அம்மம்மா.. கேளடி தோழி. -134

134 நீ சொன்ன வார்த்தைகளை.. நினைத்து தவிக்கும் எந்தன் இதயம்... இரவின் அமைதி அறையில் சூழ்ந்திருந்தது.. ராதிகா அறைக்குள் நுழைந்ததும்...


134
நீ சொன்ன வார்த்தைகளை..
நினைத்து தவிக்கும் எந்தன் இதயம்...

இரவின் அமைதி அறையில் சூழ்ந்திருந்தது.. ராதிகா அறைக்குள் நுழைந்ததும் எப்போதும் போலக் கணவனை ஏக்கத்துடன் பார்த்தாள்.. எப்போதுமே அவளது பார்வையைக் கண்டு கொள்ளாமல் ஏதேனும் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருப்பவன் அன்று வெறுமையான பார்வையொன்றை பதிலுக்கு பார்த்து வைத்தான்.. அந்தப் பார்வையிலேயே மகிழ்ந்து போய் விட்டாள் ராதிகா...
பசுவைத் தேடும் கன்றைப் போல... ஆவலுடன் அவன் பார்வையில் காதலைத் தேடியபடி அருகில் அமர்ந்தவளை சொந்தமில்லாத பார்வை பார்த்தபடி...
"உன்னிடம் கொஞ்சம் பேசனும்.." என்றான் அவன்..
"பேசுங்க..." ஆனந்தத் தவிப்புடன் கூறினாள் ராதிகா...
கட்டிலில் அவனருகில் முழங்கால்களைக் கட்டியபடி வாகாக அமர்ந்து கொண்டவளைக் கண்டதும் அவனுக்கு மனதை  என்னவோ செய்தது...
அவனுக்குத் தெரியும்... அவன் நிச்சயமாகக் காதல் மொழிகளைப் பேசப் போவதில்லையென்பதை அவள் மிக நன்றாக அறிவாள் என்பது...
இருந்தும் அவள் ஆவலுடன் அவன் முகம் பார்க்கிறாள் என்றால் அதை என்னவென்று சொல்லுவது..?
அவன் கடிந்துதான் பேசுகிறான்... ஆனாலும் அவள் காதலுடன் முகம் பார்க்கும் போது அவனுக்கு என்னவோ போல ஆகிவிடுகிறது... அவள் முன்னால் அணிந்திருக்கும் கடுமை முகமூடியை கழட்டி வைக்க... தோப்புப் பக்கம் அவன் போய் விடுவான்...
'ஏண்டி அப்படிப் பார்த்து வைக்கிற...' என்ற மரங்களடர்ந்த தனிமையில் மறுகுவான்...
'உன்னை நெருங்கி வந்து வந்து அலுத்துப் போயிட்டேண்டி... இனியும் உன்னைத் தேடி வந்து... உனக்கும்... எனக்கும் நடுவில் அவன் வந்துன்னு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாட எனக்குப் பிடிக்கலைடி.. நான் மனுசன்டி...'
அந்த வட்டாரத்திலேயே.. இரும்பு மனிதன் என்று அழைக்கப்படும் அந்த சாதனையாளன்... தனிமையில் மனம் குமுறுவான்...
அவனையறியாமல் அவன் கால்கள்... அருவிக் கரையை நோக்கிச் செல்லும்... அருவிக்கரையில் வீற்றிருக்கும் பிள்ளையாரையே இமைக்காமல் பார்த்தபடி நிற்பான்...
'எனக்கும்... அவளுக்கும் நீதானே முடிச்சும் போட்டு வைச்ச...? இப்ப எதுக்காக.. என் கண் முன்னால.. பெண்டாட்டிங்கிற சொந்தத்தோட அவள நடமாட வைச்சு.. அவளைத் தொட முடியாம.. கைகளையும் கட்டிப் போட்டு வைச்சிருக்க...?'
பிள்ளையாரிடம் கேள்விக் கணைகளை மௌனமாக தொடுத்து விட்டுத் திரும்பி வந்து விடுவான்...
மௌனம் பேசுமா...?
பேசும் என்பதை அவன் அறிந்திருந்தான்... திருமணத்திற்கு முன்னால் ஒரு மௌனப் பார்வையிலேயே மற்றவர்களை கதிகலங்க வைப்பான்.. அப்போதெல்லாம் அவனது மௌனம் ரௌத்திரத்தைத்தான் பேசியது...
இப்போது...?
ராதிகாவிடம் சிலநேரம் மௌனப் பார்வைகளில் பேசியிருக்கிறான்... அந்தப் பார்வைகளின் வீச்சைத் தாங்க முடியாமல் பேச்சிழந்து நிற்கும் அவளது மௌனப் பார்வைகளும் கதை பேசியிருக்கின்றன...
பேச்சுக்களால் நிரப்பப்படும் பொழுதுகளைவிட பேச்சற்ற மௌனங்களால் நிரப்பப்படும் பொழுதுகள் ஆத்மார்த்தமானவை... அர்த்தம் நிறைந்தவை...
அப்படிப்பட்ட தருணங்களில்தான் அவனும் ராதிகாவும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்...
மனம் தளும்பும் நேரங்களில் மற்றவர்கள் முன்னால் உணர்வுகளை காட்ட முடியாத அந்த இரும்பு மனிதன்.. அருவிக் கரையின் பிள்ளையாரைத்தான் தேடிப் போயிருக்கிறான்..
அப்படிப்பட்ட ஒரு தருணத்தில்தான்... அந்தக் காட்சியைப் பார்த்தான்...
அருவிக்கரையின் அரசமரத்தடியில் சிமிண்ட் மேடையில் பிள்ளையார் வீற்றிருக்க... அந்தச் சின்னத் திறந்த வெளிக் கோவிலின் படிக்கட்டில் அமர்ந்து பிள்ளையாரையே மௌனப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா... அவளது பார்வையில் ஆயிரமாயிரம் உணர்வுகள் அலை மோதின... தாயைத் தேடிவந்து அவளிடம் தன் துன்பங்களை ஒப்பிக்கும் மழலையாக அமர்ந்திருந்தவளைக் கண்டதும் அவன் கால்கள் பின்னடைந்து விட்டன...
'இவ எப்ப வந்தா..? எப்படி வந்தா...?..'
அவன் கேள்விகளுக்குப் பதில் சொல்வதைப் போலச் சற்றுத் தொலைவில் கார் நின்று கொண்டிருந்தது.. காரின் மீது சாய்ந்து நாச்சியப்பன் நின்று கொண்டிருந்தான்...
பாலமுரளியைக் கண்டதும்... அவசரமாக எட்டெடுத்து அவன் வரமுயன்றபோது.. உதட்டின் மீது கை வைத்து அவனை எச்சரித்து விட்டு.. அவனை வரவேண்டாமென்ற சைகையையும் செய்து விட்டு பாலமுரளி... ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றான்...
என்னவெல்லாம் நினைத்தாளோ.. எவற்றையெல்லாம் அந்த ஆனைமுகனிடம் ஒப்பித்தாளோ... கண்ணீர் திரையிட.. ராதிகா எழுந்து கொண்டாள்... நாச்சியப்பன் அறியாமலிருக்கும் பொருட்டு... கண்களை நாசுக்காக துடைத்துக் கொண்டவள்.. காரில் ஏறிப்போய் விட்டாள்..
அன்றை இரவிலும் பாலமுரளிக்கு தூக்கம் பிடிக்க வெகுநேரமானது...
அவனுக்காக அவள் ஏங்கும் ஏக்கத்தை அறிந்த பின்னாலும் அவன் மனம் இளகவில்லை... பட்டவனுக்குத்தான் அதன் வலியும்... வேதனையும் தெரியும்... அவன் பட்டவன்... விலகியே நின்றான்...
அன்றும் அவனது சின்னஞ்சிறு பேச்சில் மனம் சிறகடிக்க அவன் முகத்தையே அள்ளிப் பருகுவதைப் போல ஆவலுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு மனம் வலித்தது... அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் கடினமான குரலில் பேசினான்...
"உன் பிரண்டோட கல்யாணத்துக்கு போகிறதில எனக்கு இஷ்டமில்ல..."
அவளுக்குத்தான் தெரியுமே.. அவன் இதைத்தான் பேசப் போகிறான் என்று தெரிந்துதானே அவளும் அமர்ந்தாள்...
"நான் போகனும்னு சொல்லலையே..."
"அம்மா சொல்றாங்களே..."
"அத்தை அப்படிச் சொன்னதுக்கும்.. எனக்கும்.. யாதொரு சம்பந்தமுமில்லை..."
"எனக்கும் அது தெரியும்.."
உணர்வுகள் துடைத்த முகத்துடன்தான் அவன் இதைச் சொன்னான்.. ஆனாலும் அவள் முகம் மலர்ந்து விட்டாள்...
"தேங்க்ஸ்..."
நன்றி சொல்லச் சொல்லி உன்னை நான் கேட்டேனா என்பதைப் போல அமர்த்தலான பார்வை ஒன்றை அவள் பக்கம் வீசிவிட்டு.. அதே உணர்வுகள் துடைத்த முகத்துடன் அவன் மீண்டும் பேசினான்...
"அம்மாவிடம் மறுத்துப் பேச என்னால் முடியாது.. அவங்க உடனே என் அப்பாவை பேச்சில் இழுத்து விட்டுவிடுவாங்க... அதைக் கேட்ட பின்னாலே எப்படி என்னால் மறுத்துப் பேச முடியும்..?"
அவன் சாதாரணமாகத்தான் சொன்னான்.. ஆனால்.. ராதிகாவோ.. அவன் உணர்வுகளை அவளுடன் பகிர்ந்து கொள்வதைப் போல மகிழ்ந்து போனாள்...
வாத்சல்யத்துடன் அவளது பார்வை அவனை வருடியது...
"முடியாது தான்..." 
அவள் பரிவுடன் சொன்னபோது.. அவன் அவளை நிமிர்ந்து ஒர் பார்வை பார்த்தான்...
உணர்வுகள் இல்லாத.. சொந்தமற்ற பார்வைதான்.. ஆனால்.. அந்தப் பார்வையில் ஏதோ ஒரு செய்தி புதைந்திருப்பதை ராதிகா உணர்ந்தாள்...
'என்ன சொல்லப் போகிறான்..?' அவள் இதயம் படபடத்தது...
"அதனால நீயே உன் பிரண்டோட கல்யாணத்துக்கு போக முடியாதுன்னு சொல்லி விடு.."
அவன் சொல்ல வந்ததை சொல்லி விட்டான்...
"நானா..?" அவள் திகைத்துப் போய்விட்டாள்...
"நீதான்..." அழுத்தமான குரலில் அவன் சொன்னான்..
"என்னால் எப்படி அப்படிச் சொல்ல முடியும்..?"
அவள் குரலில் லேசான மறுப்பிருக்க... அவன் உஷ்ணப்பார்வை பார்த்தான்... அவள் கைவிரல்கள் வழக்கம் போல தந்தியடிக்க ஆரம்பித்தன...
"ஏன் சொல்ல முடியாது..?" அவன் உறுமினான்...
"நான் சொல்லலை...? ஷோபாவின் கல்யாணத்துக்கு நீ போக வேண்டிய அவசியமில்லாம நான் பண்ணலை...?  நீ கேட்டுக்கிட்டா அதைச் செய்தேன்..?" அவன் கேள்வியில் கனல் வீசியது...
"அது.. அது..." ராதிகா தடுமாறினாள்...
"என்னடி மென்று விழுங்கற... உனக்கொரு நியாயம்.. எனக்கொரு நியாயமா..? உனக்காக நான் பேசும்போது.. எனக்காக நீ பேச மாட்டியா..? அந்த ஷோபா.. உனக்குத்தான் எதிரி... எனக்கு எதிரியில்லை.."
அவனது வார்த்தைகளில் சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள் ராதிகா... அவளது உதடுகள் எதையோ சொல்லத் தவித்தனவாய் துடித்தன...
அதைக் கண்டவனின் பேச்சு.. ஒர் நொடி நின்றது.. மறுநொடியில் எப்போதும் போலத் தன்னைச் சமாளித்துக் கொண்டவனாக.. அவன் பேச ஆரம்பித்தான்...
"அப்படியிருந்தும் நான் பேசலையா...?"
"இப்ப நான் என்ன பண்ணனும்..?" ஒரு முடிவுக்கு வந்துவிட்டவளாக கனத்த இதயத்துடன் ராதிகா கேட்டாள்...
"அந்த ஹேமாவைக் கண்டாலே எனக்குப் பிடிக்கலை... அவநிழல்கூட உன்மேல படக்கூடாதுன்னு நான் நினைக்கிறேன்... அவ யாரோ... நீ யாரோ..."
பாலமுரளியின் உத்தரவில் ராதிகாவின் இதயம் மௌனக் கண்ணீரை விட்டது...
பள்ளிப் பருவத்திலிருந்து கூடப் படித்துப் பழகிய உயிர்தோழி..! ராதிகா சேர்ந்த அதே பொறியியல் கல்லூரியில் தான் தானும் சேருவேன் என்று அடம் பிடித்து சேர்ந்த அன்புச் சிநேகிதி..! இத்தனைக்கும்... அவளுக்கு வேறு ஒரு கல்லூரியில் மதிப்பெண்களின் அடிப்படையில் இடம் கிடைத்திருந்தது... அவள் அங்கே சேர மறுத்து விட்டாள்.. அவளது பிடிவாதத்திற்காக... அவளின் தந்தை.. கல்லூரியின் பண ஒதுக்கீட்டு இடத்தில் அவளைச் சேர்த்து விட்டார்... அதற்காக அவர் வெகுவாகச் சிரமப்பட வேண்டியிருந்தது...
அப்படிப்பட்ட சிநேகிதியை ராதிகா பிரிய வேண்டும்...
ராதிகாவின் திருமணத்தில் ஹேமாவுக்கு விருப்பமில்லை.. இருந்தும் அவள் முதல் ஆளாக... முன்னால் நின்றாள்... நிச்சயதார்த்தம் நடக்கப் போவதைப் பற்றியே அவளுக்குத் தெரியாது.. இருந்தும்.. அவள் விட்டுக் கொடுக்காமல் ராதிகாவின் பக்கத்தில் வந்து நின்றாள்.. வரவேற்பு முதல்... சமையல் ஏற்பாடுவரை.. ஓடிஓடி அவள் வேலை செய்தது நினைவுக்கு வர... கண் கலங்கினாள் ராதிகா...
'ஷோபாவும்.. ஹேமாவும் ஒன்றா...? சூனியக்காரியும்... தேவதையும் ஒன்றாகி விட முடியுமா..?' அவள் மனம் வலித்தது...
இதை பாலமுரளியிடம் யார் சொல்வது...?
தன் பிடிவாதத்திலிருந்து.. சற்றும் மனம் தளராதவனாக... கல்லைப் போல அமர்ந்திருந்தவனை ஏக்கத்துடன் பார்த்தாள் ராதிகா...
அவளது கண்ணீரும்... ஏக்கப் பார்வையும் அவனைக் கொஞ்சம் கூட அசைக்கவில்லை...
"அவ இந்த வீட்டுக்கு வரக்கூடாது..."
"வரமாட்டா..." ரோசத்துடன் பதில் சொன்னாள் ராதிகா...
"மதியாதார் தலை வாசலை அவ ஏன் மிதிக்கப் போறா...?"
"மிதிப்பாடி... உனக்காக மிதிப்பா.. அவதான் உனக்கு அந்தரங்கத் தோழியாச்சே... கட்டாயம் மிதிப்பா.. அவ்வளவு கௌரவம் பார்க்கிறவளா சுயமரியாதையாய் இருக்கிறவளா இருந்திருந்தா... அன்னைக்கு நான் பேசின பேச்சுக்கு.. இந்த வீட்டில கை நனைக்காம போயிருக்கனுமே... அவ அதைச் செய்யலையே.. அதிலிருந்தே தெரியுதே.. உன் சிநேகிதி.. உனக்காக எதையும் செய்வான்னு..."
பாலமுரளி... தனது அதீத புத்திசாலித்தனத்தை அப்போதும் நிருபித்தான்... அப்படிப்பட்டவளின் திருமணத்தை விலக்கி வைக்க நேர்ந்ததில் ராதிகா மனதிற்குள் துடித்துப் போனாள்...
"எனக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்... அவ என்னோட எதிரியின் பக்கம் நிற்கிறவ... என் எதிரியைச் சேர்ந்த யாராக இருந்தாலும்.. அவங்களும் எனக்கு எதிரிதான்.. என்னோட எதிரி உனக்குத் தோழியாயிருந்தா.. நான் உன்னையும் எதிரியாய் நினைக்க வேண்டியிருக்கும்.. உனக்கு எது தோதுன்னு நீயே முடிவு பண்ணிக்க..."
அத்தோடு பேச்சு முடிந்தது என்பதற்கு அடையாளமாக அவன் விளக்கை அணைத்து விட்டுப் படுத்து விட்டான்...
'என்னையும் எதிரியாய் நினைப்பானா..?' ராதிகா துக்கப்பட்டாள்...
வெகுநேரம்.. அவள் உட்கார்ந்த நிலையிலேயே முழங்கால்களில் முகத்தைப் புதைத்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.. அதை பாலமுரளியும் உணர்ந்துதான் இருந்தான்.. இருந்தாலும்.. பிடிவாதமாக.. அதை ஏனென்று கேட்காமல் கண்மூடிப் படுத்திருந்தான்...
மறுதினம்... அவர்கள் இருவருமே ஊமையைப் போல நடமாடிக் கொண்டிருக்க... அவர்களுக்கிடையே எந்தவித உரையாடலுமின்றி அன்றையப் பொழுது கழிந்தது...
அதற்கு அடுத்த தினத்தில்... காலையில் சாப்பிட வந்த முரளியிடம்...
"இன்னைக்கு கிளம்பப் போறிங்கதானே முரளி..?" என்று கேட்டாள் மேகலா...
"எங்கேம்மா..?" பாலமுரளி புருவங்களை உயர்த்தினான்...
"இது ஒன்னு உன்கிட்ட இருக்குடா மகனே.. எதைச் சொன்னாலும் அதை அப்படியே மறந்துருவே.. ஏம்மா... ராதிகா.. நியாவது சொல்லக் கூடாதா..?" என்றபடி மருமகளைப் பார்த்த மேகலா திகைத்து விட்டாள்...
ராதிகா தன் தலையில் இறுக்கமாக துண்டைக் கட்டிக் கொண்டு நின்றாள்...




Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி. -134
அம்மம்மா.. கேளடி தோழி. -134
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-134.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-134.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy