வந்தாள் மகாலட்சுமியே. -2

2 தோட்டத்தில் இருந்த பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் வாகீசன்.. முண்டா பனியனும் , மடித்துக் கட்டிய வேட்டியுமாக தோள...


2

தோட்டத்தில் இருந்த பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார் வாகீசன்.. முண்டா பனியனும், மடித்துக் கட்டிய வேட்டியுமாக தோளில் கிடந்த துண்டை எடுத்து தலையைச் சுற்றி முண்டாசு கட்டி தண்ணீர் பைப்பை பிடித்தவரைப் பார்த்த பாகீரதி..
"அச்சு அசல் தோட்டக்காரனேதான்.." என்று சான்றிதழ் வழங்கி விட்டுச் சென்றாள்..
"போடி.."
மனைவியிடம் சிலுப்பி விட்டு கர்மமே கண்ணாக செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவர்..
"தோட்டக்காரரே.." என்ற அழைப்பில் திரும்பிப் பார்த்தார்..
அவர் வீட்டுக் காம்பவுண்டு கேட்டைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்தாள் ஒரு அழகான பெண்.. சீரான நாசியும்.. பிறை போன்ற நெற்றியுமாக.. வட்ட வடிவ முகத்துடன் இருந்தவளைப் பார்த்தவர்..
'இந்தப் பெண் யாரைக் கூப்பிடறா..?' என்று யோசித்தார்..
அதற்குள் அந்தப் பெண் அருகில் வந்திருந்தாள்.. அவளிடமே சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ளலாம் என்ற நினைவுடன் அவர் பேச வாய் திறந்தபோது அந்தப் பெண் அவரை முந்திக் கொண்டு..
"உங்களைத்தான் தோட்டக்காரரே..! வீட்டில் யாருமில்லையா..?" என்று தெள்ளத் தெளிவாகக் கேட்டு அவருடைய சந்தேகத்தை தீர்த்து வைத்தாள்..
'இந்தப் பொண்ணு என்னைத்தான் தோட்டக் காரரேன்னு கூப்பிட்டிருக்குது..' வாகீசன் நொந்து நூடுல்ஸாகி விட்டார்..
அச்சு அசல் தோட்டக்காரனேதான் என்று பாகீரதி அவருக்கு சான்றிதழ் வழங்கிய விவரம் இந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரிய வந்தது..?
வாகீசன் தண்ணீர் பைப்பை செடிகளுக்கு அடியில் விட்டார்.. மடித்துக் கட்டியிருந்த வேட்டியை இறக்கி விட்டார்.. தலையில் கட்டியிருந்த முண்டாசை அவிழ்த்து தோளில் இரு பக்கமும் வழியுமாறு கெத்தாக போட்டுக் கொண்டார்..
"ஏம்மா.. நானிருக்கேனே.." என்று சொன்னார்..
"நீங்க இருக்கிறது தெரியுது.. உங்க முதலாளி குடும்பத்தார் இருக்காங்களான்னுதான் நான் கேட்டேன்.." என்றாள் அந்தப் பெண்..
"இங்கே தொழிலாளியெல்லாம் கிடையாதும்மா.. அதனால முதலாளியும் இங்கே கிடையாது.. இருக்கிறது எங்க குடும்பம் மட்டும்தான்.." வாகீசன் விளக்கத்தில்..
"அங்கிள் நீங்களா..?" என்று வாய் பொத்தினாள் அவள்..
"அங்கிளா..?"
என்னடா இது என்று ஆகிவிட்டது வாகீசனுக்கு.. யாரோ ஒரு பெண் வந்து அவரை உறவு முறை சொல்லி அழைக்கிறாள்..
வாகீசன் எப்போது அந்தப் பெண்ணுக்கு அங்கிளானார்..?
'இந்த வீட்டுக்கு குடி வந்தாலும் வந்தோம்.. நடக்கிற எல்லாமே நான்-ஸின்க்காவே நடக்குது..' வெறுத்துப் போய் விட்டார் வாகீசன்..
எப்படி அவர் அந்தப் பெண்ணுக்கு 'அங்கிள்..' ஆனாள் என்பதை அந்தப் பெண்ணிடமே கேட்டுத் தெளிவு பண்ணிக் கொள்ளலாம் என்று வாகீசன் வாய் திறந்த போது அந்தப் பெண்..
"ஆண்ட்டி.." என்றாள்..
'இது வேறா..?'
வாகீசன் தலையை ஒரு தினுசான கோணத்தில் வைத்து தோராயமாக திரும்பிப் பார்க்க முனைந்தார்.. அவருடைய பார்வை வட்டத்துக்குள் வீட்டுக்குள்ளிருந்து பாகீரதி வெளிப்படுவது தெரிந்தது..
'இனி இவ வேற கேள்வி கேட்க ஆரம்பிச்சுருவாளே..'
பாகீரதி வருவதற்குள் இந்த அங்கிள், ஆண்ட்டி விவகாரத்தை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவசரமானார் வாகீசன்.. இல்லாவிட்டால் பாகீரதி அவரை உண்டு.. இல்லையென்று ஓர்வழி பண்ணி விட மாட்டாளா..?
"இங்கே பாரம்மா.."
வாகீசன் சொன்னதை அந்தப் பெண் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் எங்கேயோ பார்த்தாள்..
'அதுசரி.. என் வீட்டுப் பொம்பளையே என் சொல்லைக் கேட்க மாட்டா.. இதில ஊரார் வீட்டுப் பெண் என் பேச்சைக் கேட்டு விடப் போகிறாளா என்ன..?'
அவர் எனக்கென்ன என்று நின்றிருந்த அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்தார்.. அவர் பார்வையை கண்டு கொள்ளாமல் புன்னகை அரசியாக நின்றிருந்த அந்தப் பெண்ணிடம் வந்த பாகீரதி..
"வா மீரா.. இப்பத்தான் எங்க வீட்டுக்கு வர வழி தெரிஞ்சதா..?" என்று உரிமையுடன் கேட்டபடி கட்டிக் கொண்டாள்..
பதிலுக்கு அந்தப் பெண்ணும் பாகீரதியைக் கட்டித் தழுவிக் கொள்ள.. ஊடே நின்றிருந்த வாகீசன் இமை கொட்டி விழித்தார்..
இதுபோன்ற ஆச்சரியங்களை அனாசியமாக நிகழ்த்திக் காட்டுவதில் பாகிரதிக்கு நிகர் பாகீரதிதான் என்று அவர் உள்ளம் சொன்னது..
காலம் காலமாய் பழகியவர்களைப் போல கட்டித் தழுவி முடித்தவர்கள் ஒரு வழியாய் பிரிந்து நின்றார்கள்..
"இவர்தான் எங்க வீட்டு அங்கிள்.." பாகிரதி அவரை மீராவுக்கு அறிமுகப் படுத்தி வைத்தாள்..
"ஏண்ட்டி..?" வாகீசன் அழமாட்டாத குறையாய் ஆற்றாமையுடன் வினவினார்..
இப்படியொரு அறிமுகத்தைப் பண்ணி வைக்கச் சொல்லி அவரா கேட்டார்..? இதற்கு அவள் பேசாமலே இருந்திருக்கலாமே..
'நான் இவளுக்கு வீட்டுக்காரனா.. இல்லை.. வீட்டு அங்கிளா..?' அவருக்கு வெறி வெறியாக வந்தது..
மீரா அவரைப் பார்த்ததும் எழுந்த குபிர் சிரிப்பை அடக்கிக் கொள்ள வாய் பொத்தினாள்..
'இது எதுக்கு இப்ப சிரித்து வைக்குது..?' வாகீசனுக்கு கடுப்பு மேலிட்டது..
ஊரில் உள்ள நண்டு, சிண்டுகள் கூட எல்லாம் அவர் மனைவி சிநேகிதம் பிடித்து.. அவர்கள் முன்னால் அவரை காமெடியனாக்கிக் கொண்டிருக்கிறாளே என்ற கோபம் அவருக்குள் எழுந்தது..
அந்தக் கோபத்தை அவரால் பாகீரதியிடம் காட்டி விட முடியுமா என்ன..? அதற்குப் பின்னால் 'புவ்வா'வுக்கு அவர் என்ன பண்ணுவார்..?
"எதுக்கு மீரா இந்தச் சிரிப்பு சிரிக்கறே.."
காரணத்தை தெரிந்து கொள்ளாமலே பாகீரதியும் மீராவுடன் கூட்டணி போட்டுச் சிரித்ததில் வாகீசனின் கோபம் முற்றியது..
'எப்பப் பாரு.. இவ மட்டும் பலமான கூட்டணியை அமைச்சுக்கிட்டு என்னை சுயேச்சையாய் நிப்பாட்டிருவா..'
மனைவியின் ஆளுமையான திறமையில் அவர் மனதுக்குள் புழுங்கினார்..
"அதுவா ஆண்ட்டி..? நான் வந்தப்ப அங்கிள் தோட்டத்துக்கு தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருந்தாரா..? முண்டாசும் தண்ணி பைப்புமா அவர் இருக்கவும் நான் அவரை தோட்டக்காரன்னு நினைச்சிட்டேன் ஆண்ட்டி.."
மீரா தணிந்த குரலில் சொன்னதும் பாகீரதி.. எப்படி என் கணவரைப் பார்த்து அப்படி நீ நினைக்கலாம் என்று பாயப்போகிறாள் என்று வாகீசன் பேராசைப் பட்டார்..
பாகீரதி அப்படிக் கேட்கா விட்டாலும் பரவாயில்லை.. மீரா சொன்னதைக் கேட்டதும்..
"சரியாச் சொன்ன போ.." என்று அவளை பாராட்ட வேறு செய்தாள்..
'எனக்குத்தான் எதிரி வெளியில இல்லையே.. வீட்டுக்குள்ளே தாலி கட்டின பெண்டாட்டிங்கிற பேரில இல்ல இருக்கா..'
வாகீசனுக்கு கூறாமல் சன்யாசம் வாங்கி விட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது..
"அப்பவே சொன்னேன் மீரா.. இப்படி வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு முண்டா பனியனும் தலையில முண்டாசுமா தண்ணி பைப்போடு நிக்காதீங்க.. புதுசாப் பாக்கிற யாராச்சும் உங்களைத் தோட்டக்காரன்னு நினைச்சிரப் போறாங்கன்னு.. எங்கே..? நான் சொன்னாக் கேட்டாத்தானே..? அப்படித்தான் நிற்பேன்னு அடம் பிடிச்சுக்கிட்டு தண்ணி பாய்ச்சினார்.. இந்தா.. நீ சொல்லிட்டல்ல.."
பாகிரதியின் பேச்சில் வாகீசனின் சன்யாசிக் கனவு வலுப்பெற்றது.. அந்த வலிமை..
"உள்ளே வாங்க.. மீராவுக்கு காபி கலக்கிறப்ப உங்களுக்கும் சேர்த்துக் காபி கலக்கிறேன்.." என்று பாகிரதி சொன்னதும் 'டமால்' என்று உடைந்து விட்டது..
சன்யாசம் பெரிதா.. பாகீரதி தரும் காபியின் ருசி பெரிதா..?
"நீங்க ரெண்டு பேரும் முன்னாலே போங்க.. நான் இதோ பின்னாலேயே வந்துக்கிட்டு இருக்கேன்.." என்றார் மாஜி சன்யாசி வாகீசன்..
உள்ளே போகும் போதே மீரா அவரைத் திரும்பிப் பார்த்து சிரித்து வைத்து விட்டுப் போனாள்..
'இந்தப் பெண்ணின் முன்னால் காபி குடிக்கப் போவதா..?'
வாகீசனின் மனம் பட்டி மன்றம் நடத்தியது.. இறுதியில் ஒரு சின்னப் பெண்ணின் 'களுக்' சிரிப்புக்கு அஞ்சி.. 'காபி'யை காவு கொடுத்து விடக் கூடாது என்று அவரது நாக்குத் தீர்ப்புச் சொல்லியது..
வாகீசன் தண்ணீர் குழாயை அடைத்து விட்டு வீட்டைப் பார்த்து நடந்தார்..
உள்ளே அந்த மீராவைக் காணவில்லை..
'அவ வீட்டுக்கு போயிருப்பாளோ..'
அவர் மனதில் ஆசை வந்தது.. வந்த ஆசையை அவள் வீட்டுக்குப் போக வாசலை விட்டால் வேறு வழி இல்லையென்ற உண்மை அடித்துத் துரத்தியது..
'அங்கேதானே நானிருந்தேன்.. அவ வீட்டுக்குப் போயிருந்தா என்னைக் கடந்துதானே போயிருக்கனும்..?'
பாகீரதி காபி குடுப்பதாக வாக்குறுதி அளித்தாளே என்ற நினைவில் சமையலறைப் பக்கம் போனார்.. அங்கே சமையல் மேடையில் சட்டமாக உட்கார்ந்து காலாட்டியபடி பேசிக் கொண்டிருந்தாள் மீரா..
'இதப் பாருடா..'
புதிதாக வந்தவளைப் போல இல்லாமல் அதுதான் வழக்கம் போல அமர்ந்து கொண்டிருந்தவளைப் பார்த்து அவருக்குள் ஆச்சரியம் வந்தது..
'இவதான் இப்படியிருப்பான்னா.. இவகூட சேருகிறது எல்லாமே இவளைப் போலவே இருக்கிறதுகளே..'
வாகீசன் தொண்டையை கனைத்தார்.. இல்லா விட்டால் பேச்சு சுவராஸ்யத்தில் அவர் அங்கு வந்து நிற்பதை பாகீரதி கவனிக்க மாட்டாளே..
பாகீரதி அந்த தொண்டைச் செருமலையும் கண்டு கொள்ளாமல் கதை பேசுவதிலேயே கவனமாக இருந்தாள்.. மீராதான் போனால் போகிறது என்று கருணை காட்டினாள்..
"ஆண்ட்டி.. அங்கிள் வந்திருக்கார்.."
"எங்கே..?" பாகிரதி திரும்பாமல் வினவ..
"அங்கே.." என்று கைகாட்டினாள் மீரா..
அப்போதாவது பாகீரதி திரும்பிப் பார்த்தாளா என்றால் அதுதான் இல்லை.. வெகு மெத்தனமாக மீராவிடம் தாழ்ந்த குரலில் எதையோ சொன்னாள்.. மீரா வாய் பொத்திச் சிரித்தாள்..
அந்தச் சிரிப்பு அவரைப் பற்றியதாக இருக்குமோ என்ற சம்சயம் வாகீசனுக்கு வந்தது.. அதற்கேற்றார் போல மீரா அடிக்கடி அவரைப் பார்ப்பதும் வியப்புடன் புருவங்களை உயர்த்தி விட்டு.. பாகீரதியின் பக்கம் திரும்பி விடுவதுமாக இருந்தாள்..
'என்னத்தைப் பேசுதுக..?'
வாகீசனுக்குப் பொறாமையாக இருந்தது.. இது போல அவருடைய நண்பர் குழாமுடன் அவரால் பேச முடிவதில்லையே.. ஏன்..?
பாகீரதியும் மீராவும் பலமான பேச்சு வார்த்தையில் இருந்தார்கள்... என்னவோ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி உனக்கு இத்தனை சீட்எனக்கு இத்தனை சீட் என்று தொகுதிப் பங்கீடு செய்வதைப் போல தீவிரமான முகபாவனையுடன் பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்ததும்.. அங்கே காபி பெயராது என்ற முடிவுக்கு வந்தார் வாகீசன்..
'இங்க வந்து இதுக மூஞ்சிகளைப் பார்த்துக்கிட்டு நின்னதுக்கு தோட்டத்தில தண்ணி பாய்ச்சற வேலையையாவது உருப்படியா செய்திருக்கலாம்.. காபியை நம்பி தண்ணி குழாயை கைவிட்ட கதையாய் என் கதை ஆகிப் போச்சு..'
நீண்ட நெடுமூச்சுடன் திரும்பியவரை..
"நில்லுங்க..." என்ற பாகீரதியின் கணீர் குரல் தடுத்து நிறுத்தியது..
"என்னடி..?" காபி கிடைக்காத முறைப்புடன் கேட்டார் வாகீசன்..
"இதுக்கு ஒரு வழியைச் சொல்லிட்டுப் போங்க.." என்றாள் பாகீரதி..
'இவ என்ன இவளுக்கு ஒரு வழியைச் சொல்லிட்டுப் போன்னு சொல்கிறதைப் போல சொல்லி வைக்கிறா..'
வாகீசனுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை.. அதைப் பற்றி மனைவியிடம் கேட்டுத் தெளிவு படுத்திக் கொள்ளலாம் என்றால் சிரிப்பை அடக்கியபடி அவரையே சுவராஸ்யமாக பார்த்தபடி அங்கே மீரா உட்கார்ந் திருந்தாள்..
"எதுக்கு வழியைச் சொல்லச் சொல்ற..?"
யாரும் முகவரியைக் கேட்டு அங்கே வந்திருப் பார்களோ என்று விழிகளால் துழாவிய வண்ணம் வினவி வைத்தார் வாகீசன்..
முகவரி கேட்டு யாரும் அங்கே நின்றிருக்கவில்லை.. பாகீரதியின் முகத்தை பரிதாபமாக பார்த்து வைத்தார்..
'இதுக்கு மேலே தாங்க மாட்டேண்டி..'
"இந்தாங்க.. இந்தக் காபிக்கு ஒரு வழியைச் சொல்லிட்டுப் போங்க.. உங்களுக்காக கலந்த காபியை குடிக்காம வாசலுக்கு ஓடினா என்ன அர்த்தம்..?"
பாகீரதி நீட்டிய காபிக் கோப்பையை ஆனந்தத்துடன் வாங்கிக் கொண்டார் வாகீசன்..
'இதைத்தான் சொன்னாளா..?'
பேசாமல் மீராவைப் பார்க்காமல் அவர் காபியைக் குடித்திருக்கலாம்.. அதை விட்டுவிட்டு.. அவள் பக்கம் அவர் பார்த்து வைக்க.. அவள் பொங்கி சிரித்தாள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: வந்தாள் மகாலட்சுமியே. -2
வந்தாள் மகாலட்சுமியே. -2
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s320/vanthalmahalakshmiye.jpg
https://1.bp.blogspot.com/-koFPAOsFTsI/Xp8ATpdN-JI/AAAAAAAAA0s/4mBiqoji-hMEwcI6vPC8m5ciPMmgqX0EgCPcBGAYYCw/s72-c/vanthalmahalakshmiye.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahaalakshmiye-2.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/vanthaalmahaalakshmiye-2.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy