அம்மம்மா.. கேளடி தோழி..-149

149 நீ போகும் பாதை தேடி.. நினைவாலே பயணம் செய்தேன்... "ஹை.. அக்கா வந்தாச்சு.." சுந்தர் குதித்துக் கொண்டு ஓடி வந்தான்... ...

149
நீ போகும் பாதை தேடி..
நினைவாலே பயணம் செய்தேன்...

"ஹை.. அக்கா வந்தாச்சு.." சுந்தர் குதித்துக் கொண்டு ஓடி வந்தான்...
"ஏண்டா... என்ஜினியரிங் காலேஜில சேர்ந்துட்ட... இன்னமும் சின்னப் பையனைப் போலவா குதிச்சு வைப்ப..?"
கிருஷ்ணமூர்த்தி மகனைக் கண்டித்து வைத்தார்... அவன் அதைக் கொஞ்சம்கூட கண்டு கொள்ளவில்லை.. அவன் காரை அணுகுவதற்குள் அவனைத் தள்ளிவிட்டு.. ஓட்டப்பந்தய வீராங்கனையைப் போல கீதா முன்னால் ஓடினாள்...
"பார்த்தீங்கள்ல.. நானாவது என்ஜினியரிங் காலேஜில இப்பத்தான் காலடி வைச்சிருக்கேன்.. உங்க அருமை மக.. எந்த வருசத்திலே படிக்கிறா..? அவ குதிக்கிற குதியை விடவா நான் அதிகமா குதிச்சுட்டேன்..?" வழக்கு வைத்தான் சுந்தர்...
"விடுடா.. அவளைத் திருத்த முடியுமாடா..?" கிருஷ்ணமூர்த்தி சமாதானத்திற்கு வந்தார்...
"திருந்தாத கேஸ்களை வீட்டில வைச்சுக்கிட்டு.. என்னைத் திருத்தனும்னு நீங்க புறப்பட்டா எப்படிப்பா..?" சுந்தர் போர்க்கொடியை உயர்த்தினான்...
"அவ சொன்னதைக் கேட்க மாட்டாடா..."
"ஓ..."
"நீ அப்படியா..?"
"அப்படித்தான்..."
ஒரே போடாக சுந்தர் போட்டுவிட.. அதற்கு மேல் பேச்சை வளர்க்க முடியாதவராக.. மனைவியை பரிதாபமாகப் பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி...
"டேய்.. சுந்தர்..." ராஜேஸ்வரி மகனை அதட்டினாள்..
"என்னம்மா...?"
"அப்பாகூட சரிக்குச் சரியாய் பேசலாமாடா...?"
"கூடாதுதான்... ஆயிரம்தான் இருந்தாலும் நான் வருங்கால என்ஜினியர்... அந்தக் கெத்தோடு இருக்கனும்தான்... எங்கே..! நான் விலகி.. விலகிப் போனாலும் இவர் விடமாட்டேன்னு பேச்சுக்கு வர்றாரே..."
'இப்ப... இவன் என்னதான் சொல்ல வர்றான்.. இவனுக்கு நான் இணையில்லைன்னு சொல்ல வர்றானா..?' கிருஷ்ணமூர்த்தி மண்டை காய்ந்து போனார்...
மகனிடம் விளக்கம் கேட்டால்.. அவன் ஆமாமென்று சொல்லி விடுவான் என்ற பயத்தினால் அவர் அத்துடன் பேச்சை நிறுத்திக் கொண்டவராக... மூத்த மகளையும்.. மருமகனையும் வரவேற்க ஆரம்பித்தார்...
"வாம்மா... ராதிகா.. வாங்க மாப்பிள்ளை..."
அவர் வரவேற்றுக் கொண்டிருக்க...
"அதான் வந்துட்டாங்கள்ல.. அதுக்கப்புறமும் எதுக்கு பார்மாலிட்டீஸ்...?" என்று குறுக்கிட்டாள் கீதா...
"அதானே.. உன்னை என்னன்னு கேட்க முடியலை.. அக்காவை வரவேற்க வந்திட்டார்.." சுந்தர் கீதாவின் தலையில் குட்டினான்...
"என்னை என்னடா கேட்கணும்..? எதுக்காகடா கேட்கனும்..? அப்பாவுக்கு தெரியும்டா..."
"என்ன தெரியுமாம்..."
"யார் பிளாக் ஷீப்.. யார் வொயிட் ஷீப்ன்னு..."
ராதிகாவும்... கீதாவும் சிவந்த நிறத்துடனிருக்க.. சுந்தர் மட்டும் சற்று நிறம் கம்மியாக இருப்பான்.. அந்த ஒரு காரணத்தினாலேயே... கீதா வெள்ளை ஆடாகவும்.. சுந்தர் கருப்பு ஆடாகவும் மாறிப்போனதில் சுந்தர் ஏகக் கடுப்புக்கு ஆளானான்...
"ஆட்டைப் பத்தியெல்லாம் நீ பேசாதே..."
"ஏண்டா..?"
"நீயென்ன ஆடா...?"
"பின்னேயென்ன.. மாடா..?"
"ஆமாண்டி.."
"பல்லை உடைப்பேண்டா..."
"உன் கையை முறிப்பேண்டி.."
"உன் காலை உடைப்பேண்டா..."
அங்கே ரணகளமாய் யுத்தம் உருவாக... பாலமுரளி வெகு சுவராஸ்யமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டான்...
"ஏய்ய்... என்ன ஆச்சு ரெண்டு பேருக்கும்..? எத்தனை நாள் கழிச்சு வீட்டுக்கு வந்திருக்கேன்... வாசலிலேயே வழக்கடிக்க ஆரம்பிக்கிறிங்களே..."
பெரியவளாய் லட்சணமாய் ராதிகா அவர்களை கடிந்து கொண்டாள்...
"பாருடி.. இவன் பேசறதை..."
"இவ பேசறது மட்டும் ஒழுங்காக்கா...?"
"தினமும் என்கூட மல்லுக்கு நிற்கிறாண்டி.."
"தினமும் என் உயிரை குறைக்கிறாக்கா..."
ராதிகாவின் இருபக்கமும்... நின்று கொண்டு அவர்கள் வழக்கு வைக்க... ராஜேஸ்வரியின் நீதிபதி பதவியைப் பறித்துக் கொண்டு திடிர் நீதிபதி ஆன ராதிகா... தீர்ப்புச் சொல்லியபடி உள்ளே போய் விட்டாள்...
தனித்து நின்ற பாலமுரளியிடம் சங்கடத்துடன் புன்னகைத்தாள் ராஜேஸ்வரி...
"உள்ளே வாங்க மாப்பிள்ளை..."
அவன் உள்ளே வந்தபோது... ராதிகாவும்... சுந்தரும் சோபாவில் அமர்ந்திருக்க... மாடிப்படியின் அருகில் நின்றபடி... கையில் அகப்பட்ட எதையோ எடுத்து... சுந்தரின் மீது விட்டெரிந்து கொண்டிருந்தாள் கீதா...
அவனோ... "கேட்ச்..." என்று அனாசியமாக அதைப் பிடித்தான்...
பாலமுரளி ராதிகாவின் பக்கத்தில் உராய்ந்தபடி உட்கார...
"அத்தான்... உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி.. ரெண்டு வருசமாச்சு..." என்றாள் கீதா...
"ஏண்டி இப்படிச் சொல்ற...?" ராதிகா விழித்தாள்...
"புதுப் பெண்டாட்டியை உரசுகிறதைப் போல அத்தான்... உன்னை இந்த உரசு... உரசுகிறாரே..." கீதா விளக்கம் சொல்ல...
"ஏய்ய்..." என்று முகம் சிவந்து போனாள் ராதிகா...
பாலமுரளியோ மைத்துனியின் பேச்சை ரசித்தவனாக உரக்கச் சிரித்தான்...
இளையவர்கள் பேசட்டும் என்று இங்கிதமாக... பெரியவர்கள் உள்ளே போய் விட... நிம்மதியான ராதிகா.. கீதாவின் காதைப் பிடித்து திருகினாள்...
"அறிவிருக்காடி உனக்கு..?"
"ஏனாம்.. உனக்கு கொஞ்சம் கடனாய் கொடுக்கனுமா..?"
"உன்கிட்ட கடனாய் வாங்கிட்டாலும்... விளங்கிரும்.. நீ என்கிட்ட கடன் கேட்காம இருந்தாச்சரி..."
"அடேங்கப்பா.. அப்படியாப்பட்ட அறிவுக்கடல் என்கிட்ட எதுக்காக இந்தக் கேள்வியைக் கேட்டாளாம்..."
சுந்தரை வைத்துக் கொண்டு கீதா இந்தக் கேள்வியைக் கேட்டதில் ராதிகா பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனாள்...
அவள் திணறுவதை பாலமுரளி ரசித்துப் பார்த்ததில் அவளது கோபம் அவன் பக்கமாகத் திரும்பியது...
"எதுக்காக அப்படிப் பார்க்கறிங்க..? இது வீடு.. தியேட்டர் இல்லை.. இங்கே யாரும் பிலிம் காட்டலை..."
அவள் எரிந்து விழ... கீதா எடுத்துக் கொடுத்தாள்...
"இது வெறும் வீடில்லை அத்தான்... வியட்நாம் வீடு.."
"அதை நீ வேற சொல்லனுமா...? நீ சொல்லாமலே எனக்கு அது தெரியுமே..."
"நீங்கதான் செம விவரமான ஆளாச்சே..."
இதை சொல்லி வைத்த கீதா... சும்மா சொல்லியிருக்கலாம்... அவள் அதை விட்டுவிட்டு.. பாலமுரளியைப் பார்த்து உற்சாகமாக கண்ணடித்து வைத்ததை ராதிகா ரசிக்கவில்லை...
அந்த கண்ணடிப்பை கண்டு கொள்ளாமல் இருந்திருக்க வேண்டிய பாலமுரளி அதைச் செய்யாமல் பதிலுக்கு கண்ணடித்து வைத்ததில் ராதிகாவின் ரத்த அழுத்தம் எகிறி... உச்சநிலையை அடைந்தது...
அவள் கீதாவுடன் பேசுவதை தவிர்த்து.. சுந்தரிடம் பேசலானாள்... கீதாவோ... அதை சட்டை செய்யாமல் எனக்கென்ன என்று பாலமுரளியிடம் உற்சாகமாக கதை பேச ஆரம்பித்து விட்டாள்...
வெளிநாட்டைப் பற்றிக் கேட்க அவளிடம் நிறைய கேள்விகள் இருந்தன... அதற்கான பதிலைச் சொல்லும் மும்முரத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனைவியின் பக்கம் திரும்பிப் பார்க்க மறந்து விட்டான் பாலமுரளி...
ராதிகாவுக்கு பல்லைக் கடித்துக்கடித்து.. பல் கூச்சமே வந்து விட்டது... அவளும்தான் பொறுமை-சாலியைப் போல வேசம் கட்டிக் கொண்டு... எத்தனை நேரத்திற்குத்தான் சுந்தரின் கல்லூரிக் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் போல... பாவனை செய்து கொண்டிருப்பாள்..?
கீதாவும் கேள்விகளை நிறுத்திய பாடாக இல்லை.. பாலமுரளியும் ராதிகாவின் பக்கம் திரும்பிய பாடாக இல்லை...
'என்னதான் கண்ணுக்கு அழகாய் பெண்டாட்டி இருந்தாலும் மச்சினிச்சிகளிடம் கடலை போடாமலிருக்க இந்த ஆம்பளைகளால் முடியவே.. முடியாதோ...'
அவள் பொருமித் தவித்துக் கொண்டிருந்த போது... அவளை அந்தப் பொருமலிளிருந்து மீட்க வந்த ரட்சகனைப் போல கிருஷ்ணமூர்த்தி அங்கே வந்தார்..
"பிரியாணி ரெடி மாப்பிள்ளை..." என்று அவர் அறிவிக்க...
"ஏம்ப்பா... நீங்க முனியாண்டி விலாஸா நடத்தறிங்க...? என்கிட்ட சொல்லவே இல்லை பார்த்தீங்களா..." என்று வம்புக்கு இழுத்தான் சுந்தர்...
"சொன்னா... நீ ஒரு ஆளாவே அத்தனை அயிட்டத்தையும் மொக்கிருவன்னு பயந்து போயிருப்பார்.. நான் சொன்னது சரிதானேப்பா...", கீதா அவள் பங்குக்கு பேசிவைத்தாள்...
கிருஷ்ணமூர்த்தி அவர்களைப் பார்த்த பார்வையில்... மூத்தமகளோடு நிறுத்திக் கொள்ளாமல்.. அடுத்தடுத்து பிள்ளைகளைப் பெற்று விட்ட ஆற்றாமை தெரிந்தது...
'ம்ஹீம்... ஒற்றை மகளோடு நிறுத்தியிருக்கலாம்...' காலம் கடந்த பெருமூச்சை அவர் வெளியேற்றினார்...
தலை வாழை இலை போட்டு... அதில் அசைவ பதார்த்தங்களை பரப்பியிருந்தாள் ராஜேஸ்வரி...
"வாவ்... சிக்கன் வறுவல்.. மீன் பொரியல்... அவிச்ச முட்டை... மட்டன் பிரியாணி... மட்டன் சுக்கா.. ம்மா... உங்களுக்கு இத்தனை அயிட்டமும் பண்ணத் தெரியும்ன்னு எனக்கு இப்பத்தான்ம்மா தெரிஞ்சது.." நாக்கை சப்புக் கொட்டினாள் கீதா..
"இத்தனை காலமும் இதையெல்லாம் நீ கண்ணால் கூட கண்டதில்லையா...?" ராஜேஸ்வரி நெற்றிக் கண்ணைத் திறந்தாள்...
"அதில்லைம்மா.. சேர்ந்தாற்போலப் பார்த்த-தில்லைன்னு சொன்னேன்..." ஜகா வாங்கினாள் கீதா...
"ஒவ்வொண்ணா சமைச்சு வைச்சதை சாப்பிட்டதுக்கே உனக்கு கொலஸ்ட்ரால் தலைக்கு மேல ஏறிப்போயிருக்கு... இதில... இத்தனை அயிட்டத்தையும் ஒரே நாளில பண்ணிப் போட்டேன்னு வை.. இந்த வீடு தாங்காது..."
'கொழுப்பு...' என்பதை ஆங்கிலத்தில் 'கொலஸ்ட்ரால்..' என்று சொல்லி வைத்தாலும்... இளைய மகளை ராஜேஸ்வரி முறைத்த முறைப்பில் தமிழ் வார்த்தைதான் தெறித்து விழுந்தது...
"ஹா...ஹா...அம்மாவா... கொக்கா..? இவ வாயை அடக்க அம்மாதான் லாயக்கு... கேட்டுக்கடி..." சுந்தர் ஆரவாரித்தான்...
"உஸ்ஸ்... இதென்ன டைனிங் டேபிளா.. இல்ல... காய்கறி மார்க்கெட்டா..? மூச்..! வாயைத் திறக்காம சாப்பிடுங்க..." ராஜேஸ்வரி அதட்டினாள்...
"வாயைத் திறக்காம எப்படிம்மா சாப்பிட முடியும்..?" கீதா சிணுங்கினாள்...
"அதானே பார்த்தேன்... என்னடா... இன்னமும் இந்த பேமஸ் டயலாக்கை இவ எடுத்து விடலையேன்னு.." சுந்தர் பிரியாணியை ருசித்தபடி கூறினான்...
"பேமஸ் டயலாக்கா..?" ராதிகாவுக்கு புரியவில்லை..
"ஆமாங்க்கா... இவ இப்படித்தான்.. நான் என்ன சொன்னாலும் அதை அப்படியே காப்பியடிச்சுருவா.. ஒரிஜினலா மண்டையில ஒன்னுமே இல்லை போல..."  சுந்தர் புதிர் போட்டான்...
"என்னடா சொல்ற..?" ராதிகா புருவங்களை உயர்த்தினாள்...
"இவ இதையே ஒரு பிழைப்பா வைச்சிருக்காக்கா... ஒருநாள் நான் மோகினிப் பேயைப் பத்தி காமெடியாப் பேசினேன்... அடுத்த ஒரு வாரத்திலேயே இவ அதைப் போலப் பேசிசெய்து காமிச்சுட்டா.." சுந்தர் விவரிக்க ஆரம்பித்தான்...
"நிஜமாவா..." ராதிகா கீதாவை ஆச்சரியத்துடன் பார்க்க... அவள் தோள்களைக் குலுக்கி... கைகளை விரித்துக் காண்பித்தாள்...
"கொடுமைக்கா... என் பிரண்டுகிட்ட நான் 'யார்.. நீ' ன்னு செல்போனில கலாய்ச்சுக்கிட்டு இருக்கேன்... கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா... இவதான் அந்த கலாய்ப்பைக் கண்டு பிடிச்சதைப் போல... இவ பிரண்டு மீனாட்சிகிட்ட பீலா விட்டுக்கிட்டு இருக்கா..."
சுந்தர் பேசப்பேச... ராதிகாவுக்கு ஆச்சரியம் அதிகரித்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி..-149
அம்மம்மா.. கேளடி தோழி..-149
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-149.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/ammammaakeladitholi-149.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy