வந்தாள் மகாலட்சுமியே. -3

3 மழை கொட்டிக் கொண்டிருந்தது.. புரண்டோடிய மழை நீர் வெள்ளத்தில் காகிதக் கப்பல்களை மிதக்க விட்டுக் கொண்டிருந்தார்கள் மீராவும் , வாகீசனி...


3

மழை கொட்டிக் கொண்டிருந்தது.. புரண்டோடிய மழை நீர் வெள்ளத்தில் காகிதக் கப்பல்களை மிதக்க விட்டுக் கொண்டிருந்தார்கள் மீராவும், வாகீசனின் மகன்களும்.. அதில் போட்டா போட்டிவேறு..
"அக்கா என் கப்பல் தான் முந்தனும்.. அதுக்கேத்ததைப் போல கப்பல் செய்யுங்க.."
வாகீசனின் மூத்த மகனான மகேஷ் உத்தரவிட்டான்.. இவனுக்கு 'ரெட்டை வால் ரெங்குடு' என்ற பட்டப் பெயரை சூட்டியிருந்தாள் மீரா.. 'பதினாலு வயதுப் பிசாசு..' என்ற மற்றொரு பெயரும் அவனுக்கு உண்டு.. அதையும் சூட்டியிருந்தது மீராதான்..
"அதெல்லாம் முடியாது.. என் கப்பல்தான் முந்தனும்.. அக்கா ஜாக்கிரதை.. இவன் கப்பலை என் கப்பல் இடிச்சுக் கவிழ்த்துட்டு முன்னேறனும்.. அதுக்கேத்ததைப் போல தளவாடத்தை தயார் பண்ணுங்க.."
வாகீசனின் இளையமகன் சுரேஷ் எச்சரிக்கை விடுத்தான்.. இவனுக்கு 'ரௌடி..' என்று நாமகரண மிட்டிருந்தாள் மீரா.. 'வஸ்தாது..' 'பத்து வயது குட்டிச் சாத்தான்..' போன்ற உபபெயர்களையும் அவளே அவனுக்கு வாரி வழங்கியிருந்தாள்..
"பொறுங்கடா.. எனக்கென்ன எட்டுக் கையா இருக்கு..?" மீரா அவர்களை அதட்டினாள்..
வாகீசன் தினமும் ஒரு எழுத்தைக் கூட விடாமல் படிக்கும் ஆங்கில நாளிதழ் அங்கே காகிதக் கப்பல்களாக உருமாறிக் கொண்டிருக்க.. அவர் பேப்பரைக் காணோ மென்று கூப்பாடு போட்டபடி வீட்டைத் தலைகீழாக புரட்டிக் கொண்டிருந்தார்..
எது எப்படிப் போனாலும் அவருக்கு தினந்தோறும் பேப்பர் படித்து விட வேண்டும்.. அப்படிப் படிக்க முடியாத நாளை, நாளாக அவர் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்..
ஏற்கனெவே வீடு தலைகீழாகத்தான் இருந்தது.. எந்தப் பொருளும் வைத்த இடத்தில் இல்லை.. மழைகாலத்தில் அரையாண்டு விடுமுறையைக் கொண்டு வந்த கல்வித் திட்டத்தை அவர் மனதுக்குள் நொந்து கொண்டார்..
அந்த விடுமுறை தினங்கள் வந்ததினால் அல்லவா அவர் வீடு இரண்டு பட்டுக் கொண்டிருக்கிறது..?
"பாகீ..."
அவரின் அழைப்புக்கு வள்ளுவரின் குரல் கேட்ட வாசுகியாக அவரின் மனைவி ஓடி வந்து நின்று விடவில்லை.. மாறாக..
"பாகிக்கு என்ன வைச்சிருக்கீங்க..?" என்ற அவளின் குரல்தான் காற்றில் மிதந்து வந்தது..
எதுவும் வைத்திருந்தால்தான் ஒர் மனைவி.. அவளுடைய கணவனின் அழைப்புக்கு ஏனென்று கேட்பாளா..?
இதை அவரால் பாகீரதியிடம் கேட்டுவிட முடியாது.. அவள் உடனே எத்தனை முறை அவளது அழைப்புக்கு அவர் ஏனென்று கேட்டிருக்கிறார் என்ற பதில் கேள்வியைக் கேட்டு வைப்பாள்..
"கண்ணுக்கு முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு காத்தில கோலம் போடற மனுசன் நீங்க.. கட்டின பொண்டாட்டி குத்துக் கல்லைப் போல முன்னாலே உட்கார்ந்திருந்தாலும் யாரோ.. எவரோன்னு பார்த்துட்டுப் போகிற மனுசன் நீங்க.. நாள் முழுக்க உங்க முன்னாலே நின்னு காட்டுக் கத்தலா நான் கத்தினாலும் வாயைத் திறந்தா முத்து உதிர்ந்துரும்ன்னு வாயை கோந்து போட்டதைப் போல இறுக்கி மூடிக்கிட்டு ஏன்னு ஒருவார்த்தை கேட்காத மனுசர் நீங்க.. உங்களுக்கு வாழ்க்கைப் பட்டதுக்கு நான் பேசாம என் பிறந்த வீட்டிலே கன்னி தெய்வமா காலம் கழிச்சிருக்கலாம்.."
இதுபோன்ற பொங்கல்கலை அடிக்கடி பாகிரதி பொங்கி வாகீசன் ஏகத்துக்கும் சாப்பிட்டிருக்கிறார்.. இன்றும் அதுபோல அவள் பொங்கலைப் பொங்கி விட்டால் அவர் தாங்குவாரா..?
அதனால் அவர் அடக்கி வாசித்தார்.. இருந்த இடத்தில் இருந்தபடி மனைவியை அழைப்பதற்குப் பதிலாக அவள் இருந்த இடத்திற்கு இவர் பணிவாகச் சென்றார்.. பாகீரதி ஆப்பம் சுட்டுக் கொண்டிருந்தாள்.. அதன் வாசனையில் மயங்கிப் போன வாகீசன் பேப்பரை மறந்து நாக்கைச் சப்புக் கொட்டினார்..
"என்ன..?" என்றாள் பாகீரதி..
"ஆப்ப வாசனை அமோகமா இருக்குடி பாகீ.."
"அதானே பார்த்தேன்.. எங்க அயித்தான் அதிசயத்திலும் அதிசயமா நான் வைச்சிருக்கிற மல்லிகைப் பூவை வாசம் பிடிச்சுட்டாரோன்னு ஒரு நிமிசம் நினைச்சு ஏமாந்து போயிட்டேன்.. நீங்க நீங்கதான்.. ஆப்பம் ஆப்பம்தான்.. சாப்படறிங்களா..?"
"பிள்ளைக சாப்பிட்டாங்களா..?"
"உங்களுக்கு எதுக்கு அந்தக் கவலை..? அவனுக சாப்பிடலைன்னா நீங்க மடியில உட்கார வைச்சு ஊட்டி விடப் போறிங்களா..?"
"அவனுக அடங்கி உட்கார்ந்தா நான் ஊட்டி விட மாட்டேன்னா சொல்லப் போறேன் பாகீ..?"
"தெரியுதில்ல..? அதனால நீங்க அடங்கி உட்கார்ந்து உங்க வயித்துக்கு கொட்டிக்கிட்டு ஆபிஸ் போகிற வழியைப் பாருங்க.. அவனுகளுக்குத்தான் அரைப் பரிட்சை லீவு.. உங்களுக்கில்ல.. ஆபிஸ் போகிற உத்தேசமிருக்கா.. இல்லையா..?"
இல்லையென்று வாகீசன் எப்படிச் சொல்வார்..? முள்ளங்கிப் பத்தை போல அவர் ஆயிரக்கணக்கில் சம்பளப் பணத்தைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கும் போதே அவர் நிலைமை ஊசலாடிக் கொண்டிருக்கிறது.. இதில் வேலைக்குப் போகாமல் வீட்டுக்குள் உட்கார்ந்திருந்தால் என்ன ஆவார்..?
அவர் அவசரமாகத் தட்டைத் தூக்கினார்.. பாகீரதி சுடச்சுட ஆப்பத்தை வாங்கி தேங்காய் பாலில் அமிழ்த்தி.. அது ஊறியதும் பிட்டுப் பிட்டு ருசிக்க ஆரம்பித்தார்..
"ஆஹா.. பாகீ.. உன் கை மணமே தனிடி.."
"அதுக்கென்ன இப்ப..? வகை தொகையா சமைச்சுப் போட்டா வைர அட்டிகையை வாங்கிப் போட்டிரப் போறிங்களா..?"
'ஒரு ஆப்பத்துக்கு விலை வைர அட்டிகையா..?'
இதற்குப் பேசாமல் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குப் போய் விருந்து சாப்பிட்டு விடலாமே என்றிருந்தது வாகீசனுக்கு..
'பாராட்டினாக்கூட குத்தமாடி பாகீ...'
மனதுக்குள் புலம்பியபடியே அவர் மௌன குருவானார்.. அடுத்த ஆப்பத்தை அவர் தட்டில் போட்ட பாகீரதி அவரை உற்றுப் பார்த்து வைத்தாள்..
'எதுக்கு இப்படிப் பாக்கிறா..? இவன்தான் நம்ம புருசனான்னு அடையாளம் பார்க்கிறாளா..?'
வாகீசனுக்குப் புரியவில்லை.. வாயைத் திறந்து கேட்கவும் முடியவில்லை.. அவள்தான் அவர் எதைச் சொன்னாலும் வினயமாக ஒரு பதிலைச் சொல்லி வைக்கிறாளே...
"ஒரு மனுசனாப்பட்டவர் வாயைத் திறந்து பேச மாட்டாரோ.. உன் வீட்டுக்காரர் ஊமையாடி பாகீரதின்னு என் சிநேகிதிக கேட்கிறப்ப வெறி வெறியாய் வருது.. இப்படியா ஒரு மனுசன் சாப்பிடறதிலேயே குறியாய் இருப்பார்..?"
பத்து ஆப்பங்களுக்கு ஆசைப்பட்டு விட்ட கொடுமைக்காக வாகீசன் என்ன பாடுபட வேண்டியிருக்கிறது..?
"ஏண்டி.. பேசினாலும் குத்தம்.. பேசலைன்னாலும் குத்தம்ங்கிற.. நான் என்னதாண்டி பண்ண..?"
"எதுவும் பண்ண வேணாம்.. அதான் எல்லாத்தையும் கவனிச்சுக்க நான் ஒருத்தி இருக்கேனே.."
"நீ என்ன வேணும்னாலும் பேசுடி.."
"ஏன்..? வேண்டாம்ன்னுதான் சொல்லிப் பாருங்களேன்.."
அந்த விசப்பரிட்சையில் வாகீசன் இறங்கவே மாட்டார் என்பதை அறிந்து வைத்திருந்த பாகீரதி சவால் விட்டாள்..
"பாரு பாகீ.. உன் சிநேகிதக எதுக்காக என்னைப் பத்திப் பேசனும்..?"
"உங்களைப் பத்தி யார் பேசினது..? அவங்க என் புருசனைப் பத்திப் பேசினாங்க.."
அவரும் பாகீரதியின் புருசனும் வேறு வேறா..?
வாகீசனுக்கு வன்கொடுமையாய் இருந்தது.. அந்தக் கொடுமையிலும் அவர் வெற்றிகரமாக ஒரு டஜன் ஆப்பங்களை உள்ளே தள்ளியிருந்தார்.. ஒருவழியாக அவர் தட்டை சிங்கில் போட்டுக் கை கழுவிய போது.. பாகீரதி..
"அப்பாடா.." என்றாள்..
எதற்கு அந்த அப்பாடா என்று வாகீசனுக்குத் தெரியவில்லை.. அவர் சமையலறையின் ஜன்னல் வழியாக கொட்டிக் கொண்டிருந்த மழையைப் பார்த்தார்.. வானம் கிழிந்து விட்டதைப் போல மழை நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது..
'இந்த மழையில் ஆபிஸ் போகனுமா..'
அவருக்கு விடுமுறையில் வீட்டிலிருந்த மகன்களின் மீது பொறாமையாக இருந்தது..
"எங்கேடி அவனுகளைக் காணோம்..?"
"எவனுகளக் கேட்கறிங்க..?"
"நம்ம வீட்டு தீவிரவாதிகளத்தான் கேட்கிறேன்.."
"அவனுகளா.. சின்னப்பசங்களைப்போல காகிதக் கப்பல் விடறேன்னு நியுஸ் பேப்பரும் கையுமா வாசலுக்குப் போயிருக்கானுக.. நம்ம மீராவும் சின்னக் குழந்தையைப் போல இவனுக கூட கூட்டுப் போட்டுக்கிட்டு கப்பல் விட்டுக்கிட்டு இருக்கா.."
பாகீரதி செல்லமாகச் சொல்லியதை அப்படியா என்று கேட்டுக் கொண்ட வாகீசனுக்கு மூளையில் மணியடித்தது..
"நியுஸ் பேப்பரை எடுத்துக்கிட்டு போனானுகளா..? என்னைக்குப் பேப்பர்டி..?" பரபரத்தார்..
"யாருக்குத் தெரியும்..?" அலட்சியமாக சொல்லி விட்டு ஆப்பம் சுடும் வேலையைத் தொடர்ந்தாள் பாகிரதி..
வாகீசன் இரண்டு கால் பாய்ச்சலில் வாசலுக்கு ஓடினார்.. வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்த மழை நீரில் வரிசை கட்டிக் கொண்ட காகிதக் கப்பல்கள் போய் கொண்டிருந்தன.. மீதமிருந்த ஒற்றைத் தாளைக் கிழித்து தளவாடத்தை தயார் பண்ண முனைந்தாள் மீரா..
"பொறும்மா.."
வாகீசன் காற்றில் எழும்பி கேட்ச் பிடிக்கும் கிரிக்கெட் பிளேயரைப் போல பறந்து வந்து மீராவின் கையிலிருந்த ஒற்றைத் தாளைக் கைப்பற்றினார்..
மீரா வாகீசன்களின் பையன்களைப் பார்த்து இரண்டு கைகளையும் விரித்துத் தோள்களைக் குலுக்கினாள்..
"அப்பா.." அவர்கள் ஒருமித்த குரலில் ஆட்சேபக் குரலை எழுப்பினார்கள்..
அந்த ஒற்றைத்தாள் காட்டிய தேதி அன்றைய தேதிதான்..
"ஏண்டா.. உங்களுக்கு காகிதக் கப்பல் செய்ய வேற பேப்பரே கிடைக்கலியா..? இன்னைக்குப் பேப்பர்தான் கிடைச்சதா..?" அழமாட்டாத குறையாகத்தான் மகன்களிடம் கேட்டார்..
அவர்கள் அதற்கே அவரைப் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்கள்..
"இது சரியில்லைப்பா.." என்றான் மகேஷ்..
"இன்னைக்குப் பேப்பர்ன்னு எங்களுக்கு ஜோஸியமா தெரியும்..?" என்றான் சுரேஷ்..
பத்து வயதுப் பையனுக்கு இவ்வளவு தெளிவு ஆகாது என்றிருந்தது வாகீசனுக்கு..
"ஜோசியம் பாக்கனும்னு ஒன்னும் அவசியமில்லைடா மகனே.. பேப்பரில இருக்கிற தேதியைப் பாத்திருந்தாப் போதுமே.." என்றார் வாகீசன்..
"அதையெல்லாம் யாரு பார்க்கிறது..?" அலட்சியமாக கேட்டு.. தான் பாகீரதியின் தலைமகன் என்பதை நிருபித்தான் மகேஷ்..
"கப்பல் செய்ய பேப்பரைத் தேடினோம்.. கண்ணுக்கு முன்னால இந்தப் பேப்பர்தான் இருந்துச்சு.. எடுத்தோம்.. கப்பல் செய்தோம்.. தண்ணியில விட்டோம்.. இதில எங்க தப்பு எங்கேயிருக்கு..? பேப்பரை எடுத்தது குத்தமில்லைப்பா.. நாங்க எடுக்கிறதைப் போல எங்க   கண்ணுக்கு முன்னால பேப்பரை வைச்சிருந்தது உங்க தப்பு.." என்று சொல்லி..தான் பாகீரதியின் இளைய பிள்ளையென்று அடையாளம் காட்டினான் சுரேஷ்..
எப்படித்தான் பாகீரதியைப் போல அவள் பெற்ற பிள்ளைகளும் நியாயம் பேசுகிறார்களோ என்றிருந்தது வாகீசனுக்கு.
"ஏம்மா மீரா.. நீயாவது சொல்லக் கூடாதா..?" அவர் மீராவிடம் பஞ்சாயத்து வைத்தார்..
"நான் சொன்னேன் அங்கிள்.." என்றாள் அவள்..
கலெக்டரின் மகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. என்று மெச்சிப் போய் விட்டார் வாகீசன்..
பிள்ளைகளை அவள் கண்டித்திருக்கிறாளே...
"நீ சொல்லியுமாம்மா இவனுக கேட்கலை..?"
"ஆமாம் அங்கிள்.. சண்டை போட்டுக்காதீங்கடா.. மிச்சமிருக்கிற ஒற்றைத் தாளையும் சீக்கிரமா கப்பல் செஞ்சு விட்டிருங்கடான்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் அங்கிள்.. இவனுக கேட்கலையே.. ஒருத்தனுக்கொருத்தன் அடிச்சுக்கிட்டு நேரத்தைக் கடத்தினாங்க.. இப்பப் பாருங்க.. அந்த ஒற்றைப் பேப்பர் கையில இருந்ததினால தானே நீங்க அதைக் கண்டு பிடிச்சு கேள்வி கேட்கறிங்க.. அதைக் கப்பல் செஞ்சு விட்டிருந்தா உங்களுக்கு கேள்வி கேட்க புரூப் இல்லாம போயிருக்குமில்ல அங்கிள்...?"
மீரா கேட்ட கேள்வியில் இமைக்காமல் அவளையே பார்த்தார் வாகீசன்.. அவர் கண்களுக்கு கண்களில் கருப்புத் துணியைக் கட்டியபடி நியாயத் தராசை ஏந்தியிருக்கும் நியாய தேவதையின் உருவம் தென்பட்டது..
நிச்சயமாக அது மீராவின் உருவமல்ல..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே. -3
வந்தாள் மகாலட்சுமியே. -3
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahalakshmiye-3.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahalakshmiye-3.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy