எங்கிருந்தோ ஆசைகள்..-55

55 வானும்.. நிலவும்.. சாட்சியாக - உன்னுடன்.. வாழ்ந்து விடவே ஆசைகொண்டேன்.. எங்கிருந்தோ வந்த ஆசைகளினால்.. அவனின் செல்லத் தங்கையின...


55
வானும்.. நிலவும்.. சாட்சியாக - உன்னுடன்..
வாழ்ந்து விடவே ஆசைகொண்டேன்..


எங்கிருந்தோ வந்த ஆசைகளினால்.. அவனின் செல்லத் தங்கையின் மனம் சின்னா பின்னமாவதா..?
அதனால்தான் வேண்டாம்.. இந்த ஆசைகள் எங்கிருந்து வந்ததோ.. அங்கேயே அவற்றைத் திருப்பி அனுப்பு என்று தங்கையிடம் முட்டி மோதினான் கண்ணதாசன்..
'இவளுக்குத் தெரியுமா.. அந்த பார்த்தசாரதி.. மகனுக்கு கட்டி வைக்க ஒரு கோடிஸ்வரியை பெண் கேட்டிருக்கிறான் என்பதை...'
அதைச் சொல்ல முடியாமல் அவன் மனம் தவித்தது.. அதைச் சொல்லி.. தங்கையின் முகத்தில் படியும் நிராதரவான நிராசையின் நிழலைப் பார்க்க அவன் விரும்பவில்லை...
அவனால் அதைக் கண்கொண்டு பார்க்க முடியாது.. கண்ணதாசன் தங்கைக்காக பெரிய இடங்களில் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனைவிட வசதியான ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தான்.. அவளுக்குச் சீராகக் கொடுக்க நகைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தான்.. அவளுக்காக.. மதுரையின் புறநகர் பகுதியில் அழகான பங்களா ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தான்.. அவளுக்குத் திருமணப் பரிசாக கார் வாங்கிக் கொடுக்க நினைத்திருந்தான்...
இதெல்லாம் யாருக்கா..? அவன் தங்கைக்காக...
அந்தத் தங்கை.. அவன் நினைத்ததைப் போல சீரும்.. சிறப்புமாக திருமணம் செய்து கொண்டு... வண்டி வண்டியாய் சீர்வரிசைகளுடனும்.. கழுத்து நிறைய நகைகளுடனும்.. அவன் சீதனமாகத் தரும் கார்.. பங்களாவுடனும்.. புகுந்தவீட்டில் மதிப்பும்.. மரியாதையுமாக வாழப் போகாமல்.. எவனோ ஒரு கோடிஸ்வரனின் மீது ஆசைப்பட்டு.. அவள் வாழ்வுக்கான அங்கீகாரத்திற்காக போராட வேண்டுமா..?
அவனுக்குத் தெரியும்.. அவன் தரும் இத்தனை சீர்வரிசையும் பார்த்தசாரதிக்கு ஒரு பொருட்டேயில்லை என்பது...
அவர்வீட்டின் கார் டிரைவருக்கே அந்தச் சீர்வரிசை களெல்லாம் போதாது என்று சொல்லக்கூடியவர் அவர்... அவரின் ஒருநாள் வருமானத்தில் கண்ணதாசன் தரும் அத்தனை சீர்வரிசைகளையும் வாங்கிவிடக் கூடிய வசதி படைத்தவர் அவர்...
அவருக்குப் போய் மருமகளாக வேண்டும் என்று காவ்யா நினைத்தும் பார்க்கலாமா..?
காவ்யாவிடம் சொன்னால்...  அவருக்கு மருமகளாக வேண்டும் என்று யார்நினைத்தது.. நான் அர்ஜீனுக்கு மனைவியாக வேண்டுமென்றுதானே நினைத்தேன் என்று விதண்டாவாதம் பேசுவாள்...
இரண்டும் வேறுவேறு அல்ல.. ஒன்றுதான் என்று அவளுக்கு யார் புரியவைப்பது..?
"அன்னைக்குச் சொன்னதைத்தான் இன்னைக்கும் சொல்றேன் காவ்யா.. வானத்தில வர்ற வட்டநிலா மேல ஆசைப்படாதே.. அதை எட்டி நின்னுதான் உன்னால பாக்க முடியும்..."
இவன் இதை விடவே மாட்டானா என்றிருந்தது காவ்யாவிற்கு...
'இப்பத்தான் நட்சத்திரத்தப் பறிக்க முடியாதுன்னு சொல்லுச்சு.. இப்ப வட்டநிலாகிட்டப் போயிருச்சு.. இது ஏன் வானத்துமேலயே கண்ணா இருக்குது..?'
அர்ஜீனின் மீது அவளுக்கிருந்த ஆசை அந்த வானத்தைப் போல பரந்து விரிந்திருந்தது.. அது சொல்லில் அடங்காதது.. ஒரு அண்ணனிடம் தங்கை சொல்லி விடமுடியாதது...
"நிலாவில கால் பதிச்ச மனுசங்களும் இருக்காங்கண்ணே.. முடியாதுன்னு இந்த உலகத்தில எதுவுமே இல்ல.. இத நான் சொல்லித்தான் நீ தெரிஞ்சுக்கனுமா..?"
காவ்யாவின் வார்த்தைகள் அவள் அர்ஜீனின் மீதான ஆசையை விடப் போவதில்லை என்பதை உணர்த்திவிட கண்ணதாசன் சினத்துடன் தங்கையை முறைத்தான்..
"இவ்வளவு நேரமா ஓதறேன்.. உன் மண்டையில ஏறலையா..? இந்த ஆசைவேணாம்.. விட்டுடு..."
"ஏன்னு சொல்லு.. அவரு கெட்டவரா.."
ஆமாம் என்று கண்ணதாசனால் எப்படிச் சொல்ல முடியும்..? அர்ஜீன் நல்லவன் ஆயிற்றே...
'அதுக்காக..?...' கண்ணதாசனின் புருவங்கள் முடிச்சிட்டன...
"பாத்தியா.. உன்னாலயே பதில் சொல்ல முடியல.."
"ம்ஹீம்.. உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.. நான் பதில் சொன்னா நீ தாங்க மாட்ட..."
"எதையும் தாங்கும் இதயம் எனக்கிருக்குண்ணே.. ஒருதாய் வயித்தில பிறந்தும்.. ஆம்பளைங்கிறதுக்காக நீ நினைச்ச படிப்பை படிச்ச.. ஆசைப்பட்ட வேலையை அடைஞ்ச.. பொட்டப்புள்ளயா பொறந்துட்ட பாவத்துக்காக இது ரெண்டையும் செய்ய முடியாம கம்யூட்டர் விக்கிற கடையில கணக்கெழுதற உத்தியோகம் பார்க்கிறேனே.. அதையே தாங்கிக்கிட்டவ நானு.. வேற எதையும் தாங்க மாட்டேனா..? நீ சொல்லு.. நான் தாங்கிக்குவேன்..."
வேண்டுமென்றே காவ்யா அவளுக்கு அவள் வீட்டில் மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகளைப் பற்றி நினைவூட்டுகிறாள் என்று கண்ணதாசனுக்குப் புரிந்து விட்டது..
அவன் கடிந்து பேச வாய் திறந்தபோது...
"கண்ணா.." என்ற அழைப்புச் சப்தம் கேட்டது...
அது அன்னபூரணியின் குரல் என்பதால் அண்ணனும் தங்கையும் அவசரமாக அமைதியானார்கள்...
"என்ன கண்ணா.. தூங்காம இங்க என்ன பேசிக்கிட்டு இருக்க..?"
விளக்கைப் போட்டாள் அன்னபூரணி.. அறையில் பரவிய வெளிச்ச வெள்ளத்தில் அண்ணனும் தங்கையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்...
அன்னபூரணியும்.. சிவதாணுவும்.. தரைத்தளத்தில் இருந்த பெரிய படுக்கையறையில்தான் தூங்குவார்கள்.. மாடியிலிருந்த மூன்று படுக்கையறைகளில் இரண்டை கண்ணதாசனும்.. காவ்யாவும் எடுத்துக் கொண்டிருக்க.. மூன்றாவது படுக்கையறை பூட்டப்பட்டிருந்தது.. விருந்தினர் வந்தால்கூட அந்த அறையை அன்னபூரணி திறந்து விடமாட்டாள்...
"அதான் கீழேயே ஒன்னுக்கு ரெண்டா பெட்ரூம் இருக்கில்ல.. அதுக்கு மேல என்னத்துக்கு மாடிமேல ஏறனும்.." என்று வாயை மூட வைத்து விட்டுவாள்..
அதற்கும் மேலே அதிகமான ஆள்கள் வந்து விட்டால்.. ஹாலின் சோபாக்களை ஓரம் கட்டிவிட்டு.. வரிசையாக ஜமுக்காளங்களையும்.. பாய்களையும் விரித்து தலையணைகளைப் போட்டு விடுவாள்..
எந்தக்காரணம் கொண்டும் மாடியில் விருந்தினரைக் கால் பதிக்க விடமாட்டாள்...
"அது புள்ளைகளுக்கு.." என்று சொல்லிவிடுவாள்..
அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பிப்பதற்கும்.. நடுநிசியைத் தொடும் நேரத்தில் வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு தூங்கப் போவதற்கும் அவளுக்கு கீழேயிருந்த படுக்கையறைதான் தோதாக இருந்தது...
"யாராச்சும் வந்துக்கிட்டே இருப்பாங்க.. பதிலச் சொல்லி அனுப்பி வைச்சுக்கிட்டே இருக்கனும்.. மாடியில இருந்து இறங்கி ஓடி வர்றதுக்கு எனக்கென்ன வயசா திரும்பியிருக்கு.. நின்னா உக்கார முடியல.. உக்காந்தா படுக்க முடியல.. அதனால.. என்ன கழுதைக்கு மாடிப்படியில கால வைக்கனும்முன்னு கீழே இருக்கிற பெட்ரூமிலயே தங்கிட்டோம்.." என்று சொல்லுவாள்...
அந்த அன்னபூரணி.. அந்த அர்த்தஜாம வேளையிலே.. குறட்டை விட்டுத்தூங்காமல் மாடிப்படிகளில் ஏறிவந்திருக்கிறாளா..?
"என்னடா.. கேக்கறதுக்கு பதிலச் சொல்லாம கேப்பையத் திருடினவனப் போல இந்த முழி முழிக்கிற..?" அன்னபூரணி மகளை விட்டுவிட்டு மகனைப் பார்த்து அதட்டினாள்..
திருடினது அண்ணனல்ல.. தங்கைதான் என்பதை அறியாமல் அண்ணனைத் தாய் அதட்டுகிறாளே என்ற குற்ற உணர்வில் தவித்துப் போனாள் காவ்யா..
"அம்மா..." என்று அவள்பேச வாய்திறந்த போது...
"காவ்யா.." என்று அதட்டினான் கண்ணதாசன்...
"அவள எதுக்குடா அதட்டறே...?"
"ஒன்னுமில்லம்மா.. என் சிநேகிதனோட வீட்டில தங்கச்சியைப் பொண்ணுக் கேக்கனும்னு ஆசைப்படறாங்களாம்.. அதான் தங்கச்சியோட சம்மதத்தத் தெரிஞ்சுக்கலாம்ன்னு வந்தேன்..."
கண்ணதாசன் பேச்சை மாற்றியதில் நன்றியுணர்வு கலந்த நிம்மதி காவ்யாவின் மனதில் ஏற்பட்டாலும்.. பேச்சின் திசையில் அரண்டு விட்டாள்...
'ஆத்தாடி.. அண்ணன் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுருச்சே...'
"உனக்கென்ன புத்தி புல்மேயப் போயிருச்சாடா தம்பி..? புத்திய கடன் கொடுத்திட்டியா..? இந்தப் பேச்ச உந்தங்கச்சிக் கிட்டப் பேசறதுக்கு முன்னாலே எங்ககிட்டயில்ல நீ பேசியிருக்கனும்...?"
"அதுக்கு முதல்ல தங்கச்சிகிட்ட சம்மதம் கேட்டிரலாமுன்னு..."
"எதுக்கு இந்த இழுவை இழுக்கிறவன்..? இவ என்ன பெரிய மனுஷியா..? இவ இஷ்டத்துக்கு ஆட விடறதுக்கா ஆத்தான்னு நான் ஒருத்தி உசிரக் கையில பிடிச்சுக்கிட்டு இருக்கேன்..?"
"அதுக்கில்லம்மா..."
"வேண்டாம்டா தம்பி.. பொம்பளப் புள்ளய தலையில தூக்கி வைச்சுக்கிட்டு ஆடாத.. அது குடும்பத்துக்கு ஆகாது.."
"சரிம்மா..."
"பொண்ணுக் கேட்டிருக்க மாப்பிள்ள வீடு எங்கேயிருக்கு.. யாரு.. என்ன விவரம்ன்னு விடிஞ்சப்புறம் பேசிக்கலாம்.. இப்ப நீ தூங்கப் போ..."
"ஆகட்டும்மா..."
கண்ணதாசன் போய்விட்டான்.. அவன் போய் விட்டதில் அப்பாடி என்ற நிம்மதியுணர்வு மனதில் ஏற்பட்டாலும்.. கடுமையான முகத்துடன் நின்று கொண்டிருந்த அன்னபூரணியைக் கண்டதும் மனதுக்குள் அரண்டாள் காவ்யா...
'அடுத்தது அம்மாவா...'
நேரத்துக்கு தூங்கியிருந்தால் இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பியிருக்கலாமே என்ற காலங்கடந்த ஞானோதயம் காவ்யாவுக்கு ஏற்பட்டது..
"என்னடி..?"
"என்னம்மா..?"
"உன் அண்ணன்காரன அரட்டிக்கிட்டு இருந்தியா..?"
"யாரு அரட்டினது..? நானா..?"
காவ்யாவுக்கு சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது...
"அண்ணே.. அண்ணே.. என்னப் பொண்ணுக் கேட்டிருக்க சங்கதிய அம்மா காதில போடாதே.. நானு அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டியா இந்த மதுரையைச் சுத்தி ஊர்வலம் வர்றேன்.. எனக்கு அடக்க ஒடுக்கமா கல்யாணம் வேணாம்ன்னு அவன்கிட்டச் சொல்லிக்கிட்டு இருந்தியா..?"
"இல்லம்மா..."
"ஊரைச் சுத்தற உன் உள்ளங்காலில சூடு வைச்சிருவேன்.. பாத்து நடந்துக்க.. யாருகிட்ட உன் வித்தாரத்தனத்தக் காட்டற..?"
"நிச்சயமா உன்கிட்டக் காட்ட மாட்டேன்ம்மா..."
"அஃது.. அந்த பயம் இருக்கட்டும்.. வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம்.. கத்தார முள்ளுப்பட்டு கர்ரு புர்ருன்னு கத்தினாளாம்..."
"ஏம்மா.. அவ வீட்டில கேஸ் ஸ்டவ் இல்லியா...?"
"வாயிலயே போட்டிருவேன்.. யாருகிட்ட உன் வாயைக் காட்டற..? உன் கல்யாணத்தத் தட்டிக் கழிச்ச உன் அண்ணன்காரனே இப்ப பச்சைக் கொடியை காட்டிட்டான்.."
"நானென்ன ரயிலாம்மா..? மனுஷிம்மா.. மனுஷி..."
"அடச்சீ.. அடங்கு.. உனக்கென்ன நேத்துத்தான் பிறந்த பப்பான்னு மனசுக்குள்ள நினப்பா..?"
"இல்லம்மா..."
"ஏழு கழுதை வயசாகுது.. இன்னும் தாலியக் கட்டிக்கிட்டு புருசன் வீட்டுக்குப் போயி குடும்பம் நடத்த மாட்டேன்னு அடம் பிடிச்சா என்னடி அர்த்தம்..? உனக்கு மூத்தவன் அவன்.. உன் கல்யாணம் நடந்தாத்தானே அவனுக்கும் ஒரு கல்யாணத்தப் பண்ணிப் பார்க்க முடியும்..?"
"அதுக்கு நான்தான் உங்களுக்கெல்லாம் கிடைச்சேனா..?"
"ஆமாம்கிறேன்.. அதுக்கு இப்ப என்னாங்கிற..? உன் ரவுசையெல்லாம் உன் அண்ணன் காரனோட நிப்பாட்டிக்க.. என்கிட்டக் காட்டாதே.. எப்பேற்பட்ட வித்தாரக் கள்ளியையும் வந்து பாரு வட்டப்பாறைக்குன்னு சொல்றவதான் இந்த அன்னபூரணி.. அத நினப்பில வைச்சுக்கிட்டு இழுத்திப் போர்த்தித் தூங்கற வழியப் பாரு.."



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,6,அம்மம்மா.. கேளடி தோழி...!,175,ஆசையா.. கோபமா...?,15,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,90,ஒற்றையடிப்.. பாதையிலே..,9,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,14,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,5,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: எங்கிருந்தோ ஆசைகள்..-55
எங்கிருந்தோ ஆசைகள்..-55
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s320/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
https://1.bp.blogspot.com/-qUmII9lc4VI/XkFrxo9-g8I/AAAAAAAAAxY/Ob5q5ujHhCw5_Etmwj_ihh-61GOsvHNdwCPcBGAYYCw/s72-c/yenkiruntho%2Baasaikal%2B6.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-55.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-55.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy