அம்மம்மா.. கேளடி தோழி..-143

143 உன்னிடம் யாசகம் கேட்க... என்னிடம் தயக்கம் இல்லை... அந்த வார இறுதியில் பாலமுரளி சென்னைக்கு கிளம்ப வேண்டி வந்தபோது... சஞ்சலத்...



143
உன்னிடம் யாசகம் கேட்க...
என்னிடம் தயக்கம் இல்லை...

அந்த வார இறுதியில் பாலமுரளி சென்னைக்கு கிளம்ப வேண்டி வந்தபோது... சஞ்சலத்துடனே கிளம்பிச் சென்றான்... ராதிகாவின் மனதிலிருந்த ஏக்கத்தை அறிந்த பின்பும்.. அதைத் தீர்த்து வைக்க அவன் விரும்பவில்லை.. அவன் போட்டிருந்த வேலியைக் கடக்காமல் மீதி வாழ்க்கையை நடத்திவிட வேண்டுமென்றே அவன் நினைத்தான்...
'கொஞ்சநாள் மருகுவா.. அதுக்கப்புறம் சரியாகிருவா..'
எப்படிச் சரியாவாள் என்று நினைத்துப் பார்ப்பதை அவன் தவிர்த்தான்... அந்த நிலைமையில் அடிக்கடி அவளைப் பிரிந்து வெளியூர் செல்வதும் சரியான ஒன்றுதான் என்று அவன் நினைத்துக் கொண்டான்...
முரளி சென்னைக்குப் போன பின்பு... வெறிச்சோடிக் கிடந்த அவர்களின் அறையில் தனித்துத் தூங்கமுடியாமல் தலையணையை கண்ணீரால் நனைத்தாள் ராதிகா.. பாதி இரவுக்கு மேல் அவள் தூங்க முயன்ற போதுதான்.. அவளது அறைக்கதவு தட்டப்பட்டது... திறந்தவள் திகைத்து நின்றாள்..
"ரா... ராதிகா.." மேகலாவின் மூச்சுத் திணறியது...
"அத்தை... என்னாச்சு..?" ராதிகா பதறிவிட்டாள்..
எப்போதும் மேகலாவிற்கு துணையாக படுத்துக் கொள்ளும் காவேரி... அந்த வீட்டோடு இருந்தாள்... எந்த நேரத்திலும் அவளின் சேவை தேவைப்பட்டதால்... பக்கத்து கிராமத்திலிருந்து.. வீட்டோடு தங்கியிருந்து சமையல் செய்ய வேண்டும் என்று சொல்லி அழைத்து வரப்பட்டவள் அவள்..
அன்றைக்கென்று பார்த்து... அவள் வீட்டிலிருந்து ஆள் வந்து அவளை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்...
காவேரிக்கென்று யாரும் இல்லை... சொந்த மென்று சொல்லிக்கொள்ள... அவளது தம்பி குடும்பம் மட்டும்தான்...
"தம்பி மகளுக்கு சடங்கு சுத்தறாங்கம்மா... அத்தையா நான் முன்னால நின்னு சீர் செய்யனும்..."
அவள் கேட்டபோது கூடாது என்று சொல்ல... அந்த வீட்டாரால் எப்படி முடியும்...?
காவேரி ஊருக்குப் போய் விட்டிருந்தாள்... மீனாட்சியின் உதவியுடன் ராதிகா சமையலை சமாளித்து விட்டிருந்தாள்.. அன்று இரவில் படுக்க வரவதற்கு முன்னால்.. மேகலாவிற்கு கொடுக்க வேண்டிய மாத்திரை மருந்துகளைக் கொடுத்து விட்டுத்தான் ராதிகா தூங்க வந்தாள்...
அப்படியிருக்கும் போது.. மேகலா ஏன் இப்படி நிற்கிறாள்..?
ராதிகாவை பயம் பீடித்துக் கொண்டது.. அவள் மேகலாவைத் தாங்கிப் பிடித்து.. சோபாவில் படுக்க வைத்தாள்... மேகலாவின் நெற்றியில் வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன...
"நெஞ்சு வலிக்குது... ராதிகா..." அவள் புலம்பித் தவித்தாள்...
நள்ளிரவு.. வீட்டில் காவல்காரனும்... தோட்டக்காரனும் மட்டும்தான்.. அவர்கள் இருவருக்கும் கார் ஓட்டத் தெரியாது... நாச்சியப்பனும் அங்கே இல்லை... மீனாட்சி பதறிப் போனாள்... சமையலுக்கு அவள் உதவலாம்... காரை எப்படி ஓட்டுவாள்..?
ராதிகா வினாடிப் பொழுதிற்கு மேல் தாமதிக்கவில்லை...
"அத்தை வாங்க..." மேகலாவை கைத்தாங்கலாக தாங்கிக் கொண்டாள்...
அவளை மெதுவாக நகர்த்தி... காரின் பின் சீட்டில் படுக்க வைத்து விட்டு.. காரை எடுத்து விட்டாள்...
அதுவரை அவள் காரை ஓட்டியதில்லை... காலேஜில் படித்துக் கொண்டிருந்த போது... கூடப் படித்த திவ்யாவின் காரில்.. சில நாள்கள் ஒட்டிப் பழகியிருக்கிறாள்... அந்தப் பரிச்சயம் மட்டும்தான்...
என்ன தைரியத்தில் அவள் காரை வெளியே எடுத்தாளென்று அவளாலேயே சொல்ல முடியவில்லை.. எப்படியாவது மேகலாவைக் காப்பாற்றி விட வேண்டுமென்ற வெறி மட்டுமே அவளை ஆட்சி செய்து கொண்டிருந்தது...
கிராமத்தைக் கடந்து.. தென்காசிக்குச் செல்லும் சாலையில் கார் கிளம்பிய போது.. வழியில் எதிர்படும் வாகனங்களை நடுக்கத்துடன் எதிர்கொண்டாள் ராதிகா.. நல்ல வேளையாக... அந்தச் சாலையில் அதிகமான போக்குவரத்து இருக்கவில்லை... ஒரு வழியாக அவள் மருத்துவ மனையை அடைந்து... பதட்டத்துடன் காரை விட்டு இறங்கி.. மேகலாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு.. மருத்துவ மனைக்குள் நுழைந்து விட்டாள்..
"கொஞ்சம் சிவியரான அட்டாக்தான் மிஸ்டர் முரளி... ஒரு நிமிசம் தாமதிச்சிருந்தாக்கூட.. உயிருக்கே ஆபத்து வந்திருக்கும்.. பட்... உங்க வொய்ப்... மகா தைரியசாலி... அந்த மிட்நைட்டில் தனியாய் காரை டிரைவ் பண்ணி.. உங்க அம்மாவை கரெக்டான நேரத்தில கொண்டு வந்து சேர்த்திட்டாங்க..."
சென்னையிலிருந்து திரும்பி வந்த முரளியிடம் டாக்டர் இதைக் கூறியபோது.. ராதிகா அதைக் கவனிக்காமல்... மேகலாவின் முகத்தைத் துடைத்து விட்டுக் கொண்டிருந்தாள்...
அவளின் கடமை மறவாத சேவையை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பாலமுரளி...
'இவளுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன்.. இவள் என் தாயின் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தவள்..அவனுக்குள் நன்றியுணர்வு பொங்கி எழுந்தது...
"உங்க அம்மா மனதிலே ஏதோ வேதனையிருக்கு முரளி... அது இருக்கக் கூடாது... அதனாலதான்... இந்த அட்டாக்..."
டாக்டர் கூறியபோது அவனால் எதையும் பேச முடியவில்லை...
மேகலா உடல்தேறி வீட்டிற்கு வந்து விட்டாள்.. வீடு இயல்பு நிலைக்கு திரும்பி விட்ட ஒர் நாளில்.. பாலமுரளி ராதிகாவுக்கு நன்றி சொன்னான்...
"உனக்குத் தெரிஞ்சது கொஞ்சம்டி... தெரியாதது அதிகம்... என் அப்பாமேல உசிரை வைச்சிருந்த எங்க அம்மா... அவர் போனபின்னாலே அவரோட போகாம இந்த பூமியிலே இருந்தது எங்களுக்காகத்தான்.. நீ அவங்க உயிரைக் காப்பாத்திக் கொடுத்திட்ட.. ரொம்ப நன்றிடி..."
அவளென்ன மூன்றாம் மனுஷியா..இவன் எதற்காக நன்றி சொல்கிறான் என்ற நினைவில் ராதிகா மௌனித்தாள்...
"கேளுடி.. உனக்கு என்ன வேணும்னு கேள்... இதுக்காக உனக்கு பரிசு கொடுக்கனும்னு நான் ஆசைப்படுகிறேன் ராதிகா.. வைர நகை வேணுமா..உனக்குன்னு ஒரு கார் வேணுமா..சென்னையிலே உன் பெயரில் பங்களா வேணுமா..இல்லை... வெளிநாட்டுக்கு சுற்றுப் பயணம் போகனுமா..என்ன வேணுமோ கேளுடி.. நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்..."
அதுவரை அவளை மூன்றாம் மனுஷியாக அவன் பாவித்துக் கொண்டிருக்கும் நினைவில் முகம் வாடி நின்றவளின் முகம் ஒளிர்ந்தது... நிமிர்ந்து அவன் முகத்தை தீர்க்கமாகப் பார்த்து.. கண்கள் ஜ்வலிக்க கேட்டாள்...
"நான் எதைக் கேட்டாலும் தருவீங்களா..?"
"நீ எதைக் கேட்டாலும்.. கட்டாயம் நான் அதைத் தருவேன்..." அவன் உறுதியான குரலில் வாக்குக் கொடுத்தான்...
"எனக்கு உங்க குழந்தைக்கு அம்மாவாகும் வரம் வேணும்..." அவள் கேட்டு விட்டாள்..
நிறுத்தி நிதானமாக அவள் கேட்ட விதத்தில் அவன் அதிர்ந்து விட்டான்.. இப்படியொரு வேண்டுகோளை அவன் எதிர்பார்க்கவில்லை...
"என்னது..?"
"யெஸ்.. நான் உங்க குழந்தைக்கு அம்மாவாகனும்.."
"ராதிகா..."
"நானா எதையும் கேட்கல.. நீங்கதான் உனக்கு என்ன வேணுமோ கேள்ன்னு சொன்னீங்க... எனக்கு வைர நகை எதுக்கு...கார் எதுக்கு..பங்களா எதுக்கு..உலகத்தைச் சுற்றிப் பார்க்கிற வெர்ல்டு டூர்தான் எதுக்கு..இது அத்தனையும் உங்க குழந்தைக்கு ஈடாகுமா...?" அவளது கேள்வியில் இருந்த நியாயத்திற்கு அவனால் பதில்சொல்ல முடியவில்லை...
"ராதிகா..."
"உங்க குழந்தையை நான் வயிற்றிலே சுமக்கனும்.. என்னைப் பார்த்து இவ இன்னும் குழந்தையைப் பெத்துக்கலன்னு பேசுறவங்க முன்னாலே பெருமையா வலம் வரனும்.. என்னை வளைகாப்புக்கு வரக்கூடாதுன்னு சொன்னவங்க முன்னாலே... நானும் வளைகாப்பு செய்துக்கனும்.. அவங்க கண்ணு முன்னாலே உங்க குழந்தையைப் பெத்துக் காட்டனும்.. அந்தக் குழந்தை என்னை அம்மான்னு கூப்பிடறப்போ... ஆனந்தத்திலே மகிழ்ந்து போகனும்.."
அவள் கண்கள் ஜ்வலிக்க பேசிக் கொண்டே போனாள்...
"ராதிகா..."
"அவனை என் மடியில் படுக்க வைச்சு... தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கனும்... அவனுக்கு நிலாவைக் காட்டி.. கதை சொல்லி சோறுட்டனும்..." அவள் விழிகளில் தாய்மை மிளிர்ந்தது...
"ராதிகா..."
"இந்த வரத்தைத்தான் நீங்க கொடுக்கனும்.. எனக்கு வேற எதுவும் வேணாம்... எனக்கு ஏதாவது கொடுக்கனும்னு நினைச்சா... உங்க குழந்தைக்கு அம்மாவாகிற பாக்கியத்தைக் கொடுங்க..."
ராதிகா பேசப்பேச... அவளின் விழிகளில் பிரதிபலித்த ஆயிரமாயிரம் உணர்ச்சி கலவைகளில் பாலமுரளி சிலையாக நின்று விட்டான்... மனதில் இருப்பதை கொட்டி முடித்துவிட்ட ராதிகா கீழே இறங்கிச் சென்று விட்டாள்... பாலமுரளியும் வெளியே போய் விட்டான்...
அன்று இரவு வந்தது... நிலவும் வந்தது.. அவனும் வீட்டுக்கு வந்தான்... சோர்வாக அமர்ந்திருந்த மேகலாவின் அருகில் அமர்ந்து... அவளின் உடல் நலத்தை விசாரித்தான்...
"சாப்பிட்டிங்களாம்மா..."
"இந்நேரம் வரைக்கும் சாப்பிடாம இருந்தா உன் பெண்டாட்டி என்னை சும்மா விட்டு விடுவாளா... அப்பவே சாப்பிட வைச்சிட்டா..." மேகலாவின் குரலில் பெருமிதம் தொனித்தது...
"மாத்திரை போட்டுக்கிட்டிங்களா..."
"அதையும் ராதிகா கொடுத்திட்டாப்பா..."
அவனுக்கென்று எந்தக் கடமையையும் வைக்காமல்... அவனது தாயை தன் தாயைப் போல... பரிவுடன் பார்த்துக் கொள்ளும் மனைவியின் மீது அவனுக்குள் பிரியம் பொங்கியது...
திரும்பிப் பார்த்தான்... தாயிடம் அவன் பேசுவதைப் கேட்டும்... கேட்காததைப் போல.. அவனுக்காக தட்டை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ராதிகா...
'இவளுக்கு என் குழந்தைக்கு அம்மாவாகனுமாம்..'
அவளை ஊன்றிக் கவனித்தான்.. அவள் முகத்தில் சாந்தம் நிலவியது... முதன் முதலில் அவளைப் பார்த்தபோது இருந்த துறுதுறுப்பு மறைந்து போய்.. நிதானம் வந்திருந்தது... நீண்ட பின்னலில் பூ வைத்திருந்தாள்... அது அவளது தோளின் மீது வழிந்து.. அவளின் அழகை அதிகப் படுத்திக் காட்டியது... நெற்றி வகிட்டின் குங்குமத்தில் மங்கலமாக அவள் தெரிந்தாள்.. புடவைத் தலைப்பை இழுத்துச் செருகி.. பொறுப்பான குடும்பத் தலைவியாக... இங்கும் அங்கும் அவள் நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தபோது... அந்த ராதிகாவா.. இந்த ராதிகா..என்று அவனுக்குக் கேட்கத் தோன்றியது..
அவன் பார்ப்பதை அவள் உணராமல் இருக்க மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியும்... அதைத் தெரிந்தும்... தெரியாததைப் போல அவள் பாவனை செய்து கொண்டிருந்தாள்...
"சாப்பிடப் போடா..." மேகலா சொன்னாள்...
'ஏன்... அவ சாப்பிடக்கூப்பிட மாட்டாளா..?' அவன் அசையாமல் அமர்ந்திருந்தான்...
அவன் வந்து விடுவான் என்ற எதிர்பார்ப்பில்... மீனாட்சியிடம் இருந்த பாத்திரங்களை வாங்கி வைத்துக் கொண்டிருந்தவள்.. அவன் எழுந்து வராததில் விழியுயர்த்தி அவனைப் பார்த்தாள்... அவனும்.. அவளையே பார்த்துக் கொண்டிருக்க.. இருவர் பார்வையும் பின்னிப் பிணைந்தன...
அவள் முகத்தில் வெட்கச் சிகப்பு பரவ... அவசரமாய் விழிதாழ்த்திக் கொண்டாள்.. பாலமுரளியின் கண்கள் மின்னின...
இது போன்ற உணர்வை அவன் உணர்ந்து வெகு நாள்களாகி விட்டிருந்தன... ஒன்று அவள் மௌனித்தாள்.. இல்லையென்றால் அவன் மௌனித்தான்...
இப்படி மௌன நாடகம் ஆடிக் கொண்டிருந்தவர்களின் மத்தியில் பூ மலருமென்றோ.. அதன் நறுமணத்தை நுகர்ந்து இருவரும் மனம் மயங்கிப் போய் விடுவார்களென்றோ... அவன் நினைத்தும் பார்க்கவில்லை..
"ராதிகா காத்திருக்கிறா பாரு... போயேண்டா..." மேகலாவின் குரலில் வற்புறுத்தல் இருந்தது...
பாலமுரளி அசையவேயில்லை.. அந்த இரும்பு மனிதனின் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றில் ராதிகா பேச்சிழந்தாள்.. அவளைப் பேசவைக்க வேண்டுமென்ற அவனது எண்ணம் அவளுக்கும் புரிந்தது... பேச அவளுக்கும் ஆசைதான்...
ஆனால் பாவம்... அவள்தான் என்ன செய்வாள்..அவள் வாயைத் திறந்தால் காற்றுத்தானே வந்து தொலைக்கிறது... குரல் எழும்ப மாட்டேனென்று பிடிவாதம் பிடிக்கிறதே...
'எனக்கென்ன நேற்றுத்தான் இவனுடன் கல்யாணம் ஆகியிருக்கிறதா..'
தன்னையே அவள் கடிந்து கொண்டாள்.. இந்த வெட்கம் எதற்காக என்று விரட்டிப் பார்த்து விட்டாள்... என்ன செய்வது..அவளை விட்டுப் போக மாட்டேனென்று அடம் பிடித்துக் கொண்டு.. வெட்கம் அவள்மேல் அட்டை போல ஓட்டிக் கொண்டிருக்கிறதே...
அவள் அழைக்காமல்... அவன் சாப்பிட வரமாட்டான் என்பது அவளுக்குத் தெரிந்து விட்டது... வேறு வழியில்லாமல்.. தரையைப் பார்த்தபடி...
"சாப்பிட வாங்க..." என்று அழைத்து விட்டாள்...
எழுந்து வந்தவனின் முகத்தில் சிரிப்பிருந்தது...
'என் வெட்கத்தைப் பார்த்தால்.. இவனுக்கு சிரிப்பாய் வருகிறதாமா..?' அவள் மனதிற்குள் வெகுண்டாள்...
டைனிங் டேபிளில்.. அவன் அவளைத் தொட்டுத் தொட்டுப் பேசினான்.. அவள் பரிமாறும் போது... அவள் கையைப் பிடித்து தடுத்து மறுத்தான்... ராதிகாவின் கை விரல்கள் நடுங்க ஆரம்பித்தன... என்றைக்குமில்லாமல் அவன் காட்டிய நெருக்கத்தில்... அவளது கோரிக்கையை அவன் ஏற்றுக் கொண்டு விட்டதைப் போல அவள் உணர்ந்தாள்...
இதயம் படபடக்க... கால்கள் பின்ன... கைவிரல்கள் நடுங்க... முதலிரவு அறைக்குள் அடியெடுத்து வைக்கும் புதுமணப்பெண்ணைப் போல... அவர்களின் படுக்கையறைக்குள் அடியெடுத்து வைத்தாள் ராதிகா...
'என்ன முடிவெடுத்திருப்பான்...?
            நான் கேட்ட வரத்தைத் தருவானா...?
             இல்லை மறுப்பானா..?'
அவள் இதயம் கேட்டது...

- நான்காம் பாகம் முடிந்தது -



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி..-143
அம்மம்மா.. கேளடி தோழி..-143
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-143.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-143.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy