அம்மம்மா.. கேளடி தோழி.. -132

132 சின்னச் சின்ன பார்வைகளில்.. சிறைபிடித்தாய் எந்தன் மனதை... மேகலா அவனைக் காய்ச்சு.. காய்ச்சென்று காய்ச்சி எடுத்து விட்டாள்... ...


132
சின்னச் சின்ன பார்வைகளில்..
சிறைபிடித்தாய் எந்தன் மனதை...

மேகலா அவனைக் காய்ச்சு.. காய்ச்சென்று காய்ச்சி எடுத்து விட்டாள்...
பாலமுரளி ஒரு குறிக்கோளோடு செயல்படுகிறான்.. ராதிகாவிற்கு காய்ச்சல் வர வைப்பதே... அவனுக்கு வாடிக்கையாகி விட்டது... ராதிகா பாவம்... அப்பாவி... அடித்தால் கூட அவளுக்கு அழத் தெரியாது... அப்படிப் பட்டவளை பாலமுரளி எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்...? அவனுடைய அப்பா மாணிக்க வாசகம் மேகலாவை தங்கத்தட்டில் வைத்துத் தாங்கியதைப் போல அவன் தாங்க வேண்டாம்... அவளை தடியெடுத்து அடிக்காமலாவது இருக்கலாமல்லவா...?
"அம்மா... இது அநியாயம்..." என்றான் பாலமுரளி...
"என்னடா அநியாயத்தைக் கண்டு விட்ட..?" மேகலா எதிரியைப் பார்ப்பதைப் போல மகனைப் பார்த்து வைத்தாள்...
"இவளை நான் தடியெடுத்தா அடிச்சு வைச்சேன்..?" அவன் நியாயம் கேட்டான்...
அவ்வளவுதான்... மேகலா ருத்ர அவதாரம் எடுத்து விட்டாள்...
"அந்தக் குறை வேற உனக்கு இருக்கா..? தனியா தடியை எடுத்து வேற நீ அடிக்கனுமா..? நீ கையால அடிச்சாலே... தடியைக் கொண்டு அடிச்சதைப் போலத்தானே இருக்கும்.. கையாடா அது... சரியான இரும்புக் கை மாயாவிடா நீ..."
விட்டால் அவள் நாள்முழுக்க பாலமுரளியை அர்ச்சனை செய்து விடுவாள் என்ற பயம் பிடித்து ஆட்ட.. அவசரமாக ராதிகாவைத் தூக்கிக் கொண்டான் பாலமுரளி....
'ச்சே... எனக்கு இதே பிழைப்பாப் போச்சு...'
மேகலாவின் விழிகளும் அதையே சொல்லியதால்... தாயின் முகம் பார்க்காமல் விரைவாகப் படிகளில் இறங்கினான்... மேகலா அவனைப் பின் தொடர்ந்தாள்...
"என்னம்மா..? சின்னம்மாவுக்கு காய்ச்சலா..?" எதிர்பட்ட மீனாட்சி கேட்டாள்...
"ம்ம்ம்..." மகனை முறைத்துக் கொண்டே பதில் சொன்னாள் மேகலா...
"நினைச்சேன்..." என்று மீனாட்சி சொன்னதில் பாலமுரளிக்கு பற்றிக் கொண்டு வந்தது...
பெற்றதாய் முதல்... வீட்டில் வேலை செய்யும் வேலையாள்கள் வரை... எப்படி.. அவ்வளவு சர்வ நிச்சயமாக.. ராதிகாவிற்கு காய்ச்சல் வரும் என்று கணித்தார்கள் என்ற விவரம் அவனுக்கு பிடிபடவில்லை..
ராதிகாவைப் பரிசோதித்த டாக்டரின் பார்வையும் 'அடேய்... பாதகா...' என்பதைப் போல இருந்து வைக்க.. பாலமுரளி எரிச்சலானான்...
"அதென்னங்க... உங்க வொய்புக்கு மட்டும் அடிக்கடி காய்ச்சல் வருது...?" டாக்டர் சந்தேகம் கேட்க..
"இவளுக்கு அப்படியொரு வேண்டுதல்ங்க..." என்று இடக்காக பதில் சொன்னான் அவன்...
"ஓஹோ..." அவனுடைய பதிலில் டாக்டர் அலட்டிக் கொள்ளவேயில்லை...
ராதிகாவுக்கு ஊசி மருந்தை ஏற்றியபடியே... பாலமுரளியின் முகத்தைப் பார்க்காமல்...
"அப்படியாகப்பட்ட நேர்த்திக்கடனை எந்த சாமியிடம் நேர்ந்துக்கிட்டு இருக்காங்களாம்..? உங்களிடமா...?" என்று கேட்டு வைத்து.. அவளின் புத்திசாலித் தனத்தையும் நிரூபித்தாள்...
'எல்லாம் இவளாலே வந்தது...'
ராதிகாவை உண்மையிலேயே அடித்துத் துவைத்து காயப் போட்டுவிடும் கொலைவெறி அவனுக்குள் கிளர்ந்தது...
அதை உணர்ந்தவளைப் போல நிதானமாக அவனைப் பார்த்துவிட்டு...
"இவங்களைப் பத்திரமாப் பார்த்துக்கங்க மேடம்.." என்று மேகலாவிடம் சொன்னாள் அந்த டாக்டர்...
நல்லவேளையாக ராதிகாவுக்கு ஜன்னி வரவில்லை... பாலமுரளியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் காய்ச்சலோடு அவள் அவனை விட்டு வைத்தாள்...
'அந்த மட்டிலும் பரவாயில்லை.. இவ காய்ச்சலோட விட்டு வைச்சா... ஜன்னிமட்டும் வந்து.. இவ உளறிக் கொட்டி கிளறி மூடியிருந்தா அம்மாவுக்கு பதில் சொல்லி நான் தப்பிக்க முடியாது...'
சென்னையின் பண்ணை வீட்டிலேயே ராதிகா.. வள்ளியம்மானை கீரைப் பதார்த்தங்களாக செய்ய வைத்தவள் என்ற நினைவில் பாலமுரளி தலையை ஆட்டி.. கன்னத்தை உப்ப வைத்து...
'ஊப்ப்...' என்று மூச்சை வெளியே விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான்...
'என்னைத் தலையாலேயே தண்ணி குடிக்க வைக்கிறாளே...'
யாராலும் அசைக்க முடியாத இரும்பு மனிதனான பாலமுரளிக்கே தண்ணீர் காட்டும் ராதிகாவை என்ன செய்தால் தன் மனக் கொதிப்பு அடங்கும் என்ற தீவிர ஆலோசனையில் இறங்கிய பாலமுரளி.. அதை உணர்ந்ததைப் போல.. முகச்சுளிப்புடன் அவனைப் பார்த்த.. மேகலாவின் பார்வையைக் கண்டதும்.. அவசரமாக... அந்த ஆலோசனையைக் கைவிட்டான்...
மேகலா மருமகளை விட்டு.. இந்தப் பக்கம்.. அந்தப் பக்கம் நகரவேயில்லை... கோழி தன் குஞ்சைப் பாதுகாப்பதைப் போல... அவள் மருமகளை அடை காத்தாள்.. 
அதில் பாலமுரளிக்கும் மன வருத்தம்தான்.. என்னவோ அவன் கொடுமைக்காரனைப் போலவும்... அவனது கொடுமைகளிலிருந்து மருமகளைப் பாதுகாக்க மேகலா காவல் காப்பதைப் போலவும் தாய் தடந்து கொண்டதில் ராதிகாவின் மீதான அவனது கோபம் அதிகரிக்கத்தான் செய்தது... 
அவனுக்கும்.. அவனைப் பெற்ற தாய்க்கும் இடையில் ராதிகா வந்து  விட்டாளே என்று எரிச்சலடைந்தாலும்.. அந்த அளவுக்கு.. அவனைப் பெற்ற தாயின் அபிமானத்தை ராதிகா பெற்றிருக்கிறாள் என்பதில் அவனுக்குள் வியப்பு ஏற்பட்டது... மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையில் நிலவிய அந்த அதீதமான பாசப்பிணைப்பில் அவன் மனம் நெகிழ்ந்தான்..
ராதிகா தேறிவிட்டாள்.. இந்த முறை மேகலா தன் பலத்த கண்டனத்தை பாலமுரளியிடம் தெரிவித்து விட்டிருந்ததால்.. அவனும் ராதிகாவுடன் வார்த்தை வளர்க்காமல் அமைதிகாத்தான்...
அதனால் ராதிகாவுக்கு மன அமைதி ஏற்படவில்லை.. மாறாக அவன் விலகிப் போவதைப் போல அவள் உணர்ந்தாள்...
வழக்கமாக அவளைக் கண்டதும்.. அவன் கண்களில் மின்னும் ஒளிர்வை அவளால் காண முடியவில்லை... அவளைத் தேடும் அவனது பார்வையை அவள் தேடினாள்.. அவனது அதீதமான கோபத்தில் விழும் வார்த்தைச் சாட்டையடிகளுக்காக மனம் ஏங்கினாள்...
இப்போதெல்லாம்... அவன் செல் போனைக் காதுக்கு கொடுத்தபடி சாப்பிட மறந்து.. வாசலுக்கு ஓடுவதில்லை... அப்படி அவன் ஓடினாலாவது அவனைத் தடுக்கும் சாக்கில் ஓடி.. வழிமறித்து.. அவன் கேட்ட... காதல் உணர்வுகளை அவனுக்குக் கொடுத்து விடலாமே என்று அவள் தவித்தாள்... அதைக் கொடுக்க அவள் தவிக்கும் தவிப்பை அறியாதவனாக.. பாலமுரளி.. அவள் முகத்தை நிமிர்ந்து கூடப்பார்க்காமல் டைனிங் டேபிளுக்கு வந்து... கடமையாற்றும் கடமை வீரனைப் போல போட்டதைச் சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினான்...
'என்னத்துக்கு இப்படி மந்திரிச்சு விட்ட கோழியைப் போல ஒரு மார்க்கமா இருக்கிறான்..' என்ற நினைவு மேகலாவுக்கு வந்தாலும்... ராதிகாவின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு.. அவன் அப்படியே இருப்பதுதான் உசிதம் என்ற முடிவுக்கு வந்தவளாக அதைப்பற்றி எதையும் அவனிடம் கேட்டு வைக்காமல் வாயை மூடிக் கொண்டாள்...
மாமியாரின் தலையிடாக் கொள்கையில் அதிகமான மனபாதிப்புக்கு ஆளானாள் ராதிகா...
'அத்தையாவது அவரை என்னன்னு ஒரு வார்த்தை கேட்கலாமில்ல...' என்பது அவளின் ஆதங்கமாக இருந்தது...
அவளாக மேகலாவை உசுப்பி விடலாமென்றால்.. அதற்கும் வழிவகை தோன்றவில்லை...
'என்னன்னு கேட்கச் சொல்றியே.. அந்த 'என்ன..' என்னம்மா..? என்று மேகலா கேட்டு விட்டால்... அந்த 'என்ன'வை.. என்னவென்று அவள் சொல்லுவாள்..?'
அதனால்.. தனிமையில் இருக்கும் போது அவனின் கவனத்தைக் கவர முயற்சிப்பதே சாலச்சிறந்தது என்ற முடிவுக்கு வந்தவளாக.. அவள் மோக அஸ்திரத்தை கையில் எடுத்தாள்..
காலையில் அவனுக்கு காபி கொடுத்துவிட்டு.. படுக்கையை சரிசெய்தபடி.. அவனை ஓரக் கண்ணால் பார்த்தபடி...
"மலர்கள் நனைந்தது பனியாலே-என்
             மனமும் குளிர்ந்தது அவனாலே..
    பொழுதும் விடிந்தது கதிராலே - சுகம்
             பொங்கி எழுந்தது உறவாலே..
    சேர்ந்து மகிழ்ந்து போராடி -தலை
             சீவி முடித்தேன் நீராடி...
    கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி-பட்ட
             காயத்தைச் சொன்னது கண்ணாடி.."
என்று பாடி வைத்தாள்..
அவனோ.. காதில் பஞ்சை வைத்து அடைத்தவனைப் போல.. செய்தித் தாளை பார்வையால் மேய்ந்து விட்டுக் குளிக்கப் போனான்...
மதிய உணவுக்கு பின் ஓய்வாக.. அவர்களின் அறையில் ஒரு நிமிடம் உட்கார்ந்து செல்பவனின் முன்னால்... கால் கொழுசு சப்திக்க... இங்கும் அங்கும் நடைபழகியபடி...
"மயக்கத்தைத் தந்தவன் யாரடி...
             மணமகன் பேரென்ன கூறடி...
    மறைவினில் நடந்தது என்னடி..?
             நீ சொல்லடி.. கதை மாறாமலே.."
என்று முணுமுணுத்து வைத்தாள்...
அவன் ஏறெடுத்தும் பார்க்காமல் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி நடையைக் கட்டினான்...
மாலையில் எப்போதாது அவன் காபி டிபன் சாப்பிட வீட்டுக்கு வந்து விட்டால்... அவள் மனம் துள்ளும்...
மல்லிகை மணக்க.. அவனருகில் அமர்ந்தபடி..
"பொன் அந்தி மாலையில்...
             நீ தொடும் போது..
    எண்ணத்தில் என்ன சுகமோ...?
             இன்பத்தின் அறிமுகமோ...?"
என்று மயக்கும் குரலில்.. மயங்கிப் போன குரலில் பாடிப் பார்த்தாள்..
அந்தப் பாட்டுச் சத்தத்திலும்.. செல்போனைக் காதுக்கு கொடுத்தபடி மும்முரமாய் பேசிக் கொண்டிருப்பவன்.. அவளைத் திரும்பியும் பார்க்கவில்லை..
இரவு நேரம்.. அவளுக்கு தோதான நேரமாகத்தான் இருந்தது... அலுவல்களின் அழுத்தங்கள் இல்லாமல் அவனும்.. இதமான மனநிலையுடன்தான் இருந்தான்.. அவனை அசைத்துப் பார்க்க.. அதைவிட தோதான நேரம் அமையாது என்று தோன்றிவிட.. அவளும் அவனுக்குள் மோகத்தீயை மூட்டி விட முயன்றாள்..
ஓய்வாக.. கை கால்களைத் தளர்வாக விட்டு படுத்திருந்தவனின் பக்கமாக திரும்பிப் படுத்து மெல்லிய குரலில் பாட ஆரம்பித்தாள்...
"காதோடுதான் நான் பாடுவேன்...
             மனதோடுதான் நான் பேசுவேன்...
    விதியோடுதான் விளையாடுவேன்...
             உன் மடிமீதுதான் கண் மூடுவேன்..."
இந்த வரிகளைப் பாடுபவளின் மனம் தளும்பி.. கண்களில் நீர் தளும்பியது.. ஒர் நொடி.. அவனிடம் ஒர்விதமான அதிர்வு ஏற்படுவதை அவள் உணர்ந்தாள்.. அடுத்த நொடியில் அவன் தன்னை சரிப்படுத்திக் கொண்டதில் அவளுக்குள் ஏமாற்றம் ஏற்பட்டது...
"வளர்ந்தாலும் நான் இன்னும்..
             சிறு பிள்ளைதான்...
    நான் அறிந்தாலும் அதுகூட..
             நீ சொல்லித்தான்.."
அவள் குரலின் லேசான விசும்பல் ஒலியில் அவன் மனமும் அசையத்தான் செய்தது.. அந்த வார்த்தைகளில் இருந்த உண்மையை அவன் அறிவான்... கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவளை சிறையெடுத்து அவனது உடைமையாக்கிக் கொண்ட நினைவில் அவனும் உதட்டைக் கடித்தான்...
அவன் முகத்தையே ஏக்கத்துடன் ராதிகா பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தும்.. அவன் மனம் பாறையாய் இறுகித்தான் இருந்தது...
"உனக்கேற்ற துணையாக..
             எனை மாற்றவா..?"
அவளது பாடலில் கேள்வி இருந்தது... அவன்
அவள் முகத்தைக் கூடப் பார்க்கவில்லையென்பதை உணர்ந்தவளின் நெஞ்சில் துயரம் மண்டியது..
"உனக்கேற்ற துணையாக...
             எனை.. மாற்ற.. வா..."
பாடல் வரிகளைத் திருப்பி பாடியவளின் வார்த்தைகளில் இருந்த அழைப்பை அறிந்தும் அறியாதவனைப் போல அவன் விழி மூடிக் கொண்டான்..
"குல விளக்காக... நான்வாழ...
             வழி.. காட்ட.. வா..."
அவள்குரல் தேம்பி அடங்கி.. வெகுநேரம் கழித்து கண்விழித்தவன் அவள் முகத்தைப் பார்த்தான்.. இருளில் அவன் கண்கள் பளபளத்தன.. அவளின் முகத்தில் தெரிந்த கண்ணீர் கோடுகளை அறையில் சூழ்ந்திருந்த மெல்லிய வெளிச்சத்தில் கண்டவன் துக்கம் கொண்டான்....
'வேணாம்டி.. நாம இப்படியே இருந்துட்டுப் போயிடுவோம்.. எனை மயக்க நினைக்காதே.. உன்னை நெருங்கி வருகிறப்பல்லாம்.. ஒன்னு அந்த சங்கர் குறுக்கே வருவான்.. இல்லைன்னா.. அவனோட போன் கால் வரும்.. அதுவும் இல்லைன்னா.. அவன் சம்பந்தப்பட்ட செய்தி வந்து சேரும்.. அலுத்துப் போயிட்டேண்டி.. இந்த ஜென்மத்தில் நம்மள புருசன் பெண்டாட்டியா வாழ அவன் விடமாட்டான்.. அதை மீறத்தான் உன்னை சிறையெடுத்தேண்டி... மீறித்தான் உன்னை ஆண்டு முடிச்சேண்டி.. இருந்தும் என்ன பயன்..? அதுக்காக மட்டும் தானே நீ எனக்கு கழுத்தை நீட்டின..? அது நடக்காம போயிருந்தா..? இந்தக் கேள்வி என் நெஞ்சிலிருக்கும் வரை.. நான் நிம்மதியா உன்னைத் தொட முடியாதுடி.. உன் மனசில நானில்லடி.. புருசன்கிறதுக்காக.. நீ என் பக்கத்தில் வர நினைக்கிற.. எனக்கு மனசில்லைடி...'
அவன் தூங்க வெகுநேரமானது என்பதை.. ராதிகா அறியவில்லை...



Name

அகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,32,அந்திமழை பொழிகிறது..,7,அம்மம்மா.. கேளடி தோழி...!,176,ஆசையா.. கோபமா...?,16,உயிர்தேனே..! உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,எங்கிருந்தோ ஆசைகள்...,91,ஒற்றையடிப்.. பாதையிலே..,10,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,கல்லூரிக் காலத்திலே..,15,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தொடுவானம்,18,நதி எங்கே போகிறது...?,6,நிலாவெளியில்,17,பனித்திரை,1,புலர்கின்ற பொழுதில்,42,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,9,முகில் மறைத்த நிலவு.,41,மூரத்தியின் பக்கங்கள்,13,மௌனமான நேரம்..,22,ராக்கெட்,1,ராதையின் நெஞ்சமே..,24,வந்தாள் மகாலட்சுமியே...,27,வாங்க பேசலாம்,9,
ltr
item
Muthulakshmi Raghavan Novels: அம்மம்மா.. கேளடி தோழி.. -132
அம்மம்மா.. கேளடி தோழி.. -132
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s320/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
https://1.bp.blogspot.com/-7bQaJ4mIjpM/XcQtlzr6ZqI/AAAAAAAAAuk/L8ts7SEdDt4_uue1UKKZ2GTNVf2ZNTRegCPcBGAYYCw/s72-c/Ammama%2BKeladi%2BTholi%2B1.jpg
Muthulakshmi Raghavan Novels
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-132.html
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/
https://www.muthulakshmiraghavannovels.com/2020/04/ammammaakeladitholi-132.html
true
5064978942293848112
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share. STEP 2: Click the link you shared to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy