அம்மம்மா.. கேளடி தோழி.. -136

136 சில்லென்ற மழைக்காற்றில்... என்தேகமெல்லாம் உனைத்தேடுதடி.. பாலமுரளியும் என்னென்னவோ செய்து பார்த்தான்.. எரிந்து விழுந்து பார்த்த...


136
சில்லென்ற மழைக்காற்றில்...
என்தேகமெல்லாம் உனைத்தேடுதடி..

பாலமுரளியும் என்னென்னவோ செய்து பார்த்தான்.. எரிந்து விழுந்து பார்த்தான்... முறைத்துப் பார்த்தான்... போதிமரத்தடி புத்தரைப் போல... புன்னகை மன்னனாக நின்ற கோமதிநாயகம் அசைந்து கொடுக்க வில்லையே...
ஏதேனும் ஒரு வகையில் அவரை வம்புக்கு இழுத்து.. அதுதான் சாக்கென்று.. அந்தத் திருமணத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட உத்தேசித்திருந்த பாலமுரளியின் உத்தேசம் எதுவும் எடுபடவில்லை...
கோமதிநாயகம் கூப்பிய கரத்தை இறக்கவேயில்லை...
"பாருடா இந்த அண்ணனை...! இவரைப் போய் நீ கோவிச்சுக்கிட்டியே... பெண்ணைக் பெற்றுவிட்டா.. எப்பேற்பட்ட பணக்காரரா இருந்தாலும்.. தழைஞ்சுதான் போகனும்கிறதுக்கு இவருதான் சாட்சி..."
மேகலாவே பரிதாபப் பட்டுவிட்டாள்... அதற்கு மேலும் பாலமுரளியால் அவரிடம் வம்பு வளர்க்க முடியவில்லை... கடனே என்று... செய்ய வேண்டிய முறைகளை செய்து வைத்தான்...
திருமண மேடையில் இருபக்கத்து தாய்மாமன் மாரும்.. எதிரெதிரே அமர்ந்து சம்பந்தம் பேச வேண்டிய சம்பிரதாயத்தின் பொருட்டு.. அவனும்... ராதிகாவும் மணமேடைக்குச் செல்ல நேர்ந்தது...
அப்போதுதான் பாலமுரளி அதைக் கவனித்தான்...
திருமண மாப்பிள்ளையாக அமர்ந்திருந்த சங்கரின் பார்வை முழுதும்.. ராதிகாவின் மீதே படிந்திருந்தது... லேசு பாசாகக் கூட தன் அருகில் மணமகளாக அமர்ந்திருந்த நித்யாவை அவன் திரும்பிப் பார்க்கவில்லை...
பாலமுரளியின் ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது... என்னதான் ராதிகா குனிந்த தலையை நிமிராமல் அவன்கூடவே இருந்தாலும்... அவளைத் தேடியலையும் சங்கரின் பார்வையில் கொலைவெறிக்கு ஆளானான் பாலமுரளி...
'இவனை வெட்டிப் போடனும்...'
அதற்குள் சம்பிரதாயம் முடிந்துவிட.. மனைவியுடன்.. மணமேடையை விட்டு இறங்கினான் பாலமுரளி...
'இந்த இடத்தைவிட்டு எவ்வளவு சீக்கிரத்தில் கிளம்ப முடியுமோ.. அவ்வளவு சீக்கிரத்தில் கிளம்பிரனும்..'
அவனது கொதிநிலையை அறியாதவளாக மேகலா.. அங்கிருந்த உறவினர் கூட்டத்தோடு கலந்துரையாடிக் கொண்டிருந்தாள்...
"ஆமாக்கா.. நான்கூட நினைச்சேன்.. நம்ம தாமரை இப்படிச் செய்ய மாட்டாளேன்னு.. இதான் விசயமா..?"
மேகலா சுவராஸ்யமாக கதை பேசிக் கொண்டிருக்க..
'இப்ப இதான் ரொம்ப முக்கியம்...' என்று எரிச்சலடைந்தான் பாலமுரளி...
எந்தத் தாமரை எப்படிப் போனால் மேகலாவுக்கென்ன வந்தது.. கொஞ்சமாவது பாலமுரளியின் மனநிலையை உணர்ந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்ப முனைகிறாளா..?
"நீ சொல்லவே இல்லியே செல்வி..."
அதற்குள் மேகலா... அடுத்த பெண்ணிடம் கதை கேட்க ஆரம்பித்து விட்டாள்...
பாலமுரளிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை... மேகலாவைச் சொல்லியும் குற்றமில்லை... மாணிக்க வாசகத்தின் மனைவியும்.. பாலமுரளியின் அன்னையுமான அவளிடம் பேச... உறவினர் கூட்டம் நீ முந்தி.. நான் முந்தி... என்று அலைமோதியது... அவளும் அவர்களின் மனம் கோணாமல் சில வார்த்தைகளைப் பேச வேண்டிய கடமைக்கு ஆளாகியிருந்தாள்...
தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளான பாலமுரளி.. முள்ளின் மேல் அமர்ந்திருப்பதைப் போல உணர்ந்தான்...
கெட்டி மேளத்துடன் நாதஸ்வரம் ஒலிக்க ஆரம்பித்தது... ராதிகாவைப் பார்த்தபடியே... நித்யாவின் கழுத்தில் தாலியைக் கட்டினான் சங்கர்... அதற்கு மேலேயும் அந்தக் கொடுமையை வேடிக்கை பார்க்க முடியாமல் பாலமுரளி எழுந்து விட்டான்...
"என்னடா..." மேகலா ஆட்சேபித்தாள்...
"மில்லில ஏதோ பிரச்னையாம்மா... நான் உடனே போயாகனும்..."
"அதுக்காக... கல்யாணம் முடிஞ்சதும் கை நனைக்காம ஓடுறதா..? நம்ம உறவுஜனம் பார்த்தா என்ன சொல்லும்..?"
"எதையோ சொல்லிட்டுப் போகட்டும்... அதைப்பத்தி எனக்கு கவலையில்லை... ஏய்ய்.. வாடி..."
"இப்ப எதுக்காக ராதிகாவையும் உன்கூடக் கூப்பிடற...?"
"அவ என் பெண்டாட்டி... அதனால கூப்பிடறேன்.."
"உனக்கு வேலையிருந்தா நீ  போ... நானும் என் மருமகளும் சாப்பிட்ட பின்னாலே வர்றோம்..."
"நீங்க இருங்க... நான் தடுக்கலை... ஆனா இவ என்கூட வந்தாகனும்..."
"எதுக்குடா பிடிவாதம் பிடிக்கிற...?"
"கடுப்பைக் கிளப்பாதீங்கம்மா... ஏய்ய்... உனக்கு வேற தனியாச் சொல்லனுமா..? போய் காரில் ஏறு..."
பாலமுரளியின் அதட்டலில் ராதிகா அங்கிருந்து விரைவாக அகன்று விட்டாள்... பாலமுரளி தாயை முறைத்தபடி.. அவள் பின்னால் போய் காரில் ஏறிப் பறந்து விட்டான்... கோமதிநாயகம் கூப்பிட வருவதற்குள் கார் பறந்துவிட... அவர் மேகலாவிடம் முறையிட்டார்...
"நீ என் மகளை உன் மகனுக்கு கட்டி வைக்கலை.. சரி... நம்ம சொந்த பந்தத்திலயாவது ஒரு பொண்ணைப் பார்த்து கட்டி வைச்சிருக்கலாமில்ல...?"
"ஏன்ணே... என் மருமகளுக்கென்ன...?"
"இது நியாயமா தங்கச்சி... தாய்மாமன் சீரு செஞ்சா போதுமா... கல்யாண வீட்டுக்கு வந்திட்டு கை நனைக்காம போகலாமா...?"
"இதுக்கு என் மருமகளை எதுக்காக குத்தம் சொல்றிங்கண்ணே..?"
"பார்த்தியில்ல... உன் மகனுக்கு முன்னாலே உன் மருமகதான் வெளியேறுச்சு... அதுக்கு என்னத்துக்காக என்மக மேல இம்புட்டு வெறுப்பு...? பெண்டாட்டி போனதால... புருசனும் பின்னாலேயே போயிட்டார்... உன் மருமகளைச் சொல்லிக் குத்தமில்ல தங்கச்சி... எல்லாம் எங்க நேரம்..."
கோமதிநாயகம் ராதிகாவின் மீது பழிபோட...
"உன்னாலதான் எல்லாம் வந்தது..." என்று வீட்டுக்கு வந்த பின்னால் மகனிடம் சண்டைக்குப் போனாள் மேகலா...
அவனே உன்மத்தம் பிடித்தவனைப் போல இருந்தான்... காரை விரட்டு... விரட்டென்று விரட்டியவன்.. வீடுவந்து சேர்ந்ததும்.. ராதிகாவை மட்டும் இறக்கி விட்டுவிட்டு... அவளிடம் ஒருவார்த்தை கூடச் சொல்லாமல் பறந்து விட்டான்...
'சாப்பிடாமப் போறானே...'
அவளும் சாப்பிடாமல் படுத்து விட்டாள்... மாலையில் வீடு திரும்பிய மேகலாவும் உடல் அயர்வினால் படுத்து உறங்கி விட்டாள் இரவு உணவுக்கு வெகு நேரம் கழித்து வீடு திரும்பிய பாலமுரளியை ஒரு பிடி பிடித்தாள்...
"இது ஆம்பளைகளுக்கான உலகம் முரளி... அவங்க செய்யற அத்தனையும் பொம்பளை தலையிலதான் வந்து விடியும்... நீ பாட்டுக்கு ஓடிட்ட... உன்னை அங்கே இருக்க விடாம ராதிகாதான் இழுத்து வந்துட்டான்னு இப்ப பேச்சு வந்திருச்சு.. இதுக்கு என்ன சொல்லப் போற...?"
"எதுவும் சொல்லப் போறதில்ல... ஏய்ய்.. தட்டைப் போடுடி..."
"அவளை எதுக்குடா அரட்டறே... இப்பத்தான் கொஞ்ச நாளா காய்ச்சலில் விழுகாம இருக்கா.. உனக்கு அது பொறுக்கலையா..?"
"அரட்டறது நீங்களா.. இல்லை... நானா..? அவ யாரும்மா...?"
"உன் பொண்டாட்டி..."
"தெரியுதில்ல... அவளை என்ன சொன்னேன்.. தட்டை எடுத்துச் சாப்பாட்டைப் போடச் சொன்னேன்.. அதையும் சொல்லக் கூடாதுன்னா இனி நான் சொல்லலை.. மீனாட்சி.. நீ தட்டைப் போடும்மா..."
'இருந்திருந்து இந்த ஒரு உரிமையைத்தான் உருப்படியா இவன் எனக்குக் கொடுத்திருக்கான்... அத்தை அதுக்கும் வேட்டு வைக்கப் பார்க்கிறாங்களே...'
மீனாட்சியை கண்களால் அதட்டிய ராதிகா.. வெற்றிகரமாக தட்டைக் கைப்பற்றினாள்... அவன் முன்னால் தட்டை வைத்து பரிமாற ஆரம்பித்தாள்...
"ம்ஹீம்.. புருசனுக்கேத்த பெண்டாட்டி..."
தலையில் அடித்துக் கொண்ட மேகலா... தூங்கப் போய் விட்டாள்...
"தண்ணியைக் குடுடி..."
"சட்னியை யார் ஊத்தறது...? கவனமெல்லாம் எங்க இருக்கு...?"
"ஏய்ய்.. தட்டைப் பார்த்துப் போடுடி..."
"சாம்பாரை தட்டில் ஊத்தச் சொன்னா.. தரையில் உளத்தி வைக்கிற... புத்தி புல் மேயப் போயிருக்கா...?"
சங்கரின் மேல் கனன்று எழுந்த கோபத்தை யெல்லாம் ராதிகாவிடம் காட்டிக் கொண்டிருந்தான் பாலமுரளி... சாட்டையடிகளைப் போன்ற அவனது வார்த்தைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தாள் ராதிகா...
காவேரிக்கே பொறுக்கவில்லை...
"ம்ஹீம்.. என்னா பொண்ஜென்மம்டி நம்ம ஜென்மம்..? யாரு மேலயோ இருக்கற காட்டத்தை இந்தம்மா மேல ஐயா கொட்டிக்கிட்டு இருக்காரே... இந்தம்மாவே பாவம் பச்சை மண்ணு... இவரோட கோபத்தையும்... வேகத்தையும் இவங்க தாங்குவாங்களா...?"
"இதைத்தானேடி இம்புட்டு நேரமா... பெரியம்மாவும் சொன்னாங்க... நானும் சொன்னேன்... அப்பல்லாம் காதில பஞ்சை அடைச்சதைப் போல பேசாம இருந்துட்டு.. இப்ப வந்து உன் கரிசனத்தைக் காட்டறயாக்கும்...", என்றாள் மீனாட்சி...
"என்னமோ... போ மீனாட்சி... பொழைப்பைப் பார்க்க வந்திருக்கோம்.. மத்தவங்க பேச்சு நமக்கெதுக்குன்னு நினைச்சேன்...?"
"இப்ப அந்த நினைப்பு எங்கே போயிருச்சு..? ஐயா சொன்னாதைப் போல... புல் மேயப் போயிருச்சா...?"
"போ மீனாட்சி..."
"எங்கேடி போகச்சொல்ற...? நீ மட்டும் பெரிய வீட்டில இருந்து வேலை பார்க்கனும்.. நான் ஓடிப் போகனுமா..? என்னமா திட்டம் போட்டு ஆளைக் கவுக்கிறடி நீ..."
"யாருடி இவ... அந்தம்மாவே பாவம் அல்லாடுது... அந்தக் கொடுமையைப் பார்த்தா மனசுக்கு தாங்கலை... அந்த வேதனையில ஒரு பேச்சை விட்டா.. நீ அதுதான் சாக்குன்னு ஆடிப் பார்க்கிற..? அடங்குடி..."
"ஆகமொத்தம்... இந்த தென்காசிப் பட்டினத்துக்கே இந்த மீனாட்சியை அடக்கிப் பார்க்கிறது மட்டும் தான் குறிக்கோளாய் இருக்கும் போல இருக்கு.. அதென்னடி.. யாரு வாயைத் திறந்தாலும்... இந்த ஒத்த வார்த்தைய மட்டும் மறக்காம சொல்லிடறிங்க...?"
"பேசாம போவியா..."
"இந்தா பாரு காவேரி... உனக்கு கோவம் வந்தா நாலு அடி வேண்டும்னாலும் அடிச்சுரு... ஆனா வாய் பேசாம மட்டும் இருக்கச் சொல்லாதே... என்னால அது முடியுமாடி..?"
"அதைச் சொல்லு..."
"ஆனா ஒன்னு காவேரி... இந்தம்மாவைப் போல குணசாலியை உலகம் பூரா தேடினாலும் கிடைக்க மாட்டாங்க... அது இந்த ஐயாவுக்கு புரிய மாட்டேங்குதே.."
"அதைச் சொல்லு..."
"அழகு ரதியைப் போல பொண்டாட்டி.. தேனூத்தைப் போல ஊரு... திரும்பின பக்கமெல்லாம் அருவி... இத்தனையையும் வைச்சுக்கிட்டு ஆண்டு அனுபவிக்காம.. மத்தவங்களை விரட்டறதைப் போல இந்தம்மாவையும் விரட்டிக்கிட்டு இருக்காரே நம்ம ஐயா..?"
"அதைச் சொல்லு.."
"கட்டிக்கிட்டு வந்து ஆறு மாசமாகப் போகுது... இந்நேரத்துக்கு இந்தம்மா.. வாந்தியெடுத்திருக்க வேணாமா...?"
"அதைச் சொல்லு..."
"எங்கே..? இப்படி எண்ணைச் சட்டியில போட்டு வறுத்தெடுக்கிறதே குறிக்கோளாய் ஒரு மனுசர் இருந்தா.. வாந்தி எங்கேயிருந்து வரும்...?"
"அதைச் சொல்லு..."
"ஆமாண்டி.. சொல்லுறதையெல்லாம் கேணச்சியைப் போல நான் சொல்லி மாட்டிக்குவேன்.. நீ அதைச்சொல்லு... அதைச் சொல்லுன்னு உணக்கையாய் காதைத் தீட்டி நொட்டை விட்டுக்கிட்டு அத்தனையையும் கேட்டுட்டு.. ஒன்னும் தெரியாததைப் போல அடுப்பாங்கரைக்குள்ள போயி ஒண்டிக்குவே.. கெட்டிக்காரிடி நீ...."
"அடேங்கப்பா... நான் கெட்டிக்காரின்னா.. நீ யாரு..?"
வழக்கடித்துக் கொண்டிருந்த காவேரியும்... மீனாட்சியும் ராதிகாவைக் கண்டதும் பேச்சை நிறுத்திக் கொண்டார்கள்.. ராதிகாவைப் பார்த்த அவர்கள் பார்வையில் பரிதாபம் இருந்தது... அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்...
அவளுக்குத் தெரியும்... அவர்கள் அவளுடைய அபிமானிகள் என்பது... சிரித்த முகத்துடன்... வேலையாள்களையும்... சக மனிதர்களாக பாவித்து தோழமையுடன் பழகும் ராதிகாவின் மீது அந்த வீட்டிலும்... தோப்பிலும்... வயலிலும் வேலை செய்த வேலையாள்களுக்கு எல்லையற்ற வாஞ்சை இருந்தது... ஆனால்.. அவள் அந்த வீட்டின் எஜமானி அல்லவா..?
ஒரு வீட்டின் எஜமானி... அந்த வீட்டின் வேலையாள்களின் அன்புக்கு பாத்திரமாகலாம்... பரிதாபத்திற்கு ஆளாகலாமா..?
ராதிகாவின் கண்களில் நீர் முட்டியது...
பாலமுரளி அவளை காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சிக் கொண்டே இருந்தான்... அதைக் கவனித்துக் கொண்டிருந்த மீனாட்சி அன்றிரவில் கட்டாயம் ராதிகாவுக்கு காய்ச்சல் வந்து விடுமென்று காவேரியிடம் ஆருடம் சொன்னாள்... வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருந்ததால்... காவேரி அதற்குப் பதில் சொல்லவில்லை... ராதிகா பதில் பேசாமல் வேலையைக் கவனித்தபடி இருந்தாள்...
இரவு முழுவதும் தூங்காமல் பாலமுரளி திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான்...
"அவன் யாரைக் கட்டிக்க மேடையில உட்கார்ந்-திருந்தாண்டி..?"
'இதையேன் என்னிடம் கேட்கறிங்க... இது ஊருக்கே தெரியுமே...'
"கட்டிக்கப் போறவளை விட்டுட்டு உன்னையே ஏண்டி அவன் பார்க்கனும்...?"
'என் தலைவிதி...! வேறென்னத்தைச் சொல்ல...?'
"கெட்டிமேளம் கொட்டுது... உன்னைப் பார்த்துக்-கிட்டே... கல்யாணப் பொண்ணோட கழுத்தில தாலியைக் கட்டாம காதில கட்டி வைச்சானே.. அவனை என்ன செய்தால் தகும்..?"
'எதுவும் செய்யலாம்தான்...'
"யாருடி அவன்..?"
'உனக்குத் தெரியாதா..?'
"அவனுக்கும்... எனக்கும் என்ன சம்பந்தம்..?"
'ஒரு மண்ணுமில்லை...'
"அப்புறமும் எதுக்குடி என் முன்னாலே வந்து வந்து நிற்கிறான்..?"
ராதிகா மனதிற்குள்.. பதில் சொல்லிச் சொல்லி சோர்ந்து விட்டாள் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாதவளாய் பாலமுரளியை எதிர்த்து விட்டாள்...
அதுதான் அவள் வாழ்க்கையில் அடுத்துச் செய்த தவறு...
பாலமுரளியின் மேல் காதல் கொண்டவளால் அவனைக் கண்டு பிடித்துக் காதல் சொல்ல முடியவில்லை தான்.. ஆனால் அவன் நேரில் வந்து பூங்காவில் முதன்முதலாக... அவள் முன் சுட்டு விரலை நீட்டி சங்கரை அவள் காதலிப்பதாக குற்றம் சாட்டினானே.. அப்போதே அதைச் சொல்லியிருக்க வேண்டும்...
'அடேய் மாக்கா..! நான் அவனைக் காதலிக்கலைடா... உன்னைத் தாண்டா காதலிக்கிறேன்..' என்ற வார்த்தைகள் அவள் மனதில் ஓடி என்ன பயன்..? அவனிடம் அதைக் கொட்ட வேண்டாமா..? அதற்குள் தான் அவன் தந்த முதல் முத்தத்தில் அவள் பிரமை பிடித்தவளாக நின்றுவிட்டாளே...
அதற்கு பின்பாவது... அவன் இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியிருக்கலாம்தான்... அவன்தான் மேகலாவின் இதயநோயில் அவளருகேயே இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டானே...
முதல் கோணல்... முற்றிலும் கோணல் என்பார்கள்.. ராதிகாவின் வாழ்வில் அது உண்மையாகி விட்டது... பாலமுரளியின் முத்தத்தில் நடுங்கிப் போனவளாக... கண்ணுக்கு முன்னால் வந்து நின்றவனிடம் காதல் சொல்லாமல் அவள் ஓடிய தவறினால் அடுத்தடுத்த இன்னல்களுக்கு அவள் ஆளானாள்...
முகமறிந்தும்... முகவரி அறியாத ஒருவனின் முகவடிவை இதயத்தில் பதித்துக் கொண்டதற்காக... சங்கருடனான திருமணத்தை நிறுத்த... பொய்யாய் சில வார்த்தைகளை ஷோபாவின் முன்னால் பேசினாள்.. அது அவள் செய்த இரண்டாவது தவறு...
அதனால் அவளது வாழ்வு சின்னாபின்னமாக... இருந்து மயிரிழையில் தப்பியது... அப்படித் தனது வாழ்வு சின்னா பின்னமாகமல் இருக்க மீண்டும் ஒரு பொய்யை அதே ஷோபாவின் முன்னால் அவள் உதிர்த்தாளே... அது மூன்றாவதாக அவள் செய்த தவறு...
இப்படித் தவறுகளால் அவளைச் சுற்றி ஒர் அகழியை  அவளாகவே எழுப்பிவிட்டு அதைக் தாண்டவில்லை என்று பாலமுரளியிடம் கோபப்பட ஏதேனும் நியாயம் இருக்கிறதா..?
அதைச் சிந்தித்துப் பார்க்காமல் வாய்விட்டு.. நான்காவது தவறையும் செய்து வைத்தாள் ராதிகா...
"மோதுறதா இருந்தா அவனிடம் மோதுங்க... அதைவிட்டுவிட்டு என்னிடம் மோதாதீங்க..."
அவனிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் ஏன் கேட்கிறாய் என்ற அர்த்தத்தில்தான் ராதிகா இதைச் சொன்னாள்... ஆனால்... பாலமுரளியின் முகம் பயங்கரமாக மாறிவிட்டது...
"ஓ... அப்படியா... அவன் பெரிய இவன்.. அவனிடம் மோத என்னால முடியாதா..? இவ்வளவு தூரத்துக்கு நீ பேசின பின்னாலே.. உனக்கும்... எனக்குமிடையே இனி ஒன்னுமேயில்லைடி..."
அவன் விலகிப் படுத்துவிட... ராதிகா விக்கித்துப் போய் அமர்ந்துவிட்டாள்...


Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,177,ஆசையா.. கோபமா...?,17,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,92,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,16,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.. -136
அம்மம்மா.. கேளடி தோழி.. -136
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-136.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-136.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy