எங்கிருந்தோ ஆசைகள். -48

48 உன்மீது கொண்ட ஆசை... நிறைவேற ஆசைகொண்டேன்... ' ஓடி விடு காவ்யா... ' அவள் மனம் பலவீனமாக முணுமுணுத்தது... காவ்யாவின...



48
உன்மீது கொண்ட ஆசை...
நிறைவேற ஆசைகொண்டேன்...


'ஓடி விடு காவ்யா...' அவள் மனம் பலவீனமாக முணுமுணுத்தது...
காவ்யாவினால் அசைய முடியவில்லை.. அவள் அசைந்தால் அர்ஜினின் மீது பட்டு விடுவாள் என்பது ஒரு புறமிருக்க.. அவளுக்கு அதற்கான சக்தி இல்லாமல் போயிருந்தது...
உடலிலுள்ள சக்தியெல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமல் போய்விட்ட நிலையில் காவ்யா தொய்ந்து சுவரின் மீது சாய்ந்து நின்றிருந்தாள்...
அவள்மீது மூச்சுக்காற்று படும்துண்ணம் நெருங்கி நின்றிருந்த அர்ஜீனின் பார்வை அவளைத் துளைத்தது.. அந்தப் பார்வையின் வேகத்தைத் தாங்க முடியாதவளாக கண்மூடி மனதிற்குள்..
'இப்படி என்னைப் பார்க்காதே...' என்று அரற்றினாள் காவ்யா...
அவள் இமைகளில் அவனது இதழ்கள் பதிந்தன.. அந்த ஸ்பரிசத்தில் பதறிக் கண்விழித்தவளின் கன்னத்திலே அவன் முத்தமிட்டான்.. அவன் மார்பில் கைவைத்து
அவள் தள்ளிவிட முயன்றபோது.. மிக எளிதாக அவள் கைகளிரண்டையும் அவன் வசப்படுத்தி... இழுத்து அணைத்து அவனுடன் இறுக்கிக் கொண்டவன்... அவள் முகத்தை நோக்கிக் குனிந்தான்...
அடுத்து நடக்கப் போவது என்ன என்று அவளுக்குப் புரிந்து விட்டது.. அன்றைய நாளின் நினைவில் அவள் மேனி நடுங்கியது.. அவள் வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறப்பதைப் போன்ற இதமான இம்சையை அவள் உணர்ந்தாள்...
அவள் உதடுகளின் மீது அவன் உதடுகள் பதிந்து ஆக்ரமித்துக் கொண்டபோது காவ்யா.. முற்றிலுமாக மயங்கிப் போனாள்... ஓங்கி எழுந்த பேரலை ஒன்று அவள்மீது விழுந்து அடித்துக் செல்லப் படுவதைப் போல அவள் உணர்ந்தாள்... அவனின் இறுக்கமான அணைப்புக்குள் அடங்கி நின்றபோது... அவள் பூட்டிக் கொண்டிருந்த பொய் விலங்குகள் தகர்ந்து நொறுங்கி விழுந்தன.. அவளைச்சுற்றி அவள் போட்டு வைத்திருந்த இரும்பு வேலியை அநாசியமாக உடைத்து அவளைத் தொட்டுத் தழுவி முத்தம் கொடுத்து தன் வயப் படுத்திவிட்டான் அர்ஜீன்...
அறைவாசலில் காலடிச் சப்தம் கேட்டதில் சட்டென்று அவளைவிட்டு விலகி.. சுவர் அலமாரியின் பக்கமாக போய் நின்று கொண்டான்.. அறைக்குள் வந்த கந்தசாமி...
"கொடவுன் சாவி வேணும் சார்..." என்று கேட்டார்...
அவரின் பார்வை நிலைகுலைந்து நின்ற காவ்யாவின் மீது படிவதற்குள்.. அவளை மறைத்து நகர்ந்து கந்தசாமியின் அருகே சென்றவன்...
"தங்கராஜ் வாங்கிப் போனாரே.. உங்களிடம் தரவில்லையா..?" என்று கேட்டான்..
"இல்லீங்களே சார்.."
"இப்பத்தான் வந்து வாங்கிப் போனார்.. ஸ்டாக்கை செக் பண்ணனும்னு சொன்னார்..."
அர்ஜீன் கந்தசாமியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க.. தன்னைச் சுதாரித்துக் கொண்ட காவ்யா.. அவசரமாக அவளின் சீட்டில் அமர்ந்து விட்டாள்.. வேக மூச்சுக்களை எடுத்து தன்னைச் சமனப் படுத்திக் கொண்டிருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி...
"கடையைப் பத்திரமா பார்த்துக்கங்க கந்தசாமி.. நாளைக்கு நான் சென்னைக்கு கிளம்பறேன்.. நாளை மறுநாள் நான் கனடா போக வேண்டியிருக்கு.. இந்த முறை நான் திரும்பிவர ரொம்ப நாளாகும்.." என்றான் அர்ஜீன்...
காவ்யா அதிர்ந்து நிமிர்ந்தாள்.. அத்து மீறி அவளைத் தொட்டு முத்தம் கொடுத்து விட்டானே என்று அவளுக்குள் கனன்று கொண்டிருந்த கோபம் காணாமல் போய் விட்டது.. அவன் கிளம்பப் போகிறான்.. அவனை மீண்டும் சந்திக்க அதிக நாள்கள் காத்திருக்க வேண்டும் என்ற செய்தியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை...
அவனில்லாத நாள்களை நினைத்துப் பார்க்கவே அவளால் முடியவில்லை.. கந்தசாமியை அனுப்பி விட்டு காவ்யாவின் பக்கம் திரும்பினாள் அர்ஜீன்...
"இம்பார்டன்ட் மெயிலுக்கு பதில் அனுப்பனும்.. பேனா பேப்பரோட நோட்ஸ் எடுத்துக்க வா.." என்றான்...
காவ்யா.. உதட்டைக் கடித்தபடி பேனாவும் குறிப்போடுமாக அவன் எதிரில் போய் அமர்ந்தாள்.. அவளை உற்றுப் பார்த்தான் அர்ஜீன்...
எதிர்பாராத நிகழ்வினால் கலங்கிச் சிவந்திருந்த அவள் முகத்தையும்.. அவன் கைகளுக்குள் அகப்பட்டு திமிறியதால் கலைந்திருந்த அவளின் முடியையும்... துடித்த அவளின் இதழ்களையும்.. நடுக்கத்தை விடாத விரல்களையும் பார்த்துக் கொண்டே இருந்தான்...
அவனிடமிருந்து வார்த்தைகள் வெளிப்படாததில் விழியுயர்த்தி அவனைப் பார்த்த காவ்யா.. அவனது பார்வையில் தடுமாறிப் போனவளாய் விழி தாழ்த்திக் கொண்டாள்..
"உன்னோட தனியாய் பேசனும்.." நிதானமாகச் சொன்னான் அர்ஜீன்...
"என்னது..." அதிர்ச்சியை விழிகளில் தேக்கி வைத்துக் கொண்டு பதட்டத்துடன் கேட்டாள் காவ்யா...
"நான் சொன்னது உன் தலையில் ஏறலையா..?" அவளை உறுத்துப் பார்த்தான் அர்ஜீன்...
"தனியாச் சந்திக்கல்லாம் நான் வர மாட்டேன்.." பிடிவாதமாக மறுத்தாள் காவ்யா...
"அப்படின்னா உன்னைத் தூக்கிக்கிட்டு போக வேண்டியதுதான்..." அர்ஜீன் அலட்டிக் கொள்ளாமல் சொன்னதும்..
"என்னது.." என்று மீண்டும் அதிர்ந்தாள் காவ்யா...
"எனக்கு வேற வழியில்லடி.. நாளைக்குப் போனா.. நான் திரும்பி வர இரண்டு.. மூன்று மாதமாகும்.. அது உன் மரமண்டைக்கு உறைக்குதா.. இல்லையா...?" கடினமான குரலில் வினவினான் அர்ஜீன்...
"அது.. அது.. வந்து.." காவ்யா தடுமாறினாள்..
பிரிவை நினைவுபடுத்தியதும் அவளிடம் மறுப்பில்லாமல் போனதை கண்டு கொண்ட அர்ஜீனின் கண்கள் மின்னின.. அவன் கனிவுடன் காவ்யாவைப் பார்த்தான்...
"உனக்காகத்தான் நான் இங்கே வர்றேன்.. புரிஞ்சுக்க.. உன்னைப் பார்க்கனும்.. உன் கூடப் பேசனும்.. என்கிறதுக்காகத்தான் நான் மதுரைக்கு வந்து போகிறேன்.. மத்தபடி இந்தக் கடையெல்லாம் எனக்கு ஒரு கணக்கே இல்லை காவ்யா.. ஐ லவ் யு.. அதுக்காக மட்டுமே நான் இங்கே ஓடி வர்றேன்.. எனக்கு நீ வேணும்.. ஐ நீட் யு..." அவன் குரல் தாபத்தில் குழைந்தது...
'திரும்பவும் இதையே சொல்கிறான்..' அவள் மனம் அதிர்ந்தது...
'சும்மா.. சும்மா.. நீ வேணும்.. நீ வேணும்ன்னு சொன்னா.. எதைன்னு நான் மனசில எடுத்துக்கிறது...'
அவள் மௌனமாக விரல்களை ஆராய ஆரம்பித்தாள்.. அவன் புருவங்கள் முடிச்சிட்டன...
"இங்கே பார்..." அவன் அதட்டினான்...
"என்ன..?" அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்...
அவன் விழிகளில் தெரிந்த உரிமை கலந்த கோபம் அவளைத் தாலாட்டி ஆகர்ஷித்தது.. அவனின் அந்த ஆளுமையில் அவள் கிறங்கிப் போனாள்.. அந்தக் கிறக்கத்தை அவளின் விழிஉணர்த்த.. அவனது கோபம் குறைந்தது...
"உன்கூட நான் பேசியே ஆகனும்..."
"பேசுங்க.."
"இங்கேயா..?"
கூர்மையான பார்வையுடன் அவன் கேட்க.. அதன் அர்த்தத்தில் அவள் முகத்தில் ரத்தம் பாய்ந்தது.. உதட்டைக் கடித்தபடி தலை குனிந்தாள்.. அவளின் வெட்கிச் சிவந்த முகத்தை தொட்டு விடத்துடித்த மனத்தை கடிவாளம் போட்டு அடக்கியபடி அவன் தாழ்ந்த குரலில் சொன்னான்..
"இங்கேதான் பேசனும்னு நீ அடம்பிடிச்சா நான் ரெடி.. எனக்கு ஒன்னுமில்ல.. உன்கூடப் பேசும்போது உன்னைத் தொட்டுப் பேசாமல் தள்ளி நிற்க என்னால முடியாது.. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே என்ன ஆச்சுன்னு நினைச்சுப் பாரு.. கந்தசாமியிடம் அகப்படாம நாம தப்பினது அதிசயம்தான்.. அதைப் போல ஆகிவிட வேணாம்ன்னு பார்க்கிறேன்.. அதனால என்னன்னு நீ சொன்னா எனக்கு ஓகேதான்.. நான் ஈஸியா சொல்லிட்டுப் போயிருவேன்.. இவ நான் காதலிக்கிற பொண்ணுன்னு..." இலகுவாக அவன் பேசப்பேச..
"உங்களுக்கு எல்லாமே ஈஸிதான்.." என்று சீறினாள் காவ்யா...
"உனக்கு கஷ்டம்ங்கிறயா...?" அமர்த்தலான குரலில் அவன் கேட்டான்...
"ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்..." அவள் படபடத்தாள்...
"எது உனக்குக் கஷ்டம் காவ்யா..? என்னைக் காதலிக்கிறதா..?" அவன் ஆழ்ந்த குரலில் கேட்டதும்.. அவள் வாயடைத்துப் போனாள்...
அவனைக் காதலிப்பது அவளுக்கு கஷ்டமான ஒன்றா..? பேச முடியாமல் திகைத்து விழித்தவளிடம் மிருதுவான குரலில் சொன்னான் அர்ஜீன்...
"நாம பேச வேண்டியது நிறைய இருக்கு.. அதை இங்கே பேச முடியாது.. ஸோ.. நாம தனியா மீட் பண்ணியே ஆகனும்..."
"நான் பாவனா கூடக்கூட தனியாய் எங்கேயும் போனதில்லை..."
"என்கூட வா.."
"எங்கே வர்றது..?"
"புரியலை..."
"தனியான இடம்ன்னு மதுரையில எதுவுமில்லை.. நீங்க தேடினாலும் அது கிடைக்காது.. இது சென்னையில்லை.. மதுரை.. எல்லா இடத்திலும் ஜன நடமாட்டம் இருக்கிற உயிர்ப்பான ஊர்.."
"உன் ஊரோட பெருமை போதும்.. மதுரையைப் பத்தி நிறைய நீ பேசி நானும் கேட்டாச்சு.. இனி நம்மளப் பத்திப் பேசலாம் வா..."
"அது தான் எங்கே...?"
"அதை நான் பார்த்துக்கிறேன்.. மெயின் கோட்டில் காரில் வெயிட் பண்றேன்.. நீ அங்கே வந்துவிடு..."
"வந்து..?"
"காரில் ஏறிக்க.. தனிமையான இடத்துக்குப் போய் பேசலாம்..."
"நான் வரமாட்டேன்..."
"நீ வருகிற..."
"என்னால இப்படியெல்லாம் வரமுடியாது.."
"யார்கூட வர்ற..? என்கூடத்தானே...?"
அவனின் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல அவளால் முடியவில்லை.. பழக்கமில்லாத செய்கையைச் செய்ய அவள் தயங்கினாள் அந்தத் தயக்கத்தை அவன் உடைக்க ஆரம்பித்தான்...
"நல்லா நினைப்பில வைச்சுக்க.. நாளைக்கு நான் கிளம்பியாகனும்...."
"திரும்பவும் எப்ப வருவீங்க..?" ஏக்கத்துடன் அவள் கேட்டாள்...
"அது நீ சொல்கிற பதிலைப் பொறுத்திருக்கு..."
"புரியலை.."
"உன்னைத் தொட்டு முத்தம் கொடுத்து ஐ லவ் யு சொல்லியிருக்கேன்.. ஒரு தரமில்லை.. இரண்டு தரம்.. இத்தனைக்கும் மேலே நீ என்கூட வர தயங்கினா...
நான் உன்னிடம் காதல் சொன்னதில் அர்த்தமேயில்லை காவ்யா.."
"ப்ளீஸ்.. எனக்கு இதெல்லாம் பழக்கமில்ல..."
அவளின் கெஞ்சுதலில் அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது.. அவனிடம் துடுக்குத்தனமாகப் பேசி சண்டை போடும் வாயாடிப் பெண்ணா இவள் என்று அவன் ஆச்சரியமாகிப் போனான்..
அவளின் பெண்மை மிளிர்ந்த இந்த பரிணாமத்தில் அவள் மீதான அவனின் காதல் அதிகரித்தது...
"நானும் பழகிப் பார்க்கலாம்.. வான்னு கூப்பிடலை.. நாம பேச வேண்டியது நிறைய இருக்கு.. அதைப் பேசியாகனும்.. வான்னு கூப்பிடறேன்..."
"அதுக்காக ஒளிஞ்சு.. மறைஞ்சு.. திருட்டுத்தனமா போய் பேசனுமா..?"
"காதலிக்கிறவங்க பத்துப் பேரின் மத்தியில நின்னுதான் காதலைப் பத்திப் பேசுவாங்களா..? காதல்ன்னாலே அதில ஒளிவு மறைவு வந்து விடும் காவ்யா..."
அவன் சொன்னதில் இருந்த உண்மையை உணர்ந்து கொண்டவளாய் அவள் ஒரு நிமிடம் மௌனமாக யோசித்தாள்.. அவளை யோசிக்க விட்டு அவன் அமைதி காத்தான்.. ஒரு முடிவுக்கு வந்தவளாக நிமிர்ந்தாள்...
"வேலை நேரத்தில நீங்க கடையை விட்டுப் போகலாம்.. நான் என்ன காரணம் சொல்லி வெளியேற முடியும்..? வீட்டுக்குப் போகிறதா சொல்ல முடியாது.. என் வண்டி இங்கே நிக்குது.. அதை எடுக்காம நான் கிளம்ப முடியாது.. அதோட அண்ணனுக்கு தெரிஞ்சவங்க இங்கே வேலை செய்கிறாங்க.. நான் வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போகாம இருந்தா அது பெரிய விபரீதத்தில கொண்டு வந்து விட்டிரும்.. சொல்லுங்க.. நான் எந்தக் காரணத்தைச் சொல்லி வெளியே வருகிறது..?"
அவள் கேட்ட கேள்விகளில் அயர்ந்து போனான் அர்ஜீன்...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள். -48
எங்கிருந்தோ ஆசைகள். -48
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-48.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-48.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy