அம்மம்மா.. கேளடி தோழி..-154

154 முந்நூறு நாள் கழித்து... முத்தாக மகன் வருவான்... மீனாட்சிதான் முதலில் அதைக் கவனித்தாள்... படியிறங்கி வந்து கொண்டிருந்த ராதிகாவின் ...

154
முந்நூறு நாள் கழித்து...
முத்தாக மகன் வருவான்...

மீனாட்சிதான் முதலில் அதைக் கவனித்தாள்...
படியிறங்கி வந்து கொண்டிருந்த ராதிகாவின் கால்கள் தள்ளாடியதைக் கவனித்தவள் பதட்டத்துடன் கையிலிருந்த பால் செம்பை நழுவவிட்டாள்.. அதிலிருந்த பால் வழிந்து ஹாலில் பரவ... தோப்பைப் பற்றி நாச்சியப்பனுடன் பேசிக் கொண்டிருந்த முரளி கோபத்துடன் அவளை முறைத்தான்... அந்த முறைப்பை லட்சியம் பண்ணாதவளாக அவள் மாடிப்படிகளை நோக்கிக் கை நீட்டினாள்...
"ஐயா.. சின்னம்மாங்க..."
அவள் விரல் நீட்டிய திசையில் பார்த்தவன் நாச்சியப்பனை மறந்தவனாக.. இரண்டே எட்டில் மாடிப் படிகளைத் தாண்டி.. துவண்டு சரிந்து கொண்டிருந்த ராதிகாவை கைகளில் ஏந்திக்b காண்டான்.. ஒருவினாடி அவன் தாமதித்திருந்தால்கூட ராதிகா மாடிப்படிகளில் சரிந்திருப்பாள்...
பூமாலை போல கைகளில் கிடந்த ராதிகாவை அவன் ஹால் சோபாவில் படுக்க வைத்த போது.. வீடே அவனைச் சூழ்ந்து கொண்டது...
"என் மருமகளுக்கு என்னடா ஆச்சு..?" மேகலா பதறிப் போனாள்...
"அம்மாவுக்கு காய்ச்சல் வந்திருச்சு போல காவேரி.. சூடா காபிய கலந்துக்கிட்டு வா..."
ராதிகாவைத் தொட்டுப் பார்க்காமலே மீனாட்சி காவேரிக்கு உத்தரவு போட.. அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. சுற்றிலும் மற்றவர்கள் இருக்கும் போது கோபத்தைக் காண்பிப்பது உசிதமில்லை என்ற நினைவில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள் அவள்...
"அதுக்கென்ன மீனாட்சி.. நீ சொன்னதைச் செய்யத்தானே நான் இந்த வீட்டில் வேலைக்கிருக்கேன்.. நான் காபியக் கொண்டு வந்தா.. அதை வாங்கிக் குடிக்க அம்மாவுக்கு நிணைப்பிருக்கனுமில்ல.. நினைவு தப்பிக் கிடக்கிறவங்களுக்கு சூடா காபித் தண்ணியக் குடுக்கக் கூடாது மீனாட்சி.. சில்லுன்னு குளிர்ந்த தண்ணிய முகத்தில தெளிக்கனும்.. எங்கே.. இதெல்லாம் மூளையிருக்கிறவங்களுக்கு புத்தியில உறைச்சிருக்கும்.. நீதான் புத்திய கடன் கொடுத்திருக்கவளாச்சே..."
காவேரியின் இடக்கான பேச்சில் மீனாட்சிக்கு ரோசம் வந்துவிட்டது...
'யாருக்குடி புத்தியில்ல..? உனக்குப் புத்தியில்ல.. உன் புருசனுக்கு புத்தியில்ல.. நீ பெத்ததுகளுக்கு புத்தியில்ல.. ஏன்.. உன் வம்சத்துக்கே புத்தியில்ல... நான் புத்திசிகாமணி வம்சத்தில வந்தவடி.. என்னைப் பார்த்தா இந்தக் கேள்வியைக் கேட்கிற...?'
மனதுக்குள் சராமரியாக உதித்த வார்த்தைகளை வாய் வழியே உதிர்க்க அவள் தயாரான போது மேகலா அவளை அனல் பார்வை பார்த்தாள்...
"அதான் அவ சொல்கிறாள்ல.. அப்புறமும் எதுக்காக அசையா மரம் போல நின்னுக்கிட்டு இருக்க..? போ.. போயி.. பிரிட்ஜில இருக்கிற ஐஸ் தண்ணியக் கொண்டு வா..."
காசேரியின் முன்னிலையில்.. காவேரியை விட்டு விட்டு.. மீனாட்சியை வேலை வாங்கியதில் மீனாட்சிக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை... அதிலும்.. மேகலாவின் உத்தரவைக் கேட்டதும்.. காவேரி.. வாய்மூடி சிரிப்பை அடக்கிக் கொண்டதில் அவள் கொதிநிலையின் உச்சத்துக்கே போனாள்...
'இருக்குடி.. உனக்கு...' அவள் கண்களாலேயே காவேரியை எச்சரிக்க...
'போடி.. போ... உன்ன மாதிரி எத்தன பேரை நான் பார்த்திருக்கேன்...' என்ற பதில் பார்வையைக் கொடுத்தாள் காவேரி...
விழிகளால் பேசியபடி.. பார்வை யுத்தம் செய்து கொண்டிருந்தவள் மேகலாவின் கனல் வீசும் பார்வைக்கு அஞ்சியவளாக உள்ளே நகர்ந்தாள்..
அவள் கொண்டு வந்த குளிர் நீரை வாங்கி.. மெதுவாக ராதிகாவின் முகத்தில் தெளித்து... கைக்குட்டையால் அவள் முகத்தை துடைத்து விட்டான் முரளி... அவள் மெல்லக் கண்திறந்து பார்த்ததில்...
"அப்பாடி..." என்று நிம்மதிப் பெருமூச்சை விட்டாள் மேகலா..
"ஏனுங்கய்யா.. அம்மாவுக்கு காய்ச்சல் வந்திருச்சுங்களா..?" மீனாட்சி பவ்யத்துடன் வினவ...
"ஆ.. ஊன்னா.. இவ இதைச் சொல்லியே உயிரைக் குறைக்கிறாடா முரளி..." என்று தலையைப் பிடித்துக் கொண்டாள் மேகலா...
"அதுக்கில்லங்கம்மா... வழக்கமா நம்ம சின்னம்மா மயக்கமா படுத்தா.. அது காய்ச்சலாத்தானே இருக்கும்..?"
விளக்கம் சொல்ல ஆரம்பித்த மீனாட்சி.. பாலமுரளியின் பார்வை உயரவும்.. அப்படியே பேச்சை அந்தரத்தில் விட்டுவிட்டு...
"என்னமோ கருகுற வாசனை வருதே.. ஏண்டி காவேரி.. அடுப்பில எதைக் கருக விட்டுட்டு இங்க வந்து நின்று வாய் பார்த்துக்கிட்டு இருக்க..?" என்று காவேரியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாள்..
'என் வயிறுதாண்டி எரியுது.. அந்த வாசனைதான் உன்னை வந்து கருக்குது...' காவேரி ருத்ர அவதாரம் எடுத்தாள்...
"இவ வாயைத் தைக்க ஊசி நூல் இருக்கா நாச்சியப்பா...?"
தாங்க முடியாமல் மேகலா கேட்டாள்...
"அதை இனிமே யாராவது பிறந்து கண்டு பிடிச்சுக் கொடுத்தான் உண்டும்மா.. உலை வாயை மூடலாம்... ஏன்..? ஊர் வாயைக்கூட மூடலாம்.. இவ வாயை மூடறதுங்கிறது சாமானியப்பட்ட சமாச்சாரமில்லம்மா.. இவளைப் படைச்ச ஆண்டவனாப் பார்த்து மனசிரங்கினாத் தான் அது நடக்கும்.." மீனாட்சியை ஒரு மார்க்கமாகப் பார்த்தபடி பதில சொன்னான் நாச்சியப்பன்..
அவனுக்கு நீண்ட நாள்களாவே மீனாட்சியின் மீது ஒருகண் உண்டு.. அதை அவன் மீனாட்சியிடம் வெளிப் படுத்திய போது... இரண்டு கண்ணிருக்க.. ஒரு கண்ணை மட்டும் எதற்காக அவள்மீது அவன் வைத்தான் என்ற இடக்கு மடக்கான கேள்வியை அவள் எழுப்பிவைத்தாள்.. அதற்குப் பின்னால் அவளிடம் மனதைத் திறந்து சொல்ல அநேக சந்தர்ப்பங்கள் வாய்த்தபோதும்.. அவளின் அந்த வாய்க்கு அஞ்சியே வாய்மூடி நகர்ந்து விடுவான் நாச்சியப்பன்...
அவனுடைய ஆற்றாமையை வெளிப் படுத்திக் கொள்ள அருமையாக கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் அவன் பற்றிக் கொண்டதில் காவேரி குஷியாகி விட்டாள்...
அர்த்தம் பொதிந்த.. நட்புக் கலந்த பார்வையொன்றை அவள் நாச்சியப்பனின் பக்கம் வீச... அந்தப் புரிதல் கலந்த பார்வையில் புல்லரித்துப் போனான் நாச்சியப்பன்...
'என்னடா இது.. பசு மாட்டுக்கு தண்ணி காட்டினா.. கண்ணுக்குடியோட நிற்கிற மாடு.. புல்லைக் கேட்குது...'
அவர்களின் பார்வைப் பரிமாற்றத்தில் மீனாட்சிக்குள் ரணகளமே உருவானத... அவளை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த நாச்சியப்பன் காவேரியையும் சேர்த்துப் பார்ப்பதில் அவள் கொலைவெறி கொண்டாள்...
இது எதையும் கவனிக்காதவனாக.. ராதிகாவின் கன்னம் தட்டி அவளைக் கண்விழிக்க வைத்துக் கொண்டிருந்தான் முரளி...
"என்னடி செய்யுது..?" கவலையுடன் அவன் கேட்க..
"தெரியல... மயக்கம்.. மயக்கமா வருது.." ராதிகா பேச முடியாமல் கண்மூடினாள்...
அவர்களின் பேச்சில்.. நாச்சியப்பனிடம் நட்புக்கரம் நீட்டுவதை மறந்து காவேரி.. ராதிகாவின் பக்கம் கவனத்தைத் திருப்பினாள்...
"ரெண்டு நாளாவே அம்மா சரியாச் சாப்பிடறதில்லிங்கய்யா... எதைச் சாப்பிட்டாலும் வாந்தியெடுத்திடறாங்க..."
அவள் கூறிய வாக்குமூலத்தில் மீனாட்சிக்கு பிடி கிடைத்து விட அவள் உற்சாகமானாள்...
"இவ அந்த லட்சணத்தில ஆக்கிப் போட்டிருக்கா.. அம்மா கேட்டுக்கங்க.. ஐயா கேட்டுக்கங்க.. யோவ் பச்சோந்தி நாச்சியப்பா...! நீயும் இதைக் கேட்டுக்கய்யா.. இவ ஆக்கிப் போட்டச் சாப்பாட்டைச் சாப்பிட்டதில அம்மாவுக்கு வாந்தி வந்து.. அது மயக்கத்தில கொண்டு வந்து நிப்பாட்டிருச்சு.. இதுக்கு என்ன சொல்றிங்க..?"
அவள் ஆர்ப்பரிக்க...
"ம்ம்ம்.. உன் திருவாயை மூடச் சொல்றேன்.." என்று சிரித்த முகத்துடன் சொன்னாள் மேகலா...
ராதிகாவின் மயக்கத்தை மறந்து... நாச்சியப்பனை எதற்காக பச்சோந்தியென்று மீனாட்சி அழைக்கிறாள் என்ற ஆராய்ச்சியில் இறங்கினாள் காவேரி...
மீனாட்சி கிளப்பி விட்ட பீதியில் மனைவியின் உடல்நிலை குறித்து பலத்த கவலையை அடைந்திருந்த பாலமுரளி.. தாயின் சிரிப்பை வினோதமாகப் பார்த்தான்...
"அம்மா.." அவன் ஆச்சரியக்குரல் எழுப்ப...
"ஒன்னுமே இல்லைடா தம்பி.. நீ நம்ம லேடி டாக்டருக்கு ஒரு போனைப் போடு..." என்றாள் மேகலா...
அந்த லேடி டாக்டர் வரும்போதே பாலமுரளியை முறைத்துக் கொண்டு வந்தாள்.. ஸ்டெதஸ் கோப்பை காதில் வைத்து ராதிகாவை பரிசோதிக்க ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே...
"என்ன..? திரும்பவும் காய்ச்சல் வந்திருச்சா..? இந்தப் பெண்ணைக் காய்ச்சலில் தள்ளி விடுகிறதையே குறிக்கோளாய் வைச்சிருக்கீங்களா..?" என்று மீனாட்சியைப் பார்த்துக் கேட்டாள்...
வீட்டில் அத்தனை ஜீவன்கள் இருக்க.. அவர்கள் அத்தனை பேரையும் விட்டுவிட்டு.. அவள் மீனாட்சியிடம் கேள்வி கேட்டதில் மீனாட்சி நொந்தே போய் விட்டாள்..
அவளுக்கெப்படித் தெரியும்..? அந்த வட்டாரத்தின் பெரிய மனிதனான பாலமுரளியிடம் அந்தக் கேள்வியைக் கேட்க முடியாத டாக்டரம்மாள்.. மீனாட்சியிடம் கேட்பதைப் போல.. மறைமுகமாக அந்தக் கேள்வியைக் கேட்டு வைக்கிறாள் என்று...
முரளி இமைக்க மறந்த பார்வையொன்றை வெறுத்துப் போனவனாக தாயின் பக்கம் வீச...
"இது காய்ச்சலில்லை டாக்டரம்மா... வேற ஒன்னு... முரளி.. ராதிகாவை உன் ரூமுக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போ.. டாக்டரம்மா அங்கே வந்து பார்க்கட்டும்..", என்று மகனுக்கு உத்தரவு போட்டாள் மேகலா...
"அது என்னாத்துக்கு..? சின்னம்மாவுக்கு என்னாச்சோ.. ஏதாச்சோன்னு.. நாங்க இம்புட்டுப் பேரும் கவலையா நிற்கிறோம்... எங்களை விட்டுட்டுட்டு அம்மாவை மட்டும் தனியாப் பார்க்கச் சொன்னா எப்படி..?"
இப்படி தைரியமாக நீதி கேட்க மீனாட்சியால் மட்டுமே முடியும்...
எலி தானாகவே பொறியில் மாட்டிக் கொள்வதில் காவேரிக்கு மகா சந்தோசம்.. அவள் நாச்சியப்பனுடன் தன் சந்தோசத்தை பகிர்ந்து கொள்ளப் பார்த்தாள்... நாச்சியப்பனோ.. காவேரியின் மீதான அவனது மார்க்கப் பார்வையை மீனாட்சி இனம் கண்டு கொண்டு அவனைப் 'பச்சோந்தி..' என்று விளித்து விட்ட கவலையில் இருந்தான்.. அதனால் அவன் காவேரியின் கண் சமிக்ஞையையும் கவனிக்கவில்லை... நமட்டுச் சிரிப்பையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளவில்லை...
ஆனால்.. அந்த இரண்டையும் மீனாட்சி கவனித்து விட்டாள்.. அதையெல்லாம் செய்த காவேரியை விட்டுவிட்டு அவள் நாச்சியப்பனை பார்வையால் பொசுக்க ஆரம்பிக்க.. அவன் எதற்காக இந்தக் கொதிப்பு என்று புரியாமல் திருதிருத்தான்...
மேகலா மீனாட்சியை கண்டிப்புடன் பார்த்தாள்...
"உன் வேலை என்னடி..? அதை மட்டும் பாரு.. அதை விட்டுட்டு முந்திரிக் கொட்டையைப் போல மூக்கை நுழைக்காதே... உன் சின்னம்மாவைப் பார்த்துக்க அவ புருசன் இருக்கான்.. நானிருக்கேன்.. எங்களுக்கு இல்லாத கவலை உனக்கெதுக்கு..? எந்த நேரம் எதைப் பேசறதுன்னு தெரியாம.. பேச வந்திட்டா.. காலாகாலத்தில கழுத்தில மூணு முடிச்சு விழுந்திருந்தா உனக்கு அந்த இங்கிதம் தெரிஞ்சிருக்கும்.. ஏழு கழுதை வயசாகியும் எவனுக்கும் கழுத்தை நீட்டாம வாயடிச்சுக்கிட்டு நின்னா.. உனக்கெப்படி இங்கிதம் தெரியும்..? போடி.. போ.."
முரளி ராதிகாவைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு விரைந்தான்.. டாக்டரம்மாளிடம் தாழ்ந்த குரலில் ராதிகாவின் உடல்நிலையைக் குறித்த தன் ஐயப்பாட்டைப் பகிர்ந்தபடி மேகலா மாடியேறினாள்.. கண்களில் நீர் முட்ட நின்ற மீனாட்சியை கேலிப் பார்வை பார்த்துவிட்டு காவேரி சமையலைறப் பக்கம் நகன்றாள்.. திடிரென்று கிடைத்து விட்ட அரிதான தனிமையில் நாச்சியப்பன் மீனாட்சியின் அருகே வந்தான்..
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.. எப்போதும் மீனாட்சியைக் கடிந்து கொள்ளாத மேகலா அவளைக் கடிந்து பேசிவிட்டாள்.. கண்ணீர் என்றால் எப்படியிருக்கும் என்று கேட்கும் மீனாட்சி கண்ணீர் விடுகிறாள்...
'என்னடா இது.. இவகூட பச்சைப் புள்ளபோல அழுவாளா...?' அவன் அதிசயப் பட்டுப் போனான்..
அதுவரை மற்றவர்களின் கண்ணிரைக் கண்டு மனமிரங்கி நல்லதாக நான்கு வார்த்தைகளைப் பேசிக் கண்ணீரைத் துடைத்து விடும் செயலைத்தான் மீனாட்சி செய்து வந்திருந்தாள்...
'என்னய்யா இது.. பேசிக்கிட்டு இருக்கும் போதே.. பொசுக்குன்னு அந்தம்மா கண்ணில தண்ணியை விடுது.. அணைக்கட்டு எதுவும் அது கண்ணுக்குள்ள இருக்கா..?' என்று விகடம் பேசிச் சிரித்த மீனாட்சி.. முதன் முதலாக அந்த அணைக்கட்டை உணர்ந்தாள்..
துடைக்கத் துடைக்க நிற்காமல் பெருகிக் கொண்டிருக்கும் கண்ணீரில் நனைந்த அவளின் முகம் கலங்கிச் சிவந்திருந்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி..-154
அம்மம்மா.. கேளடி தோழி..-154
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-154.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-154.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy