எங்கிருந்தோ ஆசைகள். -63

63 இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.. ? என்று நீ கேட்க ஆசைகொண்டேன்... காவ்யாவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.. தேவராஜனின் சிவந்த விழிகள்...


63
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்..?
என்று நீ கேட்க ஆசைகொண்டேன்...


காவ்யாவுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.. தேவராஜனின் சிவந்த விழிகள் உறக்கத்திலும் வந்து அவளை பயமுறுத்தின.. அவன் இந்த அளவிற்கு அவளைக் கண்காணித்திருப்பான் என்று அவள் நினைத்தும் பார்த்ததில்லை.. என்னதான் கண்ணதாசனுக்கு அவளின் காதலைப் பற்றித் தெரியுமென்றாலும் அவனைத் தாண்டி வெளியுலகத்திற்கு அது தெரிவதில் காவ்யாவுக்கு நடுக்கமிருந்தது.. அப்படித் தெரிய வந்தால் சிவதாணு திருக்குறளை மறந்துவிட்டு.. மகளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்து விடுவார் என்பதில் காவ்யாவுக்கு யாதொரு சந்தேகமும் இல்லை...
அன்னபூரணியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. அவள் முதல் வேலையாக.. கரண்டியைக் காய வைத்து செல்லமகளின் காலில் சூடு வைத்து விடுவாள்...
"இந்தக் காலுதானே வேலி தாண்டுச்சு...? கண்ணதாசா...? உன் தொங்கச்சி வேல செஞ்சு கிழிச்சது போதும்.. இனிமேப் பட்டு புருசன் வீட்டு அடுப்படியில இவ கிழிச்சாப் போதும்.. காலாகாலத்தில இவளுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வீட்டை விட்டு விரட்டியாகனும்.." என்று மகனை முடுக்கி விட்டு ஏதாவது ஒரு மீசைக்கார மாப்பிள்ளைக்கு உடனடியாக மகளை நிச்சயம் செய்து விடுவாள்...
இதை ஏன் அவள் உணராமல் போனாள்..?
காவ்யா தன்னைத்தானே கடிந்து கொண்டாள்.. அவள் பிறந்து வளர்ந்த மதுரையைப்பற்றி அர்ஜீனுக்குத் தான் தெரியாது.. அவளுக்குமா தெரியாது..?
ஒருவரின் மூச்சுக்காற்றில்கூட முந்நூறு சுளிவுகளை மதுரை மக்கள் கண்டுபிடித்து விடுவார்களே... அந்த நினைவில்லாமல் அவள் எப்படி நகரின் எல்லையைத் தாண்டத் துணிந்தாள்..? அர்ஜீனின் காருக்குள் இருந்தால் அவளை யாரும் பார்க்க மாட்டார்களா..? கடைசியில் யார் பார்வையில் படக் கூடாதோ.. அவன் பார்வையில் காவ்யா பட்டு விட்டாளே...
மறுநாள் எழுந்தபோது வீங்கியிருந்த இமைகளைப் பார்த்த கண்ணதாசன் புருவங்களை உயர்த்தினான்...
"என்னம்மா..? நைட் தூங்கலையா..?"
"தூங்கினேனே..."
"பொய் சொல்லக் கத்துக்கிட்டிருக்க..? என்ன பிரச்னை..?"
"ஒன்னுமில்லண்ணே..."
கண்ணதாசன் அவளையே இமைக்காமல் பார்த்தான்.. அவன் பார்வையை சந்திக்க முடியாமல் அவள் நிலம் பார்த்தாள்.. இப்போதெல்லாம் அவளால் அவளுடைய அண்ணனை நேர் கொண்ட பார்வையாய் பார்க்க முடிவதில்லை.. அதை உணர்ந்திருந்த கண்ணதாசனின் விழிகளில் யோசனைவந்தது...
"ஒன்னுமில்லன்னு நினைக்கிறதிலதான் ஓராயிரம் இருக்கும்.. நீ ஒன்ன மட்டும் மனசில வைச்சுக்க.. உனக்குன்னு உன்னோட அண்ணன் இருக்கான்.. எந்த பிரச்னையா இருந்தாலும் பயப்படாம எங்கிட்டக் கொண்டு வா.. நான் பார்த்துக்கறேன்.. நீயாய் மனசைப் போட்டு உழப்பிக்காதே..."
இந்தப் பிரச்னையை எப்படி அவள் அண்ணனிடம் சொல்வாள்..? அண்ணனிடம் தங்கை சொல்லும விசயமா அது..? அண்ணா.. அண்ணா.. நானும் என் காதலனும் தனியாகப் பேச ஏர் போர்ட் ரோட்டுக்குப் போனோம்.. அங்கே மரத்தடியிலே ஓரம் கட்டி காரை நிறுத்திட்டு.. திருட்டுத்தனமா நாங்க மனசு விட்டுப் பேசிக் கொஞ்சிக் குழாவினோம்.. அதை அந்த தடிமாட்டுத் தாண்டவராயன்.. திருட்டுத் தேவாங்கு தேவராஜன் பார்த்து விட்டான்.. பார்த்ததோடு நிற்காமல் கடைக்கே என்னைத் தேடிவந்து மிரட்டிவிட்டுப் போகிறான் என்றா அவள் சொல்ல முடியும்..?
எதுவும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்து வைத்தாள் காவ்யா...
கண்ணதாசனின் காரை மறுத்து விட்டு ஸ்கூட்டியை மெதுவாக ஓட்டுகிறேன் பேர்வழியென்று உருட்டிக் கொண்டு போனவளைக் கடந்து போன நடந்து போனவர்கள் அவளை வியப்புடன் திரும்பிப் பார்த்து விட்டுப் போனதை அவள் கவனிக்கவில்லை.. சந்தடி குறைந்திருந்த சாலை வளைவில் கைநீட்டி அவளின் வண்டியை நிறுத்தினான் தேவராஜன்...
'என்ன தைரியம்..!...' காவ்யாவின் கண்களில் கனல் பறந்தது..
"வழிய விடு.." பழைய காவ்யாவாக மாறி அவள் சீறினாள்...
"விடலாம்.. விடலாம்.. அதுக்கு முன்னாலே உங்கிட்டக் கொஞ்சும் பேசனுமே..."
'கொஞ்சம்' என்ற வார்த்தையை 'கொஞ்சும்' என்று மாற்றிச் சொன்னவனை எரித்து விடுவதைப் போல பார்த்தாள் காவ்யா...
"நீ ரொம்பத்தான் எல்லை மீறிப் போற.. கேக்கிறதுக்கு ஆள் இல்லன்னு நினைச்சியா..? என் அண்ணன்கிட்ட ஒத்தச் சொல்ல நான் சொன்னேன்னு வைய்யி.. உனக்குத் திருவிழா கொண்டாடிப் புடும்டி..."
"தெனாவெட்டாத்தான் பேசற புள்ள.. உங்கண்ணன் திருவிழாக் கொண்டாடறதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. இது பனங்காட்டு நரி.. சலசலப்புக்கு அஞ்சாது.."
"நீ நரிங்கிறதுதான் இந்த மதுரைக்கே தெரியுமே.. மதுரையில பிறந்தவன் சிங்கமா இருக்கனும்.. உன்னப் போல ஒளிஞ்சு நின்னு போட்டுக் கொடுக்கிற நரியா இருக்கக் கூடாது.."
"ஓ.. அப்புடியா..? நான் நரி.. அந்த அர்ஜீன் பய சிங்கமா..? அந்தச் சிங்கம்தான் உங்கிட்ட பணப் பொறுப்ப ஒப்படைக்கிறதப் போல ஒப்படைச்சிட்டு.. சரியா.. ஒன்னாந்தேதியன்னைக்கு செக் பண்ண வந்து நின்னுச்சு..."
"என்ன சொல்ற...?"
"அந்த சிங்கம் உன்ன நம்பலன்னு சொல்றேன்.. ஒன்னாந் தேதியன்னைக்கு நீ ஒழுங்கா பணத்த பட்டுவாடா பண்றயா இல்லையான்னு பாக்க ஓடி வந்து நின்னுச்சுன்னு சொல்றேன்..."
"உளராதே..."
"இப்ப இது உளரலாத்தான் இருக்கும்.. ஒரு நா நீ இதைப்பட்டுப் பார்ப்ப பாரு.. அப்ப இந்த தேவராஜன் உண்மையைத்தான் சொல்லியிருக்கான்னு உனக்கு உறைக்கும்..."
"நீ பெரிய உண்மை விளம்பிதான் வழியவிடு..."
காவ்யா வண்டியை விலக்கி ஓட்டினாள்.. தேவராஜன் பேசிய வார்த்தைகள் காற்றில் கலந்து வந்து அவள் காதுகளில் எதிரொலித்தன...
"போ காவ்யா.. அந்த அர்ஜீன் பணவிசயத்தில உன்னச் சந்தேகப்பட்டான்.. இதுதான் உண்மை.. இத மழுப்பப் பார்க்காதே..."
அன்று முழுவதும் அந்த வார்த்தைகளே அவள் மனதில் சுற்றிச் சுழன்றன.. அவளுடைய அர்ஜீன் அவள்மீது சந்தேகப் பட்டானா..? பணவிசயத்தில் அவளை நம்பவில்லையா..?
'இருக்காது...'
என்னதான் மனதுக்குள் அதை உருப் போட்டுக் கொண்டாலும்.. அவள் முதன்முதலாக பேங்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு வந்தபோது சென்னையிலிருந்து திடிர் பயணமாக சொல்லாமல் கொள்ளாமல் அர்ஜீன் வந்து இறங்கியிருந்தான் என்பது அவள் நினைவில் உழன்றது...
விரட்டியடித்தாலும் விலகிச் செல்லாமல் சில சந்தேகங்கள் மனதில் தங்கி விடுவதுண்டு.. காவ்யாவின் மனதிலும் அதுபோல அர்ஜீனைப் பற்றிய அந்தச் சந்தேகம் விதையாய் விழுந்து விட்டது...
பார்த்தசாரதியினால் தன் காதுகளில் விழுந்த துரியோதனின் குரலை நம்ப முடியவில்லை...
"முதல்ல நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன் பார்த்தா..."
துரியோதனின் 'பார்த்தா..' என்ற அழைப்பில் பள்ளிப் பருவத்திற்கு திரும்பிச் சென்றார் பார்த்தசாரதி...
"விடு துரி.. பழசையெல்லாம் இப்ப எதுக்கு கிளறனும்..."
பெருந்தன்மையாய் பள்ளிப் பருவத்தில் 'துரி' என்று அழைத்ததைப் போலவே அழைத்துப் பதில் சொன்னார் பார்த்தசாரதி...
"இல்லப்பா.. நான் செஞ்சது மன்னிக்க முடியாத குத்தம்தான்..."
"அதப் பேசி இப்ப என்னவாகப் போகுது...?"
"நீ பழசையெல்லாம் மறந்திரனும்..."
"எப்பவோ மறந்திட்டேன்.. நீ எப்படி இருக்க..? எத்தனை குழந்தைகள்..?" பார்த்தசாரதி நலம் விசாரிப்பதில் இறங்கினார்...
துரியோதனனுக்கு அதுதானே வேண்டும்..? அவர் அதற்காகத்தானே காத்திருந்தார்..? பார்த்தசாரதியின் நல விசாரிப்பை இறுக்கிப் பிடித்துக் கொண்டார்...
"குழந்தைகளா..? புள்ளைக ரெண்டும் கல்யாண வயசில நிக்குதுகப்பா.. மூத்தவன் தேவராஜன்.. ஜவுளிக் கடையைப் பார்த்துக்கிறான்.. அடுத்தவ தேன்மொழி.. டிகிரி படிச்சிருக்கா.. அவங்க அம்மா ஜாடையில அழகா அம்சமா குத்துவிளக்கப் போல இருப்பா.. அவளுக்குத்தான் மாப்பிள்ளை தேடிக்கிட்டிருக்கேன்..."
"ஈஸிட்..? கல்யாணத்தை முடிவு பண்ணின உடனே இன்விடேசன் அனுப்பு.. கட்டாயம் கல்யாணத்தில வந்து கலந்துக்கறேன்..."
"என்னப்பா இப்படிச் சொல்லிப்புட்ட..? நீ பொண்ணுப் பாக்க வர்றேன்னு சொல்லுவன்னு பார்த்தா.. மூனாம் மனுசனப் போல கல்யாணப் பத்திரிக்கையை அனுப்பி வைய்யின்னு சொல்ற..? ஏன்.. உன் மகனுக்கு என் பொண்ண கட்டிக்க மாட்டியா..?"
துரியோதனன் கேட்டு விட்டார்.. பார்த்தசாரதியின் தாடை இறுகியது.. அவர் இதை எதிர்பார்த்திருக்கவில்லை.. பள்ளிப் பருவத்து சிநேகிதன்.. பழைய காலத்தில் நடந்து போன நிகழ்விற்காக மன்னிப்புக் கேட்கிறான் என்று நினைத்து நான்கு வார்த்தைகள் பேசினால்.. துரியோதனன் உடனே தன் பெண்ணுக்கு அவர் மகனை மாப்பிள்ளை கேட்பார் என்று அவர் கனவா கண்டார்..?
'எப்படித் தட்டிக் கழிப்பது..?'
பார்த்தசாரதி யோசித்தார்.. இது முள் மீது கிடக்கும் துணியை கவனமாக எடுக்க வேண்டியதைப் போன்றது...
பார்த்தசாரதியின் வார்த்தைகள் துரியோதனனைக் காயப்படுத்தி விடக்கூடாது.. ஏற்கனெவே துரியோதனன் சின்னஞ்சிறு வயதில் சொல்லிய ஒற்றை வார்த்தைக்காக அவரைக் காயப்படுத்தி.. அவரது கடையையே விலைக்கு வாங்கி பாடம் கற்பித்தாகி விட்டது.. இனியும் அது தொடரக்கூடாது.. பார்த்தசாரதியின் உயரத்திற்கு அது அழகில்லையென்று அவர் நினைத்தார்...
துரியோதனனின் மனதைக் காயப் படுத்தாமல் அவரது பெண்ணை மறுக்க வழியொன்றைக் கண்டு பிடித்தார் பார்த்தசாரதி..
"அர்ஜின் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் துரி..."
பார்த்தசாரதி என்னவோ.. நேகாவை மனதில் வைத்துக்கொண்டுதான் அந்த வார்த்தைகளைச் சொன்னார்.. அவருக்குத் தெரியும்... அர்ஜீன் நேகாவை விரும்பவில்லை என்பது.. அவன் கனடாவிலிருந்து வந்ததும் ஆனந்தியின் மூலமாக அவனை வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.. அதனால்தான் அப்படியொரு காரணத்தைச் சொன்னார்...
பொய்யானதொரு காரணத்தைச் சொல்லித் தப்பிக்கப் பார்த்த பார்த்தசாரதிக்கு உண்மை தெரியாது.. அவர் சொன்னதைப்போலவே அவர் மகன் காதலில் ஆழ்ந்திருக்கிறான் என்பது.. அவன் மதுரைக்கு அடிக்கடி செல்வது அந்த மண்வாசனையை நுகர்வதற்காக மட்டுமில்லை.. அந்த மண்ணின் மகளின் தலையில் சூடியிருக்கும் மல்லிகையின் வாசனையை நுகர்வதற்காக என்பதை அவர் அறியமாட்டார்...
"அந்தப் பெண்ணைத்தான் அவன் கல்யாணம் செய்துக்கிறதா வாக்குக் கொடுத்திருக்கிறானாம் துரி.. அவனுக்காக நான் பெண் பார்த்தப்ப அவன் தன்னோட காதலைச் சொன்னான்.. நானும் ஓகேன்னு சொல்லிட்டேன்.. அவன் விருப்பம்தான் எனக்கு முக்கியம் துரி.. உன்கூட சம்பந்தம் பண்ணிக்கனும்னு எனக்கும் ஆசைதான்.. ஆனா.. அவன் மனசில வேற ஒரு பெண் இருக்கே துரி..."
அர்ஜீனின் காதலை அறியாமலே அவன் காதலைக் காட்டி பார்த்தசாரதி துரியோதனனின் மகளை மறுத்து விட்டார்.. விவரமறிந்த தேவராஜனின் மனதில் வெற்றிப் புன்னகை வந்தது.. அவன் நினைத்தது நடந்துவிட்டது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -63
எங்கிருந்தோ ஆசைகள். -63
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-63.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-63.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy