அம்மம்மா.. கேளடி தோழி..-147

147 தூங்காத இரவுகளின் முடிவில்... தூங்க முடியாத இரவுகளை நான்பெற்றேன்... கட்டிலின் மீது துணிவகைகள் பரந்திருக்க.. அவற்றை பெட்டிகளில...


147
தூங்காத இரவுகளின் முடிவில்...
தூங்க முடியாத இரவுகளை நான்பெற்றேன்...

கட்டிலின் மீது துணிவகைகள் பரந்திருக்க.. அவற்றை பெட்டிகளில் அடுக்கிக் கொண்டிருந்தாள் ராதிகா... சப்தமில்லாமல் அறைக்கதவை மூடித் தாழிட்டு விட்டு.. அவள் பின்னால் வந்து இறுக்கிக் கட்டிக் கொண்டான் பாலமுரளி... பின்னங் கழுத்தில் அவனின் வெப்பமான மூச்சை உணர்ந்த ராதிகா கண்மூடி அவன் மடியில் சரிந்தாள்.. அவள் முகம் நோக்கிக் குனிந்தவனின் கழுத்தை அவள் கரங்கள் வளைத்துக் கொண்டன...
மோக வெள்ளத்தில் அவன் மூழ்க ஆரம்பித்தான்.. அவன் காதோரமாக அவள் கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்...
"எப்படிங்க.. இப்படியொரு யோசனையை கண்டு பிடிச்சீங்க..?"
"வேற என்ன செய்வேன்னு நினைச்சே...?"
"நிஜமாவே நீங்க வேலை விசயமா என்னை விட்டுட்டு வெளிநாட்டுக்கு போயிடுவீங்களோன்னு நான் பயந்து போயிட்டேன்.."
"உன்னை விட்டுட்டுப் போறதா..? என்னால அது முடியுமாடி..?"
கேள்வியைக் கேட்டவனுக்கு.. அதுநாள்வரை அவன் அப்படித்தானே போய் கொண்டிருந்தான் என்ற விவரமே சுத்தமாக மறந்து விட்டிருந்தது.. அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அதை நினைவு படுத்த விருப்பமில்லை...
அவனுக்கு இசைந்து கொடுத்தபடி.. அவன் முன்னுச்சி முடியில் விரல்விட்டு கோதினவளைக் காதலுடன் பார்த்தான் பாலமுரளி...
"நிஜமாவே வெளிநாட்டில் வேலை இருக்குடி.. ஆனா... அதோட இதை தேநிலவாய் மாத்திக்கனும்கிற ஐடியாவும் ஐயாவோட மனசுக்குள்ள இருக்கு..."
"ஹனிமூனா...?"
"யெஸ்... ஏன்.. நாம தேநிலவு கொண்டாடக் கூடாதா..?"
அது புதிதாக திருமணமானவர்களுக்குத்தான் என்று சொல்லாமல் அவள் மௌனித்தாள்.. அதைப் புரிந்து கொண்டவனாக.. அவன்.. அவள் காதில் முணுமுணுத்தான்...
"எனக்கென்னவோ.. நாமதான் புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடின்னு தோணுதுடி..."
"தோணும்.. தோணும்..."
"உன்னை நான் தொட்டிருக்கேன்தான்.. அப்பல்லாம்.. இத்தனை இணக்கமாய் என்னை நீ அனுமதிக்கல..."
அவன் பேசியதில் அவளுக்கு லஜ்ஜை ஏற்பட்டு விட்டது... அவனைப் பேச விடாமல்.. அவன் வாய் பொத்தி அவள் தடுத்தாள்.. அவள் விரல்களை அவன் செல்லமாக கடித்ததில்.. இன்பமான ஒரு இம்சை மனதில் உண்டாக.. அதன் ஆக்ரமிப்பில் அவள் தவித்துக் கிறங்கிப் போனாள்..
"ஹப்பா..." கண்மூடி அவள் தவித்ததைக் கண்டவனுக்குள் வேட்கை கிளர்ந்தது...
"இது... இதைத்தான் நான் சொல்றேன்... இப்படியெல்லாம்.. அப்ப.. நீ இருந்ததில்லை..."
"ப்ளீஸ்.. சொல்லாதீங்க.. எனக்கு என்னவோ போல இருக்கு..."
"இல்லடி... நான் சொல்லித்தான் ஆகனும்.. முதமுறை உன்னைத் தொட்டப்ப.. நான் வில்லனா இருந்தேன்.. உன்னை வேட்டையாடறதில குறியாய் இருந்தேன்.. நான் தொட்டதுக்கு நீ கதறி அழுத... அந்த அழுகை என்னை எப்படியெல்லாம் பாதிச்சதுன்னு தெரியுமாடி..? எத்தனை நாள் நான் தூக்கமில்லாம என்னையே நொந்துக்கிட்டேன்னு உனக்குத் தெரியுமா..? உன்னை சீரழிச்சுட்டேன்னு என்மனசில குற்ற உணர்ச்சி உண்டாச்சுடி.. அதில எனக்கு சந்தோசம் இல்லடி... மனசெல்லாம் வேதனைதான் இருந்துச்சு..."
பாலமுரளி விவரித்ததில்.. ராதிகாவின் மனதில் துயரம் மண்டியது... அவளுக்கு விருப்பமானவன்.. அவளை விரும்பியவன்.. அவளை முதன் முறையாகத் தொட்டு ஆண்டான்.. அந்த அனுபவம் இனிமையானதாக அமையாமல்... துயரம் மிகுந்த 'வடு'வாக ஏன் அவன் நெஞ்சத்தில் பதிந்து போனது..? இது யார் கொடுத்த சாபம்..?
"அதனாலதான்.. கல்யாணத்தை பக்கத்தில வைச்சுக்கிட்டு.. பொறுத்திருக்க முடியாம உன்னை ரெண்டாம் முறையாய் தொட்டேன்... நிச்சயத்துக்கு முந்தின அந்த நாளில.. நீயும் என்னை மறுக்கல ஆனாலும்கூட... நான் செய்த தப்புக்கு பரிகாரம் செய்யாம உன்னைத் திரும்பவும் தொடறேனேன்னு என்மனசு என்னைக் குத்திக் காட்டுச்சுடி... உன் கழுத்தில தாலியைக் கட்டாம தொடறதில எனக்குள்ள குற்ற உணர்வும்.. உனக்குள்ள தயக்கமும் இருந்துச்சுடி... அதில முழுமையான சந்தோசம் எனக்குக் கிடைக்கல... என்னை மறுக்க முடியாம நீ ஏத்துக்கிட்ட அந்த உறவுல என்ன சந்தோசம் இருக்க முடியும்..? சொல்லு..."
பாலமுரளியின் கேள்விக்கு... ராதிகாவால் என்ன பதிலைச் சொல்ல முடியும்..? அவன் சொல்லிய அத்தனையும் அட்சர சுத்தமான உண்மை என்றிருக்கும் போது.. அவள் என்ன வார்த்தைகளால் அவனைச் சமாதானப் படுத்துவாள்..?
"நான் நம்ம கல்யாணத்துக்காக காத்திருந்தேண்டி.. அதுக்குப் பின்னால... ராப்பகலா உன்னைத் தொட்டு ஆளனும்கிற வெறி எனக்குள்ள தீயாய் எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சுடி.. அது முடியாமப் போச்சே... கல்யாணத்துக்கு முன்னாலேயே.. உன்னைத் தள்ளி வைக்கனும்கிற சபதத்தை நான் போட்டுட்டேனேடி..."
ராதிகாவின் மனதில் துயர மேகம் கவிந்தது.. அது அவளைப் பீடித்த சாபம்.. அவளைக் காதலித்தவனால்... அவளது காதலை உணர்ந்து கொள்ள முடியாமல் போன துயரம்...
"நீ கிட்டக்கிட்ட வருவேடி.. நானும் உன்னைத் தொட்டு ஆளனும்னு வெறியாகிருவேன்.. த்ச்சு.. அது முடிஞ்சதா..?"
அவனது கோபமான வெறுப்பில்... சங்கரின் பெயரை உச்சரித்து... அந்த நேரத்தின் இனிமையைக் கலைக்க விரும்பாத அவனின் மனது வெளிப்பட்டது... அதில் ராதிகா கரைந்து போனாள்... அவனது இந்த அணுகுமுறை அவளுக்குப் புதிதாகவும்... உவப்பானதாகவும் இருந்தது.. கணவனின் இந்த இதமான மாற்றத்தில் அவள் மனம் இதம் கண்டது. அவனுடனான நெருக்கத்தை அவள் அதிகப் படுத்தினாள்...
பாலமுரளியின் கண்கள் மின்னின.. தன்னுடன் ஒட்டிக் கொண்ட மனைவியை அவன் இறுக்கிக் கொண்டான்...
"நீ துடிச்சு அழுகிறப்பல்லாம் என் உயிர் துடிக்கும்டி.. குழந்தைக்காக நீ ஏங்கிய ஏக்கத்தில்... எனக்கு.. என் மேலேயே கொலைவெறி வரும்டி... என்னிடம் என்னடி குறையிருக்கு..? உன்னை ஆயிரம் குழந்தைகளுக்கு அம்மாவாக்கும் ஆசை என் மனசில குமிஞ்சிருக்குடி.. ஆனாலும் உன்னைக் குழந்தைக்காக ஏங்க வைச்சேன்.. இது கொடுமைதானே ராதிகா..?"
அவள் இல்லையென்று தலையை ஆட்டி மறுத்தாள்..
"இல்லைன்னு நீ சொன்னாலும்.. அதுதான் உண்மை ராதிகா... நான் கொடுமைக்காரன்தான்.. இப்பக்கூட குழந்தை வேணும்ன்னு நீயாய் கேட்கிற வரைக்கும் நான் தள்ளித்தானே நின்னேன்..?"
அவள் மௌனம் சாதிக்க.. அவள் நெற்றியில் அவன் மென்மையாக முத்தமொன்றைக் கொடுத்தான்...
"ஆனா ஒன்னு ராது..."
வெகுகாலமாக காணாமல் போயிருந்த 'ராது' என்ற அந்த அழைப்பில்... அவள் சிலிர்த்துப் போனாள்... அந்தச் சிலிர்ப்பை உறுவிப் போடும் வார்த்தைகளை அடுத்து அவன் சொன்னான்...
"நீ குழந்தை வேணும்ன்னுதான் என்கிட்ட இத்தனை இணக்கமாய் இருக்கிற... எனக்கும் அது தெரியுதுடி.. எனக்கு அப்படியெல்லாம் இல்லைடி.. நீ கேட்டது எனக்கொரு வாய்ப்பா அமைஞ்சிருச்சு.. என் மனசில அடக்கி வைச்சிருந்த ஆசையை உன்மேல கொட்டிக்கிட்டு இருக்கேன்... உனக்கு என்குழந்தை வேணும்... எனக்கு நீ வேணும்.. இது ஒன்னுதான் நமக்குள்ள இருக்கிற வித்தியாசம்... மத்தபடி நான் ரொம்ப சந்தோசமா இருக்கேண்டி... இதைக் கொண்டாட தேநிலவுக்கு போகனுமா.. வேணாமா...?"
அடுத்து... அவன் பேசிய எதுவுமே ராதிகாவின் காதுகளில் ஏறவில்லை... அவள் தனக்குள் உறைந்து விட்டாள்...
அவளுடைய முரளி இன்னும்கூட அவளை உணரவில்லையா..? அவன்மீது அவள் கொண்டிருக்கும் ஆசையின் அளவையும்... காதலின் வேகத்தையும் கண்டு கொள்ளவில்லையா..? குழந்தைக்காகத்தான் அவனுடன் ஒட்டி உறவாடுவதாக அவன் நினைத்துக் கொண்டிருக்-கிறானா..? அவனுடைய குழந்தைக்கு அவள் அம்மாவாக வேண்டுமென்று துடிக்கிறாள்தான்... அதற்கு முன்னால்.. அவனக்கு மனைவியாக.. அவனது காதலியாக... அவனுடன் கலக்க வேண்டுமென்று துடிக்கிறாளே.. அந்தத் துடிப்பை அவளுடைய அத்தனை செயல்பாடுகளிலும் அவள் காண்பிக்கிறாளே.. அதை அவன் உணரவில்லையா..?
அவன் கைகள் அவள் மீது பரவியதில் அவளுக்குள் இதமான இம்சை தோன்றுவதற்குப் பதிலாக தன்னிரக்கம் பொங்கியது...
அவள் மீதான அவனது வேட்கையில் அவள் கிளர்ந்தாலும்.. இந்தக் கிளர்ச்சி... அவனுக்கானது என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லையே என்ற துயரம் அவளுக்குள் எழுந்து நின்றது...
அவள்கூட தனிமையில் இருக்க வேண்டும்... இரவு.. பகல் என்ற வேறுபாடு தெரியாமல் அவளுடன் கூடுவதற்கு தடை இருக்கக் கூடாது என்று அவன் வேகம் காட்டியதில் அவளுக்குள் காதல் கலந்த காமம் கணன்றாலும்.. இதையும் அவன் குழந்தைக்காக என்றுதானே எடுத்துக் கொள்வான் என்ற நினைவில் கண்ணீர் வந்தது...
"பதினைந்து நாள்ன்னுதான் சொல்லிட்டு கிளம்பப் போறோம்.. ஆனா... நாமதிரும்பி வர ஒரு மாதத்துக்கும் மேலேயே ஆகும்..."
"ம்ம்ம்..."
"ஆனா.. எனக்கு நீ வேணும்டி... ராப்பகலா நீ என் பக்கத்தில் இருக்கனும்... இத்தனை நாளா... உன்கூட வாழ முடியாத வாழ்க்கையை நான் வாழ்ந்து முடிக்கனும்... அதுக்கு இந்த இரண்டுமாச தனிமை அவசியம்டி..."
அது நேரம்வரை ராதிகாவின் மனதிலிருந்த துயர மேகம்... அவன் வார்த்தைகளைக் கேட்டதும்... கலைந்து விலகி ஓடி மறைந்தது...
தன்னிலேயே நின்றதில் அவள் தன்னையே கடிந்து கொண்டாள்... அவன் யார்..? அந்த தென்காசிப் பட்டினத்திலேயே பெரியமனிதனாக அறியப் படுகிறவன்.. அவன் கண்ணசைவில் பட கன்னியர் கூட்டம் இன்னமும் காத்திருக்கிறது... அவன் எங்கு சென்றாலும்... அங்கே அவனுக்குத்தான் முதல் மரியாதை கிடைக்கிறது... அவனுடன் பேசுவதற்கு... பெரியவர்கள் முதல்.. சிறியவர்கள் வரை அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வம் காட்டுகிறார்கள்...
அப்படிப்பட்டவன்... கோடிஸ்வரக் குடும்பங்களில் பிறந்த பெண்களை விட்டுவிட்டு... மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த... அவள் மேல் ஆசை கொண்டான்..
அவனைப் பொருத்தவரை... ராதிகா அவனைக் காதலிக்கவில்லை... அவள் சங்கரைத் திருமணம் முடித்துக் கொள்ளவே விரும்பினாள் என்றுதான் அவன் நினைத்தான்...
அப்படியிருந்தபோதும்... அவள் உள்ளம் கவர்ந்த அந்தக் கள்வன்... அவளைக் கவர்ந்தான்... அவளை பெண்டாண்டு முடித்தான்... அவள் கழுத்தில் தாலியையும் கட்டினான்... அவளது காதலை அறியாமலே.. அவள் காதலை வாழ வைத்தான்...
அவளுக்காக... இத்தனையையும் செய்த அவனுக்கு அவள் என்ன கைம்மாறை செய்தாள்..? அவனே சொல்வதைப் போல... அவள் மீதான அவனின் ஆசைத்தீயை அணைக்க முயன்றிருக்கிறாளா..? அவனின் மோகவெறியை தணிக்க அவனைத் தழுவியிருக்கிறாளா..?
இல்லையே... இத்தனையையும் அவன் வேண்டி நிற்கும் போது அதைக் கொடுக்க மறந்து.. அவன் சொன்ன வார்த்தைகளிலேயே அவள் உழன்று நிற்கலாமா..?
அவனுக்கு இது வாய்ப்பெனும் போது... அவளுக்கும் இதுதானே வாய்ப்பு...?
அவன் கேட்டதைக் கொடுப்பதற்காக... அவள் மனதிலிருந்த அத்தனை துயரங்களையும் தூரத்தூக்கி விட்டெறிந்து விட்டு அவனை நெருங்கினாள்... அவன் கேட்டதைவிட அதிகமாக அவள் அள்ளிக் கொடுத்ததில் அவன் கள்ளுண்ட வண்டாக மனம் மயங்கிப் போய் அவளை ஆக்ரமித்தான்...
ஆனானப் பட்ட முண்டாசுக் கவிஞனையே...
'மோகத்தைக்  கொன்றுவிடு - அல்லால்
              என் மூச்சை நிறுத்தி விடு..'
என்று  பாடாய் படுத்திய மோகத்தீ... அவர்கள் இருவரையும் சும்மா விட்டு வைக்குமா..?
அது அவர்களைச் சுற்றி வளைத்தது... அவர்கள் அதில் பற்றி எரிந்தார்கள்.. அது தித்திக்கும் தீயாக இருந்தது... அதைத் தீண்டத்தீண்ட சுவை கொடுத்துக் கொண்டேயிருந்தது...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,5,அம்மம்மா.. கேளடி தோழி...!,173,ஆசையா.. கோபமா...?,14,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,89,ஒற்றையடிப்.. பாதையிலே..,8,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,13,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,4,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி..-147
அம்மம்மா.. கேளடி தோழி..-147
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-147.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-147.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy