எங்கிருந்தோ ஆசைகள். -62

62 பொத்திவைத்த காதலையே - நீ.. பாதுகாக்க ஆசைகொண்டேன்... ' இவனுக்கு இது எப்படித் தெரியும்.. ?' அதிர்ந்து விழித்தாள் காவ...


62
பொத்திவைத்த காதலையே - நீ..
பாதுகாக்க ஆசைகொண்டேன்...


'இவனுக்கு இது எப்படித் தெரியும்..?'
அதிர்ந்து விழித்தாள் காவ்யா.. அவளுடைய அந்த அதிர்வைத் திருப்தியுடன் பார்த்தான் தேவராஜன்...
'சும்மா அதிருதில்ல...'
இப்படித்தானே அவனுக்கும் இருந்திருக்கும் என்றிருந்தது அவனுக்கு.. பிடித்துப் போய் விட்டது என்று பார்க்க வந்தால் அதற்காக உலக மகாப் பேரழகியைப் போல முகத்தை வைத்துக் கொண்டு அவனைப் புறக்கணித்தால் என்ன அர்த்தம்..? மற்றவர்கள் கேலி பேசுவதை ரசித்துச் சிரித்தால் என்ன அர்த்தம்..? அவளுக்கு அவனைப் பார்த்தால் கோமாளியைப் போல இருக்கிறதா..?
இல்லையென்பதை அவன் உணரவில்லை... காவ்யா அவனை ஒருநாளும் வெறும் கோமாளியென்று நினைத்ததே இல்லை.. அவனை நினைத்தால் அவளின் முதுகுத்தண்டு ஜில்லிட்டிருக்கிறது.. அவன் குரூரம் நிறைந்த கொடிய வில்லன் என்பதில் அவளுக்கு யாதொரு சந்தேகமும் இருந்ததில்லை...
அவனை அவள் அறிவாள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை...
"என்னடா இது.. நம்ம கடையை வாங்கின மகராசன் பிளேனையும் பிடிக்கப் போகாம.. மதுரைப் பக்கமும் திரும்பாம ரோட்டோரமா மரத்தடியில காத்து வாங்கறாரே.. அவரு தங்கியிருக்க ஏஸி ரூமில காத்து வரலையான்னு எட்டிப் பாத்தேன்..."
காவ்யாவின் கை விரல்கள் நடுங்குவதை குரூரமாகப் பார்த்தபடி அவன் பேசப்பேச.. ஏதோ இருக்கிறது என்பதை உணர்ந்து விட்டாள் பாவனா...
"தேவா சார்.. வேலைவெட்டி இல்லைன்னா உங்க வீட்டில போய் உட்கார்ந்து கதை பேசுங்க.. நீங்க ரோடு ரோடாய் சுத்தின கதையைக் கேட்க எங்களுக்கு நேரமில்லை... என்ன ஏகாம்பரம் சார்.. இவர் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்காரு.. நீங்க வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்களே.. இதுதான் நீங்க எங்களைக் காவல் காக்குற லட்சணமா..?"
ஏகாம்பரத்தை கொம்பு சீவி விட்டாள் அவள்.. அர்ஜீன் கனடாவுக்கு கிளம்பும் போது.. காவ்யாவை ஜாடையாகப் பார்த்தபடி ஏகாம்பரத்திடம்...
"மிஸ்டர் ஏகாம்பரம்.. நீங்க வயதில பெரியவர்... நம்ம கடையில வேலை பார்க்கிற பெண்களுக்கு நீங்கதான் பாதுகாவலாய் இருக்கனும்.." என்று சொல்லி வைத்திருந்தான்..
அதை பாவனா நினைவுபடுத்தியதில் மெய் சிலிர்த்துப் போனார் ஏகாம்பரம்.. எவ்வளவு பெரிய பொறுப்பை முதலாளி அவரிடம் ஒப்படைத்து விட்டுப் போயிருக்கிறார்.. அந்தப் பெண்மணிகள் இருவரும் அவரின் கண்மணிகள் அல்லவா..? அந்தக் கண்மணிகளின் முன்னால் வந்து நின்று தேவாங்கு கடலை போடுவதா..? அதை கர்ம வீரனான அவர் பார்த்துக் கொண்டிருப்பதா..?
"நீ வேறம்மா.. இவரு பேசினா இவரு வீட்டில காது கொடுத்துக் கேட்பாங்கன்னா நினைக்கிற..? அதது அப்பன் சேர்த்து வைச்சிருக்கிற சொத்தை ஆயிரம் மடங்கா பெருக்கிக் காண்பிக்கும்.. இது அப்படியா..? அழிக்கல்ல பிறந்திருக்கு..."
"ஏகாம்பரம்..."
"என்ன..?"
"பார்த்துப் பேசு..."
"நீ முதல்ல மரியாதையாய் பேசு.."
"வயசுக்குத் தக்கன பேசனும்.. நீ அப்படியா பேசற..? உனக்கெல்லாம் எதுக்கு மரியாதை..?"
"என் வயசுக்குத் தக்க பேச்சத்தான் நான் பேசறேன்.. இங்க இருக்கிற பொம்பளப் புள்ளகளக் கேட்டுப் பார்.. இதுக கிட்ட அப்பன் மாதிரி பழகறேன்னு இதுக சொல்லும்.. நீ அப்படியா..? கடைக்கு வந்தா கடையைப் பாத்துப்புட்டு போயிடனும்.. பொம்பளப் புள்ளக முன்னாடி வந்து நின்னு ஊருக்கதையை பேசிக்கிட்டு இருக்க.. முதலாளிக்குப் போன் போட்டேன்னு வைய்யி.. உன்னக் கழுத்தப் பிடிச்சு வெளியே தள்ளச் சொல்லுவாரு..."
இப்போது தேவராஜன் அதிர்ந்து விட்டான்.. இப்படிப்பட்ட பேச்சுக்களை ஏகாம்பரம் பேசிவிடுவா-ரென்று அவன் எதிர்பார்த்திருக்க வில்லை... என்னதான் அந்தக் கடையின் தற்போதைய முதலாளியாக அவன் இல்லையென்றாலும்.. ஒரு காலத்தில் அவன் அந்தக் கடையின் முதலாளியாக இருந்திருக்கிறான்.. அவனைப் போய் இப்படிப் பேசுவதா..?
அவன் அதிர்வைத் திருப்தியுடன் கவனித்தாள் காவ்யா...
'சும்மா அதிருதில்ல...' அவள் கண்கள் கேட்டன...
ஏகாம்பரம் போட்ட சத்தத்தில் கடையில் இருந்த மற்றவர்கள் அங்கே ஓடி வந்தார்கள்...
"என்னாச்சு ஏகாம்பரம்..?"
"உன்னைச் சொல்லனும் கந்தசாமி.. கடைக்கு யார் வந்தாலும் கதவைத் திறந்து விட்டுருவியா..?"
"ஏம்ப்பா ஏய்ய்.. இவரு நம்ம பழைய முதலாளியோட மகன்ப்பா..."
"நான் மட்டும் மருமகன்னா சொன்னேன்..? எங்களுக்கும் அந்தக் கழுதையைத் தெரியுது.. இவரு பழைய முதலாளியோட மகன்தான்.. பழைய முதலாளியில்ல.. இவரை உள்ளே விடக் கூடாதுன்னு நம்ம புதுமுதலாளி சொல்லியிருக்காரா.. இல்லியா..?"
ஏகாம்பரத்தின் கேள்வியில் கந்தசாமிக்கு 'கெதுக்' கென்று இருந்தது.. அர்ஜீன் அப்படிப்பட்ட உத்தரவைப் பிறப்பித்திருந்தான்.. ஆனாலும் கந்தசாமிதான் மனது கேட்காமல் தேவராஜன் வரும்போது அவனை கடைக்குள் அனுமதித்து விடுவார்...
'இத இந்த ஏகாம்பரம் பய முதலாளிகாதில ஓதி விடுவானோ...'
அவர் பயந்துவிட்டார்.. அந்த பயத்தில் எழுந்த கோபத்தில் தேவராஜனை அதட்டி விட்டார்...
"ஏந்தம்பி.. கடையைப் பாக்க வந்தா பாத்துப் புட்டு.. பாத்த சுவடு தெரியாம ஓடிப் போயிர வேண்டியதுதான..? அதவிட்டுட்டு எதுக்காக பொம்பளப்புள்ளக இருக்கிற பக்கமா வந்து நின்னு பேச்சுக் கொடுக்கறிங்க..?"
கடையில் வேலை செய்த மற்ற வேலையாள்களின் முகம் மாறியதைக் கவலையுடன் கவனித்தான் தேவராஜன்.. இதற்குப்பின்னால் அவன் அந்தக் கடைக்கு இயல்பாக வந்து போக முடியுமா..?
"என்ன கந்தசாமியண்ணே இப்படிப் பேசிப் புட்டிங்க.. இந்தப் புள்ளைகள்ளாம் யாரு..? எனக்கு முன்னப்பின்ன தெரியாதவங்களா..? இவங்ககிட்ட இன்னைக்கு நேத்தா பழக்கமிருக்கு..?"
அவன் கந்தசாமியை நியாயம் கேட்டுக் கொண்டிருந்த போது..
"எனக்கு உங்ககூடப் பழக்கமில்ல தேவா சார்..." என்றாள் பாவனா...
"நீங்க ஜஸ்ட் தெரிஞ்சவர்தான்.. கடையோட ஒனரோட மகன்.. அந்த வகையில உங்ககிட்ட முகம் கொடுத்துப் பேசுவேன்.. மத்தபடி நீங்க சொல்றதைப் போல நாம ஒன்னும் பழகிப் பார்த்ததில்லயே.. ஏண்டி காவ்யா.. நீ இவர்கூடப் பழகியிருக்கயா..?"
"சீச்சி.." காவ்யா வெறுப்பைக் கக்கினாள்..
அந்த ஒன்றிற்காகவே அவள் கழுத்தில் தாலியைக் கட்டிவிட வேண்டும் என்ற கொலைவெறிக்கு ஆளானான் தேவராஜன்..
"நீங்க கிளம்புங்க தேவராஜன்..."
என்றைக்குமே அவனைப் பெயர் சொல்லி அழைத்திராத இளங்கோ அவன் பெயரைச் சொல்லிக் கிளம்பச் சொன்னதில் தேவராஜனின் ரத்த அழுத்தம் எகிறியது...
"தங்கராஜ்..."
தேவராஜன் பக்கபலத்திற்கு ஆள் தேடினான்.. தினமும் தேவராஜனின் பணத்தில் தாகசாந்தி செய்து.. புரோட்டாவையும்.. பூரியையும் ஒரு கைபார்க்கும் தங்கராஜ்.. வாரா வாரம் தேவராஜன் படியளக்கும் தங்கராஜ்.. நிச்சயமாக உதவிக்கரம் நீட்டுவான் என்று தேவராஜன் நம்பினான்...
அவனோ.. தேவராஜன் இப்படிச் செய்து வைத்து விடுவான் என்பதை எதிர்பார்த்திருந்தவனைப் போல செல்போனை காதுக்கு கொடுத்து...
"என்ன..? நீங்க பேசறது கேக்க மாட்டேங்குது.. இங்கே டவர் கிடைக்கல.. பொறுங்க.. வாசலுக்கு வந்து பேசறேன்..." என்று கதையளந்தபடி வாசலுக்கு ஓடிப் போய் விட்டான்...
'அடப்பாவி.. வெத்து செல்போனை காதுக்கு கொடுத்து பேசற டிரிக்க எத்தனை இடத்தில நான் யூஸ் பண்ணியிருப்பேன்..? இன்னைக்கு என்னடான்னா எங்கிட்டயே ஒருத்தன் அந்த டகுல்பாச்சி வேலயக் காட்டறானே...'
தேவராஜனுக்கு தங்கராஜின் உதவியும் கிடைக்கவில்லை...
"தேவராஜன்..." இளங்கோ அழுத்தமாக அழைத்தான்...
அவன் புதிதாகக் திருமணம் ஆணவன்.. கடைத் தெருவிற்கோ.. சினிமாவிற்கோ புதுப்பெண்டாட்டியை அழைத்துச் சொல்லும்போது.. வேறு யாரும் அவளைப் பார்த்துவிடக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வுடன் பெண்டாட்டிக்குத் தெரியாமல் கண்காணிப்பவன்.. பெண்களைக் கவால் காக்கும் பொறுப்பை உணர்ந்த பின்னால் தேவராஜனின் வரவு எதற்காக என்பது அவனுக்கு விளங்கிவிட்டது..
"இது கடை தேவராஜன்.. வேலை நடக்கிற இடம்.. இனிமே நீங்க கடைப்பக்கம் வந்தா எங்ககூடப் பேசிட்டுப் போயிடனும்.. கடைக்குப் பின்னாலே இருக்கிற ஆபிசில வேலை செய்யற பொம்பளப் புள்ளககிட்ட கடலை வறுக்கக் கூடாது..."
"நீ வேற இளங்கோ.. இந்த ஆளு கடையைப் பாக்கவா வர்றாரு..? கடலை வறுக்கத்தான வர்றாரு..."
"இத்தன நாளா இது எனக்குத் தெரியாம போச்சே ஏகாம்பரம் சார்..?"
"சொல்லியிருப்பேன்.. இந்தப் புள்ளகை ரெண்டும் புத்திசாலிக.. என்னதான் இந்த ஆளு வருந்தி.. வருந்தி கடலை வறுத்தாலும் திரும்பிக் கூடப் பார்க்காதுகங்கிறதினால பேசாம விட்டேன்.."
"ஆனாலும் கந்தசாமியண்ணே.. முதலாளி சொல்லியிருந்தும் இவரை கடைக்குள்ள நீங்க விட்டது தப்புத்தான்..."
"இப்புடின்னு கண்டேனா இளங்கோ.. ஒரு நா.. ஒரு பொழுதில இவங்கப்பா கையால சம்பளம் வாங்கினோமேங்கிற நினைப்பில இருந்திட்டேன்.. இனிமே சுதாரிப்பா இருக்க மாட்டேனா.."
அவர்கள் கூடிப் பேசிய விதத்தில் பாதிக்கப்பட்ட தேவராஜன் விடுவிடுவென்று நடையைக் கட்டி விட்டான்...
"ஒரு வழியாத் தொலைஞ்சான்.." வெறுப்புடன் சொன்னார் ஏகாம்பரம்...
"தூள் கிளப்பிட்டிங்க ஏகாம்பரம்... நான்கூட உங்களை என்னமோன்னு நினைச்சேன்..."
"என்னன்னு நினைச்சேம்மா..?"
"அடிதடின்னு வந்திட்டா நீங்க மேஜைக்கு கீழே பதுங்கிக்குவிங்கன்னு நினைச்சேன்.. அந்த நினைப்பை பொடிப் பொடியாக்கிட்டிங்க.. போங்க..."
"இப்பவும் என்னை பத்திவிடறதிலதான் நீ குறியாய் இருக்க..?"
"உங்களைப் போய் பத்திவிடுவேனா சார்.. ஆணாணப்பட்ட இடிச்சபுளி தேவாங்கையே பத்தி விட்ட மாவீரனாச்சே நீங்க.. எங்கிருந்து சார் இவ்வளவு வீரம் பொங்குச்சு..?"
"என்னைக்கு என் வீட்டுக்காரியப் பாத்து கடைப்பக்கம் வராதேன்னு இவன் சொன்னானோ அன்னைக்கு பொங்கின வீரம் இதும்மா..."
"என்னது..?!"
பாவனாவும்.. காவ்யாவும் ஒருமித்த குரலில் ஆச்சரியமானார்கள்.. அவர்கள் அந்தப் பதிலை எதிர்பார்த்திருக்க வில்லை..
அந்தப் பாடு படுத்தும் மனைவியை அதட்டினான் என்பதற்காக வருசக்கணக்காக தேவராஜன் மீது ஏகாம்பரம் வன்மம் வைத்திருந்தாரா..?
"நம்ப முடியலை சார்..." பாவனா தன் கையைத் தானே கிள்ளிக் கொண்டாள்...
"இதில நம்பாம இருக்கிறதுக்கு என்னம்மா இருக்கு..? எனக்கும் என் வீட்டுக்காரிக்கும் ஆயிரம் சண்டை இருக்கும்.. நாங்க அடிச்சுக்குவோம்.. கூடிக்குவோம்.. இவன் எப்படிம்மா என்முன்னாடியே என் பொண்டாட்டிய அதட்டலாம்.. அப்புறம் அவளுக்கு புருசன்னு நான் மீசை வைச்சிருக்கிறது என்னத்துக்கு..?"
"ஆஹா.. காவ்யா கேட்டுக்கிட்டயாடி.. இதுவல்லவோ புருச தர்மம்.. புல்லரிக்குது சார்..."
அன்று முழுவதும் பாவனாவும் காவ்யாவும் ஏகாம்பரத்தின் அந்தத் தன்மையைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்...
"கல்லானாலும் கணவன்.. புல்லானாலும் புருசன்னு இதுக்குத்தான் சொல்லியிருப்பாங்களோ...?"
பாவனா சந்தேகம் கேட்டாள்.. அதை ஏகாம்பரத்திடம் கேட்கச் சொன்னாள் காவ்யா...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -62
எங்கிருந்தோ ஆசைகள். -62
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-62.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-62.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy