மௌனமான நேரம்..-1

முத்துலட்சுமி ராகவன் எழுதிய ‘ மௌனமான நேரம்... ’ 1 சீரியல் விளக்குகளால் அந்த திருமண மண்டபம் ஜொலித்துக் கொண்டிருந்தது.. வாசலில்...


முத்துலட்சுமி ராகவன் எழுதிய

மௌனமான நேரம்...

1

சீரியல் விளக்குகளால் அந்த திருமண மண்டபம் ஜொலித்துக் கொண்டிருந்தது.. வாசலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க.. மண்டபத்திற்குள் பட்டுப்புடவை அணிந்த பெண்கள் இங்கும் அங்கும் கால்களில் சக்கரமில்லாமல் பரபரப்பாக போய் வந்து கொண்டிருந்தார்கள்..
'எல்லாக் கல்யாணங்களிலும் இது போல்தான் பெண்கள் பரபரக்கிறார்கள்..
மணமேடையில் அமர்ந்திருந்த கௌசிக் நினைத்துக் கொண்டான்.. ஹோமத்திலிருந்து வந்த புகை கண்ணைக் கரித்தது..
சீக்கிரமாக தாலியைக் கட்டச் சொன்னால் தேவலை.. என்ற நினைவு எழ.. அருகில் அமர்ந்திருந்த வைசாலியைப் பார்த்தான்..
அவளது பார்வை ஹோமத்தீயின் மீது பதிந்திருந்தது.. அந்த திருமணத்துக்கு சாட்சியாக இருக்கும் அக்கினியிடம் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருப்பவளைப் போல அவள் அக்கினியையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவளின் அந்தத் தோற்றம் கௌசிக்கை சங்கடப் படுத்தியது.. 'ஏன் இப்படி இருக்கிறாள்..?' என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தபோதே..
'ஏன் என்று என்னைக் கேட்கிறாயா..? உனக்கு அதற்கான காரணம் தெரியாதா..?' என்று அவனின் மனச்சாட்சி அவனிடம் திரும்பிக் கேட்டது..
'என்மேல் என்ன தவறு..?' அவன் மனதில் மெல்லிய கோபம் எழுந்தது..
'நான்தான் சொன்னேனே.. எனக்கொரு காதலி இருக்கிறாள்.. திடீரென்று ஒரு நாள் என்னை விட்டுப் பிரிந்து.. காற்றில் கலந்த புகைபோல காணாமல் போய் விட்டாள்.. அவளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்னு சொன்னேனா இல்லையா.. அதை உணக்கையாய் கேட்டு விட்டு.. அதனால் என்ன பரவாயில்லை.. நான் உங்களைக் காதலிக்கிறேன்.. ஒரு நாள் வாழ்ந்தாலும் உங்களுடன் வாழ்ந்தால் போதும்.. என்று இவள்தானே சொன்னாள்.. அப்போது அப்படிச் சொல்லிவிட்டு.. இப்போது உம்மென்று உட்கார்ந்திருந்தால் என்ன அர்த்தம்..? அன்றைக்கு மட்டும் ஏன் அப்படிச் சொன்னாள்..?'
வைசாலியும் தன் மனதிற்குள் அப்போது அதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருந்தாள்..
'ஏன் அப்படிச் சொன்னேன்..?' அவள் மனம் குமைந்தது..
'பார்த்த முதல் பார்வையிலேயே இவனிடம் மயங்கிப் போய் விட்டேனே.. அதனால் அப்படிச் சொன்னேனா..? இவனிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது முடியவே முடியக்கூடாது என்று தவித்துப் போனேனே.. அதனால் அப்படிச் சொன்னேனா..? இவனின் அருகே அமர்ந்திருக்கும்போது இவனின் அருகாமை நிலைக்க வேண்டும் என்று என் மனம் துடித்ததே.. அதனால் அப்படிச் சொன்னேனா..?'
எதனால் அப்படிச் சொன்னாள் என்று அவளால் இதுவரை அனுமானிக்கவே முடியவில்லை.. ஆனாலும் வைசாலி கௌசிக்கிடம் அப்படிச் சொல்லிவிட்டது என்னவோ உண்மைதான்..
"காத்திருக்கிறேன் கௌசிக்.. உங்கள் மனம் என் பக்கம் திரும்பும் வரை காத்திருக்கிறேன்.. ஆனால் இந்தக் கல்யாணத்தை மட்டும் வேண்டாம்ன்னு சொல்லி விடாதீங்க.."
"உனக்குப் புரியவில்லையா வைசாலி..? நான் நிஷாவைக் காதலிக்கிறேன்.. அவள் மேல் உயிரையே வைத்திருக்கிறேன்.."
"அவள்தான்.. இப்போது எங்கேயிருக்கிறாள்ன்னே தெரியலைன்னு சொன்னீங்களே.."
இதைச் சொல்லும்போது.. இந்த அளவுக்கா நான் தாழ்ந்துவிட்டேன் என்று மனதிற்குள் துடித்துப் போய் விட்டாள் வைசாலி..
'நீ காதலிக்கும் பெண் இப்போது உன்னுடன் இல்லை.. அதனால் நீ என்னை ஏற்றுக்கொள்.. என்றைக்கு நீ அவளை மறக்கிறாயோ.. அன்றைக்கு நீ என்னுடன் வாழ்ந்தால் போதும்.. அதுவரை உன்னிடம் மனைவியென்ற உரிமையைக் கோரமாட்டேன்.. தயவு செய்து ஊரறிய என்னைத் திருமணம் செய்து கொள்..'
ஏறக்குறைய இது யாசகம் இல்லையா..? கௌசிக்கின் முன்னால் மண்டியிடும் செயல் இல்லையா..? யாருக்கும் தலை வணங்காத வைசாலி இதைச் செய்யலாமா..?
செய்தாள்.. வைசாலி அதைச் செய்தாள்.. அவன் முன் மண்டியிட்டு காதல் பிச்சை கேட்டாள்.. இன்னொருத்தியிடம் அவனது மனம் இருப்பது தெரிந்தும் அவள் வாழ்வை பணயம் வைத்தாள்..
ஏன்..
அவனை அவளால் மறக்க முடியவில்லை.. காதல் தீ அவள் மனதில்.. இந்த மணமேடையில் யாக குண்டத்தில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் அக்கினியைப் போல.. எரிந்து கொண்டிருந்தது.. அதன் தகிப்பைத் தாங்க முடியாதவளாக அவனது பாதத்தில் தஞ்சம் புகுந்தாள் அவள்..
'உன்னை நினைக்கவே..
             நொடிகள் போதுமே..
    உன்னை மறக்கவே..
             யுகங்கள் ஆகுமே..'
இந்தப் பாடலை ஒரு மெல்லிசையாகத்தான் கௌசிக்கை சந்திப்பதற்கு முன்னர்வரை அவள் ரசித்து வந்தாள்.. கௌசிக்கை சந்தித்த பின்னால் தான்.. அந்தப் பாடலின் வரிகளை உணர்வுபூர்வமாக அவள் அனுபவித்தாள்..
'உன்னைத் தொட்டக் காற்று வந்து..
             என்னைத் தொட்டது..
    அதுவே போதுமென்று பெண்மை
             இன்று கேட்டுக் கொண்டது..'
அவனைத் தொட்ட காற்று அவளைத் தொட்டதிலேயே நெகிழ்ந்து உருகியவள்.. அவனுக்கு மனைவியாக.. அவனருகேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் இறுகப் பற்றிக் கொண்டுவிட்டாள்..
"நம் வைசாலியை கௌசிக்கிற்காக பெண் கேட்கிறாங்க ஜானகி... நீயென்ன சொல்றே..?"
வைசாலியின் தந்தை நரசிம்மன் கேட்டபோது தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்த வைசாலியின் இதயம் ஒரு வினாடி அந்தச் செய்தியை நம்ப முடியாமல் நின்று பின் அடித்தது..
'கௌசிக்கிற்காக என்னைப் பெண் கேட்கிறாங்களா.. இது நிஜம்தானா..?'
அன்று நம்ப முடியாமல் கையைக் கிள்ளிக் கொண்டதும் கை வலித்த உணர்வை இன்றும் அனுபவித்தாள் வைசாலி..
அவளது ஆசைப்படியே அந்தத் திருமணம் மணமேடை வரை வந்தவிட்டது.. அவளும் மணப் பெண்ணாக கௌசிக்கின் அருகே அமர்ந்து விட்டாள்.. மாப்பிள்ளை கோலத்தில் இருக்கும் கௌசிக் இன்னும் சற்று நேரத்தில் ஊர் அறிய தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டப் போகிறான்.. நினைக்கும்போதே அவளது நெஞ்சம் சிலிர்த்தது..
    'பொன் மாங்கல்யம்..
             வண்ணப்பூச்சரம்...
    மஞ்சள் குங்குமம்..
             என்றும் நீ தந்தது..'
எத்தனை நாள் மனதில் இதைப் பாடியிருப்பாள்.. அவளது எண்ணம் நிறைவேறப் போகும் இந்தத் தருணத்தில் ஏன் அவள் மனதில் சொல்லலொண்ணாத, இந்த பயம் எழுகிறது..?
இதைத்தானே அவள் கனவு கண்டாள்..? உரிமையுடன் கௌசிக்கின் அருகே மணப்பெண்ணாக அவள் அமர வேண்டும் என்று மனதார ஆசைப்பட்டாள்..
 "கனாக் காண்கிறேன்..
         கனாக் காண்கிறேன்..
    கண்ணாளனே..!
         ஒரே மேடையில்..
    ஒரே மேடையில்..
    நாம் அருகருகே.."
இந்தப் பாடலைத் திரைப்படத்தில் பாடி ஆடிய கதாநாயகியைப் போல.. பூட்டிய அறைக்குள் இந்தப் பாடலைப் பாடி அபிநயித்தாளே.. அந்த ஆசைக் கனவு நனவாகப் போகும் இந்த நேரத்தில் அவள் மனதில் ஏன் இந்த தடுமாற்றம் எழுகிறது..
'பேசாமல் எழுந்து ஓடிவிடலாமா..?'
அவள் மனதில் திடீரென்று இந்த வாழ்வைப் பணயம் வைக்கும் விளையாட்டு வேண்டாம்.. இப்போது பின் வாங்கா விட்டால்.. வாழ்க்கை முழுவதும் இந்த மனப் போராட்டம் தொடரும்.. என்ற பயம் வந்தது..
அவள் மனதில் இந்த எண்ணம் அலைமோத லேசாக நிமிர்ந்து கௌசிக்கைப் பார்த்தாள்.. அவன் புருவங்களை உயர்த்தி 'என்ன..' என்று ஜாடையாக விசாரித்தான்.. அவனின் அந்தச் செயல் அவளுக்குப் பிடித்திருந்தது.. பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவனின் கம்பீரத் தோற்றம்.. அவளை வசீகரித்தது..
'இவனை விட்டுப் போவதா..?'
தன் எண்ணத்தைக் கைவிட்டாள் வைசாலி..
நரசிம்மன் அன்று வைசாலியின் திருமணம் பேச்சை எடுத்ததும் வைசாலி.. மனதிற்குள் மகிழ்ந்து போனதைவிட ஜானகி அதிகமாக மகிழ்ந்து போனாள்..
"நிஜமாகவா சொல்றீங்க..?"
"பின்னே பொய்யா சொல்லுவேன்..?"
"யார் கேட்டது...?"
"கௌசிக்கின் அப்பா சுப்பிரமணியே பெண் கேட்டான்.."
"சியாமளாகிட்டப் பேசிட்டாராமா..?"
"ஏண்டி பெண்டாட்டிகிட்டப் பேசாமலா ஒருத்தன் பெத்த பிள்ளைக்குப் பெண் கேட்பான்..?"
"அவங்க பெரிய இடமாச்சே.."
"அதுதாண்டி எனக்கும் யோசனையா இருக்குது.. ஆனால் சுப்பிரமணி வேறு ஒன்றைச் சொல்கிறான்.."
"என்னவாம்.."
"கௌசிக் இத்தனை நாளாய் கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாராம்.."
அது வைசாலிக்கும் தெரியும்.. அது மட்டுமல்ல.. ஏன் கௌசிக் திருமணத்தை மறுக்கிறான் என்பதற்கான காரணமும் தெரியும்.. அது தெரிந்திருந்த காரணத்தால் கண்கள் கலங்க.. தொலைகாட்சியிலேயே பார்வையை பதித்துக் கொண்டாள்..
"நான் உங்களை காதலிக்கிறேன் கௌசிக்.."
இந்த வார்தைகளை.. விரல்கள் நடுங்க.. குரல் கமற.. நெஞ்சம் படபடக்க.. வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க.. அவனது முகம் பார்க்காமல் நிலத்தைப் பார்த்தவாறு வைசாலி சொல்லியபோது.. எந்தவித பாதிப்பும் ஏற்படாதவனாக.. கல்லையும்.. மண்ணையும் பார்ப்பதைப் போல வைசாலியையும் அவன் பார்த்து வைத்தது அவள் மனதில் பதிந்திருந்தது..
"ஸோ.. வாட்..?" அவன் நிதானமாகக் கேட்டான்.. வைசாலியின் நெஞ்சில் அந்தக் கணம் ஓர் அதிர்வு தோன்றியது..
'என்ன இப்படி.. ஒரு ரியாக்சனும் இல்லாமல் கேட்கிறான்..'
அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது..
"நான் உங்களை காதலிக்கிறேன்னு சொன்னேன்.."
ஒருவேளை தான் சொன்னதை அவன் சரியாக காதில் போட்டுக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகத்துடன் அவள் மீண்டும் கூறினாள்..
முதல்முறை சொல்லும்போது அவள் அனுபவித்த அத்தனை உணர்வுகளும் காணாமல் போயிருக்க.. எங்கிருந்தோ ஒரு ஏமாற்றம் வந்து அவள் மனதில் இருக்கை போட்டு உட்கார்ந்து கொண்டது..
"அதனால் என்னன்னு நானும் கேட்டேனே.. உனக்கு இங்கீலீஷ் தெரியாதா..?"
அவன் நிதானமாக வினவியவுடன் அவளுக்கு அவமானமாகப் போய்விட்டது.. கண்களில் சட்டென்று நீர் ததும்பிவிட.. அதை அவன் பார்த்துவிடக் கூடாதே என்ற பயத்துடன் அவள் முகம் திருப்பிக் கொண்டாள்..
"இதுக்குப் போய் ஏன் அழறே..?" அவன் வியப்புடன் கேட்டான்..
"நானொன்றும் அழலையே..." அவள் சமாளிப்பாக பதில் சொன்னாலும் கண்ணீர் குரல் அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டது..
"லுக் வைசாலி.. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்."
அதைக் கேட்டதும்.. சற்று முன் அவனால் அவமானப் பட்டதை.. மறந்து விட்டு வெட்கம் கெட்டு இந்த மனது ஏன் சிறகடிக்கிறது என்று அவள் தன்னைத் தானே கடிந்து கொண்டாள்..
"இன்னும் சொல்லப் போனால்.. நான் உன்னுடன் பழகிய அளவுக்கு வேறு எந்தப் பெண்ணிடமும் பழகியது இல்லை தெரியுமா.. என் நிஷாவிடம் கூட நான் இந்த அளவுக்கு பேசிப்பழகியது இல்லை.."
அவள் தலையில் அணுகுண்டு விழுந்தது.. அதை அவளது தலைமீது போட்டவனோ அதை உணராதவனாக.. நிதானமாக அவளிடம் தன் காதலை விவரித்துக் கொண்டிருந்தான்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: மௌனமான நேரம்..-1
மௌனமான நேரம்..-1
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1E/QVtJTEEx7RY5CsRRL5s_OaF88OXDiv9pwCLcBGAsYHQ/s320/Movunamana%2BNeram.jpg
https://1.bp.blogspot.com/-d3FQ3_-Bhe8/XqRTzHdiVSI/AAAAAAAAA1E/QVtJTEEx7RY5CsRRL5s_OaF88OXDiv9pwCLcBGAsYHQ/s72-c/Movunamana%2BNeram.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/mounamaananeram-1.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/mounamaananeram-1.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy