அம்மம்மா.. கேளடி தோழி.. -151

151 சொல்லி விடலாம் வார்த்தையிலே-அதை.. சொல்லத்தான் ஒர் வார்த்தையில்லை... கடல்நீர் நடுவே குடிநீர் தேடும் துயரம் ராதிகாவை மட்டும் துரத்திக...

151
சொல்லி விடலாம் வார்த்தையிலே-அதை..
சொல்லத்தான் ஒர் வார்த்தையில்லை...

கடல்நீர் நடுவே குடிநீர் தேடும் துயரம் ராதிகாவை மட்டும் துரத்திக் கொண்டிருப்பதின் தாத்பர்யத்தில் மனம் நொந்து போனாள் ராதிகா...
அதற்கு கூடக் கொடுப்பினை வாய்த்திருக்க வேண்டுமோ.. அப்படி அவள் என்னதான் பாவம் செய்தாள்..? யார் குடியைக் கெடுத்தாள்..? யார் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டாள்..?
எவரையும் சிநேகிக்கும்... எவரையும் சிநேகிக்க வைக்கும் தன்மை.. அவளது தன்மை..!
யார் மனதையும் காயப் படுத்தி விடாமல்.. மயிலிறகைப் போல மனம் வருடும் வார்த்தைகள்... அவள் பேசும் வார்த்தைகள்..
மற்றவர்களின் சிரிப்பினில் சந்தோஷிப்பார்... அவர்களின் துயரத்தில் கண்ணீர் விடுவாள்... அவளுக்குப் போய் இத்தனை துயரங்களும்... வாழ்க்கைப் போராட்டங்களும் அணி வகுத்து வரவேண்டுமா..?
அவள் துன்பப் படுவதைக் கண்டு.. தெய்வம் இரக்கம் கொள்ளவில்லையா...?
'எல்லாத்துக்கும் முகராசி வேணும்...' ராதிகா விரக்தியுடன் நினைத்துக் கொண்டாள்...
'இது ஷோபா போல இருப்பவர்களுக்கான உலகம்..'
அவர்களைச் சுற்றிப் படர்ந்திருந்த இருளின் போர்வையிலே... அவர்கள் இருவரும் மௌனத்தை அரணாகக் கொண்டு... கடந்த கால நிகழ்வுகளின் நினைவை அசை போட்டனர்...
முரளி அந்த பெஞ்சில் கால்நீட்டி அமர்ந்தான்... பக்கத்தில் அமர்ந்த ராதிகாவின் தோள் மீது அவனது கரம் விழுந்து... அவளை மடிமீது இழுத்தது... மறுத்துக் கூறாமல் அவன் மடிமீது தலைவைத்துப் படுத்து விட்டாள் ராதிகா.. அவள் முடிகோதியபடி அவன் இருளுக்கு மத்தியில் எதையோ தேடுகிறவனைப் போலப் பார்வையில் துழாவிக் கொண்டிருந்தான்...
மாலைநேரத்தில் பூங்காவில் விளையாட வந்திருந்த குழந்தைகள்... கலைந்து போகும் சந்தடி கேட்டது... யாரோ இரு வயோதிகர்கள்.. அவர்களின் முதுமையினால் விளைந்திருக்கும் தனிமைப் படுத்துதலைப் பற்றிய குமுறலை பகிர்ந்து கொண்டே அவர்களைக் கடந்து சென்றார்கள்.. கூட்டுக் குடும்பத்திலிருந்த கணவனிடம்.. மனைவி... அவளுக்கான மனக்குறைகளை கொட்டி முடித்து விட்டு எழுந்து கொண்டாள்.. அவளுக்கான ஆறுதல் மொழிகளைக் கூறிய கணவனுடன் அவளும் சென்று விட்டாள்... கலகலவென்று சிரித்த வண்ணம் ஒரு பள்ளி மாணவி ஓட... அவளது தோழி அவளைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.. ராதிகாவும்.. முரளியும் இருந்த பெஞ்சுக்கு அந்தப்புறமாக இருந்த செடியின் மறைவிலிருந்து கிசுகிசுப்பான பேச்சுச் சத்தமும்.. இனம் விளங்காத ஒலிக்கலவைகளும் கேட்டுக் கொண்டிருந்தன..
"காதல் ஜோடி போல.." மௌனத்தைக் கலைத்தான் முரளி..
"ஒருவேளை... நீ என் காதலை ஏற்றுக்கிட்டு இருந்தின்னா.. இந்தப் பார்க்கில.. இதைப்போல... இருட்டு வேளையில... நீயும்.. நானும் சந்தித்துக் கொஞ்சிக் குழாவியிருக்கலாம்..."
அவன் விட்ட பெருமூச்சில் அவள் மேனி சுட்டது.. அவன் பேச்சில் நிறைவேறாத அவனது காதல் கனவுகளைப் பற்றிய கதை இருந்தது...
"அதில பாருடி.. உனக்காக நான் ஏங்கிக்கிட்டு இருப்பேன்.. என்னைச் சுத்தி.. இப்படியாப்பட்ட ஜோடிகளாத்தான் இருப்பாங்க... என் மனசுக்குள்ள ஏக்கமா இருக்கும்... எங்கே... அதெல்லாம் முடியாத கதைகளாகிப் போச்சேடி..."
முடிந்திருக்கலாம்.. அந்தக் கோடிஸ்வரனின் ஆசைப்படி.. அவன் காதலியாக அவன் கரம் பிடித்து... அந்த சென்னை மாநகரைச் சுற்றி அவள் வலம் வந்திருக்கலாம்.. அது நடக்கக்கூடாது என்று யார் விதித்தது..? அவர்கள் சிரிக்கக்கூடாது என்று யார் சபித்தது..?
சாபத்தின் மத்தியிலே பிறப்பெடுக்கும் மாவரத்தை... அவர்களைத் தேடிப் பிடித்து யார் கொடுத்தது..?
ஒரு நாளா... இரண்டு நாளா..? அவளை அவன் சொல்லாலே வதைத்தது எத்தனை நாள்களாய்..? அவளைத் தீண்டாமல் விலக்கி வைத்தது எத்தனை தினங்களாய்..? தூங்காத இரவுப் பொழுதுகளை அவளும்.. அவனும் எதிர் கொண்டது... எந்தக் காரணத்தினால்...?
இன்று அவன் கையில் அவளிருக்கிறாள்... அவன் மடியில் தலை வைத்திருக்கிறாள்... இடையில் வந்த கசப்பான தினங்கள் கசப்பு நிகழ்வுகள் மனதில் பாரமாகப் படிவதிலிருந்து அவர்களால் தப்பித்து ஓட முடியுமா..? இடையில் வந்த இளமைக்காலங்கள் இனியும் வருமா..?
ராதிகாவின் மீது.. மலர் ஒன்று உதிர்ந்து விழுந்தது.. அதன் மணம் நாசியை வருட... ராதிகா இருளை ஊடுறிவிக் கொண்டு அவன் முகம் பார்த்தாள்... செதுக்கி வைத்ததைப் போன்ற அவன் முகவடிவில் அவள்மனம் என்றும் போல... அன்றும் நிலை கொண்டது...
'இவன் ரோமானியச் சிற்பம்..!'
அவனின் கம்பீரமான வடிவில்... அவளுக்குள் காதல் பொங்கியது... இப்படிப்பட்ட ஆண்மகனின் காதலுக்கு பாத்திரமானதில் என்றும் போல அன்றும் அவள் கர்வம் கொண்டாள்..
இருளில்... கூடுகளைத் தேடியலையும் பறவைகளின் படபடக்கும் சிறகொலியும்... அலைகள் எழுப்பிய குரலொலியும்.. கலவையாகச் சேர்ந்து... முன்னிரவு நேரத்தை அவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தன...
"எனக்கு மண்டைக் கனம் ஜாஸ்திடி..."
அவன் பார்வை தொலைவில் நிலைத்திருக்க... ஆழ்ந்தகுரலில் அவன் பேசினான்... அந்த முன்னிரவுப் பொழுதின் ஏகாந்தமான சுகந்த வேளையில்... அவன் பேசுவதை அவன் மடிமீது தலை வைத்துக் கேட்பதிலும் ஒர்விதமான சுகம் ஊடுறிவியிருந்ததை உணர்வலைகள் உணர்த்தியதில் பரவசமான ஒர் மோனநிலைக்குள் அமிழ ஆரம்பித்திருந்தாள் ராதிகா...
"நான் தொட்டதெல்லாம் துலங்குச்சு... பதினைஞ்சு வயசிலே என் அப்பா.. குடும்ப பாரத்தை என் தோள் மேலே ஏற்றிவைச்சுட்டுப் போனப்ப... தேனூத்தே என்னைத்தான் திரும்பிப் பார்த்துச்சு..."
"ம்ம்ம்..."
"அப்ப நான் அந்த ஊருக்கு பெரிய மனுசன் பெற்றெடுத்த பிள்ளை... தேனூத்து பெரிய குடும்பத்தின் ஆண் வாரிசு...!"
"ம்ம்ம்..."
"இந்தச் சின்னப் பையன் என்ன செய்யப் போகிறான்னு கொஞ்சப் பேர் அனுதாபப் பட்டாங்க... இனி இந்த ஊருக்கு பெரிய மனுசனா நாம வந்திரலாம்ன்னு எங்களுக்கு அடுத்த நிலையில இருந்தவங்க ஆசைப் பட்டாங்க..."
"ம்ம்ம்..."
"அம்மாவுக்கு வெளியுலகம் தெரியாது... அவங்க மட்டுமில்லை... பொதுவா.. கிராமத்தில இருக்கிற பெண்களை வீட்டுப்படி தாண்டி.. வெளியுலகில் கால் வைக்க ஆம்பளைக அனுமதிச்சதில்லை..."
அப்படியிருக்க... அவளை மட்டும் ஏன் அவன் தொழில் பயிற்சி கொடுத்து... அவன் தொழில்களை மேற்பார்வையிட இழுத்து விட்டான்...? என்ற கேள்வி அவள் நெஞ்சத்திலே எழுந்து நின்றது...
அதை உணர்ந்தவனைப் போல.. அவள் முடி கோதி மெதுவாக ஆனால் கனமான அவனது பிரத்யேக குரலில் அவன் சொன்னான்..
"என் அம்மாவைப் போல நீயும் இருக்கக் கூடாதுன்னு நான் நினைச்சேண்டி... நானில்லாத சமயங்களிலும் நீ என் இடத்தில இருந்து அத்தனையையும் சாமாளிக்கனும்.. அதுக்கான பயிற்சியைத்தான் நான் உனக்கு கொடுத்தேன்.."
அவனில்லாமல் அவளிருப்பதா...?
அவள் உடல் நடுங்கியது.. அப்படியொரு வாழ்க்கையை வாழ அவளால் முடியுமா..?
"என்ன பேச்சுப் பேசறிங்க...?"
பதட்டத்துடன் அவன் வாய் பொத்தினாள் ராதிகா.. அவளின் அந்தப் பதட்டத்தில் அவன் மனம் கனிந்தது..  அவன் இதழ்மீது படிந்திருந்த அவள் விரல்களில் மென்மையான முத்தமொன்றைப் பதித்தவன்.. அவள் கரத்தையெடுத்து அவன் கன்னத்தின் மீது வைத்து அழுத்திக் கொண்டான்...
அவனது சொரசொரப்பான கன்னப் பகுதியில் விரல் படிந்திருக்க.. அவனது மீசையின் ரோமங்களின் உராய்வை உணர்ந்தாள் ராதிகா...
"நீ அருமையான பெண்டாட்டிடீ... அதில எனக்கு சந்தோசம்தான்.. உன் காதல் கிடைக்கலேன்னாலும்... உன்னோட வாழ முடிஞ்சதில கொஞ்சமா என்மனசு ஆறுதுதான்.. ராதிகா.. நான் செத்தா உன்னையும் என்கூடக் கூப்பிட்டுக்கிட்டுப் போயிடுவேண்டி.. தனியா விட்டுட்டுப் போக மாட்டேன்..."
அவனது உறுதியான குரலில் உடல் ஜில்லிட்டுப் போனாள் ராதிகா...
"உன்னைக் கொன்று என்கூட கொண்டு போயிடுவேன்.. அதனால அப்படியொரு நினைப்பில பதட்டப்படாதே.. நானில்லாத நாளிலேன்னா... நான் ஊரிலில்லாத நாளிலேன்னு அர்த்தம்... புரியுதா...?"
அவனின் அந்த வெறித்தனமான காதலில் மனம் இளகிப் போயிருந்தாள் ராதிகா.. அவன் பேச்சுக்கு பதில் பேசக்கூட அவளால் முடியவில்லை...
"ம்ம்ம்..."
"அம்மாவுக்கு எதுவும் தெரியாதுடி... அப்பா காலத்தில... வயல்.. தோப்பு.. துரவுன்னு விவசாயத் தொழில் மட்டும்தான் எங்க கைவசத்தில இருந்தது... அதில கூட என்ன நடக்குதுன்னு அம்மாவுக்குத் தெரியாது.. எந்த நிலத்திலே எதை விதைச்சிருக்கோம்.. எந்த தோப்பை.. எவ்வளவு ரூபாய்க்கு குத்தகைக்கு விட்டிருக்கோம்ங்கிற வரவு... செலவு கணக்கெல்லாம் அப்பாவுக்கு மட்டும்தான் தெரியும்.. அம்மா அதையெல்லாம் கேட்டுக்கவே மாட்டாங்க..."
"ம்ம்ம்..."
"எங்க பாட்டன்.. முப்பாட்டன் காலத்திலேயே... அழியாச் சொத்துக்களா.. தோப்புக்களை உருவாக்கி வைச்சிருந்தாங்க.. குத்தகைப் பணம் வந்து குமியும்... அதை வயல்களாவும்.. வைர நகைகளாகவும் தான் அவங்க மாற்றினாங்க... நான் தொழில்களிலே அந்தப் பணத்தைப் போட்டேன்..."
தேனூத்தில்.. பெரிய வீட்டின் ஆண் வாரிசாகப் பிறந்து.. பதினைந்து வயதிலேயே குடும்பத் தலைவனாக மாறிய சிறுவன் ஒருவன்.. எப்படித் தென்காசிப் பட்டினத்திற்கே பெரிய மனிதனாக உருமாறினான் என்ற வெற்றிக் கதையை சொல்ல ஆரம்பித்தான் முரளி..
"அம்மா பயந்தாங்க... அக்காவோட படிப்பை நிப்பாட்டிட்டு அவங்க சொந்தத்திலே பெண் கொடுத்துடலாம்ன்னு சொன்னாங்க... வீட்டோடு மருமகனா.. அவங்களோட படிக்காத சித்தப்பா மகனை கொண்டு வந்திட்டா... அவர் என்னையும்.. தோப்பு துரவையும் பார்த்துக்குவாருன்னு நினைச்சாங்க..."
"உங்க அக்கா என்ன சொன்னாங்க...?"
"அது என்ன சொல்லும்..? அதுவே பயந்து போய் கிடந்தது... அப்பா இல்லை.. அம்மாவோ ஊருக்கு முன்னாலே பெரிய மனுசங்களா இருக்கிற குடும்ப கௌரம் குலைஞ்சிரக் கூடாதுன்னு பயக்கிறவங்க.. நானோ வயசில சின்னவன்.. தம்பி.. அதாலே என்ன சொல்ல முடியும்..?"
"பாவம்.." ராதிகாவின் மனம் கசிந்தது...
"பாவம்தான்... உன்னைப் போல.. கீதாவைப் போல எல்லாம் உரிமை பேச முடியாம வளர்ந்தது என் அக்கா.. எதையும் வெளியில் சொல்ல முடியாம மனசுக்குள்ளேயே அழுதுக்கிட்டு இருந்துச்சு... அதோட படிப்பை நிறுத்தி... வயசு வித்தியாசம் அதிகமா இருக்கிற... படிக்காத
அந்த முரட்டு மாமனுக்கு அம்மா கல்யாணம் பண்ணி வைச்சிருந்தாலும் மறு பேச்சு பேசாம அதை ஏத்துக்கிட்டுத்தான் இருக்கும்.. அது நிலைமை அப்படியிருந்துச்சு.."
"இதென்னங்க அநியாயமாய் இருக்கு..."
"அம்மாவுக்கு அதுதான் நியாயம்.. அவங்களுக்கு நான் வாக்குக் கொடுத்தேன்.. அப்பா சம்பாதிச்சு வைச்சிருந்த பெயர் குறையாம குடும்பத்தை நான் காப்பாத்தறேன்னு சொன்னேன்.. அக்காவோட படிப்பைத் தொடரவைச்சேன்... அது ஆசைப்படி படிக்க வைச்சு... படிச்ச மாப்பிள்ளைக்கே அதைக் கல்யாணமும் பண்ணிக் கொடுத்தேன்.. அக்கா என் கையைப் பிடிச்சுக்கிட்டு அழுதுச்சு.. நீ என் தம்பில்லைடா.. தகப்பன்னு சொல்லுச்சு.."
அந்த நிமிடங்களின் நெகிழ்வை தன் வார்த்தைகளில் உணர்த்திக் கொண்டிருந்தான் முரளி... அதைச் சிந்தாமல்... சிதறாமல்... சேகரித்து... தன்மனதில் நிரப்பிக் கொண்டிருந்தாள் ராதிகா...
"இவன் தொழிலை ஆரம்பிச்சு என்ன செய்யப் போறான்னு என் முதுகுக்குப் பின்னால பேசி சிரிச்சவங்கள்ளாம்... என் முன்னாலே கைகட்டி நின்னாங்க... நான் நிற்க வைச்சேன்... ஒன்னுக்கு பத்தா தொழில்களைத் தொடங்கினேன்.. அந்தந்த தொழில்களிலே வேலை தெரிஞ்சவங்களா.. எனக்கு விவுவாசிகளா ஆள்களைத் தேர்ந்தெடுத்து மேற்பார்வை பார்க்கிற பொறுப்பைக் கொடுத்தேன்... தென்காசியையே என்னைத் திரும்பிப் பார்க்க வைச்சேன்.. என் அப்பா லட்சாதிபதிடி.. ஆனா நான் கோடிஸ்வரன்.. என் சொத்தில்லாத ஊரில்லை... உன் புருசன் ஜெயிச்சவண்டி.. பெரிய பணக்காரன்... அதனாலதான் எனக்குள்ல அப்படியொரு மண்டைக்கனம் இருந்துச்சு.. நான் ஜெயிக்கப் பிறந்தவன்னு ஆணவம் இருந்துச்சு... என்னால ஜெயிக்க முடியாமல் போனதுன்னு இந்த உலகத்தில ஒன்னே ஒன்னுதாண்டி இருக்கு..."
முரளி பேச்சை நிறுத்த... அவன் என்ன சொல்லப் போகிறான் என்ற எதிர்பார்ப்பில் அவன் முகம் பார்த்தபடி காத்திருந்தாள் ராதிகா... அவனும் அந்த வார்த்தைகளை உதிர்த்தான்.. ராதிகாவின் உயிர் துடித்தது...
"அது எது தெரியுமா..? அதுதாண்டி.. உன் மனசு..!"



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.. -151
அம்மம்மா.. கேளடி தோழி.. -151
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-151.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-151.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy