அம்மம்மா.. கேளடி தோழி..161

161 மனதுக்குள் ஊற்றெடுக்கும்.. எண்ணங்களை யாரறிவார்..? அடுத்த ஒருமணிநேரத்துக்கு நாச்சியப்பன் எப்படிப்பட்ட நல்லவன்.. வல்லவன்.. நாலும் தெ...

161
மனதுக்குள் ஊற்றெடுக்கும்..
எண்ணங்களை யாரறிவார்..?


அடுத்த ஒருமணிநேரத்துக்கு நாச்சியப்பன் எப்படிப்பட்ட நல்லவன்.. வல்லவன்.. நாலும் தெரிந்தவன்.. என்பதை அநேக உதாரணங்களையும்.. நிகழ்வுகளையும் முன்வைத்து மீனாட்சி எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள்...
"என் கால் தூசிக்கு இணையாகுமான்னு இந்த ஆம்பளையைப் பார்த்துக் கேக்கறிங்களே சின்னம்மா.. இதோட கால் தூசிக்குத்தான் நானு இணையாக மாட்டேன்.. அது தெரியுமா உங்களுக்கு..?"
"தெரியாது மீனாட்சி..."
"எனக்கென்னம்மா அழகு இருக்கு..?"
"இல்லேன்னு நீயே ஒப்புக்கறியா.. இதை காவேரிகிட்டச் சொல்லிரவா..?"
"அவ என்னம்மா நாட்டாமை பண்றது..? நான் சொல்றேன் கேளுங்க..."
"கேட்டுட்டாப் போச்சு.. நீ சொல்லு..."
"இந்த ஆளு.. அழகுல அர்ச்சுனன்..."
"அப்படியா..?"
ராதிகா கிண்டலுடன் கேட்டபடி முரளியைப் பார்க்க.. அவன் மீனாட்சி சொல்லுவது உண்மைதானா என்று அவதானிப்பவனைப் போல நாச்சியப்பனை ஏற.. இறங்க பார்த்தான்..
நாச்சியப்பனோ கூச்சத்துடன் நெளிந்தான்...
"அறிவுல தர்மரு..."
தர்மருக்கும் அறிவுக்கும் உள்ள சம்பந்தத்தை மீனாட்சியிடம் விளக்கச் சொல்லலாமா என்று ராதிகாவிற்குள் ஆவல் எழுந்தது... முரளியின் முறைப்பிற்கும்.. மேகலாவின் கொட்டாவிக்கும் பயந்து அந்த ஆவலை அவள் அடக்கிக் கொண்டாள்..
"இது உனக்கே ஓவராத் தெரியாலையா மீனாட்சி..?"
"எட்டாளு வேலைய ஒத்த ஆளா பார்த்து முடிக்கிற ஆம்பளையைப் போயி வேலய விட்டுத் தூக்கச் சொல்றிங்களே.. இது நாயமா சின்னம்மா..?"
"நியாயமில்லைங்கறியா..?"
"இதோட விசுவாசத்துக்கு இதுதான் சம்பளமா..?"
"என்னமோ.. போ மீனாட்சி.. நீ பேசற 'லேபர் லா' வைக் கேட்டு அசந்து போயிட்டேன்.. பார்த்துக்கங்க அத்தை.. நம்ம மீனாட்சி கூடிய சீக்கிரமே யூனியன் ஆரம்பிச்சிருவா.."
"இத வீட்டுப்பக்கம் சேர்க்காம துரத்தியடிக்கனுமா..? இந்த வீட்டுத் தோட்டத்தக் கேட்டுப் பாருங்கம்மா.."
"அட.. அட.. அடா... அசத்தறே மீனாட்சி... அப்படியே என் வீட்டுத் தோட்டத்துப் பூவெல்லாம் கேட்டுப் பார்ன்னு பாடற மாதிரியே இருக்கு போ.. அடுத்து என்ன கேட்கப் போற மீனாட்சி..? இந்த வீட்டு ஜன்னல் கம்பியையும்.. தென்னந் தோப்பையும் கேட்கச் சொல்லப் போறியா..?"
"அதான்ம்மா.. எப்புடிக் கண்டு பிடிச்சிங்க..?"
"குருவி ஜோஸியம் பார்த்தேன்.. நீ கொட்டு.."
"இந்த வீட்டுச் சுவரைக் கேட்டுப் பாருங்கம்மா.."
"அது என்ன சொல்லும்..? அதையும் நீயே சொல்லிரு..."
"இது அடிச்ச பெயிண்டைச் சொல்லும்.."
"ஜன்னல் கம்பியும் அதைத்தானே சொல்லும் மீனாட்சி..?" ராதிகா உறுதிப் படுத்திக் கொள்ள முனைய..
"ஏண்டி..?" என்றான் தாங்க முடியாத பாலமுரளி...
"அதைச் சொல்ல நம்ம மீனாட்சி டயத்தை வேஸ்ட் பண்ணக் கூடாதுங்கிற நல்ல எண்ணம்தாங்க.." என்று சாதுவாக பதில் கொடுத்தாள் ராதிகா...
சிரிக்க முடியாத பாலமுரளி மேகலாவைப் பார்க்க.. அவளோ சிரிப்பை அடக்க பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருந்தாள்..
'இவ அடிக்கிற லூட்டி இருக்கே...'
பாலமுரளிக்கு... முதன் முதலாக ராதிகாவின் பேச்சை ரசித்த அந்த தினம் நினைவுக்கு வந்தது...
'அதுக்கப்புறமா இப்பத்தான் இந்தப் பேச்சு பேசறா..'
அவன் மனம் கனிந்தது.. அதைக் கவனிக்காதவளாக.. மீனாட்சியுடன் உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தாள் ராதிகா...
"ஜன்னல் கம்பியென்னம்மா.. கதவுகூட இது அடிச்ச பெயிண்டைச் சொல்லும்..."
"அடுத்து தோப்புத்தானே மீனாட்சி..."
ராதிகா எடுத்து கொடுக்க...
"ஆமாம்மா..." என்றாள் மீனாட்சி...
"ஹப்பா.. கண்டுபிடிச்சிட்டேன் பார்த்தீங்களா.." முரளியிடம் ராதிகா பீற்றிக் கொள்ள...
"அறிவுக் களஞ்சியம்தான்..", என்று மெச்சிக் கொண்டான் பாலமுரளி...
"இது தோப்பே கதின்னு கிடக்கிறதாலதான் நம்ம தென்னந்தோப்புல காயெல்லாம் காய்ச்சுக் குலுங்குது..."
"அப்படியா..? இது எனக்குத் தெரியாம போச்சே.. நான்கூட தண்ணி பாய்ச்சி.. உரம் வைக்கிறதாலதான் தோப்பில காய் காய்க்குதுன்னு நினைச்சிட்டேன்.. அடுத்து என்ன சொல்லப் போற மீனாட்சி..? மாந்தோப்புல கூவுற மாங்குயிலையெல்லாம்... நாச்சியப்பன்தான் வெத்தல பாக்கு வைச்சு அழைத்துக்கிட்டு வந்தாருன்னு சொல்லப் போறியா..?" ராதிகா கேலியாக கேட்டு வைக்க...
"பின்ன.. இல்லையா..?" என்று ஒரு போடு போட்டாள் மீனாட்சி...
"அடிச்சக்கை.. அப்புறம்..?"
"இந்த ஏரியாவிலேயே இது இருக்கக் கூடாதுன்னு எப்படிம்மா நீங்க சொல்லலாம்..?"
"சொல்லக் கூடாதுதான்..."
"இந்த தேனூத்தில பொறந்து வளர்ந்த ஆளுக்கு தென்காசிப் பட்டினத்தில இருக்க உரிமையில்லயா..?"
"இருக்குதான்..."
"என் மனசில இது மேல வெறுப்பிருக்குன்னு நான் சொன்னேனா..?"
"சொல்லலைங்கறியா..?"
"இதுக்கு யாரும் பொண்ணு தர மாட்டாங்களா..?"
"தந்துருவாங்கங்கறியா..?"
"மீறிப் பொண்ணு கொடுத்தா நான் மொட்டைக் கடுதாசியை தட்டி விடுவேனா..?"
"விடாம.. கல்யாணத்துல கலந்துக்கிட்டு அட்சதை போடுவியா..?"
"அத எப்படிம்மா செய்ய முடியும்..?"
"முடியாதில்ல.. அதத்தான் நானும் சொன்னேன்..."
"அதுக்காக இப்படியாம்மா சொல்லுவீங்க..? இது கண்ணுக்கு முன்னாலேயே நான் இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்டுவேனா..?"
"நீட்ட மாட்டியா..?"
"ஒரு நாளும் மாட்டேம்மா..."
"இதை.. இதை.. இதைத்தான்.. நீ சொல்லி.. நாங்க கேட்கனும்னு எதிர்பார்த்தேன்.. எப்படி.. நீயாய்.. இதை உன் வாயாலேயே ஒப்புக்கிட்டயா..?"
ராதிகா சிரித்த பின்னால்தான்.. தன் வாயால் தன் மனதிலிருந்த நாச்சியப்பனின் மீதான அபிமானத்தை வெளியிட்டு விட்டதை உணர்ந்து கொண்டாள் மீனாட்சி.. வெட்கத்துடன் தலை கவிழ்ந்தாள்...
"ஏண்டி.. மனசுக்குள்ள இம்புட்டு ஆசையை வைச்சுக்கிட்டு.. அவன கண்ணில பாக்குற நேரமெல்லாம் கரிச்சுக்கிட்டு இருந்தியே.. நீ சரியான வேசக்காரிடி..." கேமலா கடிந்து கொண்டாள்...
"அத இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டிங்களாம்மா...?"
அதுவரை ஓரமாக நின்று.. நடந்து கொண்டு பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த காவேரி குரல் கொடுத்தாள்..
மீனாட்சி.. வெட்டும் பார்வையென்றை அவள்மீது வீசி வைத்தாள்...
"என்னம்மா செய்யலாம்..?" முரளி தாயிடம் ஆலோசனை கேட்டான்...
"வார தை மாசத்தில... முத முகூர்த்தத்தில இதுக ரெண்டுக்கும் கல்யாணத்த நடத்தி வைச்சுப் புடலாம் முரளி.. என்ன ராதிகா..?"
"வெரிகுட் டிசிசன் அத்தை.. இதில மாப்பிள்ளை வீடு யாரு..? பொண்ணு வீடு யாரு...?"
ராதிகா சிரித்துக் கொண்டே கேட்க.. அங்கே திருமணப் பேச்சு களைகட்ட ஆரம்பித்தது...
நாச்சியப்பனும் மீனாட்சியைப் போல.. பாலமுரளியின் நிழலில் வாழ்பவன்தான்.. என்ன ஒன்று.. மீனாட்சி சிறு வயதிலேயே தாய்தந்தையை பறிகொடுத்தவள்.. நாச்சியப்பன் வளர்ந்த பின்னால் அவர்களை ஒருவர்பின் ஒருவராக பறிகொடுத்தவன்...
அந்தக்குறை தெரியாமல் அந்த இருவருமே.. அந்தக் குடும்பத்தின் வேலையாள்களாக சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்..
திருமணம் என்று வந்த போது அந்தக் குறை தெரிய இருவர் முகமும் வாடியது.. அதைக் கவனித்த பாலமுரளி..
"நான் மாப்பிள்ளை வீட்டுக்காரன்..." என்றான்...
நாச்சியப்பன் முகம் மலர்ந்தான்...
"நான் பொண்ணு வீட்டுக்காரி..." என்றாள் கேமலா..
"இது தெரிந்த விசயம்தானே.." சிரித்தாள் ராதிகா..
அவர்களின் அரவணைப்பில் மீனாட்சியின் மனம் நெகிழ்ந்தது...
யாருமில்லாத ஆள்களென்று யாரும் இவ்வுலகில் இல்லை... ஒருவருக்கொருவர் உறவுக்கரம் நீட்ட.. சங்கிலித் தொடராய் அது தொடரும்...
தொட்டுத் தொடரும் நமது பாரம்பர்யம் போன்றது இந்த உறவுச் சங்கிலி...
"பொண்ணுக்கு என்ன போடுவீங்க..?" கறாராக கேட்டான் முரளி...
"பொண்ணை நொட்டை சொன்னா.. எங்க பொண்ணு மாப்பிள்ளை மேல ரெண்டு போடு போடுவா..", என்றாள் மேகலா...
"இதென்னடா நாச்சியப்பா வம்பாயிருக்கு.. உனக்கு இந்தப் பொண்ணு வேணுமா..?" முரளி வினவினான்...
"இந்தப் பெண்ணுதான் வேணும் முதலாளி..." மீனாட்சியை பல மார்க்கமாகப் பார்த்தபடி பதில் சொன்னான் நாச்சியப்பன்...
அவன் சும்மாவே அவளை ஒரு மார்க்கமாகத்தான் பார்த்து வைப்பான்.. அன்று அவள் வெளிப்படுத்திய பல்வேறு பரிணாமங்களில் அவளை பல மார்க்கமாக பார்த்து வைத்தான்...
"போகுது போங்க.. எங்க பையனுக்கு உங்க பொண்ணு சொக்குப்பொடி போட்டுட்டதால.. போனாப் போகுதுன்னு இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்கறேன்..", முரளி முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டான்...
"ஆமாண்டா.. உன் தோப்புக்கார பய புள்ள மட்டும்  குனிஞ்ச தலை நிமிராதவன்தான்.. இவ பின்னால அவன் சுத்தின சுத்தில எனக்கில்ல தலைசுத்தல் வந்துச்சு...", மேகலா அலுத்துக் கொண்டாள்..
"அதான்.. கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டோமுல்ல.."
"நீ ஒப்புக்காம வேற போயிருவியாக்கும்.. நீ வளர்த்த பய இந்தக் கல்யாணப் பேச்சு முடியாம.. இந்த வாசப்படிய தாண்டியிருக்க மாட்டான்..."
"அதாண்டா நாச்சியப்பா.. படிச்சுப்படிச்சு சொன்னேன்.. நீ அடக்கி வாசிச்சிருக்கனும்.. இப்பப் பாரு.. எதையும் போடாம பொண்ண தாட்டி விடப் பாக்குறாங்க.."
"அப்படியெல்லாம் நாக்கு மேல பல்லப்போட்டு.. ஒத்தச் சொல்ல சொல்லிராதேப்பா.. பொண்ணுக்கு பத்து பவுனுக்கு நகை போடறேன்... பண்ட பாத்திரம் எடுத்துக் கொடுக்கிறேன்.. தனிக்குடித்தனம் வைச்கிறப்ப.. அரிசி.. பருப்பை வாங்கி வைக்கிறேன்.. அங்கே என்ன செய்யப் போற..?"
"நாங்க ஒன்னும் குறைஞ்சவங்க இல்ல.. பொண்ணுக்கு தாலிச் செயின் போடுறதும்.. முகூர்த்தப் பட்டு எடுக்கிறதும் எங்க செலவு.. இது போல கல்யாணத்தையும் நடத்திக்குவோம்.. நீங்க பொண்ணை அனுப்பி வைச்சா மட்டும் போதும்..."
"தாராளம்.. தண்ணி பட்ட பாடுதான்.. நம்மள்ல.. மாப்பிள்ளை வீட்டிலதான கல்யாணம் நடக்கும்..? இதில பொண்ண மட்டும் அனுப்பி வைக்காம.. கல்யாணத்தை நடத்தியா வைப்போம்...?"
தாயும்.. மகனும் சம்பந்தி சண்டை போட்டுக் கொண்டதை ரசித்துப் பார்த்தாள் ராதிகா.. அந்த வீட்டின் தாராள மனது அவளை வசீகரித்தது.. அப்படிப்பட்ட மனிதர்களுடன் வாழும் கொடுப்பினை கிடைத்ததற்கு அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் அவள்..
சிநேகிக்கும் மனிதர்களை பார்த்திருக்கிறோம்... உறவினராக சுவீகரிக்கும் மனிதர்களைப் பார்த்திருக்கிறோமா..?
ராதிகா அப்படிப்பட்ட மனிதர்களை அன்றுதான் பார்த்தாள்.. வேலையாள்கள் என்று நினைக்காமல்.. வீட்டு மனிதர்களாக அவர்களை மாற்றிவிட்ட தன் புகுந்த வீட்டின் பெருமையை நினைத்து மனம் கரைந்து போனாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி..161
அம்மம்மா.. கேளடி தோழி..161
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-161.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-161.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy