வந்தாள் மகாலட்சுமியே..-8

8 பாகீரதியின் அண்ணனான வரதராஜன் அதைச் சொன்னார்.. கவர்ண்ட்மெண்ட் வேலை பார்க்கிறோம் என்ற வாகீசனின் நம்பிக்கையை அவர் தவிடு பொடியாக்கினார்...


8

பாகீரதியின் அண்ணனான வரதராஜன் அதைச் சொன்னார்.. கவர்ண்ட்மெண்ட் வேலை பார்க்கிறோம் என்ற வாகீசனின் நம்பிக்கையை அவர் தவிடு பொடியாக்கினார்.. யாரைக் கேட்டு அவரின் தங்கையை கண்டவர்களின் முன்னால் பெண் பார்க்க என்று நிறுத்தி வைத்தீர்கள் என்று அவர் பெற்றோரிடம் கோபப்பட்டதாக கேள்விப் பட்ட போது..
'நான் கண்டவனா..?' என்ற முதல் புயல் வாகீசனின் மனதில் எழுந்து சுழன்று அடிக்க ஆரம்பித்தது..
"பாகீரதிக்கு அண்ணன் நானுப்பா.. என் தங்கையை எப்பேற்பட்ட இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுக்கனும்னு நான் கனவு கண்டுக்கிட்டு இருக்கேன் தெரியுமா..? பரம்பரை கோடிஸ்வரன் வீட்டில் சம்பந்தம் பேசிட்டு வந்திருக்கேன்.. நீங்க என்னடான்னா மாதச் சம்பளம் வாங்குகிற மாப்பிள்ளையைப் பார்த்து வைச்சிருக்கீங்க.. இதுக்கா என் தங்கையை கண்ணுக்குள் வைச்சு நான் வளர்த்தேன்..?"
"நாங்க பார்க்கலைப்பா.. அவங்களாத்தான் பெண் கேட்டு வந்தாங்க.."
"வந்தா.. நீங்க என்னைக் கேட்காம என் தங்கையை அவங்க முன்னாலே நிப்பாட்டிருவீங்களா..?"
"மாப்பிள்ளைக்கு லீவு கிடைக்காதுன்னு சொன்னாங்கப்பா.."
"அதைப்பத்தி நமக்கென்னப்பா கவலை..?"
"கவர்ண்ட்மெண்டில ஆபிசரா வேலை பார்க்கிறார்ன்னு நினைச்சோம்ப்பா.. நல்ல இடம்.. தானா அமையும்போது தட்டிக் கழிச்சிரக் கூடாதுன்னுதான்.. மத்தபடி உன் தங்கையை உன் அனுமதியைக் கேட்காம கல்யாணம் பண்ணிக் கொடுத்துருவோமா..?"
பாகீரதியின் அப்பா மகனுக்கு விளக்கம் சொன்னதை.. பக்கத்திலிருந்து பார்த்தவர்கள் சொன்ன போது வாகீசனின் பெற்றோர் அந்த இடம் வேண்டாமென்றுதான் சொன்னார்கள்..
"நமக்கு ஆயிரம் பெண் கிடைக்கும்ப்பா.."
'அவள் கிடைப்பாளா..?'
வாகீசனின் மனதில் பாகீரதி வந்தாள்.. ஏனென்று தெரியவில்லை.. அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவருக்கு அவள்தான் என்று ஏன் அவருக்குத் தோன்றிப் போனது என்று இதுவரை அவருக்குத் தெரியவில்லை.. அவரது வாழ்க்கைத் துணையாக அவள்தான் வர வேண்டும் என்று அவர் தீவிரமாக இருந்தார்..
"இப்போதைக்கு கல்யாணப் பேச்சை நிறுத்தி வையுங்கப்பா.." என்று சொன்னார்..
"பாருடா வாகீசா.. இப்பவே தழைஞ்சு போனா காலம் பூராவும் நாம தழைஞ்சுதான் போக வேண்டியிருக்கும்டா.. சொல்லிட்டேன்.. நீ பெரிசுன்னு நினைக்கிற பெண் வீட்டிலே பெண் எடுக்கிறதுதான் உனக்கு நல்லது.." வாழ்ந்து பார்த்த வாகீசனின் அம்மா புத்தி சொன்னாள்..
வாகீசன் அதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. பிடிவாதமாக இருந்தார்.. பாகிரதிக்கு வேறு இடத்தில் திருமணமாகி விட்டதா என்று கேட்டார்.. அப்படி ஆனபின்பு வேறு ஒரு பெண்ணைப் பெண் பார்க்கப் போவதைப் பற்றி யோசிக்கலாம் என்று சொன்னார்..
"அப்பவும் யோசிக்கத்தான் செய்வியா..?" வாகீசனின் அப்பா எகிறிக் குதித்தார்..
அவரின் அம்மாவோ அவள் பிள்ளை பெற்ற நேரம் சரியானதல்ல என்று சொன்னாள்..
இப்படியெல்லாம் அவர் வீட்டில் களேபரம் நடந்து கொண்டிருக்க.. பாகீரதியின் அண்ணனோ முழு மூச்சாக அவருடைய பணக்கார நண்பனுக்குத்தான் பாகீரதியைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார்..
வரதராஜன் வைத்ததுதான் பாகீரதியின் வீட்டில் சட்டம் என்று கேள்விப்பட்ட பின்பு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் வாகீசனுக்குப் போய் விட்டது.. இந்தக் கோபத்தை அவர் சுப்பீரியரிடம் காட்டிவைக்க.. அவர் சேர்த்து வைத்திருந்த கடுப்பையெல்லாம் ஒன்று திரட்டி.. வாகீசனை தண்ணியில்லாக் காட்டிற்கு மாற்றும் மாறுதல் உத்தரவாக நீட்டினார்..
'பாகீரதியே கிடைக்கலை.. தண்ணியிருக்கிற ஆபிஸ் கிடைத்தால் என்ன.. கிடைக்காமல் போனால் என்ன..?'
விரக்தியின் உச்சவிளிம்பில் இருந்த வாகீசன்.. தண்ணியில்லாக் காட்டுக்குப் போக ஆயத்தமான போது.. அவர் வீட்டுக் கதவைத் தட்டினார் வரதராஜன்.. அவர் கையில் வாகீசன் அப்போது வேலை பார்த்த ஊரைவிட அதிகமான தண்ணீர்வளம் கொண்ட ஊருக்கான மாறுதல் உத்தரவு இருந்தது..
"ஹைலெவலில் ஆள் பிடிச்சேன்.. உங்க டிரான்ஸ்பர் ஆர்டரை சேன்ஜ் பண்ணினேன்.." இறுக்கமான முகத்துடன் மாறுதல் உத்தரவை நீட்டினார்..
அதை வாங்கிப் பார்த்த வாகீசன் 'ஆஹா' என்று மகிழ்ந்து விடவில்லை.. மாறாக வரதராஜனைவிட இறுக்கமான முகத்துடன்..
"இதை எதுக்காக நீங்க செய்யனும்..?" என்று கேட்டுவைத்தார்..
"தலை எழுத்து.." வெறுப்புடன் சொன்னார் வரதராஜன்..
"புரியலை.."
"ஆற்றிலே தண்ணீர் அலைமோதிப் போகுது.. ஆனா.. வாய்க்கால் நீர்தான் வேணும்ன்னு என் தங்கை அடம் பிடிக்கிறா.. சொந்தபுத்தி இருக்கனும்.. இல்லைன்னா..புத்தி சொல்கிறவங்க பேச்சையாவது காது கொடுத்துக் கேட்கனும்.. ரெண்டும் இல்லைன்னா இப்படித்தான்.. தண்ணியில்லாக் காட்டுக்குப் போக வேண்டியவர்களோட டிரான்ஸ்பர் ஆர்டரைக் கேன்சல் பண்ணி தண்ணியிருக்கிற ஊராப் பாத்து டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுக்கனும்ங்கிற அவதிக்கு ஆளாக வேண்டியதுதான்.."
வரதராஜனின் உதாசீனப் பேச்சில் வாகீசனுக்கு எதுவோ புரிந்தது.. அவர் முகத்தில் வெளிச்சம் பரவியது..
"அப்படின்னா..?" ஆவலுடன் கேட்டார்..
"என் தங்கைக்கு உங்களைத்தான் பிடிச்சிருக்காம்.. அவளைப் பார்த்தவுடன் அந்த இடத்திலேயே பிடிச்சிருக்குன்னு நீங்க சொல்லிட்டிங்களாம்.. சீர் செனத்தி, நகை நட்டுன்னு எதைப் பத்தியும் பேசலையாம்.. எப்பக் கல்யாணத்தை வைச்சுக்கலாம்ன்னு கேட்டிங்களாம்..இது அவளுக்கான கௌரவமாம்.. கூறு கெட்டவ.. கௌரவம் மட்டும் போதுமா..? காசு பணம் வேண்டாமா..?" நெருஞ்சி முள்ளாய் நிரடினார் வரதராஜன்..
அதில் வாகீசனுக்கு ரோசம் வந்து விட்டது..
"ஹலோ.. இங்கே யாரும் காசு பணம் இல்லாம வெறும் கையோடு இல்லை.. ஸ்டேட் கவர்ண்மெண்டில ஆபிசர் போஸ்டில இருக்கிறேன்.. அதை மறந்துட்டுப் பேச வேணாம்.." கொதித்தார்
"ஓ.." வரதராஜனின் கண்கள் இடுங்கின..
"நீங்க ஆபிசராய் வேலை பார்க்கிற பெருமையைத் தான் இந்த டிரான்ஸ்பர் ஆர்டர் சொல்லுதே.. வருசத்துக்கு ஒரு ஊராமே.."
அன்று வரதராஜன் சொன்னதை வாய்க்கு வாய் பாகீரதி சொல்லிக் காண்பித்தாள்.. முத்தாய்ப்பாக..
"ம்ஹீம்.. அப்பவே என் அண்ணன் சொன்னதைக் கேட்டிருக்கனும்.. சொந்தப்புத்திதான் இல்லாமப் போச்சுன்னா.. சொல்கிறவங்க புத்தியையாவது கேட்கிறதுக் கென்ன..?" என்று வாகீசனிடமே கேட்டு வைத்தாள்..
அப்படி அவள் கேட்கும் தருணங்களில் எல்லாம் வாகீசனுக்குள் கிளம்பும் கொலைவெறியை வார்த்தைகளில் வர்ணித்து விட முடியாது.. ஏன் பாகீரதி அவருடைய அண்ணன் பேச்சைக் கேட்கவில்லை என்று கேட்டு விடவும் அவரால் முடியாது.. அதற்காக அவள் பேசும் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு பேசாமலிருக்கவும் முடியாது..
"இப்ப என்னடி கெட்டுப் போச்சு..?" என்பார்..
"எதுதான் கெட்டுப் போகலை..?" பாகீரதி போர்க் கொடியை உயர்த்துவாள்..
வாழ்நாள் முழுவதும் இந்த வார்த்தைகளைக் கேட்க வைத்து விட்ட கொடுமைக்காக வரதராஜனை மனமாற அவர் வெறுத்தார்.. வேண்டா வெறுப்பாக திருமண ஏற்பாடுகளை செய்தபடி..
"ம்ஹீம்.. என் தங்கையின் தலையெழுத்து இப்படியா ஆகனும்..? என்று அங்கலாய்த்த வரதராஜன் மைத்துனன் சீர் செய்ய வந்தபோது முகத்தைத் திருப்பிக் கொண்டே வாகீசன் கையை நீட்டினார்.."
அவரைவிட அதிகமாக முகத்தைத் திருப்பியபடியே வரதராஜனும் மோதிரத்தைப் போட்டு விட்டார்.. அண்ணன் வீட்டு விருந்துக்கென்று பூனாவுக்கு பாகிரதி கிளம்பிய போது லீவு இல்லை என்று அவரால் முடிந்தவரை தள்ளிப் போட்டார்..
"என்ன ஆச்சு பாகீ..? உன் புருசனுக்கு நான் வேண்டும்னா லீவை வாங்கிக் கொடுக்கவா..?"
வரதராஜன் தங்கைக்குப் போன் பண்ண.. நீ லீவு வாங்கிக் கொடுத்து நான் அதை அனுபவிப்பதா என்று ரோசப்பட்டுப் போன வாகீசன் அன்றே லீவு வாங்கிக் கொண்டு பூனாவுக்கு கிளம்பி விட்டார்..
வரதராஜனின் மனைவி யாமினி அன்பாக இருந்தாள்.. வாகீசனிடம் அண்ணா.. அண்ணா என்று பாசமழையைப் பொழிந்தாள்.. அப்போது யதுநந்தனுக்கு பத்து வயது.. அவனையும் குறை சொல்ல முடியாது.. அத்தையின் கணவர் என்று பாசமாகத்தான் இருந்தான்.. வாகீசனால் தான் அவர்களிடம் ஒட்ட முடியாமல் போனது..
வரதராஜனும் வீம்பு பிடித்தவராகத்தான் இருந்தார்..
"டிரெயினில் வந்தீங்களா..? ம்ஹீம்.. என் வார்த்தயக் கேட்டிருந்தா என் பிரண்ட் பிளைட்டில பறக்க வைச்சிருப்பான்.." என்றுதான் தங்கையையும், தங்கை கணவனையும் வரவேற்றார்..
அப்படியே திரும்பிப் போய் விடலாமா என்று யோசித்தார் வாகீசன்.. பாகீரதியின் கோபத்திற்கு அஞ்சியவராக அது போன்ற தடாலடி வேலைகளைச் செய்யாமல் அமைதிகாத்தார்..
அப்படிப்பட்ட விருந்தைக் கொடுத்தவர் வரதராஜன்..
பொதுவாக வாகீசனுக்கும் தடலாடி வேலைகளுக்கும் காத தூரமுண்டு.. அப்பேற்பட்ட அமைதியின் சிகரமான வாகீசனையே சூப்பர் ஸ்டாரின் ரேன்ஜீற்கு வீரமாக யோசிக்க வைத்த பெருமை வரதராஜனையே சேரும்..
"வாடகை வீட்டிலேயா குடியிருக்கீங்க..?" என்று அவர் கேட்கும் போதே.. அவரின் அடுத்த வார்த்தைகள் எதுவாக இருக்கக் கூடும் என்பதை யூகித்து விடுவார் வாகீசன்..
'ம்ஹீம்.. என் பிரண்டுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தா.. இந்நேரத்துக்கு உன்னை மாளிகையிலே குடிவைச் சிருப்பான்னு என் அருமை மச்சினன் சொல்லப் போறான்..'
வாகீசன் நினைத்து முடிப்பதற்குள் வரதராஜன் அதைத்தான் சொல்வார்.. அவர் பார்வை துக்கத்துடன் தங்கையைப் பார்க்கும்.. அவர் விடும் பெருமூச்சில் வாகீசன் பல்லைக் கடிப்பார்..
"மாளிகையில வாழ வேண்டிய என் தங்கச்சி.. இப்படி வாடகை வீட்டிலே அல்லாடுதே.. ம்ஹீம்.. எப்படி வாழ வேண்டிய பொண்ணு.."
வாகீசனுக்கு துயரமாக இருக்கும்.. எப்படி இருந்த பாகீரதி இப்படி ஆகி விட்டாளே என்று அவளுடைய பிறந்த வீட்டினர் சொல்லும் அளவிற்கா அவளை அவர் பராமரிக்கிறார்..?
வாங்குகிற சம்பளத்தை முனை முறியாமல் அவள் கையில் கொடுத்து விட்டு பாக்கெட்மணியாக தினந்தோறும் அவள் கொடுக்கும் பணத்தை மூச்சு விடாமல் வாங்கிக் கொள்ளும் மாமனிதர் அவர்..
அந்தப் பணத்தை அவள் என்ன செய்தாள்.. எப்படி செலவு செய்தாள் என்ற எதையும் கேட்காத மகா மனிதர் அவர்..
அப்படிப்பட்டவரைப் பார்த்துத்தான் வரதராஜன் கொத்து புரோட்டா போடுவார்.. அது என்னவோ.. தங்கையின் கணவரை கண்டு விட்டால் போதும்.. அவருக்கு அந்த பணக்கார நண்பனின் நினைவு வந்து விடும்..
"நகமும் சதையுமா இருந்தோம்.. இப்ப என்னைக் கண்டாலும் காணாத மாதிரி போறான்.. உயிர் நண்பன்.. தங்கச்சியாலே அந்த நட்பு உடைஞ்சு போச்சு.."
இப்படிப் புலம்புகிறவருக்கு எந்தப் பசையைக் கொடுத்து இதை வைத்து உடைந்த உன் நட்பை ஒட்டிக் கொள் என்று செல்வதென்று தெரியாமல் கதிகலங்கிப் போவார் வாகீசன்..
அப்படிப்பட்ட அருமை மைத்துனனின் மகனான யதுநந்தன் என்னதான் தங்கம்.. தங்கமாக இருந்த போதிலும் அவன் வரதராஜனின் மகன் என்பதினாலேயே வாகீசனால் அவனிடம் ஒட்டி உறவாட முடிவதில்லை..
அத்தையின் வீடென்று வருபவனிடம்..
"என்னப்பா..?" என்று தெருவில் போகிற மூன்றாம் மனிதனிடம் கேட்டு வைப்பதைப் போல கேட்டு வைப்பார் வாகீசன்..
யதுநந்தனுக்கு வாகீசனின் குணம் அத்துபடி.. அவன் இது போன்ற வரவேற்பையெல்லாம் கண்டு கொள்ளவே மாட்டான்..
"என்ன மாமா.. இந்த வருசமாவது புரமோசன் கிடைக்குமா..?" என்று வெகு இயல்பாக கேட்டு அவன் வரதராஜன் பெற்ற மகன் என்பதை உறுதிபடுத்தி வைப்பான்..
'விதையொன்னு போட்டா.. செடி ஒன்னா முளைக்கும்..?' பொறுமித் தவிப்பார் வாகீசன்..
பொதுவாக யதுநந்தன் வந்தால் அதிகப்படியாக ஒருவாரம் தான் அவர் வீட்டில் தங்குவான்.. அதற்கு மேல் அவன் அவர் வீட்டில் தங்கியதாக சரித்திரம் இல்லை..
'இந்த முறை எத்தனை நாளோ.. ஒரு வாரத்துக் குள்ளேயே கிளம்பிட்டாத் தேவலாம்..'
ஏழுநாள்களை.. ஏழுகடல், ஏழுமலைகளைத் தாண்டுவதைப் போல எப்படித் தாண்டுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார் வாகீசன்..
யதுநந்தனோ.. அவற்றையும் தாண்டி அங்கே நீண்ட நாள்கள் தங்கப் போவதாக அறிவிப்பு செய்தான்.. அதில் வாகீசன் அரண்டு போனார்..
"சென்னையிலே எங்க கம்பெனியோட பிராஞ்ச் ஒபன் ஆகியிருக்கு அத்தை.. இங்கே ஒரு பில்டிங் காண்ட்ராக்ட் எடுத்திருக்கோம்.. அதுக்கான இன்ஜார்ஜ் நான்தான்..இந்த பில்டிங் முடிகிறவரைக்கும் சொன்னையிலதான் ஸ்டே பண்ணுவேன்.."
யதுநந்தன் நாசுக்காக அவர் வீட்டில் தங்கப் போவதில்லை என்பதை வாகீசனுக்கு அறிவுறுத்தினான்.. அதில் அரண்டிருந்த வாகீசனின் முகத்தில் இருள் விலகி.. ஒளிவந்தது.. வந்த ஒளியை இருட்டடிப்பு செய்வதற் காகவே கங்கணம் கட்டிக் கொண்டு பாகீரதி ஊடே புகுந்தாள்..
"என்னது..? சென்னையிலே ஸ்டே பண்ணப் போறியா..? ஏன்..? நம்ம வீட்டில் ஸ்டே பண்ணப் போறேன்னு சொல்கிறதுக்கு என்ன..? உனக்குப் பேசத் தெரியாதா..?"
"விடு பாகி.. அவனுக்கு பிரைவஸி வேணும்னு தோணியிருக்கலாம்.."
"உங்களைக் கேட்டேனா..?"
"மாமாவை எதுக்கு அத்தை முறைக்கறிங்க..?"
"இந்த மனுசனுக்கு ஆக்கிப் போட்டு ஆளாக்கினதை நினைச்சு நொந்து போய் முறைக்கிறேண்டா.."
"ஏண்டி..? நான் என்ன பண்ணினேன்..?"
"பேசாதீங்க.. எனக்கு நல்லா வந்திரும் வாயில.. நான் இருக்கிற ஊரில என் அண்ணன் மகன் வேறொரு இடத்தில தங்கறதா இருந்தா நான் உயிரோடு இருக்கிறதுக்கு என்ன அர்த்தம்..?"
"அத்தை..!"
"பாகீ..!"
பாகீரதி எதுவும் பேசாமல் எழுந்து போய் விட்டாள்..
யதுநந்தன் அந்த வீட்டில்தான் தங்கியாக வேண்டும் என்பதை யது நந்தனும், வாகீசனும் புரிந்து கொண்டவர்களாக பெருமூச்சு விட்டார்கள்..
யதுநந்தன் ரோசக்காரன்தான்.. ஆனால் அந்த ரோசம் பாகீரதியின் பாசத்துக்கு கட்டுப்பட்டது.. வாகீசனுக்கு யதுநந்தனைப் பிடிக்காதுதான்.. ஆனால்.. அந்த யதுநந்தனின் அத்தையான பாகீரதிதான் அவரின் உயிர்..!


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே..-8
வந்தாள் மகாலட்சுமியே..-8
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahaalakshmiye-8.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahaalakshmiye-8.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy