புலர்கின்ற பொழுதில் -14

14 புலர்கின்ற பொழுதில்.. வருகின்ற கதிரே.. பூங்கொடியின் மனதில்.. வளர்கின்ற உறவே.. பாரதியின் மாமனார் வீடு பரம்பரையாய் செல்வம் க...


14
புலர்கின்ற பொழுதில்..
வருகின்ற கதிரே..
பூங்கொடியின் மனதில்..
வளர்கின்ற உறவே..

பாரதியின் மாமனார் வீடு பரம்பரையாய் செல்வம் கொழிக்கும் பரம்பரை.. ஆனால்.. அவர்களின் உறவினர்கள் அவர்களை விட ஒரு படி குறைவாகத்தான் இருந்தார்கள்..
அர்ச்சனாவின் அப்பா.. சங்கரன் பேங்க் மேனேஜர்.. பாரதியின் மாமனார் ஈஸ்வரனுக்கு சித்தப்பா மகன்.. ஒன்று விட்ட தம்பி என்ற உறவில் சங்கரனின் குடும்பம் ஈசுவரனுடைய குடும்பத்து விசேசங்களில் தவறாமல் கலந்து கொண்டாலும்.. ஈஸ்வரனின் குடும்பத்துப் பெண்மணிகளின் நகைகளுக்கு ஈடாக.. சங்கரனின் குடும்பத்து பெண்மணிகளால் நகை போட முடியாது..
பாரதிக்கு.. பரம்பரையாய் வந்த வைர நகைகளைப் போட்டுத் திருமணம் செய்து கொடுத்திருந்தாலும்.. மருமகளுக்கென கங்கா பாதுகாத்து வைத்திருந்து போட்ட வைர நகைகளும்.. சேர்ந்து கொள்ள.. பாரதி விசேச நாள்களில்.. வைர நகைப் பெட்டகமாய் நடை பழகுவாள்..
கங்காவைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.. ஈஸ்வரன் ஜெயிக்கும் ஒவ்வொரு வழக்கிற்கான பணமும் வைரமாக மாறி அவள் உடம்பை அலங்கரிக்கும்..
இப்படிப் பட்டவர்களின் உறவினர் வீட்டுப் பெண்ணான அர்ச்சனாவால்.. அதிகபட்சம்.. தங்கத்தில் ஜிமிக்கி செய்து போட்டுக் கொள்ள முடிந்தது.. கல் பதித்த தங்க மாலையைப் போட்டுக் கொள்ள முடிந்தது.. வைரமெல்லாம்.. அவளுக்கு எட்டாக்கனி..
அர்ச்சனாவும் பெண்தானே.. அழகுணர்ச்சி அதிகம் உள்ள அவளால் வேதநாயகியின் வைர அட்டிகையை வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை..
அதே சமயம்.. அடுத்தவரின் பொருள்மீது ஆசைப்படக் கூடாது என்ற நேர்மையுணர்வும்.. அவளது ரத்தத்தில் கலந்திருந்ததால்.. அவளால் ஒரு நிமிடத்திற்கு மேல் வேதநாயகியின் அட்டிகையை கழுத்தில் போட்டுக் கொள்ள முடியவில்லை..
அவளுடைய இந்த.. இரு வேறுபட்ட பரிணாமங்களுமே பார்த்திபனை கவர்ந்தன.. அவளது அழகையும் தாண்டிய அவளது குண இயல்பு அவனை ஈர்த்தது..
அங்கிருந்த நேரம் முழுவதும்.. குணவதியின் அருகிலேயே இருந்தாள் அர்ச்சனா.. எவரையும் ஈர்த்து விடும் குணவதியின் இயல்பு.. அர்ச்சனாவையும் காந்தமாக கவர்ந்திழுத்தது.. பேசுகின்ற அத்தனை வார்த்தைகளிலும்.. நையாண்டியை கலந்து பேசி.. கேட்டவர்கள் சிரித்துக் கொண்டிருக்க.. அந்தச் சிரிப்பை தன்னை தொற்ற விடாமல்.. நிமிர்வாய் அமர்ந்து.. சிரிக்காமல் பழமை பேசும் குணவதியை அர்ச்சனாவுக்கு மிகவும் பிடித்துப் போனது..
"அது யாரும்மா.. அப்படி கருட பார்வை பார்த்துக்கிட்டுப் போறது..?"
ஈசுவரனின் தங்கை ஒருத்தி.. மிதப்பாக பார்வையிட்டுக் கொண்ட போக.. குணவதி.. அவள் யாரென்று அறிய அர்ச்சனாவிடம் கேள்வி கேட்டாள்..
"எங்க அத்தை.."
"அது என்னவோ.. காணாதவங்களை கண்டுவிட்ட மாதிரி.. இந்தப் பார்வை பார்த்துக்கிட்டுப் போகுது.. எங்களை முன்னே.. பின்னே.. இந்தம்மா பார்த்ததில்லையா..?"
"பாட்டி.."
குணவதி பேசிய விதத்தில் அர்ச்சனா குலுங்கிச் சிரிக்க.. அங்கே கிடந்த தினசரி ஒன்றை.. முகத்துக்கு நேரே பிடித்தபடி.. பேப்பரின் மேலாக.. பார்த்திபன் அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்..
'எண்ணையில் எரியும் விளக்கு..
             அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு..
    என்னவோ நடக்குது நடப்பு..
             அதில் ஏதோ சுகமும் இருக்கு..
    தோப்புக்கு தென்னை மரம் சொந்தம்..
             காத்துக்கு எந்தமரம் சொந்தம்..
    பூமிக்கு காட்டு வெள்ளம் சொந்தம்..
             அந்தப் பொண்ணுக்கு
                 இந்த உள்ளம் சொந்தம்..!'
அவனது உள்ளம் பொங்கிப் பாடியது.. அவள் இதழ் விரித்துச் சிரித்த அந்தச் சிரிப்பில்.. பார்த்திபன் தன் வசம் இழந்தான்.. அவளைப் போன்ற ஒரு பெண்ணை இதற்கு முன் பார்த்ததில்லை என்று அவன் மனம் சொல்லியது..
'நான் பார்த்ததிலே..
             அவள் ஒருத்தியைத்தான்..
    நல்ல அழகியென்பேன்..
             நல்ல அழகியென்பேன்..
    நான் கேட்டதிலே..
             அவள் வார்த்தையைத்தான்..
    ஒரு கவிதையென்பேன்..
             ஒரு கவிதையென்பேன்..'
இப்போது அவன் மனம் எம்.ஜி.ஆராகி.. பாடித் தள்ளியது.. மகனின் முகபாவனையைக் கொண்டே.. அவனது மனதை எடை போட்ட சுந்தரமூர்த்தி , அவன் மனதில்.. நடிகர் திலகமும்.. மக்கள் திலகமும்.. போட்டி போட்டுக் கொண்டு வந்து பாடித் தள்ளுவதை உணர்ந்தார்..
அவரும் பார்த்திபனின் வயதைக் கடந்து வந்தவர் தானே.. என்ன ஒன்று.. அவருக்குத் தேடி அலையாமல்.. தானாகவே அழகின் அம்சமாய் வேதநாயகி அமைந்து விட்டாள்..
மகனுக்கும் அப்படி அமையாமல்.. தேடியலைய வேண்டியிருக்கிறதே என்ற மனக்குறைதான் அவருக்கு..
மாலை காபி டிபனோடு.. பாரதியும்.. கங்காவும் மாடிக்கே வந்துவிட.. ஈஸ்வரனின் ஆங்கிலத்திலிருந்து தப்பித்துவிட்ட ஆனந்தத்துடன்.. நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.. துளசிராமனும்.. சுந்தரமூர்த்தியும்..
"என்ன அர்ச்சனா.. என் பாட்டியை உனக்கு தோழிப் பெண்ணாய் ஆக்கி விட்ட போல இருக்கே.." பாரதி கேலி செய்தாள்..
"நீங்க ரொம்ப லக்கி அண்ணி.."
"எதை வைத்து அப்படிச் சொல்கிற..? உன் அண்ணனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறேனே.. அதனாலா..?"
"ஊஹூம்.. இப்படி ஒரு பாட்டிக்கு.. பேத்தியாக பிறந்திருக்கிறீங்களே.. அதைத்தான் சொன்னேன்.."
"என்னது..?"
குணவதியின் அணுகுண்டு பேச்சை அறிந்து வைத்திருந்த பாரதி கண்களை அகல விரித்தாள்.. அவள் பாட்டியை படித்த யுவதி ஒருத்திக்கு இந்த அளவுக்கு பிடித்திருக்கிறதா..?
"நிஜமாவா சொல்ற..?"
"இதில பொய் சொல்ல என்ன இருக்கு..? ஐ லவ் ஹெர் வெரிமச்.."
பார்த்திபன் பொறாமையுடன் குணவதியைப் பார்த்தான்.. பேரனின் கோபம் புரிந்த குணவதி.. அவசரமாக..
"நான் வேற.. என் குடும்பம் வேற இல்லம்மா.. அதனால என்னை நீ லவ் பண்ணினா.. என் குடும்பத்தையே லவ் பண்ற மாதிரி.. தெரியுமா..?" என்று சொன்னாள்..
பார்த்திபனின் விழிகள் எதிர்பார்ப்புடன் அர்ச்சனாவை பார்க்க.. "ஏன் பாட்டி.. உங்க குடும்பத்தை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா..? ஐ லவ் யுவர் பேமிலி.. போதுமா..?" என்று இலகுவாக சொல்லிவிட்டாள் அவள்..
பார்த்திபனை.. வெற்றிக் குறி முகத்தில் தெரிய.. குணவதி பார்க்க.. அவன்.. சிறகேயில்லாமல் ஆகாயத்தில் பறந்தான்..
"என் குடும்பத்தை பிடிச்சிருந்தா எங்க கூடவே வந்திரு.." குணவதி தூண்டிலை வீசினாள்..
"நிஜமாவே வரணும் போலத்தான் இருக்கு பாட்டி.. அண்ணி உங்க கிராமத்தை பத்தி.. கதையாய் சொல்லுவாங்க.. ஆறு ஓடுமாமே.. ஆத்துத் தண்ணி.. அச்சுவெல்லம் போல இனிக்குமாமே.."
"பின்னே.. மேலக்கால் தண்ணின்னா சும்மாவா..? சுத்துப் பட்டு ஊருக்கெல்லாம்.. அங்கேயிருந்துதானே தண்ணி போகுது..?"
"ஆத்தோரமா.. தென்னந்தோப்ப இருக்குமாமே.."
"அத்தனை தோப்பும்.. எங்க தோப்புத்தான் ஆத்தா.. நீவா.. வந்து எங்க ஊரைப் பாரு.. பார்த்துட்டன்னு வை திரும்பியே வர மாட்ட.."
"வராமல்.. உங்க கூடவே இருந்துட்டாப் போகுது.."
அர்ச்சனா.. வெகுளியாய் சிரித்து விட்டு.. எழுந்து.. மாடிப் படியில் இறங்கலானாள்.. பாரதி யோசனையுடன் குணவதியைப் பார்ததாள்..
"என்ன விசயம் பாட்டி..? பாசப் பறவையை பலமா பறக்கவிடறே.." என்று வினவினாள்..
துளசிராமனுக்கு பேத்தியின் கேள்வியைக் கேட்டதும் சிரிப்பு வந்துவிட்டது.. அவர் வாய் விட்டுச் சிரிக்க.. குணவதி அவரை முறைத்தாள்..
பார்த்திபன் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கவனிக்காமல் எழுந்து.. மாடிப்படி அருகே சென்று நின்று பார்த்தான்..
அதே சமயத்தில் படியில் இறங்கிக் கொண்டிருந்த அர்ச்சனா யதேச்சையாக தலையைத் திருப்பி மாடிப்படி வளைவைப் பார்த்தாள்..
அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த பார்த்திபனைக் கண்டதும்.. அவளுக்கு முகம் சிவந்து விட்டது..
மாடியிலேயே.. குணவதியும்.. வேதநாயகியும் அவளுடன் பேசிக் கொண்டிருந்தபோது.. பார்த்திபனின் பார்வை.. அவள் மீதே பதிந்திருந்ததை அவள் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்..
உயரமாக.. ஆண்மை ததும்பும் தோற்றத்துடன்.. கம்பீரமாக இருந்த பார்த்திபனை.. அர்ச்சனாவிற்கு மிகவும் பிடிக்கும்.. ஒரு வகையில்.. அவனைப் பார்ப்பதற்காகவே.. அவள் பெற்றவர்கள் வருவதற்கு முன்னாலேயே அங்கு வந்து நின்றிருந்தாள்..
'வாட் எ ஹேண்ட்சம் ஹீரோ ஹி இஸ்..!'
இதுதான் பார்த்திபனைப் பற்றிய அவளின் கணிப்பாக இருந்தது.. பார்த்திபனின் பார்வை அவள் மீது படிந்ததும்.. அவள் மனதில் சிலிர்ப்பு வந்தது..
'என்னமாய் பார்த்து வைக்கிறான்.. திருட்டு ராஸ்கல்.. பக்கத்தில் அவனுடைய குடும்பமே.. இருக்கிறது... அந்த பயமும்.. கவலையும் கொஞ்சமாவது அவனுக்கு இருக்கிறதா..? அடாவடி ஹீரோ..'
அவனது அடங்க மறுத்த சிகையைக் கவனித்துக் கொண்டே.. தனது நீண்டிருந்த கூந்தலை எடுத்து முன்னால் விட்டுக் கொண்டாள்..
அவனுடைய அம்மா வைர அட்டிகையைக் கொடுத்ததும்.. அவள் வாங்கிக் கொள்ளத் தயங்கியபோது.. அவன் விழிகளில் தெரிந்த வியப்பை அவள் கண்டு கொண்டுதான் இருந்தாள்..
வேதநாயகியின் அட்டிகை அவளுக்கு அழகாக இருக்கிறதா என்று கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டிய தேவையே இல்லாமல் அவனது கண்கள் ஜொலித்த ஜொலிப்பைப் பார்த்துத் தெரிந்து கொண்டு தான் இருந்தாள்..
இப்போது.. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல.. அவளுக்காக அவன் மாடிப்படி வளைவில் வந்து நின்றதைப் பார்த்ததும்.. அவள் மேல் அவனுக்கு நோக்கம் இருப்பது.. அவளுக்குத் தெளிவாக புரிந்துவிட்டது..
கீழ் உதட்டை மடித்துப் பற்களால் கடித்துக் கொண்டவள்.. மானைப் போல்.. ஒரே பாய்ச்சலாக.. படிகளில் தாவி இறங்கி ஓடி விட்டாள்..
பார்த்திபன் அசையாமல் நின்றுவிட்டான்.. அவன் பார்வையும்.. அவள் பார்வையும் கலந்து நின்ற நேரம்.. ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்.. அந்த ஒரு நொடியில்.. ஒரு கோடி இன்பங்கள் அவனுக்குள் புகுந்து இதமான ஒரு இம்சையை உண்டு பண்ணின..
அதே உணர்வோடு.. அவன் மௌனமாக திரும்பி.. துளசிராமனின் அருகே அமர்ந்து கொண்டான்..
மனைவியின் முறைப்பிலிருந்து தப்புவதற்காக.. பேரன் இருந்த திக்கைப் பார்த்தவர்.. திகைத்துப் போனார்..
"என்னடி இது.. இந்தப் பயல் இப்படி மந்திரிச்சு விட்ட கோழி போல.. ஒரு மார்க்கமா முழிக்கிறான்.. எலே.. பார்த்திபா.. தம்பி.. இங்கே பாருடா.."
"அடடா.. இப்ப எதுக்கு.. அவன் கூட சரிமல்லுக்கு நிற்கறீங்க..?"
"இல்லடி குணா.. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முந்தி கூட இந்தப் பய நல்லாத்தானே இருந்தான்.. இப்ப எதுக்கு.. காத்து.. கருப்பு அடிச்சுவிட்டது போல.. இந்த முழி முழிக்கிறான்..?"
"ஐயா.. சாமி.. எனக்குத் தாலிகட்டின தருமதுரையே.. கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு அடக்க.. ஒடுக்கமா.. இருக்கறீகளா..?"
"உன்னை என்னைக்கு கட்டிக்கிட்டேனோ.. அன்னையில இருந்து... இன்னைக்கு வரைக்கும்.. அப்படித்தானேடி குணா இருக்கேன்..?"
"சரியாச் சொன்னீங்க தாத்தா.. நம்ம பாட்டி சாதா பாட்டி இல்லை.. தாதாபாட்டி.. ஜெகஜால கில்லாடி.. அந்த அர்ச்சனாவுக்கு ஏதோ நூல் விடுது போல இருக்கே.. அதை கவனிச்சீங்களா..?"
பாரதியைப் பார்த்து துளசிராமன்.. மீண்டும் சிரித்து வைத்தார்.


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: புலர்கின்ற பொழுதில் -14
புலர்கின்ற பொழுதில் -14
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s320/pularkindra%2Bpoluthil.jpg
https://1.bp.blogspot.com/-VJBhR4Qc_Aw/XnI8moZ-0TI/AAAAAAAAAzQ/rRzp3zsKK9ISFXkg59gxBPwlEktqrac5ACPcBGAYYCw/s72-c/pularkindra%2Bpoluthil.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-14.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/pularkinrapoluthil-14.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy