ஆசையா.. கோபமா...? -7

7 பூஜையறையில் விளக்கை ஏற்றி.. கைகளை குவித்து.. கடவுள்களை வணங்கிக் கொண்டிருந்தாள் காந்திமதி.. "காந்தி..." என்ற அழைப்புடன்.. வீட...

7

பூஜையறையில் விளக்கை ஏற்றி.. கைகளை குவித்து.. கடவுள்களை வணங்கிக் கொண்டிருந்தாள் காந்திமதி..
"காந்தி..." என்ற அழைப்புடன்.. வீட்டுக்குள் வந்தார் விஸ்வநாதன்...
"இதோ வந்திட்டேன்..."
நெற்றியில் சாமி படங்களுக்கு முன்னாலிருந்த குங்குமத்தை வைத்துக் கொண்டு.. விரைந்து வந்தாள் காந்திமதி...
"எதுக்கு ஓடி வர்ற...?"
மங்களகரமான அழகுடன் மிளிர்ந்த மனைவியை கனிவுடன் பார்த்தார் விசுவநாதன்...
"நீங்க கூப்பிட்டிங்களே..."
அதுதான் காந்திமதி...
வள்ளுவர் அழைக்கும் சத்தம் கேட்டதும்.. நீர் இறைத்துக் கொண்டிருந்த வாளியை அப்படியே கிணற்றுக்குள் விட்டு விட்டு..
'இதோ.. வந்திட்டேன்...' என்று ஓடி வந்தாளாம் வாசுகி...
அந்த வள்ளுவரின் வாசுகியைப் போல்தான்.. விஸ்வநாதனுக்கும்.. காந்திமதி இருந்தாள்...
கையில் பிடித்திருந்த பையைக் கொடுத்து விட்டு.. கைலிக்கு மாறிய விசுவநாதன் குளியலறைக்குள் புகுந்தார்...
அவர் கொடுத்த பையை அலமாரியில் வைத்துவிட்டு.. அவளுக்காக காபியைக் கலக்க.. காந்திமதி சமையலறைக்குள் புகுந்தாள்..
ஈரம் படிந்த முகத்தை.. துவாலையால் துடைத்தபடி விஸ்வநாதன் ஹாலுக்கு வந்த போது... அவளுக்காக சூடான காப்பியுடன் நின்றிருந்தாள் காந்திமதி...
"பெரியவன் வந்திட்டானா..?" அவர் காபியை வாங்கிக் கொண்டார்...
"இன்னும் வரலை..."
"சின்னவன்..?"
"அவன் அப்பவே வந்திட்டான்.. டென்னிஸ் விளையாடப் போறேன்னு வெளியே போயிருக்கான்..."
"இருட்டப் போகுது.. இன்னும் என்ன.. விளையாட்டு வேண்டிக்கிடக்கு..?"
விஸ்வநாதன் முகம் சுளித்தார்.. அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் வந்தான்.. சத்தியசீலன்..
"ஏம்மா.. இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வர.. நானென்ன பெண்பிள்ளையா...?"
காலம்.. காலமாக... தகப்பன் கேட்கும் கேள்விகளுக்கு.. தாயிடம் எதற்காக இந்த மகன்கள் பதில் சொல்கிறார்கள் என்று புரியாமல் விழித்தாள் காந்திமதி...
"அதை என்னைப் பார்த்துச் சொல்லுடா.." விஸ்வநாதன் அதட்ட...
"பார்த்திட்டாலும்.." என்று வாய்க்குள் முணுமுணுத்தான் சத்தியசீலன்...
"பெரியவனைப் பாருடா..."
'இவர் ஒருத்தரு.. ஒன்னு இவரைப் பார்க்கச் சொல்லுவாரு.. இல்லைன்னா.. பெரியவனைப் பார்க்கச் சொல்லுவாரு... இந்த வயசில போயி இவங்க ரெண்டு பேரு மூஞ்சியையும் பாருடான்னு சொன்னா.. நான் என்னத்தைப் பண்றது..?'
"அவனை எங்கே பார்க்கிறது..? அவனென்ன வீட்டிலயா இருக்கான்..? இருட்டுறதுக்கு முன்னாலே வீட்டுக்கு வரனும்கிற சட்டமெல்லாம் எனக்குத்தானே.. அந்த துரைக்கு இல்லையே..."
"அவனென்ன.. உன்னைப் போல ஊரைச் சுற்றிட்டா வர்றான்..?"
"அப்பா.. வேண்டாம்.. என்னவோ.. வேலையில்லாத கிராஜீவேட்டை சொல்கிறதைப் போல... என்னையும் சொல்லி வைக்காதீங்க.. நான் இன்ஜினியரிங் ஸ்டூடன்ட்.."
"அந்த நினைப்பும்.. பொறுப்பும் உனக்கிருக்கா..?"
"இப்ப... என்னை.. என்னதான்ம்மா இவரு செய்யச் சொல்கிறாரு...?"
சத்தியசீலன் எரிச்சலுடன் காந்திமதியிடம் கேட்டுக் கொண்டிருந்தபோது... வாசலில் பைக் சத்தம் கேட்டது...
"குணா வந்திட்டான்..." விஸ்வநாதன் முகம் மலர்ந்தார்...
"இதுக்கு இவரு.. ஒரு பிள்ளையோடயே நிறுத்தியிருக்கலாம்..." சத்தியசீலன் சத்தமாகவே சொல்லி வைத்தான்...
"என்னது...?" விஸ்வநாதன் சின்ன மகனை முறைத்தார்...
"ஒன்னுமில்லைப்பா.. அண்ணனுக்கு சூடாய் காப்பி கொண்டுவரச் சொல்லி அம்மாகிட்டச் சொன்னேன்..."
பற்களின் இடையே வார்த்தைகளைக் கடித்து துப்பினான் சத்தியசீலன்...
"என்னடா.. அதுக்குள்ள வீட்டுக்கு வந்திட்டியா..? டென்னிஸ் கோர்ட்டில இருப்பன்னில்ல நான் நினைச்சேன்.."
குணசீலன் காபியை உறிஞ்சிக் கொண்டே கேட்டான்..
"எங்கே...? இவ்வளவு சீக்கிரமாய் வந்தாலும் ஆயிரம் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கு.." அலுத்துக் கொண்டான் சத்தியசீலன்...
"வீடுன்னு இருந்தா.. கேள்வியின்னு ஒன்னை கேட்கத்தாண்டா செய்வோம்..." விஸ்வநாதன் குரலை உயர்த்த...
"விடுங்கப்பா..." என்றான் குணசீலன்...
"உனக்குத் தெரியாது குணா..."
"எல்லாம் எனக்கும் கொஞ்சம் தெரியும்.. அவனுக்கு இதுதான்ப்பா வயசு.. இன்னும் ரெண்டு வருசம் போனா.. அவனும் என்னை மாதிரியே ஓட ஆரம்பிக்கனும்.. இந்த வயசில் என்ஜாய் பண்ணாம.. எந்த வயசில் என்ஜாய் பண்ணுவான்..? சத்யா... நீ உள்ளே போடா..."
"நீ கொடுக்கிற செல்லம்தாண்டா இவனுக்கு..."
விஸ்வநாதன்... அடுத்த கட்ட வசவுகளை கொட்ட ஆரம்பிக்கும் முன்னரே... சத்தியசீலன் மாடிப்படியில் ஏறிவிட்டான்...
சற்று நேரத்தில் மாடிக்கு வந்த குணசீலனிடம்
"தேங்க்ஸ்டா.." என்றான்...
"எதுக்கு..?" குணசீலன் புருவம் உயர்த்தினான்...
"அப்பாவின் மொட்டை ரம்பத்தில இருந்து என்னைக் காப்பாத்தினதுக்கு..."
குணசீலன் லேசாக சிரித்தான்.. தம்பியின் அருகே வந்து அவன் தோள்மேல் கைபோட்டான்...
"என்னடா விசயம்..? எதுவும் அட்வைஸ்.. கிட்வைஸ் பண்ண ஆரம்பிக்கப் போகிறயா..?"
'கண்டு பிடித்துட்டானே...'
தம்பியின் புத்திசாலித்தனத்தை மெச்சிய புன்முறுவல் அவன் இதழ்களில் உதித்தது...
"சத்யா..."
"அண்ணா... வேண்டாம்டா... நீயும் மொக்கை போட ஆரம்பிக்காதே... நான் தாங்க மாட்டேன்..."
"அதுக்கில்லைடா..."
"இந்தா பாரு... கவர்ண்மென்டே.. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்ன்னுதான் பிரச்சாரம் பண்றாங்க..."
'இப்ப எதுக்கா.. இவன் மரத்தைக் கட்டி இழுக்கிறான்..?'
குணசீலனுக்கு புரியவில்லை...
"அதை எதுக்குடா இப்பச் சொல்கிற...?"
"அதைப் போல... வீட்டுக்கு ஒரு ஆள்தாண்டா மொக்கை போடனும்.. அதுதான் மொக்கை போடுறதை.. நம்ம அருமை அப்பா மொத்தக் குத்தகைக்கு எடுத்திருக்காரே... நீயும் கூட்டுச் சேரனுமா...?"
"போடா அரட்டை..."
தம்பியின் முதுகில் செல்லமாக ஒரு போடு போட்டான் குணசீலன்...
"உனக்கெப்படி இது என்ஜாய் பண்ற வயசோ.. அதைப்போல.. அப்பாவுக்கு இது... பொறுப்பை உணர்த்துகிற வயசுடா..."
"இருந்துட்டுப் போகட்டும்.. அதை யாருக்கு உணர்த்தனும்.. பொறுப்பில்லாதவங்களுக்குத் தானே உணர்த்தனும்..?"
"நீ சொல்கிறதும் ஒருவிதத்தில் சரிதான்... ஆனால்.. அவருடைய அப்பா..."
"அதாவது... நம்ம தாத்தா..."
"பரவாயில்லை.. பெரிய கண்டு பிடிப்பை கண்டு பிடிச்சுட்ட..."
"உனக்கு தம்பின்னா சும்மாவா..?"
"புல்லரிக்குது... போ..."
"போர்வையை எடுத்துப் போர்த்திக்க..."
"அது எதுக்குடா..?"
"இல்லைன்னா... மாடு வந்து மேய்ஞ்சிராதா..?"
"ஹா... ஹா... இதில காண்பிக்கிற புத்திசாலித் தனத்தை அப்பாவைப் புரிஞ்சுக்கிறதிலயும் நீ காண்பித்தா தேவலாம்..."
"அதைவிடு... தாத்தாவை பாதியிலேயே விட்டுட்டியே..."
"அந்தக் காலத்திலே.. தாத்தா.. அப்பாவை கண்டிப்பா வளர்த்தாராம்..."
"அதுக்காக.. இவருக்கு நாம கிடைச்சோமா..? என்னவோ... என் மாமியார் என்னைக் கொடுமைப் படுத்தினதாலே... நான் என் மருமகளைக் கொடுமைப் படுத்தறேன்னு சொல்கிறதைப் போல இருக்கே..."
"விடுடா..."
குணசீலன்... அவனுடைய அறைக்குள் நுழைந்து கொள்ள.. பக்கத்திலிருந்த அறைக்குள் போனான் சத்தியசீலன்...
இரவு உணவின் போது.. விஸ்வநாதன் குணசீலனின் முகத்தைப் பார்த்தார்...
"அண்ணா.. டேன்ஜர் சிக்னல் தெரியுதுடா..." சத்தியசீலன் முணுமுணுத்தான்...
"குணா..." விஸ்வநாதன் ஆதுரமாய் அழைக்க...
"சொன்னேனில்ல..?" என்றான் சத்தியசீலன்...
"சும்மாயிருடா..." சன்னக் குரலில் தம்பியை அடக்கிவிட்டு...
"என்னப்பா...?" என்று தகப்பனாரின் முகம் பார்த்தான் குணசீலன்
"அம்பாசமுத்திரத்திலே ஒரு பெண்ணிருக்காம்..." என்று அவர் ஆரம்பிக்க...
"என்னவோ... ஒரே ஒரு ஊரில... ஒரேயொரு பொண்ணிருக்காம்ன்னு கதை கேட்கிறதைப் போலவே இருக்கில்ல...?" என்று கேட்டு வைத்தான் சத்தியசீலன்...
விஸ்வநாதன் பேச்சை நிறுத்தி விட்டு இளைய மகனை முறைக்க அவன் வாயை மூடிக் கொண்டு.. சாப்பாட்டைக் கவனித்தான்...
"பொண்ணு அழகாயிருக்கு... டீச்சராய் வேலை பார்க்குது.. வீட்டுக்கு ஒரே பெண்.. அம்பாசமுத்திரத்திலயும்... திருநெல்வேலியிலயும் அந்தப் பொண்ணு பேரில வீடுகளை வாங்கிப் போட்டிருக்காங்க... அதிகமாக சீர் செய்வாங்க.. நமக்கும் நெருங்கின சொந்தம்தான்... நீ என்ன சொல்ற...?"
விஸ்வநாதனும்.. காந்திமதியும் ஆர்வத்துடன் குணசீலனைப் பார்த்தார்கள்... அவர்கள் பார்வையிலே... அவனது சம்மதத்தை எதிர்பார்த்த ஆவல் இருந்தது...
குணசீலனின் மனக்கண்ணில் பூர்ணிமா தெரிந்தாள்...
"வேண்டாம்ப்பா..." குணசீலன் மறுத்தான்...
"ஏன்ப்பா...?" விஸ்வநாதனுக்கு ஏமாற்றமாக போய்விட்டது...
"எனக்கென்னவோ... பிடிக்கலைப்பா..."
"பெண்ணைப் பார்க்காமலேயே பிடிக்கலைன்னு சொன்னால் எப்படிடா குணா... ஒரு எட்டு.. நாம போய் பெண்ணைப் பார்த்துட்டு வருவோம்... அதுக்கப்புறம் நீ முடிவைச் சொல்லு..."
"எனக்கு இஷ்டமில்லேம்மா..."
"இது நல்ல இடம் குணா..."
"இருக்கட்டும்ப்பா... இடத்தோடயா நான் வாழப் போறேன்...?"
குணசீலன் கேட்ட கேள்வியை...
"அஃது..." என்று சிலாசித்தான் சத்தியசீலன்...
மூத்தவன் மீதிருந்த கோபத்தை விழிகளில் தேக்கி.. இளையவனை முறைக்க ஆரம்பித்தார் விஸ்வநாதன்...
"கல்யாணம் பேசறது அண்ணனுக்குத்தான்ப்பா.. எனக்கு இல்லை... ஆளை மாற்றி முறைக்காதீங்க..." என்றான் அவன்...
கைகழுவிக் கொண்டிருந்த மகனின் அருகே வந்து...
"ஏண்டா... இப்படிப் பண்ணிட்ட... அந்தப் பொண்ணு உன் அப்பாவழிச் சொந்தம்டா... பணக்கார இடம்... ஒற்றைப் பொண்ணு... இந்த இடத்தை உனக்கு முடிச்சு வைத்திரனும்னு உன் அப்பா.. எத்தனை தூரத்துக்கு ஆசைப்பட்டாருன்னு தெரியுமா...?" என்று மனத்தாங்கலுடன் சொன்னாள் காந்திமதி...
"அம்மா... பணக்கார இடம்.. ஒற்றைப் பெண்.. சொந்தபந்தம்.. இதையெல்லாம் மறங்க... எனக்கு மனசுக்குப் பிடிச்சிருக்கனும்... அதை மட்டும் நினைங்க.."
"அவளை உன் மனசுக்கு பிடிக்கும்டா..."
"எதைவைச்சு அப்படிச் சொல்கிறிங்க...?"
"அவ ரொம்ப அழகாயிருப்பாடா...?"
குழந்தைத் தனத்துடன் இதைக் கூறிய காந்திமதியை யோசனையுடன் பார்த்தான் குணசீலன்...
'இவர்களுக்குச் சொன்னால் புரியுமா..?'
"ஏம்மா.. அழகாயிருந்தா மட்டும்... என் மனசுக்கு பிடிச்சுருமா..?" அவன் ஆழ்ந்த குரலில் கேட்டான்...
"ம்ம்ம்... வேறென்னடா உனக்கு வேணும்...?"
காந்திமதி என்னவோ.. எளிதாக கேட்டுவிட்டாள்.. அதைச் சொல்லில் அடக்கி... அவளிடம் சொல்லிப் புரிய வைக்க அவனால் முடியவில்லை...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,17,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,92,ஒற்றையடிப்.. பாதையிலே..,11,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,16,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: ஆசையா.. கோபமா...? -7
ஆசையா.. கோபமா...? -7
https://1.bp.blogspot.com/-HW1j6639vCU/Xr0TTc7N4kI/AAAAAAAAA1k/KsXJuC2T-Q0owUdBH8BGj56IxhmETRsKgCPcBGAYYCw/s320/Asaiya%2BKovama.jpg
https://1.bp.blogspot.com/-HW1j6639vCU/Xr0TTc7N4kI/AAAAAAAAA1k/KsXJuC2T-Q0owUdBH8BGj56IxhmETRsKgCPcBGAYYCw/s72-c/Asaiya%2BKovama.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/aasaiyaagobamaa-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/05/aasaiyaagobamaa-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy