எங்கிருந்தோ ஆசைகள்..-56

56 உன்மீது நான்கொண்ட ஆசையை.. நித்திரையிலும் நீயுணர ஆசைகொண்டேன்.. ஒற்றைவிரலை உயர்த்தி எச்சரிக்கை செய்து விட்டு அன்னபூரணியும் அகன...


56
உன்மீது நான்கொண்ட ஆசையை..
நித்திரையிலும் நீயுணர ஆசைகொண்டேன்..


ஒற்றைவிரலை உயர்த்தி எச்சரிக்கை செய்து விட்டு அன்னபூரணியும் அகன்றுவிட.. அவசரமாய் கதவை அடைத்து.. விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தாள் காவ்யா...
அன்னபூரணிதான் எச்சரித்துவிட்டுப் போயிருந்தாளே..
"பேசாம தூங்கப் போறியா.. இல்ல.. உன் அப்பாவ எழுப்பி உனக்குப் புத்தி சொல்ல அனுப்பி வைக்கவா..? அவரு திருக்குறளுப் புத்தகத்த தூக்கிக்கிட்டு வந்தாத்தான் நீ சரிப்படுவ..."
அதற்கு மேலும் விழித்திருந்து.. விடியவிடிய திருக்குறளைப் படிக்க காவ்யாவுக்கென்ன ஆசையா அலைமோதுகிறது..?
அவள் அன்னபூரணி சொன்னதைப்போல இழுத்துப்  போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.. காலையில் கண்விழித்த போதே மனதுக்குள் அர்ஜீனைப் பார்க்க வேண்டும் என்ற பரபரப்பு வந்து தொற்றிக் கொண்டது..
அவசரமாக குளித்து.. உடை மாற்றி.. வேலைக்குச் செல்லத் தயாராகி அவள் மாடிப்படிகளில் இரண்டிரண்டு படிகளாக இறங்கியபோத.. ஹாலில் பேப்பரும்.. காபியுமாக அமர்ந்திருந்த கண்ணதாசன் புருவங்களை உயர்த்தினான்..
காவ்யாவின் மனதில் அபாயமணி அடித்தது.. கண்ணதாசன் சுவர் கடிகாரத்தைப் பார்த்து விட்டு காவ்யாவையும் பார்த்தான்...
"என்னண்ணே..."
"இப்ப மணி என்ன தெரியுமா..?"
"ஏண்னே.. நேரமாகிருச்சா..?"
"அப்படி ஆகியிருந்தாத்தான் அது எப்பவும் போலன்னு நினைச்சுக்கிட்டிருப்பேனே.. இப்ப மணி ஏழுகூட ஆகலை.. இந்த நேரத்தில கடையைத் திறந்திருப்பாங்களா..?"
கண்ணதாசனின் அமர்த்தலான கேள்வியில் காவ்யாவின் முகத்தில் குடம்.. குடமாக அசடு வழிந்தது...
"அதுண்ணே.. கோவிலுக்குப் போகலாம்ன்னு..."
"இன்னைக்கு வெள்ளிக்கிழமையா..?"
"இல்லைண்ணே.. வெள்ளிக்கிழமைதான் கோவிலுக்குப் போகனுமுன்னு சட்டம் எதுவும்மிருக்கா.."
"இல்லைதான்..."
பேப்பரை மடித்து.. நீவி.. நிதானமாக அதை டீப்பாயின்மீது போட்டுவிட்டு நிமிர்ந்த கண்ணதாசன் எழுந்து தங்கையின் அருகில் வந்தான்..
"சட்டம் போட்டு நம்ம மனசக் கட்டுப்படுத்த முடியாதும்மா.. நாமதான் அதைக் கட்டுப்படுத்தனும்.. இன்னைக்கு நீ லீவு போடனுமே..."
"அண்ணே.." ஏறக்குறைய அலறிவிட்டாள் காவ்யா..
"மெல்ல.. இப்ப நான் என்னத்தைச் சொல்லிப் புட்டேன்னு இந்தச் சத்தம் போடற..? அப்பா எழுந்திருச்சிரப் போறாரு.. அம்மா அடுப்படிய விட்டு வந்திரப் போகுது.."
"அரட்டிப் பாக்கறியா.."
"உன்னை அரட்டியெல்லாம் கட்டுப்படுத்த முடியாதுன்னு எனக்கும் தெரியும்..."
"தெரிஞ்சுக்கிட்டே ஏன் வழிய மறிக்கற.. வழிய விடு.."
"நீ எக்கேடோ கெட்டுப் போன்னு உன் வழியில போகவிட என்னால் முடியாது..."
"இன்னைக்கு நான் லீவு போட மாட்டேன்..."
"ஏன்..?"
"முக்கியமான வேலையிருக்கு..."
"எது.. அந்த அர்ஜீனை கனடாவுக்கு அனுப்பி வைக்கிற முக்கியமான வேலையா..?"
அவன் கண்டுபிடித்து விட்டான் என்ற உணர்வில் உதட்டைக் கடித்துக் கொண்டாள் காவ்யா...
"தெரியுதில்ல.. அப்புறமும் எதுக்காக அலற வைக்கிற..? என்னைப் போக விடுண்ணே..."
கண்ணதாசன் தங்கையின் முகத்தையே கூர்மையாகப் பார்த்தான்.. அதில் தெரிந்த கோபத்தில் காவ்யா ஆடிப் போனாள்.. அதுநாள் வரை அவள் சந்தித்திராத அவளுடைய அண்ணனின் இன்னொரு முகத்தில் அவள்மனம் பதறியது...
'இந்த அண்ணன் என்காதலை ஏத்துக்காதா..?'
"ப்ளீஸ் அண்ணே... வழியை விடு.."
அவள் கண்ணீருடன் கெஞ்சினாள்.. அவள் விழிகளில் தெரிந்த யாசிப்பில்.. பரிதவிப்பில்.. மனத் துடிப்பில்.. கண்ணதாசனின் இதயம் கசிந்து உருகியது...
அவளின் காதலின் தவிப்பில் அவன் கரைந்து நின்றான்...
"என்னடி காவ்யா.. இந்த நேரத்தில எங்கே போற..?" கையில் காபித்தம்ளருடன் சமையலறையிலிருந்து அன்னபூரணி வெளிப்பட்டாள்..
'அம்மா வந்துருச்சே...'
இனித்தப்பித்து ஓட முடியாது என்ற நிலையில் காவ்யாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது...
"பாவனா வீட்டுக்குப் போகிறதாம்மா..." கண்ணதாசன் காவ்யாவின் சார்பாக பதில் சொன்னான்...
'இதென்ன புதுக்கதை...' காவ்யா திகைத்துப் போனாள்...
அவளைத் தடுத்து நிறுத்தியவனே உதவிக்கரம் நீட்டுகிறானா..?
"காபித் தண்ணியக்கூடக் குடிக்காம அவ வீட்டுக்கு இந்த நேரத்தில இவ எதுக்காக போறாளாம்..?" அன்னபூரணி மகளிடம் காபியை நீட்டியவாறே அதட்டினாள்...
"என்னமோ அவ வீட்டில பூஜையாம்.. நம்ம காவ்யாவயும் கூப்பிட்டாங்களாம்.. இதுக்குத்தான் சாமி கும்பிடறதுன்னா லட்டு ஜிலேபியச் சாப்பிடதப் போல அவ்வளவு இஷ்டமாச்சே.. அதான் விட்ட விடிகாலையிலேயே ஓடுது.."
"அதுக்காக சாப்பிடாமக் கூடவா ஓடுவாங்க..?"
"அவங்க வீட்டில விருந்து ஆக்குறாங்களாம்..."
"என்னமோ போப்பா.. இவள காலாகாலத்தில ஒருத்தன் கையில பிடிச்சுக் கொடுத்தாத்தான் எனக்கு நிம்மதி.. என்னான்னு தெரியல.. இந்த ஒரு மாசமா படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது..." அன்னபூரணி புலம்பினாள்...
தாய் அறியாத சூளில்லை என்ற குற்ற உணர்வில் உதட்டைக் கடித்துக் கொண்டாள் காவ்யா...
அன்னபூரணி சமையலறைக்குள் போய் விட்டாள்.. காவ்யா கண்ணதாசனை அனுமதி வேண்டும் பார்வையினைப் பார்த்தாள்...
"போ..." என்று ஒற்றைச் சொல்லில் அனுமதி அளித்தான் அவன்..
"அண்ணே..." நன்றியுடன் அவனைப் பார்த்து விட்டு ஓட்டமும் நடையுமாக வாசலுக்குப் பாய்ந்தாள் காவ்யா...
அவள் வண்டியை எடுத்துக் கொண்டிருந்த போது கண்ணதாசன் வாசலுக்கு வந்தான்...
'என்னாச்சு..? மனசைமாத்திக்கிட்டேன்.. நீ போக வேணாம்ன்னு சொல்லப் போகுதா..?' காவ்யா திகிலடைந்து போனாள்..
கண்ணதாசன் மௌனமாக அவளிடம் ஆயிரம் ரூபாய் நோட்டை நீட்டினான்...
"அண்ணே..." புரியாமல் விழித்தாள் காவ்யா...
"மாசக் கடைசி.. உன் கையில பணமிருக்காது.. காலயிலயும் சாப்பிடாம.. மதியத்துக்கும் சாப்பாட்டைக் கட்டிக்காம கிளம்பிப் போற.. வயித்தைக் காயப் போடாம ஹோட்டலில வாங்கிட்டு வரச் சொல்லி கடையில வைச்சுச் சாப்பிட்டிரு..."
அவனின் கரிசனத்தில் காவ்யாவுக்கு கண்ணீர் வந்து விட்டது.. அதற்கு மேலும் அங்கே தாமதித்தால் அவனின் பாசத்துக்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள் போய் விடுவோமோ என்ற பயத்துடன் அவள் பேய் போல வண்டியை விரட்டினாள்.. மனதுக்குள் லேசான துயரமும்.. சஞ்சலமும் மையம் கொண்டிருந்தன.. வழியில் இருந்த பெருமாள் கோவிலின் முன்பு வண்டியை நிறுத்தி விட்டு இறங்கினாள்.. கலக்கம் வரும் போதெல்லாம் அவளின் கண்ணீரைத் துடைக்கும் அந்த கார்மேக வண்ணனின் கருணை இப்போது எங்கே போய்விட்டது என்ற கேள்வியுடன் கோவிலுக்குள் நுழைந்தாள்...
அதிகாலையின் கோவில் பிராகாரம் அழகாக இருந்தது.. நீர் தெளித்துக் கோலமிடப்பட்டக் கல் தரையில் நடந்தபோது மனதுக்குள் இருந்த துயரமேகம் விலகி.. அமைதி தவழ்வதை உணர்ந்தாள் காவ்யா...
கோபுரத்தின் மாடங்களில் சிறகடித்த கோவில் புறாக்களைப் பார்த்தபோது.. இதை நின்று பார்க்க.. என்றேனும் நினைத்ததுண்டா என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது...
பட்டுப் பாவாடையுடன் ஓடி வந்த ஒரு குட்டிச் சிறுமி அவள்மீது மோதி விலகி "ஸாரி.." என்று சொல்லி விட்டுத் தொடர்ந்து ஓடினாள்.. ஒரு சின்னச்சிரிப்புடன் அந்தச் சிறுமியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள்...
"காவ்யா..." என்ற அழைப்பில் ஆனந்தப் பரவசத்துடன் திரும்பினாள்.. அவள் கண்கள் ஒளிர்ந்தன..
அது அர்ஜினின் குரல்தான் என்று சொன்ன அவள் காதுகள் அவனை ஏமாற்றவில்லை.. அங்கே அர்ஜீன்தான் நின்றிருந்தான்..
"நீங்களா..?"
அவளின் ஆனந்தத்தில் அவன் விழிகளும் ஒளிர்ந்தன.. அவளையே பார்த்தபடி அவளுக்கு வெகு அருகில் நெருங்கி வந்தவன்..
"நானேதான்.." என்றான்..
"உங்களை இங்கே பார்ப்பேன்னு நான் நினைச்சே பார்க்கலை..." சந்தோச மிகுதியில் அழுதுவிட்டாள் காவ்யா...
"ஏய்ய்.." அர்ஜீன் அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டு கண்ணீரைத் துடைத்து விட்டான்..
"நைட்டெல்லாம் தூக்கம் பிடிக்கலை.. நீங்க இன்னைக்குக் கிளம்பப் போறிங்களேன்னு விடியக் காலையிலேயே கிளம்பி ஓடி வந்திட்டேன்.. ஆனாலும் கடைதிறக்க நேரமாகுமே.. அதுக்குப் பின்னாலயும் உங்ககிட்ட தனியா ஒத்தச் சொல்ல பேச முடியனுமேன்னு மனசு கிடந்து அடிச்சுக்கிருச்சு..."
அவளின் மனநிலையை காவ்யா விவரித்ததபோது அவன் மனதில் காதல் பொங்கியது.. இப்படிப்பட்டவளை எப்படி விட்டுக் கொடுக்க முடியும் என்று தனக்குள் அவன் கேட்டுக் கொண்டான்...
விழிகளில் அவனுக்கான தேடலுடன் நிற்கும் இவளின் காதலைப்பெற அவன் எத்தனை பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பதை கண்ணதாசன் அறிவானா என்ற கேள்வி அவன் நெஞ்சில் எழுந்தது...
'என்னவோ வில்லனை விரட்டறதைப் போல என் தங்கையை விட்டு விடுன்னு மிரட்டறானே.. இது விட்டுவிட முடியாத உறவுன்னு ஏன் அவனுக்குப் புரியலை...'
அர்ஜீன் உதட்டைக் கடித்தபடி காவ்யாவை நோக்கி அவனது உள்ளங்கையை விரித்து நீட்டினான்.. கண்ணீர் துளிகளை உகுத்தபடி அவன் உள்ளங்கையில் தன் உள்ளங்கையை பதித்தாள் காவ்யா.. அர்ஜீனின் உள்ளங்கை அவளின் மலர்போன்ற மென்மையான உள்ளங்கையை தன் வலிய கரத்துக்குள் இறுக்கமாக பொதிந்து மூடிக் கொண்டது.. விடுபட முடியாத.. விடுபட விரும்பாத அந்த இறுக்கமான பிணைப்பில் காவ்யாவின் மனதிலிருந்த சஞ்சலங்கள் விலகி ஓடுவதைப் போல அவள் உணர்ந்தாள்.. அவனின் கரம் தந்த பாதுகாப்பில் அவள் மனம் நனைந்தது...
"போகலாமா..?" அவன் கேட்டான்...
எங்கேயென்று கேட்காமல் சம்மதமாய் அவள் தலையசைத்தாள்.. அந்த நொடியில் அவளை அர்ஜீன் கடத்திச் சென்றிருந்தாலும் அவள் விருப்பத்துடன் உடன் பட்டிருப்பாள்.. அந்த அளவுக்கு மனரீதியாக அவள் நெகிழ்ந்திருந்தாள்...
அவன் அவளை அம்பாளின் சன்னதிக்கு அழைத்துச் சென்றான்..
பெருமாளின் பாதம் பிடிக்கும் பாக்கியம் பெற்ற மகாலட்சுமி கருணையுடன் அவளைப் பார்த்துச் சிரித்தாள்.. தாயாரை சேவித்து விட்டு பெருமாளின் சன்னதிக்கு சென்று சேவித்தார்கள்.. கற்பூர ஆரத்தியில் தெரிந்த கார்மேக வண்ணனின் மலர்முகத்தில் சிரிப்பிருந்தது..
'நீ என்னைக் கைவிடவில்லை...' காவ்யா மனதுக்குள் சொல்லிக்கொண்டாள்...
'விலகி விட்டாயோ என்று நினைத்தேன்.. நீ விலகவில்லை.. உன் மலர்கரம் என்னைத் தாங்கிப் பிடித்திருக்கிறது.. தவற விடவில்லை..'
அர்ஜீன் அவளிடம் குங்குமத்தை நீட்டினான்.. அதை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டவளின் மனதில் சொந்தம் உருவானது.. காலம்காலமாய் அவனை அறிந்தவளைப் போல உணர்ந்தாள் அவள்.. பேச்சுக்கள் தேவையில்லாத மௌனம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது.. அவர்கள் பிரகாரத்தை வலம் வந்தார்கள்...
கோவிலின் உள் பிரகாரத்திலிருந்த மண்டபத்தின் படிகளில் அமர்ந்தான் அர்ஜீன்.. அருகில் அமர்ந்த காவ்யாவின் நெற்றியிலிருந்த குங்குமத் தீற்றை உற்றுப் பார்த்தான்.. மங்கலகரமான தொரு அழகை அது கொடுத்திருப்பதை உணர்ந்தவனுக்கு அவள் மீதான காதல் பெருகியது..




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்..-56
எங்கிருந்தோ ஆசைகள்..-56
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-56.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-56.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy