எங்கிருந்தோ ஆசைகள்.. -47

47 உன்னோடு நானுறங்க... உளமாற ஆசைகொண்டேன்.... அடுத்த வந்த ஒருவாரம் முழுவதும் காவ்யா மௌன விரதத்தை கடைபிடித்தாள்.. அர்ஜீனும் ஆன மட...


47
உன்னோடு நானுறங்க...
உளமாற ஆசைகொண்டேன்....


அடுத்த வந்த ஒருவாரம் முழுவதும் காவ்யா மௌன விரதத்தை கடைபிடித்தாள்.. அர்ஜீனும் ஆன மட்டும் முயன்று பார்த்தான்.. அவள் அசைந்தே கொடுக்கவில்லை.. அவன் சென்னைக்கு கிளம்ப வேண்டிய நாள் நெருங்கி விட்டது.. இப்போது போனால் எப்போது திரும்ப முடியுமோ என்ற கவலைக்கு ஆளானான் அவன்..
வெளிநாட்டில் முக்கியமான ஒப்பந்தத்தை அவன் முடிக்க வேண்டியிருந்தது.. அதற்காக அவன் போயே ஆக வேண்டும். பிரிவின் தாபம் அவன் மனதில் எழுந்தது.. காவ்யாவைத் திரும்பவும் பார்ப்பதற்கு எத்தனை நாள்கள் ஆகுமோ என்ற தவிப்புடன் அவன் அவளிடம் பேச முயன்றான்.. அவள் வழக்கப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டேயிருந்தாள்...
'இன்னைக்கு எப்படியும் பேசியாகனும்...'
அவன் முடிவு செய்து விட்டான்.. மறுநாள் அவன் கிளம்பியாக வேண்டும்.. இப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பவளை மனதில் நினைத்துவிட்டவன் நிம்மதியாக கிளம்பிப் போக முடியுமா..? அதிக நாள்கள் பிரிந்திருக்க வேண்டுமே என்ற தவிப்பினால்தான் அவன் அதிகநாள்கள் மதுரையிலேயே தங்கியிருந்தான்... ஆனந்தி கூட போனில் அவனிடம் கேட்டாள்..
"நீ மதுரையில இருக்கனும்கிற அவசியமே இல்லையே அர்ஜீன்.. கடையை டேக்ஓவர் பண்ணிட்ட.. அங்கே பொறுப்பான ஆளையும் போட்டுட்டதா சொன்ன.. அதுக்கப்புறமும் அங்கே ஏன் டைமை ஸ்பென்ட் பண்ற..? நீ இருக்க வேண்டிய இடம் சென்னை அர்ஜீன்.. இங்கேதான் கோடிக்கணக்கில் பிஸினெஸ் நடக்குது..."
ஆனந்தி புத்திசாலி.. அர்ஜீனிடம் பார்த்தசாரதி கேட்கச் சொன்ன கேள்வியை இயல்பாக கேட்டுவிட்டாள். பதில் சொல்ல அர்ஜீன் நேரம் எடுத்துக் கொண்டான்...
"அது வந்து அக்கா... எதையும் சரியாச் செய்யனும்.. இல்லையா.."
"ஓ.. ஷ்யூர்.."
"கடையை டேக் ஓவர் பண்ணினா மட்டும் போதாது.. இங்கே வேலை செய்கிறவங்க மனதில் புது முதலாளி நான்தான்கிற எண்ணம் வரனும்..."
"அது வராம எங்கே போகும் அர்ஜீன்..?"
"அப்படிச் சொல்லிவிட முடியாதுக்கா.. இது மதுரை.. இங்கே இருக்கிறவங்களுக்கு மண் வாசனையில அதிகமான பிடிப்பிருக்கு..."
"மண்வாசனையா..?"
ஆனந்திக்கு மண்வாசனை என்றால் என்னவென்று தெரியவில்லை.. அவளைச் சொல்லியும் குற்றமில்லை.. திருநெல்வேலியை பூர்விகம் என்று சொல்லிக் கொள்ளும் பார்த்தசாரதி.. அங்கே நிலை கொள்ளாமல் அவருடைய தாத்தா காலத்திலே மதுரைக்கு புலம் பெயர்ந்ததாகச் சொல்கிறார்.. அங்கேயும் நிலை கொள்ளாமல் அவர் காலத்திலே அவர் சென்னைக்கு தொழில் செய்ய வந்து விடுகிறார்.. சென்னையிலே பிறந்து வளர்ந்த ஆனந்தி மண்வாசனையாக எந்த மண்ணின் வாசனையை நுகர்வாள்..?
பூர்விகம் என்பதினால் திருநெல்வேலி மண்ணின் வாசனையை நுகர்வாளா..? புலம் பெயர்ந்ததால் மதுரை மண்ணின் வாசனையை நுகர்வாளா..? பிறந்து வளர்ந்ததினால் சென்னை மண்ணின் வாசனையை நுகர்வாளா..?
அவளுக்கு மண்வாசனையைப் பற்றித் தெரியாததில் வியப்பொன்றும் இல்லையே...
அர்ஜீனும் அவளைப் போலதான்.. அவளாவது சென்னையில் இருக்கிறாள்.. அவனோ சென்னையிலும் நிலைகொள்ளாமல் வெளிநாடுகளுக்குப் பறந்து கொண்டிருப்பவன்...
அவன் என்ன மண்வாசனையைப் பற்றி பி.எச்.டி யா பண்ணியிருக்கிறான்..? அதைப் பற்றிய அரிச்சுவடி கூட அவனுக்குத் தெரியாதே..
மண்வாசனையைப் பற்றி அவனுக்கு காவ்யாதான் பாடம் எடுத்து வைத்திருந்தாள்...
"இந்தா பாருங்க.. இது மதுரை..."
"நானென்ன சென்னைன்னா சொன்னேன்..?"
"உங்க பருப்பெல்லாம் இங்கே வேகாது..?"
"ஏன்..? வைகைத் தண்ணி உப்புத்தண்ணியா..?"
"வேணாம் சார்.. வம்பிழுக்காதீங்க.. இளநீத் தண்ணிகூட உப்புக்கரிக்கும்.. எங்க வைகைத் தண்ணி தேனாட்டமில்ல இருக்கும்..."
"அப்புறம் ஏன் பருப்பு வேகாது..?"
"உங்களுக்கு டியுசன் எடுத்தே நான் ஓய்ஞ்சு போயிட்டேன்..."
"நீயும் விளங்கப் பேசனுமா.. இல்லையா..?"
"உங்களுக்கு விளக்கிட்டாலும்..."
"என்னமோ வாய்க்கு வாய் மதுரையில சங்கத்தமிழை வளர்த்தாங்கன்னு சொல்லுவியே.. இதுதான் உங்க தமிழா..?"
"உங்களுக்கு புரிஞ்சுக்கத் தெரியலைன்னு சொல்லுங்க.. அதுக்காக எங்க தமிழை குறை சொல்லாதீங்க.. எங்கே போனாலும் எங்களை இன்னார்ன்னு காட்டிக் கொடுக்கிறது இந்தத் தமிழ்தான்.. தெரியுமா..?"
"அப்படியா..?"
"என்ன நொப்படியா..? மதுரை மண்வாசனையைப் பத்தி உங்களுக்கு எங்கே தெரியப் போகுது...?"
"மண்வாசனையா..?"
"ஆமாம்.. மதுரைக்குன்னு ஒரு மண்வாசனை இருக்கு சார்.. மதுரைன்னு இல்ல.. ஒவ்வொரு ஊருக்கும் மண்வாசனை உண்டு.. அதுக்கான தனி அடையாளம் உண்டு.."
"எப்படி..?"
"இப்ப கோயம்புத்தூரில போயி இறங்கினீங்கன்னு வையுங்க.. அங்கே.. என்னாங்கோ அம்முனின்னு கொங்கு நாட்டுப் பாஷை காதில விழுகும்..."
"அட.. ஆமாம்..."
"அது அந்த ஊரோட அடையாளம்.. தூத்துக்குடிப் பக்கம் போனிங்கன்னா.. என்னலே.. என்னத்தப் பண்றேம்பாங்க.."
"அதுவும் நிஜம்தான்..."
"அது அவங்களோட பேச்சு வழக்கு.. கன்யாகுமரிப் பக்கம் போனா பாலக்காட்டுத் தமிழ்தான்..."
"கேட்டியளோ தான..?"
"உம்.. அது போலதான் மதுரையிலயும்.. ஏம்ப்பா ஏய்ய்.. ஆத்தி.. அப்படிம்பாங்க.. இது மதுரையோட மண்வாசனை.. எங்க ஊர் மண்ணுல பிறந்தவங்களுக்கு மண்வாசனை ஜாஸ்திங்க..."
"மத்த ஊருக்கு இது குறைச்சலா..?"
"யார் சொன்னது..? அந்தந்த ஊரில இதே டயலாக்கத்தான் சொல்லுவாங்க.. அவங்கவங்களுக்கு அவங்கவங்க ஊர்தான் உசத்தி.. அந்த மண்வாசனை தான் அவங்களுக்கு உயிர்மூச்சு..."
இப்படியாகத்தானே காவ்யாவிடம் கற்றுக்கொண்ட மண்வாசனையை ஆனந்தியிடம் பிரயோகித்தான் அர்ஜீன்..
"அதுவாக்கா... ஒவ்வொரு ஊரில இருக்கிறவங்களுக்கும்.. அந்த ஊர் மேல ஒரு பிடிப்பிருக்கும்..."
"இருந்துட்டுப் போகட்டும்.. அதுக்கும் நீ உன் வேலைகளை விட்டுட்டு மதுரையில டைம் ஸ்பென்ட் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்..?"
"இருக்குக்கா.. இந்தக் கடையோட முதலாளியா துரியோதனன் இருந்திருக்கார்.. அவர் மதுரைக்காரர்..."
"இப்ப என்னதாண்டா சொல்ல வர்ற..."
"அவர் மேல விசுவாசமா இருக்கிற வொர்க்கர்ஸ் மனசில நானும் மதுரைக்காரன்தான்னு இடம்பிடிக்க வேண்டாமா..?"
அர்ஜீன் மனதுக்குள் காவ்யாவை நினைத்தபடி சொன்னான்..
"உனக்கெதுக்குடா இந்த வேலை..? டேக் ஓவர் பண்ணப் போகிறதுக்கு டைம் இல்லைன்னு அழிச்சாட்டியம் பண்ணியவன்தான நீ.. இப்ப மட்டும் என்ன மாறிப் போச்சு..? அர்ஜீன்.. டாடிக்காக நீ அங்கே போய் கடையை டேக் ஓவர் பண்ணின.. தட்ஸ் ஆல்.. அதுக்காக நீ அங்கேயே அதிகநாள் ஸ்பெண்ட் பண்ணி உன் பிஸினெஸ்ஸை கெடுத்துக்கனும்னு நானும் சொல்லலை.. டாடியும் நினைக்கலை.. ஸோ.. நீ சென்னைக்கு ரிடர்னு ஆகிரு..."
"இங்கே கடையிருக்குக்கா..."
"சுண்டைக்காய் கடை.. ஏண்டா.. கடல் போல உன் கம்யூட்டர் பிஸினெஸ் இருக்கு.. மும்பையிலயும்.. பெங்களூரிலயும் அதோட பிரான்சஸ் இருக்கு.. அதவிட்டுட்டு.. மதுரையில இருக்கிற சின்னக் கடையிலயே ஏண்டா குடியிருக்கிற..?"
'ஏன்னா.. என் மனசில குடியிருக்கிறவ.. இந்த ஊரிலதான குடியிருக்கா...'
மனதில் நினைத்ததை வெளியில் சொல்ல அர்ஜீனுக்கு அதிக நேரம் ஆகாது.. ஆனால்.. அதற்கு முன்னால் அவனிடம் காவ்யா 'ஐ லவ் யு' சொல்ல வேண்டுமே.. அதனால்..
"நீதானே அலைச்சலைக் குறைச்சுக்கடா அர்ஜீன்னு சொன்ன..?" என்று சமாளித்தான்...
"அதுக்காக உன்னை மதுரையில போய் ஹோட்டலில் சாப்பிட்டுக்கிட்டு உட்காருன்னா சொன்னேன்.. சென்னையில நம்ம வீட்டில வீட்டுச்சாப்பாட்டைச் சாப்பிட்டுக்கிட்டு இருடான்னு சொன்னேன்.. நீ என்னடான்னா டாடி வீம்புக்காக மதுரையில வாங்கி வைச்சிருக்க சின்னக்கடையில போய் உட்கார்ந்திருக்க.."
ஆனந்திக்கு விளக்கம் சொல்வது கடினம்.. அவள் சரியான கோணத்தில் சிந்தித்து சரியான கேள்வியைக் கேட்டிருந்தாள்.. அர்ஜீனைப் போன்ற நிற்க நேரமில்லாத தொழிலதிபன்.. அவனுடைய தந்தை தனது மணரணத்தை ஆற்றிக் கொள்வதற்காக வாங்கிப் போட்டிருந்த சின்னஞ்சிறு கடையில் எப்படி காலத்தை விரயம் பண்ணுகிறானென்றுதான் அவள் கேட்டாள்.. அத்தோடும் அவள் நிறுத்தவில்லை...
"ஆச்சரியமாயிருக்கு அர்ஜீன்.."
"என்னக்கா..?"
"நீயோ டாடியின் உழைப்பில் சொந்தம் கொண்டாட விரும்பாதவன்.. சென்னையில நம்ம 'நியு எக்ஸ்போர்ட்' பக்கம்கூட போக மாட்ட.. நீ எப்படி டாடி வாங்கிப் போட்ட சின்னக் கடையில போய் நாள்கணக்கா உட்கார்ந்திருக்க..?"
ஒரு மனிதன்.. தனக்குப் பிடித்த ஊரில்.. பிடித்த பெண்ணிற்காக தங்குவது கூட குற்றமா என்று களைத்துப் போனான் அர்ஜீன்...
'எல்லாம் இவளால வந்தது...'
அவனுக்கு காவ்யாவின் மீது கோபம்.. கோபமாக வந்தது..
'இவ மட்டும் பதிலுக்கு ஐ லவ் யுவைச் சொல்லித் தொலைச்சிருந்தா.. இங்கேதான் என் காதலி இருக்கிறாக்கா.. அம்மா.. டாடியிடம் சொல்லி பெண் கேட்டு வரச்சொல்லு...' என்று அவன் ஆனந்தியிடம் சொல்லியிருப்பானே.. அவளும் தம்பிக்காக பெற்றவர்களிடம் பேசியிருப்பாளே...
அர்ஜீனின் கோபம் முழுவதும் காவ்யாவின் பக்கம் திரும்பியது.. அவன் ஆனந்தியிடம் சமாளித்து விட்டான்..
"என்னமோ தெரியலைக்கா.. எனக்கு இந்த ஊரை ரொம்பப் பிடிச்சிருக்கு.. உலகத்தைச் சுத்திச்சுத்தி என் மூளை சூடேறிப் போயிருக்குக்கா.. இந்த ஊரில் மைன்டை ரிலாக்ஸ் பண்ண முடியுது.. என்னதான் சிட்டியா இருந்தாலும்.. நம்ம பாரம்பரியத்தின் கல்ச்சர் மாறாம பாதுகாத்து வைச்சிருக்கிற இந்த ஊரிலயே கொஞ்ச நாளைக்கு இருக்கலாம் போலத் தோணுதுக்கா.."
இந்தப் பதிலில் ஆனந்தி திருப்தி அடைந்து விட்டாள்.. அப்போதும் அவனுடைய வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி அவள் நினைவுறுத்தாமல் இல்லை...
"நீ கனடா போகனும்டா.. இந்த முறை திரும்பிவர ரொம்ப நாளாகும்ன்னு சொல்லியிருக்க.. ஸோ.. சென்னைக்கு வந்து அம்மா கூடவும்.. என்கூடவும்.. டூ டேஸாவது ஸ்பென்ட் பண்ணு அர்ஜீன்..."
தமக்கையின் குரலில் இழையோடிய பாசத்தின் ஏக்கத்தில் கரைந்து போய்விட்டான் அர்ஜீன்.. விமானத்தைப் பிடித்தால் போதும்.. அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் அவள் முன்னால் போய் நின்று விடுவான்.. அப்படி அவனைப் போக விடாமல் தடுப்பது எது..?
அர்ஜீன் யோசித்தபடி சுழல் நாற்காலியின் சுழன்று திரும்பினான்.. அறைக்குள் வந்து கொண்டிருந்த காவ்யாவின் பார்வையைச் சந்தித்தான்.. அவனின் பார்வை எதைச் சொல்லியதோ.. அதில் அவள் எதைக் கண்டாளோ.. லேசான தடுமாற்றத்துடன் அவள் தயங்கி நின்றாள்...
'இவதான் என்னைக் கட்டிப் போட்டு காவலில் வைச்சிருக்கா..' அர்ஜீனின் பார்வை அவளை ஊடுறிவியது..
"காவ்யா..."
அவன் எழுந்தான்.. அவள் பக்கமாகச் சென்றான்.. அவள் கலவரத்துடன் திரும்பிப் பார்த்தாள்.. அறைவாசலில் யாருமில்லை.. அந்த நிம்மதியுடன் அவனைப் பார்த்தவள் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன்...
"என்ன.. என்ன வேணும்.." என்று படபடத்தாள்...
"நீதாண்டி வேனும்.." அவன் நிதானமாக அவளை நெருங்கினான்...
"என்னது.. 'டீ' யா..? நானென்ன உங்க பொண்டாட்டியா..? போனாப் போகுது.. அன்னைக்கு தெரியாம வாய் விட்டுட்டிங்கன்னு பொறுத்துப் போனா.. நீங்க அதையே பிடிச்சுக்கிட்டு தொங்கறிங்களா..? மரியாதை கொடுத்து மரியாதையை வாங்கனும் சார்.. இது உங்க ஊரில்ல.. மதுரை..."
படபடப்பில் அவள் பேசிக் கொண்டே போக.. அவன் அதைப் பொருட்படுத்தாமல் அவளையே பார்த்த வண்ணம் நெருங்கிக் கொண்டிருந்தான்.. காவ்யா பின் வாங்கினாள்.. அவன் நெருங்க.. அவள் பின்வாங்க என்று நகர்ந்ததில் அதற்கு மேல் அவள் பின்வாங்க முடியாமல் சுவர் அவளைத் தடுத்தது...
தடைபோட்ட சுவரின் மீது சாய்ந்து நின்ற காவ்யாவின் விழிகள் கலவரத்துடன் அவனைப் பார்த்தன..


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -47
எங்கிருந்தோ ஆசைகள்.. -47
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-47.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-47.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy