எங்கிருந்தோ ஆசைகள்.. -53

53 நான் சிந்தி விட்ட வார்த்தைகளில்.. நீ எனையுணர ஆசைகொண்டேன்.. அது ஒரு சபதம்தான்... கண்ணதாசன் சந்தேகத்தில் வெகுண்ட அர்ஜீன்.. தன்...


53
நான் சிந்தி விட்ட வார்த்தைகளில்..
நீ எனையுணர ஆசைகொண்டேன்..


அது ஒரு சபதம்தான்... கண்ணதாசன் சந்தேகத்தில் வெகுண்ட அர்ஜீன்.. தன் காதலின்மீது ஆணையிட்டுச் செய்த சூளுரைதான்.. அவன் அதைச் செய்து முடிக்கும் தீரம் வாய்ந்தவன்தான்.. அதுவரை அவன் நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்திருந்தவன்தான்...
இருந்தும் காலம் அவனுக்குக் கருணை காட்டுமா என்பதை யோசிக்காத ஆக்ரோசத்தோடு அர்ஜீன் சபதம் செய்து விட்டான்...
அவன் அறியமாட்டான்.. ஒர் நாள்.. அவனைப் பார்த்து கண்ணதாசன் நீ யாரென்று கேட்கப் போகிறான் என்பதை..
அர்ஜீனின் ஆவேசம் மிகுந்த சூளுரையில் கண்ணதாசன் திருப்தி அடைந்து விடவில்லை.. உன்னைப் போல எத்தனை பேரைப் பார்த்திருப்பேன்.. உன் வசனத்தைப் போல எத்தனை வசனங்களைக் கேட்டிருப்பேன் என்ற பாவனையே அவன் முகத்தில் நிலவியது...
"உங்க பேச்சைக் கேட்டு ஏமாந்து போக நான் காவ்யா இல்லை அர்ஜீன்..."
"நான் ஏமாற்றுக்காரனில்லை கண்ணதாசன்..."
"நீங்க யாரா இருந்தா எனக்கென்ன சார்..? எனக்குத் தேவை என் தங்கையின் பாதுகாப்பு..."
"நான் வில்லனில்லை.."
"உங்களை ஹீரோவா நான் நினைக்கவும் இல்லை.."
"உங்க தங்கை நினைக்கிறாளே..."
உன் நினைவைப் பற்றி எனக்கென்ன கவலை என்ற பாவனையுடன் அர்ஜீன் இதைக் கூறியதில் கண்ணதாசனின் முகத்தில் கடுமை அதிகரித்தது..
"என் தங்கை யாருமில்லாத அநாதையில்லை.. வழியில் போகிறவங்களெல்லாம் அவளிடம் சொந்தம் கொண்டாடுவதற்கு.. உங்களை எச்சரிக்கிறேன் அர்ஜீன்.. என் தங்கையிடமிருந்து தள்ளியே நில்லுங்க.. அவ மனசில ஆசையை வளர்க்காதீங்க.. உங்களுக்கும்.. அவளுக்குமிடையில் தூரம் அதிகமிருக்கு.. அதை இல்லாததைப் போல காண்பிச்சு அவளை ஏமாத்த முயற்சி பண்ணாதீங்க.."
"திஸ் இஸ் தி லிமிட் கண்ணதாசன்.. நான் உங்க தங்கையை சீட் பண்ண டிரை பண்றதைப் போலவே பேசறிங்க.. இப்படிப் பேசாதீங்க.. நல்லாயில்லை..
ஐ லவ் ஹெர்.."
"ம்ப்ச்.. உங்க காதல் என் தங்கைக்கு வேணாம் சார்.."
"அதை அவள் சொல்லட்டும்..."
அர்ஜின் எரிச்சலுடன் சொல்லிவிட்டான்.. கண்ணதாசனின் முகம் மாறியது.. அவன் கண்கள் ஜ்வலித்தன...
"படிச்சுப் படிச்சுக் கிளிப் பிள்ளைக்குச் சொல்றதைப் போலச் சொல்றேன்.. இன்னும் உங்க புத்தியிலே அது ஏறலையே.. எந்த தெனாவெட்டில இந்த வார்த்தைகளைச் சொல்கிறிங்க.. அர்ஜீன்..? உங்க பின்னாலே அவளை வரவைச்சுட்ட திமிர் உங்களை இப்படிப் பேச வைக்குதா.."
"கூல் டவுன் கண்ணதாசன்..."
"வேணாம் அர்ஜீன்.. எங்க கூட விளையாடாதீங்க.. இது மதுரை.. மண்ணையும்.. பெண்ணையும் யாருக்கும் விட்டுக் கொடுக்காத வீரம் விளைஞ்ச மண்ணு.. எங்க வீட்டுப் பெண்ணை உங்க இஷ்டத்துக்கு நீங்க ஆட்டி வைச்சிர முடியாது..."
"உங்க வீட்டுப் பெண்ணாவே அவ காலம் பூராவும் இருந்துவிட முடியுமா..? ஒருநாள் அவளுக்கும் மேரேஜ்ன்னு ஒன்னு நடந்துதான ஆகனும்..? அந்த மேரேஜ் என்னுடன் நடக்கட்டுமே.."
"போகாத ஊருக்கு வழி தேட நானொன்னும் முட்டாளில்லை.. நானும் பணக்காரன்தான்.. என் தங்கச்சியை வசதியான இடத்தில கட்டிக் கொடுக்கிற அளவுக்கு வசதியும்.. வாய்ப்பும் உள்ளவன்தான்.. அவள காரும் பங்களாவும் இருக்கிற வீட்டில கட்டிக் கொடுக்க என்னால் முடியும்.. ஆனா.. உங்களப் போல.. ஒன்னுக்கு பத்துக்காரை பெருமைக்கு வாங்கி நிப்பாட்டியிருக்கிற வீட்டில கட்டிக் கொடுக்க முடியாது.. அதனால எங்க சுயமரியாதையோட விளையாடாம விலகிப் போயிருங்க.."
"உங்களை நான் குறைவாச் சொல்லலையே..."
"நீங்க சொல்ல மாட்டிங்க.. உங்க வீடு சொல்லும்.."
"நான் விடமாட்டேன்..."
"அது என்ன தேவைக்குன்னுதான் நான் கேட்கிறேன்.. எங்க வாழ்க்கை எங்களோட.. அதில எதுக்கு தலையை நுழைக்கறிங்க.. என் தங்கைக்கு எங்க அளவில மாப்பிளை பார்த்து எங்க சொந்த பந்தம் மெச்ச.. ஜாம் ஜாமுன்னு நான் கல்யாணத்த நடத்துவேன்.. அத விட்டுட்டு எட்டாப் பழத்துக்கு நாங்க எதுக்காக கொட்டாவி விடனும்..?"
என்னடா இது என்றாகிவிட்டது அர்ஜீனுக்கு.. இப்படிப் பழமொழியிலேயே அவனைப் போட்டுத் தாக்கினால் அவனும் தான் என்ன பண்ணுவான்..?
'ம்ஹீம்.. எதுக்கெடுத்தாலும்.. மதுரை மண்ணின் வெட்டறிவாளப் பத்தியே அவ பெருமை பேசுவாளே.. ஊரைவிட்டு ஆளைத் துரத்த இந்தப் பழமொழிகளே போதுமே.. தனியா அருவா வேற பறந்து வரனுமா..?'
எட்டாப்பழத்துக்கு கொட்டாவி வருமா.. வராதா என்று அர்ஜீனுக்குத் தெரிந்திருக்கவில்லை.. அந்த நள்ளிரவைத் தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவனுக்கு கண்களைச் சுழட்டித் தூக்கத்திற்கான கொட்டாவிதான் வந்தது..
"இப்ப என்னதான் சொல்லவர்றீங்க கண்ணதாசன்..?" அர்ஜீன் பேச்சை முடிக்க முயன்றான்..
"நல்லாயிருக்கு சார் உங்க நியாயம்.. விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு.. விடிந்தபின்னால்.. ராமனுக்குத் தம்பி லட்சுமணனான்னு கேட்கிற மாதிரியில்ல உங்க கேள்வி இருக்கு.." கண்ணதாசன் முறைத்தான்...
இவன் இந்த முறைப்பை விட்டுத் தொலைத்தால் தேவலை என்று அர்ஜீனுக்கு ஆயாசமாக இருந்தது..
காதலியின் அண்ணன் என்ற ஒரே காரணத்திற்காக.. கண்ணதாசன் முறைக்கும் முறைப்பினைப் பொறுத்துக் கொள்வது அர்ஜீனுக்கு இம்சையாக இருந்தது..
அறையின் சிட்அவுட்டைப் பார்த்தான்.. மதுரை மாநகரம் விளக்குகளுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது.. மதுரைதான் தூங்காது என்றால்.. மதுரைக்கு வந்தவர்களும் தூங்கக் கூடாது என்று சட்டம் போட்டிருக்கிறார்களா என்று தெரிந்து கொண்டால் தேவலையென்று அர்ஜீன் நினைத்துக் கொண்டான்...
"நான் சொல்ல வருகிறதெல்லாம் ஒன்னே ஒன்னுதான் அர்ஜீன்..."
'அந்த ஒன்னே ஒன்னையா இத்தனை மணி நேரமா பேசிக்கிட்டு இருந்த..?'
"என் தங்கச்சி அப்பாவி..."
'அத என்கிட்டயே சொல்கிறயா..? அவளப் பாத்த முதநாளிலேயே மகராசி.. நடுரோட்டில் என்னை அலறவிட்டாளே...'
"அவ மனசில ஆசையை மூட்டாதீங்க..."
'அவதானே என் மனசில ஆசைத்தீயை மூட்டிக்கிட்டு இருக்கிறா.. பாத்தா பச்சக்குன்னு ஒட்டிக்கிறதப் போல இருந்துக்கிட்டு.. ஒரு 'ஐ லவ் யு'வச் சொல்றதுக்கு ஆறுமாதமா அலையவிட்டாளே.. அவ மனதில ஆசைத்தீ பத்திக்கிட்டாலும்...'
"அவவேற.. நீங்க வேற..."
'ஊஹீம்.. தப்பாச் சொல்ற.. நாங்க இரண்டு பேருமே ஒன்னுக்குள்ள ஒன்னு...'
"வானத்தில மிதக்கிற நிலவை ரசிக்கலாம்..."
'இப்ப எதுக்காக இவன் இந்த உவமைச் சொல்றான்..? டேய் மச்சான்.. அந்த நிலவை என்னை ரசிக்க விடாம இன்னும் எத்தனை மணிநேரம்டா உபதேசம் பண்ணியே என்னை ஒரு வழி பண்ணுவ...'
"அதக் கையில பிடிக்க முடியாது..."
'அதை எதுக்கு கையில பிடிக்கனும்..? அந்த நிலாவத்தான் நான கையில பிடிச்சேன்.. என் ராசாத்திக்காகன்னு பாட்டுப் பாடறதுக்கா.. எனக்கெல்லாம் அது மேட்ச் ஆகாது...'
"நீங்க உங்க இடத்தில இருங்க.. நாங்க எங்க இடத்திலே இருக்கிறோம்..."
'இந்தக் கடையை என்ன செய்கிறது..? கோடிக் கணக்கில் பணம் கொடுத்து வாங்கின கடையை வழிப் போக்கன் எவனுக்காவது எழுதிக் கொடுத்து விடலாமா..?'
அப்படியொரு யோசனையையும் அவன் சந்திக்கும் நாள் வரப்போகிறது என்பதை அறியாதவனாக மனதுக்குள் கேட்டுக் கொண்டான் அர்ஜீன்..
"இனிமேல் என் தங்கச்சியின் வாழ்க்கையில் கிராஸ் பண்ணாதீங்க..."
'என்னமோ.. ரோட்டைக் கிராஸ் பண்ணாதேன்னு சொல்கிறாப்புல இல்ல.. சொல்லி வைக்கிறான்..'
"நான் கிளம்பறேன்.."
'ஹப்பாடி கிளம்பிட்டான்...'
அர்ஜீனின் மனதில் சந்தோச ஊற்றுக்கிளம்பியது.. காவ்யா இதை அறிந்தால் என்ன சொல்லுவாள் என்று நினைத்துப்  பார்த்தான்...
'எவ்வளவு நெஞ்சழுத்தமிருந்தா என் அண்ணன் கிளம்பினதுக்கு அப்பாடின்னு நிம்மதியா மூச்ச விட்டிருப்பீங்க.. என் வீட்டாளுகன்னா உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா போச்சா..? இதுவே உங்க கூடப் பொறந்த அக்காவா இருந்திருந்தா இப்படியா சொல்லியிருப்பீங்க..?'
மனதுக்குள் அவள் தோன்றினாள்.. இடுப்பில் கை வைத்துக் கொண்டு பொரிந்து தள்ளினாள்.. அந்த நினைவு தந்த சுகத்துடன் கதவை மூடிவிட்டு.. படுக்கப் போனான் அர்ஜீன்.. கண்ணதாசனின் நினைவு வர.. சிட் அவுட்டிற்கு சென்று எட்டிப் பார்த்தான்.. அதே நொடியில் காரில் ஏறிக் கொண்டிருந்த கண்ணதாசனும் அண்ணாந்து பார்த்தான்.. இருவிரின் பார்வையும் அந்த இருளிலும் சந்தித்து மீண்டன..
கண்ணதாசன் காரில் ஏறிப் போய்விட.. சிட் அவுட்டில் நின்று கொண்டிருந்த அர்ஜீனுக்கு சிரிப்பு வந்தது...
இந்தப் பார்வையை காதலியுடன் அவன் பார்த்திருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு... காதலியின் அண்ணனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்..
இதைக் கம்பர் பாடியிருந்தால் எப்படிப் பாடியிருப்பார் என்று யோசித்தான் அர்ஜீன்...
    'அண்ணலும் நோக்கினான்..
         அவன் காதலியின் அண்ணனும் நோக்கினான்..'
மனதுக்குள் கவிதை வரிகள் தோன்ற.. வாய்விட்டுச் சிரித்தபடி.. கட்டிலில் விழுந்தான் அர்ஜீன்.. தூக்கம் சொக்கிய போதிலும் அவனால் விழி மூட முடியவில்லை.. மறுநாளில் காவ்யாவை விட்டுத் தொலைவில் பறக்க வேண்டுமே என்ற நினைவுடன் புரண்டு படுத்தான்...
'இன்னைக்குத்தான் காதல் சொன்னா.. நாளைக்கே நான் கிளம்பித் தொலைக்கனும்..' சலித்துக் கொண்டான்..
'இப்பவாவது வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொன்னாளே.. இந்த ஒரு வார்த்தையைத் தெம்பாக பிடித்துக் கொண்டு ஒரு வருசம்கூட அவளைப் பார்க்காமல் இருந்துவிடலாம்...'
காவ்யாவின் காதலில் அவனுக்கு நம்பிக்கை இருந்தது.. அவனுக்காக அவள் காத்திருப்பாள் என்ற நிம்மதி இருந்தது...
மூடியிருந்த கண்ணாடி ஜன்னலின் பின்னால் முழுநிலவு தெரிந்தது.. அவன் மனதில் காதல் சுரந்தது.. காலையில் அவளுடன் காரில் இருந்த தருணம் நினைவுக்கு வந்து அவன் தூக்கத்தினைத் துரத்தியது...
"அன்றொரு நாள்..
             இதே நிலவில்..
    அவள் இருந்தாள் என் அருகே..
             நான் அடைக்கலம் கொண்டேன்..
    அவள் அழகை..
             நீயறிவாயே.. வெந்நிலவே..!"
காருக்குள் ஒலித்த பாடலின் நினைவில் அவன் பாடினான்.. அந்தப் பாட்டைக் கேட்டதும் அவள் முகத்தில் தோன்றிய நாணத்தில் அவள் நினைவு நிலைத்தது...
"காவ்யா.." தாபத்துடன் முணுமுணுத்தான்...
இதே நிலவை அவளும் பார்ப்பாளா..? அவன் தாபத்தை உணர்வாளா..? தூக்கம் பிடிக்காமல் அவன் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தபோது.. காவ்யா தென்றலை அழைத்து தூது சொல்லிக் கொண்டிருந்தாள்..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,174,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -53
எங்கிருந்தோ ஆசைகள்.. -53
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-53.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-53.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy