அம்மம்மா.. கேளடி தோழி. -155

155 பெண் மனதின் பெட்டகத்தின்  திறவுகோலை அறிந்தவர் யார்..? "மீனாட்சி..." இரக்கத்துடன் நாச்சியப்பன் அழைக்க.. வெறுப்புடன் முகத்...

155
பெண் மனதின் பெட்டகத்தின் 
திறவுகோலை அறிந்தவர் யார்..?

"மீனாட்சி..."
இரக்கத்துடன் நாச்சியப்பன் அழைக்க.. வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு.. தோட்டத்தின் பக்கமாக விரைந்து விட்டாள் மீனாட்சி..
நாச்சியப்பன் பின் தொடர்ந்தான்.. விசும்பிக் கொண்டிருந்த மீனாட்சியின் அருகே சென்று...
"அழுகாதே.. புள்ள..." என்றான்
"நான் அழுவுறேன்.. இல்ல சிரிக்கிறேன்.. அது என் இஷ்டம்.. நீ யாருய்யா அதைக் கேட்க..?" ஆக்ரோசத்துடன்  கேட்டாள் மீனாட்சி..
அந்தத் துயரமான மனநிலையிலும்.. தன் கோபத்தை விடாமல் சிலிர்த்து கொண்ட அவள் இயல்பில் மனம் லயித்தான் நாச்சியப்பன்..
 'இது.. இது.. இதுதான்.. இவ...'
அவளின் வாயாடித்தனத்தின் தீவிர ரசிகன் அவன்.. தினமும் அவளிடம் வம்பிழுத்து வாங்கிக் கட்டிக் கொள்வதுதான் அவனுக்கு பரம சுகம்..
"நான் யாரா..? அதைத்தான் கெஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ சொன்னயே.."
"சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு நான் ஆயிரம் சொல்வேன்.. அதை இந்தக்காதில வாங்கி.. அந்தக்காதில் விட்டுட்டுப் போற ஆளுதான நீ.. இன்னைக்கு என்ன புதுசா கரிசனம் பொங்கிவழியுது..?"
"ஏன் புள்ள.. உனக்கே இது நாயமாய் இருக்கா..? என் கரிசனம் உனக்குப் புதுசா..? இன்னைக்கு.. நேத்தா உம்மேல நான் கரிசனப்படறேன்..? உன்னைக் கண்டுகிட்டு நாள் முதலா.. கட்டினா உன்னத்தான் கட்டனுமுன்னு உன் பின்னால  'தோ.. தோ' நாய்க்கட்டியைப் போலல்ல சுத்திச் சுத்தி வர்றேன்..?"
"இந்தக் கதையெல்லாம் எங்கிட்டச் சொல்லாதே.. நாய் குட்டின்னா உனக்கு அத்தனை இனக்காரமா போச்சா..? அது நன்றியுள்ள ஜீவன்ய்யா... ஒருத்தரப் பிடிச்சிருந்தா அவங்க பின்னால மட்டும்தான் அது வாலை ஆட்டிக்கிட்டு அலையும்.. உன்னப் போல.. நிமிசத்துக்கொரு தரம் நிறம் மாறாது.."
"ஒஹோ.. அதனாலதான் அம்மணி.. என்ன 'பச்சோந்தி'ன்னு பெயர் வைச்சுக் கூப்பிட்டாங்களாக்கும்..?"
நாச்சியப்பன் கோபமில்லாத புன்னகையுடன் கேட்க..
"ஆமாய்யா.. அதுக்கு இப்ப என்னாங்கிற..?" என்று சிலிர்த்துக் கொண்டாள் மீனாட்சி...
"நான் எதுக்கு புள்ள.. என்னான்னு சொல்லப் போறேன்..? என்ன எப்படி வேண்டும்னாலும் நீ கூப்பிடு... உனக்கில்லாத உரிமையா..? நீ எப்படிக் கூப்பிட்டாலும்.. நான் ஓடிவந்து நிக்கப்போறன்... அப்புறம்  எதுக்காக புள்ள நீ கோவிச்சுக்கறே.." நாச்சியப்பன் குழைந்தான்.
அவன் குழையலுக்கெல்லாம் மீனாட்சி மசியவில்லை.. உன்னைப்போல எத்தனை ஆள்களை நான் பார்த்திருப்பேன்.. என்ற பார்வையினை அவள் பார்த்தாள்..
"நீதானே.. அதெல்லாம்  கூப்பிட்ட குரலுக்கு உடனே ஓடிவந்து நிப்ப.. என்ன ஒன்னு.. நான் கூப்பிட்டாலும் ஓடி வருவ.. அந்த வித்தராக் கள்ளி.. விறகொடிக்கிற மாய்மாலக்கள்ளி காவேரி கண்ணடிச்சாலும்.. ஈன்னு வந்து நிப்ப.. அப்புறம்.. அவயாரு..? மெட்ராஸ் பட்டினத்தில இருந்து வந்தாளே ஒரு மேனா மினுக்கி ஜெகஜால மோகினி.."
மீனாட்சி.. கண்ணீரை மறந்து.. கோபத்துடன் நீட்டி முழக்கிக் கொட்டிருக்க.. நாச்சியப்பன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்..
"யாரைச் சொல்ற புள்ள.. அந்த ஷோபாப் பொண்ணையா சொல்ற..?"என்று கேட்டு வைத்தான்..
"பேரெல்லாம் மறக்க மாட்டியே..." மீனாட்சியின் கண்களில் தீப்பொறி பறந்தது...
"ஏம்புள்ள.. உன் மனசைப் படிக்கிறவன் நான்.. நீ யாரைச் சொல்றன்னு.. எனக்குத் தெரியாதா..?"அவன் புளகாங்கிதப்பட்டுப் போனான்...
"சொல்லுவய்யா சொல்லுவ.. சொல்கிறவ கூமுட்டையா இருந்தா சோளக்காட்டுல நெல் விளையுதுன்னு சொல்லுவ.."
"நீ பேசு புள்ள.. நீ எதைப் பேசினாலும் கேக்கத்தானே இந்த நாச்சியப்பன் பொறப்பெடுத்திருக்கேன்..?"
"கேப்பய்யா.. கேப்ப.. பேசறவ கேணாச்சியா இருந்தா.. நீ கேப்பையில் நெய் வடியுதுன்னு கேப்ப.."
"பாரு புள்ள.. நானே பச்சோந்தின்னு எதுக்குச் சொன்னன்னு விளக்கம் கேக்க வந்து நிக்குறேன்.. நீ அதுக்கு விளக்கம் சொல்லாம சொலவடைக்கு மேல.. சொலவடையாய் அள்ளி விட்டுக்கிட்ட இருந்தா அர்த்தம் என்ன புள்ள..? மனுசன் விளக்கம் தெரியாம மண்டை காய்ஞ்சு போயிற மாட்டானா..?"
"நீ காய்ஞ்சு போன மாடுதானய்யா..? என்ன ஒன்னு கழனிப்பக்கம் மேயப் போகாம... காய்.. காய்ச்ச மரத்துப் பக்கம் சுத்திக்கிட்டு இருக்க.."
கண்ணீரை பொலபொலவென்று உதிர்க்கும் அந்த நிலையிலும் பொடி வைத்துப் பேசிய காதலியின் பேச்சுத் திறமையில் அவள்மீது காதலோ.. காதலென்று.. காதலாகிப் போனான்  நாச்சியப்பன்.. அவள் என்ன பேசுகிறாள் என்ற விவரம் புரியாவிட்டாலும்... அவள் எதையோ மறைத்துப் பேசுகிறாள் என்ற விவரம் புரிந்ததில் தன் அறிவை தானே மெச்சிக் கொண்டான்..
"நீ பொடி வைச்சுப் பேசற புள்ள.."
"அத இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டியாக்கும்..?"
"ஆனா.. என்னத்தைப் பேசறன்னுதான் ஒரு மண்ணும் புரியல.."
"அதெல்லாம் மூளையிருக்-கிறவங்களுக்குத்தான் புரியும்.. மூளைக்குப் பதிலா களி மண்ணு இருக்கிறவாய்களுக்கு ஒரு மண்ணும் புரியாது.."
"அதுக்கென்ன புள்ள.. எந்தலையில இருக்கிறது களிமண்ணாவே இருக்கட்டும்.. அதை வைச்சு சட்டி.. பானை செய்ய நீயிருக்கயே எனக்கு அது போதும்.."
பேசியபடியே.. மீனாட்சியின் விழி நீரை துடைக்க அவன் முயல...
"எடுய்யா.. கையை..." என்று சீறினாள் மீனாட்சி..
"மீனாட்சி..?" அவன் மன்றாடலுடன் கெஞ்சினான்
"என் பேரைச் சொல்லாதய்யா.. உனக்கு அந்த யோக்கியதை கிடையாது.."மீனாட்சி பொருமினாள்..
"ஏன் புள்ள அப்படிச் சொல்ற..?"
"பேசாதே.. சொல்லிப் புட்டேன்.. நீயெல்லாம் ஒரு மனுசப்பிறவியாய்யா..? அந்த ஷோபா சிறுக்கி பின்னால வாலை ஆட்டிக்கிட்டுப்போன ஆளுதானய்யா நீ..?" அவள் சீறினாள்..
பெண்களின் மனதை.. கடலை விட ஆழமான தென்று சொல்கிறார்களே.. அந்த ஆழத்தின் அடியில் அமிழ்ந்திருக்கும்.. ஏமாற்றங்களையும்.. துயரங்களையும்.. அவலங்களையும்.. மனக் காயங்களையும் அவர்கள் அறிவார்களா..?
சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று சொல்பவர்கள்.. அந்தச் சிரிப்பின் பின்னால் உறைந்திருக்கும் அவளின் போராட்டங்களைப் புரிந்து கொள்வார்களா..?
அந்தச் சிரிப்பை ஒரு முகமூடியாகத்தான் அவள் அணிந்திருப்பாள்.. அதன் பின்னால்.. ஆழ்கடலை விட ஆழமான மனதிருக்கும். அதில் அமிழ்ந்து கிடக்கும் மனத்துயரங்களிருக்கும்..
மனம் போன போக்கில் வாழ்வதாகக் கூறப்படும் பெண்கூட.. அவள் மனம் போன போக்கில் வாழ்ந்திருக்க மாட்டாள்.. ஏதாவது ஒரு ஆணின் மனம் போன போக்கில் வாழ்ந்திருப்பாள்...
சொல்வதென்றால் ஆயிரம் என்ன.. லட்சம் என்ன.. கோடி என்ன... ஏன்.. இந்த பிரபஞ்சத்தின் அளவை விடப் பெரிதான.. பெண்களின் மனத்துயரங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருக்கலாம்.. வாழ்க்கையால் வஞ்சிக்கப்பட்ட... இந்த சமுதாயத்தினால் ஒடுக்கப்பட்ட பெண்களின் அவல நிலையைப் பிட்டுப் பிட்டு வைக்கலாம்...
அதனால் என்ன பயன்..?
ரணமாகிக் கிடக்கும் மனங்களின் வலியை ஆற்றி விட அவற்றால் முடியுமா..? மாறாக.. அந்த ரணத்தைக் குத்திக் கிளறி.. அதன் வேதனையை பன்மடங்காகப் பெருக்கத்தான் அவற்றால் முடியும்..
மயிலிறகாய் மனம் வருடிச் செல்லும் வார்த்தைகளால்.. மனக்காயங்களை மறக்கடிக்க முடியுமென்றால்.. அதை விட்டு விட்டு.. கோடாளியைக் கையில் எடுக்கலாமா..?
மீனாட்சியின் மனமும் அப்படிப் பட்டதுதான்.. அவள் மனதில் இருந்ததை அறிந்தவர் யாருமில்லை.. அவள் கூடப் பழகும் காவேரி.. அவளை எதிரியாகத்தான் பாவித்தாள்..
அவளை நேசிப்பதாய் சொல்லிக் கொண்டு பின்னால் வந்த நாச்சியப்பன் அவள் முன்னாலேயே.. மற்ற பெண்களிடம் கடலை போட்டான்..
அவற்றைக் கூட அவன் சகித்துக் கொண்டாள்.. பொறுத்துக் கொண்டாள்..
எனக்கு நீ நிகரா..? என்ற அலட்சியப் பார்வையுடனும்.. பேச்சுக்களுடனும் அவற்றை எதிர் கொண்டாள்..
ஆனால்.. அவளைப் பெற்ற தாயை விடப் பெரிதாக பேணி வளர்த்த மேகலாவே கடிந்து கொண்டதில் அவளுடைய மனவலிமை தகர்ந்து விட்டது.. மனதிற்குள் மாறாத துயரமும்.. தனிமையும் குடி கொண்டு விட்டது.. அந்த மனநிலையில் அவள் மனம் வெளிப்பட்டு விட்டது..
என்றோ வந்து போன ஷோபாவின் நினைவில் இன்றும் மீனாட்சி இருக்கிறாளென்றால் அதற்கு என்ன அர்த்தம்..?
அதைப் புரிந்து கொண்ட நாச்சியப்பனின் கண்கள் மலர்ந்தன..
"புள்ள.." அவன் பரவசப்பட்டுப் போனான்..
"யோவ்.. கைப்புள்யைக் கூப்பிடறதைப் போல என்னையும் கொஞ்சிக்கிட்டு இருந்தீன்னா.. நடக்கிறதே வேற.. ஆமாம்.. சொல்லிப் புட்டேன்.. யாருக்கு.. யாருய்யா புள்ள..?"
அவளின் ஆட்சேபனையை நாச்சியப்பன் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை..
"ஏன் புள்ள.. இத இத்தனை நாளா ஏம்புள்ள கேட்டு வைக்கல.."என்று அவன் கேட்டு வைத்தான்..
"உன்கிட்ட நான் எதுக்காகய்யா கேட்கனும்.. நீ துணுக்கு சேலையைக் கட்டி விட்டிருந்தா கூட.. பின்னாலேயே போற ஜாதின்னு தெரிஞ்ச பின்னால.. உனக்கு கடிவாளம் போட நான் எதுக்காகய்யா மெனக்கெடனும்..?"
"நான்தான் அந்த ஜாதியாய் இருந்தேன்னா.. நீ என் பெண்ஜாதியாய் மாறி என்னைத் திருத்தலாமில்ல..?"
"ஆமாய்யா.. அதுக்குத்தானே என்னோட அப்பனும்.. ஆத்தாளும் என்னைப் பெத்து.. அம்போன்னு அநாதையாய் விட்டுட்டு மேலோகம் போயிருக்காங்க..? ஏன்னு கேட்க ஒரு நாதியிருந்தா இப்படி ஒரு கேள்வியை என்னப் பார்த்து நீ கேட்பியாய்யா..?"
மீனாட்சியின் கண்ணீர் துளிகள் சிதறிய போது.. நாச்சியப்பனின் மனமும் கூடச் சேர்ந்து சிதறியது...
மனதார அவன் காதலிக்கும் காதலி நாதியில்லாதவளைப் போல கண்ணீர் சிந்தியதில் அவன் மனம் வலி கொண்டது..
"இந்தா பாரு புள்ள.. இப்ப என்னத்தை நான் கேட்டுப்புட்டேன்னு அழுது புலம்புறவ..? துணுக்கு சேலையைக் கட்டிவிட்டிருந்தா ஒரு ஆம்பளையாகப்-பட்டவன் நின்னு ஒரு பார்வை பார்க்க மாட்டானா..? அதுக்குப் போயி என்னா பேச்சுப் பேசற..? ஏன்புள்ள.. நானிருக்கப்ப நீ நாதியில்லாதவளா ஆகிருவியா..? ஏன்னு என்னைக் கேட்கனும்னா நீ ஆயிரம் கேள்வியைக் கேளு நான் சலாம் போட்டுக்கிட்டு பதிலைச் சொல்றேன்.. உன்னை யாராச்சும் ஒத்தக் கேள்வியைக் கேட்டாக்கூட அதை என்கிட்ட வந்து சொல்லு புள்ள.. ஏன்னு கேட்க உனக்கு நானிருக்கேன் புள்ள.. கேட்ட ஜென்மத்தை நார்.. நாரா கிழிச்சுப் போட்டிற மாட்டேன்..?"
கண்கள் சிவக்க.. கை முஷ்டியை மடக்கிக் காற்றில் குத்தியவாறு.. மனதிற்குள் போனவாரம் பார்த்த திரைப்படத்தின் கதாநாயகனைக் கொண்டு வந்து வீர வசனம் பேசினான் நாச்சியப்பன்...
அவனை அலட்சியமாய் மேழும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு.. ஒரே வார்த்தையில் புரட்டிப் போட்டாள் மீனாட்சி..
"கிழிச்ச.."
நாச்சியப்பனுக்கு மீசை துடிக்க ஆரம்பித்த விட்டது.. அவன் எந்தப் பக்கம் போனாலும் அதற்கு எதிர்பக்கமாகத்தான் போவேனென்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த மீனாட்சியை உக்கிரமாகப் பார்த்தான்..
"உன்னையே சுத்திச் சுத்தி வர்றேன்னுதான உனக்கு இத்தனை இளக்காரம்..?"
"ஆமா.. நீ என்னை மட்டும்தான் சுத்தி வந்த.. போய்யா.. உன் வகிசியை எனக்குத் தெரியாதா..? கொஞ்ச நேசத்துக்கு முன்னாலதான அந்தக் காவேரி உன்னைப் பார்த்து கண்ணடிச்சா..? நீயும் 'ஈ'ன்னு முப்பத்திரண்டு பல்லையும் காட்டிக்கிட்டு அவளைப் பார்த்த..? அதுக்கப்புறமும் என்கிட்ட வந்து குழையறியே.. உனக்கு மனச்சாட்சியே இல்லையா..?"
மீனாட்சி நாச்சியப்பனை புறக்கணித்தவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி. -155
அம்மம்மா.. கேளடி தோழி. -155
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-155.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-155.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy