எங்கிருந்தோ ஆசைகள். -49

49 உன் கட்டுக்காவலை உடைத்து... உனைச் சிறையெடுக்க ஆசைகொண்டேன்.. அவன் காதலிக்கும் பெண் அவனைச் சந்திக்க வருவதில் இத்தனை இடர்பாடுகள...


49
உன் கட்டுக்காவலை உடைத்து...
உனைச் சிறையெடுக்க ஆசைகொண்டேன்..


அவன் காதலிக்கும் பெண் அவனைச் சந்திக்க வருவதில் இத்தனை இடர்பாடுகள் இருக்கின்றன என்பதை அன்றுதான் உணர்ந்தான் அர்ஜீன்..
அவள் பட்டப்படிப்பை படித்திருந்தாள்.. வீட்டு வாசலைத் தாண்டி வெளியுலகில் வேலை செய்ய வந்திருந்தாள்.. ஆனாலும்.. அவளைச் சுற்றி ஒர் கண்காணிப்பு வளையம் இருந்தது...
இப்படிப்பட்ட கட்டுக்காவலுடன் இருப்பவளை எப்படி வெளியே அழைத்துச் செல்வது என்று யோசித்தான் அர்ஜீன்.. அவனறிந்த பெண்களெல்லாம் சுதந்திரமாக வெளியே சென்று வருபவர்கள்.. இது போன்ற காவல் வளையத்துடன் வளைய வரும் பெண்ணை அதற்கு முன்பு அவன் சந்தித்ததே இல்லை...
அவன் எதுவும் பேசாமல் எழுந்தான்.. வெளியே போய் விட்டான்...
'இவ்வளவுதானா..?' காவ்யா ஏமாற்றமாக உணர்ந்தாள்...
'ம்ஹீம்.. சென்னையில பிறந்து வளர்ந்தவன்.. இப்படியாப்பட்ட பொண்ணக் காதலிச்சு வைச்சுட்டோ-மேன்னு கவலப்பட்டு வெளியே போயிட்டான் போல இருக்கு.. இதுக்கே இப்படின்னா எங்க சொந்த பந்தத்து அருவா மீசையையும்.. அருவாளையும் பாத்தா என்னத்தைச் சொல்வானோ...'
இது வேலைக்கு ஆகாது என்று ஒதுக்க முடியாமல் அவன் பதித்த முத்தம்.. முத்திரையாய் மனதில் உறைந்திருக்க.. சோர்வுடன் கீ போர்டைத் தட்டிக் கொண்டிருந்தாள் காவ்யா...
"காவ்யா..." இளங்கோ வந்தான்...
"என்ன இளங்கோ..?" காவ்யா நிமிர்ந்து பார்த்தாள்...
"உங்களை பேங்க் வரைக்கும் போயிட்டு வரச் சொன்னாரு.."
"யாரு..?"
"முதலாளி..."
'வழி கண்டு பிடித்துவிட்டான்..' கண்டு கொண்டாள் காவ்யா...
"எதுக்காம்..?"
"பேலன்ஸ் செக் பண்ணனுமாம்.. முதலாளி கொடுத்த செக் பாஸாகலையாம்.. என்ன விவரம்ன்னு விசாரிச்சுட்டு.. பேலன்ஸ் ஷீட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்கச் சொல்லி வாங்கிக்கிட்டு வருவீங்களாம்..."
"எப்பச் சொன்னாரு...?"
"இப்பத்தான்..."
"என்கிட்டச் சொல்லலையே இளங்கோ..."
"அவரு காருக்குள்ள ஏறினப்பபதான் போன் வந்துச்சு காவ்யா.. அப்ப நான் வாசலிலதான் நின்னுக்கிட்டு இருந்தேன்... செக் பாஸாகலையான்னு கேட்டுட்டு..
என் பக்கமா திரும்பி காவ்யாவை பேங்குக்கு போகச் சொல்லுங்க இளங்கோன்னு சொன்னாரு..."
முதலாளி அவனிடம் மதித்து நான்கு வார்த்தைகள் பேசிவிட்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை இளங்கோவின் கண்கள் பிரதிபலித்தன...
'இவன் கில்லாடி...' மனதுக்குள் செல்லமாக சிலாகித்துக் கொண்டாள் காவ்யா...
"ஆட்டோவில போயிட்டு வரச் சொன்னாரு காவ்யா.."
வண்டியை கடையிலேயே விட்டுவிட்டுப் போக காரணத்தை உண்டு பண்ணியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட காவ்யா...
"ஏனாம்..?" என்று அறியாதவளைப் போலக் கேட்டாள்...
"பெட்ரோல் செலவாகும்ன்னு நினைச்சிருக்கலாம்.. கடைவேலையா வெளியே போனா அதுக்கான ஆட்டோக் கூலியைப் போட்டு எடுத்துக்கலாமில்ல.. நாங்கன்னா சைக்கிள்ல போயி வேலய முடிச்சிட்டு ஆட்டோக் கூலியை பைக்குள்ள போட்டுக்குவோம்.. நீங்க அப்படிச் செய்யற ஆளில்ல..."
"என்னவோ ஒன்னு.. இப்ப நான் பேங்குக்கு போயாகனும்..."
"ஆமாங்க.. அந்த மட்டில் இந்த முதலாளி பழைய முதலாளியப் போலக் கஞ்சத்தனமா இல்லாம தாராளம் தண்ணிபட்ட பாடா இருக்காரு..."
"எனக்கொன்னும் அப்படித் தெரியல..."
"என்ன காவ்யா இப்படிச் சொல்லிட்டிங்க.. பழைய முதலாளி.. ஒரு டீயை வாங்கிக் கொடுக்கனும்னாக் கூட மூக்கால அழுவாரு.. இவரு அப்படியா.. காலையிலயும்.. சாயந்திரமும் பஜ்ஜி வடையோட ஏலக்காய் போட்ட டீ வருது.. அதிகப்படியா வேலை செஞ்சா அதுக்குத் தனியா ஓடி போட்டுத் தர்றாரு.. சம்பளத்தக் கூட்டியிருக்காரு.. என் கல்யாணத்துக்கு நேரிலயே வந்தாருன்னா பாருங்களேன்.."
மற்ற எல்லாவற்றையும் விட.. அர்ஜீன் இளங்கோவின் திருமணத்திற்கு நேரே வந்து நின்றதிலயே இளங்கோ மகிழ்ந்து போயிருப்பதை உணர்ந்து கொண்டாள் காவ்யா...
அர்ஜீன் இவனுக்காக அந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை மட்டும் இவனறிந்தால் என்ன சொல்வானோ என்ற நினைவுடன்..
"அவர் என்னத்தைச் செஞ்சு என்ன செய்ய..? என் தலையில இல்ல பேங்க் வேலையக் கட்டியிருக்காரு.." என்று அலுத்துக் கொள்வதைப் போல முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள் காவ்யா...
"இதை வேலைன்னு ஏன் நினைக்கறிங்க காவ்யா.. இத்தனை பேரு வேலை செய்கிற கடையில உங்களை நம்பி.. இம்மாம் பெரிய பொறுப்ப அவரு ஒப்படைச்-சிருக்காரேன்னு சந்தோசப்படுங்க.." ஆறுதல் சொன்னான் இளங்கோ..
காவ்யா கைப்பையுடன் எழுந்தாள்.. பாவனாவின் கண்களில் பட்டுவிடாமல் வெளியில் வந்தாள்...
"ஆட்டோ பிடிச்சுத் தரவாம்மா..." என்ற கந்தசாமியிடம்...
"வேணாம்.. நானே பிடிச்சுக்கறேன்.." என்று மறுத்துவிட்டு நடந்தாள்..
கந்தசாமி திரும்பிய மறுகணம் குறுக்குச் சந்தில் திரும்பி மறைந்தவளுக்கு.. முதல் முறையாக ஏமாற்ற ஆரம்பித்திருக்கும் குற்ற உணர்வு மனதில் எழுந்தது..
மெயின் ரோட்டில் அர்ஜீனின் கார் தெரிந்தது.. விரைந்து நடந்து அவன் காரில் ஏறிக் கொண்டவளுக்கு யாரேனும் பார்த்திருப்பார்களோ என்ற அச்சம் வந்ததும்.. திரும்பிப் பார்த்துக் கொண்டாள்.. அர்ஜீன் காரைக் கிளப்பினான்.. வேகமெடுத்த கார் பேங்கிற்கு சற்றுத் தொலைவில் போய் நின்றது...
"என்ன..?" காவ்யா திகைத்து விழித்தாள்...
"செய்கிறதை ஓழுங்காச் செய்யனும்.. நீ வேனில் அழகர் கோவிலுக்கு வந்ததை நீயும் சொல்லலை.. பாவனாவும் சொல்லலை.. பட் உங்க அண்ணனுக்கு விசயம் தெரிஞ்சிருச்சு... இப்பவும் அதுபோல உன் அண்ணன் செக் பண்ணினாலும் பண்ணலாம்.. நீ பேங்குக்குள்ள போய் பேலன்ஸை வெரிஃபை பண்ணிட்டு பேலன்ஸ் ஸ்டேட்மென்டை வாங்கிட்டு வந்துரு..."
"தெளிவான பிளான்தான்.." எரிச்சலுடன் காரை விட்டு இறங்கிய காவ்யா.. சுற்று முற்றும் பார்த்தபடி பேங்குக்குள் சென்றாள்...
அவளின் முகத்தில் தெரிந்த எரிச்சலைக் கவனித்த அர்ஜீனுக்கு இவளுக்கு தொந்தரவு கொடுக்கிறோமே என்றிருந்தது...
ஆனாலும்.. அந்தத் தொந்தரவைக் கொடுக்காம- லிருக்க அவனால் முடியாதே.. அவன்தான் அவளைக் காதலித்து தொலைத்து விட்டானே.. அவளோடு தனித்துப் பேச இது போன்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியாக வேண்டுமென்றால்.... அவன் அதைச் செய்துதானே ஆகவேண்டும்..?
போன வேகத்தில் திரும்பி வந்தாள் காவ்யா வேலை முடிந்து விட்ட திருப்தி அவள் முகத்தில் நிலவியது.. அவளுக்காக கார் கதவைத் திறந்து விட்டான் அர்ஜீன்.. இந்தமுறை இயல்பாக ஏறியவள்...
"நீங்க ஏற்கனெவே போனில் சொல்லியிருந்தீங்களா..?" என்று கேட்டாள்...
"ம்ம்ம்.. எந்த ஏற்பாடும் பண்ணாம உன்னை பேங்குக்குள்ள அனுப்பினேன்னா நினைச்ச...?"
"ஊம்... நேரமாகுமோன்னு பயந்தேன்... நல்ல வேளையா அவங்க பிரிண்ட்அவுட் எடுத்து ரெடியா வைச்சிருந்தாங்க.."
பெரிதாக எதையோ சாதித்து விட்டவளைப் போலப் பேசியவளிடம் "உனக்கு பேங்குக்குப் போகிறதுன்னா பயமா..?" என்று கேட்டான் அர்ஜீன்...
"ம்ம்ம்.." அவள் முகம் சிவக்க ஒப்புக் கொண்டாள்...
"ஏன்..?"
"தெரியலை..."
"இதையெல்லாம் பழகிக்க வேணாமா..?"
"இதைப் பழகி எனக்கென்ன ஆகப் போகுது..? உப்புக்கு ஆகப் போகுதா..? இல்ல.. புளிக்கு ஆகப் போகுதா..?"
அவள் சிடுசிடுத்தாள்.. பழக்கமில்லாத ஒன்றை முதன்முதலாக செய்யத் துணிந்திருக்கும் குறுகுறுப்பிலும்.. குற்ற உணர்விலும் அந்த சிடுசிடுப்பு வருகின்றது என்பதை அர்ஜீனால் புரிந்து கொள்ள முடிந்தது...
லேசாக கண்கள் கலங்கியிருக்க... முகச் சுணக்கத்துடன் அமர்ந்திருந்தவளிடம் அதற்கு மேலும் வழக்கடிக்காமல்.. காரை விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் செழுத்தினான்.. மெல்ல.. மெல்ல.. மதுரையின் சந்தடி மிகுந்த இடங்கள் மறைந்து.. இருபுறமும் சின்னச் சின்ன செடிகள் அணி வகுத்திருக்கும் சாலை வந்தது...
"நாம தேடிய தனிமை கிடைச்சிருச்சு.." என்றான் அர்ஜீன்...
விமான நிலையத்தைத் தாண்டி ஒரு மரத்தடியில் கார் நின்றது.. காவ்யா பதட்டத்துடன் சுற்றுமுற்றும் பார்த்தாள்..
"என்ன..?" அர்ஜீன் விசாரித்தான்...
"இங்கேதான் பிறந்து வளர்ந்தேன்னு பேரு.. ஆனா இந்த இடத்துக்கெல்லாம் நான் வந்ததே இல்லை.." என்றாள் காவ்யா..
"இது ஏர்போர்ட்.. இங்கே வரவேண்டிய வேலை உனக்கு இருந்திருக்காது..."
அர்ஜீன் என்னவோ யதார்த்தமாகத்தான் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.. அதைக் கேட்ட காவ்யாவின் முகம்தான் மாறிவிட்டது...
"சொல்லிக்காட்டறிங்களா..?" என்று கேட்டாள்...
"எதை..?" அர்ஜீனுக்கு விளங்கவில்லை..
"நாங்க பிளேனில போகிற அளவுக்கு வசதியும் வாய்ப்பும் இல்லாதவங்கன்னு சொல்லிக்காட்டறிங்களா..? பிளேனில் போகிற வேலை எங்களுக்குத்தான் இல்லை.. என் அண்ணனுக்கு இருக்கு.. அது அடிக்கடி பிளேனில பறக்கிற ஆளுதான்.. உங்களப் போல நாடுவிட்டு நாடு பறக்காட்டியும்.. ஊரு விட்டு ஊரு பறக்கிற ஆபிசர்தான் அது..." காவ்யா படபடத்தாள்...
"ஏய்ய்.. இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படிப் பேசற...?"
"ஒன்னுமே சொல்லலியா..? எனக்கு இங்கு வரவேண்டிய வேல இல்லதான்.. உங்க லெவலுக்கு நாங்க வர முடியாதுதான்.. அதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச விசயம்தானே..? அதைச் சொல்லிக்காட்டத்தான் என்ன இங்கே அழைச்சுக்கிட்டு வந்தீங்களா..?"
மூக்கு நுனி சிவக்க.. வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு கிளம்பியவளை இமைக்காமல் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான் அர்ஜீன்... அவன் பார்வையில்
அவளின் பேச்சு நின்றது.. உதட்டைக் கடித்துக் கொண்டு பார்வையை தழைத்தாள் அவள்...
"இப்ப சண்டை போடத்தான் இங்கே வந்தோமா..?" அர்ஜீன் நிதானமாக கேட்டான்...
"இத நான் கேட்கனும்.. தனியாப் பேசனும் வா.. தனியாப் பேசனும் வான்னு சொல்லிட்டு.. இங்கே வந்தவுடனே பிளேனு பெருமையை அள்ளி விட்டது யாரு..?" புருவங்களை உயர்த்தி மிதப்பாக கேட்டாள் காவ்யா..
"ஏண்டி.. நீ அடங்கவே மாட்டியா..?"
"என்னமோ அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில அடங்காத காளையை அடக்க வந்தவரப் போல பேசி வைக்கறிங்க.. என்னை அடங்க வைக்கத்தான் தனியாத் தள்ளிக்கிட்டு வந்தீங்களா..?"
"தள்ளிக்கிட்டு வந்தேனா..?"
அர்ஜீனுக்கு சிரிப்பு வந்து விட்டது.. அந்த சுட்டித் தனமான பெண்ணின் வாயாடித்தனத்தை வெகுவாக அவன் ரசித்தான்.. அவளின் சுழித்த இதழ்களை விரலால் அவன் சுண்டிவிட்டபோது.. அவள் முகம் சிவந்து விட்டது...
"இந்தச் சேட்டையை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு பேசறதுன்னா நான் காருக்குள்ள இருக்கேன்.. இல்ல.. வில்லங்கமா நீங்க விளயாடிக்கிட்டே இருப்பீங்கன்னா.. நான் காரை விட்டு இறங்கி கடையைப் பாத்து நடயக் கட்டிருவேன்..."
"இப்ப என்னடி செஞ்சிட்டேன்.. இப்படி உன்னைத் தொட்டேனா.." அர்ஜீன் அவள் தோள்களைத் தொட்டான்..
"இப்படி உன் கன்னத்தை தடவினேனா..?" அர்ஜீனின் கைகள் உயர்ந்து அவள் கன்னம் தொட்டுத் தடவின...
"இப்படி முத்தம் கொடுத்தேனா..?"
அவள் கன்னத்தில் அவன் முத்தமிட்டான்.. காவ்யா உடல் நடுங்க விலக முடியாமல் அவன் தோள் சாய்ந்தாள்.. அவளின் தோளின் மீது சுவாதீனமாக படிந்த அவனது கை அவளை அருகே இழுத்து இறுக்கிக் கொண்டது...
"காவ்யா..." மென்மையாக அழைத்தான்...
"ம்ம்ம்..." கண்மூடி அவள் முணுமுணுத்தாள்...
"ஐ லவ் யு காவ்யா... எனக்கு நீ வேணும்டி..."
அவன் கிறக்கத்துடன் அவள் காதோரமாக முணுமுணுக்க.. அவள் சட்டென்று அவன் கைகளை விலக்கி விலகி அமர்ந்தாள்.. அவள் முகம் இறுகியிருந்தது..
"ஏண்டி..?" அவன் அதட்டினான்...
"நான் வேணும்ன்னா என்ன அர்த்தம்..? உங்க ஆசைக்கு நான் ஆளில்லை..."
அழுத்தம் திருத்தமாகச் சொன்னவள்.. கன்னத்தில் பளாரென்ற ஒரு அறையை வாங்கினாள்.. சுருசுருவென்ற வலி கன்னத்தில் பரவ.. கன்னத்தை பிடித்தபடி.. அவனைத் திகைப்புடன் பார்த்தாள்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,17,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,92,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,16,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -49
எங்கிருந்தோ ஆசைகள். -49
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-49.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-49.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy