எங்கிருந்தோ ஆசைகள் -46

46 என் சுட்டும் விழி சொல்லும் மொழியை.. நீ உணர ஆசைகொண்டேன்.. "உங்க ரெண்டு பேத்துக்கும் நடுவில என்னதாண்டி ஓடிக்கிட்டிருக்கு....


46
என் சுட்டும் விழி சொல்லும் மொழியை..
நீ உணர ஆசைகொண்டேன்..


"உங்க ரெண்டு பேத்துக்கும் நடுவில என்னதாண்டி ஓடிக்கிட்டிருக்கு.." பாவனா புலன் விசாரணையை ஆரம்பித்தாள்..
"என்ன ஓடிக்கிட்டிருக்கு..? வைகை ஆறா ஓடிக்கிட்டிருக்கு..?" ஒன்றும் தெரியாத சின்னக் கன்னியாக காவ்யா வினவினாள்...
"ஏண்டி கேக்கமாட்ட..? ஏர் உழுகிறவன் இளிச்ச வாயனா இருந்தா மாடு மச்சான்னு கூப்பிடுமாம்.. அந்தக் கதைபோல இருக்கு..."
"அத ஏர் உழுகிற இளிச்சவாயன் சொல்லனும்.. ஊருக்குள்ள இருக்க அத்தனை பேரையும் கேணையா மாத்தற நீ சொல்லக் கூடாது.."
"நேத்து வரைக்கும் என்னப்பத்தி நான் அப்படித்தாண்டி நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. இப் உன்னப் பாத்த பின்னாலதானே தெரியுது.. நீ என்னயே தூக்கிச் சாப்பிட்டுருவன்னு..."
"இந்தாபாரு.. எனக்கு வேல தலைக்கு மேல குமிஞ்சு கிடக்கு.. உன்கூட வாயடிக்க எனக்கு நேரமில்ல.. சொல்லிப்புட்டேன்..."
"நீ இதத்தானே நான் கடைக்கு வந்த நாள்முதல்.. இந்த நாள் வரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்க.. நீ சொல்றேங்கிறதுக்காக.. நீ நடத்தற நாடகத்த நான் ஏன்னு கேக்காம போக முடியுமா..?"
"ஆமாண்டி.. இங்க அல்லி.. அர்ச்சுனன் நாடகம் நடக்குது.. நீ அதப் பாத்துட்டு நகர முடியாம நிக்கிற.."
"அப்பவும் அல்லி அர்ச்சுனன் நாடகத்ததான் சொல்லுவ.. பவளக்கொடி நாடகத்தப் பத்தி வாயைத் திறந்திர மாட்ட.."
'நீ பவளக்கொடியாகிறதிலேயே குறியாய் இரு...' எரிச்சலாகிப் போன காவ்யா நெற்றிக்கண்ணைத் திறந்தாள்..
"வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாச்சும் வேலயப் பாரு பாவனா..."
"உனக்கேண்டி இந்தக் காண்டு..?"
"காண்டு.. கீண்டுன்னு சீண்டிக்கிட்டு இருந்த.. நடக்கிறதே வேற.. யாருடி இவ.. மதுரைக்குள்ள வந்து காண்டுன்னு பேசறா..."
"யம்மா.. மதுரைக்காரி..! இதுக்கெல்லாம் வித்தாரமா பதில் சொல்றயே.. அந்த அர்ஜீனனுக்கும்.. இந்த அல்லிக்கும் நடுவில என்ன ஓடிக்கிட்டிருக்குன்னு மட்டும் சொல்ல மாட்டேங்கறியே..."
"ஒன்னும் ஓடல..."
"பாத்தா அப்படித் தெரியலயே.. யாரு கேள்வி கேட்டாலும் பாஸ் உன்னப் பாத்துக்கிட்டே பதில் சொல்றாரு.. நீ என்னடான்னா ஒரு செகரட்டரியப் போல இல்லாம.. பொண்டாட்டியப் போல அந்த முறை முறைக்கிற.. என்னதாண்டி நடக்குது..?"
"எதுவும் நடக்கலை.. நீ உன் கற்பனைக் குதிரையை ஒட்டாம.. அடக்கி லாயத்தில கட்டு.."
"இது உன் அண்ணனுக்குத் தெரியுமா..?"
"எது..?"
"அதாண்டி.. உனக்கும் பாஸீக்கும் நடுவில ஓடுதே வைகையாறு.. அதப்பத்தி உன் அண்ணன்காரருக்குத் தெரியுமான்னு கேட்டேன்..."
"தெரியாதுன்னா என்ன செய்கிறதாய் உத்தேசம்...?"
"இதைப் பற்ற வைக்கிற சாக்கில பசை போடாம உன் அண்ணன்கூட ஒட்டிக்கிலாம்கிற உத்தேசம்தான்.. வேற என்ன..?"
கண்கள் செறுகப் பேசினவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள் காவ்யா.. அவள் எதற்காக அப்படிப் பார்க்கிறாள் என்று அறியாதவளாய் புருவங்களை உயர்த்தினாள் பாவனா..
"நீ பாஸைக் கண்டாலும் பசை போட்டு ஒட்டிக்கிரலாம்ன்னு பிளான் பண்ற.. என் அண்ணன் பேச்சை எடுத்தாலும்.. அங்கேயும் கோந்தை ரெடி பண்ணி வைச்சுக்கிற.. ஏதாவது ஒரு இடத்தை செலக்ட் பண்ண மாட்டியா பாவனா..?"
"நானென்ன பாஸைப் போல தெய்வீகக் காதலியா..? அந்தப் புண்ணாக்கெல்லாம் இங்க இல்லம்மா.. தூண்டில வீசினா எது மாட்டுதோ.. அது.."
"உன்னயெல்லாம் ஓரம் கட்டி அடிக்கனும்டி.. ஆமா.. அவனப் பாத்தா உனக்குத் தெய்வீகக் காதலனப் போல தெரியுதா..?"
"பின்ன.. இல்லையா..?"
"எத வைச்சு இப்பேற்பட்ட அவசர முடிவுக்கு நீ வந்த.."
"ஃபாரினுக்கு பறந்துக்கிட்டிருக்க மனுசன்.. உன்னக் கண்டதும் மதுரையில வந்து பம்மிக்கிட்டு இருக்காரே.. அத வைச்சுத்தான் சொல்றேன்..."
காவ்யா பேசவில்லை.. பாவனா சொன்னதை யோசிப்பவளைப் போல டிபன் டப்பாவில் இருந்த தக்காளி சாதத்தை வாய்க்கு கொண்டு போகாமல் விரல் விட்டு அளைந்தாள்.. பாவனா டிபன் அடுக்குகளைக் காலி பண்ணிவிட்டு.. ஏப்பம் விடாத குறையாக பெருமூச்சு விட்டபடி தோழியைப் பார்த்தாள்.. அவள் அப்போதும் சிந்தனையோடே இருந்தாள்...
"கையில அளையறத வாய்க்குள்ள கொண்டு போடி.. நேரமாகலையா..?"
"ம்ப்ச்.. பொறுடி.."
"நான் பொறுப்பேன்.. ஏகாம்பரம் பொறுப்பாரா..? அவரே பாவம் பெண்டாட்டியோட பிடுங்கல்ல இருந்து தப்பிக்க கடைக்கு ஓடிவந்து ஒளிஞ்சுக்கிறாரு..."
"அப்படி அவர் உன்கிட்ட வந்து சொன்னாரா..?"
"ஊரே சொல்லுது.. இவரு எங்கேயிருந்தாலும்.. அந்தம்மா வந்து பிலுபிலுன்னு பிடிச்சுக்குவாங்களாம்.. கடைக்குள் மட்டும் கால்வைக்க மாட்டாங்களாம்..."
"ஏண்டி.. அவங்களுக்கு அப்படியொரு நேர்த்திக்கடன் இருக்கா..?"
"ஒரு கடனும் இல்லயாம்.. ஒருநா அந்தம்மா வந்திருந்தப்ப நம்ம தேவாங்கும் வந்துட்டாராம்.."
"அதுசரி.. அவனே ளொள்ளு..."
"அவன் மத்தவங்ககிட்டத்தான் ளொள்ளைக் காட்டுவான்.. உங்கிட்ட ஜொள்ளைத்தான் காட்டுவான்.."
"வேணாம் பாவனா.. விட்டுடு.. இப்ப என்ன சோலிக் கழுதைக்கு அந்த தேவாங்கைக் கட்டி இழுக்கற..?"
"அவனக் கட்டி இழுத்துட்டாலும்..."
"நீதாண்டி அவன் பேச்ச இழுத்த..?"
"பேச்சைத்தான் இழுத்தேன்.. அவன இழுக்கல.. உனக்கு கோபம் வந்தா நாலு மொத்து மொத்திக்க.. ஆனா அவன்கூட மட்டும் என்ன இணை கூட்டிப் பேசிராதே காவ்யா..."
"இதப் போலத்தானே எனக்கும் இருக்கும்..?"
"ஆனாலும் என் டேஸ்ட்ட இவ்வளவு மட்டமா நீ எடை போட்டிருக்கக் கூடாது.. இவனப் பாத்தாலே கோந்து பாட்டிலை நான் ஒளிச்சு வைச்சுருவேண்டி..."
"விட்டுத்தொலை.. ஏகாம்பரம் பெண்டாட்டிகிட்ட வா..."
"அதாண்டி அந்தம்மா வந்த நேரத்தில இவனும் வந்திருக்கான்... சரக்கப் போட்டிருந்தானாம்.."
பாவனா கதை சொல்லிக் கொண்டிருக்க.. காவ்யா சரக்கு என்றதும் அது உள்ளூர் சரக்கா.. வெளியூர் சரக்கா என்று கேட்ட அர்ஜீனின் விசமத்தை நினைத்து ரகசியப் புன்னகை பூத்தாள்...
"என்னாச்சு..? பாஸ் நினப்பு வந்திருச்சா..?"
"சிச்சீ..."
"இந்தப் பழம் புளிக்கும்ன்னு நரிதான் சொல்லும்.. நீ சொல்ல மாட்ட..."
"ஏகாம்பரம் பெண்டாட்டி என்னதான் ஆனாங்கடி..?"
"அதையேன் கேக்கற.. தேவாங்கும் நோக்கியிருக்கு.. இந்தம்மாவும் நோக்கியிருக்கு..."
"ஏண்டி அவன் கிழவியக்கூட விட்டு வைக்க மாட்டானா..?"
அருவெறுப்புடன் முகம் சுளித்தாள் காவ்யா.. அவசரமாக அதை மறுத்தாள் பாவனா...
"இது அந்த நோக்கல் இல்லடி.. அந்தம்மா சேலய இழுத்துச் செறுகிக்கிட்டு.. வரும்போதே எங்கே அந்த ஆள்ன்னு கேட்டுக்கிட்டே வந்துச்சாம்..."
"இதப் பாருடா.. அப்புறம்..?"
"இவன் குடிவெறியில இருந்தவன்.. அந்தம்மா சொன்ன அந்த ஆள்.. எந்த ஆள்ன்னு தெரியாம அதுகூட மோதிட்டான்.."
"அடப்பாவமே.."
"யாரச் சொல்ற..?"
"அதுக ரெண்டையும் சொல்லலை.. பொதுவாச் சொன்னேன்..."
"அன்னைக்கு தேவாங்கு கத்தின கத்தல்ல ஓடிப் போனதுதானாம்.. அதுக்கப்புறமா அந்தம்மா இந்தக்கடை இருக்கிற திசைப்பக்கம் கூடத் திரும்பிப் படுத்ததில்லையாம்.."
"நீ கண்ட..."
"நான் காணலைடி.. கண்டவர் சொன்னார்..."
"யாரைச் சொல்ற..."
"ஏகாம்பரத்த்தான் சொன்னேன்.. நீ சாப்பிடப் போறியா இல்லியா.."
காவ்யா அரைமனதாய் சாப்பிட்டுவிட்டு எழுந்தாள்.. கைகழுவப் போனபோது மெதுவாக பாவனா கேட்டாள்...
"நீ பயப்படறியா காவ்யா..?"
காவ்யாவுக்கு தூக்கி வாரிப் போட்டது.. அவள் பயப்படுகிறளா..? யாரைப் பார்த்து பயப்படுகிறாள்..?
"அந்த அர்ஜீனைப் பாத்துப் பயப்படறியா..?"
அவனைப் பார்த்தால் பயமா வருகின்றது..? காவ்யாவின் முகத்தில் வெட்கம் கலந்த ரகசிய சந்தோசம் பரவியதில் பாவனாவின் நெற்றியில் சிந்தனையின் ரேகைகள் படிந்தன...
"உனக்கு அவனைப் பிடிச்சிருக்கு போல..."
இதைச் சொன்ன பாவனாவின் வார்த்தைகளில் பொறாமையின் சாயல் லேசாக பரவியிருந்தது...
"அவனைப் போய் பிடிச்சிருக்குன்னு நான் சொல்லுவேனா..? வேலையைப் பாருடி..."
"எல்லாத்தையும்.. பார்த்துக்கிட்டும்.. கேட்டுக்கிட்டும் தான் இருக்கோம்.. அவன் உன்னை பார்வையிலேயே மேயறான்.. நீ கள்ளத்தனமா பதிலுக்கு பார்க்கிற.. வெளியில மட்டும் பிடிக்காத மாதிரி வேசம் கட்டற.. என்னதாண்டி நடக்குது..?"
"எதுவும் நடக்கல.. நீ வேலையைப் பாரு..."
"இதை நான் நம்பனுமாக்கும்..?"
"நம்பாட்டிப் போ.. எனக்கென்ன.."
காவ்யா போய் விட்டாள்.. பாவனா கையெழுத்து வாங்காமல் விட்டு வைத்திருந்த ஃபைல்களைத் தூக்கிக் கொண்டு இப்போது அவன் எந்த நிலைமையில் இருக்கிறானோ என்ற யோசனையுடன் அர்ஜீனின் அறைக்குள் போனாள்...
நல்லவேளையாக அவன் காவ்யாவைப் பார்க்காமல்.. இறக்கப்பட்டிருந்த கம்யூட்டர்களின் விலைப்பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தான்..
"சார்..." என்ற பாவனாவின் அழைப்புக்கு உடனடியாக தலை நிமிர்ந்து பார்த்துவிட்டான்..
"இந்த ஸ்டேட்மெண்ட்ஸில உங்க சைன் வேணும் சார்..."
பாவனா பவ்யமாக அவன் முன் ஃபைல்களை விரித்தபடி காவ்யாவைப் பார்த்தாள்.. அவள் வேலை செய்வதை விட்டுவிட்டு.. பாவனாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..
'கண்காணிக்கிறா...' பாவனாவின் மனதில் சிரிப்பு எழுந்தது...
எல்லா ஃபைல்களிலும் கையொப்பம் இட்டு முடித்த அர்ஜீன் அவளைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தான்... அழகர் கோவிலுக்குப் போவதற்காக பாவனாவின் வீட்டிற்குப் போய் வந்ததிலிருந்துதான் அவன் அப்படிப்பட்ட சிநேகச் சிரிப்பை சிந்துகிறான் என்ற நினைவில் காவ்யா கனலாகிப் போனாள்...
"உங்க பேரண்ட்ஸ் எப்படியிருக்காங்க..?"
அவனின் இந்தக் கேள்வியில் மகிழ்ந்து போனாள் பாவனா...
"ஓ.. தே ஆர் ஃபைன் சார்..."
"நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க..."
"ஓ.. ஷ்யூர் சார்..."
பாவனா கால்கள் தரையில் பாவாமல் ஃபைல்களை எடுத்துக்கொண்டு காவ்யாவின் பக்கம் திரும்பாமல்கூடப் போய்விட.. காவ்யா பல்லைக் கடித்தாள்..
'அவளோட பேரண்ட்ஸ் எப்படியிருந்தா இவனுக்கென்ன..?'
கோபத்துடன்.. டம்.. டும்மென்று.. ஃபைல்களைத் தூக்கிப் போட்டபடி அவள் வேலையைப் பார்க்க.. அர்ஜீன் அவளைப் பார்த்தான்... அவளின் கனல் கக்கும் பார்வையில் புருவங்களை உயர்த்தினான்...
"வாட் ஹேப்பன்..?"
"இந்த இங்கிலீஷெல்லாம் இங்கே வேணாம்.. அதையெல்லாம் பாவனாகிட்டயே கொட்டுங்க..."
"ஓ.. அதுதான் கோபமா..?" அவன் உல்லாசமாக சிரித்தான்...
'கண்டு கொண்டானே..' காவ்யாவுக்கு அகப்பட்டுக் கொண்டோமே என்றிருந்தது...
"பாவனா உன்னோட பிரண்ட்..."
"உங்க கடையோட ஸ்டாஃப்.."
"அப்படியும் சொல்லலாம்..."
"அப்புறம் என்னத்துக்காக என் பிரண்டுங்கிறதைச் சொல்லனும்..?"
"அதுவும் உண்மைதானே..?"
"அந்த உண்மையை எதுக்காகச் சொல்கிறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?"
"உன் பிரண்டுங்கிறதுக்காக அதிகப்படியா இரண்டு வார்த்தைகள் பேசினேன்.. அது தப்பா..?"
"அடேங்கப்பா.. என்னைச் சேர்ந்தவங்கிறதுக்காக இந்த இம்பார்டன்டாக்கும்..? இந்த இம்பார்டன்ட் என் அண்ணனைக் கண்டதும் எங்கே ஓடிப் போச்சாம்..?"
அவளின் படபடப்பை ரசித்தபடி அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜீன்.. அவளின் உரிமை கலந்த கோபம் அவன் மனதை தாலாட்டியது..
'இவ காண்பிக்கிற இந்த பொஸஸிவ்னெஸ்ஸை இவ அறிவாளா..?' அவன் மனதில் கேள்வி முளைத்தது...
"ஓ.. ஓன்னு.. அத்தன ஓ போடறாளே.. அதைப் போல எங்களுக்கெல்லாம் பேசத் தெரியாது சார்.. என் அண்ணன் கோவக்காரன்.. அது முகத்தில முள்ளக் கட்டித்தான் வைச்சிருக்கும்..."
"வாட்..?" அர்ஜீன் திகைத்து விட்டான்...
'முகத்தில் முள்ளைக் கட்டி வைப்பதா..?' அப்படியென்றால் என்னவென்று அவனுக்குத் தெரியவில்லை...
"ம்ப்ச்.. உங்ககிட்ட இது ஒன்னு இருக்கு.. எதுக்கெடுத்தாலும்.. வாட்... வாட்ன்னு உசிரைக் குறைப்பீங்க.. என் அண்ணன் சிடுசிடுன்னு இருக்கும்.. அதைத்தான் சொன்னேன்.." காவ்யா விளக்கம் கொடுத்த போது அவன் ஆச்சரியமாக அவளைப் பார்த்தான்...
"அதை இப்படியா சொல்லுவ..?"
அவ்வளவுதான்.. வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது.. காவ்யா கன கோபத்துடன் கம்யூட்டர் பக்கமாக திரும்பிக் கொண்டாள்.. அர்ஜீன் பேசிய எந்தப் பேச்சுக்கும் அவள் பதில் சொல்லவேயில்லை...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள் -46
எங்கிருந்தோ ஆசைகள் -46
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-46.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaasaikal-46.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy