.. இது ஒரு குத்தமா..?"
"இல்லேங்கறியா..?"
"அண்ணி உங்களுக்கு கோபமிருந்தா என் முதுகில நாலு போடு கூட போட்டிருங்க.. அதுக்காக இப்படிப் பேசாதீங்க.."
"என்னத்தைப் பேசிப் புட்டேன்..? நான் ஒருநாள் பேசறதைக் கேட்கிறத்துக்கே இந்த அலறல்.. அலறி வைக்கிறயே.. இத்தனை நாளா.. கோவில் பக்கம் வந்தவள சாமி கும்பிட விடாம நீ துரத்தித்துரத்திப் பேசினயே.. எனக்கு எப்படியிருந்திருக்கும்..?"
"ஒரு பாசத்தில பேசறதுதான் அண்ணி.."
"அம்புட்டுப் பாசக்காரி.. இத்தன நாளா கோவில் பக்கம் எட்டிக் கூடப் பார்க்காம இருந்திருக்கயே.. நீ சாமி கும்பிடறதை மறந்திட்டயா..?"
"பெருமாள மறந்துட்டு இருப்பேனா அண்ணி.."
"அப்புறம் எதுக்காக கண்ணு.. பெருமாள் கோவில் பக்கம் வர்றதில்ல..?"
"சாமி கோவில்ல மட்டுமா இருக்காரு..?"
"ஓ..!"
"நம்ம மனசில இல்லியா.."
"அப்படிப் போடு.."
"நீங்க சாமி கும்பிட்டுட்டிங்களா அண்ணி..?"
"கும்பிட்டாச்சு.."
"அப்ப.. நான் உத்தரவு வாங்கிக்கவா..?"
"ஏன் பங்கஜம்.. இத்தன நாளா.. என்னைக் கண்ணில கண்டதும் ஒரு கேள்வியைக் கேட்டு வைப்பியே.. அந்தக் கேள்வியை இன்னைக்கு கேட்கலையா.."
"என்ன கேள்விண்ணீ..?"
அப்பாவியாய் கண் விரித்த பங்கஜத்தின் நடிப்பைக் கண்டு மேகலா அயர்ந்து விட்டாள்..
'இவளுக்கு நடிகையர் திலகம் பட்டத்தை தாராளமாக் கொடுக்கலாம்..'
"எனக்குப் பேரப்புள்ள எப்ப வரப்போகுதுன்னு கேள்விமேல கேள்வியாக் கேட்டியே.. அந்தக் கேள்விதான் பங்கஜம்"
"ஏன் அண்ணி..! உங்களுக்கு பேரப் புள்ள பிறக்கப் போகிறதுதான் ஊரறிந்த சங்கதியாச்சே.. அதை நான் தனியா வேற கேட்டுத் தெரிஞ்சுக்கனுமா..?"
"ஏன் சொல்ல மாட்ட.. இத்தனை நாளா துரத்தித் துரத்திக் கேள்வி கேட்டவளுக்கு.. இதைக் கேட்க மட்டும் வாய் வலிக்குதாக்கும்..?"
மேகலா பங்கஜத்துடன் காராசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்க.. மாமியாருக்காக காத்திருந்த ராதிகா.. கால் வலித்ததால்.. கோவில் பிரகாரத்தின் படிக்கட்டில் அமர்ந்தாள்.. அவளருகே நீண்ட நிழலொன்று விழுந்தது.. யாராக இருக்கும் என்ற யோசனையுடன் நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்..
கண்களில் காதலைத் தேக்கியவனாக.. அவளைக் கனிவுடன் பார்த்த வண்ணம் சங்கர் அவளருகே நின்று கொண்டிருந்தான்..
'இவனா..?' ராதிகா கலவரத்துடன் சுற்று முற்றும் பார்த்தாள்...
அந்தி மயங்கிய அந்த நேரத்தில் கோவிலுக்குள் வந்து போகும் மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது.. அவர்களின் பார்வை ராதிகாவின் மேல் படிந்து விலகியது... அந்த வட்டாரத்தின் பெரிய வீட்டின் மருமகள்.. பெரிய மனிதனான பால முரளியின் மனைவி.. அவளைப் பார்த்ததும்.. மீண்டும் ஓர் முறை பார்க்காமல் நகர அவர்களால் முடியுமா..?
ராதிகாவின் மனதை கவலை அரிக்க ஆரம்பித்தது.. அவளை ஆர்வமாக பார்ப்பவர்கள் அருகே நிற்கும் சங்கரையும் சேர்த்துத்தானே பார்ப்பார்கள்..? அவர்களின் மனதின் நினைவோட்டம் எதுவாக இருக்கக்கூடும்..?
அவள் அவசரமாக எழுந்து கொள்ள யத்தனித்தாள்..
"பொறு ராதிகா.." என்றான் சங்கர்..
அவன் உரிமையுடன் ஏக வசனத்தில் பேசியதில் ராதிகாவின் கலவரம் அதிகரித்தது..
"உன்னிடம் பேசனும் ராதிகா.."
சங்கர் அவளருகே அமர முயன்றான்.. சட்டென்று ராதிகா எழுந்து கொண்டாள்.. சங்கரின் கண்களில் கேள்வி தெரிந்தது..
"ராதிகா..?"
"எனக்கு உங்களிடம் பேச எதுவுமேயில்லை மிஸ்டர் சங்கர்..."
"ஏன் பயப்படற..?"
"பயமா..? எனக்கா..? ஹ.."
ராதிகா மாமியாரை மறந்தவளாக வாசலை நோக்கி விரைந்தாள்.. சங்கர் பின்னாலேயே வந்து விடுவானோ என்ற பயத்துடன் சென்றவள்.. எதிரே வந்தவரைக் கவனிக்காமல் மோதிவிட்டாள்..
"ஏண்டி இப்படி ஓடி வர்ற..?"
காதில் விழுந்த கேள்வி தேனாறாக உள்ளே இறங்க.. ராதிகா ஆனந்தத்துடன் தலையுயர்த்திப் பார்த்தாள்.. அங்கே முரளி நின்று கொண்டிருந்தான்..
"நீங்களா..! வந்துட்டிங்களா.."
எல்லையற்ற நிம்மதியுடன் அது கோவில் என்பதை மறந்தவளாக அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள் ராதிகா..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -168
அம்மம்மா.. கேளடி தோழி...! -168
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-168.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-168.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy