அம்மம்மா.. கேளடி தோழி...! -165

165 சொல்லாலே துடிக்க வைத்தவன்.. சொல்லாமல் குளிரவும் வைத்தான்... நுரையாக பொங்கி வந்த அருவிநீரில் தலை கொடுத்து ஆனந்தமாகக் குளியல் போட்டா...

165
சொல்லாலே துடிக்க வைத்தவன்..
சொல்லாமல் குளிரவும் வைத்தான்...


நுரையாக பொங்கி வந்த அருவிநீரில் தலை கொடுத்து ஆனந்தமாகக் குளியல் போட்டாள் மீனாட்சி.. தண்ணீரில் நனைந்த சேலை.. அவள் உடல் முழுவதும் ஒட்டிக் கிடக்க.. ஆண்களின் பிரிவில் நனைந்து கொண்டிருந்த நாச்சியப்பனின் பார்வை அவளது மேனியை மேய்ந்தது...
அதை ஜாடையாக பார்த்தபடி குளியலைப் போட்டவளின் மனமும் உடலும்.. சந்தோசத்தில் தத்தளித்தன...
"எதுக்குய்யா அப்படிப் பார்த்த..?"
அருவியை விட்டு வெளியே வந்ததும் அவள் கேட்டாள்...
"என் பொண்டாட்டி... நான் பார்ப்பேன்.. அதைச் சொல்ல நீ யாருடி..."
அவன் உரிமைக் குரல் கொடுத்தான்...
உலர்ந்த உடைக்கு மாறி... நனைந்த உடைகளை அலசி.. கரையில் காய வைத்தவர்கள்.. கரையில் பொறித்துக் கொடுக்கப்பட்ட மீன் துண்டங்களை வாங்கி ருசிக்க ஆரம்பித்தார்கள்...
நாச்சியப்பன் தாழ்ந்த குரலில் பேசிய அந்தரங்க பேச்சுக்களுக்கு முகம் சிவந்த மீனாட்சி.. வெட்கப் புன்னகையுடன்.. அவனை அடித்தும் கிள்ளியும்.. தனது ரசிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்...
"ஹேய்.. யு..?" அவர்களின் அருகில் பெண் குரல் கேட்டது...
யாரோ.. யாரையோ அழைக்கிறார்கள்.. நமக்கென்ன வந்தது என்ற நினைவில்... தங்களின் வேலையை கண்ணும்.. கருத்துமாக அவர்கள் தொடர்ந்தார்கள்..
"நாச்சியப்பா.. ஹவ் ஆர் யு..?"
நாச்சியப்பனின் தோளில் விழுந்த மென்மையான பெண்ணின் கரம் உணர்த்திய ஸ்பரிசத்தில் அவன் மீனாட்சியை மறந்து திரும்பிப் பார்த்தான்..
"எவ.. அவ..?"
தன் மச்சானின் தோளை வேறொரு பெண் தொடுவதா என்ற கொதிப்புடன் மீனாட்சியும் திரும்பிப் பார்த்தாள்...
நாச்சியப்பன் பரவசப்பட்டு விழிக்க.. மீனாட்சி அதிர்ந்து விழித்தாள்...
அங்கே... ஷோபா நின்று கொண்டிருந்தாள்...
"இந்த மேனாமினுக்கி எதுக்காக குத்தலாம் பக்கம் வந்திருக்கா.." கடுப்புடன் அவள் முணுமுணுக்க...
"குளியல் போட வந்திருப்பாடி..." என்று பதிலுக்கு முணுமுணுத்து வைத்தான் நாச்சியப்பன்...
"ஹேய் யங் மேன்.. உன் பேர் நாச்சியப்பன்தானே.."
என்னவோ.. லண்டனில் பிறந்து.. பாரிஸில் வளர்ந்தவளைப் போல தமிழை ஷோபா கடித்துத் துப்ப.. மீனாட்சிக்கு கடுப்பு உண்டானது...
"ஏம்மா.. போன தடவ வந்தப்போ.. நீ நல்லாத்தானே தமிழ் பேசின.. இப்ப எதுக்கு இப்படிப் பேசி வைக்கிற..?" என்று கேட்டே விட்டாள்...
ஷோபாவுக்கு என்னவோ போல ஆகிவிட்டது... அவளைப் போன்ற மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணிடம் கை கட்டி நிற்க வேண்டிய கிராமத்துப் பெண்.. நிமிர்வாகக் கேள்வி கேட்பதில் அவளுக்குள் கோபம் கொந்தளித்தது...
'இவ அந்த ராதிகாவுக்கு சப்போர்ட்டர் ஆச்சே...' குரோத்துடன் மீனாட்சியை முறைத்தாள் ஷோபா...
மீனாட்சி ஆடிய சாமியாட்டத்தை இன்னமும் அவள் மறக்கவில்லை...
"லுக் மேன்..! இவளைப் போல வில்லேஜ் லேடி கூடல்லாம் என்னால ஈக்குவலா பேச முடியாது... நீ ஸ்மார்ட் மேன்னு நினைச்சா.. நீயென்ன.. இவகூட குற்றாலத்துக்கு வந்து நிற்கிற..?"
ஷோபாவின் கேள்வியில் மீனாட்சிக்கு சாமி வர ஆரம்பித்து விட்டது.. அதையுணர்ந்த நாச்சியப்பன் கலவரமானான்.. அதை உணராத ஷோபாவோ.. அவனை வசியம் பண்ண விரும்பியவளாக அவனை நெருங்கி மீண்டும் அவன் தோளில் கை போட்டாள்...
நாச்சியப்பன் பதறிப் போனவனாக தள்ளி நிற்க முனைய.. ஷோபா புருவம் தூக்கினாள்... அவள் மீதான நாச்சியப்பனின் மையலைப்பற்றி அவளுக்கு மிக நன்றாகவே தெரியும்.. அவளைப் பார்த்து ஜொள்ளு விடும் ஆண்வர்க்கம் எந்த வர்க்கமாக இருந்தாலும் அவளுக்கு அதில் உடன்பாடு உண்டுதான் என்பதால் அவன் விடும் ஜொள்ளுகளை அவள் கண்டும்.. காணாமலும் ரசித்துக் கொண்டிருந்தாள்.. அப்படிப்பட்ட நாச்சியப்பன்.. இன்று அவள் கை பட்டதும் அலறி.. மீனாட்சியின் முகம் பார்த்து நடுங்குகிறான் என்றதும்.. ஷோபாவிற்கு என்னவோ இருக்கிறது என்று புரிந்து விட்டது...
'சம்திங் இஸ் ராங்...'
அதற்குள் மீனாட்சி பத்ரகாளியாக மாறிவிட்டாள்...
"என்னாய்யா.. ஸ்மார்ட்டு மேனு.. அதான் அம்மணி கேட்கிறாப்புல இல்ல... என் கூடல்லாம் எதுக்காக குத்தாலத்துப் பக்கம் குளிர்காத்து வாங்க வந்தேன்னு.. பதிலைச் சொல்லு..."
"அவங்க தெரியாம பேசிப்புட்டாங்க மீனாட்சி..."
"இல்லய்யா.. நான்தான் தெரியாம கழுத்தை நீட்டிட்டேன்..."
"நீ.. வா.."
"அது.. எதுக்கு..?"
"உட்கார்ந்து பேசலாம்..."
"அது என்ன தேவைக்கு..? என் கூடல்லாம் உன்னப் போல ஸ்மார்ட்டு மேனு உட்கார்ந்து பேசலாமா..? அதுக்குத்தானே அம்மணி லண்டன்ல படிச்சுப்புட்டு.. குத்தாலத்துப் பக்கமா காத்தாட வந்திருக்குதே.. இது கூட உட்கார்ந்து பேசு.. அப்பத்தான் உனக்கு குளுகுளுன்னு இருக்கும்.."
"ஏண்டி இப்படிப் பேசற...?"
"தப்பாப் பேசிப்புட்டேனா..? இல்லையே... சரியாத்தானே பேசறேன்.. இந்த அம்மணிக்கு எப்பவுமே அடுத்தவ புருசன் மேல கண் வைக்கத்தான் புடிக்கும்.. அடுத்தவ புருசன்கூட ஊர்சுத்தினாத்தான் புடிக்கும்.. அடுத்தவ புருசனோட தோள்மேல கை போட்டாத்தான் பிடிக்கும்..."
மீனாட்சியின் அடுக்குப் பேச்சில் அடுத்தடுத்து வெளிப்பட்ட 'அடுத்தவ புருசன்' என்ற சொற்றொடரில் ஷோபாவுக்கு விவரம் பிடிபட்டு விட்டது...
உண்மையை அறிந்து கொண்டவள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் ஆச்சரியப்பட்டு விட்டாள்...
"ஏன் நாச்சியப்பா.. நீ இவளையா மேரேஜ் பண்ணியிருக்க..?"
மீனாட்சி கண்.. நெற்றிக் கண்ணாக.. நாச்சியப்பன் அதன் வெப்பம் தாங்காமல் புழுவாக நெளிந்தான்...
"வேற எவளைக் கல்யாணம் பண்ணியிருந்தா இந்த அம்மணிக்கு குளுகுளுன்னு இருந்திருக்குமாம்...?"
"ஏய்ய்.. விடுடி.. அவங்க வெள்ளந்தித் தனமா கேட்டுப்புட்டாங்க.."
"யோவ்.. இந்தப் பொம்பளையைப் போயி வெள்ளந்தின்னு சொன்னேன்னு வைய்யு.. உன் ஆயுசுக்கும் நீ வீட்டுப் பக்கம் வந்திர மாட்டே.. என்ன யாருன்னு நினைச்சே.. நான் பெரியம்மாவோட வளர்ப்புய்யா... அவங்ககிட்டப் போயி.. இப்படியிப்படின்னு சொல்லி கண்ணைக் கசக்கினேன்னு வைய்யி.. நீ தேனூத்து பக்கமா தலைவைச்சுக் கூடப் படுக்க முடியாது.."
அதை நாச்சியப்பனும் நன்கு அறிவான்.. அவனுடைய வருத்தமே வேறு.. இப்படியெல்லாம் மிரட்டினால்தான் அவன் மீனாட்சிக்கு உண்மையான கணவனாக இருப்பானா..? இல்லாவிட்டால் தடம் புரண்டு யார் பின்னாலேயாவது போய் விடுவானா...?
"பொறுடி.. நானும் போகுது... போகுதுன்னு பார்க்கறேன்.. நீ ரொம்பத்தான் ஏறி மேயுற... இப்ப என்னடி ஆச்சு..?"
"இன்னும் என்னய்யா ஆகனும்..? ஒரு பேச்சப் பொறுக்க மாட்டாம உனக்கு இம்புட்டு ரோசக் கழுதை பொத்துக்கிட்டு வருதே.. என் கண்ணு முன்னாலேயே.. உன் தோளு மேல இவ கையைப் போட்டு.. என்கூட உனக்கென்ன பேச்சுன்னு கேட்கிறா.. எனக்கு எப்படி இருக்கும்..?"
கேள்வி கேட்ட மீனாட்சி.. அடுத்த நொடியில் கன்னத்தில் அறையை வாங்கினாள்.. நாச்சியப்பன் ருத்ர அவதாரம் எடுத்து விட்டான்...
"எவ்வளவு தைரியமிருந்தா என்கிட்டேயே நீ இப்படியெல்லாம் பேசுவ...? திமிராடி..?"
அவன் கொதிக்க.. அடி வாங்கிய அந்த நிலையிலும்.. கொதிப்பு மாறாமல் மீனாட்சி பதில் கொடுத்தாள்..
"யோவ்.. வெறும் பேச்சுக்கே.. இந்தத் தாண்டு தாண்டறயே.. இதெல்லாம் என் கண்ணு முன்னாலேயே நடக்குதே.. நானு எந்தத் தாண்டு.. தாண்டனும்..?"
"நானாடி இதை வெத்தல பாக்கை வைச்சு அழைச்சேன்..? கருமம்.. அதா வந்துச்சு.. தோள் மேல கை போட்டுச்சு.. எதையோ பேசிச்சு.. நான் பதில் பேசாம நகந்து நின்னேனா இல்லையா..?"
அது வரை 'இவங்க' என்று பேசிக் கொண்டிருந்த நாச்சியப்பன் 'அஃது' 'இஃது' என்று அஃறிணையாய் ஷோபாவை விளித்ததில் ஷோபா நொந்தே போய் விட்டாள்.. அதிலும் 'கருமம்' என்ற அடைமொழி வேறு..
'இவனா இப்படிப் பேசறான்..?' அவளால் நம்பவே முடியவில்லை...
அவள் முதல்முறை வந்திருந்த போது அவள் பின்னால் நாய்குட்டியைப் போலச் சுற்றிய மனிதன் இன்று அவளைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன் என்கிறான் என்றால்.. அதன் பிண்ணனியில் என்ன இருக்கிறது...?
அவள் உற்றுப் பார்த்த போது.. மீனாட்சியின் கழுத்தில் தாலிக் கயிறு இருந்தது...
'ஒரு மஞ்சள் கயிறுக்கு இவ்வளவு சக்தியா..?'
இந்தியத் திருநாட்டின் மஞ்சள் கயிற்றின் மகிமையைப் பற்றி அறியாதவளாக அவள் மலைத்துப் போனாள்...
அவள் கழுத்திலும்தான் அவள் கணவன் தாலியைக் கட்டியிருக்கிறான்... வருடத்தில் பாதி நாள்கள் 'பிஸினெஸ் டிரிப்..' என்று வெளி நாடுகளுக்குப் பறந்து விடுவான்.. கூட அவள் போக முடியாது.. வெவ்வேறு பெண்கள் போவதாகக் கேள்விப் பட்டும்.. அதை அவனிடம் கேட்க முடியாமல் சிரித்த முகமாய் இருந்து விடுவாள்..
பணம்...! அவளிடமிருக்கும் பணத்தை விட பன் மடங்கு அதிகமாக அவனிடம் இருக்கும் பணம் அவள் வாயை அடைத்து வைத்திருக்கிறது.. அவனின் அந்தஸ்தும்... பொருளாதார மேம்பாடும் அவளைக் கட்டிப் போட்டு.. காவலில் வைத்திருக்கிறது...
அழகிலும்... அறிவிலும்.. பணத்திலும்.. மீனாட்சியால் நினைத்துப் பார்க்கக் கூட முடியாத உயரத்தில் இருப்பவள்தான் ஷோபா.. ஆனாலும் அவளால் கணவனை மீனாட்சியைப் போல ஒரு கண்ணசைவில் கட்டிப் போட முடியாது...
ஷோபாவுக்கு.. மீனாட்சியின் மீது பொறாமை உண்டானது...
நாச்சியப்பனின் கோபமான விளக்கத்தில் கொஞ்சம் மலையிறங்கினாள் மீனாட்சி...
"அது வந்து பேசினா.. நீ பேசிப் புடுவியா.."
"பேசலைடி.. நீ பார்த்துக்கிட்டுத்தான இருந்த..?"
"தோள் மேல கை போட்டா.. தோளக் கொடுப்பியோ.."
"அடிதாண்டி வாங்கப் போற.. நான் தள்ளி நின்னதைக் கவனிச்சியா.. இல்லையா..?"
"நம்பச் சொல்றியா...?"
"நம்புடி.. உன் புருசன் உத்தமன்டி.."
தோப்புக் கரணம் போடாத குறையாக மனைவியை சமாதானப் படுத்தி முடித்தான் நாச்சியப்பன்.. ஒரு வழியாய் சமாதானமாகி கணவனும்.. மனைவியும் கிளம்ப முனைந்தபோது...
"அத்தான் எப்படியிருக்கார் நாச்சியப்பா..?" என்று கேட்டு வைத்தாள் ஷோபா...
நாச்சியப்பன் அரண்டு போனவனாக.. பதில் சொல்லாமல் மனைவியைப் பார்க்க.. அவன் சார்பாக பதில் சொன்னாள் மீனாட்சி...
"ஊம்..? அப்பாவாகப் போகிற சந்தோசத்தில இருக்கார்.. நீ வா மச்சான்.. இந்தப் புள்ள சொந்தக் காரங்களப் பத்தி விசாரிச்சாலும்.. ஆம்பளயப் பத்திதான் விசாரிக்கும்.. பொம்பளையோட பேரு இது வாயில நுழையாது போல..."
அவர்கள் போய் விட.. ஷோபா அசையாமல் நின்று விட்டாள்.. அவள் மனதில் 'வாழ்ந்து காட்டுவேன்..' என்று சூளுரைத்த ராதிகாவின் முகம் தோன்றியது...
'வாழ்ந்து விட்டாளா..? முரளியுடன் அவள் வாழ்ந்து காட்டி விட்டாளா...? இன்னும் தாயாகாமல் இருக்கிறாள் என்று அம்மா சொன்னது பொய்யா..? அவள் தாயாகப் போகிறாளா..?'
ஷோபாவின் மனதில் பொம்மைக் கணவனாக... வருடத்தில் சில மாதங்கள் வந்து போகும் அவளது கணவனின் நினைவு வந்தது.. வெம்மை தந்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி...! -165
அம்மம்மா.. கேளடி தோழி...! -165
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-165.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-165.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy