அம்மம்மா.. கேளடி தோழி. -159

159 சொந்தமென்று வந்தவளின்.. சொந்தமாக அவனாகிப் போனான்... நாச்சியப்பன் அன்று வெகு சந்தோசமாக இருந்தான்... அவனின் வெகு நாளைய கனவு பலிக்கப் ...

159
சொந்தமென்று வந்தவளின்..
சொந்தமாக அவனாகிப் போனான்...

நாச்சியப்பன் அன்று வெகு சந்தோசமாக இருந்தான்... அவனின் வெகு நாளைய கனவு பலிக்கப் போகும் உற்சாகத்தில் இருந்தான்... சன்னமாக விசிலடித்தபடி வரப்பில் நடந்து வந்து கொண்டிருந்தவனை பார்த்த மருதமுத்து... தலையில் முண்டாசாகக் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துத் தோளில் போட்டபடி அவனிடம் பேச்சுக் கொடுத்தான்...
"என்னலே.. நாச்சியப்பா.. படு குஷியா இருக்கிறாப்புல தோணுதே..."
"ஏன்லே.. அது உன் கண்ணை உறுத்துதா..?"
"ஏன் உறுத்தப்படாதோ..?"
"ஆமாம்லே... உன் காலுக்கு கீழே வழிதப்பிப் போற வாய்க்காத் தண்ணிய.. ஒழுங்கா பாத்திப்பக்கம் திருப்பனுமுன்னு உன் மனசுக்கு உறுத்தாதுலே... வரப்பில கால் வைச்சு.. வழியோட போறவன வம்புக்கு இழுக்கலைன்னாத்தான் உன் மனசுக்கு உறுத்தும்.. இருலே.. நான் பெரிய வீட்டுக்குத்தான் போறேன்.. நீ தண்ணி பாய்ச்சற லட்சணத்தை அங்கே பத்த வைச்சுட்டு வாரேன்..."
அப்போதுதான் தன் பாதங்களை நனைக்கும் நீரின் தொடு உணர்வை உணர்ந்தான் மருதமுத்து... அவசரமாக குனிந்து பார்த்தான்... வாய்க்கால் தண்ணீர் பாத்திக்குள் போகாமல் தன் போக்கில் பாய்ந்து பரவிக் கொண்டிருந்தது...
அவசரமாக... தன் தோளில் போட்டிருந்த மண்வெட்டியை இறக்கி... வரப்பை வெட்டி வாய்க்கால் தண்ணீரை சரியான திசையில் திருப்பி விட்டான் மருதமுத்து...
"இத முதல்லேயே செய்யறதுக்கென்ன..? மம்பட்டியக் கையில புடிக்கிறத விட்டுட்டு தோளில போட்டிருந்தா இந்தக்கதிதான்..."
நாச்சியப்பன் கேலி பேசினான்.. தண்ணீரை சரியான பாதையில் திருப்பி விட்டிருந்த மருதமுத்து தலை நிமிர்ந்தான்...
'என்னைக்குமில்லாம இன்னைக்கு பயபுள்ள படு தெனாவெட்டா இருக்கானே... என்ன சங்கதியா இருக்கும்...?'
அதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் அவன் தலை வெடித்து விடாதா..?
"அத நீ சொல்லி நான் செய்யனும்னு இருந்திருக்கு நாச்சியப்பா... தண்ணிக் கதையை விடு... அதைத்தான் திருப்ப வேண்டிய திசையில திருப்பியாச்சே.. உன் கதைக்கு வா..."
"என் கதையில என்னலே இருக்கு..?"
இப்படிக் கேட்ட நாச்சியப்பனின் முகத்தில் தெரிந்த ஒளிர்வே எதுவோ இருக்கிறது என்பதை உணர்த்த.. அதை அறிந்து கொள்ளும் ஆவல் மருதமுத்துக்குள் அதிகமானது...
"சும்மா சொல்லுலே... காலங்கார்த்தாலேயே பெரிய வீட்டுப்பக்கம் நடயக் கட்டறயே.. என்ன விசேசம்...?"
"ஏன்.. நீ விடிஞ்சும்... விடியாம அங்கே போயி நின்னதில்லையாக்கும்...?"
"சோலி இருந்துச்சு போயிருக்கேன்..."
"எனக்கு மட்டும் சோலிக்கழுதை இல்லையா...? நானும் பெரிய வீட்டுத் தோட்டத்தைப் பார்த்துக்கிறவன் தான்..."
"நான் பார்க்கலையா...? நீ மட்டும்தான் பார்த்தியா..?"
"தெரியுதில்ல... ரெண்டு பேரும் கூட்டுப் போட்டுக்கிட்டு பார்க்கிற சோலி அங்கே இருக்கில்ல... அப்புறம் என்னத்துக்காக நீ மட்டும் தனியாப் போகிறயாம்..?"
"ம்ம்.. என்ன ஐயாவே வரச்சொல்லியிருக்காரு மருது..."
நாச்சியப்பனின் கண்சிமிட்டலில் மருதமுத்து ஆச்சரியப்பட்டுப் போனான்...
"ஏன்லே... ஏய்ய்.. நிசமாத்தான் சொல்றயா...?"
"பின்ன.. பொய்யா சொல்றேன்..?"
"ஐயாவப் பார்க்கனுமுன்னா நாமாத்தான் போகனும்.. ஐயாவே வரச் சொன்னாருன்னு சொல்றியே.. எதுக்காம்...?"
"எல்லாம் சுப காரியம்தான்..."
"நீ தோப்பையும்.. துரவையும் கட்டிக்கிட்டு இருக்கிறவன்.. உன்கிட்ட என்னத்தைப் பேசப்போறாரு.."
"இத்தன நாளா தோப்பையும் துரவையும் கட்டிக்கிட்டு இருந்தேன்ல.. அதில மகிழ்ந்து போயி.. மீனாட்சியையும் சேர்த்து கட்டிக்கன்னு பேசப் போறாரு..."
"என்னது...?"
மருதமுத்துவின் கையிலிருந்த மண்வெட்டி நழுவி விழுந்து.. அதில் சந்தோசப் பட்டுப் போனான் நாச்சியப்பன்..
மீனாட்சியைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் சந்தோசத்தை விட.. அதில் மருதமுத்துவை ஜெயித்து விட்ட சந்தோசம்தான் அவனுக்கு அதிகமாக இருந்தது...
நீண்ட நெடும் நாள்களாகவே மீனாட்சியின் மீது.. மருதமுத்தும் ஒரு கண்ணை வைத்திருந்ததை நாச்சியப்பன் நன்கு அறிவான்... இனம்.. இனத்தை அறியாதா..? தோப்பிலிருக்கும் இளநீகளையெல்லாம் மீனாட்சியின் காலடியில் நாச்சியப்பன் போடும் போது... மருதமுத்து வேர்கடலையை அவளிடம் நீட்டுவான்...
மாங்காய்களையும்.. கொய்யாக்காய்களையும்.. மீனாட்சிக்கு நாச்சியப்பன் சமர்ப்பித்தால்.. மருதமுத்துவுக்கு கொடுக்க.. வெள்ளரிக் காயும்.. திராட்சைக் கொத்தும் இருந்தன...
இரண்டு பேரின் சமர்ப்பணத்தையும் மீனாட்சி திரும்பிக்கூடப் பார்க்க மாட்டாள்...
"யோவ்.. இத்தனையும் உன் தோப்பில விளைஞ்சதா..?" என்று நாச்சியப்பனிடம் கேட்பாள்..
"உன் வயலிலே பயிர் செஞ்சயோ..?" என்று மருதமுத்துவை முறைப்பாள்...
"யாரு வீட்டுச் சொத்த.. யாரு தானம் பண்றது..? ஊரான் வீட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கையேன்னு சொல்கிறாப்புல... ஐயா வீட்டு தோப்பிலயும்.. வயல்லேயும் விளைஞ்சதை.. அள்ளிக் கொடுக்கறியாக்கும்.. இதயெல்லாம் நீ கொடுத்துத்தான் நான் வாங்கிக்கனுமா..? நானா பறிச்சுத் தின்ன எனக்கு உரிமையில்லையா..? பெரியம்மா கையாலே சோறு சாப்பிட்டு வளந்தவய்யா நானு.. இங்கே விளஞ்சதத் திங்க எனக்கில்லாத உரிமை உனக்குக்கூட இல்ல... ஓடியே போயிரு..."
மீனாட்சி அவர்கள் இருவரிடமும் தனித்தனியே திட்டிப் பேசி அனுப்பினாலும்.. ஒரே திட்டலைத்தான் திட்டுவாள்.. ஒருவர் வாங்கும் திட்டை மற்றவர் மறைந்திருந்து கேட்டுவிட்டு..
'அப்பாடி... எனக்கொன்னும் அதிகமா திட்டு விழலை..' என்று ஆறுதல் பட்டுக் கொள்வார்கள்...
என்ன ஒன்று.. நாச்சியப்பனைத் திட்டும் போது.. அவள் முகத்தில் கேலிப் புன்னகை தவழும்... இடக்குப் பேச்சு கொடி கட்டிப் பறக்கும்.. அதே பேச்சை மருதமுத்துவிடம் பேசும் போது மட்டும்.. அவள் முகத்தில் கடுமை தவழும்.. கோபப் பேச்சு.. கொடிகட்டிப் பறக்கும்..
இந்த வேறுபாட்டை நாச்சியப்பன் அறிந்திருந்தானோ.. இல்லையோ.. மருதமுத்து.. மிக நன்றாக அறிந்திருந்தான்.. அப்போதெல்லாம் அவன் மனதில் பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரியும்...
'அவன் கிட்டப் பேசினா மட்டும் அவ வாயிலயிருந்து விகடமா வெளியே வந்து கொட்டுது.. என்கிட்டப் பேசினா மட்டும்.. வில்லங்கமா வெடிச்சுத் தள்ளரா...'
அப்படியாகப்பட்ட மருதமுத்து.. நாச்சியப்பனுக்கும்.. மீனாட்சிக்குமான திருமணப் பேச்சில் குதூகலம் கொண்டாடுவானா என்ன..?
"அப்படின்னு உனக்கு யாரு சொன்னது...?"
"ஐயாதான் சொன்னாரு..."
"அவரு எதைச் சொன்னாரோ... நீ எதை எடுத்துக்கிட்டியோ..."
"ஏன்லே.. வேறு எதில வேணும்னாலும் வேற அர்த்தத்த எடுத்துக்கலாம்... கல்யாணப் பேச்சில போயி எந்த அர்த்தத்த எடுத்துக்கச் சொல்ற...?"
"இருலே... நானும் வாரேன்..."
"அது என்ன சோலிக் கழுதக்கி..? இங்கே தண்ணி பாய்ச்சறத யாரு பாக்குறது...?"
மருதமுத்தவை முடிந்தவரை கடுப்படித்து விட்டு.. பாலமுரளியின் வீட்டை நோக்கி நடையைக் கட்டினான் நாச்சியப்பன்...
ஹாலில் அமர்ந்திருந்த பாலமுரளி.. கால்மேல் கால் போட்டு தோரணையாக சாய்ந்து.. யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான்...
'கர்ண மகராசனுக்கு கவசக் குண்டலமுன்னா.. எங்க ஐயாவுக்கு செல்போனு...'
நாச்சியப்பன் கைகளைக் கட்டியபடி மரியாதையுடன் பாலமுரளியின் முன்னால் போய் நின்றான்... அவன் விழிகள் நாலாபக்கமும் மீனாட்சியைத் தேடித் துழாவின.. அவள் தென்படவில்லை... மாறாக.. பாலமுரளியின் எதிரேயிருந்த சோபாவில் அமர்ந்திருந்த மேகலாதான் தென்பட்டாள்.. நாச்சியப்பனின் தேடும் கண்பார்வையைக்  கண்டு கொண்ட சிரிப்பு அவள் கண்களில் தென்பட்டது...
செல்போனை பேசி முடித்த பாலமுரளி... அதை அருகில் வைத்துவிட்டு.. நாச்சியப்பனை நிமிர்ந்து பார்த்தான்.. அவனின் துளைக்கும் பார்வையில் நாச்சியப்பனின் பவ்யம் கூடியது...
"என்ன நாச்சியப்பா..."
"ஐயா..!"
"அம்மா என்னென்னவோ சொல்றாங்களே.. அது நிஜமா...?"
"எதைப் பத்திங்கய்யா..?"
"நீ மீனாட்சி கல்யாணத்துக்கு குறுக்கே நிற்கறியாமே..."
"அது அப்படியில்லைங்கய்யா..."
"வேற எப்படி நாச்சியப்பா..?"
"மீனாட்சி கல்யாணத்தில்.. அவ பக்கத்தில நான் நிற்கனும்னு ஆசைப்படறேன்ங்கய்யா..."
பாலமுரளி... நாச்சியப்பனின் வினயமான பேச்சில் அயர்ந்தே போனான்... நாச்சியப்பன்கூட அத்தனை விவரமாகப் பேசக்கூடும் என்று அதுநாள்வரை அவனுக்குத் தெரியாமலிருந்தது...
'இதப் பாருடா.. இந்தக் காதல் மனுசக் கழுதய எப்படியெல்லாம் மாத்தித் தொலைக்குதுன்னு... நேத்து வரைக்கும் ஒத்த வார்த்தய இவன் உருப்படியா பேச மாட்டான்... இன்னைக்கென்னன்னா.. வார்த்தையாலேயே பந்தல் போட்டு.. புகுந்து விளையாடறானே...'
பாலமுரளி.. மேகலாவை அர்த்தம் பொதிந்த பார்வையுடன் பார்க்க.. மகனின் பார்வையைப் புரிந்து கொண்ட சிரிப்பை அவள் தந்தாள்...
"கேட்டிங்களாம்மா... நான் சொல்லலை... நாச்சியப்பன் நீங்க நினைக்கிறதைப் போல இல்லேன்னு.."
அவன் விசமமாகப் பேசியபோது.. ராதிகா மாடியிலிருந்து இறங்கி வந்து.. அவனருகே அமர்ந்தாள்.. கணவனின் பேச்சை ரசிக்கும் புன்னகை அவள் உதட்டில் இருந்தது...
மனைவியின் புன்னகையில் பாலமுரளி உற்சாகமாகிவிட.. நாச்சியப்பனோ கலவரமாகி விட்டான்...
'ஐயா என்னத்தச் சொன்னாரு.. அம்மா என்னத்த நினைச்சாங்க...'
"இவன் தங்கம்மா..."
'இப்ப எதுக்காக ஐயா இப்படிப் பாராட்டி வைக்கிறாரு..'
"மீனாட்சி கல்யாணத்தில பக்கத்தில நிற்கனும்னு தான் ஆசைப்படறான்.." பாலமுரளி... ராதிகாவைப் பார்த்து இமைசிமிட்ட அவள் முகம் சிவந்தாள்...
'ஹப்பாடி.. ஐயா விசயத்துக்கு வந்திட்டாரு.. என் மனசைப் புரிஞ்சுக்கிட்டாரு...' நாச்சியப்பன் நிம்மதியடைந்தான்..
"மீனாட்சி கல்யாணத்துக்கு குறுக்கேயெல்லாம் நிற்கமாட்டான்..."
மனைவியை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி.. அடுத்த அணுகுண்டை அவன் தூக்கிப் போட.. நாச்சியப்பனின் நிம்மதி பறந்தது...
'இதுக்கு என்ன அர்த்தம்..? ஒன்னும் புரியலையே..'
"அதனாலம்மா.. நான் என்ன முடிவுக்கு வந்திருக்கேன்னா.. நம்ம மீனாட்சி கல்யாணத்தில... நாச்சியப்பன் மாப்பிள்ளைத் தோழனா.. மாப்பிள்ளைக்குப் பக்கத்தில நிற்க வைச்சிருவோம்... நாச்சியப்பன் ஆசைப்பட்டபடி... மீனாட்சி கல்யாணத்தில அவ பக்கத்தில அவன் நிற்பான்.. உங்க மனசுப்பிரகாரம் அவ கல்யாணத்துக்கு குறுக்கே நிற்கவும் மாட்டான்... என்ன ராதிகா.. நான் சொல்றது சரிதானே...?"
தாயிடம் பேச்சை ஆரம்பித்து.. மனைவியிடம் கேள்வி கேட்டு அவன் பேச்சை முடிக்க.. நாச்சியப்பன் அலறி விட்டான்...
அவன் சொன்னது என்ன..? அதை பாலமுரளி புரிந்து கொண்ட விதம்தான் என்ன..?
"ஐயா... நான் அப்படிச் சொல்லலைங்க..."
அவனது பதட்டத்தைக் கண்ட ராதிகாவும்.. மேகலாவும் குலுங்கிச் சிரித்தபோதுதான் அவனுக்கு.. பாலமுரளியின் கிண்டல் புரிந்தது...
முகத்தில் குடம்.. குடமாக அசடு வழிய.. அவன் தலையைக் கவிழ்த்துக் கொண்டான்...
"போதும்ங்க.. பாவம்.. நாச்சியப்பன் அரண்டு போயிட்டாரு.."
ராதிகாவின் பரிந்துரையில் நாச்சியப்பனின் போன உயிர் மீண்டும் வந்தது...
'அப்பாடி... தப்பிப் பிழைச்சேண்டா சாமி.. அம்மா சொல்லி ஐயா மாட்டேன்னு சொல்லிருவாரா...'
அவன் சீராக சுவாசத்தை விட ஆரம்பித்தான்.. பாலமுரளி உள் பக்கமாகத் திரும்பி...
"மீனாட்சி.." என்று அழைத்தான்...
என்றைக்குமில்லாத முகச் செம்மையோடு மீனாட்சி அங்கே வந்து சேர நாச்சியப்பனின் முகத்தில் பரவசம் படர்ந்தது...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி. -159
அம்மம்மா.. கேளடி தோழி. -159
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-159.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-159.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy