அம்மம்மா.. கேளடி தோழி.. -142

142 வாராது வந்த மாமணிபோல்.. வந்தவனே..! எனையே ஏன் வெறுத்தாய் ? "அவகிட்ட அப்படி தணிஞ்சு பேசனும்கிற அவசியம் உனக்கில்ல... நானே ப...


142
வாராது வந்த மாமணிபோல்..
வந்தவனே..! எனையே ஏன் வெறுத்தாய்?

"அவகிட்ட அப்படி தணிஞ்சு பேசனும்கிற அவசியம் உனக்கில்ல... நானே பேசலைங்கிறப்போ... நீ எதுக்காக தேவையில்லாம அவகிட்டப் பேச்சை வைச்சுக்கிட்ட...?" 
பாலமுரளி.. அன்றிரவு சீறிய போது... ராதிகா பெருமூச்சுவிட்டாள்... கடைசியில் பேச்சுச் சுதந்திரம் கூட அவளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டதா...?
"பாவம்.. கர்ப்பிணிப் பெண்... என் கையைப் பிடிச்சு கண் கலங்கி நிற்கிறா... அந்த நிலையிலே இருக்கிறவகிட்ட ஆதரவாப் பேசினா... அதுவும் தப்பா..?"
"ஓ... கர்ப்பிணிப் பெண்... அதுதானே உன் கண் முன்னால வந்து நிற்குது...? அந்த சங்கர் பெண்டாட்டியை கர்ப்பிணியாக்கிட்டான்... நான் அப்படி... ஆக்காம பெண்டாட்டியை பேச்சுக்கேட்க வைச்சிட்டேன்... அதைச் சொல்லிக் காட்டற... அப்படித்தானேடி..."
"த்ச்சு... அப்படியெல்லாமில்லை..."
"அப்படியேதாண்டி... உனக்கு அதுதான் நினைவு.."
'ஆமாண்டா.. அதுதான் என் நினைவு...' என்று சொல்லி விட்டால்தான் என்ன என்ற வேகம் அவளுக்குள் கிளர்ந்தெழுந்தது...
நினைவு நினைவாகவே இருக்க.. மனமெல்லாம் ரணத்துடன் கண்மூடி உறங்க முயன்றாள்...
இரண்டு நாள் உர்ரென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாலும்... அதை நீடிக்காமல்.. சீக்கிரத்திலேயே... இயல்பு நிலைக்கு திரும்பி விட்டான் பாலமுரளி...
"வாடி... கோவிலுக்குப் போகலாம்..."
அந்த வார இறுதியில் அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனான்... முடிந்த வரை அவளை வெளியில் அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்...
"படிச்ச படிப்பை வீணாக்காம... எனக்கு எதையாவது உருப்படியாய் செய்து உதவி பண்ணு..."
அவளை மில்லில் கொண்டு போய் அமர வைத்தான்... அவளுடைய மன ஆறுதலுக்காக அவன் செய்தது... உண்மையிலேயே அவனுக்கு பேருதவியாக மாறிவிட்டது...
ராதிகா அவனது மில்லின் வேலை நுணுக்கங்களைத் தெளிவாக அறிந்து கொண்டு விட்டாள்.. தொழிலாளர்களிடம் அவள் காட்டும் வழக்கமான கனிவில்... மில் அவளது கட்டுப் பாட்டுக்குள் மிக இயல்பாக வந்து விட்டது... பாலமுரளியின் வேலைப்பளு... அவனே எதிர்பாராத வகையில் குறைந்து விட்டது...
"தேவலையே... உன் தலையிலயும் மசாலா இருக்குடி.." முரளி பாராட்டினான்...
மற்ற தொழில்களைப் பார்க்க அவனுக்கு நேரம் கிடைத்ததில்.. அவன் புதிதாக பேக்டரி ஒன்றைத் தொடங்கும் ஏற்பாட்டில் இறங்கினான்.. அது சங்கருக்கு போட்டியான பேக்டரியாக உருவெடுக்கப் போகிறது என்று சதீஷ் கூற... ராதிகா அறிந்து கொண்டாள்... அதைப்பற்றி எந்த அபிப்ராயத்தைக் கூறினாலும் அது வில்லங்கத்தில் வந்து முடிந்து விடும் என்பதால் வாய் மூடி மௌனமாகி விட்டாள்...
புதிய தொழிலைத் தொடங்குவதற்கான வேலைகளுக்காக முரளி அடிக்கடி சென்னைக்கு போய் வர வேண்டியிருந்தது... அப்படி அவன் போகும் நாள்களில் ராதிகா மில்லையும்.. மற்ற தொழில்களையும் கவனித்துக் கொண்டாள்...
முதலிரண்டு தடவைகள்... அவளும் அவனுடன் சென்னைக்குக் கிளம்பிப் போய் விட்டு வந்தாள்.. ஆனால்.. அப்படி அவர்கள் போகும் தருணங்களில் ஏதேனும் ஒன்று நிகழ்ந்து... அவர்கள் பயணத்தை ரத்து செய்து விட்டு பாதியிலேயே திரும்பி வந்து விடும்படி ஆனது...
முதல்முறை... மேகலாவுக்கு காய்ச்சல் வந்து விட்டது.. மறுமுறை... ஜவுளிக்கடைக்கு சரக்குக் கொண்டு வந்த லாரி... விபத்துக்கு உள்ளானது... மூன்றாம் முறை.. மில்லில் இருந்த உயர்தர மெஷின் ஒன்று பழுதானது..
அதற்குப் பின்னால்... முரளியை மட்டும் சென்னைக்குப் போகச் சொல்லிவிட்டு... ராதிகா தேனூத்திலேயே தங்கி விட்டாள்...
"நம்ம ரெண்டு பேரில யாராவது ஒருத்தர் இங்கேயிருந்தா தேவலை..."
அவள் அப்படித் தேங்கி விட்டதில் முரளிக்கு உடன் பாடில்லை... அதை வாய்விட்டுச் சொல்லவும் அவனால் முடியவில்லை...
'என்கூட வந்தா மட்டும் என்ன சுகம் கிடைச்சிரப் போகுதுன்னு இவ நினைக்கிறாளா...?'
அவளது அருகாமை கிடைக்காததில் அவனுக்குள் கனல் கனன்று கொண்டிருந்தது... அதை அறியாமல்.. வாழ்வின் மீதான தன் ஆசைத் தீயை அணைக்கும் முயற்சியாய் வேலைக்குள் தன்னை அமிழ்த்திக் கொண்டாள் ராதிகா...
தனியாக சென்னைப் பயணங்களை மேற்கொண்ட முரளியின் மனதில் மட்டும்... மனத்தாங்கல் வளர்பிறையாய் வளர்ந்து கொண்டே இருந்தது...
அவன் தேனூத்தில் இருக்கும் நாள்களில்.. அவளருகிலேயே இருக்க விழைந்தான்.. அதையறியாதவளாக ராதிகா வேலையில் மூழ்கும் போது அவனுக்குள் கோபம் துளிர்விட்டது...
ஒரு மாலை நேரப் பொழுதில்.. அவர்கள் கோவிலுக்குப் போய் விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது... எதிரே.. சங்கரும்.. நித்யாவும் குழந்தையுடன் வந்தார்கள்..
ராதிகாவைப் பார்த்தவுடன் சங்கர் தேங்கி நின்றுவிட.. அவன் கூட இருந்த நித்யாவிற்காக பல்லைக் கடித்தபடி.. முரளி அவர்களைக் கடந்து போகாமல் தேங்கி நின்றான்...
"எப்படியிருக்கீங்க ராதிகா..?" மலர்ந்த முகத்துடன் நித்யா கேட்டாள்...
"நல்லாயிருக்கேன்... நீங்க எப்படியிருக்கீங்க.." பதிலுக்குக்கேட்ட ராதிகாவின் பார்வை.. நித்யாவின் கையிலிருந்த பெண் குழந்தையின் மீது படிந்தது...
அதை உணர்ந்தவளாக நித்யா.. பெருமையுடன் சிரித்தாள்...
"பாப்பாவுக்கு என்ன பெயர் வைச்சிருக்கீங்க..?" ராதிகா ஆவலுடன் கேட்டாள்...
"ராதா... இவர்தான் பெயர் வைச்சார்.." நித்யா சங்கரை காதலுடன் பார்த்துக் கொண்டாள்...
பதிலுக்கு காதலாக மனைவியைப் பார்க்காமல்... ராதிகாவையே பார்த்துக் கொண்டிருந்தான் சங்கர்... அவனின் அந்தப் பார்வையிலும்.. 'ராதா..' என்ற பெயரிலும்... பாலமுரளி எரிமலையாகியிருந்தான்...
பேசிக் கொண்டிருக்கும் போதே.. நித்யாவின் கையிலிருந்த குழந்தை வழுக்கிக் கொண்டு நழுவ...
"பார்த்து.. நித்யா.. குழந்தை பத்திரம்.." என்றபடி.. சட்டென்று குழந்தையை தாங்கிப் பிடித்துக் கொண்டாள் ராதிகா...
"இவ இப்படித்தான் ராதிகா.. கையில நிற்காம விசும்பிக்கிட்டே இருப்பா.." தாய்மையின் பெருமிதத்தோடு கூறினாள் நித்யா...
ராதிகாவின் கையிலிருந்த குழந்தையின் பட்டுப் போன்ற மென்மையில் அவள் குழைந்து போயிருந்தாள்.. பூப்போன்ற அந்தக் குழந்தை தன் பொக்கை வாயைத் திறந்து சிரிக்க... ராதிகாவின் விழிகள் ஒளிர்ந்து விட்டன..
"என்னம்மா..? என்ன செல்லம்...?"
தன்னை மறந்து குழந்தையை கொஞ்சிவிட்டாள் ராதிகா...
அன்று இரவு அவளைத் தூங்க விடாமல் வசை பாடிக் கொண்டிருந்தான் முரளி...
"நீ வேணும்னே அவன் குழந்தையை வாங்கினடி.. அதுக்கு ராதான்னு பெயர் வைச்சிருக்கானே... அதுக்காக வாங்கினயா..?"
"இல்லைங்க.. அது கீழே விழப் பார்த்துச்சு..."
"அதுக்காக... நீ கையில தூக்கனுமா..? அதைப் பெத்தவ அதைப் பார்த்துக்க மாட்டாளா...?"
முரளியின் பேச்சில் கண்கலங்கி விட்டாள் ராதிகா...
"என்னால பெத்துக்கத்தான் முடியாது.. மத்தவங்க பெத்த குழந்தையைத் தூக்கி.. கொஞ்சவும் கூடாதா..?"
அந்தக் கேள்வி.. சம்மட்டியாய் முரளியின் இதயத்தை தூக்கியது...
'இவ மனசில குழந்தைக்காக... இந்த அளவுக்கு ஏக்கம் இருக்கா..?'
அன்று இரவு முழுவதும் அவன் தூங்கவேயில்லை.. சற்று நேரத்தில் தூங்கி விட்ட ராதிகாவின் நிர்மலமான முகத்தைப் பார்த்தபடி.. விடியும் வரை விழித்திருந்தான் பாலமுரளி..
குளித்து விட்டு வந்த முரளி தயாராக எடுத்து வைக்கப் பட்டிருந்த உடைகளை அணிந்து கொண்டான்.. அதன் பொருத்தமான நிறத்திலும்.. நேர்த்தியிலும் அவனுக்குள் பாராட்டுத் தோன்றியது...
அவனுக்கான உடைகளை ராதிகாதான் வாங்கி வருவாள்.. அதிலெல்லாம் பாலமுரளி தலையிடமாட்டான்.. அதைப்போல... அவன் வெளியூருக்குப் போகும் போதெல்லாம் கண்ணில் பட்டு.. கருத்தைக் கவரும் சேலைகளையும்.. நகைகளையும் அவளுக்கென்று வாங்கி வந்து குவித்து விடுவான்.. அதை ராதிகா விரும்பி அணிந்து கொண்டாலும் அவள் முகத்தில் மலர்ச்சி இருக்காது.. அதை வரவழைக்க என்னசெய்வது என்று தான் முரளி தலையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டான்.. தலைவலித்ததுதான் மிச்சம்.. ஒரு வழியும் தென்படவில்லை..
மாடிப்படிகளில் இறங்கியபோதே ஹாலில் ஒலித்துக் கொண்டிருந்த பாட்டுச் சத்தம் அவன் காதில் விழுந்தது...
"பூவாகி...  காயாகி...
             கனிந்த மரம் ஒன்று..
    பூக்காமல்... காய்க்காமல்...
             இருந்த மரம் ஒன்று..."
பாலமுரளியின் புருவங்கள் சுருங்கின... அவன் வேகமாகப் படியிறங்கினான்.. அவன் நினைத்ததுதான் அங்கே நடந்து கொண்டிருந்தது...
அவனுக்கு காலை உணவை பரிமாற வேண்டிய கடமையை மறந்து போனவளாக ராதிகா டிவியைப் பார்த்தபடி கற்சிலையாக நின்று கொண்டிருந்தாள்.. அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது...
பாலமுரளி உதட்டைக் கடித்துக் கொண்டான்.. இந்தக் காட்சியைக் கட்டாயமாக வீட்டிலிருக்கும் மற்றவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள் என்று அவனது உள்ளுணர்வு சொல்லியது... பார்வையைச் சுழற்றினான்.. அவன் நினைத்ததுதான் நடந்து கொண்டிருந்தது... ராதிகாவை பரிதாபத்துடன் பார்த்தபடி மீனாட்சி கண்ணைக் கண்ணைத் துடைத்துக் கொண்டிருந்தாள்...
'ம்ஹீம்.. இவ பழைய சினிமாவைப் பார்த்துப் பார்த்து கண்ணீர் விடறவளாச்சே.. இதைப் பார்த்தா சும்மாயிருப்பாளா...' மானசீகமா தலையில் கை வைத்துக் கொண்டான் பாலமுரளி..
மேகலா பூஜையறையை விட்டு வெளியே வரவேயில்லை... சமையலறையே கதியென்று கிடக்கும் காவேரி... அடிக்கடி தலையை வெளியே நீட்டி ராதிகாவை கருணைப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்...
'இவளை என்ன செய்தால் தேவலாம்...?'
கோபமாகத்தான் நினைத்தான்... ஆனால் ராதிகாவைப் பார்த்தவுடன் அந்த கோபம் பறந்தோடி விட்டது... அவளது சோகமுகம் அவனது நெஞ்சத்தைக் கிள்ளியது...
'ஏண்டி இப்படி துயரம் பண்ற...?'
எப்போதும் அவளிடம் கேட்கும் கேள்வியை மனதில் நினைத்துக் கொண்டான்.. அவளின் குழந்தை மீதான ஆசையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது... ஆனால்.. இந்த அளவுக்கு அவள் பாதிப்புக்கு ஆளாவாள் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை...
இரண்டு நாள்களுக்கு முன்னாலும் இப்படித்தான்..
வீட்டுக்கு வந்தவன்.. அவளைக் காணாமல் மாடிக்குத் தேடிப் போனான்.. அவளை அங்கே காணோம்.. மாடிப் பால்கனியிலிருந்து பாட்டுச் சப்தம் மட்டுமே காற்றில் தவழ்ந்து வந்தது...
"இலையில்லாத பூக்களா...?
             கிளையில்லாத செடிகளா..?
    மகனில்லாத அன்னையா..?
             மகனே..! நீ இல்லையா...
    சொல்லச் சொல்ல தாய் மனம்...
             மெல்ல மெல்ல வேர் விடும்..
    தெய்வமே..! தாயிடம்..
             தேரேறி ஓடி வரும்..."
பாலமுரளியைச் சூழ்ந்து நின்ற பாடல் வரிகளில் ஸ்தம்பித்து நின்று விட்டான் அவன்.. அவளுடைய கண்ணீர் தோய்ந்த குரல் விசும்பிக் கொண்டிருந்தது...
அவனுடைய மனக்கண்ணில் அவனது குழந்தையை கையில் ஏந்தி ராதிகா கொஞ்சிக் கொண்டிருந்தாள்.. அவள் குரலில் வழிந்தோடிய தாய்மையுணர்வு... அவள் முகத்தில் வழிந்தோடியது.. அவனது மகனைக் தூக்கிக் கொண்டிருந்தவளைப் பார்க்கப் பார்க்க... அவனுக்குள் ஆண்மையின் கர்வம் இமயமாக எழுந்து நின்றது...
"சொல்லடா... வாய்திறந்து...
             அம்மா...! என்று..
    துன்பமே மறந்து விட்டேன்...
             உன்னால்.. இன்று..."
'அம்மா...' என்ற அழைப்பிற்காக அவள் ஏங்கும் ஏக்கத்தை அவளின் விசும்பல் ஒலி... பிட்டுப் பிட்டு வைக்க.. முரளி.. அப்படியே திரும்பி வெளியே போய்விட்டான்... அன்றிரவு அவன் தூங்க நெடுநேரமானது..



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.. -142
அம்மம்மா.. கேளடி தோழி.. -142
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-142.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-142.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy