ஆசையா.. கோபமா...? -3

3 அவனுக்கென்ன தெரியும்..? அந்தப் பாடலைப் பாடும் கதாநாயகி.. அந்தத் திரைப்படத்தின் கதைபிரகாரம் ஒரு டீச்சராய் இருப்பாள் என்று.. சரளாவுக்கு...

3

அவனுக்கென்ன தெரியும்..? அந்தப் பாடலைப் பாடும் கதாநாயகி.. அந்தத் திரைப்படத்தின் கதைபிரகாரம் ஒரு டீச்சராய் இருப்பாள் என்று..
சரளாவுக்கு கூட அது புரியத்தான் இல்லை...
"எதுக்குடி... இவன் உன்னைக் கண்டதும்.. பூப்பூன்னு இந்தப் பாட்டைப் பாடுறான்..?" என்று அவளும் பூர்ணிமாவிடம் விசாரிக்கத்தான் செய்தாள்...
'ஞான சூன்யங்கள்...' பூர்ணிமாவுக்கு பற்றிக் கொண்டுவந்தது...
ஆயிரம்தான் குணசீலன் அவளைக் கிண்டலடிக்க என்று அந்தப் பாட்டைப் பாடி வைத்தாலும்.. அதைத் தேர்ந்தெடுத்த அவனின் புத்திசாலித்தனத்தை அவளால் மனதிற்குள் ரசிக்காமல் இருக்க முடியவில்லை..
'கள்ளன்.. எவ்வளவு பொருத்தமாய் பாடலை செலக்ட் பண்ணியிருக்கான்...'
அவன் பாடலில் அவளைக் கிண்டல் பண்ணும்போது அவன் கண்களில் வழியும் கேலியை ரசித்தபடி.. வெளிப்பார்வைக்கு முகத்தில் எள்ளையும்.. கொள்ளையும் வெடிக்க விடுவாள்...
"பாருங்க அரவிந்தன்... எனக்கு இதெல்லாம் பிடிக்காது..."
அவளும்.. குணசீலன் அந்த பேங்கிற்கு மாறுதலாகி வந்த நாள்முதல்.. இந்த நாள்வரை.. இதே வார்த்தைகளைத்தான் சொல்லி வந்தாள்..
அதை அரவிந்தனும் உணர்ந்த பாடாக இல்லை.. குணசீலனும் கேட்டுக் கொள்வது போல இல்லை.. அன்றைக்கும்.. அதுதான் நடந்தது... என்னதான் ஜாடை பேசினாலும்.. குணசீலனின் காதுகளில் அது ஏறாது என்றான பின்னே.. மூச்சு வாங்க பேச்சை நிறுத்தினாள் பூர்ணிமா...
அதுவரை.. அவள் பேசுவதையும்.. அரவிந்தன் ஏடா கூடமாய் பதில் சொல்லிக் கொண்டிருப்பதையும்.. கண்களில் சுவாரஸ்யத்தோடும்.. உதடுகளில் கேலிப் புன்னகையோடும் பார்த்துக் கொண்டிருந்த குணசீலன் அவள் பேச்சை நிறுத்தியவுடன்..
"என்னடா பேச்சையே காணோம்..." என்று நண்பனிடம் விசாரித்தான்...
"ஏன்டா.. இடி இடிச்சு மழை ஓய்ந்ததைப்போல இருக்குன்னு... இப்பத்தான் நிம்மதியா இருக்கேன்.. உனக்கு அது பொறுக்கலையா...?"
பூர்ணிமாவை முறைத்துக் கொண்டே.. குணசீலனுக்கு பதில் சொன்னான் அரவிந்தன்...
'இவ இவ்வளவு பேசறா.. அந்த சரளா ஒரு நாளாவது என்னைத் திரும்பி பார்த்து பேசி வைக்கிறாளா..?'
அவனுக்கு அவன் கடுப்பு...!
அதைக் கண்டு கொள்ளாமல் குணசீலன்... கருமமே கண்ணாக பூர்ணிமாவை பார்வையிட்டபடி..
"அதுக்கேண்டா இப்படி உர்ருன்னு முகத்தை வைச்சுக்கிட்டு இருக்க..?" என்று கேட்டான்...
பூர்ணிமாவின் வெட்டும் பார்வை.. அவன் மீது படிந்து விலகியது... குணசீலனின் கண்கள் மின்னின...
இந்த பார்வை பரிமாற்றத்தைக் கண்டு கொள்ளாதவனாக...
"என் முகம்.. நான் எப்படி வேண்டும்னாலும் முகத்தை வைச்சுக்கிட்டு இருப்பேன்.. உனக்கென்னடா வந்தது..?" என்று அரவிந்தன் கேட்டான்...
"அதெப்படி.. நீ அவ்வளவு ஈஸியா சொல்லலாம்..? முகம் உன் முகம்ன்னாலும்.. அதைப் பார்க்கிறது நான்தானேடா..."
குணசீலன் பூர்ணிமாவைப் பார்த்தபடி வார்த்தைகளை வீசியெறிய... அவள் சட்டென்று அவன் முகம் பார்த்துவிட்டு.. குனிந்தாள்...
அவள் மனதில் மழைச்சாரல் அடித்தது.. அவனது பார்வை அவளுக்கு இதமான ஒரு இம்சையை உண்டு பண்ணியது...
'என்ன மாதிரியான பார்வை இது..?' அவள் தவித்துப் போனாள்...
'இப்படிப் பார்க்கிறானே...' நகம் கடித்தாள்...
'நிஜமாகவே.. இவனுக்கு என் முகம் பார்க்கப் பிடிக்கிறதா...'
இரவுகளில் அவளால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை...
ராத்திரி நேரத்தின் ரகசியக் கனவுகளின் கதாநாயகனாக அவன் முகமே மனதில் உலா வந்தது...
'ஓராயிரம் பார்வையிலே...
உன் பார்வையை
நானறிவேன்...'
அவள் மனம் பாடியது.. அவளுக்கான அவனது பார்வையை நாடியது.. அவன் எங்கேயென்று தேடியது...
எல்லாமே மனதிற்குள்தான்.. வெளியே அதை ஒரு நாளும் அவள் காட்டிக் கொண்டதேயில்லை...
சரளாவைப் போன்ற அழகி இருக்கும் அந்த வங்கிக் கிளையில்.. அவள் முகத்தைப் பார்க்க குணசீலன் விரும்புகிறானா...?
அவனது கண்களின் கேலிப் பார்வை அவள் நினைவில் மிதக்கும்.. அவள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வாள்...
'ஊஹீம்.. அவரசப்படாதே.. அவன் விளையாட்டாய் சீண்டிப் பார்க்க நினைக்கலாம்.. ஏமாந்து விடாதே...'
தன் மனதிற்கு கடிவாளமிட அவள் முயன்றாள்... பெரிய.. பெரிய ஞானிகளாலேயே முடியாத ஒன்றை அவளால் செய்து விட முடியுமா..?
மனக்குதிரைக்கு கடிவாளமிட யாரால் முடியும்..?
அவள் மனக்குதிரை தறிகெட்டு.. அவன் பக்கமே பாய்ந்தது...
தூக்கமில்லாத இரவுகளை அவன் அவளுக்கு சொந்தமாக்கினான்... இரவுகளின் நகரும் மணித்துளிகளில் அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்து விட்டு.. விடியலின் போது... ஏதும் அறியாதவளைப் போல இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு வேலைக்கு வந்து விடுவாள் பூர்ணிமா...
"என்னடா.. கண்ணெல்லாம் சிவந்திருக்கு.. ராத்திரியில் சரியாத் தூங்கலையா..?"
அக்கறையோடு அரவிந்தனை விசாரிப்பான் குணசீலன்.. அந்த விசாரிப்பு தனக்கானது என்று புரிந்து கொண்டவளின் அலைபாயும் பார்வை அவன்மீது பாயும்...
அதை எதிர்பார்த்து.. எதிர் நோக்கியிருப்பனின் கண்கள் மின்னும்...
"ஆமாம்டா குணா.. நைட்டெல்லாம் ஒரே கொசுக்கடிடா.. தூங்க முடியலை..."
அவனைத்தான் நண்பன் அக்கறையாய் விசாரிக்கிறான் என்ற நன்றியுடன் பதில் சொல்வான் அரவிந்தன்...
"கொசுக்கடியா.. இல்லை.. யாரையாவது நினைச்சுக்கிட்டு தூங்காம பொழுதை ஓட்டினயா..?"
குணசீலனின் கேள்வியில்.. அவள் முறைப்பாள்.. அவன் கண்களில் சிரிப்புடன் புருவங்களை உயர்த்துவான்...
"ம்ஹீம்.. உனக்கு இது புரியுது.. அவளுக்குப் புரிய மாட்டேங்குதே..."
அரவிந்தன் ஏக்கத்துடன் சரளாவைப் பார்ப்பான்...
"அதெல்லாம் புரியும்டா.. இந்த லேடிஸின் புத்தி.. நம்மளவிட செம ஷார்ப்பா இருக்கும் மச்சி.. ஆனா.. அதை வெளியே காட்டிக்க மாட்டாங்க... எதுவும் புரியாததைப் போல.. அப்பாவியாய் முகத்தை வைச்சுக்கிட்டு நம்மள போட்டுப் பார்பாங்கடா..."
பூர்ணிமாவின் பார்வை.. மீண்டும் உயர.. குணசீலன் லேசாக இமை சிமிட்டினான்...
அவளுக்கு குப்பென்று வியர்த்து.. தொண்டை உலர்ந்து விட்டது... வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்க.. ஒர்வித இன்ப அவஸ்தைக்கு அவள் ஆளானாள்...
'இவன் ஏன் இப்படி பண்ணி வைக்கிறான்..?'
அந்தக் கிளையில்.. பூர்ணிமாவையும்.. சரளாவையும் தவிர... இன்னும் இரண்டு பெண்கள் வேலை பார்த்து வந்தார்கள்...
அவர்களும் அழகானவர்கள்தான்.. சரளாவின் அளவுக்கு அழகியில்லையென்றாலும்.. பூர்ணிமாவை விட அவர்கள் அழகானவர்கள்...
அவர்களைப் பார்வையிடாமல்.. குணசீலன் எதற்காக அவளை மட்டுட்ம பார்வையிடுகிறான் என்று அவள் மனம் அடித்துக் கொண்டது...
'நிஜமாகவே.. இவனுக்கு என்னைப் பிடிக்குமா...?'
நிச்சயமாய் அதைத் தெரிந்து கொள்ளாமல்.. வாய் விடுவதற்கு பூர்ணிமா தயாராக இல்லை...
உணவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.. பூர்ணிமாவின் முன்னால் இருந்த வரிசை இப்போது காணாமல் போய் விட்டிருந்தது...
'வேலையிலெல்லாம் வேகமானவ தான்...'
குணசீலன்.. கம்யூட்டரின் கீ போர்டைத் தட்டிக் கொண்டே பூர்ணிமாவைப் பற்றி நினைத்துக் கொண்டான்...
பக்கவாட்டில் திரும்பி... அவளைப் பார்த்தான்...
வேலையில் மும்முரமாக கம்யூட்டரின் திரையை ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்தவளின் நீண்ட பின்னல்.. தரையைத் தொட்டுக் கொண்டிருக்க.. குணசீலனின் மனம்.. அந்தப் பின்னலை பிடித்து அவளைத் தன் பக்கம் இழுக்கும் ஆசையைக் கொண்டது...
அவளின் அமைதியான முகத்தின் நீள் வடிவ கண்களின் மேல் கவிந்திருந்த இமைகளின் குடை போன்ற வடிவமைப்பு அவனை ஈர்த்தது... காட்டன் சேலையை.. பாந்தமாக... இடுப்பை மறைக்கும் விதத்தில் கண்ணியமாக உடுத்தி.. அவள் பின் பண்ணியிருந்த விதம் அவன் மனதிற்குள் ஒர்வித மரியாதையை உண்டு பண்ணியது...
சேலையின் மடிப்புக் கலையாமல் நேர்த்தியாக இருந்த விதம் அவளது அழகுணர்ச்சியை அவனுக்கு உணர்த்தியது...
"பூர்ணிமாம்மா... உங்களை மேனேஜர் கூப்பிடறாரு..."
பியூன் வந்து சொன்னதும்.. அவசரமாக எழுந்து போனாள் பூர்ணிமா.. அந்த இடமே வெறுமையாகி விட்டதைப் போல உணர்ந்தான் குணசீலன்.. சீக்கிரத்திலேயே அவள் திரும்பிவந்தாள்... அவனைக் கடந்து செல்லும் போது.. அவளின் சேலை முந்தானை.. அவனது முகத்தின் மீது யதேச்சையாய் படிந்து விலக.. அவள் பதறிப் போய்.. சேலையைப் பிடித்துக் கொண்டாள்...
 "தென்றல் வந்து என்னைத் தொடும்...
      ஆஹா.. சத்தமின்றி..
முத்தமிடும்..."
அவன் சன்னக்குரலில்... அவளுக்கு மட்டுமே கேட்கும்படி பாடினான்... அவள் முகம் சிவந்து விட்டது...
மதிய உணவுக்கு போய் விட்டு சீட்டுக்கு திரும்பிய போது.. அவளின் கம்யூட்டர் மவுசின் அடியில் ஒரு காகிதத் தாள் படபடத்தது... எடுத்துப் பிரித்தாள்....
 'உன் சேலை முந்தானையின்..
       உராய்வை விடவா...
தென்றலின் உராய்வு...
       குளுமையைத் தந்துவிடும்..?'
அந்தக் காகிதத்தில் இருந்த வாசகங்களைப் படித்தவளின் மனதில் தென்றலடித்தது...
இதை எழுதியது அவன்தான்.. அவள் மனம் இதை அறியும்... ஆனால்.. அவனது கையெழுத்தில் அந்தக் கவிதை இருக்கவில்லை... கம்யூட்டரில் கவனமாக டைப் செய்து.. பிரிண்ட் எடுக்கப் பட்டிருந்தது...
'இதை அவன்தான் எழுதினான் என்று எந்த ஆதாரத்தில் நான் சொல்லுவது..?' அவள் மனம் கூம்பிப் போனது...
குணசீலனின் சீட்டின் பக்கம் அவளது பார்வை போனது.. அவனோ.. அரவிந்தனோ.. அவர்களின் இருப்பிடத்தில் இல்லை... ஏன்.. பூர்ணிமாவுடன் அரட்டையடித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்த சரளாகூட அவளது சீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கவில்லை...
"சாப்பிட்ட கையை கழுவ வேணாமாடி..? உன்னைப் போல மிஸ் சின்சியரா வொர்க் பண்ண என்னால் முடியாது.. நீ போய் மெடலை வாங்கிக் குத்திக்க.. நான் லேட்டாத்தான் வருவேன்..." என்று கறாராய் கூறிவிட்டாள்...
பூர்ணிமாவுக்குத் தெரியும்.. அவள் காலி டிபன் பாக்ஸை கையில் வைத்துக்கொண்டு கொஞ்சநேரம் பேசுவாள்.. அப்புறமாய் கை கழுவப் போகிறேன் பேர்வழியென்று வாஷ்பேசின் பக்கத்தில் நின்று கொஞ்ச நேரம் பேசுவாள்... திரும்பவும்.. டைனிங் டேபிளுக்கு வந்து அங்கே கொஞ்ச நேரம் விச்ராந்தியாய் அமர்ந்து பேசுவாள்..
பேச்சு.. பேச்சு... பேச்சு... எப்படித்தான் அவளால் அவ்வளவு பேச்சுக்களை பேசித்தள்ள முடிகிறதோ என்று பூர்ணிமா மனதுக்குள் குமைந்து போனாள்....
'ஊஹீம்.. இது வேலைக்கு ஆகாது...'
"சரள்... நான் சீட்டுக்குப் போகிறேன்..."
"இருடி.. நானும் வருகிறேன்.. சேர்ந்தே போகலாம்..."
'எப்போது.. பேங்க் மூடும் நேரத்துக்கா...?'
"நீ மெதுவாய் வாடி.. எனக்கு அர்ஜன்ட் வொர்க் இருக்கு..."
"எப்போத்தான் உனக்கு வொர்க் இல்லாம இருந்தது...? சாப்பிட வந்தாலும் அதே நினைப்புத்தானா...? ஆற.. அமர... சாப்பிட்டு விட்டுப் போகலாம்ன்னு ஒரு நாளாவது நினைக்கிறயா..?"
'இது தான்.. ஆற... அமர சாப்பிடும் லட்சணமா..? ஊர் கதைகளைப் பேசுகிற நேரமாய்.. சாப்பாட்டு நேரத்தை ஆக்கிவிட்டு.. உன்னோடு.. என்னையும்.. கூட்டுச் சேர்க்கப் பார்க்கிறயா..?'
"எனக்குப் பதிலாய் நினைக்க.. நீயிருக்கிறயில்ல.. அது போதும்... ஆளை விடு..."
பூர்ணிமா சீட்டுக்குத் திரும்பிய போது.. யாருமே சீட்டுக்களில் இல்லை...
எல்லோரும் சரளாவைப் போலத்தான் என்ற நினைவோடு சீட்டில் உட்கார்ந்தவளின் கண்களில்தான் அந்தக் கவிதை பட்டது...
ஒராயிரம் முறைகள் அதைப் படித்திருப்பாள்.. இருந்தும் அவள் மனம் நிறையவில்லை...
'இதை கையில் எழுதாமல் கம்யூட்டரில் ஏன் டைப்... அடித்தான்...?'



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஆசையா.. கோபமா...? -3
ஆசையா.. கோபமா...? -3
https://1.bp.blogspot.com/-HW1j6639vCU/Xr0TTc7N4kI/AAAAAAAAA1k/KsXJuC2T-Q0owUdBH8BGj56IxhmETRsKgCPcBGAYYCw/s320/Asaiya%2BKovama.jpg
https://1.bp.blogspot.com/-HW1j6639vCU/Xr0TTc7N4kI/AAAAAAAAA1k/KsXJuC2T-Q0owUdBH8BGj56IxhmETRsKgCPcBGAYYCw/s72-c/Asaiya%2BKovama.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/aasaiyaakobamaa-3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/aasaiyaakobamaa-3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy