எங்கிருந்தோ ஆசைகள்.. -54

54 நான் கண்ட முழுநிலவில் - நீ எனைக்கான ஆசைகொண்டேன்... காவ்யாவினால் உறங்க முடியவில்லை.. அவள் ஜன்னலோறமாகத் தெரிந்த தென்னங்கீற்றின் ...


54
நான் கண்ட முழுநிலவில் - நீ
எனைக்கான ஆசைகொண்டேன்...

காவ்யாவினால் உறங்க முடியவில்லை.. அவள் ஜன்னலோறமாகத் தெரிந்த தென்னங்கீற்றின் சலசலப்பில் கவனத்தைத் திருப்பினாள்.. அவள் உடல்மீது
படிந்த சிலுசிலுப்பான காற்றில் அவளுக்கு இதம் கிடைக்கவில்லை..
"இந்த மன்றத்தில் ஓடிவரும்
             இளந்தென்றலைக் கேட்கின்றேன்..
    நீ சென்றிடும் வழிதனிலே
             என்தெய்வத்தைக் காண்பாயோ.."
ஜன்னல் கம்பியில் சாய்ந்து நின்று சன்னக்குரலில் பாடினாள்.. அவள் பாடலுக்கு அசைந்த தென்னங்கீற்றுக் களின் அசைவுகள் அவள் பாடலை ரசித்து தென்னங்கீற்று தலையை ஆட்டுவதைப் போல இருந்தது...
"வண்ண மலர்களில் அரும்பாவாள்
             உன் மனதுக்கு கரும்பாவாள்
    இன்று அலைகடல் துரும்பானாள்
             என்னும் ஒருமொழி கூறாயோ..."
மனமுருகப் பாடியபடி திரும்பிப் பார்த்தவள் திகைத்து நின்றாள். அறைக்கதவின் ஓரமாக கண்ணதாசன் கைகட்டி கதவின் மீது சாய்ந்து நின்றிருந்தான்...
"அண்ணே.." அகப்பட்டுக் கொண்ட உணர்வுடன் திக்கித் திணறினாள் காவ்யா..
இப்போதெல்லாம் அவள் கண்ணதாசனின் முன்பு பேச்சு வராமல் திக்கித் திணறுகிறாள் என்ற நினைவில் கண்ணதாசனுக்குள் பெருமூச்சு எழுந்தது...
எப்படியிருந்தவள் எப்படியாகி விட்டாள்..?
நிமிர்ந்த பார்வையும் நேர் கொண்ட நடையுமாக இருந்த அந்தக் காவ்யா எங்கே..?
"தூங்கலையாம்மா...?"
ஜன்னலில் சாய்ந்து பாட்டுப்பாடிக் கொண்டிருப்-பவளிடம் இப்படிக் கேட்டால் அவள் என்னவென்று பதிலைச் சொல்லுவாள்..?
"தூக்கம் வரலைண்ணே..."
"ஜாமக்கோழி கூவியாச்சு.. இன்னும் தூக்கம் வரலைன்னு சொன்னா எப்படிம்மா...?"
என்னவோ தூக்கத்தை அவள் 'போ.. போ' வென்று பற்றி விட்டுக் கொண்டிருப்பதைப் போல அவன் பேசியதில் அவளுக்கு சுள்ளென்று கோபம் வந்தது..
ஒரு மனுஷிக்கு தூங்காமல் விழித்திருக்கக்கூடச் சுதந்திரம் இல்லையா..? இந்தியாவுக்குக் கிடைத்த சுதந்திரம்.. மதுரையில் பிறந்த காவ்யாவுக்கு கிடைக்க வில்லையென்றால் அவள் இந்தியத் திருநாட்டின் குடிமகள் என்பதில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது..? அவள் தூங்காமல் விழித்திருப்பதற்கான சுதந்திரத்தைப் பெற வாதாடத் தொடங்கினாள்..
"ஏண்ணே.. தூக்கம் பிடிக்கலைன்னா அது ஒரு குத்தமா..?"
"தூங்கற நேரத்திலே தூங்கனும்.. விழித்திருக்கிற நேரத்தில விழித்திருக்கனும்.. அதுதான் நார்மல்.."
"அப்ப நான் நார்மலா இல்லன்னு சொல்றியா..?"
"அது உன் மனசுக்கே தெரியும்..."
"அடாவடியாய் பேசாதே.. தூக்கம் வந்தா தூங்கப் போறேன்.. அதுதான் வந்து தொலைக்க மாட்டேங்குதே.. அப்புறம் நான் எப்படித் தூங்குவேன்...?"
"இத்தனை நாளா வந்த தூக்கம் இன்னைக்கு ஏம்மா வராமப் போச்சு..?"
கண்ணதாசனின் கேள்வியில் காவ்யாவுக்கு 'திக்'கென்று இருந்தது.. கண்ணதாசன் காரணிமில்லாமல் தங்கையை தூண்டித் துருவ மாட்டான்.. அதிலும் அந்த நள்ளிரவு வேளையில் அதைச் செய்ய மாட்டான்.. மனதுக்குள் பயம் சூழ்ந்த போதும் அவள் மதுரை மண்ணிற்கே உரிய தெனாவெட்டுடன் அந்தக் கேள்வியை எதிர்கொண்டாள்...
"அதத் தூக்கத்துக் கிட்டப் போயிக் கேளு.. என்கிட்டக் கேக்காதே..."
கண்ணதாசனின் புருவங்கள் உயர்ந்தன.. அவன் நிதானமான நடையுடன் காவ்யாவை நெருங்கி வந்தான்.. விடி விளக்கின் மெலிதான வெளிச்சத்தில் அவனின் ஊடுறுவும் பார்வையை அவளால் உணர முடிந்தது...
"அந்தத் தூக்கமா.. வேலைக்குப் போகிறதா வீட்டில சொல்லிட்டு... பேங்குக்குப் போகிறதா கடையில போக்குக் காட்டிட்டு.. காரில ஏறி ஏர்போர்ட்டுக்குப் பக்கத்தில போயிட்டு வந்திருக்கு..?"
அவனின் அழுத்தமான கேள்வியில் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.. கைவிரல்கள் தந்தியடிக்க.. வாய் குழற..
"அண்ணே.." என்று பயத்துடன் அழைத்தாள்...
"அண்ணன்தான்.. உனக்கு அண்ணன்தான்.. உனக்கு அண்ணனா நான் கூடப் பொறந்திருக்கேன்.. கீழே மகளைப்பத்தின விவரம் தெரியாம உன்னைப் பெத்த ஆத்தாளும்.. அப்பனும் தூங்கிக்கிட்டு இருக்காங்க.. இத்தனை பேரு கண்ணிலயும் மண்ணைத் தூவிட்டு நீ இந்த மதுரையிலேயே எல்லை தாண்டிட்டு திரும்பி வந்திருக்க..."
அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் சம்மட்டியாய் அவள் தலைமீது இறங்கியது... அவள் அதிர்வுடன் பதில் சொன்னாள்..
"நான் தப்புப் பண்ணலைண்ணே..."
"அது மத்தவங்களுக்குத் தெரியுமா..? மூடின காருக்குள்ள மணிக்கணக்கில ஒருத்தன் கூட உக்காந்து பேசிட்டு வந்திருக்க.. அது பேச்சோட மட்டும் நின்னுருச்சுன்னா சொன்னா யாரும் நம்புவாங்களா..?"
"நீ நம்பலையா..?"
"உன்னை நம்புவேன்.. உனக்கு அவன்மேல இருக்கிற மயக்கத்தையும்.. ஆசையையும் நம்ப மாட்டேன்.."
"அண்ணே..."
"அவன் ஆணழகன்தான்.. ஆறடி உயரத்தில இருக்கிற ஆம்பளைதான்.. வாட்ட சாட்டமா.. அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டுக் காளைய அடக்கற அளவுக்கு வீரமும், தெனாவெட்டும் இருக்கிறவன்தான்.. அதனால மட்டும் நீ யோசிக்காம சட்டுன்னு அவன்மேல ஆசை வைச்சிரலாமா..?"
"இல்லேண்ணே.. அப்படியில்ல..."
"எப்படியில்ல..? உன் மனசில அவன்மேல ஆசையில்லன்னு சொல்லு பாப்போம்..."
"அண்ணே..."
காவ்யா கண்கலங்கினாள்.. கண்ணதாசனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. இதுபோன்ற விசாரணையை தங்கையிடம் மேற்கொள்ள நேர்ந்ததில் அவன் மனதில் வேதனை எழுந்தது..
"வேணாம்மா.. அவன் ஆகாயத்தில இருக்கிற நட்சத்திரம்.. அதை எட்டிப் பறிக்க உன்னால முடியாது.. அவன் மேல ஆசை வைக்காதே..."
எப்படி முடியும்..? ஆசை வைத்தது அவளா..? அவளது மனமில்லையா..? மனமென்னும் மாயக்குதிரைக்கு கடிவாளமிட அவளால் முடியுமா..? காற்றை விட வேகமாக பறக்கும் மனோசக்தியின் முன்னால் அவளால் என்ன செய்ய முடியும்..? தறிகெட்டு ஓடும் மனக்குதிரையை அடக்கும் வல்லமையை அன்னபூரணி அவளுக்குக் கற்றுத் தந்திருந்தாள்தான்.. பிறந்தது முதல் கட்டுக் காவலிலும்.. கட்டுப்பாடுகளிலும் வளர்ந்த காவ்யாவுக்கு சுயகட்டுப்பாடு அளவுக்கு மீறி இருந்ததுதான்..
ஆனால் அர்ஜீன் அவை அத்தனையையும் வென்று அவள் மனத்தை வசப்படுத்தி விட்டானே...
எல்லை மீறித்ததும்பும் அவன் மீதான ஆசையில் அவள் அலைக்கழிந்து கொண்டிருக்கும்போது அவன்மீது ஆசை வைக்காதே என்று அவளுடைய அண்ணன் கூறுகிறானே.. அவளால் முடிகிற செயலா அது...?
"அண்ணே.. இது வேணும்ன்னே நடந்த செயலில்ல.."
"எனக்கும் தெரியுது.. ஆனா.. ஆரம்பிக்கிறப்பவே நீ அணை போட்டு நிறுத்தியிருக்கலாமில்ல..?"
"எப்படி...?"
"அவனப் பாத்த முதல்நாளிலேயே அவன் மனசை நான் படிச்சிட்டேன்.. அதனாலதான் உன்னை வேற வேலைக்குப் போகச் சொன்னேன்.. நீ பாவனாவோட பிரண்ட்ஷிப்பைக் காரணம் காட்டி மாட்டேன்னு சொல்லிட்ட.."
"என்னை ஓடி ஒளிஞ்சிருக்கனும்னு சொல்கிறயா..?"
"செஞ்சாத் தப்பில்லை.. துரத்துகிற ஆசைகளிடமிருந்து ஓடி ஒளிஞ்சிருந்தா.. இந்த நடுஜாமத்தில நீ தூக்கம் பிடிக்காம பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கிற அவசியம் வந்திருக்காது.. அழகர்கோவிலுக்குப் போகிற அன்னைக்கு அவனும் வருகிறான்னு தெரிஞ்சவுடனே நீ வேனில ஏறாம வீட்டுக்குத் திரும்பி வந்திருந்தா.. இந்த வினையும் வந்திருக்காது.. அவனுக்கும் நீ யாருன்னு தெரிஞ்சிருக்கும்.."
'உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்..' காவ்யா நினைத்துக் கொண்டாள்..
'நான் ஏழுகடல்.. ஏழு மலையைத் தாண்டி ஒளிஞ்சிருந்தாலும் அவன் தேடிவந்து என்னை சிறையெடுப்பான்.. அவன் புத்தி தெரியாம அண்ணன் பேசுது...'
அர்ஜீனின் தீரத்தில் அவள் மனதில் படர்ந்த சிலாகிப்பு அவள் முகத்திலும் தெரிந்தது.. மங்கிய விளக்கொளியில் தங்கையின் முகத்தில் தவழ்ந்த அந்த சிலாகிப்பைக் கண்ணதாசன் கண்டுபிடித்து விட்டான்...
"வேணாம் காவ்யா.. உன்னோட இந்த ஆசைக்கு அணைபோடு..."
ஆற்றுநீருக்கு அணை போடலாம்.. கடல்நீருக்கு அணைபோட முடியுமா..? அதை அறியாதவனாக அவன் தொடர்ந்து பேசினான்...
"உன் ஆசைக்கு வேலி கட்டும்மா.."
வீட்டுக்கு வேலி கட்டலாம்.. காற்றுக்கு வேலிகட்ட முடியுமா..? துக்கத்துடன் தமையனின் முகம் பார்த்தாள் காவ்யா...
அதில் தெரிந்த இறைஞ்சல் கலந்த கண்டிப்பில் அவள் மனம் பதறியது.. அவளுடைய அண்ணனுடன் அவள் சண்டையிட்டிருக்கிறாள்.. முகம் கொடுத்துப் பேச மறுத்திருக்கிறாள்.. அப்போதெல்லாம் அவன் சிரித்துக் கொண்டிடுதான் இருந்திருக்கிறான்.. இப்படி இறைஞ்சும் பார்வையைப் பார்த்ததில்லை...
"உன் மனசை அடக்கு.. உனக்குன்னு கட்டுப்பாடுகளைப் போட்டுக்க.. அவன் மேல ஆசைப்படாதே..." கண்ணதாசன் கெஞ்சினான்..
"ஏண்ணே..? அவரு என்னை ஏமாத்திருவாருன்னு சொல்றியா..?" ஏக்கத்துடன் கேட்டாள் காவ்யா...
அத்தனை சொல்லியும்.. அர்ஜீன் மீதான ஆசையை விடாமல் கேள்வி கேட்கும் தங்கையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போனான் கண்ணதாசன்...
அவள் குழந்தை..! ஒரு காதல் நிறைவேறி கல்யாணத்தில் முடிய.. அந்தக் காதலன் மட்டும் நல்லவனாக இருந்தால் போதாது.. அவனைச் சேர்ந்தவர்களும் அப்படியிருக்க வேண்டும் என்று அறியாத பேதை..
அவள் துடிப்பானவள்தான்.. புத்திசாலிதான்.. ஆனால் அந்தத் துடிப்பும்.. புத்திசாலித்தனமும் நேர்கொண்ட பாதையில் தானே பயணிக்கின்றன.. அர்ஜீனைப் பெற்ற பார்த்தசாரதியைப் போலக் குறுக்கு வழியில் அவை பயணம் செய்யவில்லையே...
கண்ணதாசன் அனைத்தும் அறிந்தவன்.. அர்ஜீனின் கண்களில் காவ்யாவின் மீதான சொந்தத்தைக் கண்டதும் சந்தேகப்பட்டான்.. அவனது சந்தேகத்தை உறுதிப் படுத்துவதைப் போல வீட்டில் பாவனாவுடன் அழகர் கோவிலுக்குப் போகப் போவதாக பொய் சொல்லிவிட்டு.. அர்ஜீன் உட்பட கடையில் வேலை செய்த அனைவருடனும் காவ்யா வேனில் போய் திரும்பி வந்தாள்..
'முதல் பொய்...'
காதலின் முதல்படி கள்ளத்தனம்தான் என்பதை அறிந்து வைத்திருந்த கண்ணதாசன் அவனுடைய தங்கையின் மனதில் அந்தக் கள்ளத்தனத்தைப் புகுத்திய அர்ஜீனைப் பற்றிய விசாரணையை ஆரம்பித்து விட்டான்..
சென்னைக்கும்.. மதுரைக்கும் இடையில் உள்ள தூரம் ஒன்றும்.. பூமியின் விளிம்புகளுக்கிடையில் உள்ள தூரம் போல கடக்க முடியாததில்லையே...
கண்ணதாசன் அந்தத் தூரத்தைக் கடந்தான்.. சென்னைக்கு வேலை சம்பந்தமாகப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு.. அர்ஜீனின் குடும்பத்தைப்பற்றி விசாரித்தான்..
அப்போது அவன் தெரிந்து கொண்ட எதுவும் அவன் மனதுக்கு உவப்பானதாக இல்லை...
தொழிலாளர்களுடன் ஒன்றாக வேனில் பயணிப்பவன் அர்ஜீன்.. ஆனால், அர்ஜீனின் தந்தையான பார்த்தசாரதி.. அவரிடம் வேலை பார்க்கும் ஜெனரல் மேனேஜரையே தனக்கு இணையாக நினைக்க மாட்டார் என்பதை அறிந்த போது கண்ணதாசனின் மனதில் பயம் சூழ்ந்தது..
அப்படிப்பட்ட ஒரு மனிதரின் மகன்மீதா அவன் தங்கை ஆசை வைத்திருக்கிறாள்..? எங்கிருந்து இந்த ஆசை வந்து தொலைத்தது..?



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்.. -54
எங்கிருந்தோ ஆசைகள்.. -54
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaaasaikal-54.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/engirunthoaaasaikal-54.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy