வந்தாள் மகாலட்சுமியே.. -7

7 சமையலறையிலிருந்து வந்த விதம் விதமான வாசனைகள் வாகீசனுக்கு நாக்கில் உமிழ் நீரைச் சுரக்க வைத்தன.. ' அண்ணன் மகனை கண்ணில் கண்டதும்...


7

சமையலறையிலிருந்து வந்த விதம் விதமான வாசனைகள் வாகீசனுக்கு நாக்கில் உமிழ் நீரைச் சுரக்க வைத்தன..
'அண்ணன் மகனை கண்ணில் கண்டதும்... சமைக்கிறதில் இருக்கிற அத்தனை திறமைகளையும் காட்டுகிறா போல..' வாகீசன் நினைத்துக் கொண்டார்..
எப்படியோ போகட்டும்.. புல்லுக்கு இறைக்கிற நீரில் சிறிதளவாவது இந்த நெல்லுக்கும் கிடைத்து விடாதா என்று மனதை சமாதானப் படுத்திக் கொண்டு.. 'சாப்பிட வாங்க..' என்ற பாகீரதியின் அழைப்பிற்காக காத்திருந்தார்..
"அம்மா.. அத்தான்கிட்ட பேஸ்ட்.. பிரஷ்.. சோப்புன்னு எல்லாம் இருக்குதாம்.." சுரேஷ் மாடிப்படிகளில் பாய்ந்தோடி வந்தான்..
"அதைச் சொல்லு.. அவன் இதில எல்லாம் கட்டு திட்டமாக இருக்கிறவனாச்சே.. அத்தை வீட்டிலே சும்மா கை நனைக்கக் கூடாதுன்னு ஒன்னுக்குப் பத்தா அவன் தான் வாங்கிப் போட்டுட்டு போவானே தவிர.. இந்த வீட்டில இருந்து ஓசியா ஒரு துரும்பைக் கூட எடுத்து யூஸ் பண்ண மாட்டானே.. மத்ததுக அப்படியா இருக்குதுக..?"
பாகீரதியின் 'மத்ததுக' யார், யாரைக் குறிப்பிடும் சொல் என்பதை அறிந்து வைத்திருந்த வாகீசன் அடங்கிப் போனார்..
அது என்னவோ யதுநந்தனைப் பொறுத்தவரை அவர் எதை நினைத்தாலும் அது அவருக்கேதான் திரும்பி வந்து சேர்ந்து தொலைக்கும்..
யதுநந்தன் கண்டிப்பானவன்.. என்னதான் சொந்த அத்தையின் வீடென்றாலும் அங்கே தங்க கணக்குப் பார்ப்பான்.. அவனுக்கான செலவை பணமாக கொடுத்தால் பாகீரதி அவனை ஒரு வழி பண்ணிவிடுவாள் என்பதினால் துணிகளாகவோ.. நகைகளாகவோ வாங்கி பரிசளித்து விட்டுப் போய் விடுவான்.. அந்தப் பரிசுகளின் பெறுமானம் அவனுக்கான செலவைவிட பத்து மடங்கு அதிகமானதாக இருக்கும்..
"ஏண்டா இப்படி..?" பாகீரதி நெற்றிக் கண்ணைத் திறந்தால்..
"உங்க அண்ணன் கொடுத்தாத்தான் அது சீதனமா அத்தை..? அண்ணன் மகன் கொடுத்தால் சீதனமில்லையா..?" என்று மடக்கி விடுவான்..
தாய் வீட்டுச் சீதனத்தில் பெருமை கொள்ளாத இந்தியப் பெண்ணுண்டா..?
பாகீரதி மறுக்க முடியாமல் நெகிழ்ச்சியுடன் யதுநந்தன் கொடுக்கும் பரிசுகளை வாங்கிக் கொள்வாள்..
'பார்த்தீங்கள்ல..'
அவள் விழிகளில் தெரியும் அக்கினி கணையில் வாகீசன் வாய்மூடி அடங்கிப் போவார்..
யதுநந்தனின் ரோசமும்.. கண்டிப்பும் அப்பேற்பட்டது..
அந்த யதுநந்தனை ஏதேனும் ஒரு விசயத்திற்காகவது தன்னிடம் நன்றிக்கடன்பட வைத்துவிட வேண்டுமென்று வாகீசன் ஆனமட்டும் முயற்சி செய்து பார்த்தார்.. நடக்கவேயில்லை..
என்னதான் அவர் மலையைப் புரட்டுவதைப் போல பகீரதப் பிரயத்தனங்களைச் செய்தாலும் அவற்றை 'ஊப்..' என்று ஒரு நொடியில் ஊதித் தள்ளி விட்டு அவரை அவனிடம் நன்றிக்கடன் பட வைத்து விடுவான் யதுநந்தன்..
"மாமா உங்களுக்கு ராம்நாட்டுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் போடப் போறாங்களாமே..?"
"உனக்கும் தெரிஞ்சுருச்சா..? என்னத்தைச் சொல்லடா யது.. இந்த மனுசனுக்கு சாமர்த்தியமே பத்தாது.. யார் எக்கேடு கெட்டா இவருக்கென்ன..? எப்பப் பார்த்தாலும் சுப்பிரியர்கிட்ட மோதி டிரான்ஸ்பர் ஆர்டரும் கையுமா வந்து நிக்கிறாரு.."
"மாமா யார் வம்புக்கும் போக மாட்டாரே அத்தை.."
"வம்பு இவரைத் தேடி வந்து தொலைக்குது.. அப்படி வம்புக்கு இவர் மேலே என்ன காதல்ன்னே தெரியலைடா யது.."
"ஹா.. ஹா.."
யதுநந்தனின் சிரிப்பில் வாகீசனின் தன்மானம் அடிவாங்கும்.. அந்தச் சிரிப்பை யதுநந்தனைப் பெற்ற வரதராஜனே சிரிப்பதைப் போல அவருக்கு இருக்கும்..
"நீ சிரிக்கிற.. வருசத்துக்கொரு ஊருக்கு பெட்டியைக் கட்டிக்கிட்டு குடித்தனம் மாறுகிறதில இருக்கிற ளொள்ளைப் பத்தி உனக்கென்ன தெரியும்..? இதில பிள்ளைகளுக்கு வேற ஸ்கூலில் இடம் வாங்கனும்.. வீட்டைக் கூட பாத்திரலாம்.. ஸ்கூலில் இடம் பாக்க என்ன பாடுபடனும் தெரியுமா..?"
"கவலையை விடுங்கத்தை.. மாமாவோட டிரான்ஸ்பர் ஆர்டரைக் கேன்சல் பண்ணியாச்சு.."
யதுநந்தனின் அறிவிப்பில் வாகீசனின் மனதுக்குள் அதிர்வுவரும்..
'திரும்பவும் இவன்கிட்ட நன்றிக்கடன் படனுமா..?'
அதற்கு தன்ணியில்லாக் காட்டிற்கு பயணமாகி விடுவதே சாலச் சிறந்தது என்றுதான் வாகீசனுக்குத் தோன்றும்.. அப்படித் தோன்றும் ரோசத்தை பாகீரதியிடம் அவரால் பகிர்ந்து கொள்ள முடியுமா..?
"அப்படியா சாமி.. தண்ணியில்லாக் காட்டுக்கு நீங்க போங்க.. தண்ணியிருக்கிற என் அப்பாம்மா வீட்டுக்கு நான் போறேன்.. டேய் பசங்களா.. பெட்டியைக் கட்டுங்கடா.." என்று பாகீரதி பிறந்த வீட்டுக்குக் கிளம்பி விட மாட்டாளா..?
அதிலும் அவர் பெற்ற அருந்தவப் புதல்வர்கள் தான் அது போன்ற வாய்ப்பிற்காக எப்போது.. எப்போது என்று காத்துக் கொண்டிருக்கிறார்களே.. பாகீரதி பெட்டியைக் கட்டச் சொன்னால்.. அதை எப்போதோ கட்டித் தயாராக வைத்திருப்பதாக அறிவித்து விடுவார்களே..
வாகீசனின் தன்மானமும், ரோசமும் ஒரு பெருமூச்சுக்குள் அடங்கி விடும்.. பாகீரதியின் முகத்தில் மத்தாப்பூ ஒளிரும்..
"எப்புடிடா..?"
அவள் குதூகலிக்கும் போது.. இதுபோன்ற குதூகலங்களை ஏன் அவரால் அவர் மனைவிக்குத் தரமுடியவில்லை என்ற துயரம் அவர்மனதில் வந்து நிற்கும்..
அப்படிப்பட்ட தீரன்தான் யதுநந்தன்.. என்னதான் அவன் திரும்பத் திரும்ப.. அவன் உயரத்தை வாகீசனுக்கு உணர்த்திக் கொண்டேயிருந்தாலும் அவனை அந்த உயரத்தை விட்டு ஒரு நொடியாவது இறக்கி விட வேண்டுமென்று வாகீசன் கங்கணம் கட்டிக் கொண்டே இருப்பார்..
அதுபோன்ற ஒர் சூழ்நிலையை காலம் ஓர்நாள் அவர் கைக்குள் கொண்டு வந்து விடாதா என்று கொக்கைப் போல அவர் தவமிருந்தார்..
அவருக்குப் பசித்தது.. சமைத்த உணவு வகைகளை பாத்திரத்தில் நிரப்பி டைனிங் டேபிளில் பரத்தி வைத்தாள் பாகீரதி.. சாப்பிட அழைத்து விடமாட்டாளா என்று அவர் திரும்பிப் பார்த்தார்.. அவளோ அவரைக் கவனிக்காமல் மாடிப்படிகளைப் பார்த்து சத்தம் போட்டாள்..
"டேய் மகேஷ்.. சுரேஷ்.. அத்தானை சாப்பிட வரச் சொல்லுங்க.. சூடு ஆறப் போகுது.. ஆறினா நல்லா யிருக்காது.."
அந்தச் சூட்டுடன் வாகீசனுக்கு டிபனை போட்டால் அவர் சாப்பிட மாட்டேனென்று சொல்லி விடுவாரா என்ன..? அவருக்கு மட்டும் சூடு ஆறிப் போனால் நன்றாக இருக்குமா..?
அவர் கேட்க நினைப்பதற்குள் பாகீரதி சமையலறைக்குள் போய் விட்டாள்.. வாகீசனின் பிள்ளைகள் பாதுகாவலர்களைப் போல இரண்டு பக்கமும் தொடர்ந்து வர.. 'பாட்ஷா' ஸ்டைலில் யதுநந்தன் மாடியிலிருந்து இறங்கினான்..
'பாருடா.. கட்டினவதான் அப்படின்னா.. நான் பெத்ததுக அவளுக்கு மேலே இருக்குதுக..' வாகீசன் மனதுக்குள் புழுங்கினார்..
"அம்மா.. அத்தான் வந்தாச்சு.."
ஹாலில் அமர்ந்திருக்கும் அப்பாவை கண்டு கொள்ளாமல் குரல் கொடுத்தான் மகேஷ்...
'உன்னைப் பெத்ததுக்கு நான் ஒரு உலக்கையைப் பெத்திருக்கலாம்டா.. மகனே..!' பெற்ற மகனை மனதுக்குள் சிலாகித்துக் கொண்டார் வாகீசன்..
"வந்துட்டியா யது.." பாகீரதி சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்..
"நீங்களும் உட்காருங்கடா.."
மகன்களை அதட்டி விட்டு மூன்று பேருக்கும் தட்டை வைத்துப் பரிமாற ஆரம்பித்தாள்..
அன்று ஞாயிறு.. விடுமுறை தினங்களில் வாகீசன் மெதுவாகத்தான் சாப்பிடுவார் என்றாலும்.. வாகீசனை பாகிரதியின் செயல் பாதித்தது.. அதற்கு முன்பும் விடுமுறைதினங்களில் அவள் பிள்ளைகளைத்தான் முதலில் சாப்பிடச் செய்திருக்கிறாள் என்றாலும் அன்று வாகீசன் மனம் பொருமினார்.. மழை நேரத்தின் குளிரினால் உருவான பசியின் காரணமா.. இல்லை.. அவருக்குப் பிடிக்காத வரதராஜன் பெற்ற மகனின் வருகை காரணமா என்று புரியாமல் அவர் மனதுக்குள் புயலடித்தது..
"மாமா.. நீங்களும் சாப்பிட வாங்க.. அத்தை ..மாமாவுக்கும் தட்டைப் போடுங்க.."
யதுநந்தனின் பரிந்துரையில் யார் வீட்டில்.. யார்.. யாருக்கு உபசரனை செய்வது என்ற கோபம் வாகீசனுக்குள் மேலோங்கியது..
'இவன் கூப்பிட்டு நான் போகிறதா..?' வாகீசனின் புயலடித்த மனது பொங்கியது..
"'சன்டே'ன்னா நான் லேட்டாத்தான் சாப்பிடுவேன்ப்பா.. நீ சாப்பிடு.." பசியை அடக்கிக் கொண்டு சொன்னார்..
அதற்குள் அவருக்கும்.. தட்டை வைத்துப் பறிமாறிவிட்ட பாகீரதி..
"இதுக்கு ஒரு வழியைச் சொல்லுங்க.." என்று எரிச்சல்பட்டாள்..
"எதுக்கு வழி சொல்லச் சொல்கிறாங்க..?" யதுநந்தன் புருவங்களை உயர்த்த..
"இந்த டிபனுக்குத்தான் வழி சொல்லச் சொல்றாங்க அத்தான்.." என்று நிமிர்ந்து பார்க்காமல் பரோட்டாவை மொக்கியபடி சொன்னான் மகேஷ்..
யதுநந்தனுக்கு சிரிப்பு வந்து விட்டது.. திரைப் படங்களில்தான் அவன் இதுபோன்ற வசனத்தைக் கேட்டிருக்கிறான்.. ஒன்று கழுத்தில் கிடக்கும் தாலியைத் தூக்கிக் காட்டும் கதாநாயகி..
'இதுக்கு ஒரு வழியைச் சொல்லுங்க..' என்று நியாயம் கேட்பாள்..
இல்லையென்றால்.. கையில் இருக்கும் குழந்தையைக் காட்டி அதற்கொரு வழியைச் சொல்லி விட்டுப் போகும்படி கேட்பாள்..
இவை இரண்டும் இல்லாமல் உணவுக்காக இது போன்ற வசனத்தை உபயோகப் படுத்துவதை அவனுடைய அத்தையின் வீட்டில்தான் யதுநந்தன் கேட்கிறான்..
"நீங்க வேற அத்தை.." அவன் வாய் விட்டுச் சிரித்தான்..
'ஆமாண்டா.. உன் அத்தை வேற.. நான் வேறதான்.. அதைக் கண்டு பிடிச்சுச் சொல்லத்தான் மும்பையில இருந்து வேலை மெனக்கெட்டு பெட்டியைக் கட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு வந்தியா..?' வாகீசன் மனதுக்குள் பொருமித் தவித்தார்..
"அதான் டிபனுக்கு ஒரு வழியைச் சொல்லுங்கன்னு அத்தை பஞ்சாயத்தை கூட்டிட்டாங்களே மாமா.. நீங்கதான் வந்து டிபனுக்கு ஒரு நியாயத்தைச் செய்யக் கூடாதா..?" சிரித்துக் கொண்டே யதுநந்தன் அழைத்தான்..
'முடியாது போடா..' என்று சொல்லத்தான் வாகீசனுக்கு ஆசை வந்தது..
எங்கே..? அதை வாய்விட்டுச் சொன்னால் அவருடைய மனைவி பத்ரகாளியாகி விட மாட்டாளா..?
சும்மாவே அவரைப் பொறுத்தவரையில் பாகீரதி உக்கிர சொரூபமாகத்தான் இருப்பாள்.. இதில் வேறு அவளுடைய அண்ணன் மகனும் விருந்தாளியாக வந்திருக்கிறான்.. பலமான கூட்டணியில் அவள் பத்திரகாளியாகத்தானே மாறுவாள்..?
எதற்கு வம்பு என்று வாகீசன் சாப்பிடப் போனார்.. உக்கிரபாகிரதியின் முகத்தைப் பார்த்தாலே அவருக்குத் தாங்க முடியாது.. இதில் பத்திரகாளி சொரூப பாகிரதியை வேறு அவர் பார்க்க வேண்டுமா..?
விபரீதத்திற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்காமல் அவரிடம் வழியைக் கேட்டுக் காத்து நிற்கும் புரோட்டா குருமாவையும், இடியாப்பம் தேங்காய் பாலையும் வயிற்றுக்குள் தள்ளுவதுதான் சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார்..
"அப்புறம் யது.. உன் வேலையெல்லாம் எப்படிப் போகுது..?" யதுநந்தனின் புரோட்டாவிற்கு குருமாவை ஊற்றியபடியே பாகீரதி கேட்டாள்..
"சூப்பராப் போகுது அத்தை.." என்றான் அவன்..
இதுபோன்ற விசாரிப்புகளை ஏன் பாகீரதி அவரிடம் கேட்பதில்லை என்ற சிணுங்கல் வாகீசனின் மனதில் வந்தது.. சின்னக்குழந்தையைப் போல அவர்மனம் அடம்பிடித்தது..
"மும்பையிலே கிளைமேட் எப்படியிருக்கு அத்தான்..?" என்றான் மகேஷ்...
சுரேஷீம் பெரியவனைப் போல மும்பையைப் பற்றிக் கேள்விகளைக் கேட்க.. அத்தையின் மகன்களுடன் அரட்டை அடித்தபடி சாப்பிட்டான் யதுநந்தன்..
வாகீசன் தனிமையாக உணர்ந்தார்.. அவர் மனைவியும், மகன்களும் யதுநந்தனுடன் பேசுவதில் ஆழ்ந்துவிட.. அந்த உரையாடலில் தன்னை இணைத்துக் கொள்ளவும் முடியாமல்.. வெறுமனே பார்வையாளராக இருக்கவும் முடியாமல் அவர் முள்ளின்மீது அமர்ந்திருப் பதைப் போலத் திணறினார்..
'இந்தக் கொடுமைக்கு தனியாவே உட்கார்ந்து சாப்பிட்டிருக்கலாம்..' காலங்கடந்த ஞானோதயம் வந்தது..
அதனால்தான் அவருக்கு பாகீரதி தட்டைப் போட வில்லையோ என்று தோன்றியது.. பேச்சு பேச்சாக இருக்க.. அவர் தட்டில் வேண்டியதைப் பரிமாறிக் கொண்டிருந்த பாகீரதி அப்படித்தான் நினைத்திருப்பாள் என்பதை அவரால் யூகிக்க முடிந்தது..
அந்த வகையில் பாகீரதி தங்கம்.. வாகீசனின் மனதில் தைத்திருக்கும் முள்ளைப் பற்றி அறிந்து வைத்திருப்பவள்.. அண்ணன் குடும்பத்துக்கும் அவருக்கும் இடையில் பாலமாக செயல்படாமல் இரண்டு உறவுகளையும் பேணிப் பாதுகாக்கும் வித்தையை அறிந்தவள்..
'எனக்குத்தான் அது இல்லாமப் போச்சு..' வாகீசன் பெருமூச்சுவிட்டார்..
அவரைச் சொல்லியும் குற்றமில்லை.. அவர் மனம் காரணமில்லாமல் பாகீரதியின் அண்ணன் வரதராஜனை வெறுக்கவில்லை.. பாகீரதியைப் பெண் பார்க்கப் போன வாகீசனுக்கு பாகீரதியைப் பிடித்து விட்டது.. அவருடைய பெற்றோரிடம் அப்போதே அவர் சம்மதத்தைச் சொல்லி விட்டார்.. பாகீரதியைப் பெற்றவர்கள்தான் தயங்கினார்கள்..
"எங்களுக்கு இருக்கிறது ஒரே மகன், மகள்ன்னு ரெண்டே பிள்ளைகள்தான்.. மூத்தவன் வரதராஜன் கல்யாணமாகி பெண்டாட்டி மகனோடு பூனாவில் வேலை பார்க்கிறான்.. அவன் இல்லாதப்ப பெண்ணு பார்க்க வரச்சொல்லவே எங்களுக்கு யோசனையாய் இருந்துச்சு.. நீங்கதான் மாப்பிள்ளைக்கு லீவு கிடைக்காது.. அவர் வந்திருக்கிறப்பவே பெண் பார்த்துட்டுப் போயிடட்டும்ன்னு கேட்டுக்கிட்டிங்க.. இப்பக் கல்யாணத்தை நிச்சயம் பண்ணனும்னா எங்க மகன்கிட்டக் கேட்டுட்டுத்தான் முடிவு சொல்லனும்.. ஏன்னா.. வரதராஜன் பிறந்து பதினாலு வருசம் கழிச்சு பாகீரதி பிறந்ததினால.. தங்கையை அவன் தூக்கிவளர்த்தவன்.."
பாகீரதியின் அப்பா குமரகுரு சொன்ன போது..
"அதனால் என்ன..?" என்றுதான் வாகீசன் சொன்னார்..
"குடும்பத்துக்கு தலைமகன்.. பாகீரதிக்கு அண்ணன்.. அவர் வராம கல்யாணம் பேசுகிறது சரியில்லைதான்.. எங்க பக்க சம்மதத்தை நாங்க சொல்லிட்டோம்.. நீங்க உங்க மகனைக் கலந்து பேசிட்டு நல்ல முடிவாச் சொல்லுங்க.. நாங்க நிச்சயம் பண்ணக் கிளம்பி வர்றோம்.." நம்பிக்கையோடுதான் வாகீசனின் அப்பாவும் சொன்னார்..
மாநில அரசாங்கத்தில் ஆபிசர் உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளைக்கு பெண் கொடுக்க மாட்டேன் என்று யாராவது சொல்லி விடுவார்களா என்ன..?




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே.. -7
வந்தாள் மகாலட்சுமியே.. -7
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahaalakshmiye-7.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahaalakshmiye-7.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy